தூய பேதுரு பவுல் ஆலயம்
இடம் : கடியபட்டணம்
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்
மறை வட்டம் : முட்டம்
நிலை : பங்குத்தளம்
பங்கின் குருசடிகள் மற்றும் ஆலயம்
1. தூய அந்தோணியார் ஆலயம்
2. தூய அந்தோனியார் குருசடி 3
3. தூய தோமையார் குருசடி
4. தூய பாத்திமா மாதா குருசடி
5. கிறிஸ்து ராஜா குருசடி
6. அன்னை தெரசா குருசடி
7. சிலுவைநாதர் குருசடி
பங்குத்தந்தை : அருட்பணி. பபியான்ஸ்
குடும்பங்கள் : 2210
அன்பியங்கள் : 76
திருவழிபாட்டு நேரங்கள் :
ஞாயிறு திருப்பலி : காலை 05.00 மணி, காலை 07.00 மணி மற்றும் மாலை 04.15 மணி.
காலை 05.30 மணிக்கு (தூய அந்தோணியார் ஆலயத்தில்)
திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் திருப்பலி : காலை 06.30 மணிக்கும், புதன் கிழமைகளில் மாலை 05.30 மணிக்கு சகாயமாதா நவநாள், திருப்பலியும், மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06.00 மணிக்கு நற்கருணை ஆசீரும் வழக்கமாக நடைபெற்று வருவனவாகும்.
திருவிழாக்கள் :
1. பங்கு ஆலயம் :ஜுன் 20 ம் தேதி முதல் 29 ம் தேதி வரையிலான பத்து நாட்கள்.
2. தூய அந்தோணியார் ஆலயம் : ஜனவரி மாதம் இறுதியில் தொடங்கி பெப்ரவரி மாதம் முதல் ஞாயிறு நிறைவடையும் வகையில் 13 நாட்கள்.
3. தூய தோமையார் குருசடி : ஜூலை மாதத்தில்.
4. தூய பாத்திமா மாதா குருசடி : அக்டோபர் மாதத்தில்.
5. கிறிஸ்து ராஜா குருசடி : நவம்பர் மாதத்தில்.
மண்ணின் மைந்தர்கள் :
1. Fr. P. X. ஜோசபாத் மரியா
2. Fr. B. டயனீஷியஸ்
3. Fr. L. மாசில்லாமணி
4. Fr. S. மரிய நசரேன்
5. Fr. G அம்புறோஸ் மரியா
6. Fr. S. ஜோசப் பெனடிக்ட்
7. Fr. L. ஆன்றனி அல்காந்தர்
8. Fr. S. ஜோசப் ஆன்றனி
9. Fr. M. மரிய ஸ்டீபன்
10. Fr. M. ஆல்பர்ட்
11. Fr. C. பீட்டர்
12. Fr. J. ஜாண் ததேயுஸ்
13. Fr. T. ஜாண் ரூபஸ்
14. Fr. S. பீட்டர் பவுல்
15. Fr. S. பெலிக்ஸ் அலெக்சாண்டர்
16. Fr. S. நோயல்ராஸ்
17. Fr. A. பேட்ரிக் ஜெயராஜ்
18. Fr. E. எப்ரேம்
19. Fr. C. மரிய எட்வின் ஜெனிஸ்
20. Fr. J. அர்னால்டு மகேஷ்
21. Fr. S. லாரன்ஸ் போஸ்
22. Fr. B. ஆரோக்கிய சுனில்
23. Fr. C. ஜேசு ஜேனிட்டோ
24. Fr. M. அமல்ராஜ்
25. Fr. S. வினோ
26. Fr. S. ஜெயசீலன்
27. Fr. விக்டர் ஜெனரல்
28. Fr. இன்பென்ட் பெஜின்
29. Fr. ஆல்பர்ட் நிஷாந்த்
30. Fr. ஜார்ஜ் நவின்
31. Fr. ஜெனிஷ்
32. Fr. பிரவின்
33. Fr. பர்ணபாஸ்
34. Fr. சகாய சந்தோஷ்
35. Fr. அலெக்ஸ் அர்பின்
36. Fr. ஆரோக்கிய ஜெரால்டு
37. Fr. ஆன்றோ அருள் லிவிங்ஸ்டன்
38. Fr. ஜாண் பெலிக்ஸ்
39. Fr. ஆரோக்கிய சுதன்
40. Fr. அருள் கிளாரட் ரினாயஸ்
41. Fr. பிளோரன்ஸ் வின்சென்ட்
42. Fr. மரிய ஆரோன் தாஸ்
43. Fr. ஆன்றனி ராஜ்
44. Fr. மெரி பென்சர்
45. Fr. ஜாண் ததேயுஸ்
46. Fr. ஜோசப் அனீஷ் குமார்
47. Fr. அமல அஸ்வின்.
48. Fr. சகாய ரூபின்சன்
49. Fr. ரெய்மண்ட்
50. Fr. ஆன்றனி பிரபு
மற்றும் 400 க்கும் மேற்பட்ட அருட்சகோதரிகளை மண்ணின் இறையழைத்தலாகக் கொண்டது கடியபட்டணம் பங்கு.
பேருந்துகள் : நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து 14D.
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து 14, 14A, 14B, 14C, 14F
மார்த்தாண்டத்திலிருந்து 46C.
தக்கலை 47A, 47C
குளச்சல் 5C, 302.
Location map : https://maps.app.goo.gl/Z7nEkf1jMaAqAqGo7
வரலாறு :
வரலாறு என்பது நாடு, இனம், மக்கள், சமூகம், நிறுவனம் (மதம், அரசு), தனிமனிதர் ஆகிய பல்வேறு நிலைகளில் ஏதாவது ஒன்றை மையமாக வைத்து எழுதப்படுகிறது.
