666 தூய லூர்து அன்னை ஆலயம் மேல்சித்தாமூர்

           

தூய லூர்து அன்னை ஆலயம்

இடம் : மேல்சித்தாமூர் -செஞ்சி

மாவட்டம் : விழுப்புரம்

மறைமாவட்டம் : புதுவை -கடலூர் உயர் மறைமாவட்டம்

மறைவட்டம் : திண்டிவனம்

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித சூசையப்பர் ஆலயம், இளமங்கலம்

2. புனித அந்தோனியார் ஆலயம், தாமனூர்

3. புனித லூர்து அன்னை ஆலயம், துடுப்பாக்கம்

4. இருதய ஆண்டவர் ஆலயம், அருகாவூர்

5. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், தீவனூர்

6. புனித ஜென்மராக்கினி அன்னை ஆலயம், தணில்

7. புனித அருளம்மாள் ஆலயம், வெங்கந்தூர்

8. புனித கார்மேல் அன்னை ஆலயம், ரெட்டனை

9. பள்ளிகுளம்

10. மேல்கூத்தப்பாக்கம்

11. விழுக்கம்

12. கொணக்கம்பட்டு

13. மேல்பேரடிக்குப்பம்

14. நாட்டார்மங்கலம்

15. வல்லம்

16. ராஜாம்புலியூர்

17. வீரணாமூர்

18. முக்குணம்

19. தொண்டூர்

20. சின்னகரம்

பங்குத்தந்தை : அருள்திரு. அ. ஆரோக்கியதாஸ்

குடும்பங்கள் :  420 (கிளைப்பங்குகள் சேர்த்து 900) 

அன்பியங்கள் : 6

வழிபாட்டு நேரங்கள் : 

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணி

வாரநாட்களில் திருப்பலி : காலை 06.00 மணி

செவ்வாய் மாலை 06.30 மணி திருப்பலி

முதல் வெள்ளி மாலை 06.30 மணி திருப்பலி, ஆராதனை

முதல் சனி மாலை 06.00 மணி தேர்பவனி, திருப்பலி

பௌர்ணமி அமாவாசை சிறப்பு வழிபாடு

ஒவ்வொரு மாதத்தின் 11ம் தேதி தூய லூர்து அன்னை நவநாள் திருப்பலி, சிறப்பு ஜெபவழிபாடு

திருவிழா : பெப்ரவரி மாதம் 02-ம் தேதி கொடியேற்றம். 11-ம் தேதி திருவிழா

மண்ணின் இறையழைத்தல்கள்:

அருட்பணியாளர்கள்:

1. அருள்திரு. S. திவ்யநாதன், SVD

2. அருள்திரு. S. ஜான்பீட்டர், HGN

3. அருள்திரு. S. சின்னப்பன், OMI

4. அருள்திரு. P.  தொபியாஸ், OMI (late)

5. அருள்திரு. A. ஜோசப்ராஜ் (புதுவை -கடலூர்)

6. அருள்திரு. M. நிக்கோலாஸ், MSFS

7. அருள்திரு. L. சுரேஷ், SDB (தாமனூர்)

8. அருள்திரு. R.  வனத்துராஜ், HGN (இளமங்கலம்)

9. அருள்திரு. P. அபில்ராஜ், HGN

10. அருள்திரு. A. பிலிப் அந்தோணி (திருச்சி)

11. அருள்திரு. A. எட்வின்ராஜ், HGN

அருட்சகோதரிகள்:

