இடம் : மேலராமன்புதூர், நாகர்கோவில்
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்.
நிலை : திருத்தலம்
கிளைகள் : இல்லை
திருத்தல சிறப்புகள் :
அருளாளர் தேவசகாயம் பிள்ளையின் துணைவியார் ஞானப்பூ அம்மையாருக்கு, வானதூதர் காட்சி கொடுத்து வழிநடத்தி சென்ற இடத்தில் அமைந்த திருத்தலம்.
தேவசகாயம் பிள்ளை சிறை வைக்கப்பட்டிருந்த பொழுது வைக்கப்பட்ட கற்சிலுவை.
மூன்று முறை திருக்குடும்பம் காட்சி கொடுத்த திருத்தலம்.
09-04-2004 புனித வெள்ளியன்று அதிகாலையில் இயேசுவின் காயத்திலிருந்து இரத்தம் வடிந்த திருத்தலம்.
தேவசகாயம் பிள்ளை காலத்தில் அமையப்பெற்ற குடும்ப சுகம் தரும் விளக்குத்தூண் அமையப் பெற்ற திருத்தலம்.
மாதவடியான் புண்ணியவானுடைய கல்லறை குருசடி அமையப் பெற்ற திருத்தலம்.
சகல நோய்களையும் குணமாக்கும் அற்புதங்கள் நிறைந்த கிணறு அமைந்துள்ள திருத்தலம்.
திருக்குடும்பத்தில் மாதா இடப்புறமாக அமைந்து காட்சி கொடுக்கும் திருத்தலம்.
பங்குத்தந்தை : அருட்பணி A. S மைக்கிள் ராஜ்
இணை பங்குத்தந்தை : அருட்பணி ஞானசேகரன்
குடும்பங்கள் : 2047
அன்பியங்கள் : 18
ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கு
மற்றும் மாலை 05.30 மணிக்கு ஜெபமாலை, 06.00 மணிக்கு திருக்குடும்ப நவநாள், 06.30 மணிக்கு திருப்பலி.
மாதத்தின் முதல் ஞாயிறு : காலை 10.00 மணிக்கு ஆங்கில திருப்பலி.
மாதத்தின் இரண்டாவது ஞாயிறு : காலை 10.00 மணிக்கு மலையாள திருப்பலி
மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு ஜெபமாலை, குணமளிக்கும் திருப்பலி, தாழ்ச்சி கூறல்.
திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி, சனி திருப்பலி : காலை 06.00 மணிக்கு.
வியாழன் : மாலை 06.00 மணிக்கு ஜெபமாலை, 06.30 மணிக்கு திருக்குடும்ப நவநாள், 06.45 மணிக்கு திருப்பலி.
மே மாதம் மாதா வணக்கம் 31 நாட்களும் மாலை 06.00 மணிக்கு மாதா பிரார்த்தனை, திருப்பலியும். 31-ம் தேதி மாதாவிற்கு முடிசூட்டு விழா, பிரார்த்தனை, திருப்பலி ஆகியவை வெகு சிறப்பாக நடைபெறும்.
திருவிழா : செப்டம்பர் மாதத்தில் காலாண்டு தேர்வு விடுமுறையை உள்ளடக்கிய பத்து நாட்கள்.
பரிசுத்த திருக்குடும்ப திருத்தலம் மூன்று என்பதன் சிறப்புடையதே இதன் தனிச்சிறப்பு :
1. திருக்குடும்பத்தில் மாதா, சூசையப்பர், இயேசு என்பது : மூன்று.
2. திருக்குடும்பம் மூன்று முறைகள் காட்சி கொடுத்த திருத்தலம்.
3. திருத்தல கோபுரங்கள் : 3
4. திருத்தல சிறிய கோபுரங்கள் : 3
5. திருத்தல கோபுரங்கள் உயரம் : 133 அடி
6. நடுவில் உள்ள கோபுர உயரம் : 113 அடி
7. திருத்தல நீளம் : 163 அடி
8. திருத்தல அகலம் : 53 அடி
9. திருத்தல முன்புற நுழைவாயில் : 3
10. மொத்த நுழைவாயில்கள் : 13
11. ஜன்னல்கள் : 43
12. திருத்தலத்தின் மொத்த சம்மனசுகள் :173
13. நாகர்கோவிலிலிருந்து 3 கி.மீ தூரத்தில் திருத்தலம் அமைந்துள்ளது.
14. திருயாத்திரை திருத்தலத்தின் மூன்றாவது திருத்தலம். (திருயாத்திரை திருத்தலங்கள் என்பது குமரி மாவட்டத்தில் உள்ள 14 திருத்தலங்களை உள்ளடக்கியது)
மண்ணின் மைந்தர்கள் :
1. Fr A. ஜோக்கிம்
2. Fr V. இராபர்ட்
3. Fr T. J வில்சன்
4. Fr ஆல்வின் மதன் ராஜ்
5. Fr மார்கோனி ரவிச்சந்திரன்
6. Fr சகாய பிரபு.
குரு மாணவர். ஜோன் கிஷோர்.
