இடம் : கோணான்குப்பம்
மாவட்டம் : கடலூர்
மறை மாவட்டம் : புதுவை -கடலூர் உயர் மறை மாவட்டம்
மறை வட்டம் : கள்ளக்குறிச்சி
திருத்தல அதிபர் : அருட்பணி Z. M. தேவசகாய ராஜ்
உதவிப் பங்குத்தந்தை : அருட்பணி S. J. அலெக்ஸ் ஒளில் குமார்
நிலை : திருத்தலம்
கிளைப்பங்குகள் :
With chapel:
1. கணியான்குப்பம்
2. பவழக்குடி
Without chapels:
1. அகரம்
2. சிவம்பார்
3. பிஞ்சனூர்
4. கர்னதம்
5. மாவிடந்தாள்
6. பாலி
7. இளங்கியனூர்.
குடும்பங்கள் : 450
அன்பியங்கள் : 19
ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணி, காலை 08.30 மணி, காலை 11.30 மணி.
நாள்தோறும் திருப்பலி : காலை 06.30 மணிக்கு
சனிக்கிழமை காலை 06.30 மணி, காலை 11.30 மணிக்கும் திருப்பலி. மாலை 06.00 மணிக்கு நவநாள் திருப்பலி.
மாதத்தின் முதல் சனிக்கிழமை : மாலை 06.00 மணிக்கு திருப்பலி தொடர்ந்து தேர்பவனி.
இரவு 09.00 மணிக்கு விழிப்பு இரவு ஜெபம்.
திருவிழா : கொடியேற்றம் ஜனவரி 14 ஆம் தேதி.
பெருவிழா 23 ஆம் தேதி.
கொடியிறக்கம் 24 ஆம் தேதி.
மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்பணி. S. அருள்ராஜ் OCD
2. அருட்பணி. டேவிட் HGN
3. அருட்பணி. ஜூடு லூர்துராஜ் HGN
4. அருட்பணி. அருள்தாஸ் SJ.
அருட்சகோதரிகள் : 10
அருட்சகோதரர்கள் :
1. அருட்சகோதரர் S. தொபியாஸ் (St. Michael's)
2. அருட்சகோதரர் Y. அந்தோணிராஜ் (Holy cross)
வழித்தடம் : சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், உளுந்தூர்பேட்டையில் இறங்கி, அங்கிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள மங்கலம்பேட்டை வந்து, இங்கிருந்து கோணான்குப்பம் 5 கி.மீ தொலைவில் உள்ளது.
இரயில் : சென்னை எழும்பூர் - விருத்தாசலம். விருத்தாசலத்திலிருந்து பேருந்து மூலமாக கோணான்குப்பம்.
Location Map :
https://g.co/kgs/in7hnY
வரலாறு :
தமிழகமும் கிறிஸ்தவமும் :
கி.பி முதல் நூற்றாண்டிலேயே திருத்தூதர் புனித தோமையார் வழியாக வட தமிழ்நாட்டில் இறையாட்சி விழுமியங்கள் மக்களால் அறியப்பட்டு, கிறிஸ்தவம் பரவப் தொடங்கியது. புனித தோமையாருக்குப் பின்னர் கிறிஸ்தவத்தை தன்முனைப்போடு செயல்பட, பொறுப்புணர்வோடு உழைக்க, சீர்திருத்த விளைவுகளை நிலைநாட்டிட, சீரிய வழியில் வழிநடத்திட தகுந்த தலைமையின்மையால் கிறிஸ்துவம் வீழ்ச்சியடையத் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக பிற தமிழக பகுதியில் வாழ்ந்திருந்த கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்தவ கலாச்சார மதிப்பீடுகள், திருஅவையின் உள்ளீடுகளின் தொடர்பின்மை போன்ற காரணங்களாலும் கிறிஸ்தவம் தேய்பிறையானது.
கிறிஸ்தவ மறையின் தளர்ச்சியால் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சைவ நெறியாளர்களால் சைவம் வளர்ச்சி பெற்றது.
