100 புனித செபஸ்தியார் ஆலயம், மாடத்தட்டுவிளை


புனித செபஸ்தியார் ஆலயம்

இடம் : மாடத்தட்டுவிளை.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறைமாவட்டம் : குழித்துறை

திருத்தந்தை : பிரான்ஸிஸ்
ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்

பங்குத்தந்தை : அருட்பணி ஜெயக்குமார்,
இணை பங்குத்தந்தை : அருட்பணி சகாய அருள் தேவ்.

நிலை : பங்குதளம் (நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது)

கிளைப்பங்கு : புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், வில்லுக்குறி.

குடும்பங்கள் :1526
அன்பியங்கள் : 50

மறைக்கல்வி ஆசிரியர்கள் : 74
மறைக்கல்வி மாணவ மாணவியர் : 980.

ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கும் மற்றும் மாலை 06.00 மணிக்கும்.

தினமும் காலை 06.00 மணிக்கு திருப்பலி.
திங்கட்கிழமை மாலை 06.00 மணிக்கு புனித செபஸ்தியார் நவநாள், திருப்பலி நடைபெறும்.

திருவிழா : ஜனவரி 20 ம் தேதிக்கு முந்தைய வெள்ளி துவங்கி பத்து நாட்கள் நடைபெறும்.

வரலாறு :

பல நூற்றாண்டு தொன்மையும் நீண்ட கால வரலாறும் கொண்ட ஒரு பங்குத்தளம் மாடத்தட்டுவிளை. குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் நகருக்கு மேற்கே 13 கிலோமீட்டர் தொலைவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையின் அருகாமையில் அமைந்துள்ளது. பழமையானது என்பதற்கு உதாரணமாக இருப்பது விளக்குத் தூண் கல்வெட்டு.
இவ் விளக்கு தூண் 15-03-1371 ஆலய வகைக்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளதது. இதில் எழுதிய வாசகம் இயேசு மரி சூசை என்ற வாசகமும் செபஸ்தியார் என்ற வாசகமும் இருந்ததனால் செபஸ்தியாருக்கு ஆலயம் இருந்ததாக கருதப்படுகிறது. தூய தோமையார் காலத்து இருபட்டை சிலுவை பழையகால குருசடியில் காணப்படுவது இப் பங்கின் பழமைக்கு வலு சேர்க்கிறது. மாடத்தட்டுவிளையின் ஒரு பாகமான பண்டாரக்காட்டில் அருளாளர் தேவசகாயம் பிள்ளை அவர்களை ஒரு பலாமரத்தில் கட்டிவைத்தார்கள். அதன் நினைவாக புலியூர்குறிச்சியில் இருப்பது போல் ஒரு குருசடி முன்னோர்களால் கட்டப்பட்டது. தேவசகாயம் பிள்ளை அவர்களுக்கு அருளாளர் பட்டம் கிடைத்தன் நினைவாக ஒருமணிக்கூண்டும் மக்கள் வணக்கம் செலுத்த ஒரு கெபியும் கட்டப்பட்டது.

கோட்டார் பங்கின் கிளைப்பங்காக இருந்த மாடத்தட்டுவிளை, கொல்லம் தனி மறைமாவட்டமானதும் மாடத்தட்டுவிளை கோட்டார் பங்கில் இருந்து பிரிக்கப்பட்டு கிபி 1853 மார்ச் 15 ம் நாள் காரங்காடு பங்கின் கிளையானது.

கிபி 1890 முதல் 1904 வரை காரங்காடு பங்குத்தந்யைாக இருந்த அருட்தந்தை எலியாஸ் காலத்தில் கிபி 1900 ஆம் ஆண்டில் மிகப்பெரிய ஆலயமாக மிகப் பெரிய தூண்களுடன் ஆர்ச் வடிவக் கூரையுடன் இரட்டை கோபுரத்துடன் ஜரோப்பிய போர்த்துக்கீசிய கட்டிடக்கலை வடிவமைப்பில் கட்டபட்டது. இரட்டை கோபுரம் கடைசிவரை முடிக்கப்படாமலே இருந்தது. ஆலயத்தின் கட்டுமானப் பணிகளை கவனித்தவர் அருட்தந்தை எப்ரேம் OCD அவர்கள ஜரோப்பிய நாட்டவரான இவர் கிபி1908 ஆம் ஆண்டு காலமானார். இவரது உடல் அவர் கட்டிய ஆலயத்தின் நடுவே அடக்கம் செய்ய பட்டது. ....

