228 புனித பனிமய மாதா ஆலயம், பட்டரிவிளை


புனித பனிமய மாதா ஆலயம்

இடம் : பட்டரி விளை (பட்டர்விளை)

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

பங்குத்தந்தை : அருட்பணி. ஜஸ்டின்
இணை பங்குத்தந்தை : அருட்பணி. ஜெபராஜ்

நிலை : பங்குதளம்

கிளைகள் :
1. புனித ஜார்ஜியார் ஆலயம், பள்ளவிளை
2. புனித செபஸ்தியார் ஆலயம், தலக்குளம்

குடும்பங்கள் : 325
அன்பியங்கள் : 10

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு

திங்கள், செவ்வாய் காலை 06.30 மணிக்கு

புதன் மாலை 06.30 மணிக்கு சகாய மாதா நவநாள், திருப்பலி

சனிக்கிழமை காலை 06.00 மணிக்கு சிறார் திருப்பலி

திருவிழா : ஆகஸ்ட் மாதம் 05- ம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள்.

பட்டரிவிளை வரலாறு :

முக்கடலும் சங்கமிக்கும் குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலுக்கே மேற்கே சுமார் 20 கி.மீ தொலைவில் இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான வயல்கள், தென்னஞ்சோலைகள், குளங்கள் என அழகு பூங்காகாவாக காட்சியளிக்கும் ஊர் தான் பட்டர்விளை.

பட்டர்விளை பெயர் காரணம் :

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதற்கேற்ப முற்காலத்தில் இங்கு பல இனத்தவரும் ஒற்றுமையாய் வாழ்ந்ததற்கு சான்றாய் குயவன்விளை, செட்டிவிளை, செக்கடிதட்டு, தம்புரான்விளை போன்ற பெயர் கொண்ட பகுதிகள் இன்றும் உள்ளன.

அனைவரும் இந்துக்களாய் இருந்ததால் ஊரில் பல இந்து கோவில்கள் இருந்தன. அவற்றில் அந்தணர்கள் பூஜை செய்து வந்தனர். 'பட்டர்' என்றால் அந்தணர் அல்லது பிராமணர் என்பது பொருள். பட்டர்கள் அதிகம் வாழ்ந்ததால் பட்டர்விளை என்ற பெயர் வந்ததாக வரலாறு.

மேலும் 'பட்டரி ' என்பது ஒரு கைப்பிடி அறுக்கப்பட்ட நெற்கதிரை குறிக்கும் சொல். நெல் அதிகமாக விளைந்ததால் பட்டரிவிளை என அழைக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். இவ்வூரைச் சுற்றியுள்ள குளங்களில் எக்காலத்திலும் நீர் நிறைந்திருப்பதால் மக்களின் முக்கியத் தொழிலாக விவசாயம் இருந்து வந்துள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் தோற்றம் :

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கேற்ப இவ்வூர் மக்களில் பலர் தென்காசி, கல்லிடைக்குறிச்சி, வல்லநாடு, பாளையங்கோட்டை, வடக்கன்குளம் போன்ற பல்வேறு இடங்களுக்கு வேலை தேடிச் சென்றனர்.

பேருந்து வசதி இல்லாத அக்காலத்தில் கால்நடையாக இவ்விடங்களுக்கு சென்றுள்ளனர். அவ்வாறு வடக்கன்குளத்திற்கு வேலைக்கு சென்ற ஒருவர், அங்கிருந்து ஒரு கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்து அழைத்து வந்தார்.

இவர் செபமாலை செபித்து வருவதையும் இப்பெண்ணின் விசுவாசத்தையும் கண்ட இவ்வூர் மக்கள் கிறிஸ்தவ மறையை தழுவத் துவங்கினர்.

பனிமய அன்னை ஆலயம் :

அந்நாளில் பட்டர்விளையில் செல்வச் செழிப்புடன் செல்வாக்குடனும் வாழ்ந்து வந்த ஐந்து குடும்பத்தினர் வடக்கன்குளம் சென்று திருமுழுக்கு பெற்று கிறிஸ்தர்களாயினர். ஐந்து குடும்பத்தினரும் ஒன்றிணைந்து சிறு ஆலயம் ஒன்றைக் கட்டினர்.

