556 புனித தந்தை பியோ ஆலயம், நடுக்கொண்டையம்பேட்டை


புனித தந்தை பியோ ஆலயம் 

இடம் : நடுக்கொண்டையம்பேட்டை, திருவானைக்காவல், திருச்சி -05.

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி 

மறைமாவட்டம் : கும்பகோணம்

மறைவட்டம் : இலால்குடி

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : அமல ஆசிரமம், ஸ்ரீரங்கம்

பங்குத்தந்தை : அருள்பணி. ஆ. தைனிஸ், கப்புச்சின் சபை

இணைப் பங்குத்தந்தை : அருள்பணி. இ. டேனியல் தயாபரன், கப்புச்சின் சபை 

குடும்பங்கள் : 35

அன்பியம் : 1 (புனித தந்தை பியோ) 

திருப்பலி : மாதத்தின் மூன்றாவது புதன்கிழமை, மாலை 07.30 மணிக்கு. 

திருவிழாக்கள் :

ஆலயத் திருவிழா : செப்டம்பர் 23 ம் தேதி. 

இதர திருவிழா : புனித அந்தோனியார் பொங்கல். 

வழித்தடம் :

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவானைக்காவல் மற்றும் திருவளர்சோலை வழியாக கல்லணை செல்லும் பேருந்துகள். நிறுத்தம் : நடுக்கொண்டையன்பேட்டை. 

வரலாறு : 

நுழைவு:

திருச்சி மலைக்கோட்டை மாநகர் திருவரங்கம் தீவில் திருவானைக்காவல் ஐந்து சிவத் தலங்களில்  நீர்த்தலமான  பெருங்கோவிலுக்கும், சென்னை புறவழிச்சாலைக்கும் இடைப்பட்ட பகுதி தான் கொண்டையம்பேட்டை. இப்பகுதி மாநகர எல்லைக்குள் இருந்தாலும் சிற்றூருக்குரிய பண்புகளை இன்றும் உள்ளடக்கி இருப்பது இதன் தனித்தன்மை. 

கொண்டையம்பேட்டையில் கிறிஸ்தவம்:

கொண்டையம் பேட்டையின் ஒருபகுதியான நடுக்கொண்டையம் பேட்டையில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் அனைவரும் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியவர்கள். கடந்த சில ஆண்டுகளாக கல்வியறிவு புகட்டப்பட்டு பலர் பட்டதாரிகளாகவும், அரசுப் பணியிலும் உள்ளனர். கிறிஸ்தவக் குடும்பங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. கிறிஸ்தவர்களில் பட்டதாரிகளாகவும், அரசுப் பணியிலும் இருப்பவர்கள் வெகுசிலரே. 1943 ஆம் ஆண்டு அமல ஆசிரமம் நிறுவப்பட்ட காலம் முதல் கப்புச்சின் அருள்பணியாளர்கள், இப்பகுதியில் மறைப்பணியாற்றி வருகின்றனர். துவக்கத்தில் இம்மக்களின் விசுவாச வாழ்வு பெயரளவிலேயே இருந்தது. எனவே அப்பகுதியில் ஓர் ஆலயம் எழுப்ப வேண்டும் என்ற எண்ணம் கூட எழவில்லை. 1954 ஆம் ஆண்டு அருள்பணி. டென்னிஸ், கப்புச்சின் அவர்களின் முயற்சியால் இம்மக்களின் விசுவாச வாழ்வு புதுப்பிக்கப்பட்டு, இன்றைய ஆலயம் அமைந்துள்ள,  இப்பகுதியில் தந்தை அவர்களால் ஒரு சிறு சிலுவைக்கல் நடப்பட்டது. இந்த சிலுவைக்கல் மட்டுமே இப்பகுதி மக்களின் விசுவாசத்திற்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக சாட்சியமாகத் திகழ்ந்தது. அந்த சிலுவைக்கல் இருக்கும் பகுதியில் சிறிய ஓலைக் கோவில் அமைக்கப்பட்டு, அம்மக்களால் புனித பதுவை அந்தோனியார் ஆலயமாக அழைக்கப் பட்டது. 

ஆண்டுதோறும் தை மாதத்தின் போது புனித அந்தோனியார் பொங்கல் விழாவானது சிறிய அளவில் கொண்டாடப்பட்டு வந்தது. மற்றபடி விசுவாசத்திற்கு சாட்சியாக எந்தவொரு நிகழ்வும் பெரிதாக நடைபெறுவதில்லை. அமல ஆசிரமம் சில கல் தொலைவில் இருந்ததால், வெகுசிலர் இங்கு நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு தங்களது கிறிஸ்துவ விசுவாசத்தை புதுப்பித்து வந்தனர். 1994 ஆம் ஆண்டு அமல ஆசிரமம் தனிப்பங்காக உயர்த்தப்படுவதற்கு முயற்சிகள் எடுத்த போது, இப்பகுதியில் நிலம் வாங்கி பங்கு ஆலயம் கட்டுவதற்கு உத்தேசிக்கப் பட்டது. ஆனால் போதிய கிறிஸ்தவ குடும்பங்கள் இப்பகுதியில் இல்லாததால் அம்முடிவு கைவிடப்பட்டு, அமல ஆசிரம ஆலயமே பங்காக உயர்த்தப் பட்டது. 

