465 புனித சூசையப்பர் ஆலயம், மொளச்சூர்


புனித சூசையப்பர் ஆலயம்

இடம் : மொளச்சூர்

மாவட்டம் : காஞ்சிபுரம்
மறை மாவட்டம் : செங்கல்பட்டு
மறை வட்டம் : காஞ்சிபுரம்

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித சகாய மாதா ஆலயம், சோகண்டி

2. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், சேந்தமங்கலம்

3. புனித லூர்து அன்னை ஆலயம், காந்தூர்

4. குழந்தை இயேசு ஆலயம், குழந்தை இயேசு நகர்.

பங்குத்தந்தை : அருட்பணி. பால்பாரதி CM
இணைப் பங்குத்தந்தை : அருட்பணி. சுரேஷ் பிரபன் CM

குடும்பங்கள் : 375
அன்பியங்கள் : 8

திருவழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு காலை 06.00 மணி மற்றும் காலை 08.00 மணி.

திங்கள் காலை 06.00 மணி மற்றும் மாலை 06.00 மணிக்கும் திருப்பலி.

செவ்வாய் காலை 06.00 மணிக்கு திருப்பலி. மாலை 06.00 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள்.

புதன் காலை 06.00 மணிக்கு திருப்பலி. மாலை 06.00 மணிக்கு புனித சூசையப்பர் நவநாள், சகாய மாதா நவநாள்.

வியாழன் காலை 06.00 மணிக்கு திருப்பலி. மாலை 06.00 மணிக்கு புனித வின்சென்ட் தே பவுல் நவநாள்.

வெள்ளி காலை 06.00 மணி மற்றும் மாலை 06.00 மணிக்கு திருப்பலி.

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06.00 மணிக்கு திருப்பலி அருட்சகோதரிகள் இல்லம்.

இரண்டாவது வெள்ளி மாலை 05.45 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை ஆராதனை, திருப்பலி

மாதத்தின் முதல் புதன்கிழமை மாலை 05.30 மணிக்கு புனித சூசையப்பரின் சிறப்பு தேர்பவனி, ஜெபமாலை, நவநாள், சிறப்பு திருப்பலி.

திருவிழா : 
கொடியேற்றம் ஏப்ரல் 22-ஆம் தேதி. பெருவிழா மே மாதம் 01-ம் தேதி.

மண்ணின் இறையழைத்தல்கள் :
1. Most. Rev. Dr. Arulaiah Somavarapppu DD (late)
2. Rev. Fr. Tharigopala Chrsituraj (late)
3. Rev. Fr. Tharigopala Balasamy SJ
4. Rev. Fr. Somavarappu Louis
5. Rev. Fr. Penikalapadi Amalraj
6. Rev. Fr. Gali Christuraj
7. Rev. Fr. Gali Thomas Prem Kumar
8. Rev. Fr. Somavarappu Victor Gerald
9. Rev. Fr. Tharigopala Victor Emmanuel
10. Rev. Fr. Narsetti Charles Babu
11. Rev. Fr. Narsetti Arokiaswamy
12. Rev. Fr. Narsetti Briitto Martin Paul
13. Rev. Fr. Joseph William
14. Rev. Fr. N. F. James Bernard.

அருட்சகோதரிகள்:
1. Rev. Sr. Putti Michael (late)
2. Rev. Sr. Putti Benigna (late)
3. Rev. Sr. Putti Mary Philomena (late)
4. Rev. Sr. Putti Adolphina
5. Rev. Sr. Putti Augustina (late)
6. Rev. Sr. Putti Thelma (Asantha)
7. Rev. Sr. Putti Lourdes
8. Rev. Sr. Putti Teressa
9. Rev. Sr. Putti Mary
10. Rev. Sr. Penikalapadi Irene
11. Rev. Sr. Penikalapadi Nirmala
12. Rev. Sr. Narsetti Mary Matilda
13. Rev. Sr. Nagorthi Clara
14. Rev. Sr. Putti Viyagulam
15. Rev. Sr. Tharigopala Mary
16. Rev. Sr. Narsetti Julian Irudayam
17. Rev. Fr. Tharigopala Rita Mary
18. Rev. Sr. Narsetti Victoria
19. Rev. Sr. Somavarappu Thomas Mary
20. Rev. Sr. Gali Anne Stella
21. Rev. Sr. Narsetti Jebamalai
22. Rev. Sr. Yettukuri Josephine Magdalene
23. Rev. Sr. Attimala Auxillia
24. Rev. Sr. Veda
25. Rev. Sr. Tharigopala Kaspar Rani
26. Rev. Sr. Korthi Anitha Joseph
27. Rev. Sr. Korthi Margaret Mary
28. Rev. Sr. Kambala Arputha Mary
29. Rev. Sr. Narallu Bala Mary.