ஆனால் இவ்வேளைகளில் சேர நாட்டின் (கேரளா) அரசியல் - பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையான சந்தை வாணிபத்திற்கும், முழுமுதற் காரணமாக இருந்த கிறிஸ்தவத்தை சேர மன்னர்கள் வெண்சாமரம் வீசி வரவேற்றனர். இதனால் மக்களிடையே சமத்துவம், சகோதரத்துவம், நீதி, கடமை, அன்பு, மாண்பு, கண்ணியம், பொறுமை அனைத்தும் ஏற்பட்டு எழுச்சியடைந்தனர். இவ்வெழுச்சியை கண்ணுற்று வெறுப்புற்ற தஞ்சையை மையமாகக் கொண்டு கோலேச்சிய சோழர்கள், சேரர்கள் மீது கொண்டிருந்த பகைமையால் வெளிப்படையாக கிறிஸ்துவ மறையை வளர விடவில்லை.
இத்தகைய கடும் எதிர்ப்பினால் ஏறக்குறைய 15 நூற்றாண்டுகள் தமிழகத்தின் வடபகுதிகளில் கிறிஸ்தவ சமயப் பணிகள் மேற்கொள்ளப் படாமல், கிறிஸ்துவத்தின் இருண்ட காலமாக திகழ்ந்தது.
16 ம் நூற்றாண்டில் இயேசு சபையினர், போர்ச்சுகீசியர், பிரெஞ்சு வேத போதக சபையினர்களால் கிறிஸ்தவம் மீண்டும் துளிர் விடத் துவங்கியது. குறிப்பாக இயேசு சபையின் குருக்களான புனித சவேரியார், இராபர்ட் தெ நொபிலி, புனித அருளானந்தர், வீரமாமுனிவர் ஆகியோரின் நற்செய்தி அறிவிப்பால் இருளில் வாழ்ந்த மக்கள் வெளிச்சத்தை காணத் துவங்கினர்.
கான்ஸ்தான்ஸ் ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்) :
இத்தாலி நாட்டில் வெனிஸ் மாநிலத்தின், காஸ்திலியோனே தெல்லே ஸ்டிவியேரே என்னும் ஊரில் கி.பி 08-11-1680 ல் கண்டோல்போ பெஸ்கி -எலிசபெத் தம்பதிகளுக்கு கான்ஸ்தான்ஸ் ஜோசப் பெஸ்கி மகனாகப் பிறந்தார்.
பெஸ்கியின் சொந்த ஊரில் 09-03-1598 ல் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவர் தூய ஞானப்பிரகாசியார். இவர் பெரும் எதிர்ப்புகளுக்கிடையே உரோமையில் இயேசு சபையில் 1585 ல் துறவியாக இணைந்தார். 1591 ஆம் ஆண்டு அங்கு ஏற்பட்ட கொள்ளை நோயால் துன்பப் பட்டோருக்கு பணிபுரியும் போது, இவரும் அந்நோய்வாய்ப்பட்டு தமது 24 ம் வயதில் 21-06-1591 ல் இறந்தார். 31-12-1726 ல் இவருக்கு புனிதர் பட்டம் கொடுக்கப் பட்டது. தமது ஊரில் பிறந்து உலகமெல்லாம் போற்றப்படும் தூய ஞானப்பிரகாசியாரின் வாழ்வு பெஸ்கியின் மனதில் பதிந்தது...!
இதனால் 21-10-1698 ல் தமது பதினெட்டாம் வயதில் இயேசு சபையில் சேர்ந்து துறவற வாழ்க்கையைத் துவங்கினார். 1709 ல் குருவாக திருநிலைப் படுத்தப்பட்டார்.
இத்தாலியன், இலத்தீன், பிரெஞ்சு, எபிரேயம், போர்த்துகீசியம் ஆகிய மொழிகளையும் கற்று பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார்.
இவ்வாறிருக்கையில் தென்னிந்தியாவில் பணிபுரிய குருக்களின் தேவையை உணர்ந்து தாமே விரும்பி தமிழகம் வர முன்வந்து, போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரத் துறைமுகத்திலிருந்து கப்பலேறி 1710 ம் ஆண்டின் முற்பாதியில் இந்தியாவின் கோவா வந்தடைந்தார் பெஸ்கி.
கோவாவில் சிறிது காலம் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு, தென்னிந்திய இயேசு சபையின் -மலபார் மறை மாநிலத்தின் தலைமையிடமான கொச்சி துறைமுகம் வந்து, இயேசு சபையினரின் பயிற்சி நிறுவனம் இருந்த அம்பலக்காடு என்னும் ஊரை வந்தடைந்தார்.
