717 புனித பாத்திமா அன்னை ஆலயம், புத்தூர்

        

புனித பாத்திமா அன்னை ஆலயம்

இடம்: புத்தூர், திருச்சி 17

ஆலய மின்னஞ்சல் முகவரி: fatimachurchputhurtry@gmail.com

தொடர்புக்கு: 0431-2793243

மாவட்டம்: திருச்சிராப்பள்ளி

மறைமாவட்டம்: திருச்சிராப்பள்ளி

மறைவட்டம்: புத்தூர்

நிலை: மறைவட்ட பங்குத்தளம்

சிற்றாலயம் உள்ள கிளைப்பங்குகள்: 

1. புனித மதுர நாயகி ஆலயம், பாத்திமாதெரு

2. புனித சவேரியார் ஆலயம், V.N.P தெரு

3. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், சங்கீதபுரம்

4. புனித சவேரியார் ஆலயம், விருப்பாச்சிபுரம்

5. புனித செபஸ்தியார் ஆலயம், வண்ணாரப்பேட்டை

6. புனித சவேரியார் குருசடி, பென்சனர் தெரு

பங்குத்தந்தை: அருட்பணி. R. மைக்கிள் ஜோ (மறைவட்ட அதிபர்)

உதவிப் பங்குத்தந்தை: அருட்பணி.‌ குமார் மோசஸ், Piarist Priest

திருத்தொண்டர். இன்பன்ட் ராஜா

குடும்பங்கள்: 800

அன்பியங்கள்: 15

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 05:45 மணி (தமிழ்), 07:30 மணி (தமிழ்) காலை 11:30 மணி (ஆங்கிலம்) மற்றும் மாலை 06:30 மணி (தமிழ்)

திங்கள் முதல் வெள்ளி வரை திருப்பலி: காலை 06:00 மணி மற்றும் மாலை 06:30 மணி

சனிக்கிழமை காலை 06:00 மணிக்கு திருப்பலி, மாலை 06:30 மணி திருப்பலி, தூய பாத்திமா அன்னை நவநாள், நற்கருணை ஆசீர்

திருவிழா: ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் ஆரம்பித்து மூன்றாவது வாரம் நிறைவு பெறும்.

பங்கின் எல்லைகள்:

வடக்கு: சாலை ரோடு

தெற்கு: பாலக்கரை ஆறு

கிழக்கு: இருப்புப்பாதை

மேற்கு: உய்யகொண்டான் ஆறு

பங்கின் வட்டங்கள்:

புனித மத்தேயு வட்டம்1: பாத்திமா தெரு, சோடா நாயக்கன் தெரு, வி.என்.பி. தெரு, வள்ளுவர் தெரு, ஆட்டுமந்தை தெரு, ஆப்பக்காரத் தெரு, புத்தூர் நால்ரோடு, மதுரை வீராசாமி கோவில் தெரு

புனித மத்தேயு வட்டம் 2: செ.பி. கோவில்தெரு, காசிசெட்டித்தெரு, காந்திபுரம், தேவர் காலனி, தில்லை நகர் (கிழக்கு, மேற்கு), சாஸ்திரிரோடு, ராம்நகர், விஸ்வநாதன் தெரு, பிஷப் குளம், விருப்பாச்சி புரம் 

புனித மாற்கு வட்டம்: ஆபீஸர்ஸ் காலனி, சங்கீதபுரம், பாலன்நகர், 

மூலகொல்லை தெரு, பட்டாபிராமன் ரோடு, பாபுசெட்டித் தெரு, புத்தூர் மார்க்கெட் தெரு, ஜெனரல் பஜார் தெரு, காவல்காரத் தெரு, வெள்ளாளர் தெரு, பென்சனர் தெரு, ரோகிணி அடுக்குமாடிக் குடியிருப்பு, அண்ணாநகர்

புனித லூக்கா வட்டம்: கஸ்தூரிபுரம், திரு.வி.க நகர், வண்ணாரப்பேட்டை, முனிசிபல் காலனி, அருணா நகர், பேரக்ஸ், எட்டுப்பேட்டை, ஈ.வி.ஆர் ரோடு, நாயுடு காலனி, எம்.ஜி.ஆர் நகர், வயலூர் ரோடு, சர்ச் காலனி, பாரதிநகர், குமரன் நகர், பேங்கர்ஸ் நகர், மரியா கார்டன், ஈடன் கார்டன், காட்ஸ் பார்க், திலகர் தெரு, சீனிவாசநகர் தெற்கு, சாந்தா ஷீலா நகர், அம்மை அப்பன் நகர்