அருட்சகோதரிகள்:
1.Sis எபரன்ஸ் ஆன்டனி
2. Sis அல்போன்சாள் சைமன்
3. Sis அன்செலின் கிரேஸ்
4. Sis செலின் ராஜம்
5. Sis பிர்ஜித் சுவாகீன்
6. Sis கிறிஸ்டின் மேரி
7. Sis மேரி மெல்பா
8. Sis சேவியர் சுனிதா ராணி
9. Sis மேரி சுசீலா குருசந்தோணி
வழித்தடம் :
கன்னியாகுமரியிலிருந்து களியக்காவிளை செல்லும் அனைத்து பேருந்துகளும் இவ்வாலய வழியாகச் செல்லும். இறங்குமிடம் டெரிக் ஜங்ஷன்.
வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு தங்குமிடம், குளியல் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு அலுவலக எண் : 9498848495
திருத்தல வரலாறு :
மேலராமன்புதூர் என்றழைக்கப்படும் இவ்வூர் முற்காலத்தில் பல சிற்றூர்களின் தொகுப்பாகவே விளங்கியது.
கி.பி 1721 முதல் 1729 வரை திருவிதாங்கோடு நாட்டை ஆட்சி செய்த மன்னர் இராமவர்மா அரச கொட்டாரத்தில் (அரண்மனை) வாழ்ந்ததால் அந்த பகுதிக்கு இராமவர்மபுரம் என்று பெயரிட்டு அழைத்தனர். அரண்மனையின் தென்புறம் புதிய குடுயிருப்பு உருவாகி, அதுவே மேலராமன்புதூர் என அழைக்கப்படுகிறது.
மேலராமன்புதூரின் மேற்குப் பகுதியில் தளவாய்புரம் இருந்தது. அக்காலத்தில் தளவாய் பதவி நாட்டின் நிர்வாகத்தைக் கவனிக்கும் பதவியாக இருந்ததால், தளவாயின் அலுவலகங்கள் இருந்த பகுதியெல்லாம் தளவாய்புரம் என அழைக்கப்பட்டது.
இக்காலகட்டத்தில் மேலராமன்புதூரை ஒட்டிய காட்டுப்பகுதிகள் பஞ்சவன்காடு (தற்போதைய குருசடி ஊர்) என்றழைக்கப்பட்டது.
மேலராமன்புதூரும் அருளாளர் தேவசகாயம் பிள்ளையும்:
பஞ்சவன்காட்டில் தளவாய்புரம் பகுதியில் மேலராமன்புதூர் சிறையில், மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் பிள்ளை அடைக்கப் பட்டிருந்தார் (1751ஜூன் முதல் ஆகஸ்ட் வரை) என்றும், அச்சிறையிலேயே அருளாளருக்கு பரிசுத்த திருக்குடும்பம் காட்சி அளித்ததாகவும், அவ்விடத்திலேயே மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப திருத்தலம் அமைந்துள்ளது என வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றது.
மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் வரலாற்றை ஆவணங்களாய் விளங்குவதில் மிக முக்கியமானது, புலவர் தொம்மன் திருமுத்து கி.பி 1752-இல் எழுதிய வேதசாட்சியின் துயரமான பாடுகள் என்ற ஓலைச்சுவடியாகும். இவர் அருளாளர் தேவசகாயம் பிள்ளையின் பள்ளித்தோழர். சிறைச் சாலையில் அருளாளருடன் ஒன்றாக இருந்தவர்.
அருளாளர் தேவசகாயம் பிள்ளை, மேலராமன்புதூர் சிறையில் இருந்த போது நடந்த நிகழ்வுகளை புலவர் அவர்கள் அம்மானை பாடலில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.
"இராமன்புதூர் சீமையிலே, இரவுநேரச் சாமமதில் பரலோகத் திருக்குடும்பம், பரிவுடனே வந்ததம்மா, உத்தமியாள் தேடிவர, உறுதிமொழி கூறியவர் நித்தியமாய் பரம்சேர, நீதிமொழி பேசினாரே, கைது செய்த நேர குரு, மாகாணத் தலைவரானார் தீதுமுறைச் செய்தி கேட்டு, தேடி வந்தார் கோட்டாறு, நலங்கள் பலபேசி, நல்லாசீர் தந்த குரு விலங்கை கையிலேந்தி, வினயமுடன் முத்தி செய்தார் "
இதன் விளக்கம் :
நாகர்கோவிலை அடுத்துள்ள பஞ்சவங்காடு, களியங்காடு பகுதிகள் ஆள் நடமாட்டமில்லாத பகுதிகள். களியங்காட்டுப் பகுதியில் ஆராச்சாரின் வீடு இருந்ததால், தேவசகாயம் பிள்ளையை, ஆராச்சாரின் சிறையிலிருந்து பஞ்சவன்காட்டின் தளவாய்புரம் என்ற பகுதியில் உள்ள மேலராமன்புதூர் சிறைச்சாலைக்கு மிகவும் இரகசியமாக கொண்டு போய் சிறையிலடைத்தார்கள்.
அங்கே சரியாக உண்ண உணவு கொடுக்காமல் விலங்குகளுடன் பட்டினி போட்டு கொல்ல வேண்டும் என்பது அவர்களின் திட்டம்.
