இடம் : தும்பாலி, ஐரேனிபுரம் அஞ்சல்
மாவட்டம் : கன்னியாகுமரி
மறைமாவட்டம் : குழித்துறை
மறைவட்டம் : வேங்கோடு
நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்குகள் :
1. கிறிஸ்து அரசர் ஆலயம், உடவிளை
2. இயேசுவின் திருஇருதய ஆலயம், கரும்பிலாவிளை
பங்குத்தந்தை : அருள்பணி. P. ஜான் சேவியர், ஷூவென்ஸ்டாட் தந்தையர்சபை (ISCH)
இணைப் பங்குத்தந்தை : அருள்பணி. அலெக்ஸ், (ISCH)
குடும்பங்கள் : 236 (கிளைப்பங்குகள் சேர்த்து 430)
அன்பியங்கள் : 6 (கிளைப்பங்குகள் சேர்த்து 17)
வழிபாட்டு நேரங்கள் :
ஞாயிறு திருப்பலி : காலை 09.00 மணி
வாரநாட்களில் மாலை 05.00 மணி செபமாலை 05.30 மணி திருப்பலி
சனிக்கிழமை மாலை 05.00 மணி செபமாலை, 05.30 மணி தூய இதய அன்னை நவநாள் திருப்பலி
மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 05.00 மணி செபமாலை, நவநாள், திருப்பலி, குணமளிக்கும் நற்கருணை ஆசீர்
திருவிழா : செப்டம்பர் மாதக் கடைசியில், பத்து நாட்கள் கொண்டாடப்படும்.
மண்ணின் இறையழைத்தல்கள் :
1. அருள்பணி. லூக்காஸ், late (மதுரை உயர் மறைமாவட்டம்)
2. அருள்பணி. புஷ்பராஜ்
வழித்தடம் : மார்த்தாண்டம் -தேங்காப்பட்டணம் வழித்தடத்தில், குன்னத்தூர் நிறுத்தத்தில் இறங்கி இடப்புறமாக சுமார் 1கி.மீ உள்ளே சென்றால் தும்பாலியை அடையலாம்.
Location map : Immaculate Heart Of Mary Church
Kunnathur, Tamil Nadu 629162
https://maps.app.goo.gl/4Njg4DUKWqFvTJhA8
வரலாறு :
பனை மரங்கள் அதிகளவில் காணப்பட்டதாலும், அதன் மடலில் இருந்து தும்பு பிரித்து எடுத்து அதிகமாக விற்பனை செய்து வந்ததால் "தும்பாலி" எனப் பெயர் பெற்ற இவ்வூரில் அமைந்துள்ள தூய இதய அன்னை ஆலய வரலாற்றைக் காண்போம்.
கொல்லம் மறைமாவட்டத்தின் கீழ் குமரி மாவட்ட பகுதிகள் செயல்பட்டு வந்த போது தும்பாலி பகுதியில் சுமார் 50 கிறிஸ்தவ மக்கள் வாழ்ந்து வந்தனர். இறைவிசுவாசம் மிக்க இம்மக்கள் திருப்பலியில் பங்கேற்க வடக்கன்குளம், முளகுமூடு, முள்ளங்கினாவிளை, வேங்கோடு, காப்புக்காடு, புதுக்கடை ஆகிய ஊர்களுக்கு கால்நடையாக சென்று வந்தனர்.
அக்காலத்தில் தும்பாலி பகுதியில் வாழ்ந்த கிறிஸ்தவ மக்கள், தங்களுக்கு எதிராக செயல்பட்ட நாயர் இன மக்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக தங்களது நில உரிமைகளை நீதிமன்றத்தின் வழியாக பெற்றுக் கொண்டதற்கு நன்றியாக, ஆலயம் அமைக்க 18 சென்ட் நிலத்தை கொல்லம் மறைமாவட்டத்தின் பெயருக்கு எழுதிக் கொடுத்தனர். இதனிடையே கி.பி 1930-ம் ஆண்டு கோட்டார் மறைமாவட்டம் உதயமானது. அருள்பணி. சூசைமிக்கேல் அவர்கள் காப்புக்காடு பங்குத்தந்தையாக செயல்பட்டு வந்தார். தும்பாலி அதன் எல்கையின்கீழ் இருந்து வந்தது. இக்காலத்தில் மேலும் 18 சென்ட் நிலம் நல்லுள்ளம் கொண்ட மக்களால் இலவசமாக கோட்டார் மறைமாவட்டத்தின் பெயருக்கு எழுதி கொடுக்கப் பட்டது. இவ்வேளையில் சுமார் 100 கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் தும்பாலியில் வாழ்ந்து வந்தனர்.
