550 புனித அமல அன்னை ஆலயம், அமல ஆசிரமம், ஸ்ரீரங்கம்

         

புனித அமல அன்னை ஆலயம் 

(புனித பதுவை அந்தோனியார் திருத்தலம் & இறை ஊழியர் ஜான்பீட்டர் கல்லறை நினைவகம்) 

இடம் : அமல ஆசிரமம், ஸ்ரீரங்கம், திருச்சி - 06. 

மாவட்டம்: திருச்சிராப்பள்ளி

மறைமாவட்டம் : கும்பகோணம்

மறைவட்டம் : இலால்குடி 

பங்கு நிர்வாகம் : கப்புச்சின் சபை 

பங்கின் சிறப்பு : புனித பதுவை அந்தோனியார் திருத்தலம்.

இறை ஊழியர் ஜான் பீட்டர் நினைவகம்.


கிளைப்பங்குகள் : 

1. புனித சவேரியார் ஆலயம், சவேரியார்புரம், ஸ்ரீரங்கம் 

2. புனித தந்தை பியோ ஆலயம், நடுக்கொண்டையம்பேட்டை, திருவானைக்காவல் 

3. புனித மங்கள அன்னை ஆலயம், திருவளர்சோலை 

4. புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், திருவளர்சோலை 

5. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், பனையபுரம் 

6. புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், உத்தமர்சீலி. 

பங்குத்தந்தை : அருள்திரு. ஆ. தைனிஸ், கப்புச்சின் சபை 

இணைப்பங்குத்தந்தை : அருள்திரு. இ. டேனியல் தயாபரன், கப்புச்சின் சபை

குடும்பங்கள் : 532 

அன்பியங்கள் : 18 

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு திருப்பலி :

முதல் திருப்பலி : காலை 06.30 மணி இரண்டாவது திருப்பலி : காலை 08.00 மணி

மூன்றாவது திருப்பலி : மாலை 05.30 மணி.

செவ்வாய் (புனித பதுவை அந்தோனியார் நவநாள்)

முதல் திருப்பலி : காலை 06.30 மணி இரண்டாவது திருப்பலி : காலை 11.00 மணி

மூன்றாவது திருப்பலி : மாலை 04.15 மணி நான்காவது திருப்பலி - மாலை 05.30 மணி.

வெள்ளிக்கிழமைகளில்

முதல் திருப்பலி : காலை 06.30 மணி இரண்டாவது திருப்பலி : காலை 11.30 மணி

(இறை ஊழியர் ஜான்பீட்டர் திருப்பயணிகளுக்கு) மூன்றாவது திருப்பலி : மாலை 05.30 மணி

(இறை இரக்க நவநாள், நற்கருணை ஆசீர்) 

வார நாட்களில் திருப்பலி : காலை 06.30 மணி. 

மாதந்தோறும் முதல் சனி (புனித அமல அன்னை நவநாள் சிறப்புத் திருப்பலி)

திருவிழாக்கள் :

பங்குத் திருவிழா : டிசம்பர் முதல் மற்றும் இரண்டாவது வாரங்களில். 

புனித பதுவை அந்தோனியார் திருத்தலத் திருவிழா: 13 வார நவநாட்களுடன் ஜூன் இரண்டாவது செவ்வாய்க்கிழமை.

இறை ஊழியர் ஜான்பீட்டர் நினைவுவிழா : மார்ச் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை. 

மண்ணின் இறையழைத்தல் : 

அருள்சகோதரி ஷகிலா ஏசுதாஸ், திருச்சிலுவை சபை (SCC)

வழித்தடம் : திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவானைக்காவல் மற்றும் அம்மாமண்டபம் வழியாக ஸ்ரீரங்கம் நோக்கிச் செல்லும் அனைத்துப் பேருந்துகள். 

நிறுத்தம் : மாம்பழச்சாலை & வீரேஸ்வரம் (அமல ஆசிரமம் சர்ச்)

Location map : Amalashram Ammamandapam Rd, Srirangam, Tiruchirappalli, Tamil Nadu 620006 0431 243 2208

https://maps.google.com/?cid=5441399078039563968


வரலாறு:

சென்னை - புதுச்சேரியில் கப்புச்சின் குருக்களின் மறைப்பணி:

கி.பி 1632-1834 வரையுள்ள 202 ஆண்டுகளில் பிரெஞ்சு கப்புச்சின் துறவிகள் சென்னை மற்றும் புதுச்சேரி மறைப்பணித்தலங்களுக்கு அடித்தளமிட்டு, உயர் மறைமாவட்டங்களாக உயர உழைத்தனர். இவர்கள், புதுச்சேரி - சென்னையில் கிறிஸ்தவத்தை விதைத்து, இம்மாநகரங்களை உருவாக்கியதில் தங்களது மேலான பங்களிப்பை தந்தவர்கள். இம்மாநகரங்களில் இன்று பிரமிக்கத்தக்க வகையில் சிறப்புற்று திகழும் கிறிஸ்தவத்திற்கு அடித்தளமிட்டவர்கள், புதிய கிறிஸ்தவர்களை உருவாக்கியவர்கள், இங்கு முதல் கிறிஸ்தவ ஆலயங்களை எழுப்பியவர்கள் என்ற பெருமை பிரெஞ்சு கப்புச்சின் மறைப்பணியாளர்களையே சாரும்.

மறைப்பணிக்கு சாட்சியாக இன்று புதுச்சேரி - உயர் மறைமாவட்டத்தில் இருக்கும் ஆலயங்கள் - கபுஸ் கோயில் (எ) புனித வானதூதர்களின் அரசி ஆலயம் - புதுச்சேரி, குருசுகுப்பம், மரக்காணம், செய்யூர் மற்றும் கடப்பாக்கம்.