வழித்தடம் :
தி. நகர் to பேருந்து எண் 554.
கோயம்பேடு to பேருந்து எண் 76B, 76C.
இறங்குமிடம் : சுங்குவார்சத்திரம்.

Location map :

வரலாறு :

மொளச்சூரில் கூட்டுக் குடும்பங்களாய் வசித்து வந்த முன்னோர்கள் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் அதாவது 1890 களில் தற்பொழுது இம்மக்கள் குடியிருக்கும் மேட்டுப்பாங்கான இடத்திற்கு (மொளச்சூருக்கு) வந்து குடியேறினார்கள்.

“கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்” “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்ற பழமொழிகளுக்கு ஏற்ப தற்பொழுது நமது பங்கு ஆலய கொடி மரம் உள்ள இடத்தில் சீமை ஓடுகளால் வேயப்பட்ட சிற்றாலயம் ஒன்றை இங்கு குடியேறிய உடனே எழுப்பினார்கள். மொளச்சூர் ஆனது பண்ணூர் பங்கின் கிளைப் பங்காய் இருந்தது.

நாளடைவில் குடும்பங்கள் பெருகவே செபவழிபாட்டிற்கு சிற்றாலய இடம் போதாமையால் சற்றுப் பெரிய ஆலயம் கட்டி எழுப்பவேண்டும் என்று ஊர் மக்கள் பங்குத்தந்தையரை வற்புறத்தத் தொடங்கினார்கள்.

1934 லிருந்து 1940 வரை பண்ணூர் பங்குத் தந்தையாக இருந்த அருட்தந்தை. இராயன்னா அடிகளாரும் 1940 லிருந்து 1954 வரை பண்ணூர் பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை. இருதயசாமி அடிகளாரும், தங்களது கிளைப்பங்கான மொளச்சூரில் நல்லதொரு ஆலயம் கட்டி எழுப்ப எடுத்த முயற்சிகளின் பலனாலும், மொளச்சூர் இறை மக்களின் ஒருமித்த ஆதரவாலும் உழைப்பாலும் 1940-ம் ஆண்டு ஜூலைத் திங்கள் 28-ம் நாள் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இவ்வாலயமும் சீமை ஓடுகள் கொண்டு வேயப்பட்டதெனினும் சிலுவை வடிவில் சற்று பெரிய ஆலயமாக மத்தியில் கும்ப வடிவத்துடம் கட்டப்பட்டது. நன்மை வாங்கும் பொழுது இறைமக்கள் முழந்தாளிட ஏதுவாக பலிபீடமேடையில் கிராதியும் அதன் இடப்புறத்தில் பிரசங்க மேடையும் எழுப்பப்பட்டது. பலிபீடமேடையைச் சார்ந்த பின்புறச் சுவரை ஒட்டி எழுப்பப்பட்ட பலிபீடத்தின் நடுவில் நற்கருணை பேழை அமைக்கப்பட்டது.

அதன் மேற்புறம் பாடுபட்ட சிலுவை வைக்கப்பட்டிருந்தது. நற்கருணை பேழையின் இருபறமும் பித்தளையால் செய்யப்பட்ட மெழுகுவர்த்தி தண்டுகளும் பித்தளையால் செய்யப்பட்ட மலர்ச் சாடிகளும் வைக்க படிக்கட்டுகளைப் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

குடும்பமே ஒரு கோயில் என்பார்கள். ஆயின் ஊர் மக்கள் ஒரு குடும்பமாய் நிலைக்க கருணை பொழியும் உயிருள்ள கடவுளின் உறைவிடமாய் இருப்பதே ஆலயம் என்பது நம் முன்னோரின் நம்பிக்கை. எனவே ஆண்டவரின் வீடு என ஆலயத்தைப் போற்றினார்கள்.

ஆதலால்தான் ஆலய வளாகத்தில் செங்கல் சூளை எழுப்பவும்; சுண்ணாம்பு, காரை, சாந்து இவற்றைத் தயாரிக்க உருளையை இழுக்கவும் வேலை செய்ய வீட்டிற்கு ஒருவர் என ஆளனுப்பினார்கள்.

