149 விடியற்காலை விண்மீன் ஆலயம், வேளாங்கண்ணி


விடியற்காலை விண்மீன் ஆலயம்

இடம் : வேளாங்கண்ணி

மாவட்டம் : நாகப்பட்டினம்
மறை மாவட்டம் : தஞ்சாவூர்

நிலை : பேராலயம்

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு தேவதாஸ் அம்புறோஸ்

பேராலய அதிபர் : பேரருட்பணி பிரபாகர் அடிகளார்
துணை அதிபர் (பங்குத்தந்தை) :அருட்பணி சூசை மாணிக்கம்.

திருவிழா : செப்டம்பர் மாதம் 8 ம் தேதியை உள்ளடக்கிய நாட்கள்.

பேராலய வரலாறு :

இறைமகன் இயேசுவின் தாய் மரியா, உலகின் பல நாடுகளில் வாழும் மக்களிடையே காட்சி அளித்து தன் மகன் மீது நம்பிக்கை கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். அன்னை காட்சி அளித்த ரோம், வால்ஷின்காம், குவாதலூப்பே, லூர்து, பாத்திமா உள்பட அனைத்து இடங்களில் உள்ள ஆலயங்களும் வரம் மழை பொழியும் திருத்தலங்களாகத் திகழ்கின்றன.

தமிழகத்தில் அன்னை மரியா காட்சி அளித்த வேளாங்கண்ணியில் உள்ள பேராலயத்தின் வரலாற்றை இங்கு காணலாம். 16ஆம் நூற்றாண்டு மத்தியில், பால்க்கார சிறுவனுக்கு அன்னை மரியா காட்சி அளித்ததால் வேளாங்கண்ணியில் மாதாவின் பக்தி தோன்றி வளர்ந்தது.

அதன் பிறகு, கால் ஊனமுற்ற மோர் விற்கும் சிறுவன் அன்னையின் காட்சியால் நலம் அடைந்ததால் மாதாவின் புகழ் மற்ற பல ஊர்களுக்கும் பரவியது. நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கத்தோலிக்க பெரியவருக்கு கனவிலும், மோர்க்கார சிறுவன் வழியாகவும் அன்னை மரியா வேளாங்கண்ணியில் ஆலயம் எழுப்புமாறு அறிவுறுத்தினார்.

அதனை ஏற்று 1580ஆம் ஆண்டளவில் ஆரோக்கிய அன்னையின் சொரூபம் தாங்கிய முதல் ஆலயம் வேளாங்கண்ணியில் எழுப்பப்பட்டது. மக்கள் பலரும் இறையன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டி உடல், உள்ள, ஆன்ம நலன்களைப் பெற்றனர்.

முதல் ஆலயம் கட்டப்பட்டு சுமார் 90 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. கடும் புயலால் கடல் சீற்றத்தில் சிக்கிய போர்ச்சுக்கீசிய வணிகர்கள் அன்னை மரியாவின் உதவியால் வேளாங்கண்ணியில் பாதுகாப்பாக கரை சேர்ந்தனர்.

அவர்கள் நேர்ந்து கொண்ட படி, 1670ஆம் ஆண்டளவில் போர்ச்சுக்கீசிய கலைப் பாணியில் வேளாங்கண்ணி மாதா ஆலயத்தை பெரியதாகக் கட்டி எழுப்பினர். சில வருடங்களுக்கு பிறகு அவர்கள், அன்னையின் பீடத்தை பைபிள் காட்சிகள் பதித்த ஓடுகளால் அலங்கரித்தனர்.

அன்னையின் ஆலயம் மக்களை ஈர்க்கும் கலைக் கூடமாக உருப்பெற்றது. குளத்தின் மறுபுறம் அன்னை காட்சி அளித்த இடத்தில் இருந்த ஆலமரமும் பக்தர்களின் புகலிடமாக விளங்கியது. வேளாங்கண்ணி ஆலயம், முதலில் நாகப்பட்டினம் அமலோற்பவ அன்னை ஆலயப் பங்கின் துணை ஆலயமாக இருந்து வந்தது.

1771ஆம் ஆண்டு செப்டம்பரில், அருட்தந்தை ஆன்டனியோ டி ரொசாரியோ அடிகளார் கண்காணிப்பில் வேளாங்கண்ணி தனிப் பங்காக உருவானது. அப்போது பழைய மயிலாப்பூர் மறைமாவட்டத்தின் கீழ் இருந்த, இந்த ஆலயத்தை பிரான்சிஸ்கன் சபை குருக்கள் பராமரித்து வந்தனர்.

1889ஆம் ஆண்டு வரை பிரான்சிஸ்கன் சபை குருக்களே வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் பங்குத்தந்தையராகப் பணியாற்றினர். அருட்தந்தை மிகுவேல் பிரான்சிஸ்கோ காலத்துக்கு பிறகு, 1890ல் வேளாங்கண்ணி ஆலயம் மறைமாவட்ட குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அருட்தந்தை செபாஸ்டியோ சேவியர் (1910-1942) காலத்தில், வேளாங்கண்ணி ஆலயத்தின் அமைப்பு சிலுவை வடிவில் மாற்றி அமைக்கப்பட்டது. இதற்காக 1933ஆம் ஆண்டு, அன்னையின் பீடத்தையொட்டி ஆலயத்தின் வலப்புறமும் இடப்புறமும் விரிவுபடுத்தப்பட்டது.

