346 புனித அருளப்பர் ஆலயம், ஊத்துமலை

  

புனித அருளப்பர் ஆலயம்.

இடம் : ஊத்துமலை, (PO) 627860.

மாவட்டம் : திருநெல்வேலி.

மறை மாவட்டம் : பாளையங்கோட்டை

மறை வட்டம் : சங்கரன்கோவில்

நிலை : பங்குத்தளம்

கிளைகள் :

1. கீழக்கலங்கல்
2. மேலக்கலங்கல்
3. பெரியசாமியாபுரம்
4. ருக்குமணியம்மாள் புரம்
5. கருவந்தா
6. வீராணம்
7. சோலைசேரி

பங்குத்தந்தை : அருட்பணி அருள் ஆன்றனி

குடும்பங்கள் : 330
அன்பியங்கள் : 11

ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணிக்கு.
நாள்தோறும் திருப்பலி : காலை 05.30 மணிக்கு.

செவ்வாய் மாலை 06.30 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள், 07.00 மணிக்கு திருப்பலி.

திருவிழா : தை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை ஆரம்பித்து பத்து நாட்கள் (ஜனவரி மாதத்தில்)

மண்ணின் மைந்தர்கள் :

Fr. S Arulraj
Bro. Antony Raj
Bro. Narchaithi Raja

Sis. A. Annarani
Sis. Santhi
Sis. A. Maria Pushpam
Sis. S. Anna Selva Mary

வழித்தடம் :
ஆலங்குளம் - ஊத்துமலை 22 கி.மீ.
சங்கரன்கோவில் - ஊத்துமலை 25 கி.மீ.

வரலாறு :

சின்ன உரோமாபுரி என்று சிறப்புடன் அழைக்கப்பட்ட சேர்ந்தமரம் மறைப் பணித்தளத்தின் ஒரு பகுதியாக விளங்கியது ஊத்துமலை கிராமம். 19-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் சேர்ந்தமரத்தில் பணியாற்றிய அருட்பணியாளர்கள், ஊத்துமலைப் பகுதியில் தங்கள் கவனத்தைத் திருப்பினர். எனினும் நினைத்த அளவிற்கு பலன் கிடைக்கவில்லை.

1878-ஆம் ஆண்டில் சேர்ந்தமரம் பங்குத்தந்தையான அருட்பணி ஜோசப் இஞ்ஞாசி சே. ச அவர்கள் பொறுப்பேற்று, ஊத்துமலையில் கத்தோலிக்க விசுவாசத்தை விதைத்தார். தமது மரணம் வரை ஏறத்தாழ 40 ஆண்டுகள் சேர்ந்தமரம் பங்குத்தந்தையாக பணியாற்றிய காலம், சேர்ந்தமரம் பங்கின் பொற்காலமாக அமைந்தது. மறைப் பணித்தளத்திற்கு உட்பட்ட பல கிராமங்களில் பலரும் கிறிஸ்தவம் தழுவினர். பல இடங்களில் சிற்றாலயங்கள் எழுப்பப்பட்டன.

சேர்ந்தமரம் பங்கைச் சேர்ந்த ஊத்துமலை, வீரகேரளம்புதூர், சொக்கம்பட்டி, வெள்ளைக்கவுண்டன்பட்டி முதலிய இடங்களில் உள்ள மறவர் கிறிஸ்தவம் தழுவ, இவ்விடங்களில் ஆலயங்களும், பள்ளிக்கூடங்களும் கட்டப்பட்டன.

ஊத்துமலையில் கத்தோலிக்க விசுவாசம் :

1892 -ஆம் ஆண்டில் ஊத்துமலையில் கிறிஸ்தவம் துளிர்விட ஆரம்பித்தது. இங்கு வாழ்ந்து வந்த சேர்வக்காரர் பிரிவைச் சார்ந்த 50 மறவர் குடும்பங்கள் ஒரே நேரத்தில் திருமறையில் இணைந்தனர். இவர்களைத் தொடர்ந்து மீண்டும் சில குடும்பங்கள் கிறிஸ்துவில் இணையவே, ஓராண்டிலேயே 78 கத்தோலிக்க குடும்பங்களைக் கொண்ட இளந்திருச்சபை ஊத்துமலையில் உருவானது. அருட்தந்தை ஜோசப் இஞ்ஞாசியின் அயராத முயற்சியால் அடிப்படை செபங்கள், திருச்சபையின் போதனைகளை ஆர்வத்துடன் கற்று, ஏற்றதொரு பயிற்சிக்குப் பின்னர் அனைவரும் திருமுழுக்குப் பெற்றனர். இவ்வாறு திருமுழுக்குப் பெற்றோரின் எண்ணிக்கை 225 ஆகும்.