புனித யோவான் வட்டம்: இராமலிங்க நகர் (தெற்கு, வடக்கு, மேற்கு), வடக்கு சீனிவாச நகர், கீதாநகர், முத்து ராஜா தெரு (தெற்கு, வடக்கு), களத்துமேடு, புதுத்தெரு, இராஜரெத்தினம் பிள்ளை தெரு, அகமத் காலனி, வீவர்ஸ் காலனி

Location map: 

Our Lady of Fatima Church

Sundaram Hospital Opposite Puthur, Aruna Nagar, Thillai Nagar, Tiruchirappalli, Tamil Nadu 620017

https://maps.app.goo.gl/krEdMF23qoA1XenS6

வரலாறு:

திருச்சி மறைமாவட்டத்தின் மணிமகுடமாம் புனித மரியன்னை பேராலயத்தின் துணைப் பங்குத்தளங்களில் ஒன்றாக புத்தூர் புனித பாத்திமா அன்னை ஆலயம் செயல்பட்டு வந்தது. 1943 ஆம் ஆண்டில் பேராலய பங்குத்தந்தையாக அருள்திரு. அந்தோணிசாமி துரை மற்றும் துணை பங்குத்தந்தையாக அருள்திரு. அடைக்கலம் அவர்களும் பணியாற்றினார்கள். திருவருட்சாதனங்கள் நிறைவேற்ற மக்கள் பேராலயத்திற்கு தான் செல்ல வேண்டும். தற்சமயம் பாத்திமா பள்ளி அமைந்துள்ள இடத்தில் ஆர்.சி தொடக்கப்பள்ளி சிறிய கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. பின்னர் இப்பள்ளியை அமலோற்பவ மாதா மடத்தைச் சேர்ந்த கன்னியர்கள் நடத்தினர். அவர்களுக்கென ஓர் இல்லமும் அமைக்கப்பட்டது. இங்கு திருப்பலியானது மாதம் ஒரு முறையும், நாளடைவில் இரு முறையும், பின்னர் வாரந்தோறும் அருள்திரு. அடைக்கலம் அவர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

இப்போதைய பாத்திமா அன்னை மக்கள் மன்றம் அமைந்துள்ள இடம் 1948 ஆம் ஆண்டு அப்போதைய ஆயரான மேதகு. ஜேம்ஸ் மென்டோன்சா அவர்களின் அனுமதியுடன் வாங்கப்பட்டது. புதிய மண்டபம் கட்டப்பட்டு 1952 ஆம் ஆண்டில் திருத்தந்தையின் இந்திய தூதுவர் அவர்களால் புனிதப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அதன்பின் பிரதி ஞாயிறுதோறும் இம்மண்டபத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர் நாள்தோறும் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இன்டஸ்ட்ரியல் பள்ளியில் பணிபுரிந்த அருட்தந்தையர்கள் திருப்பலி நிறைவேற்றினர். குறிப்பாக அருள்திரு. ஹென்றி, அருள்திரு. சூசை ரெஜிஸ், அருள்திரு. ஆரோக்கியம், அருள்திரு. குழந்தைராஜ் ஆகியோர்.

இம்மண்டபத்தின் மேற்கில் மரியம்மா கல்லறை என்றழைக்கப்பட்ட கல்லறைத் தோட்டம் ஒன்று இருந்தது. இந்த இடமானது இந்திய இராணுவத்துக்கு சொந்தமானது என்பதால், இராணுவத்தில் பணி புரிந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அந்தக் கல்லறை பயன்படுத்தப்பட்டது. வெகுகாலம் பயன்படுத்தப்படாமல் இருந்ததால் முட்புதர் மண்டி கிடந்தது. அரசு உயர் அதிகாரிகளிடமும் ராணுவ உயர் அதிகாரிகளிடமும் அனுமதி பெற்றபின் ஒரு சிறிய ஆலயம் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

1950-ம் ஆண்டு, ஆயர் அவர்கள் அடிக்கல் நாட்டி, ஆலயம் கட்டும் பணியைத் துவங்கி வைத்தார். அனுமதி பெறுவதிலிருந்து நிதியுதவி வரை அனைத்து பொறுப்பையும் அருள்தந்தையர்கள் சூசைரெஜிஸ் மற்றும் ஜஸ்டின் திரவியம் ஏற்றுக்கொண்டனர். அருள்திரு. ஜஸ்டின் அவர்கள் மேல் நாட்டிலிருந்து நிதி திரட்டினார். ஆங்கிலோ இந்திய கிறிஸ்தவர்களுக்கு குருவாக பணியாற்றினார். பிற்காலத்தில், இவர் மதுரை பேராயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