சென்னை - மயிலை உயர் மறைமாவட்டத்தில் கப்புச்சின் மறைப்பணிக்கு சாட்சியாக திகழும் ஆலயங்கள் - புனித மரியன்னை இணைப் பேராலயம் (புனித பதுவை அந்தோனியார் திருத்தலம்) - பாரீஸ் கார்னர், புனித பேதுரு ஆலயம் - இராயபுரம், புனித வியாகுல அன்னை ஆலயம் - இராயபுரம், புனித ஆரோக்கியநாதர் ஆலயம் பழைய வண்ணாரப்பேட்டை, புனித காணிக்கை அன்னை ஆலயம் - இராயப்பேட்டை, புனித பதுவை அந்தோணியார் ஆலயம் - புதுப்பேட்டை, புனித விண்ணரசி ஆலயம் - சிந்தாதிரிப் பேட்டை, புனித அந்திரேயா ஆலயம் - வேப்பேரி, புனித மத்தியாஸ் (சிஎஸ்ஐ) ஆலயம் - வேப்பேரி, புனித பெரிய நாயகி ஆலயம் - பெரியப்பாளையம், புனித பிரான்சிஸ் அசிசி ஆலயம் - வாலாஜாபாத்.

பிரெஞ்சு புரட்சியின் தாக்கத்தால், போதிய மறைப்பணியாளர்கள் இல்லாமல் வேறு சபைக்குருக்களிடம் இவ் மறைப்பணித்தலங்கள் 1834 -இல் ஒப்படைக்கப்பட்டது. 109 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 1943 -இல் மீண்டும் தமிழகத்திற்கு கப்புச்சின் சபையினர் வருகைப் புரிந்தனர்.

சுவாமியார் தோப்பில் கப்புச்சின் துறவிகள் 1883 இல், திருச்சி, தூய வளனார் கல்லூரி இயேசு சபைக் குருக்களால், ஸ்ரீரங்கத்தில் இன்றைய அமல ஆசிரமத்தின் ஒருப்பகுதி நந்தவனத்தோட்டத்தின் சுற்றுசுவர் முதல் குருக்களின் சாப்பாட்டு அறையுள்ளப் பகுதி வாங்கப்பட்டு அங்கு, ஓய்வு இல்லம் ஒன்று அமைக்கப்பட்டது. 

1886 -இல் மறைமாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதன் எல்லைகள் வரையறுக்கப்பட்டன. அப்போது காவிரி ஆற்றின் கிழக்கேயுள்ள பகுதிகள் அனைத்தும் பாண்டிச்சேரி உயர் மறைமாவட்டத்தின் வசமாகவே, சுவாமியார் தோப்பு என்றழைக்கப்பட்ட அமலாசிரமம் பகுதி, பாண்டிச்சேரி மறைமாவட்டத்திற்கு இயேசு சபைக் குருக்களால் விற்கப்பட்டது. 

1889 இல் குடந்தை மறைமாவட்டம் புதிதாக பாண்டிச்சேரியிலிருந்து உருவானபோது, சுவாமியார் தோப்பு, குடந்தை மறைமாவட்டத்தினர் வசமாசி, புறத்தாக்குடி பங்கின் கீழ் வந்தது. புறத்தாக்குடி பங்குத்தந்தை திருவரங்கம் தீவில் பரந்துபட்டு வாழும் ஒரு சில குடும்பங்களுக்காக, ஆண்டுக்கு இருமுறை இந்த சுவாமியார் தோப்பில் திருப்பலி நிறைவேற்றினார். 

புறத்தாக்குடி பங்குத்தந்தை, ஆண்டுதோறும் சுவாமியார் தோப்புக்கு சொத்துவரி செலுத்தி, தோப்பை ஒருவருக்கு குத்தகை கொடுத்து வந்தார். அந்த குத்தகைக்காரர் ஆண்டு வாடகை செலுத்தி வந்தார். 1942 -ஆம் ஆண்டு குடந்தை மறைமாவட்ட ஆயர் பீட்டர் பிரான்சிஸ் அழைப்பின் பேரில், கப்புச்சின் துறவிகள், அவ்வாண்டின் அக்டோபர் மாதத்தில் இந்த சுவாமியார் தோப்பில் குடியேறினர்.

அமல ஆசிரமம் தோற்றம்:

குடந்தை மறைமாவட்டம், திருச்சி மாநகரில், வைணவர்களின்  முதன்மையான தலமான திருவரங்கம் தீவில், காவேரிகரையில் எழில் கொஞ்சும் சோலையில் (சுவாமியார் தோப்பு) பிரெஞ்சுக் கப்புச்சின் குரு அர்பன் லானர்வள்ளி 1943  ஜூன் 13 அன்று அமல ஆசிரமத்தை நிறுவினார். புனித அமல அன்னையின் பெயரால் அமைந்த இவ்வில்லமே, தமிழக கப்புச்சின் துறவிகளின் தொட்டிலாகும். இவ்வாறு மறுவருகையின் மூலம் தமிழ் மண்ணில் பிரான்சிஸ்கன் கப்புச்சின் சபைக்கு அடித்தளமிடப்பட்டது. காடாகயிருந்த இப்பகுதியை தனது உழைப்பால் சோலையாக மாற்றியப் பெருமை அருட்சகோதரர் வாலண்டைன் மற்றும் அருட்தந்தை. உருவா பொனவெந்தூரையேச் சாரும்.

அமல ஆசிரமத் துறவிகள் சந்தித்த செயற்கை இடறல்கள்:

1942 -இல் சுவாமியார் தோப்பை குத்தகைக்காரர் காலி செய்ய மறுத்ததால், கப்புச்சின் துறவிகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் நுழைய முடியாமல் தவித்தனர். ஆனால் பொன்மலையைச் சேர்ந்த திரு. எஸ்.பி. பெர்னாண்டஸ் அவர்களின் உதவியால் குத்தகைக்காரர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, துறவிகள் மிகவிரைவில் குடியேறினர். வைணவத் திருத்தலங்களில் முதன்மையான திருத்தலமான திருவரங்கம் தீவில், கிறிஸ்தவ பிரசன்னம் இருப்பதை விரும்பாத சில பழமை வாதிகள், 1946 இல் அமலாசிரமத் துறவிகளைப்பற்றி, பிள்ளைப் பிடிப்பவர்கள், மந்திரவாதிகள், சூனியக்காரர்கள் என அவதூறுப்பரப்பி, துறவிகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, இங்கிருந்து வெளியேற்ற முயற்சித்தனர். 