அருட்பணி ஜோசப் இஞ்ஞாசி அவர்கள் ஊத்துமலை இறை சமூகத்திற்காக வழிபாட்டுத் தலம் ஒன்றை நிறுவினார். ஆண்டவரிடம் நெருங்கிய தோழமை கொண்டிருந்த அப்போஸ்தலர்கள் மூவர் ஆவர். இவர்களில் புனித இராயப்பர் பெயரில் சேர்ந்தமரம் பங்கு ஆலயமும், புனித யாகப்பரின் பெயரில் புன்னைவனத்தில் ஒரு திருத்தலமும் இருந்தன. ஆகவே எஞ்சியிருந்த மற்றொரு அப்போஸ்தலரான புனித அருளப்பரை ஊத்துமலை கிறிஸ்தவர்களின் பாதுகாவலராக்கி 1892-ஆம் ஆண்டிலேயே ஓலையாலான சிற்றாலயம் ஒன்றை எழுப்பினார்.

பத்தாண்டுகள் இந்த ஓலை சிற்றாலயம் வழிபாட்டிற்கு துணை செய்தது. இக் காலகட்டத்தில் இறை மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, புதிய பெரிய ஆலயத்தின் தேவையை உணர்ந்த அருட்தந்தை ஜோசப் இஞ்ஞாசி அவர்கள் 1903 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய காரைக்கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார்.

தூக்கு ஆலயமாக வடிவமைக்கப்பட்ட இவ்வாலயம் ரூ. 3500 செலவில் கட்டப்பட்டது. இதில் ரூ. 1000 அன்றைய ஊத்துமலை கிறிஸ்தவர்களால் (329 பேர்) வழங்கப்பட்டதாகும். ஆலயத்திற்கு அருகில் குருக்கள் தங்க இல்லமும், பள்ளிக்கூடமும் ஓலைக்கூரையால் அமைக்கப்பட்டன.

பங்கின் உதயம் :

இறைவனது பணியில் இரவும், பகலும் தன்னையே கரைத்துக் கொண்ட அருட்பணி ஜோசப் இஞ்ஞாசி அவர்கள், தமது கடும் உழைப்பின் காரணமாக நோய்வாய்ப்பட்டு 24-12-1917 அன்று பாளையங்கோட்டை -யில் இறைவனடி சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து சேர்ந்தமரத்தின் பங்குத்தந்தையாக பொறுப்பு வகித்த அருட்தந்தையர்கள் ஊத்துமலையின் வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டினர். ஊத்துமலையில் இயங்கி வந்த ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளியாக உயர்ந்தது.

1938 -ஆம் ஆண்டு சேர்ந்தமரத்தின் பங்குத்தந்தையாக அருட்பணி எஸ். இருதயம் அவர்கள் பொறுப்பேற்றார். இவரது வழிகாட்டுதலில் ஊத்துமலைப் பகுதி இறை விசுவாசத்தில் செழித்தோங்கியது. இவரது ஆக்கமிகு முயற்சியின் விளைவாக 1945-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நாளிலிருந்து ஊத்துமலை தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. அன்றைய சேர்ந்தமரம் பங்கிற்கு உட்பட்ட வாடியூர், மரியதாய்புரம், வீரகேரளம்புதூர், ராஜகோபாலப்பேரி, அதிசயபுரம், வீராணம், கருவந்தா, பரங்குன்றாபுரம், குறிச்சான்பட்டி, மேலக்கலங்கல், கீழக்கலங்கல், பெரியசாமிபுரம், மாவலியூத்து, கங்கனன்கிணறு, தேவர்குளம் ஆகிய ஊர்களும்; சிங்கம்பாறை பங்கிலிருந்து நெட்டூர், கிடாரக்குளம், காவலாக்குறிச்சி, ரெட்டியார்பட்டி ஆகிய ஊர்களும் ஊத்துமலையின் கீழ் வந்தன. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி A. S துரைராஜ் அடிகளார் பொறுப்பேற்றார்.