கடியபட்டணம் பங்கின் வரலாறு என்பது இங்கு வாழும் முக்குவர் என்னும் மீனவர் சமூகத்தையும், இங்கு நிறுவப்பட்ட கத்தோலிக்க திருச்சபையின் நிறுவன அமைப்பான பங்கையும் மையமாகக் கொண்டுள்ளது. கடியபட்டணம் குறித்த தகவல்கள், தஞ்சை பெரிய கோயிலை கட்டிய இராஜராஜச் சோழ மன்னனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கல்வெட்டுகளிலும், திருநந்திக்கரை சமண குடவரைக் கோயில்களிலும் இவ்வூரை குறித்த வரலாற்று சான்றுகள் காணக் கிடைக்கின்றன.
இந்த மக்கள் எவ்வாறு கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்டார்கள். அது அவர்களின் வாழ்விலும், சமூகத்திலும் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியது என்பதை எடுத்துக் கூறுவதே இப் பதிவின் நோக்கம். இந்த நோக்கத்தை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்கு முந்தைய அவர்களது வாழ்வின் சமூக, சமய, பண்பாட்டுக் கூறுகளை ஓரளவு அறிந்து கொள்வது அவசியமாகும்.
இந்தியத் திருநாட்டின் தென்கோடியில் கடல்கொண்ட லெமூரியக் கண்டத்தில் எஞ்சியிருக்கும் கன்னியாகுமரியின் மேற்குப் பகுதியில் அரபிக் கடலோரத்தில், வள்ளியாறு ஆழியோடு சங்கமிக்கும் இடத்தில், பாறைகளை அரணாகக் கொண்டு பரந்து கிடக்கும் நிலப்பரப்பு தான் கடியபட்டணம் என்னும் வரலாற்று சிறப்புமிக்க பேரூர்.
இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சியான வரலாற்றை தன்னகத்தே கொண்ட பேரூர். காலத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வூர் வரலாற்றை முற்காலம், இடைக்காலம், தற்காலம் என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. முற்காலம் (கி.பி 1010 க்கு முந்தைய காலம்):
சங்க இலக்கியத்தில் கூறுவது போல இம்மக்கள் கடலும் அதைச் சார்ந்த நெய்தல் நிலத்திலும் வாழ்ந்தவர்கள். கி.மு 200 முதல் கி.பி 200 வரை நெய்தல் நிலத்தில் வாழ்ந்த இம்மக்கள் வருணனை கடவுளாக வழிபட்டவர்கள். தம் புஜபலத்தாலும், உளி எறிதலாலும் சுறா மீனைப் பிடித்து, அதன் கொம்புகளை மணல் மேடான தேரியில் நட்டு இயற்கை வழிபாடு நடத்தியவர்கள்.
கி.பி 400 முதல் சமண சமயம் குமரிப் பகுதியில் பரவலாயிற்று. கி.பி 800 ம் ஆண்டளவில் சமண சமயம் மிகவும் வளர்ச்சி கண்டிருந்தது. இக்கால கட்டத்தில் திருநந்திக்கரை குடைவரைக் கோயிலை வடிவமைத்த சமண முனிவர்கள் "ஆய்" அரசனிடம் அனுமதி பெற்று, கடியபட்டணத்தில் வாரியாங்கல்லில் குடைவரைக் கோயிலை வடிவமைக்க முற்பட்டு, அந்தப் பாறையில் ஒரு வாசலை செதுக்கிய நிலையில், ஏற்பட்ட தடையால் கோயில் அமைப்பது நின்று போனது. இந்த பாறையைத் தான் மக்கள் கதவடச்சான் பாறை என்று அழைக்கின்றனர்.
கி.பி 1010 ல் பொறிக்கப்பட்ட இராஜராஜச் சோழனின் கல்வெட்டு இப்பகுதியில் அதிக அளவில் சமணர்களும், வைணவர்களும் வாழ்ந்ததாக குறிப்பிடுகிறது. ஆகவே கல்வெட்டு கூறுவதை வைத்து பார்க்கும் போது தென்னாட்டு குறுநாட்டு கடியபட்டணத்தின் கடலோரத்தில் வாழ்ந்த முக்குவர் இன மீனவ மக்கள் சமணர்களாக இருக்கும் வாய்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
கடியபட்டணத்தின் தொன்மை தலப்பெயர் கடியலூர் என்பதாகும். கடியல் என்றால் 'மரக்கலத்தின் குறுக்கு மரம்' எனப்பொருள். கட்டுமரம் செய்வதற்கு தனிமரமும், கடியல் செய்வதற்கு தனிமரமும் பயன்படுத்தப் படுகின்றன. வேளிமலையிலிருந்து ஓடங்கள் செய்வதற்கான இலவு, முருக்கு, சில்லை (தீக்குச்சி மரம்) போன்ற மரங்களும் கடியல் செய்வதற்கான கருங்காலி, ஆயினி போன்ற மரங்களும் வள்ளியாறு வழியாக கடியலூருக்கு கொண்டுவரப்பட்டு; இவற்றைக் கொண்டு ஓடங்கள், படகுகள், கட்டுமரங்கள் மற்றும் கடியல்கள் போன்றவை செய்து மீன்பிடித் தொழிலிலும், வியாபாரத்திலும் சிறந்து விளங்கியதுடன்
ஓடத்தை வனையும் (கட்டுகிற) "ஓடாவி" என்னும் தச்சர்கள் இந்த ஊரில் சிறந்தவர்களாக விளங்கினர். பல ஊர் மீனவர்கள் இங்கு வந்து கடியல்கள் வாங்கிச் சென்றனர். எனவே இவ்வூர் கடியலூர் எனப்பட்டது. பொதுவாக துறைமுகப் பகுதிகள் பட்டினம் என அழைக்கப் பட்டன. (இத்துடன் வள்ளியாற்றின் வழியாக சமவெளிகளில் விளைந்த விளைபொருட்கள் எல்லாம் கடியலூர் கொண்டு வரப்பட்டு இங்கேயே வாணிபம் சிறப்பாக நடந்தது.)
