புனித இஞ்ஞாசியார் ஆலயம்
இடம் : இனிகோ நகர், தூத்துக்குடி 628001
மாவட்டம் : தூத்துக்குடி
மறைமாவட்டம் : தூத்துக்குடி
மறைவட்டம் : தூத்துக்குடி
நிலை : பங்குத்தளம்
பங்குத்தந்தை : அருள்பணி. G. ஜேசுராஜா
தொடர்புக்கு: +91 94428 85274
குடும்பங்கள்: 285
அன்பியங்கள் : 11
ஞாயிறு காலை 06.30 மணிக்கு செபமாலை, 07.00 மணிக்கு திருப்பலி
வாரநாட்களில் மாலை 06.00 மணிக்கு செபமாலை, 06.30 மணிக்கு திருப்பலி
ஆலயத்தின் சிறப்பு: புனித இஞ்ஞாசியார் ஆலயமானது முக்கியமாக தொழில் முன்னேற்றத்திற்கான வேண்டுதல்களையும், கல்வியறிவுக்கான வேண்டுதல்களும் புனித இஞ்ஞாசியார் வழியாக நிறைவேற்றித் தருகிறது.
திருவிழா :
ஜூலை மாதத்தில் தூத்துக்குடி நகரின் பாதுகாவலி தூய பனிமய மாதா பேராலய பெருவிழா நடைபெறுவதால், அதற்கு முன்னதாகவே ஜூலை மாதம் முதல் அல்லது இரண்டாவது வெள்ளிக்கிழமை கொடியேற்றப்பட்டு, தொடர்ந்து 10 நாட்கள் நவநாட்களுடன் பத்தாவது நாள் ஞாயிற்றுக்கிழமை பெருவிழா கொண்டாடப்படும். பெருவிழா அன்று மாலை ஊரைச் சுற்றி திவ்விய நற்கருணை பவனியாக எடுத்துச் செல்லப்படும்.
வழித்தடம் : தூய பனிமய மாதா பசிலிக்கா வழியாக செல்லும் கடற்கரை சாலையில், இனிகோ நகரில் புனித இஞ்ஞாசியார் ஆலயம் அமைந்துள்ளது.
Location Map :
இனிகோ நகர், தெற்கு கடற்கரை சாலை, தூத்துக்குடி 628001
https://maps.google.com/?cid=7160514700394191994
வரலாறு :
சேசுசபை துறவியும், கடற்கரை மக்களின் ஞானத்தகப்பனும், தூத்துக்குடி மறைமாவட்ட மறைபோதக பாதுகாவலருமான புனித பிரான்சிஸ் சவேரியார், தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரையுள்ள கடற்கரை கிராமங்களில் நடந்தே சென்று மறைபோதக பணியாற்றிய போது, இனிகோநகர் ஊர் கடற்கரை வழியாகச் சென்றதாக ஒரு வாய்மொழி மரபு உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இனிகோ நகர் ஊரில் வாழ்ந்த கத்தோலிக்க மக்களுக்காக தொடக்க காலத்தில் புனித கித்தேரியம்மாள் சிற்றாலயம் கட்டப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன.
ஏழுகடற்துறையின் ஏக அடைக்கலத் தாயாம் திவ்விய சந்த மரிய தஸ்நேவிஸ் மாதா பேராலயப்பங்கின் ஒருபகுதியாக இருந்த இனிகோ நகரில், வாரம் ஒரு நாள் பேராலய அருட்பணியாளர்கள் வழிபாடுகள் நடத்தி திருப்பலி நிறைவேற்றி வந்தனர்.
பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை அருட்பணி. S. M. D. தல்மெய்தா அவர்களின் பணிக்காலத்தில் ஆலயம் கட்டப்பட்டு, 15.06.1971 அன்று அர்ச்சிக்கப் பட்டு, பேராலயத்தின் கீழ் செயல்பட்டு வந்தது.