அருட்தந்தை துரைராஜ் அவர்களின் முயற்சியால் ஊத்துமலைக்கு பேருந்து வழித்தடம் ஏற்படுத்தப்பட்டு, பிற பகுதிகளுடன் சிரமமின்றி செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. அருட்தந்தை அவர்கள் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உழைத்தார்.

ஊத்துமலை மட்டுமல்லாமல் அருகில் உள்ள ஊர்களின் வளர்ச்சிக்கும் பாடுபட்டார். மரிதாய்புரம், வாடியூர் ஆகிய ஊர்களில் பனை ஏறும் தொழிலாளர்களுக்கான கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி, பொருளாதாரத்தை மேம்படுத்தினார்.

அதிசயபுரத்தில் புதிய ஆலயம் கட்டப்பட்டது. பங்கின் கடைக்கோடி கிராமமான தேவர்குளத்தில் விவசாயம் செழித்ததும், ஆலயம் கட்டப்பட்டதும் இவர் காலத்தில் தான். ஆகவே அருட்பணி துரைராஜ் அவர்களின் பணிக்காலம் ஊத்துமலையின் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது.

தொடர்ந்து அருட்பணி மனுவேல் பணிக்காலத்தில் பள்ளிக்கட்டிட பணியை துவக்கி வைத்தார்.

அருட்பணி R. S பீட்டர் பணிக்காலத்தில் பள்ளிக்கட்டிடப் பணிகள் நிறைவு பெற்று 19-01-1953 அன்று வகுப்புகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப் பட்டது. தூத்துக்குடியை சார்ந்தவரின் உதவியால் ஆலயத்திற்கு மணி வாங்கி 1954 -இல் நிறுவப்பட்டது.

அருட்பணி J. அருளானந்தம் சே. ச அடிகளார் ("தங்கசாமி" என்று பங்கு மக்களால் போற்றப்பட்டுபவர்) காலத்தில் பல்வேறு சபைகள் துவக்கப்பட்டு மரியாள் பக்தி, தலை வெள்ளி பக்தி முயற்சிகளை ஊட்டினார். சிறந்த மறையுரையாளர் சிலுவைப் பாதையில் இவர் கொடுக்கும் மறையுரை பலரையும் சிந்திக்க வைத்து, கிறிஸ்துவின் பாடுகளை உணரச் செய்தார்.

அருட்தந்தை சவரிராஜ் காலத்தில் பல வளர்ச்சி காரியங்கள் மேற்கொள்ளப் பட்டன.

இரண்டாம் முறையாக அருட்பணி J. அருளானந்தம் பங்குத்தந்தையானார்.

அருட்பணி J. குருவில்லா பணிக்காலத்தில் 1963-இல் ஊத்துமலை பங்கிலிருந்து தேவர்குளம் பிரிக்கப்பட்டு அலைவாயுகந்தான்குளம் பங்குடன் இணைக்கப்பட்டது. அலைவாயுகந்தான்குளம் பங்கிலிருந்து ரஸ்தா, அருணாச்சலப்பேரி ஆகிய இரண்டு கிராமங்கள் பிரிக்கப்பட்டு ஊத்துமலை பங்குடன் இணைக்கப் பட்டன. 1963 மே மாதத்தில் இராஜகோபாலப்பேரி புனித அந்தோணியார் ஆலயம் திருநிலைப் படுத்தப் பட்டது.

அருட்தந்தை T. A சூசை பணிக்காலத்தில் ஊத்துமலையின் மறுமலர்ச்சி காலமாக அமைந்தது. பங்கிலும், பிற கிராமங்களிலும் பல சபைகளை உருவாக்கினார். சிறுவர்கள், இளைஞர்கள் வளர்ச்சிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தார். ஆலயத்தில் திருப்பண்ட அறையை (Sacristy) அமைத்தார். பயிற்சி பெற்ற வேதியர் பங்கில் பணியில் அமர்த்தப் பட்டார்.
ஊத்துமலையின் கிளைகளும் வளர்ச்சி பெற்றன. ரெட்டியார்பட்டியில் திரு இருதய ஆலயம், பெரியசாமிபுரத்தில் உலக மீட்பர் ஆலயம், கீழக்கலங்கலில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் ஆகியவை திருநிலைப் படுத்தப்பட்டன.