கடியலூர் பாய்மரக்கப்பல்கள் பெருவாரியாக நங்கூரம் பாய்ச்சும் துறைமுக, கழிமுகப் பகுதியானதால் கடியலூர் 'கடியல்பட்டினம்' ஆனது.
அதன்பின் இராஜராஜச் சோழன் கல்வெட்டில் கடியலூர் என்பது உள்நாட்டுப் பகுதிகள் உள்ளடங்கிய குறுநாட்டு "கடியபட்டணம்" எனப் பெயர் பெற்றது.
கடியபட்டணத்திற்கு நேர் தெற்கே இரண்டரை கடல்மைல் ஆழத்தில் சுமார் 20 மீட்டர் உயரம் கொண்ட ஆடு மேய்ச்சான் பாறை தான் கடல்கோளால் கொள்ளப்பட்ட குமரிக்கண்டம் அழிவதற்கு முன்பு, குமரியின் தென்முனையாக கடியலூர் (கடியபட்டணம்) இருந்திருக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாக உள்ளது.
இந்த பரந்துபட்ட கடலையும் (பரவை), கடலின் அலையையும் அடக்கி ஆள்கின்ற அரையன் திறன் கொண்ட மீனவனின் வாழ்க்கைக்கு ஆதாரமாகக் கடல் விளங்குகிறது.
காற்றடிக்கும் திசைக்கு எதிராக பாய்மரத்தை செலுத்தி மீன்பிடிக்கும் ஆற்றல் பெற்று மீன்பிடித்து வாழ்பவர்கள் தான் மீனவர்கள். கடலில் முங்கி தொழில் செய்வதால் 'முங்குவர்' எனவும், பின்னர் அப்பெயர் மருவி 'முக்குவர்' என அழைக்கப் பட்டனர்.
2. இடைக்காலம் (கி.பி 1010 முதல் 1543 வரை) :
இராஜராஜச் சோழன் வட இந்திய ஆரிய இந்து சமயத்தை தெற்கில் பரப்பியவன்.
இவனது படையெடுப்பால் திராவிட பாரம்பரிய வழிபாடுகள் தடை பட்டன. இந்த இடைக்காலத்தில் இந்த மக்கள் இந்துக்களாக மாறி சிறுகுறு தெய்வங்களை வழிபட ஆரம்பித்தனர். கடலோர முக்குவர் இன மக்கள் பத்ரகாளியை வழிபட்டதாக கூறப்படுகிறது.
இராஜராஜச் சோழன் குறுநாட்டின் கீழ் இருந்த கடியபட்டணத்திற்கு கி.பி 1010 ல் தென்னாட்டு குறுநாட்டுக் கடியபட்டணம் என்று பெயர் மாற்றினான்.
கல்வெட்டுகளில் கடியபட்டணம்:
சேரமங்கலத்தை அடுத்த பெரியகுளத்தில் எழுத்திட்டான் பாறையில் "தென்னாட்டு குறுநாட்டு கடியபட்டணத்து பெரிய குளத்து குளக்கரையும்..." "கடியபட்டணத்து சேரமங்கலத்து நீர் நிலத்திலும் பரவ..." போன்ற வரிகள் எழுதப்பட்டுள்ளன.
திருவிடைக்கோடு உடையப்ப மகாதேவர் கல்வெட்டில் "இராசராச தென்னாட்டு குறுநாட்டு கடியபட்டணத்து மணவாளக்குறிச்சியில் வாழ்ந்த கணக்குப் பெருமான் கண்டன்..." என்ற வரிகளும் காணப்படுவது கடியபட்டணத்திற்கு கிடைத்த ஆதாரபூர்வமான சான்றுகளாகும்.
தற்காலம் (கி.பி 1544 முதல் இன்று வரை) :
உழைப்பை மட்டுமே முதலீடாக்கி, புஜபலத்தை மட்டுமே நம்பி, கடலை எதிர்த்து போராடி வாழ்ந்த தன்மானத் தமிழனாக மீனவர்கள் விளங்கியதால், பாண்டிய மன்னன் மீனை தன் கொடியில் பதித்தான்.
இந்து சமய உயர்சாதியினரின் சாதியக் கொடுமையினாலும், மற்றுமொரு மதத்தின் வாணிப சுரண்டல்களாலும் தங்களது சுயமதிப்பு பாதிக்கப்பட்டதை உணர்ந்து கொண்டனர் மீனவர்கள். சாதியக் கொடுமைக்கும் கடலுக்கும் இடையில் அகப்பட்ட நிலையில் சமூக பாதுகாப்பின்றி துன்புற்றனர் மீனவர்கள். வெளிச்சத்தை காண ஏங்கிக் கொண்டிருந்தனர்.
இவ்வாறிருக்க, தூத்துக்குடியில் மீனவப் பெண்ணுக்கு ஏற்பட்ட அவமானத்தால் கலவரம் மூண்டது. அனாதைகள் ஆக்கப்பட்ட பரவர்குல மீனவ மக்கள் சமூக பாதுகாப்புத் தேடி காத்திருந்தனர். கி.பி 1536 முதல் கி.பி 1537 வரை பரவர் இன மீனவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக கிறிஸ்தவம் தழுவினர். ஆகவே இது போன்று முக்குவர் இன மீனவ மக்களும் ஆவலுடன் காத்திருந்து, ஆறாண்டுகளுக்குப் பின் கிறிஸ்தவம் தழுவினர்.
