71 புனித ஆரோக்கிய மாதா ஆலயம், முன்சிறை

     

புனித ஆரோக்கிய மாதா ஆலயம் 

இடம்: முன்சிறை (புதுக்கடை) 

மாவட்டம்: கன்னியாகுமரி 

மறைமாவட்டம்: குழித்துறை

மறைவட்டம்: வேங்கோடு 

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்கு : புனித செபஸ்தியார் ஆலயம், செபஸ்தியார்புரம் (ஓச்சவிளை)

பங்குத்தந்தை: அருட்பணி. S. ஜெயபிரகாஷ்

குடும்பங்கள் : 900

அன்பியங்கள் : 20

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 06.45 மணி

புதன் மாலை 05:30 மணி நவநாள் திருப்பலி

வெள்ளி மாலை 05:30 மணி திருப்பலி

சனி காலை 06:30 மணி சிறார் திருப்பலி

திருவிழா: செப்டம்பர் 08 -ம் தேதியை மையமாகக் கொண்டு பத்து நாட்கள். 

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. Rev. Fr. John S Kavas, Nagaland

2. Rev. Fr. A. Ajin Jose, Kuzhithurai Diocese

3. Rev. Sr. Mary Bosco, Carmel Matha Nikethan Kanuru, Vijayawada

4. Rev. Sr. S. Josephine Mary, SAT

5. Rev. Sr. Lourdu Mary, SAT

6. Rev. Sr. Amalorpavam, SAT

7. Rev. Sr. Cecili Theresa, SAT

8. Rev. Sr. A. Celsus Viyakulam, SAT

9. Rev. Sr. Rose Mary, SAT

10. Rev. Sr. Kronithas, SAT

11. Rev. Sr. Clara, SAT

12. Rev. Sr. Arul Mary, FMM

13. Rev. Sr. Gladis Alphonsa, CTC

14. Rev. Sr. Gabriel Mary Malliga, FMA

15. Rev. Sr. Joy Alice, CTC

16. Rev. Sr. Shalin Sheeba, SAT.

வழித்தடம்: மார்த்தாண்டம் -தேங்காப்பட்டணம் சாலையில் பயணித்து, புதுக்கடை பேருந்து நிலையம் நிறுத்தம்.

கருங்கல் -தொலையாவட்டம் -புதுக்கடை

Location map: Our Lady of Good Health Church, Munchirai

https://maps.app.goo.gl/QoPgix9sarnaL5fP8

ஆலய வரலாறு:

அறிமுகம்:

முஞ்சிறை என்னும் ஊர் மார்த்தாண்டத்திலிருந்து 8கி.மீ தொலைவில், தேங்காப்பட்டணம் பிரதான சாலையில் புதுக்கடைக்கு அருகாமையில் அமைந்திருக்கும் அழகான ஊர். கன்னியாகுமரி மாவட்ட மக்களால் சின்ன வேளாங்கண்ணி என்று அன்போடு அழைக்கப்படும் முஞ்சிறை புனித ஆரோக்கிய அன்னை ஆலயமானது, புதுக்கடை பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உச்சி கோபுரத்தோடு உயர்ந்து வளர்ந்து நிற்கும் காட்சி, அனைவர் மனதையும் கொள்ளை கொள்வதாக உள்ளது. இவ்வாலயம் முறையாக அமைவதற்கும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் கொச்சி ஆயர் இல்லத்திலிருந்து அருட்பணியாளர் ஒருவர் இறைவார்த்தையைப் போதிப்பதற்காக வருகை தந்துள்ளார். அவர் இறைவார்த்தையைப் போதித்துவிட்டு இங்கிருந்து புறப்படும் முன் மரியன்னையின் சொரூபத்தை கொடுத்துச் சென்றிருக்கின்றார். இப்பகுதி மக்கள் அதன் வழியாக தினந்தோறும் ஜெபம் செய்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி உள்ளனர்.

