981 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், பல்லாவரம்

          

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம்

இடம்: பல்லாவரம்

மாவட்டம்: செங்கல்பட்டு

மறைமாவட்டம்: செங்கல்பட்டு

மறைவட்டம்: பல்லாவரம்

நிலை: பங்குத்தளம்

பங்குத்தந்தை அருள்பணி. மைக்கேல் சுரேஷ்

உதவி பங்குத்தந்தை அருள்பணி. அன்பரசன்

குடும்பங்கள்: 1200

அன்பியங்கள்: 32

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி: காலை 06:15 மணி (ஆங்கிலம்), காலை 07:30 மணி (தமிழ்), காலை 10:00 மணி (தமிழ்), மாலை 05:30 மணி (தமிழ்)

வாரநாட்களில் திருப்பலி: காலை 06:15 மணி மற்றும் மாலை 06:30 மணி 

புதன் காலை 06:15 மணி திருப்பலி (ஆங்கிலம்)

சனி மாலை 06:30 மணி திருப்பலி (ஆங்கிலம்)

மாதத்தின் 03-ம் தேதி மாலை 06:30 மணி புனித சவேரியார் தேர்பவனி, நவநாள் திருப்பலி

மாதத்தின் 11-ம் தேதி மாலை 06:30 மணி புனித லூர்து மாதா கெபியில் ஜெபமாலை, தேர்பவனி, திருப்பலி 

திருவிழா: டிசம்பர் மாதம் 03-ம் தேதி.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. Rev. Fr. Desmond Daniel

2. ⁠Rev. Fr. Jude Rajesh

3. ⁠Rev. Fr. John Kurian 

4. ⁠Rev. Fr. Michel Suresh

5. Rev. Fr. Francis Xavier 

6. Rev. Fr. Arulappan.

மற்றும் பல அருட்சகோதரிகள்.

வழித்தடம்: பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 500மீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

Church location map: St. Francis Xavier's Church 044 2264 1703

https://maps.app.goo.gl/jbhLRG2Uu2Dq8LL9A

ஆலய வரலாறு:

ஏறத்தாழ 100 ஆண்டுகளாக பல்லவபுரத்தின் ஆன்மீக அடையாளமாக திகழ்ந்து வருகிறது பல்லாவரம், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம். காலனி ஆதிக்கம் காலுன்றி இருந்த காலகட்டத்தில், அன்றைய வல்லரசுகளாய் இருந்த ஐரோப்பிய நாடுகள், பல நாடுகளில் தங்களது இராணுவ பலத்தினை பயன்படுத்தி தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்தன. அந்த வகையில் நம் இந்தியத் திருநாடும், தமிழகமும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அச்சமயம் பல்லாவரம் பகுதி இராணுவ வீரர்களின் பயிற்சி களமாகவும், இராணுவம் சம்மந்தப்பட்ட அலுவலகங்களையும் கொண்டிருந்தது. இதன் காரணமாக ஆங்கிலேய இராணுவத்தினரும், அவர்களது குடும்பத்தாரும் பல்லாவரம்

பகுதியில் குடியிருப்புகளை உருவாக்கி வசித்து வந்தனர். அவர்களில்

பெரும்பான்மையினர் கத்தோலிக்க

கிறிஸ்துவர்களாக இருந்த காரணத்தால், அவர்களது ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், திருப்பலிகளில் பங்கேற்கவும், புனித தோமையார் மலைப்பகுதியில் இருந்த ஆலயத்திற்கு சென்று வந்தனர். 