வாலாசாபாத் (சீவரம்) அருகில் ஓடும் பாலாற்றிலிருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் ஓட்டினார்கள். ஆலய கட்டுமானப் பணிகளுக்கு தங்கள் வீடுகளிலிருந்து ஆளனுப்பி உதவினார்கள். பொருளுதவியும் புரிந்தார்கள். இவ்வாறு பங்குத்தந்தையரோடு ஊர் மக்கள் ஒத்துழைத்ததால் விரைவில் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.

மொளச்சூர் ஒரு கிளைப்பங்காய் இருந்தாலும், பல்வேறு கிளைப் பங்குகள் பண்ணூர் பங்குத்தந்தையின் பொறுப்பில் இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பலி மட்டுமே ஆலயத்தில் நடைபெற்று வந்தது.

ஒவ்வொரு சனிக்கிழமை மாலை வாரத்திற்கு ஒரு குடும்பத்தினர் தங்களது ஒரு ஜோடி எருதுகளைக் கொண்டு வந்து ஆலய வளாகத்தினுள் இருக்கும் கூடு வண்டியில் பூட்டி பண்ணூர் பங்குத்தந்தையின் இல்லத்திற்கு ஓட்டிச்சென்று பங்குத் தந்தையை மொளச்சுர் ஆலயத்திற்கு அழைத்து வருவர். சனிக்கிழமை மாலை பங்குத்தந்தை பாவசங்கீர்த்தனம் கேட்பார்.

இரவு ஆலய வளாகத்தில் அவரது இல்லத்தில் தங்கி மறுநாள் ஞாயிறு காலை 06.00 மணி திருப்பலி நிறைவேற்றிவிட்டு, உடனே பண்ணூருக்கு கூடு வண்டியில் சென்று விடுவார்.

மற்ற நாட்களிலோ விழாக் காலங்களிலோ திருப்பலி காணவும் மற்ற வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளவும் பண்ணூர் பங்கு ஆலயத்திற்கு இங்கிருந்து இறைமக்கள் கூட்டம் கூட்டமாய் குறுக்கு வழியில் நடந்து செல்வர்.

மொளச்சூர் தனிப்பங்காக மாற்றம் பெற்று 08.09.1953-ல் அருட்தந்தை து.யு. ராஸ் அடிகளார் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற பிறகு மொளச்சூர் ஆலயத்தில் தினமும் திருப்பலி நிறைவேற்றப் படலாயிற்று.

அந்நாட்களில் இலத்தீன் அதிகாரபூர்வமான வழிபாட்டு மொழியாய் இருந்ததால் திருப்பலி இலத்தீன் மொழியிலேயே நடைபெற்று வந்தது. பீடச் சிறுவர்கள் குரவானவருக்கு திருப்பலியில் பதிலளிக்க இலத்தீன் செபங்களைக் கற்றிருந்தார்கள்.

திருவழிபாட்டு நிகழ்ச்சிகளையெல்லாம் குருவானவர் இறை மக்களுக்கு முதுகைக் காட்டியவாறும் சுவற்றோடு சேர்ந்திருக்கும் பீடத்தை நோக்கியவாறும் நின்று நிகழ்த்துவார். எனவே இறைமக்கள் செபமாலை செபித்தும் வேறு செபங்களைச் சொல்லியவாறும் இருப்பார்கள். திருப்பலியிலும் மற்ற வழிபாட்டு நிகழ்ச்சிகளிலும் ஆண்கள் பாடகர் குழுவினர் இலத்தீன், தெலுங்கு, தமிழ் பாடல்களை நேர்த்தியாக பாடக் கற்றிருந்தனர்.

விவசாயமே ஊர் மக்களின் முழு நேரத் தொழிலாய் இருந்தது. நன்செய் புன்செய் தானியங்களை தங்கள் நிலங்களில் விதைத்தனர். வானம் பார்த்த பூமியாய் இருந்ததால் மழை காலங்களில் நெற்பயிரும் மற்ற காலங்களில் புன்செய் தானியங்களையும் பயிர் செய்தார்கள். எல்லா அறுவடையின்போதும் முதலில் ஆலயத்திற்கும், உபதேசயாருக்கும் என்று தங்கள் விளைச்சலில் ஒரு பங்கினை அளித்தார்கள்.