அருட்பணி சூசை மாணிக்கம் பணிக்காலத்தில் மக்களிடையே சமாதானத்தையும், ஒற்றுமையையும் உருவாக்கினார். வீரகேரளம்புதூர் புனித சவேரியார் ஆலயத்தில் கோபுரம் அமைக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

அருட்பணி ஜான் மீம்பிள்ளிக்காவில் சே. ச காலத்தில், அருட்தந்தை அவர்கள் குருவாக மட்டுமின்றி மருத்துவராகவும் நடமாடி மக்களுக்கு பணிபுரிந்து வந்தார். குறிச்சாம்பட்டியில் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டது. ஊத்துமலை பங்கு புதிதாக உருவான பாளையங்கோட்டை மறை மாவட்டத்தின் கீழ் செயல்படத் துவங்கியது.

அருட்பணி சலேத் ஜெயபாலன் பணிக்காலத்தில் கடுமையான வறட்சி, பஞ்சம் ஏற்பட்டு மக்கள் துன்பப்பட்ட போது, அருட்தந்தையவர்கள் பல்வேறு நிவாரணப் பணிகளை தக்க விதத்தில் மேற்கொண்டு மக்களின் வறுமையை போக்கி, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். இந்த மண்வாரி (காற்றில் மண் பறக்குமளவிற்கு கடும் பஞ்சம்) பஞ்சத்தின் போது மக்களுக்கு உதவி செய்வதற்காக பாண்டிச்சேரியை சேர்ந்த FIHM (Franciscan Sisters of the Immaculate Heart of Mary) சபை கன்னியர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இவர்கள் மக்களுக்கு மக்காச்சோள உணவு மற்றும் பசியாற பல்வேறு சத்து உணவுகளை அருட்சகோதரிகளே சமைத்தும்; கருவுற்ற பெண்கள், குழந்தைகளுக்கு பால் உணவுகள், ஊட்டச்சத்து உணவுகளும் ஊத்துமலை பகுதியில் உள்ள அனைவருக்கும் சாதி சமய பேதமின்றி கொடுப்பார்கள். இவர்களின் சேவை உள்ளத்தால் இவ்வாலயத்தின் புகழ் எங்கும் பரவியது. இவ்வூர் மக்கள் இன்றுவரை ஒற்றுமையுடன் எல்லா நிகழ்வுகளிலும், ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு இச் சபை அருட்சகோதரிகளின் சேவை தான் முக்கிய காரணம். தற்போது இவர்கள் பள்ளிக்கூடத்தை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்கள்.

இதுவரையிலும் சாணம் மெழுகப்பட்டு வந்த தரையை மாற்றி, அருட்தந்தை மொசைக் தரையமைத்தார். ஒலிபெருக்கி வசதி செய்யப்பட்டது. அருட்சகோதரிகள் இல்லம் கொண்டுவரப் பட்டது. குறிச்சான்பட்டி, அருணாச்சலப்பேரி -யிலும் புதிய ஆலயங்கள் அர்ச்சிக்கப்பட்டன.

அருட்பணி மாசில்லாமணி அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை பலமுறை சந்தித்து சங்கரன்கோவில் - ஊத்துமலை நகரப்பேருந்து வழித் தடத்தை பெற்றுத் தந்தார்.

அருட்பணி S. ஜோக்கிம் : மையக்குரு என்று மறை மாவட்ட குருக்களால் அழைக்கப்பட்ட இவர், பங்கில் செய்த பணிகள் பல. அடித்தளத்தோடு நின்று போயிருந்த காவலாக்குறிச்சி புனித ஞானப்பிரகாசியார் ஆலயத்தைக் கட்டி முடித்தார்.

ஊத்துமலை ஆலயத்திற்கு கம்பீரமான உயர் கோபுரம் அமைத்தார். நெட்டூரில் புனித அன்னாள் சபை கன்னியர் இல்லமும், மருந்தகமும் உருவாயின.