1. Sr. M. டேவிட் SSAM

2. Sr. M. மேரி பயஸ் SSAM

3. Sr. M. மரியா SSAM

4. Sr. M. செக்குந்தா SSAM

5. Sr. S. ஜான் பெர்க்மான்ஸ் SJC

6. Sr. A. பேபி தெரேசா FSAG

7. Sr. F. நெல்லி SSAM

8. Sr. P. சிறிய புஷ்பம் SJC

9. Sr. D. மேரி பவுலின் SSHJ

10. Sr. A. பெரியநாயகி CSA

11. Sr. M. ஜெயராக்கினி SSAM

12. Sr. P. ஜோஷினா SJC

13. Sr. R. ரீட்டா SMSM

14. Sr. D. ரீட்டா FSAG

15. Sr. C. கிரேசியா FSPM

16. Sr. R. வேளாங்கண்ணி CSSH

17. Sr. A. லூர்துமேரி FSAG

18. Sr. V. புனிதா மேரி FSAG

19. Sr. S. ஜெயகுமாரி FSJ

20. Sr. I. டெல்பின் FSJ

21. Sr. A. பிலோமினா FSJ

22. Sr. J. பியூலா இம்மாகுலேட் SJC

23. Sr. S. ஜாய்ஸ் பிரீத்தி FBS

வழித்தடம் : திண்டிவனம் -தீவனூர் -வல்லம் -மேல்சித்தாமூர்

திருவண்ணாமலை -செஞ்சி -வல்லம் -மேல்சித்தாமூர்

Location map : https://g.co/kgs/kXftbm

வரலாறு:

மேல்சித்தாமூர் திரு அவையின் தொடக்கம்...

"நாள்தோறும் ஆண்டவர் தமது பேரன்பைப் பொழிகின்றார்; இரவுதோறும் நான் அவரைப் பாடுவேன்; எனக்கு வாழ்வளிக்கும் இறைவனை நோக்கி மன்றாடுவேன்".

திருப்பாடல்கள் 42:8

புதுவை கடலூர் உயர் மறைமாவட்டத்தில் உள்ள பழைமையான பங்குகளில் ஒன்று தான் மேல்சித்தாமூர். திண்டிவனம் செஞ்சி நெடுஞ்சாலையில் வல்லம் என்கிற ஊரிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் மேல்சித்தாமூர் அமைந்துள்ளது. இந்த ஊரில் பல ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர்கள் வாழ்ந்து வந்ததால் சித்தாமூர் எனப் பெயர் பெற்று விளங்குகிறது. இந்த ஊரில் உள்ள ஜைனர்களின் சமண மதக்கோவில் இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய பழைமையான கோவிலாகும்.

கி.பி 1850 ஆம் ஆண்டில் குள்ளன் -ராமாயி தம்பதியர் இவ்வூரில் வாழ்ந்து வந்தனர். நயினார் என்பவரின் வயலில் குள்ளன் வேலை செய்து வந்தார். முதலாளியின் கொடுமையையும், அடி உதையையும் தாங்க முடியாத குள்ளன் இரவோடு இரவாக தப்பித்து, தனது மனைவியுடன் சென்னைக்கு  சென்றார். அங்கு அயர்லாந்து நாட்டு கிறிஸ்தவ தம்பதியரிடம் தஞ்சம் புகுந்து, அவர்களிடம் பணிபுரிந்து வந்தனர். அவர்களது கிறிஸ்தவ பக்தி முயற்சிகளில் இவர்களும் பங்கெடுத்து வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அயர்லாந்து தம்பதியர் ஐதராபாத் நகருக்கு குடியேறிச் சென்ற போது இவர்களும் கூடவே சென்றனர்.

ராமாயி, தமக்கு குழந்தை செல்வம் இல்லை என்ற வருத்தத்தினால், அவளது விருப்பத்தின்படி  ஐதராபாத்திலேயே சோலை என்பவரை இரண்டாவது மனைவியாக குள்ளன் திருமணம் செய்தார். இவர்களுக்கு மதுரை என்ற மகன் பிறந்தான். இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் அயர்லாந்து தம்பதியினர் தங்களது நாட்டிற்கு சென்றுவிடவே, குள்ளன் தமது குடும்பத்துடன் மீண்டும் மேல்சித்தாமூரில் வந்து குடியேற நேரிட்டது.