இக்காலகட்டத்தில் போர்த்துகீசியருக்கும் - ஹாலந்து (டச்சுக்காரர்) நாட்டினருக்கும் இடையே நடந்த அதிகார போட்டியால் சிக்கல்கள் எழுந்தன. எனவே கொச்சி -அம்பலக்காட்டை விடுத்து இயேசு சபையாரின் மறை மாநிலத் தலைவர் திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு என்னும் ஊரில் தங்கி வாழ்ந்து வந்தார். பெஸ்கி இங்கு வந்து மறை மாநிலத் தலைவரை சந்தித்த பின்னர் தூத்துக்குடி, மணப்பாடு பகுதிகளில் தங்கி தமிழ் கற்று வந்தார்.
08-05-1711 ல் பெஸ்கி மதுரை பணித்தளத்திற்கு வந்து, முதல் ஆறாண்டுகள் காமநாயக்கன்பட்டி, புதுப்பட்டி, குருக்கள்பட்டி, கயத்தாறு, மதுரை, ஐயம்பட்டி (வரதராசன்பேட்டை), கூவத்தூர், காவேரியாற்று கொள்ளிடக்கரையில் உள்ள கோடாலிப்புதூர், எய்யலூர் என்று வெவ்வேறு இடங்களில் பணியாற்றி வந்தார்.
இவ்வாறு நற்செய்தி பரப்பி வந்த வேளையில், மக்களுக்கு விவிலிய உண்மையை விளக்கும் போது 'கோழி தன் குட்டிகளை காப்பது போல' என்று போதித்த போது, மக்கள் குலுங்கி குலுங்கி சிரித்தனர். எதனால் மக்கள் சிரித்தனர் என்று தமிழறிஞர் ஒருவரிடம் கேட்ட போது, தமிழ் இலக்கண மரபுப்படி கோழிக்குரிய இளமைப்பெயர் 'குஞ்சு' என அறிந்தார். இந்த நிகழ்வுக்கு பின்னர் அவர் தமிழ் இலக்கண, இலக்கியத்தை கற்று புலமை அடைந்தார்.
17 ம் நூற்றாண்டில் மதுரை பணித்தளத்தில் பணியாற்றிய இராபர்ட் தே நொபிலி வடமொழி, தமிழ் மொழியையும் நன்கு கற்று காவியுடுத்தி தமது பெயரை தத்துவபோதகர் என மாற்றி, எளிய வாழ்வு வாழ்ந்து உயர்குடியில் பிறந்தோரையும் கிறிஸ்தவம் தழுவச் செய்தார்.
இதனைப் பின்பற்றி பெஸ்கி தமது பெயரை தைரியநாதர் என மாற்றிக் கொண்டு, காவியுடை அணிந்து எளிய வாழ்க்கை வாழ்ந்து நற்செய்தி பரப்புவதுடன் மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வந்தார்.
இக்காலகட்டத்தில் (கி.பி 17 ம் நூன்றாண்டின் இடைக்காலத்தில்) மதுரை பாத்தொருவதோ மறைப்பணித்தளம் மூவகையாகப் பிரிந்து மக்களுக்குப் பணியாற்றின.
முதல் வகை அருட்பணியாளர்கள் கருப்பு அங்கி அணிந்து பரங்கியர் (வெள்ளைக்காரர்) பாணியில் பணியாற்றினர்.
இரண்டாம் வகையினர் பிராமண சந்நியாசிகளென தங்களை அழைத்துக் கொண்டு பிராமணர், மேல்தட்டு மக்களுக்கும் பணியாற்றினர். இவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பணிபுரியும் போது மேல்தட்டு மக்களிடமிருந்து எதிர்ப்பு வரவே, இரவு நேரங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திருவருட்சாதனங்கள் வழங்கி வந்தாலும், அதிலும் எதிப்பு வரவே மூன்றாம் வகை குருக்கள் பிரிவு உருவானது.