எனினும் இரகசியமாக செய்தியறிந்த மக்கள், சில காவலர்களின் உதவியுடன், அருளாளருக்கு உணவு கொடுத்து உதவினர். இவர்களுக்கு புண்ணியவான் (அருளாளர்) நல்லாசியும் இறை போதனையும் வழங்கினார்.
இந்த நாட்களில் கோட்டாறு பங்குத்தந்தை அருட்தந்தை தொம்மாஸோ டி. பான்சிகா சே. ச அவர்கள் அருளாளருக்கு பாவசங்கீர்த்தனம் கேட்டு நற்கருணை வழங்கினார். இறைவன் தேவசகாயம் பிள்ளையை அன்பு செய்து வழிநடத்துவதையும், அருளாளர் இறைவனடி சேரும் நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்பதையும் குருவானர் புரிந்திருந்தார்.
திருவிதாங்கோடு மக்களின் அவலநிலையை நேரில் பார்க்க வந்த சபைத்தலைவர் அருட்பணி பிமாண்டல் SJC சுவாமிகள் மேலராமன்புதூர் சிறையில் இருந்த தேவசகாயம் பிள்ளையை சந்தித்து நீண்ட நேரம் உரையாடி, பிள்ளையின் கை கால்களில் கட்டப்பட்டிருந்த விலங்கு சங்கிலிகளைத் தன் கையிலெடுத்து முத்தமிட்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, "ஒரு புனிதத் திருமகனின் வேதசாட்சி வாழ்வை நேரில் பார்க்கும் பாக்கியம் தந்த ஆண்டவருக்கு தோத்திரம் உண்டாவதாக, இந்த அருமையான விலங்குகள் கூடிய சீக்கிரம் விண்ணகத்தின் மகிமைக்குரிய இரத்தினக் கம்பளமாக மாறும்" என்று கூறி கண்ணீரோடு விடை பெற்றார்.
தேவசகாயம் பிள்ளை தாம் சிறை வைக்கப்பட்டிருந்த இடங்களிலெல்லாம், தம்மிடம் திரளாய் வந்த மக்களுக்கு வாஞ்சையுடன் இரட்சணியத்தின் வழியை விளக்கமாகப் போதித்தார். அவரது போதனையைக் கேட்ட பலரும் இரட்சணியம் அடைந்தனர். அருளாளரை கொடுமைப்படுத்திய சிலர் மனம் திரும்பி வந்து மன்னிப்பு கேட்டனர். நோய் நொடிகளிலிருந்து விடுதலை கிடைத்த மக்களும் திருமறையைத் தழுவினர்.
இம்மக்கள் சேர்ந்து பிற்காலங்களில் பிள்ளைக்கு திருக்குடும்பம் காட்சி தந்த, இந்த சிறையின் அருகாமையில் ஒரு சிறந்த குருசடியைக் கட்டினார்கள். அந்தப் பகுதியில் தான் தற்போதைய மேலராமன்புதூர் திருத்தலம் இருக்கிறது என்று முன்னோர் கூறுவர்.
திருவிதாங்கோட்டிலிருந்து ஆசாரிப்பள்ளம் வழியாக பிள்ளையின் துணைவியார் ஞானப்பூ அம்மையார் இராமன்புதூர் வந்து புண்ணியவானைச் (தேவசகாயம் பிள்ளை) சந்தித்து விட்டு, அடர்ந்த காட்டுப் பகுதி வழியாக திரும்பிச் சென்ற போது, இருளில் ஒரு வானதூதர் காட்சி கொடுத்து வழிகாட்டி அழைத்துச் சென்றார். ஞானப்பூ அம்மையார் வழிநடந்து வந்த செய்தி அறிந்து, மக்கள் பல ஊர்களில் இருந்தும் வந்து கூடினார்கள்.
(இந்த நிகழ்வுகள் தான் மேலே கூறிய அம்மானை பாடலின் விளக்கம்.)
வானதூதர், ஞானப்பூ அம்மையாரை வழிநடத்திச் சென்றதன் நினைவாக, இயேசுசபை குருவான சிருஷ்டி சுவாமிகள் ஒரு கற்சிலுவை செய்து அதில் ஞானப்பூ அம்மையாரை வழிநடத்திச் சென்ற வானதூதரின் திருஉருவத்தையும் செதுக்கி வைத்தார். இந்த கற்சிலுவை தற்போது ஆலயத்தில் மிகப் புனிதமான இடத்தில் வைக்கப் பட்டுள்ளது.
15-11-1751 அன்று தேவசகாயம் பிள்ளையை இராமன்புதூர் சிறையிலிருந்து தென் எல்லையான தோவாளைக்கு கொண்டு போயினர். அருளாளரின் போதனையால் கிறிஸ்தவம் தழுவிய மக்கள் திருக்குடும்ப திருத்தலம் இருக்கும் இடத்திலேயே கற்சிலுவை நட்டு, குருசடி கட்டி இறைவனை வழிபட்டு வந்தனர்.
அக்காலத்தில் சேசு சபை குருக்கள் கிறிஸ்தவம் முளைவிட்ட இடங்களிலெல்லாம் கற்சிலுவைகளை நாட்டி வழிபட்டு வந்தனர்.
