279 தூய அந்தோனியார் திருத்தலம், சுங்கான்கடை


தூய அந்தோனியார் திருத்தலம்

இடம் : சுங்கான்கடை

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : திருத்தலம்

பங்குத்தந்தை : அருட்பணி பிறிம்மஸ் சிங்

குடும்பங்கள் : 125
அன்பியங்கள் : 5

ஞாயிறு திருப்பலி : காலை 06.45 மணிக்கு

செவ்வாய் காலை 10.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை.
தொடர்ந்து காலை 11.00 மணிக்கு நவநாள், திருப்பலி.

செவ்வாய் மாலை 05.15 மணிக்கு செபமாலை, புகழ்மாலை.
தொடர்ந்து மாலை 05.45 மணிக்கு நவநாள், திருப்பலி.

திருவிழா : ஏப்ரல் மாதம் இறுதி வெள்ளிக்கிழமை கொடியேற்றப்பட்டு பத்து நாட்கள் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

(26-04-2019 வெள்ளிக்கிழமை முதல் 05-05-2019 ஞாயிற்றுக்கிழமை வரை இத்திருத்தல திருவிழா நடைபெற இருக்கிறது. இத் திருவிழாவில் கலந்து கொண்டு தூய அந்தோனியார் வழியாக இறைவனின் ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்ல அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்..!)💐🍇🌺🙏🌺🍇💐

வரலாறு :

இயற்கை எழில் சூழ்ந்த குமரி மாவட்டத்தில், குழித்துறை மறை மாவட்டத்தின் கிழக்கு எல்லையாக அமைந்தது சுங்கான்கடை ஊர். வளம் மிகக் கொண்டு விரிவாக்கம் பெற்றுவரும் முக்கிய நகரங்களில் ஒன்று. சுங்கான்கடையின் மையமாகச் செல்லும் நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில், நாடி வந்தோர் அனைவருக்கும் அருள் வளங்களை வழங்கியவண்ணம் அமைந்துள்ளது தூய அந்தோணியார் திருத்தலம்.

சுங்கான்கடை, பார்வதிபுரம், பாறையடி, களியங்காடு, கணியான்குளம், ஆலம்பாறை, கிளிஞ்சிப்பொத்தை, தோட்டியோடு, ஆளூர்தோப்பு, (ரெயில்வே கிராசிங்) பிராந்தேரி, இந்திரா நகர், அம்பேத்கர் காலனி, SS நகர், கிறிஸ்டோபர் காலனி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி சுங்கான்கடை திருத்தலம் பரந்து விரிந்து காணப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலைக்கு வடக்கே உள்ள கிளிஞ்சிப்பொத்தையின் அடிவாரத்தில் தற்போது ஆலய வளாகத்தில் உள்ள 81 சென்ட் நிலம் உட்பட நெடுஞ்சாலைக்கு தெற்கே அமைந்துள்ள திருமலை என்றழைக்கப்பட்ட பொன்மலையும் விவசாய நிலங்களும் 1935 -ஆம் ஆண்டு முதல் மறைந்து போன நீலகண்ட ஐயருக்கு உரிமைப்பட்டதாகும்.

இந்த நிலங்களை பாதுகாக்கவும் இதில் விவசாயம் செய்யவும் குடியமர்த்தப்பட்டவர் பாலப்பள்ளம் ஆனைக்குழியை சேர்ந்த மனுவேல் என்பவர். இவரும் இவரது மகன் தர்மராஜ் மற்றும் 5 குழந்தைகளும் வசித்து வந்த அந்தப் பகுதி நெற்கதிர்களை போரடித்து பாதுகாக்கும் களமாகவும் திகழ்ந்தது.

கொன்னக்குழிவிளை- யைச் சார்ந்த திரு M. வறுவேல் என்பவர் இத்திருமலை சொத்துக்களை மேல்பாட்டமாக எடுத்து அவற்றை மாடத்தட்டுவிளை மற்றும் கொன்னக்குழிவிளை மக்களுக்குக் கீழ்பாட்டமாக கொடுத்தார். இவர்களின் ஒத்துழைப்போடு இப்பகுதியில் ஒரு சிலுவை அமைக்கப்பட்டு மக்கள் சேர்ந்து செபிக்கும் இடமாகவும் இக்களம் (நெற்களம்) பயன்பட்டு வந்திருக்கிறது. பின்பு மாதத்திற்கொரு முறை மற்றும் பண்டிகை நாட்கள் எனத் திருப்பலியும் நடந்திருக்கின்றது. மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை அருட்தந்தை சூசை மிக்கேல் அவர்களும் இக்களத்தில் திருப்பலி நிறைவேற்றி இருக்கிறார்.

*இவ்வழிபாட்டிடம் நெடுஞ்சாலைக்கருகில் இருந்தால், பொதுமக்களின் பார்வைக்கும், போக்குவரத்துக்கும் வசதியாக இருக்கும் என்றெண்ணி இம்மக்களின் பிரதிநிதிகளாகத் திருவாளர்கள் மனுவேல், வறுவேல், அந்தோனி, சுவாமியடியான் மற்றும் சிலர் சேர்ந்து இந்த சொத்துக்களின் உரிமையாளர் டாக்டர் சீதாராமன் அவர்களை சந்தித்து தங்கள் கோரிக்கையை விடுத்தனர். அவரும் மகிழ்வுடன் தற்போதைய ஆலய அமைவிடத்தை இம்மக்களுக்கு இனாமாகக் கொடுத்தார்.