மூன்றாம் வகையினர் அடித்தட்டு மக்களுக்காக பணிபுரிந்த பண்டார சுவாமிகள் எனப்பட்டனர். பெஸ்கியும் "இயேசு தம் சீடரைப் பார்த்து, ' என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்". -மத்தேயு 16:24 என்னும் இறை வார்த்தைக்கு சான்றாக பண்டார சுவாமியாகி தைரியநாதர் என்ற பெயரில் வடமொழி தெரிவதால் வீரமாமுனிவர் என்ற பெயருடன் மக்களுக்கு நற்செய்தி அறிவித்தார்.
புனித சூசையப்பர் மீது இயற்றப்பட்ட முதல் பெரும் செய்யுள் நூலான தேம்பாவணி காப்பியத்தை ஏலாக்குறிச்சியில் படைத்தார். வீரமாமுனிவர் பணிபுரிந்த இடங்களில் காமநாயக்கன்பட்டி, குருக்கள்பட்டி, கயத்தாறு, ஏலாக்குறிச்சி, அய்யம்பேட்டை, கோடாலிப்புதூர், எய்யலூர், ஆவூர், வடுகர்பேட்டை, கோணான்குப்பம் ஆகியவை குறிப்பிடத் தக்கவை.
ஆரியனூர் என்ற கோணான்குப்பம் :
ஆரியனூர் என்றழைக்கப்படும் கோணான்குப்பம், முற்காலத்தில் இயற்கை வளமிக்க ஒரு குறுங்காடாக இருந்தது. கோனார்கள் (ஆடு மேய்ப்பவர்கள்) இங்கு அதிகமாக வாழ்ந்து வந்ததால் 'கோனார்குப்பம்' என அழைக்கப்பட்டு, அதுவே பின்னர் கோணான்குப்பம் எனப் பெயர் பெற்று விளங்குகிறது. இக்குறுங்காட்டிலே மிகப்பெரிய ஆலமரம் ஒன்றும், அதற்கருகில் குளமும், சுற்றிலும் முட்புதர்களும், வனமல்லிகைச் செடிகளும், காட்டு மரங்களும், இலுப்பை மரங்களும் அடர்ந்து வளர்ந்திருந்தன. வன விலங்குகளும் மிகுந்திருந்தன. இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் ஏழைகளாக இருந்ததால் ஆடுமாடுகளை மேய்ப்பதை முக்கிய தொழிலாகவும், இத்துடன் விவசாயத்தையும் தொழிலாகக் கொண்டிருந்தனர்.
இந்த குறுங்காடு பாளையக்காரர்களின் நிர்வாகத்திற்கு உட்பட்டிருந்தது. இந்த காட்டிலிருந்து கிடைக்கும் விறகுகளை பயன்படுத்தி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.
மாதாவின் சுரூபங்களுடன் வீரமாமுனிவர் வருகை :
சிறு வயதிலிருந்தே மரியன்னையின் மீது மிகுந்த விசுவாசம் கொண்டிருந்த வீரமாமுனிவர் மரியன்னையின் புகழைப் பரப்புவதற்காக, தமது பணித்தலத்திலிருந்து தோள்பையில் இரண்டு மாதா சுரூபங்களுடன், இந்தியத் துறவி உடையணிந்து, கையில் கோலுடனும், கால்நடையாகவே பயணம் மேற்கொண்டு, முகாசபரூருக்கு அருகில் உள்ள ஆரியனூர் (கோணான்குப்பம்) குறுங்காட்டை கடக்க நேர்கின்றது.
பயணக் களைப்பினால் ஆட்கொண்ட வேளையில் குறுங்காட்டின் இயற்கை அழகில் வியந்து, ஆலமரத்தடியில் அமர்ந்தவர் அங்கேயே, மரியன்னையின் மீது கொண்ட விசுவாசத்தில் இரண்டு சுரூபங்களையும் மார்போடு அணைத்தவாறே தூங்குறார். கோணான்குப்பம் குறுங்காடு புல்பூண்டுகள் செழித்து வளரும் கால்நடைகளுக்கு ஏற்ற நிலமாதலால், சுற்றியுள்ள அனைத்து ஊர்களிலும் உள்ள கோனார்கள் (ஆடு மேய்ப்பவர்) தங்களது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து வருவது வழக்கமாக இருந்தது. அன்றைய தினம் ஆடுகளை மேய்க்க கொண்டு வந்த சிறுவர்கள், ஆலமரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்த முனிவரையும், அவர் மார்பில் அணைத்திருந்த இரண்டு அழகிய மாதா சுரூபங்களையும் கண்டு வியப்படைந்தனர்.