ஆலயம் தோன்றிய வரலாறு:

முதன்முதலாக மக்கள் வழிபடுவதற்காக ஓலையால் வேயப்பட்ட ஓர் ஆலயத்தை1905 ஆம் ஆண்டில் எழுப்பி உள்ளனர். இதன் பக்கச் சுவர்கள் வெட்டுக்கல்லால் கட்டப்பட்டிருந்தன. தரை சாணத்தால் மெழுகப்பட்டிருந்தது. இந்த இடம் அரசு ஆவணங்களின் படி முஞ்சிறை தேசத்து கழுநெட்டான்விளை ஆகும். இவ்வாலயம் முஞ்சிறை அர்ச்சிஸ்ட தேவமாதா தேவாலயம் என்று துவக்கக் காலத்தில் அழைக்கப்பட்டு வந்தது.

இப்பகுதி மக்கள் பெரும்பாலும் பனைமரம் ஏறும் தொழிலை செய்து வந்துள்ளனர். வறுமையின் காரணமாக ஓலை குடிசைகளில் வாழ்ந்து வந்தனர். ஆலயத்திற்கு வரியாக கருப்புக்கட்டியை கொடுத்து வந்துள்ளனர். நாளடையில் பனைமரத் தொழிலை விட்டுவிட்டு, கட்டிட தொழிலில் தங்களை ஈடுபடுத்தி வெளிமாநிலத்திற்கு, குறிப்பாக கேரளாவிற்கு வேலை தேடிச்சென்ற காரணத்தால் வருமானம் ஓரளவு உயர்ந்தது. பின்பு ஆலயத்திற்குப் பணத்தை வரியாக செலுத்த துவங்கினர். அப்பொழுது புதுக்கடை பங்குதந்தையாக இருந்த  அருட்பணியாளர் லூயிஸ் ஹென்றி அவர்களின் முயற்சியாலும், மக்களின் ஒத்துழைப்பினாலும் கருங்கல்லால் சுவர் எழுப்பப்பட்டு, ஓடுகளால் கூரை வேயப்பட்டு,

தரையில் தரை ஓடு பதித்து புதிய ஆலயத்தை 1914 இல் கட்டி முடித்துள்ளனர். 

பள்ளிக்கூடம்:

ஆலயப்பணி முடிவடைந்தவுடன், எழுதப் படிக்கத் தெரியாத ஏழை மக்களுக்கு எழுத்தறிவு கொடுப்பதற்காக, ஆலயப் பாதுகாவலி புனித மரியன்னை பெயரில் துவக்கப்பள்ளி ஒன்று துவக்கப்பட்டு, மலையாள மொழிவழிக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. பிற்காலத்தில் அருட்பணி. ஹிலரி அவர்களின் முயற்சியால் 1957 இல் இப்பள்ளியினை நடத்தும் பொறுப்பு புனித அன்னாள் சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. 1967-1968 இல் அருட்தந்தை சூசைய்யா அடிகளார் பங்குப்பணியாளராக இருந்த பொழுது அருட்சகோதரி. ஐவின் அவர்கள் முயற்சியால் ஆரம்பப் பள்ளியானது, "நடுநிலைத் தமிழ்வழிப் பள்ளியாக" தரம் உயர்த்தப்பட்டது.

1924இல் ஆலய வளாகத்தில் செயல்பட்டு வந்த புனித மேரி துவக்கப்பள்ளி தற்காலிக அங்கீகாரம் பெற்றது. 1930இல் பங்குப்பணியாளர் லூயிஸ் ஹென்றி அவர்கள் 7.500 சென்ட் நிலம் வாங்கி, பள்ளிக்கு வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் கட்டினார். 1947இல் புனித மேரி ஆரம்பப்பள்ளிக்கு நிரந்தர அங்கீகாரம் கிடைத்தது. 24.03.1952 ஆண்டு இப்பங்கின் முதல் பக்தசபையான கிறிஸ்தவ வாழ்வு சமூகம் அருட்பணி. V. டயஸ் அவர்களால் உருவாக்கப்பட்டது.