புண்ணியவாளன் மாதவடியான்:
மேலராமன்புதூரில் நிறுவப்பட்ட குருசடியானது, மாதவடியான் புண்ணியவாளன் என்பவரால் பராமரிக்கப் பட்டு வந்தது. இந்த புண்ணியவாளன் பல ஊர்களில் இது போன்று குருசடிகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.
அந்த காலத்தில் நேசமணி நகர் அருகே அனந்தநகர் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட குருசடி பின்னர் மேலராமன்புதூர் மக்களால் புதுப்பிக்கப்பட்டு, புனித அந்தோணியார் குருசடியாக 2015 -இல் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
மாதவடியான் புண்ணியவாளன் அவர்கள், காவல்கிணறு பணகுடிக்கு இடைப்பட்ட பகுதியில் ஒரு குருசடி கட்டி அங்கு தங்கியிருந்ததாக அறிய முடிகிறது. தற்போது அன்னை வேளாங்கண்ணி திருத்தலமாக விளங்கும் அப்பகுதி இன்றும் மாதவடியான் புண்ணியவாளன் பெயரிலேயே விளங்குகிறது. (வேளாங்கண்ணி பேராலயத்திற்கு தென்பகுதியில் இருந்து திருப்பயணம் செல்பவர்கள் இந்த திருத்தலத்தில் சென்று ஜெபித்து, தாங்கள் கொண்டு செல்லும் இரவுணவை உண்டு இளைப்பாறி விட்டு தங்கள் திருப்பயணத்தை தொடர்வார்கள்)
இராமன்புதூரில் கத்தோலிக்க வளர்ச்சி :
கி.பி 1751 ஆண்டுவாக்கில் பல செல்வந்தர்கள் இராமன்புதூர் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். கத்தோலிக்க திருமறையைத் தழுவிய இக்குடும்பங்களில், வடலிவிளையில் வாழ்ந்த குருசடி ஆலயத்தின் முடுதமாக (முடுதம் என்றால் ஊர் தலைவர்) செயல்பட்டவர் திரு எஸ். தேவசகாயம். பின்னர் இவரது தலைமுறையினர் தொடர்ந்து முடுதமாக இருந்து சிறப்பாக செயல்பட்டு வந்தனர். இவர்களில் திரு D. விஸ்வநாதன் அவர்கள் மேலராமன்புதூர் திருக்குடும்ப ஆலயத்தில் 1944 -1947 வரை ஊர் தலைவராக இருந்த காலகட்டத்தில் தான் பல்வேறு போராட்டத்திற்கு பிறகு ஆலயம் கட்டப்பட்டது.
17 நூற்றாண்டில் இராமன்புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் காடுகளாகவே இருந்தது. நிலம் எவருக்கும் நிரந்தர உரிமை உடையதாக இருக்கவில்லை. மன்னரின் செப்புப்பட்டயம் பெற்றவர்களிடம் மட்டுமே நிலையான சொத்துக்கள் இருந்தன. திருப்பாப்பூர் குடும்பத்தினருக்கு மட்டுமே செப்புப்பட்டயம் வழி பெற்றிருந்த நிலங்கள் இருந்தன.
மற்றவர்கள் தலைமுறை தலைமுறையாக சொத்துக்கள் வைத்திருந்தாலும் அவர்களுக்கு அவை உரிமைப்பட்டதாக இருக்கவில்லை. அந்நிலங்களை அடமானம் வைக்கவோ, விற்பனை செய்யவோ முடியாததாக இருந்தது.
1866-இல் திருவிதாங்கோடு அரசு பண்டாரபாட்டம் சட்டத்தைக் கொண்டு வந்ததன்படி, நிலத்தை அனுபவித்து வந்தவர்களுக்கு நிலத்தின் கிரய உரிமை கொடுக்கப்பட்டது. பலரது நிலங்கள் பறிக்கப்பட்டு அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்களுக்கு அளிக்கப்பட்டது. அதன்பிறகு மேலராமன்புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் வளமாக்கப்பட்டது.
பனங்காடுகளாகவும், பல்வேறு காட்டு மரங்கள் அடர்ந்த பகுதிகள் அழிக்கப்பட்டு, முந்திரி தோட்டங்களாக மாற்றப்பட்டது. பருவமழை காலங்களில் நிலங்களை உழுது எள், காணம், துவரை போன்றவை விதைக்கப்பட்டு, ஊர் செழிப்பானது.
இக்காலகட்டத்தில் குருசடி பங்கு உதயமாகி கோட்டாறு பங்கின் கிளைப்பங்காக விளங்கியது. மேலராமன்புதூர், தளவாய்புரம் மக்கள் குருசடி கிளைப்பங்கின் உறுப்பினர்களாக இருந்தனர்.
1919 -இல் இராமன்புதூரில் கார்மல் ஆங்கிலப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. 1930 இல் கொல்லம் மறை மாவட்டத்திலிருந்து பிரித்து கோட்டாறு மறை மாவட்டம் உருவானது. முதல் ஆயராக மேதகு லாரன்ஸ் பெரைரா நியமிக்கப்பட்டார். 1935 -இல் இராமன்புதூர் கார்மல் பள்ளிக்கு ஆயர் இல்லம் மாற்றப்பட்டது. தற்போதைய ஆயர் இல்லமானது மேலராமன்புதூருக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1936-இல் குருசடி தனிப்பங்கானது. உடனே குருசடி பங்கின் பகுதியில் இருந்த பல ஊர்களும் தங்களுக்கு தனி ஆலயம் கட்டப்பட வேண்டும் என்று ஆயருக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வந்தனர்.