1947 செப்டம்பரில், புதிய ஆலயம் மற்றும் சாப்பாட்டு அறை அமைக்க துறவிகள் முயற்சி எடுத்தனர், அதற்கான இடம் இன்றைய துறவிகளின் சாப்பாட்டு அறையிலிருந்து கல்லறைத் தோட்டம் வரை புதிதாக வாங்கப் பட்டது. புதிய ஆலயம் அமைக்க திருவரங்கம் நகராட்சி மறுக்கவே, துறவிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னையிலுள்ள வருவாய்த்துறை தலைமையகத்தை நாடினர். அருள்பணி. பிளாசிட் முயற்சியில் 1949, ஜூலை 19 அன்று சென்னை மாகாணத்தில் உணவு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் திரு. ஜெ. எல்.பி ரோச் விக்டோரியா, அமலாசிரமத்திற்கு வருகைப்புரிந்து, கட்டப்படும் கட்டங்களை ஆய்வு மேற்கொண்டார். 1950 நவம்பர் மாதத்தில், அசிசி அச்சகம் அமைப்பதற்கும், டிசம்பர் மாதத்தில் ஆலயம் மற்றும் துறவற இல்லம் அமைப்பதற்கும் அரசு ஆவணச் செய்தது. ஆனால் ஒரே மாதத்தில் அதாவது 1951 ஜனவரியில், மகாஜன பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டு மீண்டும் கட்டிடப் பணி தடைப்பட்டது. இல்லத்தந்தை பிளாசிட், சென்னைக்கு மீண்டும் சென்று முதலமைச்சர் குமாரசாமி இராஜா மற்றும் அமைச்சர்களைச் சந்தித்து கட்டிடம் எழ உதவி நாடினார். இறுதியாக அனைத்து தடையும் நீங்கி 1951 அக்டோபர் 20 அன்று. திருவரங்கம் நகராட்சி, அமல ஆசிரமத்தில் ஆலயம் எழுப்ப, துறவற இல்லம் மற்றும் செபக்கூடம் அமைக்க எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்து ஆவணச் செய்தது. 

இயற்கை தந்த இடறல்கள் :

1952 நவம்பர் 30 -இல் பெரும் சூறாவளி தென்னிந்தியா முழுமையும்

தாக்கியது. அதில் திருவரங்கம் தீவும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அமல ஆசிரமத்தில் 100 ஆண்டு பழைமையான 25 மாமரங்கள் அடியோடு சாய்ந்தன. ஆனால் புதிய இடத்திற்கோ, புதிய ஆலயத்திற்கோ சிறிதும் சேதமில்லை. 

1961 ஜூலை 6, அன்று காவேரி ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளம், துறவற கப்புச்சின் இல்லத்தின் தரைத்தளத்தை இருமுறை சூழ்ந்தது. படகு உதவியால் துறவிகள் தூய வளனார் கல்லூரியில் தஞ்சமடைந்தனர். மேலும் 1977 நவம்பர் 12, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அமல ஆசிரமத்திற்கு சேதத்தை

ஏற்படுத்தியது. 

2005 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் பெருவெள்ளம் காவேரியில் கரைப்புரள, வெள்ள நீர் அமலாசிரமத்தின் தரைத்தளம் வரை சூழ்ந்தது. 

"இறைவா என்னை அமைதியின் தூதுவராக்கும்" -புனித அசிசி பிரான்சிஸ்

அமல ஆசிரமத் துறவிகளின் மறைப்பணி:

மறைத்தூதுப்பணிக்கு பெயர்பெற்ற கப்புச்சின் துறவிகள், அமலாசிரமத்தை நடுவமாக கொண்டு தமிழகமெங்கும் சென்று மறைபணியில் ஈடுபட்டனர்.

துறவிகளின் எளிய வாழ்வு, காவியுடை, நற்செய்தி அறிவிப்பு மக்களை பெரிதும் ஈர்த்தது. அமலாசிரமம் துவங்கிய நாள் முதல் இது ஒரு இணைப்பங்காக (Quasi Parish) செயல்பட்டுவந்தது. கப்புச்சின் துறவிகள் அமலாசிரமத்தை சுற்றியுள்ள சவேரியார்புரம், வீரேஸ்வரம், கொண்டையம்பேட்டை, திருவளர்சோலை, பள்ளிவிடை மற்றும் ஈச்சம்பட்டி பகுதிகளில் நற்செய்தியைப் பரப்பி புதிய கிறிஸ்தவர்களை உருவாக்கினர்.

அருள்பணி. டென்னிஸ் முயற்சியில் சவேரியார் புரத்திலும், அருள்பணி. அத்தனாசியுஸ் முயற்சியில் திருவளர்சோலையிலும் புதிய ஆலயங்கள் கட்டப்பட்டன. அருள்பணி. ஆஞ்சலோ மற்றும் அகஸ்டின், ஈச்சம்பட்டி மற்றும் பள்ளிவிடைப் பகுதிகளில் மிகச்சிறப்பாக மறைபணியாற்றினர். அமலாசிரமம் ஒரு ஆன்மீகச் சோலையாக செயல்பட்டு எண்ணற்ற குருக்கள், துறவிகள் மற்றும் இறைமக்களை இறையன்பால் ஈர்த்தது. தியானம், செபம், தவம், கூட்டம் என பல்வேறு ஆன்மீகத் தேவைகளுக்காக இவ்விடம் தமிழக மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. கப்புச்சின் இறையியல் கல்லூரி

அகில இந்திய கப்புச்சின் துறவிகளுக்கு இறையியல் கல்லூரியாக அமலாசிரமம் 1944-1947 வரை செயல்பட்டது. பின்பு கோத்தகிரிக்கு மாற்றப்பட்டது. 1988-2008 வரை தமிழக கப்புச்சின் மறைமாநிலத்தின் இறையியல் கல்லூரியாக செயல்பட்டது. பின்பு வெங்கங்குடியில் பிரான்செஸ்கோ என்ற புதிய இல்லத்திற்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.

