595 புனித சந்தியாகப்பர் ஆலயம், வடக்கியூர்

          

புனித சந்தியாகப்பர் ஆலயம் 

இடம் : வடக்கியூர்

மாவட்டம் : திண்டுக்கல் 

மறைமாவட்டம் : திண்டுக்கல் 

மறைவட்டம் : மாரம்பாடி

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : புனித அந்தோனியார் ஆலயம், உலகம்பட்டி 

பங்குத்தந்தை : அருள்பணி. கபிரியேல் அந்தோணிசாமி

குடும்பங்கள் : 40

திருவிழா : ஜூலை மாதத்தில் புனித சந்தியாகப்பர் திருவிழா. 

வழித்தடம் : திண்டுக்கல் -தாடிக்கொம்பு -உலகம்பட்டி -வடக்கியூர். 

Location map : https://maps.app.goo.gl/9xWGMyNxNaopjsYQ6

வரலாறு :

வடக்கியூரில் வாழ்ந்து வருகிற மக்களின் முன்னோர்கள் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் வெங்காஞ்சியூரில் வாழ்ந்து வந்தனர். இவ்வூரின் தற்போதைய பெயர் சத்தியநாதபுரம் ஆகும். சத்தியநாதபுரத்தில் முன்னோர்கள் விவசாயம் செய்தும், புனித சந்தியாகப்பர் ஆலயத்தைக் கட்டி இறைவனை வழிபட்டு வந்துள்ளனர். 

சத்தியநாதபுரத்தில் காலரா என்னும் கொடிய நோய் பரவியதால், உறவினர்கள் இறப்பு அதிகரிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த முன்னோர்கள், பாதுகாப்புடன் வாழ உலகம்பட்டிக்கு வடக்கே புலம் பெயர்ந்தனர். பின்னர் சத்தியநாதபுரத்தில் உள்ள தங்களது நிலங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்றுவிட்டு, உலகம்பட்டிக்கு அருகே வடக்கியூரில் நிலம் வாங்கி அனைவரும் குடியேறினர். 

இன்றும் சத்தியநாதபுரத்தில் அழியாத சிலுவை நினைவுச்சின்னம் உள்ளது. இந்த நினைவுச்சின்னம் 02.11.2009 அன்று புதுப்பிக்கப் பட்டது. 

வடக்கியூரில் குடியேறிய முன்னோர், காரை சுவர்கள் கொண்ட சிறு ஆலயம் கட்டி, புனித சந்தியாகப்பரை பாதுகாவலராகக் கொண்டு இறைவனை வழிபட்டு வந்தனர். 

முன்னோர்கள் நினைவாக ஆண்டுதோறும் புனித சந்தியாகப்பர் திருவிழாவிற்கு முதல் வாரம், வடக்கியூர் பெரியதனக்காரர்கள் மற்றும் பொது மக்கள் ஒன்றிணைந்து அன்பு விருந்து வழங்குகின்றனர். புனித சந்தியாகப்பர் திருவிழா தொடர்ந்து 130 ஆண்டுகளாக கொண்டாடப் படுவது குறிப்பிடத் தக்கது. 

பழைய ஆலயமானது 2018 ஆம் ஆண்டில் இடிக்கப்பட்டு, புதிய ஆலயமானது அழகுற கட்டப்பட்டு 26.10.2020 அன்று அர்ச்சித்து திறந்து வைக்கப்பட இருக்கிறது.

பல புதுமைகள் இவ்வாலயத்தில் நடந்து வருவதால், பல பகுதிகளில் இருந்தும் இறை மக்கள் இவ்வாலயம் நாடி வந்து, ஜெபித்து இறையாசீர் பெற்றுச் செல்கின்றனர்.