வீரமாமுனிவர் நன்றாக உறங்கிக் கொண்டிருப்பதை பயன்படுத்தி இரண்டு மாதா சுரூபங்களில் ஒன்றை எடுத்துச் சென்று அடர்த்தியான முட்புதருக்கிடையே யாரும் அறியா வண்ணம் மறைத்து வைத்தனர்.
தூக்கத்தை முடித்து எழுந்த வீரமாமுனிவர் தோள்பையில் இருந்த இரண்டு மாதா சுரூபங்களில் ஒன்றைக் காணாமல் அதிர்ச்சியடைகின்றார்...! இங்கும் அங்குமாக அடர்ந்த குறுங்காட்டில் தேடியும் கிடைக்காததால், வேதனையுடன் ஒரே ஒரு மாதா சுரூபத்துடன் பயணத்தை மீண்டும் தொடர்ந்தார்.
இங்கிருந்து இரண்டு கி.மீ தொலைவுள்ள முகாசாப்பரூர் என்ற ஊரை, அவ்வூரை சேர்ந்த ஒருவரின் உதவியுடன் அடைகின்றார். அவ்வூரைச் சார்ந்த குறுங்காட்டுப் பகுதி (கோணான்குப்பம்) கச்சிராயர் என்ற பாளையக்கார ஜமீன் ஆளுகையின் கீழ் இருந்தது. ஆகவே மரியாதை நிமித்தமாக கச்சிராயரை சந்தித்து, அவரிடம் மரியன்னையின் புகழை எடுத்துரைத்தார். இதைக் கேட்ட பாளையக்காரர் தனக்கு அதிகாரமும், செல்வமும் இருந்தாலும் வாரிசு ஒன்று இல்லையே..! என்ற ஏக்கத்தை வீரமாமுனிவரிடம் எடுத்துக்கூறி முறையிட்டு, இத்தகைய குறையை நிவர்த்தி செய்ய ஆலோசனைகளையும் கேட்டார்.
அவரின் ஏக்கத்தையும், வேண்டுதலையும் கேட்ட வீரமாமுனிவர், பரிசுத்த அன்னையிடம் வேண்டுங்கள், அன்னை உங்கள் குறைகளை நிவர்த்தி செய்வார். அனைத்தும் நலமுடனே நடக்கும் என்று கூறினார். அத்துடன் குறுங்காட்டில் தான் கொண்டு வந்த இரண்டு மாதா சுரூபங்களில் ஒன்று காணாமல் போனது பற்றியும், குறுங்காட்டில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று கூறிவிட்டு, பாளையக்காரரை ஆசீர்வதித்து தமது பயணத்தை ஏலாக்குறிச்சியை நோக்கி தொடர்ந்தார்.
கச்சிராயருக்கு அன்னை காட்சியளித்தல்:
கச்சிராயர், வீரமாமுனிவரின் கூற்றுப்படி அன்னையின் மீது முழு நம்பிக்கையும் வைத்து, தனக்கு ஓர் ஆண் வாரிசு கிடைக்க வேண்டும் என்று மனமுருக வேண்டினார்.
அதன் பிறகு ஒருநாள் ஆண்வாரிசு இல்லையே என்ற ஏக்கம், கவலையுடன் கச்சிராயர் தூங்கிக் கொண்டிருந்த வேளையில்..! நிறை வெளிச்சத்தில் அழகுருவமாய், அன்பு ததும்ப..! கச்சிராயரின் கனவில் அன்னை தோன்றி..! "கச்சிராயரே..! நான் கானகத்தில் தனித்திருக்கிறேன்..! எனக்கொரு ஆலயம் அமைத்து கொடுத்தால் உம் குலம் விளங்க ஓர் ஆண் மகனைத் தருவேன்" என்று அருள் வாக்குரைத்து அன்னை மறைந்தார்..!
வியப்புடன், கச்சிராயர் அன்னையைத் தேடி காட்டிற்குள் சென்றார்.
