376 புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், மேற்கு மரியநாதபுரம்


புனித விண்ணேற்பு அன்னை ஆலயம்.

இடம் : மேற்கு மரியநாதபுரம், திண்டுக்கல்.

மாவட்டம் : திண்டுக்கல்
மறை மாவட்டம் : திண்டுக்கல்
மறை வட்டம் : திண்டுக்கல்

நிலை : பங்குத்தளம்

பங்குத்தந்தை : அருட்பணி J. ஜெயசீலன்

இணை பங்குத்தந்தை : அருட்பணி V. ஜெயசீலன் பிரபு.

குடும்பங்கள் : 1800
அன்பியங்கள் : 43

ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணி, காலை 08.00 மணி, மாலை 06.30 மணி.

திங்கள், புதன், வெள்ளி திருப்பலி : காலை 06.00 மணிக்கு.

செவ்வாய் மாலை 06.30 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள், திருப்பலி.

வியாழன் மாலை 06.30 மணிக்கு குழந்தை இயேசுவின் நவநாள், திருப்பலி, குணமளிக்கும் வழிபாடு, திருஎண்ணெய் பூசுதல்.

சனி மாலை 06.30 மணிக்கு இடைவிடா சகாய அன்னை நவநாள், திருப்பலி.

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06.30 மணிக்கு ஒப்புரவு வழிபாடு, திருப்பலி, நற்கருணை ஆசீர்.

திருவிழா : ஆகஸ்ட் 07 -ம் தேதி கொடியேற்றம். 14-ம் தேதி தேரடி திருப்பலி. (தேருக்கு முன்னால் மண்ணின் மைந்தர்களான அருட்பணியாளர்கள் திருப்பலி நிறைவேற்றுவர்) 15 ம் தேதி திருவிழா, தேர்பவனி, மாலையில் நற்கருணை ஆசீர்.

மாதந்தோறும் 15- ம் தேதி மாலை 06.30 மணிக்கு திருப்பலி, வேண்டுதல் தேர்பவனி, நற்கருணை ஆசீர்.

ஈஸ்டர் முடிந்த இரண்டாவது வெள்ளி, சனி, ஞாயிறு பாஸ்கு திருவிழா.

மண்ணின் மைந்தர்கள் :

அருட்பணியாளர்கள்:
1. Fr. சைமன் பீட்டர்
2. Fr. ஆல்பர்ட் நெல்சன்
3. Fr. தாமஸ் ஜான் பீட்டர்
4. Fr. ரிச்சர்ட் பாபுமோன்
5. Fr. வின்சென்ட் கமலகண்ணன்
6. Fr. அகஸ்டின் ஜேக்கப்
7. Fr. ஆரோக்கிய மான்சிங் SDB
8. Fr. ஜான்பால்
9. Fr. ஆரோக்கிய ஜஸ்டின் MOC
10.Fr. ஜஸ்டின்

அருட்சகோதரிகள் : 25 க்கும் மேற்பட்ட அருட்சகோதரிகள்.

வழித்தடம் : திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து மாலைப்பட்டி சாலையில் மேற்கு மரியநாதபுரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

பேருந்துகள் : தடம் எண் 1 மற்றும் 2.

ஆலய வரலாறு :

மலை வளம் சூழ்ந்த திண்டுக்கல் மாநகரின் கிழக்கெல்லையில் முன்னோர்களின் உழைப்பாலும், அறிவுத் திறமையாலும் உருவானதே மரியநாதபுரம் என்ற அழகான ஊர்.

கிழக்கு சாப்பு மேற்கு சாப்பு ( தோல் தொழிற்சாலைக்கு சாப்பு என்பது இப்பகுதியின் பேச்சுவழக்கு சொல்) மக்கள் மரியாளின் புகழ்பாடும் மக்களாக வாழ்வதும் தாங்கள் அமைத்த ஆலயங்களுக்கு மாதாவின் பெயர் சூட்டி மகிமைப்படுத்தி மாதாவின் பக்தி மணம் வீசியதைக் கண்டு வியப்புற்று அருட்பணி நம்பிக்கைநாதர் அடிகளார் மரியானந்த பட்டினம் எனப் பெயரிட்டு அழைத்து வந்தார். அருட்தந்தை நம்பிக்கைநாதரால் திருமுழுக்கு பெற்ற இவ்வூர், காலப்போக்கில் இப்பெயர் "மரியநாத புரம்" என மருவியது.