ஆயர் மேதகு T. R ஆஞ்ஞிசாமி பணிக்காலத்தில் இராமன்புதூர் பகுதிக்கு புதிய ஆலயம் கட்டவும், அது குருசடி பங்கின் கிளைப்பங்காகவும் இருக்கவும் அனுமதி வழங்கினார். இராமன்புதூர் சிறையில் அருளாளர் தேவசகாயம் பிள்ளைக்கு திருக்குடும்பம் காட்சி கொடுத்ததன் நினைவாக, பரிசுத்த திருக்குடும்பத்தை பாதுகாவலாக கொண்டு ஆலயம் கட்டப்பட வேண்டும் என மக்கள் விரும்பி, அதற்கான அனுமதியை ஆயரிடமிருந்து, 1944-இல் அப்போதைய குருசடி பங்குத்தந்தை அருட்தந்தை ரிச்சர்டு ரொசாரியோ பெற்றுக் கொடுத்தார்.
ஆலய உருவாக்கம் :
ஆலயம் கட்ட அனுமதி கிடைத்ததும், மேலராமன்புதூரில் கட்டுவதா..? கீழராமன்புதூரில் கட்டுவதா..? என்பதில் சற்று கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இரண்டு ஊருக்கும் தனித்தனியாக ஆலயம் கட்டுவது என தீர்மானிக்கப் பட்டது.
மேலராமன்புதூர் மக்கள் தற்போது பரிசுத்த திருக்குடும்ப திருத்தலம் இருக்கும் இடத்தில் இருந்த இடச்சிவிளை, கோழித்தட்டு கழுவன்திட்டை-யில் (குற்றவாளிகளை கழுவேற்றி கொல்லும் இடம்) கல்குருசு குருசடியை ஒட்டியிருந்த கல்லறைகளை அகற்றிவிட்டு, இரவோடு இரவாக ஆலய கட்டுமானப் பணிகளைத் துவங்கினர். இவ்வாறு உருவானது தான் மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப திருத்தலம்.
ஓட்டுக்கூரையுடன் அமைக்கப்பட்ட அச்சிறு ஆலயத்தில் ஜெபங்கள் தொடர்ந்து நடந்து வந்தது. 1946 -இல் முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. சில தடங்கல்களால் தொடர்ந்து திருப்பலி நடைபெறவில்லை.
1947 -இல் குருசடி பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்தந்தை அம்புறோஸ் பெர்னான்டோ அவர்கள், மேலராமன்புதூர் ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்ற அரசின் அனுமதி வேண்டி மனு சமர்ப்பித்தார். காரணம் அக்காலத்தில் கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்திருக்கவில்லை. திருவிதாங்கூர் அரசின் கீழ் இருந்தது. வழிபாடுகளுக்கு அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற விதி இருந்தது. திருவிதாங்கூர் அரசின் தலைநகர் திருவனந்தபுரம் ஆக இருந்தது. தொடர் முயற்சிகளின் காரணமாக அரசின் அனுமதி பெற்று, 1949 முதல் மேலராமன்புதூர் திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.
ஆலயத்தில் அமைந்துள்ள திருக்குடும்ப சுரூபம் இத்தாலியிலிருந்து கொண்டு வரப்பட்டது ஆகும். சூசையப்பர் வலப்புறமும், மாதா இடப்புறமாகவும் இருப்பது இந்த சுரூபத்தின் தனிச்சிறப்பு.
இதன் விளக்கம்: இத்தாலி நாட்டில் அரச குடும்பத்து பெண்ணுக்கு நீண்ட காலமாக திருமணம் தடைபட்டு வந்தது. பின்னர் இறைவனின் அருளால் அப்பெண்ணுக்கு திருமணம் நடந்த போது ஒரே மாதிரியான மூன்று பரிசுத்த திருக்குடும்ப சுரூபங்கள் உருவாக்கப்பட்டு, ஒன்று இத்தாலியிலும், ஒன்று பிரான்ஸ் நாட்டிலும், ஒன்று மேலராமன்புதூர் ஆலயத்திற்கும் அனுப்பப் பட்டன. இந்த மூன்று திருக்குடும்ப சுரூபத்திலும் மாதா இடப்புறமாக அமைக்கப்பட்டுள்ளது,காரணம் மணப்பெண் இடப்புறமாக நிற்கும் நிலையை கருத்தில் கொண்டு இவ்வாறு உருவாக்கப்பட்டது குறிப்பிட்டத் தக்கது.