இந்த ஆலயம் கொல்லம் மறைமாவட்டத்தில் புதுக்கடை புனித விண்ணக அன்னை ஆலயத்தின் கீழ் கிளைப்பங்காகச் செயல்பட்டு வந்தது. துவக்கக் காலத்தில் 50 குடும்பங்களுக்கும் குறைவாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அருட்பணி. F. வர்க்கீஸ் அடிகளார் காலத்தில் பன்மடங்காக பெருகியது. இல்லங்கள் சென்று மக்களைச் சந்தித்து, அவர்கள் நோய் தீர ஜெபித்ததோடு, அவர்கள் இன்ப துன்பங்களில் தானும் ஒரு நபர் என்ற முறையில் பங்கெடுத்த காரணத்தால், மக்களுக்கு இறைமகன் இயேசுவின் மீதும், அன்னை மரியாவின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டுக் கொடிய நோயிலிருந்து விடுபட்டு, நூற்றுக்கணக்கான நபர்கள் குடும்பம் குடும்பமாகக் கிறிஸ்தவ மதத்திற்கு தங்களை மாற்றிக் கொண்டனர். இக்காலத்தில் மே மாதம் முழுவதும் மாதா வணக்க மாதமாகக் கடைபிடிக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் மாலையில் ஜெபமாலை, நவநாள், திருப்பலி ஆகியவை தொடங்கப்பட்டு, இன்று வரை சிறப்பாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இக்காலக் கட்டத்தில் ஆலயத்திற்கு முன்னால் புனித குழந்தை தெரசாள் குருசடி ஒன்று நல்லுள்ளம் கொண்ட நன்கொடையாளர் ஒருவரின் நிதியுதவியுடன் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

துவக்கக் காலத்தில் ஆலயத்தில் மாதத்திற்கு இரு ஞாயிறு மட்டும் காலைத் திருப்பலி நடை பெற்று வந்தது. 1971ஆம் ஆண்டு அருட்தந்தை சேவியர் ராஜமணி அடிகளார் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றது முதல், எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை திருப்பலியும் அதோடு திங்கள், வியாழன் மற்றும் சனி ஆகிய வார நாட்களிலும் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இவருடைய காலத்தில் மக்களின் பங்கேற்பு அதிகமாக இருந்த காரணத்தால் மண்டபத்திற்கும், பழைய கோவிலுக்கும் இடைப்பட்ட சுவர் இடிக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆலயத்தின் பெயர் முஞ்சிறை புனித ஆரோக்கிய மாதா ஆலயம் என மாற்றப்பட்டது. மேலும் ஆலயத்திற்கு முதன்முதலாக ஒலிபெருக்கி வாங்கப்பட்டது. ஆலய நிர்வாகத்தை நடத்துவதற்கு வசதியாகப் பங்கை பல தொகுதிகளாக பிரித்து; முடுதம், செயலர் மற்றும் கணக்கரோடு இணைந்து செயல்பட பத்து நபர்களை கொண்ட நிர்வாகக் குழுவை ஏற்படுத்தினார். 

கோட்டாறு மறைமாவட்ட ஆயராக இருந்த மேதகு ஆரோக்கியசாமி ஆண்டகையின் அனுமதி பெற்று அர்ச். தேவமாதா தேவாலயம் என்றிருந்த பெயர், 03.09.1976 முதல் "முஞ்சிறை புனித ஆரோக்கிய மாதா ஆலயம்" என்று அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

வெளியூர் பக்தர்கள் வருகை:

1980ஆம் ஆண்டு பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்பணி. ஆசீர்வாதம் A. அடிகளார், ஆலய வளர்ச்சிக்காக பங்கில் உள்ள குடும்பங்கள் அனைத்தையும் பல பகுதிகளாக பிரித்து, ஒவ்வொரு நாளும் காலையில் வீடுகளைச் சந்தித்தும் மாலையில் அவர்களை ஒன்றிணைத்து ஜெபவழிபாடு நடத்தியும், மக்கள் மத்தியில் இறை நம்பிக்கையை ஊட்டினார். இவரின் முயற்சியால் அதிக மக்கள் கிறிஸ்தவத்திற்கு மாறினார்கள். இவர் காலத்தில் கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தை தொடர்ந்து இரண்டாவது பக்த சபையாக புனித வின்சென்ட் தே பவுல் சபை 1982ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, முஞ்சிறை பங்கை தலைமையிடமாகக் கொண்டு 12 கிளைச் சங்கங்களை உள்ளடக்கி முஞ்சிறை வட்டார சபை தொடங்கப்பட்டது.