கப்புச்சின் துறவியர் பயிற்சி இல்லம்

1955-56 இலத்தீன் பள்ளியாகவும், 1957-1987 வரை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி படிக்கும் குருமாணவர்களின் பயிற்சி இல்லமாகவும், கப்புச்சின் விருப்ப நிலையினரின் இல்லமாகவும் இயங்கிவந்தது. 2012 முதல் 2020 வரை மீண்டும் இவ்வில்லம் முதலாண்டு கப்புச்சின் இளம் குரு மாணவர்களை உருவாக்கும் இடமாக இயங்கி வந்தது. 

புனித பதுவை அந்தோனியார் திருத்தலம்:

அமலாசிரமம் துவங்கிய காலமுதல், புனித பதுவை அந்தோனியார் நவநாள் பெயரளவில் நடந்துவந்தது. 1969 ஆம் ஆண்டு தான் இப்பக்தி முயற்சிக்கு பெரியளவில் அடித்தளமிடப்பட்டது. அமலாசிரமத்தின் இல்லத்தந்தையாக பொறுப்பேற்ற அருள்பணி. பெல்லார்மின் அருள்தாஸ் அவர்களின் அரிய முயற்சியில், திருச்சி மாநகர் மற்றும் சுற்றுப்புறமெங்கும் மக்கள் வரவழைக்கப்பட்டு, அமலாசிரமம் புனித அந்தோனியார் திருத்தலம் என்ற சிறப்பைப் பெற்றது. இன்று ஆயிரக்கணக்கான இறைமக்கள் செவ்வாய் தோறும் இவ்வருட்தலத்தை சந்தித்து ஆசீரும், ஆறுதலும் பெற்றுச் செல்கின்றனர்.

2008 இல், அருள்பணி. ஜெரால்டு இராஜா பெரும் முயற்சியில், ஆலயத்தின் முன்பிருந்த தற்காலிக கூரைக் கொட்டகை அகற்றப்பட்டு, இரும்பு சீட்டுகளைக் கொண்டு நிரந்தரமான ஒரு பெரிய ஷெட் அமைக்கப்பட்டது. பின்னாட்களில் அருள்பணி. பெல்லார்மின் அருள்தாஸ் அவர்களின் முயற்சியில் அது ஆலய வளாகம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டது. மேலும் பக்தர்களின் உதவியால் பெரிய சிறப்பு பீடம் அமைக்கப்பட்டது. 

இறை ஊழியர் ஜான்பீட்டர் நினைவகம்:

அமல ஆசிரமத்தில் ஆறு ஆண்டுகள் (1970-71, 73-74, 77-79) இறைப்பணியாற்றிய அருள்தந்தை. ஜான்பீட்டர் சவரிநாயகம் அவர்கள் மக்களால் புனிதராக போற்றப்படுகின்றார். கும்பகோணம் மறைமாவட்டம் மைக்கேல்பட்டியை பூர்வீகமாகக் கொண்ட தந்தையவர்கள் 1941 மே 29 அன்று திருப்பந்துருத்தி என்ற ஊரில் பிறந்தார். தனது செபம், நேர்மை, கீழ்ப்படிதல், தாழ்ச்சி, ஏழ்மை, எளிமை, கருணை, ஒறுத்தல் மற்றும் தவ வாழ்வால் தன்னை ஓர் ஆழமான ஆன்மீக குருவாக உருவாக்கிக் கொண்டார். தன்னை நாடிவந்த மக்களுக்கு ஆத்மார்த்தமான வார்த்தைகளால் சிறந்த நெறிசார்ந்த வாழ்வுக்கு வழிகாட்டினார். கிறிஸ்துவின் பாடுகளின்மீது பற்றுக்கொண்டவராக வாழ்ந்தார். புற்றுநோய் என்னும் கொடிய சிலுவை அவரை வாட்டிய போது புன்னகைப்பூத்த முகத்துடன் உமது திருவுளம் நிறைவேறட்டும் என அமைதியாக சிலுவை நாயகனின் வழிநடந்தார். துன்பங்களைக் கண்டு அச்சமடையாமல் வெறுத்து ஒதுக்காமல் புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டு இயேசுவின் உண்மையான சீடத்துவ வாழ்வுக்குச் சான்று பகர்ந்தார். 

புற்றுநோயால் பாதிக்கப்பட்டத் தந்தை ஜான் பீட்டர் தனது 38 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார். அவரது புனித உடல் திருச்சி அமல ஆசிரமம் கப்புச்சின் துறவியர் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று நூற்றுக்கணக்கான மக்கள் அவரது கல்லறையை நாடி அவரது பரிந்துரையினால் பல்வேறு இறையாசீரைப் பெற்று வருகின்றனர். எனவே அன்னையாம் திருஅவை தந்தை ஜான் பீட்டர் அவர்களை டிசம்பர் 03, 2019 அன்று இறை ஊழியராக உயர்த்தி புனிதர் பட்டத்திற்கானப் பணிகளைத் துவங்கியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் தந்தையின் நினைவானது மார்ச் மாதத்தின் முதல் வெள்ளியன்று சிறப்பாக நினைவுகூறப்படுகின்றது.