இதனால் வழிபாட்டு நேரங்களில் ஆலயத்தின் உள்ளே கூடுதல் பக்தர்கள் பங்கேற்கும் வாய்ப்பு உருவானது. 1952ஆம் ஆண்டு தஞ்சை மறைமாவட்டம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து வேளாங்கண்ணி ஆலயம் தஞ்சை மறைமாவட்ட கண்காணிப்பின் கீழ் வந்தது.

தஞ்சையின் முதல் ஆயர் ஆரோக்கியசாமி சுந்தரம் (1953 - 1986) ஆண்டகை வேளாங்கண்ணி ஆலயத்தின் வளர்ச்சியில் ஆர்வம் காட்டினார். ஏராளமான அற்புதங்கள் நடந்ததால், வேளாங்கண்ணி அதிக பக்தர்களை ஈர்க்கும் திருத்தலமாக உயர்ந்தது.

சமயம், இனம், மொழி கடந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங் கண்ணி மாதாவை நாடி வந்ததால், இந்த திருத்தலத்தை `பசிலிக்கா' என்றழைக்கப்படும் பேராலயமாக உயர்த்துமாறு போப் ஆண்டவர் 23ம் யோவானுக்கு தஞ்சை ஆயர் ஆரோக்கியசாமி சுந்தரம் வேண்டுகோள் விடுத்தார்.

பசிலிக்கா என்றால் அற்புதங்களால் பல நாட்டு மக்களை ஈர்க்கும் திருத்தலம் என்று அர்த்தம். ஆயரின் கோரிக்கையைப் பரிசீலித்த போப் 23ம் யோவான், வேளாங்கண்ணி ஆலயத்தில் நிகழும் அற்புதங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் 1962 நவம்பர் 3-ந்தேதி இதை பசிலிக்கா நிலைக்கு உயர்த்தினார்.

மேலும், ரோமில் உள்ள புனித மரியன்னை உயர் பேராலயத்துடனும் வேளாங்கண்ணி பேராலயத்தை இணைத்தார். வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்கள் பல மொழி வழிபாடுகளில் பங்கேற்க வசதியாக, 1974-75ஆம் ஆண்டுகளில் முதல் பேராலயத்தின் பின்புறம் இரண்டு தளங்கள் கொண்ட விரிவாக்க ஆலயம் கட்டப்பட்டது.

ஆலமரத்தடியிலும், நடுத்திட்டிலும் அன்னை மரியா காட்சி அளித்த இடங்களிலும் சிறிய ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. திவ்விய நற்கருணை ஆராதனைக்காகவும் தனி ஆலயம் அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் வழிபாட்டில் பங்கேற்க வசதியாக, தற்போது மிகப்பெரிய அளவில் விடியற்காலை விண்மீன் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

விடியற்காலை விண்மீன் ஆலயம் :

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைத் திருத்தலம் சிறிய (மைனர்) பசிலிக்காவாக (1962 ம் ஆண்டு) அறிவிக்கப்பட்டதன் பொன்விழாவை முன்னிட்டு பேராலய மாதா குளம் ஆலயத்திற்கு அருகில் விடியற்காலை விண்மீன் என்ற புதிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இதன் அடிக்கல்நாட்டு விழா 2011ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதியன்று நடைபெற்றது.

பேராலய அந்தஸ்தை பெற்றதின் பொன்விழா ஆண்டு நினைவாக இந்திய அஞ்சல் துறை பேராலாயத்தின் தோற்றம் பொறிக்கப்பட்ட தபால் தலையை வெளியிட்டது.

10-02-2013ல் விடியற்காலை விண்மீன் ஆலய திறப்பு விழாவில் போப் ஆண்டவரின் சிறப்பு பிரதிநிதி பெர்னான்டோபிலோனி கலந்து கொண்டு ஆலயத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. போப் ஆண்டவரின் சிறப்பு பிரதிநிதி விடியற்காலை விண்மீன் ஆலயத்தை புனிதம் செய்து, திருப்பலி நடத்தி வைத்தார். சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வேளாங்கண்ணி மாதாவிடம் பிரார்த்தனை செய்தனர்.

முன்னதாக ஆலயம் முன்பு அமைக்கப்பட்டிருந்த போப் ஜானின் சிலையை, தூதர் பெர்னான்டோபிலோனி திறந்து வைத்தார். விழாவில் போப் ஆண்டவரின் இந்திய தூதர் சல்வத்தோரே பென்னாக்கியோ, இந்திய கத்தோலிக திருச்சபை ஆயர்கள் பேரவை புதிய தலைவர் ஆஸ்வல்டு கிரேசிஸ், முன்னாள் தலைவர் டெலஸ்போர்டோப்போ, துணைத்தலைவர் பிலிப் பேநேரிபெரோ, தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், பேராலய அதிபர் மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விடியற்காலை விண்மீன் ஆலயம், தூண்களே இல்லாத பிரமாண்ட கட்டிடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

போர்த்துகீசிய கட்டிடக் கலை பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலயம் 400 அடி நீளத்தில், 138 அடி அகலத்தில் கோபுரம் 150 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தோற்றத்தில் முத்துச்சிப்பி போல் காட்சி அளிப்பது இந்த ஆலயத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் ஆண்டகையின் மேற்பார்வையின் கீழ் இப்பேராலயம் உள்ளது.

மேலும் பல குருக்களும் இந்த ஆலயத்தில் பணியாற்றுகிறார்கள். வேளாங்கண்ணி பேராலயத்தின் மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், சமூக சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வேளாங்கண்ணி அன்னையைத் தேடி வரும் அனைவரும், அந்த அன்புத் தாயின் பரிந்துரையால் அற்புதங்களைப் பெற்று மகிழ்கிறார்கள்.