698 புனித தோமையார் ஆலயம், தாமஸ்புரம், அவிநாசி

       

புனித தோமையார் ஆலயம்

இடம் : தாமஸ்புரம், அவிநாசி

மாவட்டம் : திருப்பூர்

மறைமாவட்டம் : கோவை

மறைவட்டம் : கருமத்தம்பட்டி

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்கு : புனித மோட்ச இராக்கினி அன்னை ஆலயம், சிலுவைபுரம்

பங்குத்தந்தை : அருட்பணி. A.T.S. கென்னடி

குடும்பங்கள் : 353 (கிளைப்பங்கு : 113)

அன்பியங்கள் : 13 (கிளைப்பங்கு : 6)

திருவழிபாட்டு நேரங்கள்: 

ஞாயிறு : காலை 06.30 மணிக்கு திருப்பலி (சிலுவைபுரம்)

காலை 08.30 மணிக்கு அவிநாசியில் ‌திருப்பலி

திங்கள், புதன், வியாழன், சனி : காலை 06.30 மணிக்கு திருப்பலி

செவ்வாய் : மாலை 06.30 மணிக்கு திருப்பலி, இறைஇரக்க நவநாள் நடைபெறும்.

புதன் : மாலை 07.00 மணிக்கு சிலுவைபுரம் ஆலயத்தில் திருப்பலி

வெள்ளி : மாலை 06.30 மணிக்கு திருப்பலி, நற்கருணை ஆசீர், புனித தோமையார் நவநாள் நடைபெறும்.

மாதத்தின் முதல் திங்கள் : மாலை 06.30 மணிக்கு கல்லறையில் திருப்பலி

மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பரிசுத்தரின் கூடாரம் என்ற சிறப்பு நற்கருணை புகழ்ச்சி வழிபாடு நடைபெறும்

திருவிழா : ஜூலை மாதம் இரண்டாம் வாரம் புனித தோமையார் திருவிழா

மண்ணின் இறையழைத்தல்கள் : 

1. அருட்பணி. அருளப்பன் ஜெயராஜ், HGN

2. அருட்பணி. ஜான்பால், OMI

3. சகோதரர். இயான் மேரியோ, கோவை மறைமாவட்டம்

4. சகோதரர். நிஷல் ஆண்டனி, கோவை மறைமாவட்டம்

5. அருட்சகோதரி. பெட்ரோனிலா, FSPM

6. அருட்சகோதரி. ஹெலன் ஆண்டனி, FSPM

7. அருட்சகோதரி. டோனா கிரேஸ் ஜெயசீலி, FSPM

8. அருட்சகோதரி. எல்மா, FSPM

9. அருட்சகோதரி. ஜெயந்தி மைக்கேல், CTC

வழித்தடம் : அவிநாசியில் இருந்து சேவூர் செல்லும் சாலையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

இறங்குமிடம் : சிந்தாமணி பஸ் ஸ்டாப்

Location Map : 

Saint Thomas Church

Avinashi - Sevur - Puliampatty - Sathy Rd, Avinashi, Tamilnadu 641654

https://maps.google.com/?cid=17633971223806443333

ஆலய வரலாறு

அவிநாசி புகழ்பெற்ற கொங்குநாட்டுப் பகுதி ஆகும்.

1941-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமுழுக்கு பெற்ற அவிநாசியில் சுற்றியிருந்த மக்களைக் கொண்டு அவிநாசி பங்கு உருவாக்கப்பட்டது. 1942-ஆம் ஆண்டு 18 குடும்பங்களுடன் இப்பங்கு ஆரம்பிக்கப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. S. அமிர்தம் பணியாற்றினார்.  தொடக்கத்தில் வாடகை இல்லத்தில் இருந்து பணிசெய்து வந்த அருட்தந்தை அவர்களால் 13.07.1942 அன்று பத்தரை ஏக்கர் நிலம் அப்போதைய கோவை மறைமாவட்ட பொருளாளர் அருட்பணி. சவரிமுத்து அடிகளார் (முன்னாள் மறைமாவட்ட ஆயர்) உதவியுடன் வாங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் இங்கு பணியாற்றிய அருட்தந்தையர்கள் பல கி.மீ தூரம் மிதிவண்டிகளில் சென்று மறைபரப்பு செய்து வந்தனர்.