இந்தியாவில் கிறிஸ்தவம்:
இந்தியாவில் கிறிஸ்தவம் மூன்று கட்டங்களாக பரவியது. முதலாவதாக இயேசுவின் சீடர்களில் ஒருவராகிய புனித தோமையார் பாரசீகம் வழியாக கி.பி 52 ல் இந்தியா வந்து கேரளாவில் உள்ள உயர்சாதி மக்களை கிறிஸ்தவர்களாக்கினார். இவர்கள் சிரியன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாவர். தொடர்ந்து தமிழகத்தின் சில பகுதிகளிலும் கிறிஸ்தவ மறையை பரப்பினார்.
இரண்டாம் கட்டமாக வாஸ்கோடகாமா கடல்வழியாக 27-05-1498 ல் கேரளாவின் கோழிக்கோடு வந்திறங்கினார். அதனைத் தொடர்ந்து 16 ம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்கள் தங்கள் காலனி ஆதிக்க ஆசையுடன் இந்தியா வந்ததுடன், கிறிஸ்தவத்தையும் பரப்பினர்.
மூன்றாம் கட்டமாக 19 ம் நூற்றாண்டில் பிரிவினை சபையார் குமரி மாவட்ட உள்நாட்டுப் பகுதிகளில் கிறிஸ்தவ மதத்தை பரப்பினர்.
இதில் 2ம் கட்டமாக கிறிஸ்தவத்தை பரப்பிய போர்ச்சுக்கீசியர்கள் கி.பி 1517 ல் உயர்சாதி அல்லாத பிற இன மக்களுக்கு, குறிப்பாக கடலோரத்தில் வாழ்ந்த அரையன் எனப்படும் முக்குவர் இன மீனவர்களுக்கு திருமுழுக்கு கொடுத்தனர்.
கி.பி 1544 ம் ஆண்டும் புனித சவேரியாரின் முக்கியத்துவமும் :
இந்த காலகட்டத்தில் புனித சவேரியாரின் துணையுடன் (வடசேரி மேட்டில் திருச்சிலுவை ஏந்தி வடுகர் படையை புனித சவேரியார் விரட்டியது) வடுகர் படைகளை பின்வாங்கச் செய்த பின்னர், போர்ச்சுக்கீசியர்கள் திருவிதாங்கூர் மன்னருடன் கூட்டணி சேர்ந்து, மன்னருக்கு தேவையான குதிரைகளையும், ஆதரவையும் வழங்கினர். அதற்குப் பிரதிபலனாக குமரி கடலோர முக்குவர் இனமக்களை கிறிஸ்தவர்கள் ஆக அனுமதியும் பெற்றனர்.
புனித சவேரியார் குமரிக்கடலோர மக்களுக்கு திருமுழுக்கு வழங்க முழுமூச்சாக செயல் பட்டார். பூவார் தொடங்கி கொல்லங்கோடு, வள்ளவிளை, தூத்தூர், பூத்துறை, தேங்காப்பட்டணம், இனையம், மிடாலம், வாணியக்குடி, குளச்சல், கடியபட்டணம், முட்டம், பள்ளம் ஆகிய ஊர்களுக்கு புனித சவேரியார் கி.பி 1544 நவம்பர், டிசம்பர் மாதங்களில், தன் கையால் திருமுழுக்கு கொடுத்தார். இவ்வாறு 13 கடலோர கிராமங்களிலுள்ள சுமார் 10,000 மக்களுக்கு திருமுழுக்கு கொடுத்தார்.
கி.பி 18-12-1544 ல் தூய சவேரியார் தன் உதவியாளர் மான்சிலாஸ் -க்கு எழுதிய கடிதத்தில் "நான் யாழ்ப்பாணம் செல்கிறேன். நீ மணப்பாட்டிலிருந்து தோணி எடுத்து கடியபட்டணம் போகும் வழியில் மணக்குடி மக்களுக்கு ஞானஸ்நானம் கொடு" என்று எழுதியுள்ளார். இதிலிருந்து அக்காலத்தில் கடியபட்டணம் பாய்மரத்தோணி நிறுத்தப்படும் துறைமுகமாக இருந்திருக்கிறது என்பது புலனாகிறது.
கடியபட்டணத்தில் தொடக்கக் கிறிஸ்தவர்கள் :
இம் மக்கள் தொடக்கத்தில் திருமுழுக்கு பெற்றபோது நற்செய்தியை சரியாக அறிந்திருக்கவில்லை. ஒருசில ஜெபங்களைத் தவிர அதிகமாக எதுவும் தெரியாது ஓலைக்குடிலில் ஆலயம் அமைத்து (புனித சவேரியாரிடம் திருமுழுக்கு பெற்ற1544 -ம் ஆண்டு வாக்கில்), கடலோரத் தமிழில் வழிபட்டனர். இவர்களை வழிநடத்த கணக்கப்பிள்ளை-யும் (மறைக்கல்வி கற்று கொடுப்பது, திருமுழுக்கு பெற்றோரின் பட்டியலை பராமரிப்பதும் கணக்கப்பிள்ளையின் பணி), மெலிஞ்சி -யும் (மணியடித்து மக்களை வழிபாட்டிற்கு வரவழைப்பதும், வராதவர்களை கண்டிப்பதும் இவரது வேலை) நியமிக்கப்பட்டனர்.
முதல் ஆலயம் :
திருமுழுக்குப் பெற்று 31 ஆண்டுகளுக்குப் பிறகு, 1575 ம் ஆண்டு போர்ச்சுக்கீசியர்களால் கடியபட்டணத்தில் அப்போஸ்தலர்களான புனித இராயப்பர் சின்னப்பர் பெயரால் அஸ்திவாரம் கருங்கல்லிலும், சுவர்கள் சரளைக் கல்லிலால் ஆன செங்கற்களாலும், மண் ஓட்டிலான கூரையுடன் ஒரு பெரிய ஆலயம் கட்டப்பட்டது. ஆலய நீளம் 90 அடி, அகலம் 30 அடி, பரப்பளவு 2700 சதுர அடி.
