944 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், தெள்ளாந்தி

    

புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்

இடம்: தெள்ளாந்தி, அழகியபாண்டியபுரம் அஞ்சல், 629851

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: கோட்டார்

மறைவட்டம்: தேவசகாயம் மவுண்ட்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித ஆரோக்கியநாதர் ஆலயம், சீதப்பால்

பங்குத்தந்தை அருட்பணி.‌ ஜோசப் ராஜ் லெனின்

குடும்பங்கள்:107

அன்பியங்கள்: 6

ஞாயிறு திருப்பலி காலை 08:30 மணி

செவ்வாய் மாலை 07:00 மணி நவநாள் திருப்பலி

வியாழன் மாலை 07:00 மணி நவநாள் திருப்பலி

மாதத்தின் முதல் வியாழன் மாலை 06:00 மணி நற்கருணை ஆசீர்வாதம் தொடர்ந்து திருப்பலி

மாதத்தின் முதல் செவ்வாய் புனித அந்தோனியார் குருசடியில் திருப்பலி நடைபெறும்

திருவிழா: செப்டம்பர் மாதத்தில்

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்சகோதரி. மரிய ரத்தினம்

2. அருட்சகோதரர். கம்பிரிஸ்ட் பிரைட்

வழித்தடம்: நாகர்கோவில் - தெரிசனந்தோப்பு -தெள்ளாந்தி

நாகர்கோவில்: 4T பேருந்து இறங்குமிடம் தெள்ளாந்தி 

நாகர்கோவில்: 4 Route பேருந்துகள் இறங்குமிடம் (தெரிசனந்தோப்பு)

Location map: St. Michael's Church

https://maps.app.goo.gl/CAfegNrdv9QfZ72U8

ஊரும் வரலாறும்:

தெள்ளாந்தி ஊருக்கு ஏறக்குறைய 250 ஆண்டு கால வரலாறு உண்டு. இங்கு முதலில் குடியமர்ந்தவர்கள் வெள்ளாளர் மற்றும் வாணிபர்கள். இவர்களில் பலர் காலரா என்னும் கொள்ளை நோயினால் இறந்தனர். சிலர் ஊரைவிட்டு சென்றனர். அதன் பின்னர் கூடங்குளம் மற்றும் முத்தாரபுரம் போன்ற இடங்களில் இருந்து பிழைப்புக்காக விவசாயம் செய்தல், பனை ஏறுதல், கல் உடைத்தல் (பாறை வேலை) இவைகளுக்காக 14 குடும்பங்கள் குடியேறினர். இவர்கள் அனைவருமே கத்தோலிக்க கிறிஸ்தவ நம்பிக்கையில் ஊறியவர்கள் என்பது பெருமைக்குரியது.

ஆலயம்: 

பழைமையான கத்தோலிக்க பங்குத்தளத்திலிருந்து வந்தவர்கள் என்பதால், கூடி ஜெபிப்பதற்காக தற்போது புதுப்பிக்கப்பட்டிருக்கும் குருசடி இருக்கும் இடத்தில் ஒரு சிறிய குருசடியை அமைத்து அதில் கூடி ஜெபித்தனர். ஆனால் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக அவர்கள் இருந்ததனால் 1945ஆம் ஆண்டு வரை திருப்பலிக்கு மார்த்தால் பங்கிற்கு சென்று வந்தனர். குருசடியின் பராமரிப்புக்கு விவசாயத்தில் விளைச்சலின் பயனாய் கிடைத்த நெல்லையும், பனை ஏறுவதனால் கிடைக்கும் கருப்பட்டியையும் விற்று, அந்த வருவாயை பயன்படுத்தி வந்தனர். 