திருக்குடும்ப ஆலயம் ஆரம்ப காலம் முதலே நோயாளிகள் வந்து தங்கி இறையருள் மூலம் குணம் பெற்றுச் செல்லும் புண்ணியத்தலமாக விளங்கியது. அருளாளர் தேவசகாயம் பிள்ளையின் நினைவாக நிறுவப்பட்ட கற்சிலுவை ஏற்கனவே புண்ணியவாளன் மாதவடியானால் வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தது. அத்துடன் குருசடி ஆலயத்திலிருந்து கொடுக்கப்பட்ட புனித மிக்கேல் அதிதூதர் சுரூபமும் இருந்தது. பல ஊர்களில் இருந்தும் நோயாளிகள் அதிகமாக வந்து இங்கிருந்த சாவடியில் (சிறுசத்திரம்) தங்கி ஜெபித்து நலம் பெற்று சென்றனர். தற்போது திருப்பயணிகள் எந்த நேரத்திலும் வந்து தங்கி ஜெபிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் தங்கள் குடும்ப நலனுக்காகவும், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் தீரவும் திருத்தலம் வந்து குடும்ப சோறு வைப்பது; சுகப்பிரசவம் நிகழ தேங்காயில் எண்ணெய் ஊற்றி விளக்குத்தூணில் விளக்கெரித்து, அதனை கற்சிலுவையில் பூசுவது என்பனவும் நாள்தோறும் நடந்து வரும் விசுவாச நிகழ்வுகள் ஆகும்.
1960 -இல் கொடிமரமும், 1963-இல் மாதா கெபியும் நிறுவப்பட்டது.
ஆலயம் வளர்ச்சி கண்டு வந்த போது ஓட்டுக்கூரை ஆலயமானது போதுமானதாக இல்லை. ஆகவே புதிய ஆலயம் கட்ட தீர்மானித்து, 19-05-1953 இல் கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு ஆஞ்ஞிசாமி அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டது. தங்களது சொந்த உழைப்பிலேயே கட்ட வேண்டும் என்ற மன உறுதியால் பணிகள் 17 ஆண்டுகளாக நடந்து, கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 12-04-1970 அன்று அதே ஆயரால் அர்ச்சிக்கப்பட்டது.
இக்காலத்தில் ஆலயத்தின் முன்புறமுள்ள நித்திய சகாய மாதா குருசடி கட்டப்பட்டு, குருசடி ஆலய பங்குத்தந்தையாக இருந்து, வேலூர் மறை மாவட்ட ஆயரான மேதகு அந்தோணிமுத்து ஆண்டகையால் 1970 -இல் அர்ச்சிக்கப்பட்டது.
ஆலய வளாகத்தில் உள்ள அன்பர் படிப்பகம் இளைஞர்களுக்காக 1965-இல் கட்டப்பட்டது. ஆலய வளாகத்திலேயே தையல் பள்ளியும், தட்டச்சு பயிற்சி பள்ளியும் உருவாக்கப் பட்டது.
ஆலய முன்புற கோபுரம் கட்டப்பட்டு 17-091983 அன்று குருகுல முதல்வர் அருட்தந்தை ஏ. சூசைமரியான் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
1994 -இல் அன்பர் அரங்கம் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 16-08-1997 அன்று திறக்கப் பட்டது.
1971,1972 ஆண்டுகளில் இலங்கையைச் சேர்ந்த OMI சபை குருக்களான இம்மானுவேல் எட்மண்ட் முருகப்பிள்ளை, ஜேசுநேசன், ரெக்ஸ்குலாஸ் ஆகியோர் இங்கு இறைப்பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
19-11-1989 அன்று குருசடி பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு, தளவாய்புரம், அனந்தநகர்-ஐ கிளைப்பங்குகளாகக் கொண்டு மேலராமன்புதூர் தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை S. அருளப்பன் அவர்கள் பொறுப்பேற்றார்.
1991 -இல் கலையரங்கம் கட்டப்பட்டது.
1994 -இல் அருட்பணி ஜேம்ஸ் அவர்கள் பணிக்காலத்தில் பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது.
மாணவர்களின் தலைமைப் பண்பையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் விதமாக 1967-இல் தேன்கூடு மாணவர் மன்றம் ஏற்படுத்தப்பட்டது. பின்னாளில் மறை மாவட்ட அளவில் இளைஞர் மன்றத்துடன் இணைக்கப்பட்டது. மேலும் பல்வேறு சபைகள் இயக்கங்களும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
திருத்தலத்தில் இயேசுவின் பரிசுத்த இரத்தம் :
09-04-2004 புனித வெள்ளியன்று, அதிகாலை 05.00 மணிக்கு இயேசுவின் பாடுகளின் நாளாதலால் நற்கருணைக்கு தூபம் போடுவதற்காகவும், திருத்தலத்தில் காலை ஆராதனைக்கு ஆயத்தம் செய்யவும் பீடச்சிறார் மற்றும் இவர்களது வழிகாட்டியுமாக வந்த போது, திருத்தலம் முழுவதும் நறுமணம் கமழ்ந்து, வெண்மையான ஒளி ஒளிர்ந்தது. காலை ஆராதனைக்கு மக்களும் வந்து கொண்டிருந்த வேளையில், இயேசுவின் பாடுபட்ட திருச்சிலுவையை வெண்மையான துணியில் மூடப்பட்டிருந்தது. அவ்வேளையில் திருச்சிலுவையின் காயங்களிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.