பிரான்சிஸ்கன் ஒலி:

அறுபது ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் கூறும் நல்லுலகில் கத்தோலிக்க கிறிஸ்தவ விசுவாசத்தை பரப்ப எழுத்தில் ஏற்றம்தரும் கத்தோலிக்க மாத இதழ் பிரான்சிஸ்கன் ஒலி, பிரான்சிஸ்கன் பொதுநிலையினர் இயக்கத்தை வழிநடத்த அருள்பணி. சொலானோ அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் சமய - சமூக அக்கறைக் கொண்டு அனைவருக்காகவும் இயங்கும் இதழாக செயல்பட்டு வருகிறது. தொடக்கத்தில் இல்லறத்துறவி என்ற பெயரில் வெளி வந்து, இன்று தமிழக கிறிஸ்தவர்களால் பிரான்சிஸ்கன் ஒலி என அறியப்படுகிறது. 

பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை (அ) பிரான்சிஸ்கன் பொதுநிலையினர் இயக்கம்:

கப்புச்சின் துறவிகள் தமிழகமெங்கும் பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையை அறிமுகம் செய்து எண்ணற்ற பொதுநிலையினரை, இச்சபையில் சேர்த்தனர். பிரான்சிஸ்கன் பொதுநிலையினர் இயக்கத்தின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

தமிழகத்தில் பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில் உறுப்பினர்களான இறைஊழியர் ஜோசப் தம்பி மற்றும் இறைஊழியர் பரதேசி பீட்டர் புனிதத்தின் பாதையில் பயணிக்கின்றனர். இவ்வாறு அசிசி பிரான்சிஸ் -ன் வழியில் நற்செய்தியை பின்பற்றிய இந்த பொதுநிலையினர் புனிதர்களாக உயர்த்தப்பட உள்ளனர் என்பது சிறப்பு மிகுந்தது. இறைஊழியர் பரதேசி பீட்டர் பாளையங்கோட்டையில் தனது பேராசிரியர் பணியைத் துறந்து அமல ஆசிரமத்தில் பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில் இணைந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. 

"சிறு பிள்ளையைப் போல தம்மை தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசின் மிகப் பெரியவர்" -மத் 18:4

அமல ஆசிரமம் பங்குத்தோற்றம்:

1993, அக்டோபர் 1 மற்றும் 2 தேதிகளில், அமல ஆசிரமத்தின் பொன்விழா கொண்டாடப்பட்டது. அமல ஆசிரமத்தின் பொன்விழா (1943-1993) நினைவாக அன்றைய குடந்தை மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டா ரெமிஜியுஸ் அவர்கள்  1994 ஜனவரி 18ம் நாள் தனிப்பங்காக உயர்த்தினார். புனித அமல அன்னையின் பெயரால்

அமைக்கப்பட்ட அமல ஆசிரமம் பங்கு குடந்தை மறைமாவட்டத்தின் 68 -வது பாங்குத்தலமாகும். அமல ஆசிரமம் பங்கின் முதல் பங்குத்தந்தையாக அன்றைய இறையியல் கல்லூரியின் அதிபர் அருள்திரு. டோமினிக் இயேசு தாஸ் நியமிக்கப்பட்டார். உதவிப் பங்குதந்தையாக அருள்திரு. மத்தியாஸ் பொறுப்பேற்றார்.

புறத்தாக்குடி பங்கின் ஒரு பகுதியான அமல ஆசிரமம். அது நிறுவப்பட்ட காலத்தின் முதல் ஒரு இணைப்பங்காக (quasi parish) இயங்கி வந்தது. அமல ஆசிரமம் துறவிகள் சவேரியார்புரம். பள்ளிவிடை மற்றும் ஈச்சம்பட்டி போன்ற புறத்தாக்குடி பங்கின் பகுதிகளையும், பெரியவர்சீலி பங்கின் திருவளர்சோலை பகுதியையும் கண்காணித்து திருப்பலி மற்றும் திருவருட்சாதனங்கள் வழங்கும் பொறுப்பை ஏற்றனர். புதிதாக நிறுவப்பட்ட அமல ஆசிரமம் பங்கில் சவேரியார்புரம், திருவளர்சோலை, கொண்டையம்பேட்டை, பாச்சூர் - கடுக்கத்துறை, நொச்சியம், துடையூர், பனையபுரம் மற்றும் உத்தமர்சீலி என்ற 8 கிளைப்பங்குகள் இணைக்கப்பட்டன. 

பங்கின் எல்லை கிழக்கே உத்தமர்சீலி முதல் மேற்கே முக்கொம்பு வரையும், வடக்கே பங்குனி ஆறு முதல் தெற்கே காவேரி ஆறுவரையும் உள்ளடக்கியதாக இருந்தது. நம்பர் 1 டோல்கேட்டில் குடந்தை மறைமாவட்டம் நிலம் வாங்கி அங்கு புனித அலங்கார அன்னை மண்டபம் எழுப்பப்பட்டது. 1995 முதல் டோல்கேட், அமல ஆசிரமத்தின் புதிய கிளைப்பங்காக உருவாக்கப்பட்டு, திருப்பலிகள் தொடர்ந்து வழங்கப்பட்டன.

வளர்ச்சிப் பாதையில் அமல ஆசிரமம் பங்கு:

மறைக்கல்வி வகுப்புகள், தவக்காலத்தியானம், விடுமுறை விவிலியப்பள்ளி, குடும்பவிழா, திருப்பயணம் மற்றும் கிளைப்பங்குகளுக்குத் தொடர் திருப்பலி என பங்கினை ஒரு சிறந்த வளர்ச்சிப் பாதைக்கு முதல் பங்குத்தந்தை இயேசு தாஸ் அழைத்துச் சென்றார். புதிய பங்கின் ஆன்மீக வளர்ச்சிக்கு கப்புச்சின் இறையியல் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 12, 1992ல் பனையபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆலயம் மற்றும் மணிக்கூண்டு ஆகியவற்றைக் குடந்தை ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ், புனிதப்படுத்தினார். 

