330 திருத்தூதர் யாக்கோபு ஆலயம், வீரவநல்லூர்

   

திருத்தூதர் யாக்கோபு ஆலயம்.

இடம் : வீரவநல்லூர்

மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : பாளையங்கோட்டை
மறை வட்டம் : அம்பாசமுத்திரம்

நிலை : பங்குத்தளம்

கிளைகள் :
1. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், வல்லத்துநம்பி குளம்,
2. புனித சவேரியார் ஆலயம், சவேரியார் கோயில் தெரு,
3. புனித சவேரியார் ஆலயம், புதுக்குடி
4. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், மாதுடையார் குளம்.

பங்குத்தந்தை : அருட்பணி ஞானதினகரன்

குடும்பங்கள் : 200
அன்பியங்கள் : 7

ஞாயிறு காலை 07.00 மணிக்கு காலை ஜெபம், 07.15 மணிக்கு திருப்பலி.

செவ்வாய், வியாழன், சனி திருப்பலி : மாலை 07.00 மணிக்கு

வியாழன் புனித சந்தியாகப்பர் நவநாள்.

திங்கள், புதன், வெள்ளி திருப்பலி : காலை 05.30 மணிக்கு

திருவிழா : ஜூலை 25-ஆம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள்.

மண்ணின் மைந்தர்கள் :

1. Fr Msgr S. M செல்வராஜ்
2. Fr பெர்க்மான்ஸ்
3. Fr Msgr சூசைமரியான்
4. Fr ஆன்றனி (இரட்சகர் சபை)
5. Fr Msgr கிருபாகரன்
6. Fr S. L ஸ்டீபன்
7. Fr தனிஸ்லாஸ்
8. Fr ஆன்ட்ரூ (சேசு சபை)
9. Fr பெர்னார்ட்
10. Fr லாரன்ஸ்
11. Fr டென்னிஸ் OSM (ரோம் மரியானா பல்கலைக்கழக தலைவர்)
12. Fr செங்கோல் தாமஸ்
13. Fr பீட்டர் ராஜன் OMI
14. Fr ஆரோக்கிய இருதயராஜ் HGN
15. Fr எட்வர்ட் பிரான்சிஸ்
16. Fr ஜேம்ஸ் சுந்தர் ச.ச

மற்றும் 60 -க்கும் மேற்பட்ட அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள்.

வழித்தடம் : திருநெல்வேலி யிலிருந்து பாபநாசம் செல்லும் பேருந்தில் சேரன்மகாதேவி யிலிருந்து 5km அடுத்து வீரவநல்லூர்.

பத்தமடை வழியாகச் செல்லும் பாபநாசம் பேருந்துகள் அனைத்தும் வீரவநல்லூர் வந்து செல்லும்.

தனிச்சிறப்புகள் :

60 -க்கும் மேற்பட்ட அருட்சகோதரிகள், அருட்சகோதரர்களை கொண்டு உலகின் வடமேற்கு மூலையான கனடா முதல் தென்கிழக்கு பகுதியான பப்புவா நியூகினியா வரை இறைப்பணி ஆற்ற இறைபணியாளர்களை தந்த ஊர். ஆகவே இறையழைத்தலின் விளைநிலம் என வீரவநல்லூர் அழைக்கப்படுகிறது.

இவர்களில் இரண்டு அருட்சகோதரிகள் Mother General ஆக பணி செய்தனர்.
1. பேரருட்சகோதரி மேரி ஜோஸபா CIC
2. பேரருட்சகோதரி சரோஜினி SCB

வீட்டுக்கொரு இறைபணியாளரை கொண்ட ஊர்.

தொடக்கமுதல் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வீட்டுக்கொரு ஆசிரியரை உருவாக்கிய ஊர்.

4 முறைகள் இவ்வாலயத்தில் குருபட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது.

முக்கிய நிகழ்வுகள் :

1901 -ல் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.
1998 - ல் ஆலய பொன்விழா.
2001 -ல் பங்கான நூற்றாண்டு விழா.
2011 -ல் ஆலய கோபுர பொன்விழா.
2018 -ல் தூய லூர்து மாதா கெபி நூற்றாண்டுவிழா. இதன் நினைவாக அன்னை தெரசா அரங்கம், தாய்மை மாதா சொரூபம் ஸ்தாபகம்.

வரலாறு :

செந்நெல் விளையும் திருநெல்வேலி மாவட்டத்தில், ஆறோடும் சேரன்மகாதேவி வட்டத்தில் தென்றல் தவழும் தென்பொதிகை மலையோரம், பொங்கிப் பரவும் பொருநை நதிக்கரையோரம், வீரமும் தமிழும் விளையும் நல் வீரவநல்லூரில் அமைந்திருக்கிறது தூய யாக்கோபு ஆலயம்.

