237 ஜெபமாலை அன்னை ஆலயம், செட்டிஹள்ளி

IMAGE NOT AVAILABLE
ஜெபமாலை அன்னை ஆலயம்

இடம் : செட்டிஹள்ளி, ஹாசன்

மாநிலம் : கர்நாடகா

பசுமையான மலைத்தொடர் நடுவே தவழ்ந்து வரும் ஹேமாவதி ஆறு; ஆங்காங்கே புகை மூட்டமாய் நகர்ந்து கொண்டிருக்கும் பனிமூட்டம்; ஆற்றின் நீரோட்டத்தில் வலை வீசி மீன் பிடிக்கப் பரிசிலில் செல்லும் கிராம மக்கள்; தன் இரைக்காக வட்டமடித்துக் காத்திருக்கும் பறவைக் கூட்டம்; யாரையும் சிலிர்க்க வைக்கும் மெல்லிய குளிர்காற்று; இவைகளின் ஊடே சூரிய உதயமும் அஸ்தமனமும் காணக் கிடையாக் காட்சிகள்.

இதுதான் “செட்டிஹள்ளி!”

கர்நாடக மாநிலத்தில் ஹாசன் நகரிலிருந்து 24கி.மீ. தொலைவில் ஹேமாவதி ஆற்றங்கரையில் உள்ள சிற்றூர் இது. இங்கு நூற்றைம்பது ஆண்டுகள் கடந்த பழமையான ஜெபமாலை ஆலயம் ஒன்று சிதிலமடைந்த நிலையில் உள்ளது.

இவ்வாலயம் அந்நாட்களில் ஆலூர், சக்லேஷ்பூர் எஸ்டேட் உரிமையாளர்களாக இருந்த இங்கிலாந்து நாட்டு செல்வந்தர்களுக்காக, பிரெஞ்சு மிஷனெரிகளால் கி.பி.1860-ல் கட்டப்பட்டது என்று அக்கிராம மக்கள் கூறுகின்றனர். மலைத்தொடராக உள்ள அதன் சுற்றுப்பகுதியில் வாழ்ந்துவந்த மலைகிராம மக்களின் வழிபாட்டிற்கும் கொண்டாட்டங்களுக்கும் உரிய தளமாக இவ்வாலயம் அன்று இருந்துள்ளது. கத்தோலிக்கத் திருச்சபையின் குருக்கள், கன்னியர்கள் இல்லங்கள்; அவர்களால் நடத்தப்பெற்ற தொடக்கப் பள்ளி போன்றவையும் இங்கு இருந்துள்ளன.

இந்த ஹேமாவதி ஆற்றின் குறுக்கே கி.பி.1960-ல் கொரூர் அணை கட்டப்பட்டபின், அணைப் பகுதிக்குள் இருந்த செட்டிஹள்ளி போன்ற பல கிராம மக்களும் அரசு தந்த மாற்றிடங்களுக்குக் குடிபெயர்ந்து சென்று விட்டனர். ஆனால், ஆலயம் மட்டும் அங்கேயே நின்றது. அதன் பின், அணை நிரம்பும் போதெல்லாம் இவ்வாலயம் நீரில் மூழ்கியும், நீர் வற்றிய போது வெளிப்பட்டும் இருந்து வருகிறது.

இந்த ஜெபமாலை ஆலயம் கட்டடக்கலை அடிப்படையில் சிறந்த ஒன்று. ஏனெனில், 12ஆம் நூற்றாண்டு தொடங்கி ஐரோப்பிய நாடுகளில் பிரசித்தி பெற்ற கட்டடக் கலையாக விளங்கிய “கோதிக் கட்டடக்கலை” பாணியில் இவ்வாலயம் கட்டப்பட்டுள்ளது. மேலும், இலத்தீன் சிலுவை வடிவத்தில் மிகப்பெரிய ஆலயமாக இருப்பதால், இதன் கூரையைத் தாங்க ஆலயத்தின் நடுவில் இரண்டு வரிசையில் தூண்கள் நிறுத்தப்பட்டு இருந்திருக்கின்றன. தற்போது நாம் காண்பதற்குத் தூண்கள் இல்லாவிட்டாலும், அத்தூண்கள் நின்றிருந்த தடம் அவ்வாலயத் தரையில் தழும்பாய்த் தெரிகிறது.

அன்றைய நாட்களில் இவ்வகை ஆலய கட்டுமானத்திற்கு சுண்ணாம்புச் சாந்தை பிரத்யேகமாகத் தயாரிப்பார்கள். அதாவது, கடுக்காய், ஓனான்குடி செடி, முட்டை, கருப்பட்டி அல்லது பதநீர் போன்றவற்றைச் சேர்த்து அரைத்து; ஓரிரு வாரங்கள் ஊற வைத்து, பின்னர் கட்டுமானத்திற்குப் பயன்படுத்துவர். இவ்வகையில் கட்டப்பட்ட கட்டடங்கள் நூற்றாண்டு கடந்து நிலைத்து நிற்பவை. இவ்வாலயமும் இம்முறையில் கட்டப்பட்டுள்ளதால்தான், சிதிலமடைந்த நிலையிலும் நீரில் நிலைத்து நிற்கும் சாத்தியமுடையதாய் இருக்கிறது.

