555 அற்புத குழந்தை இயேசு ஆலயம், பாலகிருஷ்ணாபுரம்

   

அற்புத குழந்தை இயேசு ஆலயம்

இடம் : பாலகிருஷ்ணாபுரம்

மாவட்டம் : திண்டுக்கல் 

மறைமாவட்டம் : திண்டுக்கல் 

மறைவட்டம் : திண்டுக்கல் 

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : புனித செபஸ்தியார் ஆலயம், கிழக்கு மரியநாதபுரம்

பங்குத்தந்தை : அருள்பணி. ச. மார்ட்டின், OMI 

குடும்பங்கள் : 82

அன்பியங்கள் : 3

திருவழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு : காலை 08.00 மணிக்கு செபமாலை தொடர்ந்து திருப்பலி. 

வியாழன் : மாலை 06.00 மணிக்கு செபமாலை, நவநாள், திருப்பலி, குணமளிக்கும் வழிபாடு. 

முதல் வெள்ளி : மாலை 06.00 மணிக்கு செபமாலை, திருப்பலி, நற்கருணை ஆராதனை. 

குழந்தை இயேசு திருவிழா : பிப்ரவரி மாதம் 2 ம் வாரத்தில் வருகிற வெள்ளி, சனி, ஞாயிற்று மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். 

வழித்தடம் : திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து மாலைப்பட்டி மற்றும் சிலுவத்தூர் சாலை வழியாக செல்லும் தடம் எண் 2, 2A, 2B அனைத்து பேருந்துகள். 

பேருந்து நிறுத்தம் : கொல்லம் புதூர் 

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து 2கி.மீ.

Location map : 

https://maps.app.goo.gl/jA7mHeKDMd9WMtCB7

ஆலய வரலாறு :

இயற்கை அரணாய் மலைகளும், குன்றுகளும் விளங்க, இயற்கை எழிலோடு மூலிகை மணம் வீசும் காற்றைத்தரும் "சிறுமலை"யையும், அயல்நாட்டவரும் விரும்பி வருகை தரும் "மலைகளின் இளவரசி" கொடைக்கானலையும் தன்னகத்தே கொண்டது திண்டுக்கல் மாநகரம். இங்கு பழம் பெருமை வாய்ந்த ஆலயங்கள் பல இருந்தாலும், "குழந்தை இயேசு" ஆலயம் எதுவும் இல்லாததை கருத்தில் கொண்டவராய், புனித வளனார் பேராலய பங்குத்தந்தையாக இருந்த அருள்தந்தை. V. செல்வராஜ் அவர்கள் பாலகிருஷ்ணாபுரத்தில் 2001 -ஆம் ஆண்டில் இடம் வாங்கினார். அந்த இடத்தில் இறைவன் அருளாலும் மக்களின் ஒத்துழைப்புடனும் குழந்தை இயேசுவின் பெயரால் ஒரு சிற்றாலயத்தை 18.02 2001 -ல் அருள்தந்தையவர்கள் கட்டினார். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் திருப்பலி நிறைவேற்றி மக்களுக்கு இறையாசீர் பெற்றுத் தந்தார். மக்களை ஆலயம் அழைத்து வருவதற்கென வாகன வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார். 

2003 ஆம் ஆண்டு திண்டுக்கல் புதிய மறைமாவட்டமாக உதயமான பிறகு இச்சிற்றாலயம் "குமரன் திருநகர்" பங்கோடு இணைக்கப்பட்டது. அப்போதைய பங்குத்தந்தை அருள்பணி. பீட்டர் ஜான் அவர்கள் திவ்ய நற்கருணையை நிறுவினார். மேலும் மக்களை ஒருங்கிணைத்து ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வழி நடத்தினார். 

2006 ஆம் ஆண்டு கிழக்கு மரியநாதபுரம் புதிய பங்காக உயர்த்தப்பட்டு, அமலமரி தியாகிகள் துறவற சபை (OMI) -யிடம் ஒப்படைக்கப் பட்டது. தொடர்ந்து இதன் கிளைப் பங்காக பாலகிருஷ்ணாபுரம் அற்புத குழந்தை இயேசு ஆலயமானது, OMI குருக்களிடம் ஒப்படைக்கப் பட்டது.

தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பங்கு பொறுப்பினை அன்றைய பங்குத்தந்தை அருள்பணி. போஸ்கோ OMI மற்றும் உதவிப் பங்குத்தந்தையர்கள், ICM சபை அருள்சகோதரிகளோடு இணைந்து அன்பியங்களை உருவாக்கி, இப்பகுதி மக்களை அன்பின் பாதையில் வழிநடத்தினார்கள். மக்களின் வேண்டுகோளுக்கிணங்க வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. ஆலயம் நோக்கி மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 

"நீ என்ன மகிமை செய்யச்செய்ய, நான் உன்னை மென்மேலும் ஆசீர்வதிப்பேன்" என்ற அற்புத குழந்தை இயேசுவின் மீது நம்பிக்கை கொண்ட மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, ஆலயத்தை விரிவாக்கம் செய்வது என பங்கு மக்களோடு இணைந்து திட்டமிட்டு, அப்போதைய பங்குத்தந்தை அருள்பணி. பத்திநாதன் OMI அவர்கள் ஆலய இறைமக்கள், மறைமாவட்ட உதவியுடன் ஆலயத்திற்கு நிலம் வாங்கினார். தொடர்ந்து பணியாற்றிய பங்குத்தந்தை அருள்பணி. அமிர்தராஜ் OMI அவர்கள் மறைமாவட்டத்தில் முறையாக அனுமதி பெற்று, இறைமக்களின் மனம் தளரா உதவியோடும், உறவினர்கள், நண்பர்கள் உதவியுடன், அமலமரி தியாகி துறவற சபையோடு இணைந்து சிற்றாலயத்தை பெரிய ஆலயமாக விரிவுபடுத்தி, கட்டுமானப் பணிகளை நிறைவு செய்து, 23.03.2017 அன்று மதுரை உயர்மறைமாவட்ட பேராயர் மேதகு. அந்தோனி பாப்புசாமி, திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் பால்சாமி மற்றும் மறைமாவட்ட குருக்கள், துறவற சபை குருக்களோடு இணைந்து ஆலயம் புனிதப் படுத்தப் பட்டது. 

விரிவுபடுத்தப்பட்ட புதிய ஆலயத்தின் பங்குத்தந்தையாக அருள்பணி. மார்ட்டின் OMI அவர்கள் பொறுப்பேற்று, மக்களை ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வழி நடத்தி வருகின்றார். இவருடைய பணிக்காலத்தில் இளைஞர்களை ஒன்றிணைத்து, அவர்களை முழுமையான திருப்பலியில் பங்கேற்கச் செய்ததுடன், அவர்களுக்கு சில பொறுப்புகளையும் கொடுத்து, இளைஞர்களை ஆன்மீகப் பாதையில் வழிநடத்தி வருகிறார்கள். 

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் நடைபெறும் அற்புத குழந்தை இயேசு திருவிழா தேர்பவனியானது ஜெபமாலையுடன், பாடல்களை பாடிச்செல்வது மக்கள் குழந்தை இயேசுவிடம் கொண்ட நம்பிக்கையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது தனிச்சிறப்பு. 

பிற சமய மக்களும் இவ்வாலயத்திற்கு வருகை புரிந்து, அவர்கள் வேண்டிச்சென்ற காரியம் நிறைவேறி விட்டதாகவும், அவர்கள் பெற்றுக் கொண்ட நன்மைகளை சாட்சியாக எடுத்துக் கூறுவது ஆலயத்தின் மற்றொரு குறிப்பிடத் தக்க தனிச் சிறப்பாகும். 

இவ்வாலயம் வந்து திருமணம் தடையின்றி நடைபெறவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் ஜெபிப்பவர் பலர். தாங்கள் வேண்டிய வரத்தைப் பெற்றுக் கொண்டதற்கு இம்மக்களே சாட்சியாவர். 

"வாருங்கள் குழந்தை இயேசு ஆலயத்திற்கு.. பெற்றுச் செல்லுங்கள் குழந்தை இயேசுவின் ஆசீரையும், அருள் வரங்களையும்.."

ஆலய பங்கேற்பு அமைப்புகள்:

1. கோயில் பிள்ளை

2. ஆலய நிர்வாகிகள் 

3. பாடகற்குழு

4. அன்பிய பொறுப்பாளர்கள்

5. இளையோர்.

6. பீடச்சிறார். 

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. மார்ட்டின் OMI அவர்கள்.