குறுங்காடான கோணான்குப்பத்தை கச்சிராயர் அடைந்து, தமது பணியாளர்களிடம் தூய்மைப் படுத்தும் படி கட்டளையிட, காடு சீர்செய்யப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில்..! ஆடு மேய்க்கும் சிறுவர்கள் அன்றொரு நாள் வீரமாமுனிவரிடமிருந்து எடுத்து மறைத்து வைத்த அன்னையின் சுரூபம் இருந்த புதருக்கருகில் இரத்தம் பீரிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இச் செய்தி அறிந்து பாளையக்கார கச்சிராயர், அவ்விடத்தை மிகவும் கவனமாக தூய்மைப் படுத்த சொல்ல ஆலமரமும், குளமும் கொண்ட அங்கே அன்னையின் சுரூபம் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்து, ஆனந்தத்தில் கண்ணீர் விட்டார். தாம் கனவில் கண்ட அன்னையின் உருவமும், புதரிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சுரூபமும் ஒரே மாதிரியாய் இருப்பதைக் கண்டு வியப்படைந்தார்.
அவ்விடத்தில் சுரூபத்தை வைத்து அன்று முதல் வழிபடத் தொடங்கினார்.
கச்சிராயருக்கு ஆண்குழந்தை பிறந்தது :
கச்சிராயர் நாள்தோறும் குடும்பத்துடன் அன்னையை வழிபட்டு வரவே, அன்னை வாக்களித்தது போல ஆண் வாரிசைக் கொடுத்தார்.
கச்சிராயரும் அப்பகுதியினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அன்றிலிருந்து அன்னையின் அற்புதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
கச்சிராயர் அன்னைக்கு சிறு ஆலயம் கட்டி வழிபடுதல்:
கனவில் தோன்றிய மரியன்னை தமக்கு வாக்கு கொடுத்தவாறே ஓர் ஆண் மகவைக் கொடுத்ததால், கச்சிராயர் நாள்தோறும் அன்னையை போற்றிப் புகழ்ந்து, அவளின் மகிமையைப்பாடி நன்றி கூறி வந்தார். மேலும் அன்னையின் வேண்டுகோளாகிய "கானகத்தில் எனக்கொரு ஆலயம் கட்டி வழிபடு" என்னும் கூற்றை நிறைவேற்றும் வகையில், அன்னையின் சுரூபம் கண்டெடுக்கப்பட்ட அதே இடத்தில் ஒரு சிறு ஆலயத்தைக் கட்டியெழுப்பி வழிபடலானார்.
அன்று கச்சிராயர் ஆலயம் அமைத்து வழிபட்ட சுரூபத்தை இன்றும் ஆலயத்தினுள் இடப்புறமாக ஒரு மரத்தின் மீது வைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இதுவே வீரமாமுனிவர் காட்டில் தொலைத்த சுரூபமும் ஆகும்.
வீரமாமுனிவர் தமது பணியின் நிமித்தமாக மீண்டும் ஆரியனூர் (கோணான்குப்பம்) பகுதியை கடக்க நேர்கையில், தான் காட்டில் தவறவிட்ட மாதா சுரூபத்தை மக்கள் ஆலயம் அமைத்து வழிபடுவது அறிந்து அவ்விடத்தைக் காண ஆவலுடன் சென்றார். ஆலயத்தையும் அன்னையையும் பார்த்து "நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்." -திருப்பாடல்கள் 40 :1 ஆனந்தமடைந்தார்.
வீரமாமுனிவர் அன்னைக்கு தற்போதுள்ள ஆலயத்தை கட்டுகிறார் :
மக்கள் மரியன்னையின் மீது கொண்டுள்ள பக்தியையும் பற்றுதலையும் கண்ட வீரமாமுனிவர், அவர்கள் வழிபட ஓர் அழகிய பெரிய ஆலயத்தைக் கட்ட வேண்டும் என எண்ணி ஆரியனூரில் தமது பணியைத் தொடங்கினார்.