அக்காலத்தில் கட்டப்பட்ட ஆலயங்கள் அனைத்துக்கும் அப்போஸ்தலர்கள் அல்லது மரியன்னையின் பெயர்களே சூட்டப்பட்டன. ஆலய வடக்குப் பகுதியில் மாதா சுரூபமும் தெற்குப் பகுதியில் புனித சூசையப்பர் சுரூபமும் வைக்கப்பட்டிருந்தன.
ஆரம்பத்தில் இலத்தீன் வழிபாடுகள் நடைபெற்று வந்தன. மக்களுக்கு மொழி புரியவில்லை. ஆகவே தலைவணங்கல், முழங்காலிடுதல், செபமாலை சொல்லுதல், நற்கருணை பெறுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.
பின்னர் நற்கருணை ஆசீர்வாதம், பக்தி முயற்சிகள், லத்தீன் பாடுவதற்கு மூஸ்க், பங்கை நிர்வகிக்க பிரதானிகள் ஏற்படுத்தப் பட்டன. தொடக்கத்தில் குளச்சல் முதல் கன்னியாகுமரி வரை ஒரே பங்காக இருந்துள்ளது. பின்னர் தான் கடலோரத்தில் குருக்கள் தங்குவதற்கு 'மேடை' என்னும் குருக்கள் இல்லங்கள் அமைக்கப் பட்டன.
கி.பி 1616 ம் ஆண்டில் கடலோர கிராமங்களில் வாழ்ந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை :
கன்னியாகுமரி 364
குளச்சல் 437
இனையம் 500
கடியபட்டணம் 872
கோவளம் 513
குறும்பனை 270
பிள்ளைத்தோப்பு 340
வாணியக்குடி 115
மணக்குடி 660
மிடாலம் 627
முட்டம் 244
பள்ளம் 370
பெரியகாடு 460
புதூர் 207. இவற்றில் கடியபட்டணத்தில் தான் அதிகமாக கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
முக்கிய ஐந்து தலைமையிடங்கள்:
கி.பி 1644 ம் ஆண்டின் இயேசு சபையாரின் வருடாந்திர அறிக்கையின்படி குமரி மாவட்டத்தில் 1. புத்தன்துறை, 2. குளச்சல், 3. கடியபட்டணம், 4. இராஜாக்கமங்கலம், 5. கோட்டாறு ஆகிய ஐந்து தலைமை இடங்கள் இருந்தன.
1721 ல் உள்நாட்டில் ஏற்பட்ட சாதிய பாகுபாட்டால் இயேசு சபையாரின் தலைமையிடம் அழிக்கப் பட்டது.
இந்நிலையில் புனித சவேரியார் காலம் முதற்கொண்டு இறைப்பணியாற்றி வந்த இயேசுசபை குருக்களை, போர்ச்சுகீசியர்கள் 1759 ம் ஆண்டு நாட்டை விட்டே வெளியேற்ற, மீனவ மக்கள் கண்ணீர் மல்க விடை கொடுத்தனர்.
போர்ச்சுக்கீசியரின் ஆதிக்கம் :
குமரிக் கடலோரம் போர்ச்சுக்கீசியரின் ஆதிக்கத்தில் வர, 1776 ம் ஆண்டு முதல் பிரான்சிஸ்கன் சபை குருக்களும், மலபார் பகுதி குருக்களும் குமரி கடற்பகுதியை நான்கு பணித்தளங்களாகப் பிரித்து இறைப்பணியாற்றினர்.
போர்ச்சுக்கீசியரின் அணுகுமுறைகளால் கடலோர கிறிஸ்தவர்கள் ஒன்றுமறியாதவர்களாக இருந்தனர். இந்நிலையில் கோவா கிறிஸ்தவமும் குமரிக் கடலோரத்திலும் உள்நாட்டிலும் பரவ ஆடம்பரத் திருவிழாக்கள், சப்பர சுரூப பவனிகள், நவநாட்கள், கல்லறை மற்றும் தெருக்களில் ஓதுதல், இலத்தீன் திருப்பலிகள், 40 மணி ஆராதனைகள், குருக்களை மையம் கொண்ட சமூக வாழ்வு போன்றவை தலை தூக்கின.
கி.பி 1838 ம் ஆண்டு திருத்தந்தை 16ம் கிரகோரி பிறப்பித்த ஆணையால், போர்ச்சுக்கீசியரின் அதிகாரம் முடிவுக்கு வந்து, வெராப்புழா என்னும் புதிய மறை மாவட்டம் உதயமானது. இதன் கீழ் குமரி கிறிஸ்தவர்கள் கொண்டுவரப் பட்டனர்.
1845 ம் ஆண்டு வெராப்புழா மறை மாவட்டம் பிரிக்கப்பட்டு
1.மங்களூர்,
2.வெராப்புழா,
3.கொல்லம் -என மூன்று மறை மாவட்டங்கள் என்றானது.
கொல்லம் முதல் கன்னியாகுமரி வரையுள்ள திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள (இரயுமன்துறை முதல் கொல்லங்கோடு வரையுள்ள பங்குகள் தவிர்த்து) கிறிஸ்தவம் முழுவதும் கொல்லம் மறை மாவட்டத்துடன் இணைக்கப் பட்டன.
கொல்லம் மறை மாவட்டத்தின் முதல் ஆயராக வெளிநாட்டவரான மேதகு யோர்தான் கத்தானி செலராத் பொறுப்பேற்றார். கடலோர பங்குகளை பராமரிக்க மீன் குத்தகை முறையை நடைமுறைப்படுத்த 1878 ல் அனுமதி வழங்கினார். பின்னர் இம்முறை31954 ல் முடிவுக்கு வந்தது.