புனித தந்தை பியோ ஆலயம் :

2008 ஆம் ஆண்டு திருத்தொண்டர் ஆ. தைனிஸ் மற்றும் அருள்சகோதரர் பேனர்ஜி SDM ஆகியோரின் முயற்சியால் புனித தந்தை பியோ வின் திருப்படம் ஓலைக் கோவிலில் நிறுவப்பட்ட பிறகு, புனித தந்தை பியோ ஆலயமாக மக்களால் அழைக்கப் பட்டது. இதன்பிறகே, தங்கள் பகுதியை ஒரு கிளைப்பங்காக அங்கீகரித்து, ஓர் ஆலயம் எழுப்பிட மக்கள் ஆர்வம் கொண்டனர். எனவே மக்களின் ஆன்மீக வேண்டுகோளுக்கு இணங்கி அன்றைய பங்குத்தந்தை அருள்பணி. சந்தியாகு அவர்களின் முயற்சியில் புதிய ஆலயம் ஹாலோபிளாக்ஸ் கற்களால் கட்டப்பட்டு, இரும்புத்தகட்டினால் மேற்கூரை அமைக்கப்பட்டு, மக்கள் புனிதர் தந்தை பியோவிற்கு இச்சிற்றாலயம் அர்ப்பணிக்கப் பட்டது. இப்புதிய ஆலயம் 18.04.2009 அன்று அன்றைய குடந்தை மறைமாவட்ட ஆயர் மேதகு F. அந்தோனிசாமி அவர்களால் புனிதப் படுத்தப்பட்டு, தமிழக மறைமாநில அதிபர் அருள்பணி. அல்போன்ஸ் சார்லஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

இக்கிளைப்பங்கின் ஆன்மீகப் பொறுப்பை மாம்பழச்சாலை திருச்சிலுவை அருள்சகோதரிகள் ஏற்று, அருள்சகோதரி. லூயிஸ் மேரி SCC அவர்களின் துணையுடன் சிறப்புற வழிநடத்தி வந்தனர். ஆலயத்திற்கு தேவையான பீடப்பொருட்கள் மற்றும் அவற்றை பாதுகாக்க இரும்புபீரோ ஒன்றும் அருள்சகோதரிகளால் அன்பளிப்பாக வழங்கப் பட்டது. 2016 ஆம் ஆண்டு திருவிழாவின் போது பங்குத்தந்தையர் அ. ஜோ. மாத்யூ & ஆ. தைனிஸ் மற்றும் புனித பியோ ஆலய நிர்வாகக் குழுவினரின் முயற்சியால் 30 அடி உயரமுள்ள புதிய கொடிமரம் நிறுவப்பட்டு, ஆலயம் புனரமைக்கப் பட்டது. இங்கு மக்களின் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருப்பது குறிப்பிடத் தக்கது. ஒவ்வொரு நாளும் மாலை 08.00 மணிக்கு, மக்களின் பங்கேற்புடன் செபமாலை செபிக்கப்படுகிறது. 

இந்துக்கள் கொண்டாடும் தந்தை பியோ திருவிழா :

2009 ஆம் ஆண்டு தந்தை பியோவிற்கு இப்பகுதியில் ஆலயம் எழுப்புவதற்கு முன்பாக அனைத்து வீடுகளும் குடிசைகளாகவே இருந்தன. இவ்வாலயம் அமைந்த பிறகு இப்பகுதியில் உள்ள பெரும்பாலானவை மாடி வீடுகளாக எழுந்து நிற்பது மக்கள் புனிதர் தந்தை பியோவின் பரிந்துரையே என்று இம்மக்கள் ஆழமாக நம்புகின்றனர். கடந்த ஆண்டுகளில் பல புதுமைகள் இப்புனிதரின் பரிந்துரையால் நிகழ்வதாக மக்கள் விசுவசிக்கின்றனர். எனவே மதங்களைக் கடந்து மக்கள் இவ்வாலயத்தில் விளக்கேற்றி செபிக்கின்றனர். பல நாட்களாக தீய ஆவியால் அச்சுறுத்தப்பட்ட ஒரு பிறசமய இளம்பெண் புனித தந்தை பியோவின் ஆலயத்தை கடந்து சென்ற போது குணம் பெற்றதாக அவரே சாட்சி பகிர்ந்துள்ளார். 

புனித தந்தை பியோ திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில், மிகச் சிறப்பான விதத்திலே   நடுக்கொண்டையம் பேட்டை வாழ் மக்களால் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. புனிதரின் தேர்பவனியானது வீதிகளில் வருகின்றபொழுது இப்பகுதி மக்களனைவரும் கரங்களில் மெழுகுதிரி ஏந்தியும், தங்கள் இல்லங்களுக்கு முன்பாக நீரினால் தூய்மைப்நடுத்தி அழகு கோலங்கள் இட்டு புனிதரை வரவேற்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இவ்விழா கிறிஸ்தவர்களால் முன்னெடுக்கப்பட்டாலும், பிறசமய மக்களின் மேலான ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாவது என்பது தான் உண்மை.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. ஆ. தைனிஸ், கப்புச்சின் சபை.