போர்த்துக்கல் நாட்டில் பாத்திமாவில் காட்சி அளித்த அன்னையின் சாயலில் அமைக்கப்பட்ட திருச்சுரூபம் சுற்றுப் பயணமாக இந்தியாவுக்கு வந்தது. அச்சுரூபம் 1950 ஆம் ஆண்டு திருச்சி வந்தடைந்தது. இலட்சக்கணக்கான மக்கள் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரண்டு வந்து, பெரும் விழாவாக சிறப்பித்தனர். இதன் பின்னரே பாத்திமா மாதா பக்தி இந்தப் பகுதிகளில் அதிகம் பரவத் தொடங்கியது. 1954 ஆம் ஆண்டில், ஆலயப் பணி நிறைவு பெற்றது. ஆலயத்தை புனிதப்படுத்தும் வேளையில், ஆலயத்தில் சுரூபம் இல்லை. எனவே வியாகுலமடத்து தாளாளர் தங்களிடமிருந்த பாத்திமா மாதா சுரூபத்தை மனமுவந்து அளித்தனர். ஆலய மையப்பீடத்தில் திருச்சுரூபம் புனிதப்படுத்தப்பட்டது. ஆயர் ஜேம்ஸ் மென்டோன்சா அவர்கள் 1954 பிப்ரவரி 11 ஆம் நாள் ஆலயத்தை திருநிலைப் படுத்தினார். இன்றும் பங்குப்பெருவிழாவின் போது, தேரில் அலங்காரமாக பவனி வருவது இந்த பாத்திமாத்தாயே... இவ்வாறு பாத்திமா மாதா பக்தி முயற்சியானது 11-02-1954 முதல் தொடங்கப் பெற்றது.

1956 டிசம்பர் மாதம், புத்தூர் தனிப் பங்காக பிரிக்கப்பட்டு 1957 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அருள்திரு. சைமன் அவர்கள் இப்பங்கின் முதல் பங்குக்குருவாக பணிப்பொறுப்பேற்றார். கிறிஸ்தவம் தழைத்தோங்க வித்திட்டவர். பாத்திமா நவநாள் புத்தகமானது அச்சு வடிவில் முதன்முறையாக இவர் காலத்தில்தான் வழங்கப்பட்டது. இவரைத் தொடர்ந்து, அருள்தந்தை. இராயப்பர் பங்கு விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டார். இக்காலத்தில் பாத்திமா மாதா கெபி கட்டப்பட்டது. பாத்திமா மாதா நவநாள் பக்தி மேலும் சிறப்படைந்தது. மணிக்கூண்டு, ஆலயம் முன்புறம், போர்டிகோ, ஆலயம் மேற்குப்பகுதி நீட்டிப்பு என பல பணிகளைத் தொடர்ந்தார். 11 ஆண்டுகள் சிறப்பாகப் பங்கு மக்களை வழிநடத்தினார். சனிக்கிழமைகளில் பாத்திமா மாதா நவநாள் கெபியில் நடைபெற்றது.

இதன்பின்னர் அருள்திரு. அருள்ராஜ் மூன்றரை ஆண்டுகளிலும், அருள்திரு. செபஸ்தியான் ஓராண்டும், அவர்களைத் தொடர்ந்து அருள்திரு. குழந்தைராஜ் இரண்டு ஆண்டுகளும், அருள்திரு. சில்வஸ்டர் நான்கு ஆண்டுகளும் பங்குத்தந்தையர்களாக பணியாற்றினார்கள். பின்னர், அருள்திரு. ஜெயராஜ் ஓராண்டும், அருள்திரு. அற்புத சாமி 7 ஆண்டுகளும் பணியாற்றினார்கள். இக்காலகட்டங்களில் மே மாதம் வணக்க மாதம் நிகழ்வு கெபியில் நடைபெற்றது.

தொடர்ந்து 05-07-1998 முதல் அருள்திரு. அல்போன்ஸ் ராஜ் பிரபு பங்குப்பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். இவரது பணிக்காலத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டன. அப்போதைய ஆயர் மேதகு. பீட்டர் பெர்னாண்டோ அவர்களின் ஆலோசனையுடனும், ஆசியுடனும் புதிய ஆலயம் கட்டும் பணி 1999 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டு, 2001ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடைந்தது.