பங்கில் வங்கி சேவையை துவக்கினார். மறைப்பரப்புப் பணிக்கான நிதியளிப்பில் ஊத்துமலையை முதலிடத்திற்கு கொண்டு வந்தார்.

அருட்பணி S. L. Aஜோசப்ராஜ் அவர்கள் கலையுள்ளம் படைத்தவர். தாமே வடிவமைத்து எழுப்பிய நெட்டூர், கீழக்கலங்கல் ஆலயங்கள் இவரது கலையுணர்வுக்கு சாட்சியாகத் திகழ்கின்றன. அதிசயபுரத்தில் புதிதாக பலருக்கு திருமுழுக்கு கொடுத்து, அழகிய ஆலயத்தையும் கட்டினார்.

தொலைபேசி நிலையம், அஞ்சலகம், திருமண மண்டபம் அமைக்கப்பட்டன.

அருட்பணி அமிர்தராஜ் சுந்தர் அவர்கள் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை 'உறவு' என்பதை மக்கள் உணரும் வண்ணம் உறவு வாழ்வை தூண்டுகின்ற பல்வேறு நிகழ்ச்சிகளை அமைத்தார். பல்லாண்டு காலமாக பகையோடு வாழ்ந்து வந்த குடும்பங்களை ஒன்று சேர்த்து அன்பை மலரச் செய்தார். கருவந்தா -வில் புதிய ஆலயப் பணிகளை துவக்கி வைத்தார். ஊத்துமலை பங்கிலிருந்து பல கிராமங்கள் பிரிக்கப்பட்டு சுரண்டை பங்கு உருவானது.

அருட்பணி அலாய்சியுஸ் துரைராஜ் பணிக்காலத்தில் கருவந்தா -வில் ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. வீராணத்தில் புதிய ஆலயம் கட்டப்பட்டது. ஊத்துமலைக்கு புதிய ஆலயம் தேவை என்பதை உணர்த்தினார்.

அருட்பணி வியான்னிராஜ் அவர்கள் ஆன்மீகம், மக்கள் மேம்பாடு, கல்வி வளர்ச்சி என அனைத்து துறைகளிலும் மேம்படச் செய்தார். சபை பாகுபாடின்றி அனைத்து மக்களுடனும் உறவாடி அவர்களின் வளர்ச்சிக்கு துணை நின்றார். பல சபைகளை உருவாக்கினார்.

மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அழகிய ஆலயத்தைக் கட்டினார்.

அருட்பணி பெர்க்மான்ஸ் அவர்கள் தனது பணிக்காலத்தில், தமது ஊரில் உள்ள குடும்ப நிலத்தினை விற்று, ஊத்துமலையில் உள்ள பள்ளிக்கூட கட்டடங்களில் ஓடு வேய்ந்து புனரமைத்தார். மேலும் பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் புதிய பள்ளிக்கூடங்களையும் கட்டினார் என்பது குறிப்பிடத் தக்கது.

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட புனித அருளப்பரின் சின்னமான கழுகு மற்றும் தன் உதிரத்தையே தனது குஞ்சுகளுக்கு உணவாக அளிக்கும் பெலிக்கான் பறவை உருவங்கள் சிறப்புற அமைக்கப்பட்ட பலிபீடமானது இவ்வாலயத்தின் தனி அடையாளங்கள் ஆகும்.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி சனிக்கிழமை மாதா கெபியில் ஜெபமாலை, மன்றாட்டு மாலை, திருப்பலி தொடர்ந்து அன்பின் விருந்தும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் செப்டம்பர் மாதம் 08-ஆம் தேதி அன்னையின் விழா கெபியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கெபியில் உள்ள மாதா சுரூபத்தின் கையில் உள்ள ஜெபமாலையானது, லூர்து நகரில் அன்னை காட்சி கொடுத்த இடத்தில் வைத்து ஜெபித்து கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த அற்புத கெபியில் பல்வேறு அற்புதங்கள் நடந்து வருவதால், நாள்தோறும் மக்கள் அதிகமாக வந்து ஜெபித்து நலம் பெற்றுச் செல்கின்றனர்.