ஆண்டுகள் பல கடந்தது. மக்கள் கூட்டம் அதிகமாக ஆலயத்தில் இடநெருக்கடி ஏற்பட்டதால் அனைவரின் ஒத்துழைப்புடன் 1940- ம் ஆண்டு ஆலயம் ஒன்றை கட்டி விழா எடுத்து மகிழ்ச்சியடைந்தனர்.

தனிப்பங்கு:

அருட்தந்தை லாரன்ஸ் அடிகள் மாங்குழி பங்குத்தந்தையாக இருந்த போது, 31-05-1979 ல் மாங்குழி பங்கிலிருந்து பிரிந்து தனிப்பங்காக உதயமானது.

பள்ளவிளை மற்றும் தலக்குளம் ஆகிய ஊர்கள் கிளைப் பங்குகளாயின.

முதல் பங்குத்தந்தை அருட்தந்தை மத்தியாஸ் அடிகள்.

தூய ஆரோக்கியநாதர் குருசடி :

மக்களின் செப தேவைக்காக திரு குருசு மிக்கேல் அவர்கள் கொடுத்த நிலத்தில் குருசடி கட்டி, அக்காலத்தில் காலரா, அம்மை போன்ற தொற்று நோய்கள் மக்களை தாக்கியதால், தொற்று நோய் நீக்கும் புனிதரான ஆரோக்கியநாதரை இக்குருடியில் வழிபட்டு வந்தனர்.

காலையிலும் மாலையிலும் செப வழிபாடுகள் நடைபெற்றன. இங்கு அமைக்கப்பட்ட சாவடியில் தங்கி ஏராளமான நோயாளிகள் சுகம் பெற்று சென்றனர்.

பழைய குருசடி பழுதடைந்த காரணத்தினால் மக்களின் முயற்சியால் புதிதாக அழகியதொரு குருசடி கட்டி அருட்தந்தை உ. செகன் போஸ் பங்குத்தந்தையாக இருந்த போது அர்ச்சிக்கப்பட்டு மாதந்தோறும் கடைசி சனிக்கிழமை சிறப்பு தியானம் நடத்தப்பட்டு வந்தது.

தற்போது தினமும் மாலையில் செபமாலையும் மாதத்தின் கடைசி சனிக்கிழமை புனித ஆரோக்கியநாதர் நவநாளும் சிறப்பு மாதாந்திர தியானமும் நடத்தப்பட்டு வருகிறது.

புனித மிக்கேல் அதிதூதர் குருசடி :

🌷பட்டர்விளை ஊரின் மேற்கு எல்லை ஆரம்பத்தில் 02-12-1982 புனித மிக்கேல் அதிதூதர் குருசடி அடிக்கல் நாட்டப்பட்டு ஒரே நாளில் கட்டி முடிக்கப்பட்டு ஒரு மரச்சிலுவை நாட்டப் பட்டது. தற்போது ஒவ்வொரு வருடமும் குருத்தோலை பவனி இங்கிருந்து ஆரம்பித்து பங்கு ஆலயத்தில் நிறைவு பெறும். மேலும் புனித வெள்ளியன்று சிலுவைப் பாதை நிகழ்வுகள் பங்கு ஆலயத்தில் ஆரம்பித்து இக் குருசடியில் நிறைவு பெறும்.

கன்னியர் இல்லம் :

12-06-1982 அன்று திருஇருதய சபை பட்டர்விளையில் துவங்கப் பட்டது.

நேவிஸ் ஹால் என்ற பெயரில் திருமண மண்டபம் உள்ளது.

புதிய ஆலயம் :

01-06-2008 அன்று பங்குத்தந்தை அருட்தந்தை உ. செகன் போஸ் அவர்கள் தலைமையில் இப் பங்கின் ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டம்; பங்கு அருட்பணிப்பேரவை, முன்னாள் பேரவையினர், பக்த சபையினர், இயக்கத்தினர், மற்றும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் "சிகரத்தை நோக்கி " என்ற பெயரில் உயர்ந்த மதிப்பீடுகளும் சிறந்த குடும்பங்களும் என்ற விருதுவாக்கோடு தயாரிக்கப் பட்டது.