அருள்பணி. டைனீஷியஸ் பணிக்காலத்தில் தும்பாலி மக்கள் கூடி ஜெபிப்பதற்காக மாதா குருசடி ஒன்று கட்டப்பட்டு, தினமும் செபமாலை நடைபெற்று வந்தது. இக்குருசடியில் மக்கள் மிகுந்த விசுவாசத்துடன் ஜெபித்து வரவே, பல்வேறு அதிசயங்களும் அற்புதங்களும் நடந்து வந்தன. இதனால் பக்கத்து ஊர்களான பாலோடு, சடையன்குழி, செபஸ்தியார்புரம், முள்ளஞ்சேரி, முளங்குழி பகுதியில் இருந்தும் மக்கள் வந்து ஜெபித்து இறைவனின் ஆசீர் பெற்றுச் சென்றனர்.
தொடர்ந்து பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருள்பணி. S. M. மரியதாசன் அவர்கள் தும்பாலி மக்களின் இறை விசுவாசத்தையும், நெடுந்தொலைவு நடந்து வந்து திருப்பலியில் பங்கேற்று வந்ததையும் கருத்தில் கொண்டு, தும்பாலியில் ஆலயம் அமைக்க வழிவகை செய்தார். இதன்பயனாக 60 அடி நீளம் 20 அடி அகலமும் கொண்ட ஆலயமானது 1964 -ம் ஆண்டு கட்ட துவக்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 16.02.1969 அன்று கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு ஆஞ்ஞிசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. அன்றிலிருந்து மாதத்தில் ஒருநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.
தும்பாலி தூய இதய அன்னை ஆலயமானது மேதகு ஆயர் ஆஞ்ஞிசாமி அவர்களால், 23.12.1970 அன்று காப்புக்காடு பங்கின் கிளைப் பங்காக உயர்த்தப்பட்டது. இதுமுதல் ஞாயிறு திருப்பலி மற்றும் வியாழக்கிழமைகளில் நவநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.
1974 -ல் பொறுப்பேற்ற அருள்பணி. மார்சலின் டி போரஸ் பணிக்காலத்தில் குன்னத்தூர் முதல் தும்பாலி வரை சாலைவசதி செய்யப்பட்டதுடன், மின்சார வசதி, ஏழை குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடமும் கட்டப்பட்டது.
1983 -ம் ஆண்டு பொறுப்பேற்ற அருள்பணி. பொ. வின்சென்ட் பணிக்காலத்தில் பங்குப்பேரவை மற்றும் பல திருத்தூது கழகங்கள் அமைக்கப்பட்டது.
1986 -ல் பொறுப்பேற்ற அருள்பணி. ஜான் ஜோசப் அவர்கள் மக்களை ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வழிநடத்தி வந்தார்.
1987 -ல் பொறுப்பேற்ற அருள்பணி. ஆல்பின்ராபி பணிக்காலத்தில் கலையரங்கம், K.S.S.S கட்டிடம் ஆகியன கட்டப்பட்டதுடன் கொடிமரமும் வைக்கப் பட்டது.
அருள்பணி. பிரான்சிஸ் சேவியர் பணிக்காலத்தில் 40 சென்ட் நிலம் நல்லுள்ளம் கொண்டவர்களால் இலவசமாக ஆலயத்திற்கு பெறப்பட்டது.
தொடர்ந்து அருள்பணி. மத்தியாஸ், அருள்பணி. வர்க்கீஸ் ஆகியோர் சிறப்பாக வழிநடத்தி வந்தார்கள்.
1996 ம் ஆண்டு பொறுப்பேற்ற அருள்பணி. சேவியர் பெனடிக்ட் பணிக்காலத்தில் அடித்தள முழுவளர்ச்சி சங்கம் துவக்கப் பட்டது.
1998 -ம் ஆண்டு பொறுப்பேற்ற அருள்பணி. ஆனலின் பணிக்காலத்தில் பள்ளிக்கூடத்தில் சத்துணவுக்கூடம், மாணவர்களுக்கு கழிப்பறைகள் கட்டப்பட்டன.
1999 -ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அருள்பணி. ஜெயபிரகாஷ் பணிக்காலத்தில், ஜோதி நிர்மலா தொண்டு நிறுவனத்திடமிருந்து நிதிபெற்று தண்ணீர் தொட்டி மற்றும் ஆலய சுற்றுச்சுவர் ஆகியவை கட்டப்பட்டது. மேலும் தும்பாலியை தனிப்பங்காக உயர்த்திட பெரிதும் உழைத்தார்.