பனையபுரத்தைச் சார்ந்த இந்து நபர் ஒருவர் ஆலயமணி, சுரூபங்கள் மற்றும் மின் விளக்குகள் ஆகியவற்றை ஆலயத்திற்குக் காணிக்கை செய்தார் என்பது நெகிழ்ச்சிக்குரியது. இவை அனைத்தும் பெரியவர்சீலி பங்குத்தந்தை அருள்பணி. வின்சென்ட் பெரரையராவின் முயற்சியில் நடந்தது. 

திருவளர்சோலை சவேரியார் தெருவில் புனித பிரான்சிஸ் சவேரியாருக்குச் சிற்றாலயம் எழுப்பட்டு 1996 ஜூலை 21 அன்று பங்குத்தந்தை இயேசுதாஸ் அவர்களால் புனிதப்படுத்தப்பட்டது.

* 1996 டிசம்பர் 22 அன்று நான்கு சக்கர வாகனத்தில் கிறிஸ்துமஸ் குடில்

அமைக்கப்பட்டு, அவ்வாகனம் ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் பகுதிகளின் முக்கிய இடங்களில் நிறுத்தி கிறிஸ்து பிறப்புச் செய்தி வழங்கப்பட்டது. 

* 1998ஆம் ஆண்டு பங்குத்தந்தை பெ. அருள்தாஸ் பெரும் முயற்சியால்,

சுவிஸ் உபகாரிகள் உதவியுடன், பனையபுரத்தில் 24 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. மேலும் 200 ஆடுகளுக்கு மேல் வாங்கப்பட்டு அனைத்து கிளைக் கிராமங்களுக்கும் குடும்பம் ஒன்று வீதம் வழங்கப்பட்டது. 

* 1999 மே 30 அன்று. பங்குத்தந்தை பெ. அருள்தாஸ். பெரும் முயற்சியால், உத்தமாசீலியில் புதிய சமூகப்பணிக்கூடம் அமைக்கப்பட்டு அவரால் புனிதப்படுத்தப்பட்டது. 2000 ஆம் ஆண்டு கல்மேட்டுத் தெருவில் புனித அந்தோனியார் ஆலயம் புதியதாக கட்டுப்பட்டு புனிதப் படுத்தப்பட்டது. 

2001 ஜூன் 18 அன்று அனைத்துக் கிளைகிராமங்களிலும், உதயம் கப்புச்சின் சமூகப் பணி உதவியுடன் மாலை நேர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. 18, செப்டம்பர் 2006, அமல ஆசிரமத்தின் கிளைப் பாங்கான டோல்கேட், தனிப்பங்காக உயர்த்தப்பட்டு அதன் முதல் பாங்குத்தந்தையாகக் குடந்தை மறைமாவட்டக் குரு அருள்தந்தை. சூசை பொறுப்பேற்றார். பாச்சூர் - கடுக்கத்துறை நொச்சியம் மற்றும் துடையூர் கிளைப்பங்குகள் டோல்கேட் பங்கோடு இணைக்கப்பட்டன. 

2008 அக்டோபர் மாதத்தில் செபமாலை பவனி ஆரம்பிக்கப்பட்டு பங்கு மக்களின் உதவியால் புனித மரியன்னைக்கு சிறுத்தேர் செய்யப்பட்டது. 

18 ஏப்ரல் 2009, கிளைப்பங்கு நடுக்கொண்டையன் பேட்டையில் பங்குத்தந்தை சந்தியாகு முயற்சியில், மக்கள் புனிதர் தந்தை பியோவிற்கு புதிய ஆலயம் எழுப்பட்டது. புதிய ஆலயத்தை குடந்தை ஆயர் எப். அந்தோனிசாமி புனிதப்படுத்த தமிழக கப்புச்சின் மறைமாநில அதிபர் அ. சார்லஸ் திறந்து வைத்தார். 

2011 இல் பங்குத்தந்தை அருள்பணி. அந்தோனி தாஸ் மற்றும் பங்குமக்களின் பெரும் முயற்சியால் புனித லூர்து அன்னைக்கு ஒரு பெரிய கெபி பங்கு வளாகத்தில் எழுப்பப்பட்டு, அக்டோபர் 31, 2011 அன்று, பங்குத்தந்தை அருள்பணி. இருதயசாமி காலத்தில், குடந்தை ஆயர் எப். அந்தோனிசாமி புதிய கெபியைப் புனிதப்படுத்த, வடக்கு தமிழகத்தின் மறைமாநில அதிபர் அருள்திரு. அ. ஜோ. மாத்யூ திறந்து வைத்தார்.

* 2011ல் உதவிப் பங்குத்தந்தை ஸ்டான்லி அலெக்ஸ் மற்றும் கிராம மக்களின் கூட்டு முயற்சியால், திருவளர்சோலை புனித மங்கள மாதா ஆலயப்பிடம் புதுப்பிக்கப்பட்டது. டிசம்பர் 6, 2015 பங்குத்தந்தை அ. ஜோ. மாத்யூ மற்றும் உதவிப் பங்குத்தந்தை ஆ. தைனிஸ் ஆகியோரின் முயற்சியால் 'அமல் ஆசிரமம்' என்ற பங்கின் மாத இதழ் தொடங்கப்பட்டது. அதே நாளில் பங்கின் புதிய இணையத்தளமும் வடக்கு தமிழகத்தின் மறைமாநில அதிபர் பேரருள்திரு. ஜான் அந்தோனி துவக்கி வைத்தார். ஜூன் 3, 2016 இல் உதவிப் பங்குத்தந்தை ஆ. தைனிஸ் மற்றும் கிராம மக்களின் கூட்டு முயற்சியால், திரு. செல்வகுமார் என்ற இந்துசமய சகோதரர்  உதவியுடன் திருவளர்சோலையில் மங்களமாதா ஆலயம் விரிவுப்படுத்தப் பட்டு பேரருள்திரு. ஜான் அந்தோனி அவர்களால் புனிதப்படுத்தப்பட்டது. 