இயற்கை வளங்களாலும், வயல்வெளிகளாலும், ஓங்கி உயர்ந்த மலைகளாலும் நிறைந்து காணப்பட்ட இம்மண்ணில் புதிய ஆலயம் ஒன்று எழுப்ப மக்கள் தணியாத ஆர்வமுடன் இருந்தனர். இம்மக்களின் நம்பிக்கையையும், இறையுணர்வையும், தளராத முயற்சியையும் கண்டுணர்ந்த அருட்தந்தை. ரபேல் அவர்கள் 1946ஆம் ஆண்டு நிலம் வாங்கி, சிற்றாலயம் ஒன்றை எழுப்பி அதன் பாதுகாவலராக, இறைவனுக்கு நிகர் யார்? என போர் முழக்கமிட்ட தூய மிக்கேல் அதிதூதரை பாதுகாவலராக வைத்து ஜெபிக்க தூண்டுதலாக இருந்தார். அப்போதைய சிற்றாலயம் பனை ஓலையால் வேயப்பட்டிருந்தது. பின்னர் அருட்தந்தை ஜோசப் அடிகளால் ஆலயத்தில் பல சீர்த்திருத்த பணிகளை செய்ததோடு பனை ஓலை கூரையை மாற்றி, ஓட்டு கூரையாக மாற்றி அமைத்தார்.

ஊருக்கு சரியான சாலை வசதி இல்லாமையை உணர்ந்த அருட்பணியாளர் கிறிஸ்துதாஸ் அவர்கள், 1967ஆம் ஆண்டு எந்த ஒரு அரசு உதவியும் இன்றி மக்களை வைத்தே அவர்களுக்கு உணவுக்காக கோதுமையும், எண்ணெய்யும் கொடுத்து முடங்கன்விளையிலிருந்து, தெள்ளாந்தி வரை சாலை வசதி அமைத்து தந்தார்கள். 

1982ஆம் ஆண்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டு கோபுரம் கட்டப்பட்டது. 

2003வரை தெள்ளாந்தி பங்கானது மார்த்தால் பங்கின் கிளைபங்காக இருந்து செயல்பட்டு வந்தது. அதன்பின் அருட்பணி. பெர்பெச்சுவல் அவர்களின் முயற்சியால் 2003ஆம் ஆண்டு மார்த்தால் பங்கிலிருந்து, சீதப்பால் பங்கை தனிபங்காக அமைத்து, அதன் கிளைபங்காக தெள்ளாந்தி பங்கை செயல்பட வைத்தார். 

சீதப்பாலின் முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை. அந்தோணியப்பன் இருந்து இறைமக்களை எந்தவித மத இனபாகுபாடின்றி கிறிஸ்தவ நெறிமுறையில் வழிநடத்திவந்தார்.

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகமாக பெருகி வந்ததனால், சிற்றாலயத்தில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால், 2006ஆம் ஆண்டு அருட்தந்தை பென்சிகர் அவர்களால் பழைய ஆலயத்தின் பின்புறமாக, கல்லறைதோட்டத்தின் முன்னால் இருந்த இடத்தில், புதிய ஆலயம் அமைக்கப்பட்டு, 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் நாள் அன்று அன்றைய ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் பாதுகாவலர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது. 

ஆலயத்தின் முன்பகுதியில் பழைய கல்லறைத் தோட்டம் இருந்தமையால், 2010ஆம் ஆண்டு அருட்பணி. கில்பர்ட் லிங்சன் அவர்களின் சிந்தனையின்படி, தென்பாறை அருகில் புதிய கல்லறைத் தோட்டத்துக்கான இடம் வாங்கியதன்படி, ஆலயத்தின் முன்னால் இருந்த கல்லறைத் தோட்டம் அகற்றப்பட்டது. அதன்பின் 2010 நவம்பர் 21ஆம் தேதி சப்பரக்குடில் அருட்பணியாளர் கில்பர்ட் லிங்சன் அவர்களால் அடிக்கல் நாட்டி 2012ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் நாள் அர்ச்சிப்பு நடைபெற்றது. மேலும் அருட்பணி. கில்பர்ட் லிங்சன் அவர்களால் புனித அந்தோணியார் நவநாள் தொடங்கப்பட்டு, தற்போதுவரை நடைமுறையில் உள்ளது. 

