61 புனித அந்தோணியார் ஆலயம், முள்ளங்கனாவிளை

  

புனித அந்தோணியார் ஆலயம்

இடம் : முள்ளங்கனாவிளை

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : பங்குதளம்

கிளைகள் :
1. தூய அமலோற்பவ அன்னை ஆலயம், மாங்கரை.
2. புனித சூசையப்பர் ஆலயம், தாறாதட்டு.
3. இயேசு மரி இருதய ஆலயம், நட்டாலம் (பாலவிளை ஈழத்து விளை).

குடும்பங்கள் : 1200
அன்பியங்கள் : 30

ஞாயிறு திருப்பலி : காலை 08.15 மணிக்கு.

தினமும் காலை 06.30 மணி மற்றும் செவ்வாய் மாலை 05.30 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி.

பங்குத்தந்தை : அருட்பணி கில்பர்ட் லிங்சன்.

திருவிழா : ஜூன் மாதத்தில் பத்து நாட்கள்.

வரலாறு :

தொன்று தொட்டு களம் பல கண்ட வீரர்களையும், மேடை வழி கிறிஸ்தவத்தின் மதிப்பீடுகளை வெளிக்கொணர்ந்த கலைஞர்களையும், வர்மக் கலையில் முதிர்ந்த ஆசான்களையும், ஆயக்கலைகள் அனைத்தையும் கற்றறிந்து சமூகத்தைக் கட்டிக்காத்த பழம்பெரும் தலைவர்களையும் தன்னகத்தே கொண்டு தனிப்பெரும் முத்திரையோடு முத்தாய் விளங்குகின்ற பகுதி தான் 'முள்ளங்கனாவிளை' என்பதன் பொருள்.

இங்குள்ள இன்றைய காசிப்பாறை அன்றைய காசுப்பாறை. சில நூற்றாண்டுகள் முன்பு வரை பிராமணர்கள் வாழ்ந்த இடம். பாறையில் உரல் குடைந்து, உரலில் செம்புகளிட்டு அரைத்து அதில் காசுகள் செய்து பாறையில் காய வைத்து வணிகத்திற்கு பயன்படுத்திய வரலாறும் உண்டு. மேலும் இன்றைய கோனான்விளை பகுதியில் உள்ள சுரங்கமும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இங்குள்ள இயற்கை வளங்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. கிழக்கில் பனங்குழி மலைக்குன்றையும், மேற்கே வட்டப்பாறை சிந்தன் மலைக்குன்றையும், தெற்கே பெருஞ்சிறை மற்றும் தோப்புக்களத்தையும், வடக்கே புதுவல் மற்றும் கறுப்பன் மலைக்குன்றையும் அரணாகக் கொண்ட அழகிய ஊர் முள்ளங்கனாவிளை. இத்தோடு குளங்களும் கால்வாய்களும் ஆங்காங்கே இடம்பெற்றதால் வழிநெடுகிலும் மரங்களையும், செழிப்பான வயல்வெளிகளையும் கொண்டு பச்சைப் பசேலென காணப்படும்.

ஆலயத்தின்ஆரம்ப காலமும் வளர்ச்சியும்:

தற்போதைய ஆலயத்தின் பின்பகுதியில் பனை ஓலையால் வேயப்பட்ட சிற்றாலயம் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு அமைந்திருந்ததாகவும், அக்காலத்தில் வடக்கன்குளம் பங்குத்தந்தை மாதம் ஒருமுறை இங்கு வந்து திருப்பலி நிறைவேற்றி மக்களுக்கு ஞான அறிவை கற்பித்ததாக அறியப்படுகிறது. இதே காலகட்டத்தில் இந்தியாவின் முதல் மறைசாட்சியாக விளங்கும் அருளாளர் தேவசகாயம் பிள்ளையை தற்போது புனித அந்தோணியார் குருசடிக்கு வடக்கே அமைந்துள்ள மயிலம்பறம்புவிளை வழியாக அடித்து துன்புறுத்தி இழுத்து சென்றதாகவும், அப்போது இங்கிருந்த ஊற்றிலிருந்து இப்பகுதி கிறிஸ்தவ மக்கள் தண்ணீர் கொடுத்து அவரது தாகம் தீர்த்ததாகவும் கூறப்படுகிறது.

சுமார் 160 ஆண்டுகளுக்கு முன் பனை ஓலையால் ஆன ஆலயத்தை மாற்றி சுற்றிலும் சுவர் எழுப்பி ஓடு வேயப்பட்டதாகவும் அறிந்து கொள்ள முடிகிறது. அன்றைய கொல்லம் மறை மாவட்டத்தின் கீழ் இருந்த போது ஆயர் மேதகு அலாய்சியஸ் மரிய பென்சிகர் அடிமட்ட மக்களின் வாழ்க்கை தரம் உயர தம்மை முழுமையாக அர்ப்பணித்தார். அதற்குக் கருவியாக அருட்பணி பீட்டர் தாமஸ் செயல்பட்டு 1908 ல் புதிய ஆலயப்பணி தொடங்கி 13-06-1910 அன்று அர்ச்சிக்கப்பட்டது. அக் காலத்தில் முளகுமூடு பங்கின் கிளையாக இருந்தது.