பேராலய பங்குத்தந்தை பேரருள்பணி. பால் ராபின்சன் அவர்களின் பணிக்காலத்தில் ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சவேரியானாவில் இருந்து இயேசு சபை குருக்கள் இனிகோ நகர் மக்களின் ஆன்மீகத் தேவையை கவனித்து வந்தனர்.
2003 ஆம் ஆண்டு பேராலய பங்குத்தந்தை பேரருள்பணி. ஜோசப் ரத்தினராஜ் அவர்களின் முயற்சியால் ஆலய பீடம் புதுப்பிக்கப்பட்டு, நற்கருணைப்பேழை நிறுவப்பட்டது.
தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் பெர்னாண்டோ அவர்களால் 2003 -ம் ஆண்டு இனிகோ நகர் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. ஸ்தனிஸ்லாஸ், SJ அவர்கள் பணிப் பொறுப்பேற்று வழிநடத்தினார்.
முழுக்க முழுக்க கடற்கரை கிராமப்பங்கான இனிகோநகர் மீனவக் குடிமக்களை தன்னகத்தே கொண்டது. மக்கள் ஆலய செயல்பாடுகளிலும், ஆன்மீகத்திலும் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள்.
மேலும், சமூக விடுதலையிலும் நாட்டம் கொண்டவர்கள் ஆவர். உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தின் வழிநடத்துதலில், பங்கு மக்கள் பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான போராட்டங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இனிகோநகர் பங்குத்தளத்தில் வெகு நாட்களாக பங்குத்தந்தையர் தங்குவதற்கு, பங்குத்தந்தை இல்லம் இல்லாதிருந்தது.
ஆகவே கடந்த ஆண்டு (2020) முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி. ஜேசுதாஸ் அவர்களின் சீரிய முயற்சியாலும், மறைமாவட்டத்தின் ஒத்துழைப்பினாலும் பங்கில் பங்குத்தந்தை இல்ல கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. ஜேசுராஜா அவர்களின் கூடுதல் ஒத்துழைப்பினால் பங்குத்தந்தை இல்லம் கட்டி முடிக்கப்பட்டு, 10.07.2021 அன்று தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோனி ஆண்டகை அவர்களால் மந்திரிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
பங்குத்தந்தையர்களின் வழிகாட்டுதல்:
ஆரம்ப கால பங்குப்பணிகள் சேசுசபை அருள்தந்தையர்களால் நிறைவேற்றப்பட்டு வந்தன.
கல்வி மற்றும் பொருளாதாரத்தில் அருட்பணி. ராஜேஷ் அவர்களின் பணி அளப்பரியது. அவர்களின் பணிக்காலத்தில் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் நடவடிக்கைகளும் பங்கில் பல பொறியாளர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், தொழிலதிபர்களை உருவாக்கித் தந்துள்ளது. அருள்தந்தையின் காலத்தில் ஆலயத்தின் மேற்கூரை சீரமைக்கப்பட்டு விரிவுப்படுத்தப்பட்டது.
சிறிது தளர்வாக இருந்த ஆன்மீகத்தை மீட்டெடுப்பதில் அருட்பணி. பெஞ்சமின் டி சூசா அவர்கள் பல்வேறுஆன்மீகப் பணிகளை மேற்கொண்டார்கள். திருப்பலி, நற்கருணை பவனி, சப்பரபவணி, பாடற்குழு பயிற்சி, மறைக்கல்வி, பக்தசபைகள் என அனைத்து ஆன்மீக் காரியங்களிலும் மக்களை ஈடுபடுத்தி சிறப்பாக வழிநடத்தி சென்றார். அருள்தந்தையின் பணிக்காலத்தில் ஆலயத்தில் மணிக்கூண்டு (கோபுரம்) புதியதாக கட்டப்பட்டு, முன்னாள் ஆயர் மேதகு இவோன் அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
அருட்பணி. ஜெயக்குமார் அவர்கள் ஊர் இளைஞர்களை ஒன்றாக்கி ஆலய காரியங்களிலும், சமுகப்பணிகளிலும் ஈடுபடுத்தி சிறப்பாக வழிநடத்தினார். அருள்தந்தையின் காலத்தில் ஆலயத்தின் முகப்புபகுதி விரிவுப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது.