பல்லாவரம் பகுதியில் வசித்துவந்த கத்தோலிக்க கிறிஸ்துவர்களுக்காக தற்போதைய கல்லறை தோட்டம் அமைந்துள்ள இடத்தில் ஒரு சிற்றாலயம் கட்டப்பட்டு, 1851 ஆம் ஆண்டு பல்லாவரம் புனித பிரான்சிஸ் சவேரியாரை பாதுகாவலராகக் கொண்ட தனிப்பங்காக உருவெடுத்து சென்னை -மயிலை உயர் மறைமாவட்டத்தின் கீழ் இயங்கி வந்தது. முதல் பங்குத் தந்தையாக அருட்தந்தை. மெக் அலூபி பொறுப்பேற்றார். கல்லறைத் தோட்டம் இருக்கும் இடத்தில் சிற்றாலயம் அமைந்திருந்தாலும், அருள்பணியாளருக்கான இல்லம் அமைப்பதற்கான வசதிகள் அப்பகுதியில் அப்போதைக்கு இல்லை. கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் அதிகம் இல்லாத அக்காலச் சூழலில் அதற்கான அவசியமும் அப்போது ஏற்படவில்லை. ஆனால் நாளடைவில் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரவே, அருட்பணியாளர் தங்கி பணிசெய்ய இடம் தேவைப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்போதிருந்த அருட்பணியாளர்கள் மற்றும் இறைமக்களின் கோரிக்கையை ஏற்று கண்டோன்மென்ட் நிர்வாகம், தற்போது ஆலயம் இருக்கும் ஒன்பது ஏக்கர் நிலத்தை ஒதுக்கித் தந்தது.

கண்டோன்மென்ட் நிர்வாகம் ஒதுக்கித் தந்த இடத்தில், தற்போதைய ஆலய வாளாகத்தின் பிரதான வாயிலுக்கு நேராக, தற்போது அமைந்துள்ள அன்னையின் கெபிக்கு பின்புறமாக அருள்தந்தையருக்கான இல்லம் பின்நாளில் கட்டப்பட்டது. அக்கட்டிடமானது அருள்தந்தை இல்லமாக மட்டுமன்றி, கூட்டம் நடத்திட தனிகூடம், மேடையோடு கூடிய உள்அரங்கம், சமையல் அறை, உணவருந்த தனி அறை, திறந்தவெளி மேடை அகியவற்றை உள்ளடக்கியதாக கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்தது. பின்நாளில் இக்கட்டிடத்தின் உள்அரங்கில் அவ்வப்போது திருப்பலியும் நிறைவேற்றப்பட்டு வந்தது. கல்லறைத் தோட்டம் அமைந்துள்ள இடத்தில் அமைந்திருந்த ஆலயத்தைவிட, கண்டோன்மென்ட நிர்வாகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இப்புதிய இடம் வசதியாக இருந்ததால் அவ்விடத்தில் புதியதாக ஆலயம் கட்ட திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் அப்போதைய பங்குத்தந்தையாக அருட்பணியாளர் மஸ்சரெனஸ் இருந்தபோது, 1924 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் நாள் அப்போதைய கொச்சின் மறைமாவட்ட ஆயர் மேதகு. J.B.M. ரிப்பேரியோ அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, புதிய ஆலயம் கட்டும் பணிகள் துவங்கின. 

மிகச்சிறந்த திட்டமிடுதலாலும், அனைவரின் ஒத்துழைப்பாலும் ஏறத்தாழ பதினாறு மாதத்திற்குள்ளாக இந்த பிரமாண்டமான கலைவேலைப்பாடுகள் நிறைந்த ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டு, 1925ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் நாள் அப்போதைய வட்டார முதன்மைகுரு F.H. பிராங்கோ அவர்களால் புதுஆலயம் மந்திரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இத்தனை பிரம்மாண்டமான ஆலயம் பதினாறு மாதத்திற்குள்ளாக கட்டிமுடிக்கப்பட்டது மிகவும் வியப்பூட்டும் விதமாக இன்றளவும் விளங்குகிறது. 