அருட்பணி வர்க்கீஸ் அவர்களின் பணிக்காலத்தில் தனிப்பங்காக ஆக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு 1936 ம் ஆண்டில் தனிப் பங்காக உயர்ந்தது. தனிப்பங்கின் முதல் அருட்பணியாளராக பணி சூசை மிக்கேல் இருந்தார். இவரது பணிக் காலத்தில் இயேசுவின் கல்வாரிப் பாதையை மக்கள் இதயங்களில் நினைவு கூற "பங்கு " என்ற புனித நிகழ்ச்சி கலை வடிவம் பெற்று அரங்கேற்றப் பட்டதோடு, புனிதர்களின் வாழ்க்கை வரலாறு இம் மண்ணின்நாடகக் கலைஞர்களால் 7 நாட்கள் வரை நடத்தப் பட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் இதில் கலந்து கொண்டு இறை நம்பிக்கை மென்மேலும் வளர உதவினார். 1936ம் ஆண்டு ஆரம்பப் பள்ளி ஆரம்பிக்கப் பட்டு மலையாள மொழிக் கல்வி கற்பிக்பட்டு வந்தது. 1939 ம் ஆண்டு புனித அந்தோணியார் குருசடி கட்டப்படு அர்ச்சிக்கப் பட்டது. இக் காலத்தில் தான் குருத்தோலை பவனி முதன் முதலாக குருசடியிலிருந்து ஆரம்பித்து ஆலயம் வரை கொண்டு வரப்பட்டு குருத்தோலை ஞாயிறை சிறப்பிக்கும் வழக்கம் ஆரம்பிக்கப் பட்டது.

அருட்பணி லாசர் பணிக்காலத்தில் (1948 முதல் 1959 வரை) சமூக ஈடுபாட்டுடன் பங்கின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றியதோடு, வீதிகளில் இரவு பகல் பாராது நடந்து சென்று ஜெபமாலை செய்து மக்களுக்கு இறை பணி செய்தார். மேலும் இங்குள்ள பள்ளிக்கூடத்தில் மலையாள மொழியுடன் தமிழ் வழிக் கல்வியும் கிடைத்திட வழிவகுத்தார். இவருடைய பணிக்காலத்தில் தற்போது காணப்படுகின்ற ஆலய முகப்பு உருவாக்கப்பட்டது. 11-02-1957 ல் ஆலயத்தின் வடக்குப் பகுதியில் லூர்து அன்னை கெபியும் உருவாக்கப் பட்டது. இயேசுவின் சிலுவைப்பாடுகளை மக்கள் உணரும் வண்ணம் புனித வெள்ளியன்று ஆலய தலைவாசலுக்கு பக்கத்தில் இருக்கும் இயேசு சொரூபத்தை கீழே இறக்கி 'தும்பாசம்' என்னும் நிகழ்ச்சியில் அனைவரையும் ஈடுபட வைத்தார்.

முள்ளங்கனாவிளையின் முதல் கிளைப்பங்காக 1952-1953 ல் மாங்கரை தூய அமலோற்பவ அன்னை ஆலயம் உருவானது. இவ்வாறு பங்கின் வளர்ச்சிக்கு வித்திட்ட பணி. லாசர் அவர்களை "பங்கு வளர்ச்சிக்கு வித்திட்ட இரும்பு மனிதர் " என்று கூறுகின்றனர்.

அருட்பணி டயனீசியஸ் பணிக்காலத்தில் (1959 - 1973) மக்களிடம் காணப்பட்ட மூடப்பழக்க வளக்கங்களைக் அகற்ற அரும்பாடு பட்டு அவர்களின் இறை விசுவாசத்தை ஆழப்படுத்தினார். இவரது பணிக்காலத்தில் தான் 2ம் வத்திக்கான் சங்கத்தின் முடிவுகள் கோட்டார் மறை மாவட்டத்தில் முதன் முதலாக இப்பங்கில் தான் உதயமானது.

ஞான உபதேச வகுப்புகள் மாபெரும் மலர்ச்சி ஏற்படுத்தி "மறைக்கல்வி" என்று பெயர் மாற்றம் பெற்றது. சிறுவர்களுக்கென்றிருந்த ஞான உபதேச வகுப்புகள் இளையோர் பெரியவர்களுக்குமான் மறைக்கல்வி வகுப்பாக மாற்றம் பெற்றது.

1962 ல் அருட் சகோதரிகள் இல்லம் உருவானது.

அருட்பணி ஜோசப் பணிக்காலத்தில்(1973-1978) 2ம் வத்திக்கான் சங்க தீர்மானங்களை நிறைவேற்றும் வகையில் முதன் முதலில் பங்குப் பேரவை கூட்டப்பட்டது. நிதி பொறுப்பும் பங்குப் பேரவையிடம் ஒப்படைத்தார். அருளாளர் தேவசகாயம் பிள்ளை பிறந்த ஊரான நட்டாலத்தில் குருசடி மற்றும் முள்ளங்கனாவிளை சந்திப்பில் புனித அந்தோணியார் குருசடியும் புதுப் பொலிவுடன் கட்டப்பட்டது.