அனைவரும் வியப்புடன் நின்று கொண்டிருந்தனர். இதனையறிந்த பல பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்து இயேசுவின் திருக்காயங்களிலிருந்து நிற்காமல் வந்து கொண்டிருந்த இரத்தத்தைக் கண்டு வியந்து ஜெபித்து சென்றனர்.
இயேசுவின் திருக்காயங்களிலிருந்து இரத்தம் படிந்த வெண்மையான துணியை பாதுகாப்பாக வைத்திருந்து ஒவ்வொரு வருடமும் புனித வெள்ளியன்றும் இரத்தம் வடிந்த நாளான ஏப்ரல் 09-ஆம் தேதியும், செப்டம்பர் மாதத்தில் பரிசுத்த திருக்குடும்ப திருத்தல திருவிழாவின் 10 நாட்களிலும் பல பகுதிகளில் இருந்தும் வருகின்ற இறைமக்கள் தொட்டு ஆசீர் பெறுவதற்காக வைக்கப்படுகிறது.
புதிய ஆலய கட்டுமானப் பணிகள் :
மேலராமன்புதூரில் பங்கு மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், திருப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆலயத்தில் இடநெருக்கடி ஏற்பட்டதாலும். மற்றும் ஆலயத்தில் பழுதுகள் ஏற்பட்டதாலும் 2009 -இல் நடைபெற்ற ஊர்பொதுக்குழு கூட்ட முடிவின்படி, பங்குத்தந்தை அருட்தந்தை அருளப்பன் அவர்களின் ஆலோசனைப்படி புதிய ஆலயம் கட்ட தீர்மானிக்கப்பட்டது.
புதிய ஆலயம் கட்ட பங்கின் குடும்பங்களுக்கு வரி விதிக்காமல், அனைத்து நிதிகளும் பங்கு மக்களிடம் நன்கொடையாகப் பெற தீர்மானிகாகப்பட்டு, சில நாட்களிலேயே சில கோடி ரூபாய்களை மக்கள் நன்கொடையாக கொடுக்க, உற்சாகத்துடன் பங்குத்தந்தை அருட்தந்தை S. அருளப்பன் அவர்களின் முன்னிலையில், 19-02-2010 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அடிக்கல் போடப்பட்டது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் வரி விதிக்காமலேயே மேலராமன்புதூர் மக்கள் பல கோடி ரூபாயை நன்கொடையாக கொடுத்தது தான்.
இதற்காக பங்குத்தந்தை அருட்தந்தை S. அருளப்பன் அவர்கள் திருப்பலியின் வழியாகவும், திருவிழாக்கள் வழியாகவும் இன்னும் பல்வேறு சிறப்பான திட்டங்கள் வழியாகவும் நிதிகள் திரட்டியது குறிப்பிடத்தக்கது.
பங்குத்தந்தை அருட்தந்தை அருளப்பன் அவர்களின் திட்டங்களில் முக்கியமானது 'திருக்குடும்பத்தை நம்பி வீட்டுக்கொரு கம்பி' என்பது தான்..! இதனை அடிக்கடி அருட்தந்தை அவர்கள் சொல்லச் சொல்ல பல கோடிகள் நிதிகளாக கிடைத்தன.
அழகிய கலை நயமிக்க பீடப்பணிகள் மற்றும் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று அழகான இத் திருத்தலமானது 29-12-2015 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
புதிய ஆலயத்தின் சிறப்புகள் :
1.இரண்டு பக்க கோபுரங்கள் (உயரம் 133 அடி). நடுவில் ரோம் நகர ஆலயத்தை நினைவு படுத்தும் வகையில் அழகிய வேலைப்பாடுகளுடன் டூம்களும், அதனுள் பரிசுத்த திருக்குடும்பமும், அதன்மேல் திருக்குடும்பத்தை வாழ்த்திப் பாடும் வானதூதரும் என ஆசி வழங்கி வரும் காட்சிகள் அற்புதம்.
2.முன்புறமுள்ள 6 அழகிய தூண்களும், அதனை தாங்கிப் பிடித்த வண்ணமாக வானதூதர்கள்.
3. முன்புறம் புனிதர்கள் மத்தேயு, மாற்கு, லூக்கா, பேதுரு, பவுல், மற்றும் பங்குத்தந்தை அருட்தந்தை அருளப்பன் அவர்களை கவுரவப் படுத்தும் விதமாக அவரது பெயரால் விளங்கும் அருளப்பர் சுரூபமும் உள்ளன.
மேலும் நுழைவாயிலில் புனித மிக்கேல் அதிதூதர், குழந்தை இயேசு சுரூபங்கள் திருத்தலத்திற்குள் வருவோரை ஆசீர்வதிக்கும் விதமாக காட்சியளிக்கின்றன.
4. திருத்தலத்தின் உள்ளே பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட தரையும், உயர்ந்த பலிபீடமும், 163 அடி நீளம், 53 அடி அகலம் கொண்ட ஆலயத்திற்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
5. திருத்தல உட்புற சுவர்களில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட கதவுகள், ஜன்னல்கள், அழகிய வண்ண வண்ண கண்ணாடிகள் பொருத்தப்பட்டு கண்களை கவர்கின்றன.