1876 ஆம் ஆண்டில் மேல்சித்தாமூரில் பஞ்சம் தலைவிரித்தாடியது. ஆகவே குள்ளன் தாம் சேமித்து வைத்திருந்த அனைத்தையும் செலவளிக்க நேர்ந்தது. இவ்வேளையில் குள்ளனும் இறந்து போகவே அவரது குடும்பம் மிகுந்த வறுமையில் வாடியது. எனவே அயர்லாந்து தம்பதியினர் ஏற்கனவே கொடுத்திருந்த அறிவுரையின் பேரில் மேல்சித்தாமூரில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள அணிலாடி -யில் பங்குத்தந்தையாக பணிபுரிந்து வந்த அருள்திரு. புர்காட் அவர்களை சந்திக்கச் சென்றனர். அங்கு அவர்கள் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவர்கள் ஆனார்கள். 

சிலநாட்களுக்குப் பின்னர் ராமாயியும் இறந்து போகவே மேல்சித்தாமூரில், சோலை தன் பிள்ளைகளோடு விசுவாசமிக்க கிறிஸ்தவளாக வாழ்ந்து வந்தார். இவரது வழியாக மேல்சித்தாமூரில் அனைவரும் கிறிஸ்துவை அறிய முற்பட்டனர். ஆகவே அணிலாடி சென்று அருள்திரு. புர்காட் அவர்களிடம் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவர்களாயினர். இவ்வாறு மூன்று மாதத்திற்கு பின்னர் அனைவரும் கிறிஸ்தவர்கள் ஆயினர். இவர்களை சோலை கிறிஸ்தவ நெறியில் வழிநடத்தி வந்தார். அவர் இறந்த பிறகு அவரது மகன் மதுரை வழிநடத்தி வந்தார். முதல் கிறிஸ்துவரான மதுரை, அருள்திரு. புர்காட் அவர்களுக்கு உதவி புரிவதிலும் மக்களை ஒருங்கிணைத்து புதிய ஆலயம் 1884 ஆம் ஆண்டில் கட்டுவதிலும்  சிறப்பாக வழிநடத்தினார். இவ்வாறு இந்த ஏழை தலித் இன மக்களது கிறிஸ்தவ வாழ்வுக்கான மாற்றம் மேல்சித்தாமூரை சுற்றியுள்ள ஏறக்குறைய 30 கிராமங்களும் கிறிஸ்துவை அறிந்து அவரை பின்பற்ற வழிவகுத்தது.

அருட்பணி. புர்காட் அடிகளாரின் அடிச்சுவடுகளில்...

1875 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியால் நீர் நிலைகள் வறண்டன. மக்கள் குடிநீருக்கே தவியாய் தவித்தனர். கால்நடைகள் மடிந்தன. காலரா, பெரியம்மை போன்ற கொடிய நோய்களால் மக்கள் பலர் மடிந்தனர். இவ்வேளையில் இறைபராமரிப்பு மக்களை கைவிடவில்லை.

பாரீஸ் வேத போதக சபையை சேர்ந்த அருட்பணி. புர்காட் அடிகளார் அணிலாடியை மறைப்பரப்பு தளமாகக் கொண்டு, மறைப்பரப்பு பணியை ஓய்வின்றி செய்து வந்தார். மக்களுக்கு உணவளித்தார், உடையளித்தார், பிணிபோக்க மருத்துவ உதவி தந்தார். ஆகவே இன்னலுற்ற மக்கள் கூட்டம் கூட்டமாக அவரை நாடிச் சென்றனர். அருட்பணி. புர்காட் அடிகளாரின் மறைப்பணியால் மேல்சித்தாமூரில் கிறிஸ்தவம் பரவத் தொடங்கியது.

இவ்வாறு 1875 லிருந்து கிறிஸ்தவ திருமறையை ஏற்றுக் கொண்ட மக்களை தமது கண்ணின்மணி போல அருட்பணி. புர்காட் அடிகளார் காத்து நடத்தி வந்தார். இவ்வேளையில் 1877 ஆம் ஆண்டு ஒரு சிற்றாலயம் கட்டப்பட்டது. 1884 ஆம் ஆண்டு ஆலயம் கட்டப்பட்டது. மேலும் நான்கு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, அதில் புளியமரங்கள் வைக்கப்பட்டு, அதனை பராமரிப்பதன் வாயிலாக மக்களுக்கு வேலையும் கொடுக்கப் பட்டது.  