பக்த சபைகள் :

பாலர் சபை
நற்கருணை வீரர் சபை
புனித வியான்னி திருப்பீடப் பூக்கள்
புனித அருள் இளைஞர் மன்றம்
புனித அந்தோணியார் இளைஞர் அணி
புனித ஜோன்ஸ் (ஜோன் ஆப் ஆர்க்) மகளிர் சபை
அமல அன்னை இளம் பெண்கள் இயக்கம்
திருஇருதய சபை
இசையரசி பாடகற் குழு
கோல்பிங் இயக்கம்
-போன்றவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

முக்கிய விழாக்கள் :

பாதுகாவலர் புனித அருளப்பர் திருவிழா :
ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. தேவையற்ற ஆடம்பரங்களைத் தவிர்த்து பக்தி முயற்சிகளை வளர்க்கும் வகையில் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

உயிர்ப்புப் பெருவிழா :
தவக்காலத்தில் மக்கள் பக்தி முயற்சியாக தவ உடையணிந்து இயேசுவின் பாடுகளை தியானிக்கின்றனர். உயிர்புபு பெருவிழா நாளில் அனைவரும் ஆலய வளாகத்தில் ஒன்று கூடி பாயாசம் வைத்து அனைவருக்கும் கொடுத்து பகிர்ந்து உண்பர்.

மே மாதம் - வணக்க மாதம் :
மே மாதத்தில் ஒவ்வொரு நாளும் ஜெபமாலை, பிரார்த்தனையுடன் பாடற்பலி, ஆசீரும் நடைபெறும். மே மாதக் கடைசி நாளில் அன்னையின் தேர்பவனி சிறப்புற நடைபெறும்.

வைகாசித் திருவிழா :
ஊத்துமலை பங்கு மக்கள் வைகாசி மாதம் கடைசி செவ்வாயன்று புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலத்திற்கு திருயாத்திரையாக சென்று வருவது வழக்கமாக இருந்தது. இடையில் சில ஆண்டுகளாக திருயாத்திரை சென்று வர ஏற்ற சூழ்நிலை நிலவாத காரணத்தால் 1991 -ஆம் ஆண்டு முதல் வைகாசி கடைசி செவ்வாயன்று ஊத்துமலையிலேயே சிறப்பிக்கும் வழக்கம் உருவானது. அன்றைய நாளில் சிறப்பு திருப்பலி நடைபெறும். ஆலயத்திற்கென்று நேர்ச்சையாக ஆடுகளை மக்கள் கொண்டு வருவர். பின்னர் அனைவருக்கும் அன்பின் விருந்து பரிமாறப்படும். இவ்விழாவில் சாதி சமய பேதமின்றி அனைத்து மக்களும் திரளாக கலந்து கொள்வார்கள்.

அன்னையின் விண்ணேற்பு பெருவிழா :
அன்னையின் விண்ணேற்பு பெருவிழாவ, நமது இந்தியத் திருநாட்டின் சுதந்திர தின விழாவும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அன்னையின் அலங்கார தேர்பவனி, திருப்பலி மற்றும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கியும் சிறப்பிக்கப் படுகிறது.

கிறிஸ்து பிறப்பு & புத்தாண்டு விழா :

பொங்கல் விழா :
தைப் பொங்கல் அன்று சிறப்பு திருப்பலியுடன், மக்களிடம் சேகரித்த உணவுப் பொருட்களை வைத்து ஆலய வளாகத்தில் வைத்து பொங்கல் வைத்து அனைவரும் பகிர்ந்து உண்பார்கள்.

ஊத்துமலை பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :

1. Fr. Durairaj
2. Fr. Manuvel
3. Fr. R.S. Peter
4. Fr. Arulanandam SJ.
5. Fr. S. Savariraj
6. Fr. J. Arulanandam SJ.
7. Fr. J. Kuruvilla SJ.
8. Fr. T.A. Susai
9. Fr. M. Susaimanickam
10. Fr. John Meembillikavil SJ.
11. Fr. Saleth Jeyabalan
12. Fr. Masilamani
13. Fr. Joachim
14. Fr. Josephraj
15. Fr. Amirtharaja Sundar
16. Fr. Alocius Durairaj
17. Fr. Vianney
18. Fr. R.J.L. Antonyraj
19. Fr. T.A. Berchmans
20. Fr. V.S. Antonyraj
21. Fr. James
22.Fr.S.L.Stephen
23 Fr. Arul Antony Susai