தனிப்பங்காக மாடத்தட்டுவிளை:

கிபி1918 ம் ஆண்டு நவம்பர் 10 நாள் காரங்காட்டில் இருந்து பிரிந்து தனிப்பங்காக உதயமானது. கிளைப்பங்குகளாக பத்மநாபபுரம், இரணியல், சுங்கான்கடை, புலியூர்குறிச்சி, கொன்னக்குழிவிளை, அப்பட்டுவிளை
(புனித அந்தோனியார் ஆலயம்),
அப்பட்டுவிளை
(புனித சூசையப்பர் ஆலயம்),
வில்லுக்குறி புனித ஞானபிரகாசியார் ஆலயம் ஆகியன இருந்தது...

முதல் பங்குத்தந்தை காலத்தில் புனித அலோசியஸ் தொடக்கப் பள்ளி கட்டப் பட்டது. பின்னர் வந்த பங்குத்தந்தை அருட்பணி பத்ரோஸ் அடிகளார்
31-07-1927முதல் 01-10-1933 வரை. இவருடைய பணிக்காலத்தில் பங்கு தலைமுறை போற்றும் நல்ல வளர்ச்சி கண்டது.

புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளி,

கன்னியர் இல்லம்

அந்திசந்தை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி,

கல்லறைத் தோட்டம்

இவருடைய காலத்தில் வந்தவை. கல்லறை தோட்டம் வாங்கி அவருக்கு இடம் தேர்ந்து எடுத்தார். பங்கின் பணிகாலத்திலே இறந்தார் அவர் தேர்ந்தெடுத்த இடத்திலே அடக்கம் செய்யபட்டார். அருட்தந்தை பத்ரோஸ் அடிகளாரை மாடத்தட்டுவிளையை நிர்மாணித்த சிற்பி என்று கூறுவர். பின்னர் வந்தவர்களில் அருட்பணி சூசை மிக்கேல் அடிகளார் 19 வருடம் சீரும் சிறப்பாக பங்கு பணியும் சமுக பணியாகிய வில்லுகுறி பேருராட்சியில் துணைத் தலைவராக பணி செய்தார்கள். தற்போதைய அருட்பணியாளர் இல்லம் கட்டுவதற்காக பழைய இல்லத்தை இடித்தபோது கீழ்தளத்தில் கிபி 1867ல் கட்டப்பட்ட ஆலயத்தின் பீடம் இருந்ததை பார்த்து மக்கள் உணர்ச்சி வசப்பட்டார்கள்.

தற்போதய ஆலயம் அருட்பணி ஹிலரி அடிகளாரின் பணிக்காலத்தில் 1992 ம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் நாள் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு லியோன் தர்மராஜ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு வேலை நடை பெற்று வந்தது. ஆலய கட்டுமானப் பணிகளுக்கு பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு மற்றும் நன்கொடைகளால் நிறைவு பெற்று, 1993 ஜனவரி 05 ஆம் நாள் அதே மேதகு ஆயரால் ஆலயம் அர்ச்சிக்கபட்டது. தற்போதைய ஆலயமானது மாடத்தட்டுவிளையின் ஏழாவது ஆலயம் என்பது குறிப்பிடத் தக்கது.

பின்னர் வந்த பங்கு தந்தையரின் வியர்வையால் தான் இந்த அளவிற்கு வளர்ச்சி அடைய முடிந்தது. அதில் அருட்பணி அந்தோணி முத்து காலத்தில் புனித செபஸ்தியார் நிதி நிறுவனம்
தொடங்கப்பட்டது.
பின்னர் பங்குத்தந்தை அருட்பணி டோமினிக் கடாட்ச தாஸ் அவர்கள் புனித செபஸ்தியார் கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவினார்.

புனித செபஸ்தியார் பெனிபிட் பன்ட் நிறுவனத்தையும்,

புனித செபஸ்தியார் உள் விளையாட்டு அரங்கத்தையும்,

மேம்படுத்தினார். அந்தி சந்தை அருகில் அழகிய மாதா குருசடி கட்டி சிறப்புறசெய்தார்கள். தற்போதைய ஆலயத்தின் பலிபீடம் மரவேலைப்பாடுடன் மிக அழகாக செய்தார்கள்

பின்னர் வந்த பங்குதந்தை அருட்பணி இயேசு ரத்தினம்( இப்போது குருகுல முதல்வர்)

செயின்ட் செபாஸ்டின் மெட்ரிக் பள்ளி

அன்னை ஞானம்மா கத்தோலிக்க கல்வியல் கல்லூரி

உடற்பயிற்சி மையம்

போன்ற நிறுவனங்கள் வந்தன.