பேராயர் ஜோசப் காந்தி அவர்கள் அணிலாடி, சித்தாமூர், செஞ்சி பகுதிகளை பார்வையிட 1892 ஆம் ஆண்டு வந்த போது, ஆகஸ்ட் 11ம் தேதி மேல்சித்தாமூர் வந்தார். அப்போது மேல்சித்தாமூர் தனிப்பங்காக செயல்படும் என அறிவித்தார். செஞ்சியில் பணியாற்றிய அருட்பணி. காபிலெட் அடிகள் முதல் பங்குத்தந்தையாக அறிவிக்கப்பட்டு சில மாதங்கள் பணிபுரிந்தார்.

அதன்பிறகு அருட்பணி. ஜான்மரி ஷவனல் அவர்கள் 1893 ல் பொறுப்பேற்றார்.

மேல்சித்தாமூரின் அப்போஸ்தலர் அருட்பணி. ஜான்மரி ஷவனல் அடிகளாரின் அடிச்சுவடுகள்...

பிரான்ஸ் நாட்டின் லியோண் நகரில் பிறந்த அருட்பணி. ஜான்மரி ஷவனல் (தாத்தா சாமியார்) அவர்கள், மருத்துவ படிப்பு படித்து வந்த போது மனமாற்றம் பெற்று, பாரீஸ் அந்நிய வேதபோதக சபையில் இணைந்து அருட்பணியாளர் ஆனார். இந்தியாவிற்கு மிஷனரியாக அனுப்பப்பட்டு, திண்டிவனத்தில் பணிபுரிந்த அருட்பணி. போரே அவர்களுக்கு உதவியாளராக பணியாற்றி, வயதான குருக்களை பராமரித்து வந்தார். 1883 ஆம் ஆண்டு மேல்சித்தாமூரின் பங்குத்தந்தையானார். இவரது மருத்துவ கலையால் பலர் நலம்பெற்றதுடன், கிறிஸ்துவை அறிந்து திருமறையில் இணைந்தனர். 

1918 ஆம் ஆண்டில் கன்புளுயன்ஸா காய்ச்சல் தலைவிரித்தாடி மக்களை மடியச் செய்து வந்தது. அப்போது அருட்பணி. ஜான்மரி ஷவனல் அவர்கள் குதிரையில் கிராமம் கிராமமாக சென்று அங்கேயே கூடாரம் அமைத்து அவர்கள் கொடுக்கும் எளிய உணவுகளை உண்டு, மருத்துவம் செய்து வந்தார். இவரது மறைப்பரப்பு பணியால் தணில், இளமங்கலம், நாட்டார்மங்கலம், நங்கிலிகொண்டான், அருகாவூர், கடம்பூர், தீவனூர், தாமனூர் போன்ற ஊர்களில் பலர் மனந்திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர்.

பங்கின் எல்லையை விரிவாக்கம் செய்ய ஆங்காங்கே நிலங்களை வாங்கி ஆலயங்கள் அமைக்க வழிவகை செய்தார். மேல்சித்தாமூரிலும் நிலம் வாங்கி, அதில் புளியமரங்களை நட்டு மக்களுக்கு வேலையளித்தார்.

1906 ஆம் ஆண்டு கூரைப்பள்ளியை அமைத்து மாணவர்களுக்கு கல்வியறிவை ஊட்டினார். ஆனால் மக்கள் கல்வியைப் பெறுவதில் ஆர்வம் கொள்ளாமலும், ஆலயம் செல்வதில் நாட்டம் கொள்ளாமலும், வெறும் உடல் சார்ந்த தேவைகளில் அதிகம் அக்கறை காட்டியதால் மிகவும் சோர்ந்து போனார்.