ஆலயம் கட்ட தேவையான சுண்ணாம்பு கலவை தயாரிக்க ஆலய வளாகத்திலியே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த வட்டமான தடம் 1960களிலும் இருந்ததை முன்னோர்கள் மூலம் அறிய முடிகிறது. இந்த இடத்தில் ஒரு முக்கியமான வரலாற்று தகவலை பதிவுசெய்ய வேண்டியதொன்றாக இருக்கிறது. ஆலயக் கட்டுமானப் பணிகள் துவங்கியிருந்த வேளை, பல்லாவரம் பங்கிற்கு உட்பட்ட பகுதிகளாக சத்ராஸ், வரதராசபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், தர்காஸ், குரோம்பேட்டை போன்ற பகுதிகள் இருந்தன. பெரும்பாலும் ஞாயிறு வழிபாடுகள் அந்தந்த பகுதிகளில் இருந்த சிற்றாலயங்களில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டாலும், புனித பிரான்சிஸ் சவேரியார் திருவிழாவின் போது இப்பகுதிகளில் வசித்துவந்த இறைமக்கள் மாட்டுவண்டி மற்றும் குதிரைவண்டி மூலம் வருகை தந்து, ஆலய வளாகத்திலேயே தங்கி திருவிழா முடிந்தபிறகுதான் செல்வது வழக்கம். அந்த வகையில் தர்காஸ் பங்கிலிருந்து சிறுவன் ஒருவன் வந்து,

நடைப்பெற்றுக்கொண்டிருந்த ஆலயப் பணிகள் மற்றும் சுண்ணாம்பு கலவை அரைக்கும் பணிகள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு, தான் இங்கேயே அருட்பணியாளரோடு தங்கியிருக்க விரும்புவதாகவும், தானும் அருட்பணியாளரக விரும்புவதாகவும் சொல்லி அருட்தந்தை இல்லத்திலேயே தங்கிவிட்டதாகவும், சுண்ணாம்பு அரைக்கும் பணியில் பயன்படுத்தப்பட்டிருந்த மாடுகள் எத்தனைமுறை அரவை இயந்திரத்தினை சுற்றி வருகிறது என கணக்கெடுக்கும் பணியினை மேற்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இறை அழைத்தலை இவ்வாலய வளாகத்தில் பெற்றுக்கொண்ட அச்சிறுவன்தான் பின்நாளில் சென்னை -மயிலை உயர்மறைமாவட்டத்தின் பேராயராக உயர்ந்த அருளப்பா ஆண்டகை என்பது வியப்பூட்டும் உண்மையாக அறியப்படுகிறது.

சிலுவை வடிவிலான இவ்வாலயம் அக்காலத்தின் கட்டிட கலையின் சிறப்பினை எடுத்தியம்பும் விதமாக இருப்பதனை இதன் ஒவ்வொரு பகுதியிலும் உன்னிப்பாக அறியமுடிகிறது. மூன்று பிரதான கதவுநிலைகளைக் கொண்ட முகப்பு, உள்ளே நுழைந்தவுடன் வலப்புறம் கல்லான திருமுழுக்குத் தொட்டி உள்ள சிறிய அறை, அதற்கு நேர் மேலாக உத்திரத்தில் ஆலயமணி, முகப்பிற்கு இடதுபுறம் பாடகர் குழுவினருக்கான மரத்தினால் ஆன பலகனிக்கு செல்ல சுழல் படிக்கட்டுகள், பக்கவாட்டு பகுதிவழியாக ஆலய முன்பகுதிக்கு வர இரு கதவுநிலைகள், காற்றோட்டம் உள்ளே வர எட்டு சன்னல்கள், கதவு மற்றும் சன்னல்களுக்கு மேலே அலங்கார வண்ணக் கண்ணாடிகள் என ஒவ்வொரு அங்குலமும் நேர்த்தியான முறையில் அழகூட்டப்பட்டிருந்தது. அதுபோலவே ஆலயத்தின் வலது, இடதுப் பக்கங்களிலும் கதவுநிலைகள், சன்னல்கள் மற்றும் அலங்கார வண்ணக் கண்ணாடிகள் அமைக்கப்பட்டிருந்தது. பலிபீடம் அமைந்துள்ள கிராதி 'ப' வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. ஆலயத்தின் வலது அல்லது இடதுப்பக்கங்களில் இருந்து முன்பகுதிக்கு வரமுடியாதவாறு சுவரோடு கிராதி இணைந்திருந்தது. பீடத்தின் அடிப்பகுதி சுவராலும், மேல்பகுதி படிக்கட்டு முறையில் மரத்தாலும் நிறுவப்பட்டிருந்தது. பீடத்தின் மையப்பகுதியில் பெரிய அளவிளான நற்கருணைப் பேழையும் அதன் இருபுறமும் வானதூதர்கள் சுருபமும், அவர்களது கைகளில் நீண்ட மெழுகுதிரி ஏற்றும் ஸ்டான்டும் அமைந்திருந்தது. அக்காலத்தில் இந்த மெழுகுதிரி ஸ்டான்டில் ஒளியேற்ற நீண்ட கோல் பயன்படுத்தப்பட்டது. அக்கோலின் ஒருமுனை ஒளியேற்றவும், மறுமுனை எரியும் மெழுகுதிரியினை அணைக்கவும் ஏதுவாக இருந்தது. கிராதியை ஒட்டி ஆலயத்தின் மூன்று பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருக்கும் உயரமான கருங்கல்லால் ஆன பிரம்மாண்டமான ஆர்ச் நமது கண்களை இன்னும் வியப்புற வைக்கிறது. பீடத்தின் பின்பற சுவரின் மேல்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் அலங்கார வண்ணக்கண்ணாடிகளில்  ஓவியங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த வண்ணக்கண்ணாடிகள் பெல்ஜியம் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டவை என்பதனை செவிவழி செய்தியாக அறியப்படுகிறது. சூரிய வெளிச்சம் இவ்வண்ணக் கண்ணாடிகளில் பட்டு, ஒளி சிதறும் போது ஆலயத்தின் உள்ளே பலவண்ண ஒளிக்கீற்றுகள் தோன்றி ஆலயத்தை மேலும் அழகாக்கி வந்தன.