பங்கின் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்பணி. அமிர்தம் அடிகளாரின் முயற்சியால் அவிநாசி பகுதியில் புனித தோமையாரை பாதுகாவலராகக் கொண்டு புதிய ஆலயம் கட்டப்பட்டு அப்போதைய கோவை மறைமாவட்ட ஆயர் மேதகு. உபகாரசாமி அவர்களால் 06.06.1943 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

அருட்பணி. A. சூசை (1944-1949) அவர்களின் பணிக்காலத்தில் அவிநாசி பகுதியில் சுற்றியுள்ள தண்டுக்காரன்பாளையம், வாழையபாளையம், ஆலந்தூர், குட்டைப்புதூர் ஆகிய பகுதிகளில் மக்களுக்கு திருமுழுக்கு கொடுத்தார். அப்போது வாங்கிய இடத்தில் 1943 ஆம் ஆண்டில் இப்போதுள்ள அற்புத நீரூற்றுகளின் புனித லூர்து அன்னை திருத்தலம் கட்டப்பட்டது. மேலும், அருட்பணி. A. சூசை அவர்களின் முயற்சியால் அவிநாசியில் ஆரம்பப்பள்ளி தொடங்கப்பட்டது. 

அருட்பணி. S. M. ராயப்பன் அவர்களின் முயற்சியால் இப்பள்ளி நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

1960 -ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியானது FMM அருட்சகோதரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அருட்சகோதரிகளின் முயற்சியால் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

1950 -ம் ஆண்டு FMM அருட்சகோதரிகள் அன்னை வேளாங்கண்ணி கன்னியர் மடத்தை தொடங்கி சிறிதளவில் அஸ்சம்ஸன் மருத்துவமனையில் மருத்துவ பணி செய்து வந்தனர். பிறகு, 1960ம் ஆண்டு புதிய கன்னியர் மடம் கட்டப்பட்டு, மருத்துவமனையிலும் பல மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு மருத்துவ பணிகள் செய்து வந்தனர்.

அருட்பணி. P. இருதயசாமி (1961-1964) அவர்களின் முயற்சியால் புதிதாக கிறிஸ்துவர்களான மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டது. மேலும், மேதகு ஆயர் சவரிமுத்து அவர்களால் புதிதாக கிறிஸ்துவர்களான 40 குடும்பங்களுக்கு இலவசமாக நடுவச்சேரி அருகில் உள்ள சிலுவைபுரத்தில் வீடுகள் கட்டித் தரப்பட்டது.

அருட்பணி. ஜோசப் பிரகாசம் அவர்களின் முயற்சியால் பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டு 1988 ஆம் ஆண்டில் மேதகு ஆயர் அம்புரோஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

மறைந்த தந்தை அருட்பணி. மரிய அல்போன்ஸ் அவர்களின் முயற்சியால் ஆலயத்தின் முன்புறம் வேளாங்கண்ணி அன்னைக்கு கெபி கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

அருட்பணி. பங்கிராஸ் அடிகளாரின் முயற்சியாலும், நன்கொடையாளர்களின் உதவியாலும் புதிய ஆலயம் கட்டப்பட்டு 02.07.1994 அன்று கோவை மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. அம்புரோஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