கோடை காலங்களில், விவசாய வேலைகளிலிருந்து ஓய்ந்திருக்கும் பொழுது வெளியிலிருந்து நாடக ஆசிரியர்களை வரவழைத்து மாலை வேளையில் ஆலய வளாகத்தினுள் முதியோரும் இளைஞர்களும் நாடகப் பயிற்சி எடுத்துக் கொள்வதுடன், அக்கம் பக்கம் கிராமத்தினரையும் வரவழைத்து நாடகம் நடத்துவார்கள். ஊரின் பாதுகாவலராம் புனித சூசையப்பரின் திருவிழா ஏப்ரல் மாதத்தில் நடைபெறும். திருவிழாவிற்கு முன்னரோ பின்னரோ நாடகம் நடத்துவர்.

வெளியிலிருந்து பாகவதர்களை வரவழைத்து விவிலிய நிகழ்ச்சிகளை ஒரு வீட்டில் ஒரு நாள் என்று இரவில் உபன்யாசம் (சொற்பொழிவு) நிகழ்த்தச் செய்வார்கள். அக்காலத்தில் படிக்காதவர்கள் பெரும்பாலோராயிருந்தனர். 5-ம் வகுப்பிற்கு மேல் படித்தவர்கள் ஒரு சிலரே இருந்தனர். படிப்பதற்கு விவிலிய புத்தகங்கள் கிடைக்காத நிலை..! எனினும் ஆபிரகாம் யாக்கோபு, யேசேப்பு, மோசே, தாவீது, யோபு, தோபித்து, தானியேல் முதலிய விவிலிய முதுபெரும் தலைவர்களின் வரலாற்றை இத்தகைய உபன்யாச நிகழ்வுகளின் மூலம் அனைவரும் அறிந்திருந்தனர்.

ஆலயம் கட்டி முடிக்கப்பட்டதும் பழைய சிற்றாலயம் பள்ளிக்கூடமாக மாற்றப்பட்டது.

மரங்களின் நிழலிலும் ஆலய வாசலுக்கு முன் இருந்த மணல் தரையிலும் அமர்ந்து சிறுவர் சிறுமியர் மணல் தரையில் தம் கைவிரல்களால் எழுத்துக்களை எழுதி பயிற்சி எடுப்பது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

“ஆத்திச்சூடி” கொன்றைவேந்தன் மூதுரை நல்வழி முதலியவற்றிலிருந்து பழமொழிகளை ஒருவர் சொல்ல மற்றவர்கள் அதனை உரக்கத் திருப்பிச் சொல்லிக்கற்றனர். அந்த நினைவுகள் இன்றும் பசுமையாய் மக்களின் மனங்களில் உள்ளன.

தற்போதைய ஆலயமானது கட்டப்பட்டு 22.04.1993 அன்று மண்ணின் மைந்தர் மேதகு ஆயர் Dr. அருளய்யா சோமவரப்பு DD, மற்றும் சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் மேதகு கஷ்மீர் ஞானாதிக்கம் ஆகியோரால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

வேதியர்கள் :

ஆலயத்தையும் ஆலய வளாகத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ளவும் பாதுகாக்கவும் காலையிலும் மாலையிலும் ஆலயத்தினுள் செபங்களைச் செபிக்கவும், பாடவும் ஒவ்வொரு ஆலயத்திற்கும் பங்குத் தந்தையர் வேதியரை (உபதேசயாரை) நியமித்திருந்தனர்.

ஒவ்வொரு குடும்பத்தனரிடமிருந்தும் காணிக்கையாக தானியங்களைப் பெறுவதும் அவர்களின் பணியாயிருந்தது.

பக்தி ஆர்வம் ஒழுங்கு முதலியவை மக்கள் உள்ளத்தில் தோன்றுமாறு திறமையுடன் செபங்களைச் செபித்தும் பாடல்களைப் பாடியும் இறை மக்கள் விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் வளர வேரூன்ற வேதியர்கள் பெரிதும் உழைத்தனர். சிறுவர் சிறுமிகளுக்கு செபங்கள் மற்றும் மறைக்கல்வி கற்றுத்தந்தனர்.