இப்போது அமைந்திருக்கும் பங்குப்பணியாளர் இல்லம் 13.375 சென்ட் இடம், 23.05.1984ஆம் ஆண்டு இவருடைய முயற்சியால் வாங்கப்பட்டது. பழைய ஆலயத்தின் முன் பகுதியிலுள்ள கான்கிரீட் மண்டபம் மற்றும் கோபுரம் ஆகியவவை கட்டப்பட்டன. மேலும் ஏழை மாணவர்கள் உயர்கல்வி பயில நிதியுதவி அளித்து அவர்களை ஊக்கப்படுத்தினார். 

1986 ஆம் ஆண்டு பங்கு அருட்பணியாளராகப் பொறுப்பேற்ற அருட்பணி. ஆல்பர்ட்ராஜ் M. அவர்கள், இக்னேசியஸ் இளைஞர் சங்கம் என்ற அமைப்பை 16.03.1987இல்

ஏற்படுத்தினார். இவருடைய காலத்தில் இப்பங்கின் முதல் குருவானவரான அருட்பணி. ஜாண் S. கவாஸ் அடிகளார் 1988ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் நாள் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 

1990 ஆம் ஆண்டு பங்கு அருட்பணியாளராகப் பொறுப்பேற்ற அருட்பணி. பீட்டர் அருள்ராஜ் S. அவர்களின் முயற்சியால் பழைய ஆலயப் பீடம் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகள் கான்கிரீட் கூரையாக மாற்றப்பட்டன.

1994 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அருட்பணி. ஹிலரி A.M. அவர்கள், முஞ்சிறை தனிப்பங்காக உருவாக வேண்டும் என்ற விதையை மக்கள் மத்தியில் விதைத்தார். இவருடைய காலத்தில் பழைய ஆலயத்தில் இருந்த திருப்பலி பீடம் வடிவமைக்கப்பட்டது. மேலும் 05.11.1994ல் 16 சென்ட் நிலமும்,

19.01.1995 ல் 16.500 சென்ட் நிலமும் வாங்கப்பட்டன. முஞ்சிறை புனித ஆரோக்கிய மாதா மெட்ரிக் பள்ளிக்கான கட்டிடம் வாங்கப்பட்ட இந்த இடத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனிப்பங்காக உருவாதல்:

1995ஆம் ஆண்டு பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்ற அருட்பணி. கார்மல் I. அடிகளார் அவர்கள், வழிபாடுகளைத் திட்டமிட்டு செயல்படுத்த திருவழிபாட்டு குழு ஒன்றை ஏற்படுத்தினார். 02.06.1997ஆம் ஆண்டு முஞ்சிறை புனித அரோக்கியமாதா மெட்ரிக் பள்ளியானது, L.KG முதல் 8ஆம் வகுப்பு வரை அரசின் அனுமதி பெற்று தோற்றுவிக்கப்பட்டது. இவருடைய காலத்தில் 26.05,1998இல் முஞ்சிறை புனித ஆரோக்கிய மாதா கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டு, அதன் முதல் நிறுவனமாக முஞ்சிறை புனித ஆரோக்கிய மாதா தையல் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது.

06.09.1998இல் அருட்பணி. கார்மல் I. அடிகளார் அவர்களால், மெட்ரிக் பள்ளிக்கான புதிய கட்டிடப் பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டு, தொடர்ந்து கட்டிட வேலைகள் நடைபெற்று வந்தன. முஞ்சிறை பங்கைத் தனிப்பங்காக மாற்ற வேண்டும் என்று ஆயர் அவர்களுக்கு அருட்பணி. கார்மல் அடிகளார் அவர்கள் பரிந்துரைத்தார்கள்.