மக்களின் முழு ஒத்துழைப்புடன் தற்போது நாம் காணும் அழகிய ஆலயத்தை 1720 ல் கட்டி முடித்தார். இவ்வாலயத்தின் சிறப்பு என்னவெனில் வீரமாமுனிவர் தமது பணி வாழ்வில் கட்டிய ஆலயங்களில் முதல் ஆலயம் இதுவேயாகும். ஆலயத்தின் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பின்னர் பணிபுரிந்த அருட்தந்தையர்கள் சில பராமரிப்பு பணிகளைச் செய்திருந்தாலும், போர்ச்சுக்கீசிய பாணியில் கட்டப்பட்ட ஆலயத்தின் அழகும் அமைப்பும் வீரமாமுனிவர் கட்டியவாறே இன்றும் மாற்றப்படாமல் பொலிவுடன் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
அழகிய ஆலயத்தை கட்டி முடித்த வீரமாமுனிவர் அன்னையின் திருவுருவ சுரூபமானது இந்திய கலாச்சாரப்படியே இருக்க வேண்டும் என்ற ஆவலில், தமிழ் மரபுப்படி சேலை உடுத்தி, ஆபரணங்கள் அணிவித்து, சிரசில் கிரீடத்தை கொண்டவளாக, கையில் இயேசு பாலனை ஏந்தியவாறு காட்சி தருகிற சித்திரத்தை தம் கைப்பட வரைந்து, சென்னை மயிலை பேராயரிடம் சென்று இதற்கான ஒப்புதலையும் பெற்று, அத்துடன் நில்லாமல் தாம் வரைந்த அன்னையின் ஓவியத்தை, சுரூபமாக பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரிலிருந்து செய்து தர வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தார். ஆயரும் சம்மதிக்க மணிலாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 10 அடி உயரம் கொண்ட மரக்கட்டையால் செய்யப்பட்ட அழகிய அன்னையின் சுரூபத்திற்கு புனித பெரியநாயகி அன்னை என்று பெயரிடப்பட்டு ஆலயத்தில் வைக்கப்பட்டு மக்களுக்கு ஆசி வழங்கி வருகிறாள் அன்னை. இந்த சுரூபமானது தற்போது வீரமாமுனிவர் கட்டிய ஆலயத்தின் பீடத்திற்கு பின்புறமாக உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது.
எண்ணற்ற குழந்தை செல்வம் இல்லாத தம்பதியர், அன்னையிடம் வேண்டி, குழந்தை செல்வத்தை பெற்று வருகின்றனர்.
திருமண வரன் அமையாதவர்களுக்கு அன்னையின் கருணையால் திருமணம் நடந்து வருவதால், புது மணத்தம்பதிகளாக கோணான்குப்பம் வந்து நன்றி செலுத்துகின்றனர். அன்னையின் அற்புதங்களை எழுதினால் பல பக்கங்களுக்கு எழுதிக் கொண்டே செல்லலாம். அவ்வளவு அற்புதங்கள் நாள்தோறும் நடந்து வருகின்றன. இதனால் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் எண்ணற்ற மக்கள் அன்றாடம் வந்து ஜெபித்து ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்கின்றனர்.
கோணான்குப்பம் திருத்தலமும், பங்குத்தந்தையர்களும்:
அருட்பணி ஜோசப் பெஸ்கி (வீரமா முனிவர் ) : இவர் கட்டிய ஏலாக்குறிச்சி மற்றும் கோணாங்குப்பம் ஆலயங்கள் புகழ்பெற்ற திருத்தலங்களாக திகழ்கின்றன. கோணான்குப்பம் மரியன்னைக்கு பெரிய நாயகி எனப் பெயர் சூட்டினார்.
முனிவர் கி.பி 1711-12 கால கட்டத்தில் அய்யம்பேட்டையில் இருந்த போது பிளவு பட்டிருந்த கிறிஸ்தவர்களை ஒருங்கிணைத்து புதிய வரலாற்றை தொடங்கி வைத்தார்.
1720 ம் ஆண்டு தற்போதைய ஆலயத்தை கச்சிராயரின் உதவியுடன் கட்டினார். மறைப்பரப்பு பணியில் ஆங்காங்கே புதுக் கிறிஸ்தவர்களை உருவாக்கி, ஊக்குவித்து, மரபுவழி கிறிஸ்தவர்களை தங்கள் இறை நம்பிக்கையில் உறுதிப் படுத்தினார்.