6. ஒவ்வொரு தூண்களிலும் திராட்சை செடியும், அதன் மேலே ஒரு வானதூதரும், அடிப்பகுதியில் ஒரு வானதூதரும் வீற்றிருக்கின்றனர்.
7. பக்கச் சுவர்களில் சிலுவைப்பாதையின் 14 நிலைகளும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
8. விவிலிய நிகழ்வுகளை உள்டக்கிய மிக மிக மிக அழகான பலிபீடம், இருகரம் கூப்பி இறைவனை நோக்கி ஜெபிக்கத் தூண்டுகிறது.
இவ்வாறு ஆலயத்தின் எந்தப் பகுதியை நோக்கினாலும் அழகிய வேலைப்பாடுகளும் விவிலிய நிகழ்வுகளும் காணப்படுவதால் இத்திருத்தலத்தை நேரில் கண்டு பரிசுத்த திருக்குடும்பத்தின் ஆசீரை பெற்றுச் செல்ல நாள்தோறும் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் அதிகமாக வருகின்றனர்.
குருசடி பங்கின் கிளைப் பங்காக இருந்த போது பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :
1. Fr ரிச்சர்ட் ரொசாரியோ
2. Fr ஆன்றனி
3. Fr S. R பெனடிக்ட் அலெக்சாண்டர்
4. Fr R. அந்தோணிமுத்து (முன்னாள் வேலூர் மறை மாவட்ட ஆயர்)
5. Fr V. சூசைமரியான்
6. Fr M. டைனீஸியஸ்
7. Fr I. கார்மல்
8. Fr M. கபிரியேல்
9. Fr S. M. மரியதாசன்
10. Fr M. பெஞ்சமின் ஜெபஸ்தியான்
11. Fr ஜோசப் ராஜ்
தனிப்பங்கான பின்னர் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :
1. Fr S. அருளப்பன் (1989-1991)
2. Fr மரிய ஜேம்ஸ் (1991-1996)
3. Fr மரிய வில்லியம் (1996-1999)
4. Fr பெனடிக்ட் சேவியர் (1999-2000)
5. Fr ஹென்றி (2000-2001)
6. Fr வின்சென்ட் பெ. வில்சன் (2001-2003)
7. Fr சேவியர் ராஜா (2003-2005)
8. Fr ஆன்றனி மெகலன் (2005-2006)
9. Fr S. அருளப்பன் (2006-2014)
10. Fr A. S சகாய ஆனந்த் (2014-2018)
11. Fr A. S. மைக்கிள் ராஜ் (2018 முதல்...)
திருத்தலத்தின் மாத இதழ் : திருக்குடும்ப தூது.
குறுந்தகடு : திருக்குடும்பமே..!
திருத்தலத்தின் இவ்வருட புனித நிகழ்வு :
தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா மற்றும் கர்நாடகாவிலுள்ள 18 திருத்தலம் மற்றும் பசிலிக்காவிலுள்ள பாதுகாவலர்களின் மாதிரி சுரூபமானது புனிதப்படுத்தி 60 நாட்கள் ஜெபிக்கப்பட்டு, பல ஆலயங்கள் வழியாக பவனியாக எடுத்துவரப்பட்டு மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப திருத்தலத்திலுள்ள திருபீடத்தில் 20-09-2019 அன்று அர்ப்பணிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து திருத்தல பெருவிழா நடைபெறும்.
18 சுரூபங்கள் கொண்டுவரப்பட இருக்கும் ஆலயங்கள்
1. St. George forane shrine, Edathuva.
2. St. George's Forane shrine, Edapally.
3. Infant Jesus shrine, Vivek nagar, Bangalore.
4. The Sacred Heart basilica shrine, Pondichery.
5. Adaikala matha shrine, Ealakurichi, Ariyaloor.
6. Sacred heart Jesus shrine, Idaikattur, Sivagangai
7. St. Alphonsa catholic shrine, Bharananganam
8. St. Thomas shrine, Kalady, Malayatoor
9. St. Thomas Mount, Chennai
10. Our Lady of Lourdes shrine, Viliyanoor, Pondichery.
11. Poondi matha basilica shrine, Thanjavur
12. St. John De Britto shrine, Oriyur.
13. Basilica of Our Lady of Ransom Ave Maria shrine, Vallarpadam
14. St. Mary's basilica shrine, Bangalore
15. Velankanni shrine, Besant nagar, Chennai
16. Basilica of Our Lady of Good Health shrine, Velankanni.
17. Arogya matha shrine, Vadipatti.
18. The shrine basilica of Our Lady of The Snow shrine, Tuticorin.
இவ்வாறு சில நூறாண்டுகள் பழமையானதும், அருளாளர் தேவசகாயம் பிள்ளையை சிறை வைத்த இடத்தில் அமையப்பெற்றதும், பல அற்புதங்கள் அதிசயங்கள் நிறைந்ததும், பங்கு மக்களின் கடின உழைப்பாலும், அருட்தந்தையர்களின் வழிகாட்டுதலில் உயர்ந்த மேலராமன்புதூர் புதுமைகள் புரியும் பரிசுத்த திருக்குடும்ப திருத்தலத்தின் சிறப்புகளை சொல்லி அடங்காது.