அதன்பயனாக 04.06.2001 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் தும்பாலி தனிப்பங்காக உயர்த்தப் பட்டது. அருள்பணி. கிறிஸ்டோபர் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பணிப் பொறுப்பேற்றார். இவரது பணிக்காலத்தில் பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டு 06.02.2004 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேலும் நிலங்கள் வாங்கப்பட்டதுடன், ஆலய வருமானத்தை கருத்தில் கொண்டு இரண்டு கடைகள் கட்டப்பட்டது.
தொடர்ந்து பொறுப்பேற்ற அருள்பணி. கலிஸ்டஸ் பணிக்காலத்தில் புதிதாக நிலங்கள் வாங்கப் பட்டன. பழுதடைந்த நிலையில் இருந்த பழைய ஆலயத்தை மாற்றி புதிய ஆலயம் கட்ட திட்டமிடப்பட்டு 02.10.2005 அன்று புதிய ஆலயத்திற்கு வட்டார முதன்மைப் பணியாளர் அருள்பணி. வின்சென்ட் அவர்களால் அடிக்கல் போடப்பட்டது.
பங்குத்தந்தை அருள்பணி. கலிஸ்டஸ் அவர்களின் அயராத முயற்சி, பங்கு மக்களின் நிதியுதவி மற்றும் ஒத்துழைப்புடன் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, 20.09.2007 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. மேலும் நீண்ட நாட்களாக வழக்கில் இருந்த தும்பாலி -பாலோடு சாலை மீண்டும் திறக்கப்பட்டது. குருசடி விரிவாக்கம் செய்யப்பட்டு புதுப்பிக்கப் பட்டது.
தொடர்ந்து பங்குத்தந்தையாக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் பணியாற்றிய பணியாற்றிய அருள்பணி. S. வின்சென்ட் ராஜ் அவர்கள் பணிக்காலத்தில் இரண்டு தளமுள்ள பள்ளிக்கூட கட்டிடம் கட்டப்பட்டது. ஆலய கோபுரம் பழுது பார்க்கப் பட்டது.
2014 -ஆம் ஆண்டு அருள்பணி. M. ஜோசப் காலின்ஸ் அவர்கள் பொறுப்பேற்று பங்கை சிறப்பாக வழி நடத்தினார்.
2016 -ம் ஆண்டு தும்பாலி பங்கானது ஷூவென்ஸ்டாட் தந்தையர்சபை (ISCH) குருக்களிடம் ஒப்படைக்கப் பட்டது. முதலில் அருள்பணி. ஜார்ஜ், ISCH அவர்கள் பொறுப்பேற்று சில மாதங்கள் பணியாற்றினார்.
தொடர்ந்து அருள்பணி. தனபால் ராஜா, ISCH இணைப் பங்குத்தந்தையாக அருள்பணி. ஜெயகுமார், ISCH ஆகியோர் இணைந்து இரண்டு ஆண்டுகாலம் பங்கை ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வழிநடத்தி வந்தார்கள். பொதுக்கல்லறைக்கு இடம் வாங்கப்பட்டது.
2018 -ஆம் ஆண்டிலிருந்து அருள்பணி. ஜான் சேவியர், ISCH அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக வழிநடத்தி வருகிறார். தற்போது சமூகநலக்கூட கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது.
அருள்பணி. போஸ்கோ, ISCH அவர்கள், 2018-2019 இணைப் பங்குத்தந்தையாகவும், 2019 முதல் தற்போது வரை அருள்பணி. அலெக்ஸ், ISCH அவர்களும் அன்பியங்களை அதிகமாக சந்தித்து, இறைமக்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்து, சிறப்புற பணியாற்றினர்.
பங்கில் புனித ஆரோக்கிய மாதா குருசடி
மற்றும் இயேசுவின் தூய இதய தொடக்கப்பள்ளி ஆகியவையும் உள்ளன.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :
1. மரியாயின் சேனை
2. புனித வின்சென்ட் தே பவுல் சபை
3. கத்தோலிக்க சேவா சங்கம்
4. பாலர்சபை
5. சிறுவழி இயக்கம்
6. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்
7. அன்னை தெரேசா இளையோர் இயக்கம்
8. கிராம முன்னேற்ற சங்கம் (பெண்கள்)
9. கோல்பிங் இயக்கம்
10. அடித்தள முழுவளர்ச்சி சங்கம்
11. வாழை விவசாயிகள் சங்கம் (ஆண்கள் மற்றும் பெண்கள்)
12. மறைக்கல்வி மன்றம்
13. பங்குப்பேரவை
14. அன்பிய ஒருங்கிணையம்
15.பக்த சபைகள் ஓருங்கிணையம்
16. பீடப்பூக்கள்
17. பாடகற்குழு
18. வழிபாட்டுக் குழு.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. ஜான் சேவியர், ISCH