அருட்பணி பிரான்சிஸ் பெரைரா (1728-1731) :
அருட்பணி பெர்னாந்து கோமாஸ் (1731-1742) :
அருட்பணி ஜோன்னஸ் பப்திஸ்தா-பிபாக்ளியா (1743-1746) :
அருட்பணி பிரான்சிஸ்கு ஹமென் (1746-1748) :
போர்த்துகீசிய குருக்களின் பணிக்காலம் (1773-1887) :
புதுவை-கடலூர் உயர் மறை மாவட்ட குருக்களின் பணிக்காலம் :
அருட்பணி அல்போன்ஸ் (1887-1895)
அருட்பணி சவரிநாதன் (1895-1896)
அருட்பணி ஆந்த்ரே (1896-1900)
அருட்பணி இராயப்பநாதர் (1900-1902)
அருட்பணி மரிய அடைக்கலம் (1902-1906)
அருட்பணி சின்னப்பநாதர் (1906-1910) தற்போதைய ஆலயத்தின் முன்புறம் வலது பக்கத்தில் இவரது கல்லறை உள்ளது.
அருட்பணி எப் டேனியேல் (1911-1915):
அருட்பணி லெராய் (1915-1919):
அருட்பணி எப் தானியேல் (1920-1929):
அருட்பணி இ மெலோன் (1929-1932) : ஆலயத்தில் சத்திரங்களை அமைத்தார்.
அருட்பணி சக்கரையாஸ் (1932-1941)
அருட்பணி ஜே எம் லமாத் (23 ஆண்டுகள்) , உதவி பங்குத்தந்தையாக 🌹அருட்பணி வல்லபநாதன் (1941-1964).
அருட்பணி டெக்ராய்டர் (1965-1976) :
அருட்பணி ஆ. லூயிஸ் (1976-1982) :
18-01-1978 அன்று மயிலை பேராயர் மேதகு அருளப்பா அவர்களால் வீரமாமுனிவர் சிலை திறந்து வைக்கப்பட்டது. திருத்தலத்தை சுற்றிலும் சிலுவைப்பாதை நிலைகள் அமைத்து, பாஸ்கு விழாவை கொண்டாடச் செய்தார்.
முகாசாபரூர் கிராமத்தில் தூய அந்தோணியார் சிற்றாலயம் அமைத்தார்.
1976-1982 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு அருட்பணியாளர்கள் திருத்தலத்தை சிறப்பாக வழிநடத்தினர்.
அருட்பணி பி. ஜேக்கப் (1982-1988) : திருத்தலத்தின் தென்புறம் திருப்பயணிகள் தங்கும் அறைகள் கட்டினார்.
அருட்பணி ஜோசப் அருமைச்செல்வம் (1988-1998) : திருத்தலத்தின் 20 வது அதிபராவார். வீரமாமுனிவர் எழுதிய கல்வெட்டை, சென்பகனூர் ஆய்வுக் கூடத்திலிருந்து பெற்று, திருத்தலத்தின் வலப்புறத்தில் பதித்தார்.
அருட்பணி எஸ் பீட்டர் (1998-2005)
அருட்பணி எல் வின்சென்ட் (1996-2012) : திருத்தல திருப்பீடத்தை புதுப்பித்தார். ஆராதனை ஆலயம் அமைத்தார். 1997 ல் அருங்காட்சியகம் கட்டினார்.
அருட்பணி V. அருள்தாஸ் (2012-2019): மங்கலம்பேட்டை - கோணாங்குப்பம் சாலையை சீரமைத்தார். அழகிய காட்சியமைப்பும் இறை விசுவாசத்தை அதிகரிக்கும் வகையில் கெபியையும் கட்டினார்.
அருட்பணி Z. M. தேவசகாயராஜ் (2019 முதல் தற்போது வரை..)
திருத்தலத்தின் 23 வது அதிபராக பொறுப்பேற்று, மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். உறுதுணையாக உதவி பங்குத்தந்தை அருட்பணி S. J. அலெக்ஸ் ஒளில் குமார் அவர்கள் பணியாற்றி வருகிறார்.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : திருத்தல அதிபர் அருட்பணி Z. M. தேவசகாய ராஜ் அவர்கள்.
வரலாறு : புனித பெரியநாயகி அன்னையின் வரலாறு (2 புத்தகங்கள்) மற்றும் வீரமாமுனிவர் வரலாறு என மொத்தம் மூன்று புத்தகங்களிலிருந்து எடுத்து தொகுக்கப் பட்டது.