கடும் பஞ்சம், வேலைவாய்ப்பின்மையால் மக்களில் பலர் வெளியூர் செல்ல ஆயத்தம் செய்வதையறிந்து, 1917 ஆண்டில் மக்களுக்கு உணவளித்து வேலை கொடுக்க மக்களின் உதவியுடன் பழைய அறைவீட்டை கட்டினார். 

இவ்வாறு மக்களின் ஆன்மீக, சமூக பொருளாதார, கல்வி,  தேவைக்காகவே தம்மை முழுமையாக அர்ப்பணித்தார். இருந்தும் மக்கள் அறியாமையால் 'எங்களுக்கு என்ன உதவி செய்தீர்....?' என்று கேட்டு வாக்குவாதம் செய்த போது, உடைந்து போனார் நல்ல மேய்ப்பன். 

"நான் கூப்பிட்டேன், நீங்களோ செவிசாய்க்க மறுத்தீர்கள்; உங்களை அரவணைக்கக் கையை நீட்டினேன்; எவரும் கவனிக்கவில்லை"

நீதிமொழிகள் 1:24

இந்த மனக்கவலையில் 01.06.1937 அன்று பங்கை விட்டுச் சென்றார், மூன்று மாதங்களில் இறைவனடி சேர்ந்தார். இவ்வாறு 44 ஆண்டுகள் மேல்சித்தாமூர் பங்கின் உண்மையான மேய்ப்பனாக, ஆசானாக, மருத்துவராக இயேசுவுக்கு பிரமாணிக்கம் உள்ள ஊழியராக விளங்கினார்.

"நேர்மையாளரின் பாதை வைகறை ஒளி போன்றது; அது மேன்மேலும் பெருகி நண்பகலாகின்றது"

நீதிமொழிகள்4:18

1984 ஆம் ஆண்டில் இரண்டாவது ஆலயம் கட்டப்பட்டது.

புதிய அறைவீடு கட்டப்பட்டு 15.02.2015 அன்று திறந்து வைக்கப் பட்டது.

மண்ணின் மைந்தர் அருட்பணி. S. ஜான்பீட்டர் HGN அவர்களின் குருத்துவ வெள்ளிவிழா நினைவாக அவரது முழுமுயற்சி மற்றும் உதவிகளுடன், பங்குத்தந்தை அருட்பணி. ஆரோக்கியதாஸ் அவர்களின் வழிகாட்டுதலில் பங்கு மக்களின் நன்கொடைகள் மற்றும் ஒத்துழைப்புடன் புதிய மூன்றாவது ஆலயம் கட்டப்பட்டு 05.01.2019 அன்று செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் மேதகு நீதிநாதன் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

இவ்வாறாக மேல்சித்தாமூரில் 1884, 1984, 2019 ஆகிய ஆண்டுகளில் கட்டப்பட்ட மூன்று ஆலயங்கள் இன்றளவும் உள்ளது குறிப்பிடத் தக்கது.

மேலும் தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. ஆரோக்கியதாஸ் அவர்கள் 2012-ம் ஆண்டு முதல் பணிப்பொறுப்பேற்று 9 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வருகின்றார்.

விசுவாசக் கோபுரம்:

2012 மே மாதத்தில் கட்டப்பட்டது. இதில் இரக்கத்தின் ஆண்டவர், இரக்கத்தின் அன்னை சுரூபங்கள் உள்ளன.

குளூனி சபை அருட்சகோதரிகள்:

24.06.1979 அன்று கனானியர் இல்லம் அமைக்கப்பட்டு, புனித சூசையப்பரின் குளூனி அருட்சகோதரிகள் இம்மண்ணில் பணியாற்ற தொடங்கினர். சுகாதார நிலலயம் மற்றும் தொடக்கப்பள்ளியை நடத்தி வந்தனர். புதிய இல்லம் கட்டப்பட்டு 14.10.1982 அன்று மேதகு ஆயர் செல்வநாதர் அவர்களால் திறந்து வைக்கப் பட்டது. புதிய புனித சூசையப்பர் சுகாதார நிலையம் கட்டப்பட்டு 23.09.1984 அன்று மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டில் குழந்தைகள் காப்பகம் துவக்கப் பட்டது. காப்பகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு 15.01.2003 அன்று திறந்து வைக்கப் பட்டது.