அருட்பணி அல்போன்ஸ் பணிக்காலத்தில் பங்கில் அருங்கொடை இயக்கத்தை துவங்கி பொதுநிலையினரை இறைவார்த்தைப் பணிக்கு அழைத்து மறுமலர்ச்சி ஏற்படுத்தினார். மேலும் நல்மரணசபை, வின்சென்ட் தே பவுல் சங்கம் போன்றவற்றையும் ஆரம்பித்தார்.

அருட்பணி தனிஸ்லாஸ் இளைஞர்களை ஒருங்கிணைத்து திட்டங்கள் பல தீட்டியதுடன் மறைக்கல்வியில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்தார்.

அருட்பணி அருளப்பன் பணிக்காலத்தில் ஜெபக்குழு மென்மேலும் வளர்த்தெடுக்கப் பட்டது. காசிப்பாறை முதல் செவ்வேலி வரை சாலை அமைக்க வழிவகை செய்தார்.

அருட்பணி கஸ்பார் பணிக்காலத்தில் பங்கில் 17 அன்பியங்கள் உருவாக்கப்பட்டு அருட்பணிப்பேரவைவை மீண்டும் ஆரம்பித்து பங்கேற்பு அமைப்புகளை வலுவாக்கினார்.

மேலும் வழிபாட்டில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க, பாடல் குழுவில் ஆண்களையும் சேர்த்து வழிபாட்டிற்கு மெருகூட்டினார். பங்கில் இறையரசு இயக்கம், கிறிஸ்தவ வாழ்வு சமூகம் இவற்றையும் ஆரம்பித்தார்.

அருட்பணி ஜார்ஜ் அவர்களின் பணிக்காலத்தில் பொதுவுடமையை அனைவர் உள்ளத்திலும் உருவாக்கிய இலட்சியவாதியாக திகழ்ந்தார். வீட்டிற்கொரு விவிலியம் என்ற திட்டத்தை செயல்படுத்தி மக்களை அருள்வாழ்வில் நிலைத்திருக்கச் செய்தார். மறைக்கல்வியில் ஆசிரியராகவும் இருந்து சிறப்பாக பணியாற்றினார். புனித அந்தோணியார் கலையரங்கம் உருவாக அடித்தளம் அமைத்தார். இல்லற வாழ்வின் மேன்மையை பெருமைப் படுத்தும் பொருட்டு அன்பியங்களில் குடும்ப நலக்குழுவையும் ஏற்படுத்தினார். கலை, எழுத்து, பேச்சாளர் பேரவை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து திறமையாளர்களை வளர்த்தெடுத்தார். ஏழை மாணவர் நிதி ஏற்படுத்தப்பட்டு வறுமையின் காரணமாக படிப்பை தொடர இயலாத மாணவர்களுக்கு உதவ வழிவகுத்தார். மத நல்லிணக்கத்தை காக்கும் பொருட்டு ஐக்கிய கிறிஸ்துமஸ் விழாவை பிற மதத்தினருடன் சிறப்பாக கொண்டாட செய்தார். நலிவுற்ற ஏழைகள் மீது கரிசனம் கொண்டு 'நலிந்தோர் நிதி', 'ஏழைப் பெண்கள் திருமண உதவித்தொகை' திட்டங்களையும் உருவாக்கினார். தண்ணீர், மின்சாரம், மது ஒழிப்பு ஆகியவற்றிற்காகப் போராட்டங்கள் நடத்தி வெற்றி பெற்றார்.

அருட்பணி மரிய அற்புதம் பணிக்காலத்தில் கலையரங்கம் 1998ல் கட்டிமுடிக்கப்பட்டது. அன்பியங்களின் எண்ணிக்கையை 17 லிருந்து 27 ஆக உயர்த்தினார். சமூக சேவைக்காக, அமைதிக்குழு, பயிற்சிக்குழு உருவாக்கினார். மேலும் நூலகம் ஒன்று அமைத்தார்.

அருட்பணி விக்டர் பணிக்காலத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டார் . அருட்பணி லியோ அலக்ஸ் பணிக்காலத்தில் ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டு 14-01-2009 ல் அர்ச்சிக்கப் பட்டது.

மேலும் அருட்பணி பென்னி மற்றும் அருட்பணி கலிஸ்டஸ் பணிக்காலங்களிலும் பல்வேறு வளர்ச்சிக்கு காரணமாக இருந்தனர்.

இம்மண்ணின் முதல் அருட்பணியார் பணி. கபிரியேல் ஆவார். இதுவரையில் இங்கிருந்து 8 அருட்பணியாளர்களும் 40 ற்கும் மேற்பட்ட அருட்சகோதரிகளும் உருவாகி உள்ளனர்.

தற்போது அருட்பணி. கில்பர்ட் லிங்சன் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு பங்கை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்து செல்கின்றார்.

(ஆலய வரலாறு விழா மலரிலிருந்து தொகுக்கப் பட்டது)