ஆலயத்தின் கிராதியின் அருகில் மற்றும் வலது, இடது பக்கங்களில் புனித பிரான்சிஸ் சவேரியார், புனித யோசேப்பு, அன்னை மரியாள், புனித அந்தோணியார். புனித குழந்தை தெரசா சுருபங்களும், ஆலயத்தின் முன்பகுதியில் பீடத்தை பார்த்தபடி பாடுபட்ட ஆண்டவர் சுருபமும் இருந்தாக சொல்லப்படுகிறது. குறிப்பாக ஆலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சிலுவைப்பாதை சுருபங்கள் மிகத் தத்ரூபமான வகையில் அமைந்துள்ளதையும் கண்கூடாய் காணமுடிகிறது. ஆலயத்தின் மேற்கூரையானது உறுதியான மரத்தின் மேல் மண் ஓடுகளாலாலும், தரை தட்டையான கருங்கல்லாலும் அமைக்கப்பட்டது. ஆலயத்தில் வெளியே உயரமான கொடிமரமும் நிறுவப்பட ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டு, 1925ஆம் ஆண்டு இறுதியில் வழிபாடுகள் ஆலயத்தில் நடைபெற துவங்கின. அக்காலத்தில் இலத்தீன் மொழியில்தான் வழிபாடுகள் நடைப்பெற்று வந்தன. ஆங்கிலேயர்கள் பெரும்பான்மையினராகவும், தமிழ்மொழி பேசும் கிறிஸ்துவர்கள் சிறுபான்மையினராகவும் இருந்தனர். ஆயினும் இலத்தீன் மொழியில், பீடத்தை பார்த்து நிறைவேற்றப்படும் திருப்பலியில் இறைமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அதிகாலை 5.30மணி மற்றும் 7.00மணிக்கு ஞாயிறு வழிபாடுகள் நடைப்பெற்று வந்தன. தமிழ் மொழிபேசும் சிலர் அக்காலத்தில் பாடகர் குழுவில் இணைந்து இலத்தீன் பாடல்களை பாடியுள்ளார்கள் என்பதை அவர்களது வாரிசுகள் மூலம் அறியமுடிகிறது. ஆலயம் கட்டும்போதே மின்இணைப்பு பெற்றிருந்தாலும் அதிக ஒளிதரும் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. எனவே பெரும்பாலும் மாலை வழிபாடுகள் நடைபெறவில்லை. ஒலிபெருக்கிகள் 1959ஆம் ஆண்டிற்கு பிறகே புழக்கத்திற்கு வந்தன. ஆலயத்தை சுற்றி மரம். செடி, கொடிகள் புதர் மண்டிக்கிடக்க, அருள்தந்தையர் பலர் மண்வெட்டி, கடப்பாரையுடன் களத்தில் இறங்கி, வளாகத்தை பங்கு மக்களோடு இணைந்து பண்படுத்தினர். அப்போதைய இளைஞர் பலர் ஆலயத்தில் படுத்துறங்கி ஆலயத்தில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை கள்வர்களிடம் இருந்து பாதுகாத்தனர்.  ஆலயத்தில் அமைந்துள்ள இடைவிடா சகாயமாதா திருப்படம் நிறுவப்படுவதற்கு முன்பாக கப்புச்சின் சபையினை சார்ந்த குருக்கள் பங்கில் உள்ள அனைத்துக் குடும்பங்களையும் சந்தித்து, இடைவிடா சகாயமாதா பக்தி முயற்சியை இறைமக்களிடம் எடுத்துரைத்து, அவர்களிடையே நம்பிக்கையை விதைத்து இத்திருப்படத்தினை ஆலயத்தில் நிறுவினார்கள்.