கத்தோலிக்கத் திருச்சபையின் பல்வேறு நம்பிக்கைகளையும் விசுவாசக் கோட்டுபாடுகளையும் ஆராதனை வழிபாடு முறைகளையும் இறைமக்கள் பின்பற்ற பங்குத்தந்தையர்களுக்கு வேதியர்களும் பெரிதும் துணைநின்றனர்.

உபதேசியார்கள் பக்தியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினார்கள். தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிராமல், சேவை உள்ளம் கொண்டவர்களாய் விளங்கினார்கள். அர்ப்பண உணர்வோடும் பொறுப்புணர்ச்சியோடும் தங்கள் பணிகளைச் செய்தார்கள். சிறுவர் சிறுமிகளின் ஆன்மீக வளர்ச்சிக்கு முதலிடம் தந்து அவர்களுக்குத் தேவையான நல்லொழுக்கப் பயிற்சியினையும் தந்தார்கள்.

எனவே ஊரில் உபதேசியாருக்கு மக்களிடம் நல்ல மதிப்பும் செல்வாக்கும் இருந்தது. ஊரில் நடைபெறும் அனைத்து நற்காரியங்களிலும் முதன்மை இடத்தை அவருக்கு தந்தனர். உபதேசியார் செபம் சொல்லி எல்லா நிகழ்ச்சிகளையும் தொடங்கி வைப்பார். திருமண நிகழ்ச்சிகளில் நடைபெறும் மணமகன் மணமகள் வரவேற்பு நிகழ்ச்சியின் போது உபதேசியார் சொல்லும் மந்திரம் இனிமையானதாய் இரட்சிக்கும்படியாய் இருக்கும். அடக்கச் சடங்குகளில் அவர் சொல்லும் செபங்களும் பாடல்கள் உருக்கமானதாய் இருக்கும்.

வேதியர் பயிற்சி பெற்ற வேதியர்கள் பங்குத்தந்தையின் நேரடி மேற்பார்வையில் உபதேசியர்களாக பணியாற்றினார்கள். இவர்கள் பங்கு ஆலயத்தில் மட்டும் பணிபுரியாமல் கிளைப் பங்குகளுக்கும் சென்று வந்தனர். அங்கிருந்த சிறுவர் சிறுமிகளுக்கு மறைக்கல்வி போதித்தனர். இவர்கள் மக்களைப் பாடவும் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நல்ல முறையில் செபங்களைச் செபிக்கவும் பயிற்றுவித்தனர்.

அடைக்கல அன்னை சபை :

புனித பிரான்சிஸ்கன் சகோதரிகளின் அடைக்கல அன்னை சபை சகோதரிகள் மொளச்சூர் மண்ணில் காலூன்றி 08.12.1969-ம் நாளிலிருந்தே மக்களுடன் இயைந்த வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். புனித கமிலஸ் மருத்துவமனை துவக்கி மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையளித்தனர்.

1980-ல் கமிலஸ் மருத்துவமனை விரிவாக்கம்.
1990-ல் தூய கமிலஸ் தையல்பயிற்சி பள்ளி.
1999-ல் இயற்கை மருத்துவம் – ஜாய் மருத்துவமனை

1997-ல் மார்னிக் ஸ்டார் ஆங்கில மழலையர் பள்ளி.

2001-ல் தட்டெழுத்து, நகல் எடுக்கும் பயிற்சியகம் ஆகியவற்றை துவக்கி சிறப்புற நடத்தி வருகின்றனர்.

மாணாக்கர்களின் கல்வி நிலை, பெண்களின் நிலை உயர்த்த அடைக்கல அன்னை செவிலியர் கல்லூரியும், இப்பெண்களுக்கான விடுதியும் 2014 -ல் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக இயங்கிவருகிறது. அவசரக்கால தேவையில் மக்களுக்கு துணைநிற்க, மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாக முன்னேற்றம் பெற்று பல்வேறு சிகிச்சை வசதி மாற்றங்களோடு புனித அடைக்கல அன்னை மருத்துவமனை என பெயர் மாற்றம் பெற்றது. இந்த விரிவாக்கப்பட்ட மருத்துவமனை கட்டிடம் 11.06.2015 அன்று திறந்து வைக்கப்பட்டது.

இவ்வாறு மொளச்சூர் பங்கின் வளர்ச்சிக்கு அடைக்கல அன்னை சபை அருட்சகோதரிகளின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

தகவல்கள் : ஆலய பவளவிழா மலரிலிருந்து எடுக்கப்பட்டு, தொகுக்கப் பட்டது.