1902 ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மேதகு அலாய்சியஸ் மரிய பென்சிகர் கொல்லம் மறை மாவட்ட ஆயரானார். இவரது காலத்தில் குமரிக் கிறிஸ்தவம் வளர்ச்சியடைந்தது என்பது குறிப்பிடத் தக்கது. கொல்லம் மறை மாவட்டம் உருவான போது கடியபட்டணம், பிள்ளைத்தோப்புப் பங்கின் கிளைப் பங்காக இருந்தது. அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி ஜாண் பெரைரா அவர்கள் 1909 ல் கடியபட்டணத்தில் புனித பீட்டர் துவக்கப் பள்ளியை ஆரம்பித்தார்.
இரண்டாம் கட்ட ஆலயப் பணிகள் :
பிள்ளைத்தோப்பு பங்குத்தந்தை அருட்பணி ஜாண் பெரைரா அவர்கள் 1912 ம் ஆண்டு கடியபட்டணம் ஆலயத்தை விரிவாக்கம் செய்ய புதிய ஆலயப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். பழைய ஆலயத்துடன் இணைந்து குருசு வடிவ (சிலுவை) ஆலயமாக கல், செங்கல், பதனீர் கலந்த சுண்ணாம்புக் கலவையில் ஆலயம் கட்டப்பட்டு, பெரிய தூண்களையும், இரு அடுக்கு கூரைகளைக் கொண்டு, மண் ஓட்டினால் கூரை வேயப்பட்டது. மரத்தில் சித்திர வேலைப்பாடு கொண்ட புதிய பீடம், உரோமையிலிருந்து கொண்டு வரப்பட்ட பாதுகாவலர் சுரூபங்கள் மற்றும் தோ-மி-சோல் (Do-mi-sol) என்ற நாத ஒலிதரும் மூன்று மணிகள் ஆகியவை வைக்கப்பட்டு 1915 ல் ஆலயப்பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றது.
1916 ம் ஆண்டு கொல்லம் மறை மாவட்ட ஆயர் மேதகு அலாய்சியுஸ் மரிய பென்சிகர் அவர்களால் கடியபட்டணம் தனிப் பங்காக உயர்த்தப் பட்டது.
சின்னவிளை கடியபட்டணத்தின் கிளைப்பங்காக இருந்தது. ஆலய வழிபாடுகளில் கலந்து கொள்ள மணவாளக்குறிச்சி, சின்னவிளை, சக்கைபொத்து, கல்லடிவிளை, அம்மாண்டிவிளை ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தருவார்கள்.
பங்கின் பங்குத்தந்தையர்களும், ஆலய வளர்ச்சியும் :
1.அருட்தந்தை S. ஜாண் பெர்னாண்டஸ் (1916-1921): பங்கின் முதல் பங்குத்தந்தை சிறப்பாக பணியாற்றிச் சென்றார்.
2. அருட்தந்தை S. பவுல்ஸ்டீபன் (1921-1934):
1922 ல் மரியாயின் மாசற்ற திருஇருதய சபை கன்னியர் மடமும், பெண்கள் தூய திருஇருதய தொடக்கப்பள்ளியும் ஆரம்பிக்கப்பட்டது. கோட்டார் மறை மாவட்டம் 26-05-1930 அன்று உருவானது. கேரளா காயங்குளத்தை சேர்ந்த மேதகு லாரன்ஸ் பெரைரா கோட்டாற்றின் முதல் ஆயராக பொறுப்பேற்றார். குமரி மாவட்ட தமிழ் பேசும் பகுதிகள் கோட்டார் மறை மாவட்டத்தின் கீழ் வந்தன..
3. அருட்தந்தை தோமினிக் நிக்கோலாஸ் (1935-1940): 1936 ம் ஆண்டு புகழ்பெற்ற பாஸ்கா விழா ஆரம்பிக்கப்பட்டது. திருச்சியை சேர்ந்த தமிழரரான மேதகு T. R ஆஞ்ஞிசாமி 05-10-1939 ல் கோட்டார் மறை மாவட்ட ஆயரானார்.
4. அருட்தந்தை தனிஸ்லாஸ் கோஸ்கா (1941): பங்கின் முதல் இறையழைத்தலாக அருட்பணி ஜோசபாத் மரியா 29-03-1941 ல் அருட்பொழிவு பெற்றார். இதிலிருந்து கடியபட்டணம் விசுவாசத்தின் விளைநிலமாகி பல மண்ணின் மைந்தர்களை இறையழைத்தலுக்கு தர ஆரம்பித்தது.
5. அருட்தந்தை J. M. வில்வராயர் (1941-1948) :
1948 ல் உதயமான மறை மாவட்ட இதழான தென் ஒலி பத்திரிகையின் முதல் ஆசிரியர் இவர். தமிழில் வழிபாடு வந்த போது வழிபாட்டு நூல்களை தமிழில் மொழி பெயர்த்ததோடு, பாடல்களுக்கு இசையமைத்தார்.
முறையான பாடகற்குழு அமைக்கப்பட்டது. பக்தசபைகள் புத்துயிர் பெற்றன. 1942 ல் பழைய ஆலயத்தின் கிழக்கே புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்றது.
6. அருட்தந்தை சிறில் பெர்னாண்டோ (1948) :
7. அருட்தந்தை அம்புறோஸ் பல்டான்ஸ் (1948-1955) : ஆன்மீக மறுமலர்ச்சி மற்றும் பக்த சபைகளின் வளர்ச்சிக்கும் அதிக ஈடுபாடு காட்டினார்.
