30 கிறிஸ்து அரசர் ஆலயம், இருதயபுரம்


கிறிஸ்து அரசர் ஆலயம்.

இடம் : இருதயபுரம், குளப்புறம் அஞ்சல்.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

நிலை : பங்கு தளம்
கிளை: தூய மரியன்னை ஆலயம், மண்ணான்விளை

குடும்பங்கள் : 320
அன்பியங்கள் : 10

ஞாயிறு திருப்பலி : காலை 09.00 மணிக்கு.

பங்குத்தந்தை (2018): அருட்பணி ஜெயபாலன்.

திருவிழா : நவம்பர் மாதம் கிறிஸ்து அரசர் விழாவை ஒட்டிய ஐந்து நாட்கள்.

இருதயபுரமானது, களியக்காவிளை -கொல்லங்கோடு சாலையில் செறுவாரக்கோணம் பகுதியில் அமைந்துள்ளது.

வரலாறு :

கி.பி 1945 -ஆம் ஆண்டு சிலுவைபுரம் பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்த இருதயபுரம், பங்குத்தந்தை அருட்பணி. போர்ஜியோ தலைமையில் சுமார் 25 குடும்பங்களைக் கொண்டு, ஒரு ஓலைக் குடிசையில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 1947 -ஆம் ஆண்டு ஓட்டுக் கட்டிடம் அமைக்கப் பட்டு, கிறிஸ்து அரசருக்கு அர்ப்பணிக்கப் பட்டு, ஞாயிறு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. மற்ற நாட்களில் ஆரம்பப் பள்ளியாகவும் இயங்கி வந்தது. 

தொடர்ந்து அருட்பணியாளர்கள் ஜோசப், அந்தோணி முத்து, தனிஸ்லாஸ், மெல்லார்டு, ஏசுதாஸ், லியோன் அ. தர்மராஜ் ஆண்டகை ஆகியோரின் இறைப் பணியால் மேலும் 60 குடும்பங்கள் கிறிஸ்துவில் இணைந்தனர். 

1956 ஆம் ஆண்டு ஆரம்பப் பள்ளியாக செயல்பட்டு வந்த பள்ளிக்கூடம், நடுநிலைப் பள்ளியாக உயர்த்தப் பட்டது. 

1980 ஆம் ஆண்டு முதல் களியக்காவிளை பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது. 

அருட்பணி. வின்சென்ட் மற்றும் அருட்பணி. ஜோண்ஸ் ஆகியோரின் முயற்சியால் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டது. 

1983 ஆம் ஆண்டு அருட்பணி. ஜூலியஸ் மற்றும் அருட்பணி. ஆன்றனி அல்காந்தர் ஆகியோரின் முயற்சியால் உயர்நிலைப் பள்ளிக்கு இரண்டு அடுக்கு கட்டிடம் கட்டப்பட்டது. 

அருட்பணி. ஏசுதாஸ் தோமஸ், அருட்பணி. அம்புறோஸ் ஆகியோரின் முயற்சியால் புதிய ஆலயம் கட்டப்பட்டு 12.03.1975 அன்று அர்ச்சிக்கப் பட்டது. 

அருட்பணி. பெனடிக்ட் M. D. ஆனலின், அருட்பணி. பெர்பெச்சுவல் ஆகியோரின் முயற்சியில் ஆன்மீக வளர்ச்சியுடன், பல வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப் பட்டன. 

மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களின் பேருதவியால் 03.06.2002 அன்று தனிப் பங்காக உயர்த்தப் பட்டு, முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. சுஜன் குமார் அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக வழி நடத்தினார்கள்.

அருட்பணி. R. பால் ரிச்சர்ட் ஜோசப் அவர்களின் பணிக்காலத்தில் பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் தற்போதைய புதிய ஆலயம் கட்டப்பட்டு, 22.11.2009 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.