மேதகு ஆயர் லியோன் A. தர்மராஜ் அவர்களால் 07.10.2000 அன்று முஞ்சிறை தனிப் பங்காக உயர்த்தப்பட்டு, அன்று மாலையில் ஆயர் தலைமையில் நடைபெற்ற கூட்டுத் திருப்பலியில் அருட்பணி. ஜோக்கிம் A. அவர்கள் முதல் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார்கள். இப்பங்கின் கிளைப்பங்காக செபஸ்தியார்புரத்தில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயம் இணைக்கப்பட்டது.

பங்குதந்தையர்களும் பணிகளும்:

அருட்பணி.ஜோக்கிம் A.

பங்கு அருட்பணியாளர் இல்லம் இல்லாத நிலையிலும், வாடகை வீட்டில் தங்கியிருந்து தனது பணியை செய்தார். தலத்திருச்சபையின் உயிரணுவாக 15 அன்பியங்களை உருவாக்கினார். 

பள்ளியின் வளர்ச்சிக்காக 29.01.2001இல் 35.250 சென்ட் இடமும், 05.11.2001இல் 12.550 சென்ட் இடமும் தனது சொந்த பணத்தை முன்பணமாக அளித்து பங்கு மக்களின் ஒத்துழைப்பால் வாங்கினார். தற்பொழுது இந்த இடத்தில் தூய மரியன்னை நடுநிலைப்பள்ளி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்வழிப் பள்ளியில் புதிய கட்டிடம் மற்றும் பங்குப்பணியாளர் இல்லம் கட்டுவதற்கும் திட்டம் தயாரித்து வெளிநாட்டிற்கு அனுப்பினார். 

அருட்பணி. செபாஸ்டின் F.

பங்கு சார்பாக "உன்னிலே சரணாகதி" என்ற ஒலிநாடா வெளியிடப்பட்டது. மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்க ஆண்டுதோறும் “சின்னஞ்சிட்டுகள்" என்ற மலரும் வெளியிடப்பட்டது. மேலும் மாதந்தோறும் பங்கில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை மக்கள் தெரிந்து கொள்ள "பங்குமலர்" ஒன்று வெளியிடப்பட்டது. மாணவர்களின் படிக்கும் திறனை வளர்க்கும் பொருட்டு மறைக்கல்வி சார்பாக நூலகம் ஒன்று நிறுவப்பட்டது. ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெறும் பொருட்டு அவர்களுக்கு கல்வி உதவி வழங்குவதற்காக ஏழை மாணவர் உயர் கல்வி நிதி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. 

30.10.2002 இல் புதன்கிழமை புனித ஆரோக்கிய அன்னை நவநாள் தொடங்கப்பட்டது. 28.11.2002 கன்னிக்கரை என்ற இடத்தில்18.141 சென்ட் நிலம் வாங்கப்பட்டு, பொதுகல்லறைத் தோட்டமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்புக்கான அரசு அங்கீகாரம் 2003ஆம் ஆண்டு பெறப்பட்டது. மெட்ரிக் பள்ளியின் வளர்ச்சிக்காக, பள்ளியின் அருகில் 14.07.2003 அன்று 16.500 சென்ட் நிலமும், 25.04.2005 அன்று முறையே 5.012 சென்ட் நிலமும், மற்றும் 7.142 சென்ட் நிலமும், 15.06.2007 அன்று 5.012 சென்ட் நிலமும்,  41.250 சென்ட் நிலமும், மற்றும் 2 சென்ட் நிலமும் பல்வேறு நபர்களிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்டது.

தமிழ்வழி பள்ளிக்கான பொது பாதை புதுக்கடை தேர்வுநிலை பேரூராட்சியின் பரிந்துரையின் பேரில் அரசிடம் இருந்து பெறப்பட்டது. தமிழ்வழிக் கல்வி, மெட்ரிக் பள்ளி வகுப்பறை, பங்கு அருட்பணியாளர் இல்லத்திற்கும் புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது. 