இவ்வாலய கட்டுமானத்திற்குப் பயன்படுத்திய சுட்ட செங்கற்களும் இவ்வாலயத்திற்கெனத் தனிப்பட்ட முறையில் தயாரித்தவையே! ஏனெனில், அதிலும், பயன்படுத்தப்படும் இடத்திற்கேற்ப செங்கற்களை உருவாக்கி இருக்கிறார்கள். சான்றாக, உருட்டை வடிவ உயரமான தூண்களுக்கு அரைவட்ட வடிவ இணை செங்கற்கள்; அதன் மேலே இடம்பெறும் அருங்கோணவளைவு ஒப்பனைகளுக்கு அதற்கேற்ப தயாரிக்கப்பட்ட செங்கற்கள்என்று மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளன.

நூற்றைம்பது ஆண்டுகாலப் பழமை என்னும் போது, அக்காலத் திருச்சபையில் இருந்த வணக்கத்திற்குரிய புனிதர்கள், ஏஞ்சல்கள் போன்றோரின் சுரூபங்களும்; இயேசு மரி சூசை சுரூபங்களும்; அவற்றிற்காக அழகுற அலங்கரிக்கப்பட்ட பீடங்களும் இருந்திருக்கும். ஆல்டர் பக்கவாட்டு சுவர்களில் அக்காலகட்ட பெயிண்டிங்குகளும்; ஜன்னல்களில் கவின்மிகு கண்ணாடி ஓவியங்களும் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இவையெல்லாம், கால அடிப்படையில் நம் சிந்தையில் தோன்றுபவை. இவையனைத்தும் இல்லாமல் சிதைந்த நிலையில் இன்று நாம் பார்க்கும் இவ்வாலயம், உண்மையில் உருகிய மெழுகாகவே நிற்கிறது. அதனுடைய உண்மையான பிரமிப்பை நாம் கற்பனைகட்டியே பார்க்க வேண்டியுள்ளது.

தன் ஆயுளுக்குத் தீர்ப்பெழுதிய அணைக்கட்டில், இன்னும் சில காலமே இவ்வாலயத்தின் திசுக்கள் எஞ்சி இருக்கலாம். அதன்பின் இந்த இடமும் வெற்றிடமாகலாம். அடுத்த தலைமுறையினருக்கு இப்படியொரு ஆலயம் இருந்ததே தெரியாத ஒன்றாகவும் ஆகலாம். இருந்தாலும், நூறாண்டு காலம் செபமும், தவமும், விதவிதமான சடங்குக் கொண்டாட்ட நிகழ்வுகளும் கொண்டு மக்களின் வாழ்வோடு இயைந்திருந்தது; இன்று கால வெள்ளத்திலும், காட்டாற்று வெள்ளத்திலும் கரைந்து கொண்டிருப்பது – நம் கண்களைக் கலங்க வைக்கிறது!

ஓரிரு ஆண்டுகளுக்கு முன் தேசியத் தொலைக்காட்சி சானலில் சுற்றுலா பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் இதைக் காண்பித்திருக்கிறார்கள். அதன்பின்தான், சுற்றுலாப் பிரியர்களின் கவனம் இதன்மேல் திரும்பி இருக்கிறது. இந்தப் பிரபல்யத்தைத் தொடர்ந்து, பேக் அப் சுற்றுலாக்காரர்களும் தங்களின் கையேட்டில் இதை சேர்த்திருக்கிறார்கள். இப்போது, இங்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக உள்ளூர்க்காரர்கள் கூறுகிறார்கள்.

இயற்கை, எழில், அழகு, அமைதி என விரும்பும் யாவருக்கும் இவ்விடம் பிடிக்கும். காமிராக்கண் பிரியர்களுக்கு கூடுதல் இன்பம் தரும் இடம்தான்.

கழுத்தளவு நீரில் நின்றுகொண்டு கைகளைத் தலைக்குமேல் உயர்த்தி வணங்கியவாறு தியானிப்பரைப் போல, மழைக்காலத்தில் அணைநீர் மட்டத்திற்கு மேல் தன்னை உயர்த்திக் காட்டும் ஆலய முகப்பை மட்டுமே பார்க்க முடியும். அதைப் பரிசிலில் சென்று சுற்றிப் பார்ப்பதும் இதமான அழகுதான். கோடைக்காலம் என்றால் நீர் வற்றிய நிலையில் ஆலய உட்பகுதிக்குள் சென்று முழுமையும் பார்க்க முடியும்.

சுற்றுலா செல்பவர்கள் மறவாமல் செல்ல வேண்டிய இடம் செட்டிஹள்ளி.

வழித்தடம் :

By Road: The distance between Shettihalli and Bangalore is 200 km and can be easily accessed through roads. Buses are available as well which drop to Shettihalli Church.

By Train: Trains frequent on a daily basis from Yashwantpur railway station to Hassan, Karnataka, which is the nearest town, approximately 40 km from Shettihalli.

அழியும் நிலையில் காணப்படும் இவ்வாலயத்தை குறித்த தகவல்களை இணையதளத்திலிருந்து எடுத்து பதிவு செய்கின்றோம்.