புதிய ஆலயம் கட்டும்போது திருப்பலி நிறைவேற்ற அருட்பணி. பங்கிராஸ் அடிகளாரின் முயற்சியால் பழைய ஆலயத்தின் பொருட்களைக் கொண்டு ஒரு கூடம் அமைக்கப்பட்டது. தற்போது அந்த கூடம் திருமண அரங்கமாக செயல்பட்டு வருகிறது. இவருடைய பணிக்காலத்தில் லூர்துபுரம் லூர்து அன்னை ஆலயமானது அவிநாசியின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்தது. அப்போது லூர்து அன்னை தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

1995 ஆம் ஆண்டு அருட்பணி. கனகராஜ் அவர்களின் முயற்சியால் ஆலயத்திற்கென புதிதாக ஜெனரேட்டர் வாங்கப்பட்டது. ஆலய முன்புறத்தில் உள்ள மண்டபம் கட்டப்பட்டது. முதலில் வெறும் மண்டபம் மட்டுமே இருந்த நிலையில், பின்னாளில் சிமெண்ட் சீட் கூரை அமைக்கப்பட்டது. மேலும், அருட்பணி. கனகராஜ் அவர்களின் முயற்சியால் லெசிம் அமைப்பின் மூலம் மறைக்கல்வி குழந்தைகளுக்கு பல உதவிகள் செய்யப்பட்டது. 50 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாதிருந்த தாமஸ் லைன் பகுதி மக்களுக்கு, மின்சார வசதி ஏற்படுத்தி தரப்பட்டது. 

அருட்பணி. S. ஜோசப் டேவிட் அவர்களின் முயற்சியால் தாமஸ் லைன் மக்களுக்கு கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் மறைமாவட்ட முதன்மை குரு பேரருட்பணி. குழந்தைராஜ் அவர்களின் முயற்சியால் தற்போது உள்ள பங்குத்தந்தை இல்லம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அப்போது மறைமாவட்ட பொருளாளர் தந்தையாக இருந்த அருட்பணி. கனகராஜ் அவர்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார்.

அருட்பணி. குழந்தைராஜ் அவர்களின் பணிக்காலத்தில் கல்லறை தோட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டது.

அருட்பணி. புஷ்பநாதன் அவர்களின் பணிக்காலத்தில் ஆலய திருப்பலி பீடம் புதுப்பிக்கப்பட்டு, ஆலயத்தில் புனித சூசையப்பர், பூண்டி மாதா சுரூபங்கள் தாங்கிய கெபிகள் கட்டப்பட்டு மேதகு ஆயர். தாமஸ் அக்குவினாஸ் அவர்களால் 05.01.2014 அன்று அர்ச்சிக்கப்பட்டது. அந்நாளில், குழந்தைகளுக்கு புதுநன்மை, உறுதிப்பூசுதல் ஆகிய திருவருட்சாதனங்கள் வழங்கப்பட்டது. பங்குத்தந்தை இல்லம் இவரது காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது. மேலும், ஆலயத்தைச்சுற்றி பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது. 

அருட்பணி. புஷ்பநாதன் அவர்களின் முயற்சியால் சிலுவைபுரம் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, 26.04.2014 அன்று கோவை மறைமாவட்ட ஆயர் மேதகு. தாமஸ் அக்குவினாஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. மேலும், அவிநாசியில் அன்னை வேளாங்கண்ணி மாதா கெபி புதுப்பிக்கப்பட்டது. குழந்தை இயேசு கெபி கட்டப்பட்டு, வியாழன் தோறும் குழந்தை இயேசு நவநாள் ஆரம்பிக்கப்பட்டது. இவரது காலத்தில் கோவா, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு திருயாத்திரை அழைத்துச் செல்லப்பட்டது. 

பிறகு, பொறுப்பேற்ற அருட்பணி. ஜேசுதாஸ் அவர்களின் முயற்சியால் பாடல் குழுவிற்கு புத்துயிர் அளிக்கப்பட்டது. ஆலயத்தில் ஒலி அமைப்பு ஒரு இலட்சம் செலவில் செய்யப்பட்டது. ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. மேலும், கிளைப்பங்கான சிலுவைபுரத்தில் குருக்களுக்கான இரு ஓய்வு அறைகள் கட்டப்பட்டது. ஆலயத்திற்கு வெளிப்புறத்தில் திருப்பலி மற்றும் மற்ற விழாக்களுக்காக மேடை அமைக்கப்பட்டது.

 தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. ATS. கென்னடி அவர்களின் முயற்சியால் ஆலயத்தின் வலப்புறம் மிகப்பெரிய அளவில் 6000 சதுர அடியில் ரூபாய் 10 இலட்சத்திற்கு கூடம் அமைக்கப்பட்டது. மேலும், பக்தர்களுக்கு கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டது. ஆலயத்தில் திருமணம் போன்ற நிகழ்வுகள் நடைபெற பழைய ஆலய கூடம் சீரமைக்கப்பட்டது. இப்பெரும் முயற்சியின் பலனாக, தவக்காலத்தில் பல்வேறு பங்கிலிருந்து இறைமக்கள் மாலையணிந்து புனித தோமையாரை தரிசித்து ஆசிபெற்று செல்கின்றனர். எதிர்கால வளர்ச்சிப் பணியாக தோமையார் மலை கட்டப்பட உள்ளது. விழாக்காலங்களில் சமையல் செய்ய வசதியாக சமையற்கூடம் கட்டப்பட்டது. மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு கல்லறை தோட்டத்தில் திருப்பலி நிறைவேற்ற கூடம் அமைக்கப்பட்டு, புதிதாக EB வசதிகள், ஒலி-ஒளி வசதிகள், தண்ணீர் வசதிகள் செய்யப்பட்டு, திருப்பலிக்கு தேவையான பொருட்கள் வாங்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் முதல் திங்களன்று திருப்பலி நிறைவேற்றப் படுகிறது. பங்கின் அனைத்து நிகழ்வுகளையும் பங்குத்தந்தையோடு இணைந்து அன்பிய பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

அருட்பணி. ATS. கென்னடி அவர்கள் பொறுப்பேற்றவுடன் 16.06.2019 அன்று மறைக்கல்வி தொடக்க விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் மறைக்கல்வி மாணவர்களுக்கு Points Card வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பல மாணவ மாணவிகள் மறைக்கல்வி பயிலும் ஆர்வம் அதிகரிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மறைக்கல்விக்கு தொடக்க விழா கொண்டாடப்படுகிறது.

ஜூன் மாதத்தில் நற்கருணை திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தவக்காலத்தில் பல்வேறு செயல்பாடுகள் செய்யப்பட்டு மக்களை ஆன்மிக வழியில் வழி நடத்தப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு, இளைஞர் இளம்பெண்களுக்கு, பொதுமக்களுக்கு சிறப்பு தியானம், பாதை யாத்திரை, கருமத்தம்பட்டி  மறை வட்டத்தில் 14 ஆலயங்களில் சிலுவைப்பாதை செய்ய வாகனயாத்திரை, மறைக்கல்வி குழந்தைகள் ஒலி ஒளி நாடகம் போன்றவை நடத்தப்பட்டு வருகிறது.

பங்கில் அன்னை தெரேசா சேவை குழு மூலமாக பங்கு மக்களுக்கு பல உதவிகள் செய்யப்படுகின்றது. உணவுக் குழு சார்பாக சிறப்பு நாட்களில் உணவுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றது. மரியாயின் சேனை மூலமாக பங்கில் ஆலயத் தூய்மை, மக்களை சந்தித்தல் போன்ற பணிகள் செய்யப்படுகின்றது.

புனித தோமையார் மலர் அறிமுகப்படுத்தப்பட்டு பங்கில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் வெளியிடப்படுகின்றது. கிளைப் பங்கில் மறைக்கல்வி குழந்தைகள் மாலை நேரத்தில் ஜெபமாலை ஜெபிக்க உற்சாகப்படுத்தப் படுகிறார்கள்.