அருட்பணி. கிறிஸ்டியான் அவர்களின் கூடுதல் ஒத்துழைப்பினால் ஆலய விரிபடுத்தும் பணி நிறைவுற்று திறந்து வைக்கப்பட்டது. அருள்தந்தையின் காலத்தில் பல புதுப்பிக்கும் பணிகளும் பழுது பார்க்கும் பணிகளும் செய்து முடிக்கப்பட்டது.
அருட்பணி. ஜேசுதாஸ் அவர்களின் சீரிய முயற்சியால் பங்கு தன்னிறைவு அடைந்த பங்காக செயல்பட்டு வருகிறது. தந்தையின் காலத்தில் பங்குத்தந்தை இல்லம் கட்டுவதற்கு அனைத்து பணிகளும் சீரும் சிறப்பமாக நடைபெற்றது என்பது கூடுதல் சிறப்பு.
தற்போது அருட்பணி. ஜேசுராஜா அவர்கள் ஆன்மீகப்பணியிலும், சமுகப்பணியிலும் இறைவனின் துணையோடு சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.
இனிகோநகர் ஊரின் வளர்ச்சிக்கு பங்குத்தந்தையர்கள் ஆற்றிய பணிகள் சொல்லிலடங்காதாது. ஆகவே இந்த பதிவின் வழியாக பங்குத்தந்தையர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றனர்.
தொழிலுக்கு (மீன்பிடித்தல்) செல்லும் இளைஞர்களும், பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்த குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் இவ்வூரில் சிறார் சிறப்புப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
பங்கில் உள்ள பக்த சபைகள் :
1. புனித செசிலியம்மாள் பாடகற்குழு
2. புனித தொமினிக் சாவியோ பீடப்பூக்கள்
3. திருக்குடும்ப சபை
4. புனித வின்சென்ட் தே பவுல் சபை
5. இனிகோ இளையோர் இயக்கம்
6. அமலோற்பவ மாதா இளம்பெண்கள் சபை
7. தூய அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை
பங்கில் உள்ள குருசடிகள் (சிற்றாலயங்கள்):
1. புனித சந்தியாகப்பர் குருசடி
2. புனித சவேரியார் குருசடி
3. வேளாங்கண்ணி மாதா குருசடி.
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. Rev.Fr. ஸ்தனிஸ்லாஸ் (2003– 2007)
2. Rev.Fr. ஜார்ஜ் (2007– 2008)
3. Rev.Fr. சேல்ஸ் (2008 –2009)
4. Rev.Fr. ராஜேஷ் (2009- 2014)
5. Rev.Fr. பெஞ்சமின் டி சூசா (2014-2016)
6. Rev.Fr. ஜான்பால் லோபோ (2016 -2017)
7. Rev.Fr. ஜெயக்குமார் (2017-2018)
8. Rev.Fr. ஜோசப் கிறிஸ்டியான் (2018 - 2020)
9. Rev.Fr. ஜேசுதாஸ் பர்னாந்து (2020 -2021)
10. Rev.Fr. G. ஜேசுராஜா (2021 முதல்- தற்போது..,)
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. G. ஜேசுராஜா அவர்களின் வழிகாட்டலில், உபதேசியார் திரு. கென்னடி மற்றும் செல்வன். P. அஸ்வந்த் (இனிகோ நகர்)
மேலும் தொடர்புக்கு
1. +91 94428 85274 (Fr. Jesuraja)
2. +91 76394 10499 (P. Aswanth)