புதிய ஆலயம் கட்டுவதற்கு 01.09.2007 அன்று கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன. பின்னர் ஆலயம் கட்டும் பணி தொடர்ந்து நடைபெறவில்லை. இப்பொழுது நாம் காணும் ஆலயம் கட்ட ஏற்பட்ட தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து, ஆலயம் அமைய அடிக்கல்லாக இருந்து செயல்பட்டார்.

அருட்பணி. பிறைட் சிம்சராஜ் A. 

பெண்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக கிராம முன்னேற்ற சங்கத்தை 06.03.2011இல் தோற்றுவித்தார். 2012 இல் கைகள் இயக்கம், மரியாயின் சேனை ஆகியன இவரின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டது. பத்தாம் திருவிழாவில் மலையாள திருப்பலி நடத்தும் முறையை துவக்கினார்.

புளிநின்றவிளையில் பழமை வாய்ந்த தூய அந்தோணியார் குருசடி புதுப்பிக்கப்பட்டு திரு. வறுவேல் குடும்பத்தினரால் 22.03.2010 அன்று பங்கிற்கு எழுதி கொடுக்கப்பட்டு, கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் இறைஇரக்க செபம் தொடங்கப்பட்டது. நூற்றாண்டு விழா நினைவாக, பழைய குழந்தை தெரசாள் குருசடி புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

மெட்ரிக் பள்ளியின் அருகில் 27.12.2011 இல் 19 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. மெட்ரிக் பள்ளியில் புதிய வகுப்பறைகளும், மெட்ரிக் மற்றும் தமிழ்வழி பள்ளிகளைச் சுற்றிலும், புதிய சுற்றுச் சுவர் கட்டப்பட்டது. மெட்ரிக் பள்ளியில் Smart Class நடத்தவும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் தொடங்க உறுதுணையாக இருந்தார். மண்ணின் மைந்தர் அருட்பணி. கவாஸ் அவர்களுடைய குருத்துவ வெள்ளிவிழா சிறப்பாக கொண்டாட உறுதுணையாக இருந்தார். பங்கிலிருந்து முதல் அருட்சகோதரியாகச் சென்று சிறந்த முறையில் இறைப்பணியாற்றி வரும், அருட்சகோதரி மேரி போஸ்கோ S. அவர்களின் பொன்விழாவை பங்கில் சிறப்பாக நடத்தினார்.

ஆலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவி திட்டம் ஒன்றைத் துவங்கி பங்கிற்கு பெருமை சேர்த்ததுடன், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அ.மு.ச. வழியாக இரண்டு ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்க தூண்டுகோலாக இருந்து செயல்பட்டார்.

அருட்பணி. அகஸ்டின் P. 

04.06.2013 அன்று பங்கின் பொறுப்பேற்று, மக்களை ஒருங்கிணைத்து ஒன்றாக செயல்பட வைத்து, நூற்றாண்டு விழா கண்ட பெருமை இவரையே சாரும். 09.07.2013இல் மெட்ரிக் பள்ளியில் 12 ஆம் வகுப்பு நடத்த அரசின் அங்கீகாரம் கிடைத்தது. ஆலய நூற்றாண்டு பெருவிழா 10 நாள் திருவிழாவாக 30.03.2013 முதல் 08.09.2013 வரை சிறப்பாக கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு பெருவிழா சிறப்பு மலர் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் 8 ஆம் திருவிழா திருப்பலியில் வெளியிடப்பட்டது.