2009 ஆம் ஆண்டில் காப்பகம் மூடப்பட்டு, பல்நோக்கு சமூக சேவா சங்கத்தினரால் கணிணி மையமாக ஓராண்டு பயன்படுத்தப்பட்டது.

சுகாதார மையமானது 2012 ஆண்டு குடிபோதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வு மையமாக மாற்றம் பெற்றது. இவ்வாறு 41 ஆண்டுகளைக் கடந்து குளூனி சபை சகோதரிகளின் தன்னலமற்ற சேவை தொடர்கின்றது.

பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புகள்:

1. மறைக்கல்வி மன்றம்

2. மரியாயின் சேனை

3. புனித வின்சென்ட் தே பவுல் சபை

4. கோல்பிங் இயக்கம்

5. பீடப்பூக்கள்

6. பாடகற்குழு

7. இளையோர் குழு

8. திருவழிபாட்டுக் குழு

9. மகளிர் குழுக்கள்

பங்கில் உள்ள பள்ளிக்கூடங்கள்:

1. ஆர்.சி துவக்கப்பள்ளி, மேல்சித்தாமூர்

2. ஆர்.சி துவக்கப்பள்ளி, இளமங்கலம்

3. ஆர்.சி துவக்கப்பள்ளி, கடம்பூர் 

4. ஆர்.சி துவக்கப்பள்ளி, தாமனூர்

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

அருள்திரு. புர்காட் மேல்சித்தாமூர் மறைப்பணி (1875-1892)

1. அருள்திரு. காபிலெட் (1892-1893)

2. அருள்திரு. M. A. ஜான்மரி ஷவனல் (1893-1937)

3. அருள்திரு. T. J. ஜோசப் (1937-1939)

4. அருள்திரு. V. தோமஸ் (1939-1949)

5. அருள்திரு. பவுல் புத்தனங்காடி (1949-1959)

6. அருள்திரு. J.A.G.  தெக்ரைத்தர் (1959-1965)

7. அருள்திரு. M.  எம்மானுவேல் (1965-1973)

8. அருள்திரு. S. S. அந்தையா (1973-1976)

9. அருள்திரு. K. G. இருதயராஜ் (1976-1981)

10. அருள்திரு. P. A. சம்பத்குமார் (1981-1982)

11. அருள்திரு.‌ S.  அல்போன்ஸ் (1982-1984)

12. அருள்திரு. R. ஜோசப்ராஜ் (1984-1988)

அருள்திரு.‌ S. மணிவளன், SJ  (1987-1988) உதவி பங்குத்தந்தை

13. அருள்திரு. I. இரட்சகர் (1988-1994)

14. அருள்திரு. A. அந்தோணி (1994-1997)

15. அருள்திரு. I. ஜோசப் ஆல்பர்ட் (1997-2000)

16. அருள்திரு. R. ஆரோக்கியதாஸ் (2000-2005)

17. அருள்திரு.‌ C. சகாயராஜா (2005-2006)

18. அருள்திரு. A. செபாஸ்டின் (2006-2007)

19. அருள்திரு. S. ஆனந்தராஜ் (2007-2012)

அருள்திரு. S. பால் பெனடிக்ட், SJ (2010-2011) உதவி பங்குத்தந்தை 

20. அருள்திரு‌. A. ஆரோக்கியதாஸ் (2012 முதல்...)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. A. ஆரோக்கியதாஸ்

தகவல்கள் சேகரிப்பில் உதவி : மண்ணின் மைந்தர் அருட்பணி. A. பிலிப் அந்தோணி, திருச்சி மறைமாவட்டம்.