புதிய ஆலயத்தை மேதகு ஆயர். அந்தோணி டிவோட்டா அவர்கள் 08-04-2001 அன்று திருநிலைப்படுத்தி, மக்கள் வழிபாட்டுக்காக அர்ப்பணித்து வைத்தார். அன்னையின் புதிய ஆலயத்தில் பக்தி முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. தினமும் திருப்பலி, குணமளிக்கும் ஜெப வழிபாடுகளும், திவ்ய நற்கருணை ஆசீரும் அதன்பின் திருத்தைலம் பூசும் சடங்கும் நடைபெற்றது. ஆலய வளாகத்தில் பாத்திமா அன்னையின் கெபியும், திருச்சிலுவைப்பாடுகளின் 14 நிலைகளும் நிறுவப் பட்டன.

அருள்திரு. பிலோமின்ராஜ் (2003-2007) பணிக்காலத்தில் நற்கருணை ஆலயம் மற்றும் பங்குத்தந்தை இல்லம் ஆகியன கட்டப்பட்டன.

அருட்திரு. தாமஸ் ஞானதுரை அவர்கள் திருவழிபாட்டுப் பாடல்கள் இசையில் ஆர்வம் கொண்டு இறைமக்களை ஆன்மீகப் பாதையில் வழிநடத்தினார். மேலும் ஆலயத்தில் இறைமக்கள் அமர்வதற்கு இருக்கைகள் வாங்கப் பட்டது.

அருட்திரு. ஜேம்ஸ் செல்வநாதன் பணிக்காலத்தில் ஆலய வளாகத்தில் குழந்தை இயேசு கெபி, வேளாங்கண்ணி மாதா கெபி ஆகியன கட்டப்பட்டன. ஜெப ஆராதனை, நற்செய்திக் கூட்டங்கள் நடத்தி மக்களின் ஆன்மீக வாழ்வை ஆழப்படுத்தினார். 

2017 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அருட்பணி. ரா. மைக்கிள் ஜோ பணிக்காலத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் ஆன்மீகப் பணிகள் செய்யப்பட்டன. குறிப்பாக ஆலய பீடம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அழகுற புதுப்பிக்கப்பட்டது. ஆலயத்தின் உட்புறத்தில் தூம்பா பீடம் புதுப்பிக்கப்பட்டது. ஆலயம் முழுவதும் நீல நிற வர்ணம் பூசப்பட்டு புதுப் பொலிவு பெற்றது. பங்கானது மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என நான்கு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு அன்பியங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு புத்துயிரூட்டப்பட்டது. தண்ணீர் பற்றாக்குறை இருந்த ஆலய வளாகத்தில் நன்கொடையாளரின் உதவியுடன் ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு, சுத்தமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு, காவிரி தண்ணீர் கொண்டு வரப்பட்டு தங்குதடையின்றி தண்ணீர் வசதி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

பங்குப் பேரவை அமைக்கப்பட்டது.

பங்குப் பேரவை மற்றும் நிதிக்குழு ஒத்துழைப்புடன் வணிக வளாகங்கள், கல்லறை பராமரிப்பு முறைப்படி நெறிப்படுத்தப்பட்டது.   கல்லறைத் தோட்டத்தில் குடிநீர் தொட்டி, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. புனித பாத்திமா மாதா மக்கள் மன்றத்திற்கு புதிய நாற்காலிகள் வாங்கப்பட்டன.

இவ்வாறு அருட்பணி. ரா. மைக்கிள் ஜோ அவர்களின் வழிகாட்டலில் புத்தூர் இறைசமூகம் வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது.

இவ்வாலயத்தைச் சுற்றிலும் அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகள் உள்ளதால், ஏராளமான நோயாளிகள் இவ்வாலயம் வந்து புனித பாத்திமா மாதாவிடம் ஜெபித்து, மருத்துவமனையில் இருந்து நலம் பெற்றுச் செல்கின்றனர்.‌ ஆகவே எப்போதும் வேண்டுதல் செய்கிற மக்களின் கூட்டத்தைக் காணலாம்...

ஒவ்வொரு சனிக்கிழமை யும் நன்கொடையாளர்களின் உதவியுடன் அன்னதானம் வழங்கப்படுகிறது.