புதிய ஆலயக் கட்டுமான, புதிய வரைபடம் உருவாக்கப்பட்டது. 09.02.2014இல் புதிய ஆலயம் கட்ட மாவட்ட ஆட்சியரிடமிருந்து அனுமதி பெறப்பட்டது. 22.12.2014இல் குழித்துறை மறைமாவட்டம் உதயமாகி, அதன் முதல் ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் 24.02.2015 இல் திருநிலைப்படுத்தப்பட்டார். அருட்பணி. அகஸ்டின் P. அவர்கள் மறைமாவட்ட பொருளராக அறிவிக்கப்பட்டார். புதிய ஆலயம் கட்டப்பட இருப்பதால் தற்காலிக ஆலயம், மெட்ரிக் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நித்திரவிளை சாலையை நோக்கிய வண்ணம் கட்டப்பட்டு 18.03.2015 அன்று

ஆயரால் அர்ச்சிக்கப்பட்டது. இவரது காலத்தில் புதிய ஆலயத்திற்கான கட்டிட குழு தேர்வு செய்யப்பட்டது. 

அருட்பணி. பெஞ்சமின் D.

13.06.2015 இல் பொறுப்பேற்று, புதிய ஆலய கட்டுமானப் பணிக்கான நிதி திரட்டுவதில் ஈடுபட்டார். குழித்துறை மறைமாவட்டம் ஆறு மறை வட்டங்களாக பிரிக்கப்பட்டு, அதில் ஒன்றாக புதிதாக உதயமான வேங்கோடு மறைவட்டத்தின் முதல்வராக அருட்பணி. பெஞ்சமின் D. அவர்கள் 06.01.2016 அன்று பொறுப்பேற்றார். 

07.01.2016 அன்று புதிய ஆலயத்திற்கான அடிக்கல் ஆயர் மேதகு ஜெரோம்தாஸ் வறுவேல் அவர்களால் நாட்டப்பட்டது. புதிய ஆலயத்தின் மேற்கூரை 19.12.2017 அன்று வார்க்கப்பட்டது. 31.12.2017 அன்று புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

அருட்பணி. சேவியர் புரூஸ் R.

14.11.2018 அன்று பொறுப்பேற்றார். 20.012019 ஞாயிறு திருப்பலிக்குப் பின் புதிய ஆலயத்தின் நுழைவாயில்

அர்ச்சித்து நாட்டப்பட்டது. அன்பியங்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்பட்டது.

குடும்பநலப் பணிக்குழு, சிறார் பாராளுமன்றம், கல்விக்குழு, தோழமை கைகள் இயக்கம் ஆகியன துவக்கப்பட்டன. 

25.01.2024 அன்று கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு நசரேன் சூசை அவர்களின் தலைமையில், குழித்துறை மறைமாவட்ட ஆயர் மேதகு ஆல்பர்ட் அனஸ்தாஸ் அவர்கள் முன்னிலையில் புதிய ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது. தொடர்ந்து பங்குப்பணியாளர் இல்லம், தியான மண்டபம், சிலுவைப்பாதையின் 14 நிலைகள், பங்குப்பணியாளர் அலுவலகம், நேர்ச்சைப் பொருட்கள் விற்பனை செய்யும் அலுவலகம், கொடிமரம் ஆகியவை ஆயர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 

ஜாதி மதங்களைக் கடந்து தினமும் ஏராளமான மக்கள் வற்றாத வரங்களின் ஊற்றாம் முஞ்சிறை புனித ஆரோக்கிய அன்னையின் பாதம் நாடி ஏராளம் அருள் நன்மைகளை பெற்றுச்செல்கிறார்கள். நோயாளிகள் பலர் நோய் நீங்கி நலமடைகிறார்கள். மிக முக்கியமாக பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவின் போது வெளியூர் பக்தர்கள் பெருமளவில் பங்கு கொண்டு அன்னையின் ஆசி பெற்று செல்கின்றனர்.

பங்கில் உள்ள குருசடிகள்:

1. புனித அந்தோனியார் குருசடி, புளிநின்றவிளை

2. புனித குழந்தை தெரசாள் குருசடி, ஆலய வளாகம் 

பங்கின் கல்வி நிறுவனம்:

தூய மேரி நடுநிலைப்பள்ளி

முன்சிறை புனித ஆரோக்கிய மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. பங்கு அருட்பணிப் பேரவை