பழைய ஆலயத்தில் இடநெருக்கடி மற்றும் பழுதுகள் ஏற்பட்டதால் புதிய ஆலயம் கட்ட தீர்மானித்து, அதனை இரண்டு தளமாக கட்டுவது எனவும் தரை தளத்தில் பங்குப்பேரவை அலுவலகம், சிறுவர் விளையாட்டு அரங்கம், நூலகம், வங்கி, பக்த சபை இயக்கங்களின் அலுவலகம் போன்றவை அமைப்பது எனவும், முதல் தளத்தில் ஆலயம் அமைப்பது எனவும் முடிவு செய்து அருட்தந்தை செகன் போசு அவர்களின் சீரிய வழிகாட்டுதலில் 04-03-2009 அன்று புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டது.

இவ்வாலய கட்டுமானப் பணியின் போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கல், மண் சுமந்து தங்கள் உடலுழைப்பை தந்ததோடு நன்கொடைகளும் தந்து உதவிட ஆலயப் பணிகள் வேகமாக நடந்து வந்தது. இவ்வேளையில் தனது ஐந்தாண்டுகள் பணிக்காலம் நிறைவு பெற்றதால் அருட்தந்தை செகன் போஸ் பணிமாற்றம் பெற்றுச் சென்றார்.

அருட்தந்தை உ. செகன் போசு அவர்கள் இப்பங்கின் மறுமலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் வித்திட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.🙏💐🙏

தொடர்ந்து வந்த அருட்தந்தை ஜான் பிரான்சிஸ் மற்றும் இணை பங்குத்தந்தை R. ஆன்றனி ஆகியோரின் வழிநடத்துதல் மற்றும் பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் பணிகள் நிறைவு பெற்று 02-08-2013 அன்று ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

பங்கில் பணி புரிந்த அருட்பணியாளர்கள்:

1. Fr M. மத்தியாஸ்
2. Fr S. வின்சென்ட் ராஜ்
3. Fr A. பீட்டர்
4. Fr P. வின்சென்ட்
5. Fr P. அமல்ராஜ் நேவிஸ்
6. Fr S. ஜோசப் ஜெயசீலன்
7. Fr S. வர்க்கீஸ்
8. Fr I.அருள் ஜோசப்
9. Fr L. மைக்கிள் ஏஞ்சலூஸ்
10. Fr A. ஜெலட்டின் ஜெரால்டு
11. Fr J. அகஸ்டின்
12. Fr A. கபிரியேல்
13. Fr U. செகன் போஸ்
14. Fr M. ஜான் பிரான்சிஸ்
Fr R. ஆன்றனி (இணை பங்குத்தந்தை)
15. Fr அமுதவளன்
16. Fr ஜஸ்டின் (தற்போது)

Fr ஜெபராஜ் (இணை பங்குத்தந்தை)

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. Fr. மரிய ஜூலியஸ்
2. Fr. பீட்டர் சார்லஸ்
3. Fr. ஞா. ஜெயக்குமார் (பள்ளவிளை கிளைப்பங்கு)
4. Fr. ஆல்பின் ஜூடி (பள்ளவிளை கிளைப்பங்கு)
5. Fr. ஜெகன் சில்வெஸ்டர்

அருட்சகோதரிகள்:

1. Sr மரிய ஸ்கொலாஸ்டிக்கா
2. Sr பெனடிக்ட் மேரி
3. Sr மார்கிரெட்
4. Sr உஸ்தாஸ்சென்ஸ்
5. Sr லீசா
6. Sr ஆரோக்கிய புஷ்பம்
7. Sr மேரி ஸ்டெல்லா
8. Sr விமலா
9. Sr ஆலீஸ் லைசாம்மாள்
10. Sr அருள் செல்வராணி
11. Sr மேரி விஜயா
12. Sr மெற்றில்டா றோஸ்
13. Sr மெர்லின் கேபா
14. Sr அமுதா

(வரலாறு ஆலய அர்ச்சிப்பு விழா மலரிலிருந்து எடுக்கப்பட்டது)

திங்கள்நகரிலிருந்து சுமார் இரண்டு கி.மீ தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.