685 புனித பரலோக மாதா ஆலயம், வெள்ளாளன்குளம்

   
புனித பரலோக மாதா ஆலயம்

இடம்: வெள்ளாளன்குளம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வழி, 627012

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: பாளையங்கோட்டை

மறைவட்டம்: பாளையங்கோட்டை

நிலை: கிளைப்பங்கு

பங்கு: தூய அடைக்கல மாதா ஆலயம் திருநெல்வேலி டவுன்

பங்குத்தந்தை: அருள்பணி. மை. பா. சேசுராஜ்

குடும்பங்கள்: 20

அன்பியம்: 1

மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது சனி மாலை 06:30 மணிக்கு திருப்பலி

திருவிழா: ஆகஸ்ட் 06-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையிலான பத்து நாட்கள்

வழித்தடம்: நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அருகில்

Location map: https://g.co/kgs/TLSSTc

வரலாறு:

கி.பி 17-ம் நூற்றாண்டில் வெள்ளாளன்குளம் பகுதியில் கிறிஸ்தவம் துளிர்விட ஆரம்பித்தது.

இங்கு முதன் முதலாவதாக கிறிஸ்தவம் தழுவியவர் திரு. மாதவடியான் என்பவராகும். தொடக்கத்தில் ஓலைக்குடில் ஆலயம் கட்டப்பட்டிருந்தது. போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து மாதாவின் சுரூபம் கொண்டுவரப் பட்டது.

அதன்பிறகு, ஓடு வேய்ந்த ஆலயமாகவும், பின்னர் ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த ஆலயமாகவும் மாற்றப்பட்டது.

கி.பி. 1901 ஆம் ஆண்டு கணக்குப்படி இங்கு 41 கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

கி.பி 1907 ஆம் ஆண்டு ஒரே கல்லால் ஆன கொடிமரம் நிறுவப்பட்டது. கொடிமரம் நிறுவப்பட்டதன் நூற்றாண்டு விழா 2007 ஆம் ஆண்டு மேதகு ஆயர் தலைமையில் கொண்டாடப்பட்டது. ஆலயத்தில் பல்வேறு காலகட்டங்களில் புனரமைப்புப் பணிகள் செய்யப்பட்டது.

காமநாயக்கன்பட்டி, வீரவநல்லூர், சேர்ந்தமரம், 1931 ஆம் ஆண்டு முதல் சிங்கம்பாறை, 1960 ஆம் ஆண்டு முதல் பேட்டை ஆகிய பங்குகளின் கிளைப்பங்காக வெள்ளாளன்குளம் செயல்பட்டு வந்தது. 2005 ஆம் ஆண்டு முதல் நெல்லை டவுன் தூய அடைக்கல மாதா பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வருகின்றது.

ஆலயத்திற்கு முன்பு உள்ள வேப்பமரத்தில் தான் முதன் முதலில் திருவிழா கொடியேற்றியுள்ளனர். ஆகவே இதன் இலையை நோய் தீர்க்கும் அருமருந்தாக மக்கள் பயன்படுத்துகின்றனர். 

திருவிழா:

ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி, 14 -ம் தேதி இரவு சப்பர பவனி, 15-ம் தேதி காலை 08.00 மணிக்கு திருவிழா திருப்பலி, அன்னையின் திருச்சுரூப ஆசியைத் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவுபெறும். இந்த ஊர் மக்கள் பலர் வெளியூர்களில் வாழ்ந்து வந்தாலும், திருவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள். திருவிழாவின் போது பிற சமய மக்களும் திரளாக வந்து ஒற்றுமையுடன் கொண்டாடி மகிழ்வது சிறப்புக்குரியது. 

இறைமக்களின் ஜெப தேவைகளுக்காக தூய லூர்து மாதா கெபி கட்டப்பட்டுள்ளது.

புதுமைகள்:

பல ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு திருடர்கள் ஆலயத்தினுள் புகுந்து, நகைகளை திருட முயன்ற போது ஒருவனுக்கு கண் பார்வை போயுள்ளது. இந்த நேரத்தில் ஆலய உபதேசியாரின் கனவில் மாதா தோன்றி காதில் மணியோசையை கேட்கச் செய்ய, அவரும் விரைந்து ஆலயம் வந்த போது கண்பார்வை போன திருடன் உபதேசியாரின் காலைப்பிடித்து கண்ணீர் வடித்து மன்னிப்பு கேட்டுள்ளான். அவரும் மன்னிக்க, மற்றொரு திருடன் ஓடி தப்பித்துள்ளான். தப்பித்து ஓடியவன் சில நாட்களில் நோய்வாய்ப்பட்டு அத்திருடன் இறந்து போயுள்ளான்.

மாதாவின் கருணையால் வெளிநாட்டில் நல்ல வேலை கிடைத்து வாழ்ந்து வந்தவர், எதிர்பாராத விதமாக பெரிய விபத்து ஏற்பட்டு நடக்கவும் பேசவும் இயலாமல் தாய்நாடு திரும்பினார். குடும்பத்தினர் தொடர்ந்து ஆலயம் வந்து மாதாவிடம்  நம்பிக்கையுடன் ஜெபிக்க, எழுந்து நடக்கவும் பேசவும் மாதா கருணை புரிந்தார். தொடர்ந்து ஆலயம் வந்து சாட்சி கூறி நன்றி செலுத்தினர்.

ஒரு வருடமாக தொலைந்து போன மனநலம் பாதித்த தனது சகோதரனை, தம்மிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஜெபித்த சகோதரிக்கு, எவ்வித பாதிப்புமில்லாமல் சகோதரனை கொண்டு வந்து சேர்த்த புதுமையை எண்ணி நன்றி செலுத்தி சென்றனர்.

மேலும் குழந்தை வரம், நோய்களில் இருந்து விடுதலை என பல்வேறு புதுமைகள் மாதாவின் வழியாக நடந்து வருகின்றது.

தகவல்கள்: பங்குத்தந்தை அருள்பணி. மை.பா. சேசுராஜ்

புகைப்படங்கள்: ஆலய உறுப்பினர்