வீரவநல்லூருக்கு கிறிஸ்தவர்கள் வருகை:

கி.பி 1614 -ஆம் ஆண்டு போர்ச்சுகீசியர்களுக்கும் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மன்னருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் தமிழகத்தின் தென் கடற்கரைப் பகுதியில் வாழ்ந்து வந்த பரதவக் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப் பட்டனர். ஆகவே அவர்கள் குடும்பத்துடன் உள்நாட்டுப் பகுதிகளில் இடம் பெயர்ந்தனர். இதில் 14 பேர் வீரவநல்லூரில் குடிபுகுந்து முதன்முதலில் கிறிஸ்தவத்தின் வரவை உணர்த்தினர்.

வீரவநல்லூரில் குடிபுகுந்த கிறிஸ்தவர்களின் ஆன்மீகத் தேவையை கவனிக்க கயத்தாறைத் தலைமைப் பணியிடமாகக் கொண்டு பணிபுரிந்த இயேசு சபை குருக்கள் வந்து சென்றனர். பின்னர் காமநாயக்கன்பட்டியிலிருந்து இயேசு சபை குருக்கள் அவ்வப்போது வந்து பணி புரிந்தனர்.

1775- ஆம் ஆண்டு முதன்முதலாக வீரவநல்லூரில் தங்கி பணிபுரிய கோவா மிஷனை சார்ந்த குருவானவர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

1977 -ஆம் ஆண்டு கோவா மிஷனை சார்ந்த அருட்தந்தை பியஸ் (தேவபத்திநாதர்) அடிகளார் வீரவநல்லூரில் பணிபுரிந்த போது கைக்கோளர் சமுதாயத்தை சேர்ந்த ஒரு பகுதியினர் கிறிஸ்தவம் தழுவினர்.

இவ்வேளையில் அருட்தந்தை பியஸ் அவர்கள் தனது சொந்த நாடான ஸ்பெயின் நாட்டில் கலிசியா நகரில் கம்போஸ்தலா என்ற இடத்தில் புனித சந்தியாகப்பர் கல்லறை உள்ள ஆலயத்தை நினைவில் கொண்டு 1795-ஆம் ஆண்டு கோவா மிஷனின் செலவில் சிற்றாலயம் ஒன்றை கட்டினார். 1800 -ஆம் ஆண்டில் உடல்நலக்குறைவால் அருட்தந்தை மரணமடைந்த போது ஆலயத்தின் உட்பகுதியிலேயே நல்லடக்கம் செய்யப் பட்டார்.

1801 -ஆம் ஆண்டில் கிறிஸ்தவ கைக்கோளர்களுக்கு கிடைத்த நிலத்தில் போர்ச்சுகீசிய கட்டிட வடிவமைப்பில் புதிய ஆலயம் கட்டப்பட்டு 1803 -ஆம் ஆண்டில் நிறைவு பெற்றது.

வடக்கன்குளத்தை சார்ந்த சில கிறிஸ்தவ குடும்பங்கள் 1819 -இல் வீரவநல்லூருக்கு வந்து ஆலயத்தின் வடக்குப் பகுதியில் குடியேறினர்.

தொடர்ந்து 1835 முதல் பிரெஞ்சு நாட்டு இயேசு சபை குருக்களான அருட்தந்தை அலெக்ஸாந்தரே மார்ட்டின், 1839 முதல் அருட்தந்தை பெட்ரான்ட் ஆகியோர் பணிபுரிந்தனர்.

1843 -இல் பொறுப்பேற்ற அருட்தந்தை வெர்டியர் காலத்தில் தான் இங்கு நடந்து வந்த பால்ய திருமணம் (குழந்தை திருமணம்) தடை செய்யப்பட்டது.

1855 முதல் அருட்தந்தை ஜூபில்லஸ், பணிபுரிந்தார். 1856 -இல் இறந்த போது ஆலயத்தின் உள்ளே அடக்கம் செய்யப்பட்டார்.

1891 -இல் அருட்பணி ஜான் அகுஸ்து என்பவர் திரட்டிய புள்ளி விவரத்தில் வீரவநல்லூர் பங்கில் 19 கிளைப் பங்குகள் இருந்ததாக குறிப்பிடப் படுகிறது.

1896 -இல் அருட்பணி மரியலூயிஸ் பணியாற்றினார். இவரைத் தொடர்ந்து மறை மாவட்ட குருக்களான அருட்தந்தையர் கபிரியேல், ஞானப்பிரகாசம் ஆகியோர் பணி செய்தனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் காமநாயக்கன்பட்டி பங்குத்தளமாகவும், 1845 முதல் 1901 வரை சேர்ந்தமரம் பங்குத்தளமாகவும் இருந்து வந்திருக்கிறது.

1900 -ஆம் ஆண்டில் வீரவநல்லூரில் தொடக்கப்பள்ளி ஒன்று உருவாகியது.

1901-ஆம் ஆண்டு வீரவநல்லூர் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை மரிய லூயிஸ் அவர்கள் பொறுப்பேற்றார்.