மகிழ்ச்சியடைந்த கிறிஸ்தவ மக்கள் தாங்கள் காணிக்கையாகச் சேர்த்து வைத்திருந்த ரூ 85 -ஐ மூலதனமாகக் கொண்டு கிளிஞ்சிப்பொத்தையின் அடிவாரத்தில் குருசடி அமைத்தனர்.

குருசடியினுள் இருக்கும் கற்சிலுவையை 1956- ல் கொன்னக்குழிவிளை கல்லடிக்காரர் திரு சுவாமியடியான் வடிவமைத்துக் கொடுத்தார்.

மக்களின் நோய் தீர்க்கும் அருங்கொடைகள் நிகழ்ந்ததால் தூய அந்தோணியாரைப் பாதுகாவலாகக் கொண்ட இந்த எளிய குருசடிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

மாதமொருமுறை நடந்த திருப்பலி வாரந்தோறும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமைகளில் நவநாள் நிறைவேற்றப் பட்டது.

1958 -க்கு முன்பே மின் இணைப்பும் பெறப்பட்டு, மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பங்குத்தந்தையின் பராமரிப்பில் கிளைப்பங்கு போல செயல்பட்ட இக்குருசடி 1971 -ல் சுமார் 75 கத்தோலிக்கர்களை உறுப்பினர்களாகக் கொண்டதாகவும், 1975 -ல் அருட்தந்தை ஜோசபாத் மரியா அவர்கள் காலத்தில் சிற்றாலயமாக உருவாக்கம் பெற்றதாகவும் வரலாறு சான்றளிக்கிறது.

1984 -ல் மார்னிங் ஸ்டார் தொழில் நுட்பக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அதன் தாளாளர் அருட்தந்தை ஏசுதாசன் தாமஸ், பொருளர் அருட்தந்தை ஜார்ஜ் பொன்னையா ஆகியோர் மார்னிங் ஸ்டார் விடுதியில் தங்கிய நாட்கள் தொடங்கியது முதல் சுங்கான்கடை தூய அந்தோணியார் சிற்றாலயத்தின் பொறுப்பு இவ் அருட்தந்தையர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இக்காலத்தில் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வேலி போடப்பட்டது.

1996 -ல் அருட்தந்தை ஜோசப் பெனடிக்ட் காலத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.

1999 -க்குப் பின்னர் அருட்தந்தை ஜேசு மரியான் காலத்தில் அன்பியங்கள், பக்த சபை இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

அதிசயங்களும் அற்புதங்களும் நிகழ மக்கள் கூட்டம் அதிகமாக புதிய ஆலயத்தின் தேவை உணரப்பட்டது. அருட்தந்தை விக்டர் அவர்களின் ஈடுபாட்டாலும் நிர்வாகக் குழுவினரின் ஒத்துழைப்பாலும் 14-07-2008 ல் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்கள் அடிக்கல் நாட்ட, தொழிலதிர் திரு. S. பொன்னையன் அவர்களின் தாராள உதவியாலும், மற்றும் பல ஊர் இறைமக்கள், இவ்வாலய மக்களின் உதவிகளாலும் புதிய ஆலயம் கட்டப்பட்டு 05-04-2009 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

2012 -க்குப் பின்னர் அருட்தந்தை பால் ரிச்சர்ட் ஜோசப் பணிக்காலத்தில், திரு. R. ஜார்ஜ் ஆன்றனி அவர்களின் நன்கொடையால் புதிய கொடிமரம் வைக்கப்பட்டது. மேலும் ஆலய வளாகமும் அழகுபடுத்தப் பட்டது.

குழித்துறை மறை மாவட்ட உருவாக்கத்திற்குப் பின்னர் 11-01-2016 -ல் அருட்தந்தை பிறிம்மஸ் சிங் அவர்கள் பொறுப்பேற்றார். மறைமாவட்ட பங்கு திருத்தலங்களுக்கான ஒழுங்கு முறைகளுடன் கூடிய பங்குப்பேரவை உருவாக்கப்பட்டது.

தூய அந்தோனியார் ஐ நாடி வரும் இறைமக்களின் தேவையை கருத்தில் கொண்டு செவ்வாய்க்கிழமைகளில் புதிதாக காலை 11.00 மணிக்கும், ஏற்கனவே உள்ள மாலை திருப்பலியும் சிறப்பாக நடைபெற மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

திருத்தல முக்கிய விழாக்கள் :

1. பொங்கல் விழா : ஜனவரி மாதம் 14-ஆம் தேதி.

2. பங்கு குடும்ப விழா : ஏப்ரல் மாதம் இறுதி வெள்ளிக்கிழமை ஆரம்பித்து பத்து நாட்கள்.

3. பாதுகாவலர் விழா : ஜுன் மாதம் 13-ஆம் தேதி.

4. புதிய ஆலய அர்ச்சிப்பு நாள் விழா : ஏப்ரல் மாதம் 05 -ஆம் தேதி.

5. அன்னையின் விண்ணேற்பு விழா : ஆகஸ்ட் மாதம் 15 -ஆம் தேதி.

இத் திருத்தலத்தின் இறை அழைத்தல்கள் :

குருமாணவர்கள்:
1. அருட்சகோதரர் ஜோஸ் பிரஷாந்த்.
2. அருட்சகோதரர் A. ரீட்னஸ்.

இவ்வாறாக பல்வேறு நிலைகளில் சிறந்து விளங்கும் இத்திருத்தலமானது, தற்போது அருட்தந்தை பிறிம்மஸ் சிங் அவர்களின் வழிகாட்டுதலில் வளர்ச்சியை நோக்கி முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது...!