திருவிழா கொண்டாட்டம் திருவிழா ஜனவரி 20 முந்தின வெள்ளி கொடி ஏற்றி 10 நாள் கொண்டாடபடும் செபஸ்தியார் விழா ஜனவரி 20 மற்றும் ஒன்பதாம் திருவிழா இரண்டுநாள் அருளிக்கம் வணக்கத்திற்கு வைக்கபடும்.கிபி (1920ஆம் ஆண்டு ஐனவரி 2 ஆம் நாள் கொல்லம் ஆயர் மேதகு அலோசியஸ் மரிய பென்சிகர் அவர்ளால் செபஸ்தியார் உடலின் சிறு எலும்புத் துண்டு கொண்டு வரப்பட்டு அருளிக்கம் என்ற பெயரில் வணங்கபட்டு வருகிறது).
விழாக் காலங்களில் மூன்று தேர் பவனியாக ஆலயத்தை சுற்றி வரும்.

மாடத்தட்டுவிளை நிகழ்வுகள்:

அன்றைய காலகட்டங்களில் கொள்ளை நோய் ஏற்பட்டு மக்கள் இறந்ததனால் செபஸ்தியார் சொரூபத்தை வைத்து பஜனை எடுத்தனர் கொள்ளை நோய் மாறியது.இப்போதும் கார்த்திகை மார்கழி மாதங்களில் பஜனை எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடைசி ஐந்து நாள் பட்டாபிசேகம் 5 மண்டலத்தார் சிறப்பாக கொண்டாடுவர். போட்டி போட்டு சப்பரத்தை {தேர்} அலங்கரித்து அவரவர் வீதிகளுக்கு எடுத்துச் செல்வர். இதை காண்பதற்கு வெளியூர் மக்கள் திரளாக வந்து புனிதரின் ஆசிர் பெற்றுச் செல்வர்.

கண்தானம் செய்வதில் இந்தியாவின் முதன்மை கிராமம் மாடத்தட்டுவிளை. ஆரம்பத்தில் புனித செபஸ்தியார் இளைஞர் இயக்கத்தினரால் துவக்கப்பட்டு தற்போது திருக்குடும்ப திரு இயக்கத்தார் சேவையாக செய்து வருகின்றனர். ஒரு நபர் இறந்ததும் உறவினர் பங்குத்தந்தையிடம் தகவல் சொல்லும் போதே, கண்ணை தானமா எடுக்க சொல்லிருங்க என்பார்கள். அந்த அளவிற்கு மக்களிடம் கண்தானம் செய்யும் நற் பண்பு ஊறிப்போய் உள்ளது. இதுவரை சுமார் 245 பேர் இறந்த பின்பு கண்களை தானமாக கொடுத்துள்ளனர். ஒருவர் உடலை தானமாக கொடுத்துள்ளார். பலர் ரத்த தானமும் செய்து வருகின்றனர். இப் பங்கு மக்கள் ஆன்மீகத்தில் மிகுந்த ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டவர்கள் . அதனால்தான் இப் பங்கிலிருந்து இதுவரையில் 55 அருட்சகோதரிகள், மற்றும் 14 அருட்பணியாளர்கள் உருவாகியுள்ளனர்.

மண்ணின் மைந்தர்களான அருட்பணியாளர்களின் பெயர்கள் :

1. Fr பெஞ்சமின் M. செபாஸ்டின்
2. Fr A. ஜோசப் ராஜ்
3. Fr D. செலஸ்டின் பெல்கியூர்
4. Fr M.எட்வர்ட் சேவியர்
5. Fr G.Pஅமல்ராஜ்
6. Fr P. தீஸ்மாஸ்
7. Fr M.டேவிட் மைக்கேல்
8. Fr A.ஆன்றனி செலஸ்டின் ஜெயபாலன்
9. Fr பிரான்சிஸ் M. செபாஸ்டின்
10. Fr V. டோமினிக் சாவியோ
11. Fr P. சகாய பெஞ்சமின்
12. Fr எக்கர்மன்ஸ் மைக்கிள்
13. Fr பெலிக்ஸ் ஆன்றனி
14. Fr J.மரிய ஆன்றோ கால்வின்.

மாடத்தட்டுவிளை ஊர் மிக பெரிய ஊர் சுமார் 1526 குடும்பங்கள் 50 அன்பியங்கள் எனக் கொண்டு ஐந்து மண்டலங்களை உள்டக்கியது.