1906 -இல் அருட்பணி கபிரியேல்நாதர் பொறுப்பேற்றார். இந்த ஆண்டில் சகோதரி வின்சென்ட் அவர்கள் வீரவநல்லூரின் முதல் அருட்சகோதரி ஆனார். இறை அழைத்தலின் விளை நிலத்தில் முதற் கனி இவரேயாகும்.

1912 -இல் ஆண்களுக்கான தேவ நற்கருணை சபை உருவாக்கப் பட்டது. தென்காசி தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. 1918 -இல் தூய லூர்து அன்னை கெபி கட்டப்பட்டது.

1919 முதல் திருச்சி மறை மாவட்டத்தின் கீழ் செயல்படத் துவங்கியது.

1925 -இல் பொறுப்பேற்ற அருட்தந்தை குத்தூரியே சே. ச காலத்தில் வெளிநாட்டிலிருந்து ஆலய மணி கொண்டு வரப்பட்டது.
மணமாகாத இளைஞர்களுக்கு கட்டாய மறைக்கல்வி அளித்தார். அருட்சகோதரர் பிரான்சிஸ் அவர்கள் திருஇருதய சபையில் சேர்ந்து வீரவநல்லூரின் முதல் ஆண் துறவியானார்.

1938 முதல் மதுரை மறை மாவட்டத்தின் கீழ் வீரவநல்லூர் செயல்படத் துவங்கியது.

1943 -இல் அருட்பணி மரியநாதர் இரணாடாவது முறையாக போறுப்பேற்றார். 1945-இல் அமல அன்னை கன்னியர் இல்லம் உருவானது. தொடக்கப்பள்ளி நடுநிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது.

புதிய ஆலயம் :

1946 -இல் பழைய ஆலயத்தை இடித்து புதிய ஆலயம் ஆரம்பிக்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 1948-இல், அப்போதைய தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மேதகு ரோச் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 1997-98 இல் ஆலயத்தின் பொன்விழா கொண்டாடப் பட்டது.

1958-1969 காலகட்டத்தில் பணிபுரிந்த அருட்தந்தை T. A மிக்கேல் அடிகளார் அவர்கள் வீரவநல்லூர் நயினார் காலனி மற்றும் வல்லத்து நம்பி குளத்தை சார்ந்த பலரை கிறிஸ்தவம் தழுவச் செய்து திருமுழுக்கு கொடுத்தார்.

1961-இல் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட உயரமான கோபுரம் கட்டப்பட்டது.

பங்கின் முதல் குருவாக 24-03-1962 -அன்று பேரருட்தந்தை S. M செல்வராஜ் அவர்கள் திருநிலைப் படுத்தப்பட்டார்.

அருட்தந்தை T. A மிக்கேல் அடிகளார் காலத்தில் அம்பாசமுத்திரத்தில் எழில்மிகு பெரிய ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.
மாஞ்சோலையில் ஒரு சிற்றாலயமும் கட்டப்பட்டது.

கல்லிடைக்குறிச்சி புனித அந்தோணியார் ஆலயம் திருயாத்திரைத் தலமாக வளர்ச்சி பெற்றது.

அருட்தந்தை மரிய தம்புராசு அவர்கள் பணிக்காலத்தில் (1969) ஆன்மீகத்தில் மக்களை எழுச்சியடையச் செய்தார். தலத்திருச்சபைக்கு சொந்தமான சந்தை வளாகத்தை சுற்றிலும் மதிற்சுவர் கட்டினார்.
கல்லிடைக்குறிச்சி புனித அந்தோணியார் திருத்தலத்தை உலகறியச் செய்தார்.

1973 முதல் பாளையங்கோட்டை மறை மாவட்டம் உருவானது முதல் வீரவநல்லூர் அதன் கீழ் செயல்பட்டது.

1983 -1987 வரை பணிபுரிந்த அருட்தந்தை S. L. A ஜோசப் ராஜ் காலத்தில் மின்னிணைப்புகளை புதுப்பித்து ஆலயத்தை புதுப் பொலிவு பெறச் செய்தார். வல்லத்து நம்பி குளத்திலுள்ள ஆலயம் விரிவுபடுத்தப் பட்டது.

1991-92 வரை பணிபுரிந்த அருட்தந்தை S. அருள்ராஜ் பணிக்காலத்தில் ஊத்து ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

1994 -இல் பொறுப்பேற ற அருட்தந்தை அமிர்தராசு சுந்தர் அவர்கள் பணிக்காலத்தில் ஆலய கோபுரங்கள் வண்ணம் பூசப்பட்டு ஆலய பொன்விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.

இவ்வாறு 350 ஆண்டுகளைக் கடந்து நீண்ட வரலாற்றைக் கொண்ட வீரவநல்லூர் தலத்திருச்சபை பல்வேறு நிலைகளிலும் சிறந்து விளங்குகின்றது.