2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் நாள் கலைநிகழ்வுகள் நடத்துவதற்காக கலையரங்கம் கட்ட அருட்பணி. கிறிஸ்டோ டாபின் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி பங்குத்தந்தை அலுவலகம் அடிக்கல் நாட்டப்பட்டது. வான்படை தளபதி தூய மிக்கேல் அதிதூதரின் திருநாமக்கொடி விண்ணோக்கி பறப்பதற்கு கொடிமரம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு,  நன்கொடையாளரின் உதவியில் கொடிமரமானது அமைக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் நாள் ஆலய புதிய கொடிமரம், ஆலய கோபுரம், பங்குத்தந்தை அலுவலகம் ஆகியவை அர்ச்சிக்கப்பட்டு புனிதப்படுத்தப்பட்டது. 

தெள்ளாந்தி மக்கள் புனிதரின் மீது கொண்ட பற்றின் காரணமாக 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் நாள், அருட்பணி. கிறிஸ்டோ டாபின் அவர்களால் தூய மிக்கேல் அதிதூதரின் நவநாள் தொடங்கப்பட்டது. அதுமுதல் வியாழக்கிழமை திருப்பலியோடு இணைந்து நவநாள் ஜெபம் செய்யப்படுகிறது. பழைய சிற்றாலயத்தில் இருந்த தூய மிக்கேல் அதிதூதர் சுரூபமானது 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் நாள் ஆலயகோபுரத்தில் அமைக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டு பதுவை பதியராம் புனித அந்தோனியாரின் பழைய குருசடியானது அகற்றப்பட்டு புதிய குருசடி அமைக்கப்பட்டு, 2018ஆம் ஆண்டு மே 8ஆம் நாள் பங்குப்பணியாளர் அருட்பணி. ரெஞ்ஜித் குமார் அவர்கள் தலைமையில், அருட்பணி. டாபின் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. அருட்தந்தை ரெஞ்சித் குமார் அவர்களின் முயற்சியினால் குருசடி வளாக சுற்றுசுவர் அமைத்ததோடு, தரையில் அலங்கார கல் பதிக்கப்பட்டது. 

2018 ஜூன் 13ஆம் நாள் திருச்சிலுவை சபை அருட்சகோதரிகள் அருட்சகோதரி கிரேஸி, அருட்சகோதரி பிரமிளா ஆகியோர் தெள்ளாந்தி ஊரின் நற்செய்தி பணிக்காக ஆயரின் வேண்டுகோளுக்கிணங்க பணி செய்ய வந்தனர். அருட்தந்தையர் இல்லம் கட்டுவதற்காக 2023இல் பங்கு பணியாளர் அலுவலகத்தின் பின்புறமுள்ள இடமானது அருட்தந்தை. ஜோசப்ராஜ் லெனின் அவர்களின் முயற்சியினால் வாங்கப்பட்டது. 

பங்கில் ஆண்டுதோறும் பங்கு குடும்ப விழா சிறப்பாக நடைபெறுவதோடு, நற்கருணை பவனி மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆகியவை விமரிசையாக நடைபெற்று வருகின்றன.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. திருவழிபாட்டு குழு

2. மறைக்கல்வி மன்றம்

3. பாடகர் குழு

4. பாலர் சபை மற்றும் சிறார் இயக்கம்

5. இளம் கத்தோலிக்க மாணாக்கர் இயக்கம்

6. புனித மிக்கேல் இளைஞர் இயக்கம் மற்றும் புனித அந்தோனியார் இளம் பெண்கள் இயக்கம்

7. மரியாயின் சேனை

8. கிறிஸ்தவ வாழ்வு சமூகம்

9. கத்தோலிக்க சேவா சங்கம்

10. பெண்கள் கிராம முன்னேற்ற சங்கம்

11. கல்விக் குழு

12. அன்பிய ஒருங்கிணையம்

13. பங்கு அருட்பணிப் பேரவை

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. ஜோசப் ராஜ் லெனின் அவர்கள்.

தகவல்கள் சேகரிப்பில் உதவி: சீதப்பால் பங்கு உறுப்பினர் திரு. ஜான் போஸ்கோ அவர்கள்.

புகைப்படங்கள்: ஆலய உறுப்பினர் திரு. ஆல்பின் துரை அவர்கள்.