8. அருட்தந்தை M. அம்புறோஸ் (1955-1959) :
ஆலய கட்டுமானப் பணிகளை தொடர்ந்தார். மீனவர்கள் தங்கள் வருமானத்தில் வாரத்தில் ஒரு நாள் ஐந்தில் ஒருபகுதியை ஆலயத்திற்கு வழங்கும் "சஞ்சாயம் என்னும் கூறு" முறையை கட்டாயமாக்கினார். இந்த வருமானத்தில் ஆலயப்பணிகள் விரைவாக நடந்தது. 1575 ல் கட்டப்பட்ட பழைய ஆலயப் பகுதிகள் இடிக்கப் பட்டன. அருட்தந்தையவர்கள் நோய்வாய்ப் படவே துணை பங்குத்தந்தை அருட்பணி S. மார்ட்டின் அலங்காரம் அவர்கள் பங்கை வழி நடத்தினார்கள். 01-11-1956 அன்று குமரி மாவட்டம் தாய்த் தமிழகத்துடன் இணைந்தது, மக்கள் ஆலயத்தில் ஒன்றுகூடி இறைவனுக்கு நன்றி கீதம் பாடினர்.
9. அருட்தந்தை பர்ணபாஸ் நேவிஸ் (1959-1961) : பெரியவர்களுக்கு ஒருமணி நேர ஞான உபதேசம் நடத்தி தொடர்ந்து நற்கருணை ஆசீர் வழங்கி வந்தார்.
10. அருட்தந்தை பெனடிக்ட் அலெக்சாண்டர் (1961-19636): மேற்குப் பகுதியில் ஆலயம் கட்டும் பணியை துவங்கினார். கடியபட்டண கட்டுமரம், விசைப்படகு மீனவர்களுக்கிடையே எழுந்த பிரச்சினையால், அருட்தந்தையவர்களின் பணிகள் பாதிப்படைந்தது. குளச்சல் மறை மாவட்ட முதன்மை அருட்தந்தை M. ஜேக்கப் லோப்பஸ் (1963-1965) அவர்கள் பங்கின் ஒற்றுமைக்காக உழைத்தார் அருட்சகோதரிகளும் அமைதிக்காக பாடுபட்டனர்.
11. அருட்தந்தை ஜே. ஜி இயேசுதாஸ் (1965-1971):
தாமாக மனமுவந்து கொடுக்கும் நன்கொடை முறையை அறிமுகப்படுத்தி, ஆலயப் பணிகளை மேற்கொண்டார். வெளிச்சுவர்கள் முழுமைபெற்று, குருசு (சிலுவை வடிவ) ஆலயத்தின் சிறிய மூன்று முகப்புகளும் நிறைவு பெற்று, புதிய ஆலயத்துடன் இணைக்கப்பட்டு ஒரே ஆலயமாக்கப் பட்டது. பிளவுபட்ட மக்களை வழிபாட்டின் மூலம் ஒன்றிணைக்க பெரிதும் முயன்றார்.
தமிழில் திருப்பலி நடத்தப்பட்டு, இலத்தீனில் பாடும் மூஸ்க் முறை நிறுத்தப் பட்டது. கடியபட்டணம் கிராம பஞ்சாயத்து தலைவராக இருந்து சிறப்பாக சமூகப் பணியாற்றினார்.
12. அருட்தந்தை J. R நற்சீசன் (1971-1972): விவிலிய வாசிப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
13. அருட்தந்தை S. செர்வாசியூஸ் (1972-1975): பங்கு மேய்ப்புப் பணிப்பேரவை அமைத்தார். ஆலய பீடமும், மணிக்கோபுரமும் அமைத்தார். மூன்றாம் கட்ட ஆலயப் பணிகள் நிறைவு செய்யப்பட்டது.
14. அருட்தந்தை J. N சீசர் (1975-1979): ஆன்மீக வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டார்.
15. அருட்தந்தை B. யூஜின் (1979-1981): வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு பஞ்சாயத்து வழியாக பெறப்பட்டது. மக்கள் ஆன்மீக விழிப்புணர்வு பெற உதவினார்.
16. அருட்தந்தை வெனான்சியூஸ் (1981-1983):
1982 ல் மண்டைக்காடு கலவரத்தை தொடர்ந்து கடலோர மக்கள் தாக்கப்பட்டனர். ஆயர் ஆரோக்கியசாமி, மதிப்பிற்குரிய குன்றக்குடி அடிகளார், உயர்திரு அகமத்கான் ஆகியோரின் முயற்சியினால் திருவருட்பேரவை ஆரம்பிக்கப்பட்டு அமைதி ஏற்படுத்தப்பட்டது.
17. அருட்தந்தை W. ஜார்ஜ் வின்சென்ட் (1983-1986):
மக்களுக்கு புதிதாக இல்லங்கள் கட்டி புதுக்குடியேற்றம் உருவாக்கினார்.
18. அருட்தந்தை A. தொபியாஸ் (1986-1989):
மணவாளக்குறிச்சியில் பல்சமய நட்புறவுக் கழகத்தை (Inter religious fellowship) உருவாக்கி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களிடையே உரையாடலையும், உறவையும் வளர்த்து மக்கள் நன்மைக்காக இணைந்து போராட்டம் நடத்தவும் வழிகாட்டினார். சமூக நல்லிணக்கம், சமூக அமைதியும் தொடர்ந்திட அதிக அக்கறை எடுத்துக் கொண்டார்.