பின்னர் கிழக்கு மரியநாதபுரம், மேற்கு மரியநாதபுரம் என இரு ஊர்களாக மாற்றம் பெற்றது. "மரியநாதபுரம் என்று சொல்லடா..
மரித்தோனே எழுந்து நில்லடா.. " - என்னும் கவித்துவம் மிகு கருத்தோவியத்தை படைத்து இவ்வூரை பெருமைப்படுத்தியவர் அருட்பணி மைக்கிள் ராஜ் அடிகளார் ஆவார். மேலும் இம் மக்களின் அன்னை மரியாளின் மீது கொண்ட இறைபக்தி, திருச்சபையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வாழ்க்கை நெறிமுறைகள், நாள்தோறும் தவறாமல் நடைபெறும் குடும்ப ஜெபம், தவறாமல் திருப்பலிகளில் பங்கு பெறும் இறை நம்பிக்கை, ஆன்மீக வழியில் நடைபெறும் குடும்ப விழாக்கள் இவற்றையெல்லாம் கண்கொண்டு, இது ஒப்பில்லாத ஒரு சமுதாயம், உலகத்துக்கோர் புதுமை என வியந்து 'மரியநாதபுரம் சின்ன ரோமாபுரி' என புனிதமான அங்கீகாரத்தை வழங்கினார்.

🍇மரியநாதபுரம் திண்டுக்கல் புனித சூசையப்பர் ஆலயத்தின் கீழ் இருந்ததால், இங்குள்ள மக்கள் 6 கி.மீ தூரத்தில் உள்ள பங்கு ஆலயத்திற்கு திருவழிபாடுகளுக்கு சென்று வந்தனர். கோவில் விளங்கினால் குடி விளங்கும் என்ற வாக்கின் படி ஊருக்குள் ஒரு ஆலயம் வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு முதலில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஒரு ஆலயம் சிறிய அளவில் கட்டினர். பின்னர் பல்வேறு கால சூழ்நிலை காரணமாக மக்களுக்கு பொதுவாக ஒரு ஆலயம் வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு தற்போது ஆலயம் உள்ள இடம் வாங்கபட்டது.1964 ம் ஆண்டு இறைவனின் அருளாலும், அன்னை மரியாளின் ஆசியுடன் மேதகு ஜோன்ஸ் மென்டோன்சா ஆண்டகையால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டது. மக்கள் மகிழ்ச்சியுடன் புதிய ஆலய கட்டுமானப் பணிகள் நடக்க உழைத்தனர்.

🍇ஆலய அஸ்திவாரம் கட்டிய பின்னர் தற்போது பலிபீடம் அமைந்துள்ள இடத்தில் மக்களின் வழிபாட்டிற்காக சிறு ஓலைக்குடில் ஆலயம் கட்டப்பட்டது.

💥இந்த ஓலைக்குடில் ஆலயத்தில் மாலையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து ஜெபிக்கும் வழக்கம் நாள்தோறும் தவறாமல் நடந்து வந்தது. ஒருநாள் மெழுகுவர்த்தியில் இருந்து தீயானது காய்ந்த பூமாலையில் பட்டு இந்த தற்காலிக ஆலயக் கூரை முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது. மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்த தீ மக்களின் மனங்களை பற்றியெரியச் செய்து புதிய ஆலய பணிகளை தொடர உதவியது.

🏵இவ்வேளையில் மேதகு தாமஸ் பெர்னாண்டோ அவர்கள் திருச்சி மறை மாவட்ட ஆயராகவும், அருட்தந்தை அமலதாஸ் அடிகளார் திண்டுக்கல் புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தையாகவும் பொறுப்பேற்றனர்.

💐அருட்தந்தை அமலதாஸ் அவர்கள் ஆலயப் பணிகளை துரிதப்படுத்தியதுடன், ஆலயத்திற்கு அருகில் உள்ள நிலத்தையும் அதில் கட்டப்பட்டிருந்த 'அன்னை இல்லம்' என்ற இல்லத்தையும் விலைக்கு வாங்கினார். பின்னாளில் இதுவே பங்குத்தந்தை இல்லம் ஆனது. மேலும் ஆலயத்திற்கு பின்புறம் தற்போது ஆங்கிலப் பள்ளி இருக்கும் இடத்தையும், மக்கள் மன்றம் இருக்கும் இடத்தையும் விலை கொடுத்து வாங்கினார்.
இவ்வாறாக மரியநாதபுரம் தனிப்பங்காவதற்கான நிலையை அடைய இவை பெரிதும் உதவியாக இருந்தது.

🌺1982 ஜூன் மாதத்தில் மரியநாதபுரம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டு அருட்பணி பீட்டர் ஜான் அவர்கள் முதல் பங்குத்தந்தை ஆனார்.

🍀மேதகு ஆயர் தாமஸ் பெர்னாண்டோ அவர்கள் ஆலய அஸ்திவாரத்தில் சிறு மாற்றங்களைக் கூறி, அதன்படி பங்குத்தந்தை அருட்பணி பீட்டர் ஜான் அவர்களின் வழிகாட்டுதலில் சிறப்பாக நடந்தது.