அவை :

1.தென்மேற்கு தெரு.
2.வடக்குத் தெரு. 3.கிழக்குத் தெரு. 4.குதிரைபந்திவிளை. 5.பண்டாரக்காடு.

மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது கூட புனித செபஸ்தியார் பெயர் வருமாறு பார்த்துக் கொள்வர் என்பது, இம் மக்கள் புனிதரின் மேல் கொண்டுள்ள ஆழ்ந்த பற்றுதலை காண்பிக்கிறது. மக்கள் ஜெபமாலை செய்வதற்கும் புனிதர்களின் புகழ்மாலை ஜெபிக்கும் விதமாக பல இடங்களில் குருசடிகளை கட்டி ஜெபித்தார்கள். அவைகளில் வலியகண்டரை (கல்வியல் கல்லூரி அருகாமையில்) மிக்கேல் சன்மனசானவர் குருசடியும், பண்டாரக்காடு பகுதியில் புனித அந்தோனியார் குருசடியும், குதிரைபந்திவிளை பகுதியிலும் புனித அந்தோனியார் குருசடியும், வில்லுகுறி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் புனித செபஸ்தியார் குருசடியும், அந்தி சந்தை பகுதியில் மாதா குருசடி கட்டி மக்கள் வழிபாட்டுத்தலமாக பயன்படுத்தி வருகின்றனர்.

சுதந்திர போராட்டத்தில் இப் பகுதி மக்கள் 18 நபர்கள் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார்கள். அதில் திரு இராயப்பர் என்பவர் உயிர் தியாகம் செய்துள்ளார். இவரின் நினைவாக புனித லாரன்ஸ் மேல் நிலைப் பள்ளியில் நினைவுச் சின்னம் அமைக்க பட்டுள்ளது சிறப்புக்குரியது.

தனிப் பங்காகி நூற்றாண்டு கண்ட மாடத்தட்டுவிளை ஆலய மக்களின் சிறப்பு கொண்டாட்டம் புனித செபஸ்தியார் திருவிழாவான ஜனவரி 20/01/2019 அன்று முடிவடைகிறது.

தனிப்பங்காகி 100 ஆண்டை நிறைவு செய்து [1918 - 2018] புதிய நூற்றாண்டில் அடி எடுத்து வைக்கும் மாடத்தட்டுவிளை பங்கு செய்து வரும் நற்பணிகளுக்கு புதிய இலக்கு அமைத்து பல்வேறு கோணங்களில் அவற்றின் பரிணாம வளர்ச்சிப் பாதைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற நோக்கில் ஓராண்டுகால சிறப்பு திட்ட வழிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன.

அவை:
1.குழந்தை இயேசு குடில் திட்டம்.( வீடு இல்லாதவருக்கு வீடு கட்டி கொடுப்து)

2.நற்செய்தி பணித் திட்டம்.

3.நல்ல சமாரியன் மருத்துவ உதவித் திட்டம்.

4.அருட்பணி சூசைமிக்கேல் கல்வி உதவித் திட்டம்.

5. கானாவூர் திருமண உதவித் திட்டம்.

6. சுஐன்தாரா குடிநீர் திட்டம்..

ஆகியவற்றுடன் திருக்குடும்ப திரு இயக்கத்தார் நடத்தும் கண்தானம், இரத்த தானம், உடல்தானம் , பக்த சபை இயக்கம், இளைஞர் இயக்கம், மரியாயின் சேனை,இயேசுவின் திருஇருதய சபையினர், மாதா சபை, பாலர் சபை, கத்தோலிக்க சேவா சங்கம் மற்றும் அன்பியம் மேற்கொண்டு வரும் அறவளி திட்டமும், தற்போது 100 ஆம் ஆண்டு விழாவை கொண்டாடிய மறைக்கல்வி மன்றமும் ஆற்றி வரும் நற்பணிகள் மிகப் பல என்பது இப்பங்கு தளத்தை வளர்ச்சியின் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி ஜெயக்குமார் அவர்களால் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு பெற பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

இவ்வாறாக பல்வேறு நிலைகளிலும் வளர்ச்சி பெற்று, குழித்துறை மறை மாவட்டத்தின் மற்ற பங்கு தளங்களுக்கு முன்மாதிரியாக விளங்கி வருகின்ற மாடத்தட்டுவிளை - புனித செபஸ்தியார் ஆலய இறை சமூகத்திற்கு நூற்றாண்டு விழா வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டு எமது பதிவின் 100 வது ஆலயத்தை நூற்றுக்கு நூறு மன நிறைவுடன் இறைவனின் பாதம் சமர்ப்பிக்கின்றோம்.