அமல ஆசிரமம் பவளவிழாவை (1943-2018) ஆகிய ஆண்டுகளில் கொண்டாடுவது என 2017 இல் முடிவு செய்யப்பட்டது. இல்ல அதிபர் அ. ஜோ, மாத்யூ மற்றும் இல்லப் பொருளர் ஆ. தைனிஸ் ஆகியோரின் முயற்சியால் பெரியளவில் புனரமைப்பு பணிக்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டன. 2018 ஜூன் முதல் அருள்தந்தையர் ஜான் அந்தோனி, ஜேசுராஜ் மற்றும் ஆ. தைனிஸ் கொண்ட பவளவிழா குழு உருவாக்கப்பட்டு, மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டது. 

செப்டம்பர் 3, 2019 அன்று அமல ஆசிரமத்தின் பவள விழாக் கொண்டாடப்பட்டு 75 இலட்சம் ரூபாயில் அமல ஆசிரமம் ஆலயம் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டு கும்பகோணம் ஆயர் மேதகு. F. அந்தோனிசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு தமிழக அமல அன்னை மறைமாநில அதிபர் பேரருள்திரு. அ. ஜோ. மாத்யூ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

ஏப்ரல் 4, 2017 பங்குத்தந்தையர் அ. ஜோ. மாத்யூ, ஆ. தைனிஸ் மற்றும் பங்கு மக்களின் முயற்சியால், புனித அந்தோனியார் பக்தர்களின் தாராள நன்கொடையால் சிலுவைப்பாதை நிலைகள் அமல் ஆசிரம வளாகத்தில் கட்டப்பட்டு, திருச்சி ஆயர் மேதகு. அந்தோனி டிவோட்டா அவர்களால் புனிதப்படுத்தப் பட்டது. 

பங்குத்தந்தை அருள்பணி. ஆ. தைனிஸ் அவர்களின் பெருமுயற்சியினால் பங்கின் வெள்ளிவிழா துவக்க நிகழ்வு ஜனவரி 20, 2019 அன்று கும்பகோணம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுரெமிஜியுஸ் தலைமையிலும், வெள்ளி விழா நிறைவு டிசம்பர் 07 & 08, 2019 ஆகிய தேதிகளில்

கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மேதகு. F. அந்தோனிசாமி தலைமையிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பங்குத்தந்தை அருள்திரு. ஆ. தைனிஸ் அவர்களின் தொடர் முயற்சியில் 73 ஆண்டுகள் பழைமையான திருவளர்சோலை புனித மங்கள அன்னை ஆலயமானது, அமல ஆசிரமம் பங்கு வெள்ளிவிழா நினைவாக மறுசீரமைக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தை கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மேதகு. F. அந்தோனிசாமி புனிதப்படுத்த தமிழக அமல அன்னை கப்புச்சின் சபை

மறைமாநில அதிபர் பேரருள்திரு. அ. ஜோ. மாத்யூ திறந்து வைத்தார். 


பங்கு வளாகத்திலுள்ள கெபிகள் : 

* திரு இருதய ஆண்டவர் (மாம்பழச்சாலை - அம்மாமண்டபம் சாலை)

* புனித பதுவை அந்தோனியார் (மாம்பழச்சாலை - அம்மாமண்டபம் சாலை)

* புனித லூர்து அன்னை (ஆலய வளாகம்) 

* இறைவழியர் ஜான் பீட்டர் (இறைவழியரின் கல்லறைக்கு அருகில்) 

* புனித அமல அன்னை (அமல ஆசிரமம் கப்புச்சின் இல்லம்) 

பங்கில் உள்ள துறவற சபைகள்:

கப்புச்சின் சபை:

1943 முதல் கப்புச்சின் சபையினர் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியிலுள்ள காவிரி ஆற்றங்கரையில் அமல ஆசிரமம் என்ற பெயரில் துறவற இல்லம் அமைத்து 77 ஆண்டுகளாக பல்வேறு ஆன்மீக மற்றும் சமூகப்பணிகளை ஆற்றி வருகின்றனர். 1994 முதல் அமல ஆசிரமம் பங்கின் பொறுப்பை ஏற்று வழிநடத்தி வருகின்றனர்.

திருச்சிலுவைக் கன்னியர்:

திருச்சிலுவைக் கன்னியர் இல்லம் தொடங்கும் திட்டமானது 1966 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 13 ஆம் நாள் நனவானது. அனுதினமும் இரு சகோதரிகள் மட்டுமே கோட்டை மடத்திலிருந்து மாட்டுவண்டியில் வந்து அமல ஆசிரமம் கப்புச்சின் துறவியரின் திருமண மண்டபத்தில் நர்ஸரி ஆங்கிலவழிப் பள்ளியை நடத்தி வந்தனர். அன்றைய அமல ஆசிரமம் அதிபர் தந்தை அத்தனாசியுஸ் கப்புச்சின் சபை அவர்கள் இவ்வில்லம் அமைவதற்கு பெரும் உதவியாகத் திகழ்ந்தார். 

ஐந்து பிராமண சகோதரர்களிடமிருந்து 1966இல் 2 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. அதன்பின்பு 1968இல் மேல்படிப்பிற்கு செல்ல இயலாத இளம் பெண்களுக்கென தையல் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த ஆண்டிலேயே நான்கு சகோதரிகள் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இங்கேயே தங்கி பணிபுரிந்தனர். 1970இல் மிஸேரியோ மிஷனரிகளின் மான்யம் ரூ.67,000/- மூலம் தட்டச்சு கல்வியும் தொடங்கப்பட்டது. 