ஆலயத்தை சுற்றி இயேசுவின் சிலுவைப்பாடுகளின் 14 நிலைகளும் உள்ளன.

புனித பாத்திமா மாதா புனிதப் பொருட்கள் அங்காடி உள்ளது.

நற்கருணை ஆலயம் உள்ளது.

புனித பாத்திமா மாதா கெபி ஒன்றும் உள்ளது.

புனித பாத்திமா மாதா மக்கள் மன்றம் உள்ளது.

அமலவை கன்னியர் இல்லம் (CIC Sisters):

1949 -ல் திருச்சி ஆயர் மேதகு மென்டோன்சா அவர்களால் மதுரையிலிருந்து திருச்சிக்கு அமலவைக் கன்னியர்கள் வரவழைக்கப்பட்டார்கள். மேலப்புதூர் அன்னாள் கன்னியர் இல்லத்தில் நாசரேத் வீடு என்ற சிறுவீட்டில் இருந்து கொண்டு, இரண்டு ஆண்டுகள் புத்தூர் வந்து புனித பாத்திமா பள்ளியில் பணிபுரிந்து கொண்டு மறைப்பரப்பும் பணியும் செய்து வந்தார்கள்.

1951 ஜூன் 6- ம் நாள் புத்தூர் பங்கில் அமலவை அருள்சகோதரிகள் இல்லம் தொடங்கப்பட்டது. அருள்சகோதரிகள் பங்குப்பணியிலும், மறைபரப்புப்பணியிலும் அன்று தொடங்கி இன்றுவரை ஆர்வத்தோடு பணியாற்றி வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் மறைக்கல்வி கற்பித்தல், பீடம் அலங்காரம், வீடுகளுக்கு சென்று மக்களை சந்தித்து செபித்தல், மாதந்தோறும் நோயாளிகளுக்கு நற்கருணை வழங்குதல், புதுநன்மை, உறுதிப்பூசுதல் போன்ற அருளடையாளங்களைப் பெற மாணவர்களை தயார் செய்கின்றனர்.

திருச்சி திருச்சிலுவை அருட்சகோதரிகள் மாநில தலைமைச் செயலகம் இங்கு உள்ளது. அமைதி நிலையம் (முதியோர் இல்லம்), நவகன்னியர் இல்லம், ஓய்வு பெற்ற அருட்சகோதரிகள் இல்லம், கல்லூரி மாணவர்கள் விடுதி 2, கல்லூரியில் பயிலும் அருட்சகோதரிகள் இல்லம் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர்.

பதோனி இல்லம் என்ற ஆற்றுப்படுத்தும் மையம் கப்புச்சின் சபை அருட்பணியாளர்கள் நடத்தி வருகின்றனர்.

பங்கின் கல்வி நிறுவனம்:

St Fathima primary school

பங்கில் உள்ள சபைகள் இயக்கங்கள்:

1. பங்குப்பேரவை

2. நிதிக்குழு

3. புனித வின்சென்ட தே பவுல் சபை

4. திருவழிபாட்டுக் குழு

5. கியாரா லூச்சே (இளம் பெண்கள் இயக்கம்)

6. இளைஞர் இயக்கம்

7. பீடச் சிறார்

8. மறைக்கல்வி

9. பாடகற்குழு

10. பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி A. சைமன் (1958-68)

2. அருட்பணி. K.S. இராயப்பர்  (1968-79)

3. அருட்பணி. S. அருள்ராஜ்  (1979-83)

4. அருட்பணி. A. செபஸ்டின் (1983-84)

5. அருட்பணி. G. குழந்தைராஜ் (1984-84)

6. அருட்பணி. B. வெண்மணி சில்வெஸ்டர் (1986-90)

7. அருட்பணி. A. ஜெயராஜ்  (1990-91)

8. அருட்பணி. K.S. அற்புதசாமி (1991-98)

9. அருட்பணி. S. அல்போன்ஸ்ராஜ் பிரபு (1998-2003)

10. அருட்பணி. X. பிலோமின்ராஜ் (2003-2007)

11. அருட்பணி. A. தாமஸ் ஞானதுரை  (2007-2012)

12. அருட்பணி. S. ஜேம்ஸ் செல்வநாதன் (2012-2017)

13. அருட்பணி. R. மைக்கிள்ஜோ (2017 முதல்..)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. ரா. மைக்கிள் ஜோ (மறைவட்ட முதல்வர்)