2. நிதிக்குழு

3. தணிக்கைக்குழு

4. பள்ளி அறக்கட்டளை

5. சிறுசேமிப்புக் குழு

6. பாடகற்குழு

7. பீடச்சிறார்

8. அன்பிய ஒருங்கிணையம்

9. திருத்தூதுக் கழகங்களின் ஒருங்கிணையம்

10. திருவிவிலியப் பணிக்குழு

11. மறைக்கல்வி மன்றம்

12. வழிபாட்டுக்குழு 

13. பாலர் சபை

14. சிறுவழி இயக்கம்

15. இளம் கிறிஸ்தவ மாணாக்கர் இயக்கம்

16. சிறார் பாராளுமன்றம்

17. இளைஞர் இயக்கம் 

18. கிறிஸ்தவ வாழ்வு சமூகம்

19. புனித வின்சென்ட் தே பவுல் சபை

20. பெண்கள் இயக்கம்

21. கிராம முன்னேற்ற சங்கம்

22. மரியாயின் சேனை

23. தோழமை கைகள் இயக்கம்

24. மாதர் தன்னம்பிக்கை இயக்கம்

25. அடித்தள முழுவளர்ச்சி சங்கம் 

26. கத்தோலிக்க சேவா சங்கம்

27. குடும்பநலப் பணிக்குழு

28. கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம்

29. Educational Group.

பங்கில் பணியாற்றிய உபதேசியார்கள்:

1. திரு. சிலுவை அருளப்பன்

2. திரு. அந்தோணிமுத்து

3. திரு. வெள்ளையன் உபதேசி

4. திரு. அருளப்பன்

5. திரு. A. அன்புடையான்

6. திரு. A. இராயப்பன்

7. திரு. பவுல் உபதேசி

8. திரு. வறுவேல்

9. திரு. A. செல்வராஜ் (தற்போதைய உபதேசியார்)

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

(புதுக்கடை தூய விண்ணேற்பு அன்னை பங்கின் கீழ்)

1. Rev. Fr. Louis Henry (1911-1934)

2. Rev. Fr. Raphael Jesudasan (1934-1935)

3. Rev. Fr. Varghese F. (1935-1941)

4. Rev. Fr. Maria Louis Varuvel (1941-1943)

5. Rev. Fr. S. T. Mathias (1943-1947)

6. Rev. Fr. Peter L. Christian (1947-1950)

7. Rev. Fr. Paul Sebastian Fernandez (1950-1951)

8. Rev. Fr. Dias V. (1951-1952)

9. Rev. Fr. C. F. Wenceslas (1952-1953)

10. Rev. Fr. Stanislaus Koska (1953-1954)

11. Rev. Fr. Alphonse M. (1954-1956)

12. Rev. Fr. A. E. Retnasamy (1956)

13. Rev. Fr. C. M. Hilary (1956-1960)

14. Rev. Fr. Ambrose Balthans (1960-1967)

15. Rev. Fr. Susaiya M. (1967-1971)

16. Rev. Fr. L. Xavier Rajamony (1971-1977)

17. Rev. Fr. C. M. Wenceslaus (1977-1980)

18. Rev. Fr. A. Asservadam (1980-1986)

19. Rev. Fr. M. Albert Raj (1986-1989)

20. Rev. Fr. Francis S. (1989-1990)

21. Rev. Fr. S. Peter Arul Raj (1990-1994)

22. Rev. Fr. A. M. Hilary (1994-1995)

23. Rev. Fr. I. Carmel (1995-2000)

தனிப்பங்காக உயர்த்தப்பட்ட பின்னர் பணிபுரிந்த பங்கு தந்தையர்கள்:

1. Rev. Fr. A. Joachim (2000-2002)

2. Rev. Fr. F. Sebastian (2002-2008)

3. Rev. Fr. A. Bright Simsa Raj (2008-2013)

4. Rev. Fr. P. Augustine (2013-2015)

5. Rev. Fr. Benjamin D. (2015-2018)

6. Rev. Fr. Xavier Bruce R. (2018-2024)

7. Rev. Fr. S. Jayaprakash (02.06.2024.......)

ஆலய வரலாறு: ஆலய அர்ச்சிப்பு விழா மலர் 2024.