🦋1988 ல் அருட்தந்தை ஸ்டீபன் கஸ்பார் பொறுப்பேற்று ஆலய கட்டுமானப் பணிகளை பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் தொடர்ந்தார். ஆலய பலிபீடத்தின் மேலுள்ள வட்ட வடிவமான மேல்விதான அழகிய கோப்பை நிறைவு செய்தார்.

🦋மேலும் குழந்தை இயேசு கலையரங்கை கட்டினார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடும்ப அட்டைகள் கொடுத்து, ஆலயத்திற்கும் மக்களுக்குமான தொடர்பை அதிகரித்தார். அருட்தந்தை ஸ்டீபன் கஸ்பார் அவர்கள் இங்கிருந்து மாற்றம் பெற்று மாரம்பாடி பங்கிற்கு சென்ற பிறகும், நாள்தோறும் இங்கு வந்து ஆலய கட்டுமானப் பணிகளை மேற்பார்வை செய்து நிறைவு செய்து கொடுத்தார்.

⛪இவ்வாறு பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் பங்குத்தந்தையர்களின் வழிகாட்டுதலில் ஆலயம் கட்டப்பட்டு 14.08.1989 அன்று மேதகு ஆயர் கபிரியேல் அவர்களால் புனித விண்ணேற்பு அன்னையின் அழகிய இவ்வாலயம் அர்ச்சிக்கப் பட்டது.

🍇அதன் பின்னர் முன்னாள் பாளை மறைமாவட்ட ஆயர் மேதகு ஜூடு பால்ராஜ் இங்கு பங்குத்தந்தையாக பணி செய்த போது இவரது முயற்சியால் சலேசிய அருட்சகோதரிகள் இல்லம் கொண்டு வரப்பட்டது.

🌺அருட்பணி த. சகாயராஜ் அவர்கள் பல்வேறு பணிகளை மெற்கொண்டார். அவரது பணிக்காலத்தில் மக்களின் முழு ஒத்துழைப்போடு மக்கள் மன்றம் 2001 ம் ஆண்டு ஆயர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேலும் ஆலய மேற்கூரைகளில் பால்ச் சீலிங் போடப்பட்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. மேலும் இயேசுவின் நற்செய்தி அறிவிக்கும் பணியை கலை வடிவில் பாஸ்கு விழாவாக கொண்டாட இவர் பெரு முயற்சி மேற்கொன்டு சிறப்பாக இன்றும் நடைபெற்று வருகிறது. மணிக்கூண்டும் கட்டப்பட்டு அர்ப்பணிக்கப் பட்டது. இவரது காலத்தில் மக்களுக்கு பல்வேறு பணிகளின் வழியாக பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டர்.

🌸தொடர்ந்து பணிப்பொறுப்பேற்ற அருட்பணி .K.S. ஆரோக்கிய சாமி புதிய பள்ளிக் கட்டிடப் பணிகளை துவங்கினர்.

🌺பின்னர் பணிப்பொறுப்பேற்ற அருட்பணி. B. ஜான் பீட்டர் அவர்களால் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. மேலும் இவரது காலத்தில் தற்போது உள்ள ஆலய பலிபீடம் கோத்திக் கட்டிடக்கலையால் அழகுற புதுப்பிக்கப்பட்டு 01.06.2013 ம் அன்று ஆயர் மேதகு அந்தோனி் பாப்பு சாமி அவர்களல் அர்ச்சிக்கப் பட்டது.

🌸மேலும் ஆலயம் புதுப்பொலிவு பெற்றது. மேலும் இவரது முயற்சியில் இறப்புநிலை வாழ்வு நிதி உதவி திட்டம் என்ற இத்திட்டதில் உள்ள குடும்பத்தில் ஏற்படும் ஒவ்வொரு இறப்பிற்கும் ரூ 10,000 வழங்கி அவர்களின் துன்பத்தில் துணை நிற்கும் இத்தகைய திட்டதை துவங்கி மறைமாவட்டதிற்கே முன்மாதிரி பங்காக மாற்றம் பெற்றது.

🌺தொடர்ந்து பணிப்பொறுப்பேற்ற அருட்பணி தா. சகாயராஜ் ஆலயத்தின் ஒலி அமைப்பினை சிறப்பாக புதியதாக மாற்றி அமைத்தார். மேலும் ஆலய மேற்கூரை பராமரிப்பு பணிகளை சிறப்பாக செய்து முடித்தார்.

🍇அதன் பின் 2019 ல் பொறுப்பேற்ற அருட்பணி. ஜெயசீலன் அவர்களின் தலைமையில் தற்போது, பிரதிமாதம் 15 ஆம் நாள் அன்னைக்கு சிறப்பாக விழா எடுக்கப்பட்டு வருகிறது. பங்குப் பணிகளில் ஆர்வமுடன் மக்களை ஈடுபடுத்தி சிறப்பாக பணி செய்து வருகின்றார்.