19. அருட்தந்தை M. அருள்ராஜ் (1989-1990):
20. அருட்தந்தை E. ஓனோரியஸ் (1990-1995):
புனித பீட்டர் தொடக்கப்பள்ளியில் மறை மாவட்ட அனுமதி பெற்று நடுநிலைப் பள்ளியையும் ஆரம்பித்தார். ஆலயத்தின் வடக்குப் பகுதியில் இப்போது இருக்கும் புதிய மணிக்கூண்டு கட்டி முடிக்கப்பட்டது. புதிய பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டு "தியாகா" எனப் பெயர் சூட்டினார். நோயாளிகளுக்காக சிறப்பாக ஜெபித்து வந்ததால், பல ஊர்களில் இருந்தும் நௌயாளிகள் அருட்தந்தையிடம் வந்து ஜெபித்து நலம் பெற்று செல்வார்கள்.
21. அருட்தந்தை கிரேஸ் குணபால் ஆராச்சி (1995-1999):
புனித பவுல் கலையரங்கம் கட்டப்பட்டு கலைகள் வளர வழி வகுத்தார்.
22. அருட்தந்தை ஜாண் பெல்லார்மின் (1999-2001):
ஆலயத்தில் புனரமைப்பு பணிகளைச் செய்தார்.
23. அருட்தந்தை அமல்ராஜ்நேவிஸ் (2001-2002):
சமூக நலக்கூடம் திருமண மண்டபம் ஆக்கப் பட்டது.
24. அருட்தந்தை சதீஷ்குமார் ஜாய் (2002-2003):
2002 ல் பங்கில் குடும்ப உறுப்பினர் உரிமை அட்டை முறை நடைமுறைக்கு வந்தது.
25. அருட்தந்தை ஜினோ ஜோஸ் பிரகாஷ் மாத்யூ (2003-2006):
அன்னை அரங்கம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.
26-12-2004 அன்று காலை 09.30 மணிக்கு ஏற்பட்ட சுனாமி பேரலையில் கடியப்பட்டணத்தில் 32 பேர் பலியாயினர். பல வீடுகள் இடிந்தன. தொழிற் கருவிகள் சேதமடைந்தன. இவ்வேளையில் சாதி சமயம் பாராமல் மக்களெல்லாம் உதவிக்கரம் நீட்டினர். புனரமைப்பு பணிகளில் பல தொண்டு நிறுவனங்களும் ஈடுபட்டன. 32 வீடுகள் கட்டப்பட்டும் 500 க்கும் மேற்பட்ட வீடுகள் பழுதும் பார்க்கப்பட்டது.
26. அருட்தந்தை A. செல்வராஜ் (2006):
கடியபட்டணம் 2010 என்னும் திட்டத்தை முன்மொழிந்தார்.
27. அருட்தந்தை M. உபால்டு (2006-2011):
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி முன்மாதிரி கிராமமாக்கினார்.
மூன்று கட்டங்களாக கட்டப்பட்ட புனித பேதுரு பவுல் ஆலயத்தை உள்ளும் புறமும் புதுப்பிக்கும் பணியை 24-09-2007 ல் தொடங்கினார். ஆலயத்தின் நான்கு முகப்புகளும் புதிய வடிவில் அழகுற அமைக்கப்பட்டது. பீடம் புதுப்பிக்கப்பட்டு, புதிய கொடிமரமும் வைக்கப் பட்டது. ஆலய புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்று 2010 ம் ஆண்டு அர்ச்சிக்கப் பட்டது.
28. அருட்தந்தை L. செல்வராஜ் (2011-2016):
புனித அந்தோணியார் ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.
29. அருட்தந்தை கிங்ஸ்லி ஜோண்ஸ் (2016-2018):
30. அருட்தந்தை சா. பபியான்ஸ் (01-06-2018 முதல் தற்போது வரை):
பங்கு மக்களை ஒருங்கிணைத்து சிறப்பாக வழி நடத்தி வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறார்.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
1. பங்கு அருட்பணிப்பேரவை
2. தணிக்கைக்குழு
3. நிதிக்குழு
4. அன்பிய ஒருங்கிணையம்
5. திருவழிபாட்டுக்குழு
6. சற்பிரசாதயுத்த வீரர் சபை
7. மரியாயின் சேனை (ஆண்கள்/பெண்கள்)
8. வியாகுலமாதா சபை (ஆண்கள் /பெண்கள்)
9. புனித சூசையப்பர் சபை
10. கிறிஸ்தவ வாழ்வு சமூகம் (ஆண்கள் /பெண்கள்)
11. புனித வின்சென்ட் தே பவுல் சபை
12. பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை
13. கோல்பிங் இயக்கம்
14. கத்தோலிக்க சேவா சங்கம் (ஆண்கள்/பெண்கள்)
15. பாலர் சபை
16. சிறுவழி இயக்கம்
17. இளம் கத்தோலிக்க மாணாக்கர் இயக்கம்
18. இளைஞர் இயக்கம்
19. மறைக்கல்வி மன்றம்
20. சபைகள்-சங்கங்கள் ஒருங்கிணையம்
21. பாலர், சிறார், YCS, இளையோர் ஒருங்கிணையம்.
இவ்வாறு நீண்ட நெடிய சிறந்த வரலாற்றைக் கொண்ட கடியபட்டணம் ஆலயத்தை எமது ஆலயம் அறிவோம் வரிசையில் 457 - வது ஆலயமாக பதிவு செய்ய அருள் புரிந்த இறைவனுக்கும், வாய்ப்பு நல்கிய பங்குத்தந்தை அருட்பணி. பபியான்ஸ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
மேலும் நீண்ட இவ்வரலாற்றில் ஏதேனும் தகவல்கள் விடுபட்டிருந்தால் தயை கூர்ந்து மன்னிக்கவும்.
தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. பபியான்ஸ்.
வரலாறு : 03.10.2010 அன்று வெளியான கடியபட்டணம் வரலாற்று மலர் 1010 -2010. இதிலிருந்து எடுக்கப்பட்டு தொகுக்கப் பட்டது.