பங்கு மக்கள் அனைவரும் ஆலயத்திற்கு வரும்போது திருவிவிலியம் கொண்டுவர உற்சாகப்படுத்தப் படுகின்றனர். திருவிவிலியம் கொண்டுவர மக்கள் அனைவருக்கும் விவிலிய பை வழங்கப்படுகின்றது.

தாமஸ் லைன் பகுதியில் புனித தோமையார் கெபி கட்டப்பட்டு, இறைமக்கள் ஜெபிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கழிவுநீர் செல்ல 5 லட்சம் மதிப்பில் குழாய்கள் அமைக்கப்பட்டது. 

தவக்கால உண்டியல் காணிக்கை பெற்று பங்கில் வறுமையில் உள்ள குழந்தைகளின் படிப்பு செலவுக்காக வழங்கப்படுகின்றது. கிறிஸ்துமஸ் காலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் செய்யப்பட்டு அனைத்து அன்பியத்திற்கும்  பரிசுகள் வழங்கப்படுகின்றது, திருக்குடும்பத் திருநாள் அன்று திருமணமாகி 20 ஆண்டுகள் ஆனவர்கள் சிறப்பு செய்யப்படுவர்.

பங்கில் செயல்படும் பக்தசபைகள்: 

1. அன்பிய பொறுப்பாளர்கள்

2. அன்னை தெரசா சேவைக் குழு

3. மரியாயின் சேனை

4. உணவுக் குழு

5. இளைஞர் இளம்பெண்கள் குழு

6. மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் குழு

7. பீடப்பணியாளர்கள் குழு

பங்கில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை: 

1. புனித தோமையார் ஆரம்பப்பள்ளி

2. புனித தோமையார் மேல்நிலைப்பள்ளி (FMM அருட்சகோதரிகள் நிர்வாகம்)

3. அஸ்சம்ஸன் மருத்துவமனை

பங்கில் உள்ள துறவற சபை இல்லங்கள்: 

1. அன்னை வேளாங்கண்ணி அருட்சகோதரிகள் இல்லம் (FMM Sisters)

2. புனித காணிக்கை அன்னை அருட்சகோதரிகள் இல்லம், சேவூர்

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் : 

1. அருட்பணி. S. அமிர்தம் (1942)

2. அருட்பணி. A. சூசை

3. அருட்பணி. S. M. இராயப்பன்

4. அருட்பணி. A. முத்துசாமி

5. அருட்பணி. M. இக்னேஷியஸ் இருதயம்

6. அருட்பணி. S. M. அமலதாஸ்

7. அருட்பணி. மைக்கேல்

8. அருட்பணி. P. இருதயசாமி

9. அருட்பணி. S. சதானந்தம்

10. அருட்பணி. A. லாசர் அற்புதம்

11. அருட்பணி. T. C. அடைக்கலம்

12. அருட்பணி. ஜான் சேவியர்

13. அருட்பணி. பீட்டர் அடைக்கலம்

14. அருட்பணி. M. தாமஸ்

15. அருட்பணி. L. அந்தோணிசாமி

16. அருட்பணி. A. J. வில்லியம்

17. அருட்பணி. ஜோசப் பிரகாசம்

18. அருட்பணி. மரிய அல்போன்ஸ்

19. அருட்பணி. பங்கிராஸ் ஜோசப்

20. அருட்பணி. கனகராஜ்

21. அருட்பணி. D. பிரான்சிஸ் ரொசாரியோ

22. அருட்பணி. S. ஜோசப் டேவிட்

23. அருட்பணி. A. குழந்தைராஜ்

24. அருட்பணி. புஷ்பநாதன்

25. அருட்பணி. ஜேசுதாஸ்

26. அருட்பணி. A.T.S. கென்னடி (2019- தற்போது வரை...)

Church YouTube Channel : St. Thomas Church, Avinashi

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. ATS. கென்னடி அவர்கள்