ஆலய வளாகத்தில் அடைக்கல அன்னை சபை அருட்சகோதரிகளும், ஆரம்ப காலத்தில் கார்மல் அருட்சகோதரிகளும் பின் பிரிஜ்ஜிடைன் சபை அருட்சகோதரிகளும் தங்களது சபை இல்லங்களை துவங்கி பங்கின் வளர்ச்சியில் தங்களுக்கான பங்களிப்பை வழங்கி வந்தனர். ஆலயம் மந்திரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த நாள் முதல் கடந்த 97 ஆண்டுகளாய் இவ்வாலயத்தை பராமரித்துவந்த பங்குதந்தையர்கள், அந்தந்த காலக்கட்டத்திற்கு ஏற்ற தேவையான சிறிய மாற்றங்களை செய்துவந்தாலும், இவ்வாலயத்தின் பழைமை மாறமல் பாதுகாத்து வந்தனர். இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்திற்கு பின், பலிபீடத்திற்கு பின்னால் மரத்தினால் ஆன பெரிய பாடுபட்ட ஆண்டவர் சுருபம் நிறுவப்பட்டதும், மரத்தினால் முன்பு அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டு வடிவிலான பலிபீடத்தை சுற்றியுள்ள புனித இடம் சேதமடைந்துவிட்ட காரணத்தால், சலவைக் கல்லால் வட்ட அப்ப வடிவிலான புனித இடமாக மாற்றி அமைக்கப்பட்டதும் இவ்வாலயத்தில் செய்யப்பட்ட சற்றே பெரிய அளவிலான மாற்றங்களாய் இருந்துவந்தது. இத்தகைய பழைமையும். பாரம்பரியமும் வாய்ந்த இவ்வாலயத்தின் மேற்கூரை பழுதடைந்து மழைக்காலங்களில் ஒழுகும் நிலையிலும், சுற்றுச் சுவர்கள் சேதமடைந்து சுண்ணாம்பு பூச்சுகள் உதிரந்துவிழும் நிலையிலும் இருந்தன. 