1973ஆம் ஆண்டு இளந்துறவி களுக்கான பயிற்சியும் இங்கு ஆரம்பிக்கப்பட்டது. புனித மார்ட்டின் பொருளாதாரக்கல்வி, பத்தாம் வகுப்புத் தேர்வில் தவறியவர்களுக்கு விடுதி ஒன்றும், A.N.M. நர்ஸிங் படிப்பும் 1975 இல் தொடங்கப்பட்டன. இதன்பிறகு கைவிடப்பட்ட, அநாதை குழந்தைகள் விடுதி ஒன்று சாக்ளீடு சமுதாய பணிநிர்வாகத்தினரால் தொடங்கப்பட்டது. கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதி ஒன்று 1988இல் ஆரம்பிக்கப்பட்டது. 1992இல் பகல் நேர ஏழை மாணவ, மாணவியர் பள்ளித் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 

முடிவாக 2005ஆம் ஆண்டு நர்சரி பள்ளியானது ஆரம்பப்பள்ளியாக உயர்த்தப்பட்டது. இன்றுவரை தொடங்கப்பட்ட அனைத்துப் பணிகளும் சிறப்புடன் நடைபெற்று வருகின்றது. பிற மதத்தினர் அதிகமாக வாழும் இவ்விடத்தில் கிறிஸ்துவின் ஒளியை அருளும் நிறுவனமாக திகழ்கின்றது. 


பங்கில் உள்ள பக்த சபைகள் மற்றும் இயக்கங்கள்:

பொதுநிலையினர் பிரான்சிஸ்கன் இயக்கம் 

மரியாயின் சேனை

புனித அமல அன்னை இளையோர் இயக்கம் 

தந்தை ஜான் பீட்டர் பீடப்பூக்கள் 

புனித செசிலியா பாடகர்குழு 

இயேசுவின் கண்மணிகள்

இயேசுவே மீட்பர் செபக்குழு (பங்குத்தலம்)  

தந்தை ஜான் பீட்டர் செபக்குழு (திருவளர்சோலை)

புனித கிளாரா பாடகர்குழு (திருவளர்சோலை)

மங்கள அன்னை இளையோர் இயக்கம் (திருவளர்சோலை)  

புனித சவேரியார் இளைஞர் குழு (திருவளர்சோலை)  

புனித சவேரியார் யூத் பாய்ஸ் (உத்தமர்சீலி)

புனித ஆரோக்கிய அன்னை இளையோர் இயக்கம் (பனையபுரம்) 


பங்கில் உள்ள நிறுவனங்கள்:

அமல ஆசிரமம் தியான இல்லம் 

கப்புச்சின் சமூகப் பணிக் கூடம் (திருமண மண்டபம்)  

அமல ஆசிரமம் திருமணத் தகவல் மையம் - வார இறுதிநாட்களில் இசைப்பள்ளி, 

அமல ஆசிரமம் - கிளைக்கிராமங்களில் உதயம் கப்புச்சின் மாலை நேர வகுப்பு மையங்கள். 

புனித அந்தோனியார் மழலையர் மற்றும் ஆரம்ப ஆங்கிலப்பள்ளி 

புனித மார்டின் தெ போரஸ் தட்டச்சு மற்றும் தையல் பள்ளி

திருச்சிலுவை குழந்தைகள் தத்தெடுக்கும் மையம் 

திருச்சிலுவை மாணவியர் விடுதி இல்லம். 

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் 

1. அருள்திரு. இயேசுதாஸ், க.ச (1994 - 1996) 

2. அருள் திரு. பெ. அருள்தாஸ். க.ச. (1996 - 1999) 

3. அருள்திரு. சவேரியார், க.ச. (1999 - 2001) 

4. அருள்திரு. பால்சகாயநாதன், க.ச (2001 - 2003) 

5. அருள்திரு. ஆரோக்கியராஜ், க.ச (2003 - 2005) 

6. அருள்திரு. அற்புதராஜ், க.ச (2005 - 2008) 

7. அருள்திரு. சந்தியாகு, க.ச (2008 - 2011) 

8. அருள் திரு. அந்தோனிதாஸ், க.ச (2011 - 2012) 

9. அருள்திரு. இருதயசாமி, க.ச (2012 - 2015)

10. அருள்திரு. அ. ஜோ. மாத்யூ. க.ச (2015 - 2018) 

11. அருள்திரு. ஆ. தைனிஸ், க.ச (2018 - முதல் தற்போது வரை..) 


பங்கில் பணியாற்றிய உதவிப் பங்குத்தந்தையர்கள் 

1. அருள்திரு. மத்தியாஸ், க.ச (1994 - 1995) 

2. அருள்திரு. ஜோசப் ததேயுஸ், க.ச (1995 - 1996) 

3. அருள்திரு. எம். பிரான்சிஸ் சேவியர், க.ச (1996 - 1997) 

4. அருள்திரு. டேவிட் டோமினிக், க.ச. (1997 - 1998) 

5. அருள்திரு. அருமைநாதன், க.ச. (1998 - 1999) 

6. அருள்திரு. பால்சகாயநாதன், க.ச. (1999 - 2001) 

7. அருள்திரு. அ. சார்லஸ், க.ச. (2001 - 2002) 

8. அருள்திரு. ஆரோக்கியராஜ், க.ச. (2002 - 2003) 

9. அருள்திரு. எஸ். ஆரோக்கியம், க.ச. (2003 - 2005) 

10. அருள்திரு. ஸ்டீபன், க.ச. (2005 - 2006) 

11. அருள்திரு. நிர்மல்ராஜ், க.ச. (2006 - 2007) 

12. அருள்திரு. பால்ராஜ், க.ச. (2007 - 2011) 

13. அருள்திரு. ஜோசப் ததேயுஸ், க.ச. (2011 - 2012) 

14. அருள்திரு. ஸ்டேன்லி அலெக்ஸ், க.ச. (2012 - 2015) 

15. அருள்திரு. ஆ. தைனிஸ், க.ச. (2015 - 2018) 

16. அருள்திரு. இ. டேனியல் தயாபரன், க.ச. (2018 முதல்..) 


தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : அருள்பணி. ஆ, தைனிஸ், கப்புச்சின் சபை, பங்குப்பணியாளர் புனித அமல அன்னை ஆலயம், அமல ஆசிரமம், ஸ்ரீரங்கம், திருச்சி - 620 006.