ஆகவே பங்குத்தந்தை பா. எஸ்தாக்கியூஸ் அவர்கள் மறைமாவட்ட ஆயர் மேதகு நீதிநாதன் அவர்களின் பரிந்துரையையும், ஆலோசனைகளையும், அனுமதியையும் பெற்று, இந்த ஆலயத்தினை அதன் பழைமை மாறாமல் புதுப்பித்திடும் முயற்சியில் இறங்கினார். அந்த வகையில் இறைமக்களின் கருத்துக்களையும், துறைசார் வல்லுநர்களின் ஆலோசனைகளையும் உள்வாங்கி "கடவுள் இல்லத்தை நாம் கட்டுவோம், கடவுள் நம் இல்லத்தைக் கட்டுவார்" என்னும் அறைகூவலுடன் இவ்வாலயம் புதுப்பிக்கும்பணி துவங்கியது. மேதகு ஆயர் பெருந்தகையின் வழிகாட்டுதல், செபம்

மற்றும் தாராள நிதி உதவியாலும், பங்கு இறைமக்களின் செப, பொருளாதார உதவிகளாலும் பணிகள் வேகமெடுத்தன.

ஆலயத்தின் மேற்கூரை முழுவதுமாய் அகற்றப்பட்டு, நவீன முறையில் மூன்றடுக்கு கூரையாய் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரையில் விழும் மழைநீர் ஆலயத்தின் சுற்றுசுவரை பாதிக்காத வண்ணம், மேல்சுவரை சுற்றி தண்ணீர் வழிந்தோடும் வகையில் புதிய வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் உள் மற்றும் வெளிப்புற சுவர்களில் இருந்த சுண்ணாம்பு பூச்சுகள் முற்றிலுமாய் அகற்றப்பட்டு, முறையான வேதிப்பொருட்கள் கொண்டு மறுபூச்சு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த கதவு மற்றும் சன்னல்கள் புதுப்பொலிவுடன் மெருகூட்டப்பட்டதோடு, முற்றிலுமாய் சேதமடைந்த கதவுகள் மற்றும் வாயில்நிலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. பலிபீடம், பலிபீடத்தை சுற்றியுள்ள புனித இடம், திருப்பண்டக அறை ஆகியவை புதுப்பொலிவுடன் முற்றிலுமாய் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் முகப்பின் மேல்நிலையில் பங்கின் பாதுகாவலர் புனித பிரான்சிஸ் சவேரியாரின் சுரூபமும், முகப்பு வாயிலின் இருபுறமும் புனித பேதுரு மற்றும் புனித பவுலின் சுரூபங்களும் புதிதாய் நிறுவப்பட்டுள்ளது. ஆலயத்தின் முகப்பிற்கு எதிரே இருந்த பாடுபட்ட ஆண்டவர் சுரூபம் அகற்றப்பட்டு, ஆலயத்தின் நுழைவாயில் மறைபடாதவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கதவு மற்றும் சன்னல்களில் ஏற்கனவே இருந்த கண்ணாடிகள் அகற்றப்பட்டு திருத்தூதர்கள், புனிதர்களின் உருவங்களை தாங்கிய புதிய கண்ணாடிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புதிய மின் தடங்கள், ஒலி பெருக்கிகள், CCTV கேமராக்கள் ஆகியவை நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக ஆலயத்தின் ஒவ்வொரு அங்குலமும் பங்குத்தந்தை பா. எஸ்தாக்கியூஸ் அவர்களின் நேரடி மேற்பார்வையில் அழகூட்டப்பட்டு, பழைய கம்பீரத்துடன் மீண்டும் புதுப்பொலிவு பெற்று திகழுகிறது இவ்வாலயம். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயம் செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர். மேதகு முனைவர். நீதிநாதன் அவர்களின் திருக்கரங்களால் 07.04.2024 அன்று மறு அர்ச்சிப்பு செய்யப்பட்டு இறைமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. 

பன்னெடுங்காலமாய் பல்வேறு வழிபாடுகளால் இறைமக்களின் நம்பிக்கையை வளர்த்தெடுத்த பாரம்பரியம் மிக்க, புதுப்பிக்கப்பட்ட இவ்வாலயத்தின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாட பங்கு மக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாராகி வருகின்றனர்.

பங்கின் கெபிகள் & சிற்றாலயம்:

குழந்தை இயேசு கெபி

தூய லூர்து மாதா கெபி

புனித அந்தோனியார் சிற்றாலயம்

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

மரியாயின் சேனை (ஆண்கள் /பெண்கள் / ஆங்கிலம்)

கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம் (ஆண்கள் / பெண்கள்)

புனித வின்சென்ட் தே பவுல் சபை

கோல்பிங் இயக்கம்

பெண்கள் பணிக்குழு

இளைஞர் இயக்கம்

பாடகற்குழு (தமிழ் /ஆங்கிலம்)

பீடச்சிறார்

பங்குப் பேரவை

நிதிக்குழு

கல்லறைக் குழு

துறவற இல்லங்கள்:

மான்போர்ட் சகோதரர்கள் இல்லம்

அடைக்கல அன்னை சகோதரிகள் இல்லம் (Bon Secure)

Bridget’s Convent

DMI Convent

நிறுவனங்கள்:

St Sebastian Matriculation Higher Secondary school (Diocese)

St Francis Xavier Primary School Bon Secure Sisters)

St Joseph Elementary School (Bon Secure Sisters)

St Theresa's Higher Secondary School (Bon Secure Sisters)

Working Women's Hostel

Playing School (Bridgettine Sisters)

Annai Velankanni CBSE School (DMI Sisters)

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. Rev. Fr. T. Mac Auleppe (1851-1854)

2. Rev. Fr. D. Ford (1854-1857)

3. Rev. Fr. Colgan (1857-1858)

4. Rev. Fr. Gramon (1858-1860)

5. Rev. Fr. Gaugh (1860-1868)

6. Rev. Fr. J. F. Lohan (1868-1870)

7. Rev. Fr. E. Lee (1870-1874)

8. Rev. Fr. J. H. Eyers (1874-1878)

9. Rev. Fr. J. Patrick (1878-1882)

10. Rev. Fr. E. H. D. Silva (1882-1885)

11. Rev. Fr. R. M. Barrett (1885-1896)

12. Rev. Fr. R. J. Baptist (1896-1897)

13. Rev. Fr. A. C. D'Silva (1897-1898)

14. Rev. Fr. J. J. L. Paes (1898-1903)

15. Rev. Fr. C. Druem (1903-1905)

16. Rev. Fr. J. Peacock (1905-1907)

17. Rev. Fr. C. D'Silva (1907-1911)

18. Rev. Fr. Branco (1911-1923)

19. Rev. Fr. A. Mascharenas (1923-1929)

20. Rev. Fr. S. Paes (1929-1931)

21. Rev. Fr. R. Cordeiro (1931-1933)

22. Rev. Fr. L. X. Fernandez (1933-1935)

23. Rev. Fr. Louis Xavier (1935-1948)

24. Rev. Fr. S. P. Carmel (1948-1959)

25. Rev. Fr. Mathew Vettical (1959-1964)

26. Rev. Fr. Joseph Kotoor (1964-1973)

27. Rev. Fr. Chaco Perumanoor (1973-1978)

28. Rev. Fr. John Pillaivettil (1978-1986)

29. Rev. Fr. P. Sebastiane (1986-1994)

30. Rev. Fr. John Britto (1994-1997)

31. Rev. Fr. P. Patrick (1997-2004)

32. Rev. Fr. P. Rayanna (2004-2008)

33. Rev. Fr. A. Jayaseelan (2008-2013)

34. Rev. Fr. A. Arul Raj (2013-2018)

35. Rev. Dr. P. Ambrose (2018-2019)

36. Rev. Fr. Esthakiyus (2019-2024)

37. Rev. Fr. Michael Suresh (2024 May onwards...)

புனித சவேரியாரின் வழியாகவும், தூய லூர்து மாதாவின் வழியாகவும் பல்லாவரம் வருகின்ற மக்களுக்கு எண்ணற்ற புதுமைகள் நடந்து வருகின்றன. 

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருள்பணி. மைக்கேல் சுரேஷ் அவர்களின் வழிகாட்டலில், பங்குப் பேரவை செயலர் திரு. விஜயராஜ் அவர்கள்.

பதிவு செய்ய உதவியவர்: ஆலய உறுப்பினர் திருமதி. ரூபி ஜான் அவர்கள்.