410 புனித அந்தோனியார் திருத்தலம், பெரியகாடு


புனித அந்தோனியார் திருத்தலம்

இடம் : பெரியகாடு

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்
மறை வட்டம் : முட்டம்

நிலை : திருத்தலம்

பங்குத்தந்தை : அருட்பணி. ஜாண் ரூஃபஸ்

இணைப் பங்குத்தந்தை : அருட்பணி. சுரேஷ்.

குடும்பங்கள் : 350
அன்பியங்கள் : 12

ஞாயிறு திருப்பலி : காலை 06.45 மணிக்கு

திங்கள், புதன், வியாழன், சனி திருப்பலி : காலை 06.30 மணிக்கு.

செவ்வாய் காலை 10.30 மணி மற்றும் மாலை 05.15 மணிக்கு செபமாலை, புனித அந்தோனியார் நவநாள், திருப்பலி, நற்கருணை ஆசீர்.

வெள்ளி திருப்பலி : மாலை 06.00 மணிக்கு.

திருவிழா : சாம்பல் புதனுக்கு 22 நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்து 13 நாட்கள் நடைபெறும்.

மண்ணின் மைந்தர்கள் :
அருட்பணி. சேவியர்

அருட்சகோதரி பெல்லா
அருட்சகோதரி டெலிமா
அருட்சகோதரி கிராஸ்லின் ரெனோபியா

ஆலய இணையத்தளம் : http://periyakadustantonyshrine.com/

வழித்தடம் :
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் -பெரியகாடு
பேருந்து தடம் எண் 38B, 38E, 38L

ஆரோக்கியபுரம் - நீரோடி பேருந்து எண் 302. இறங்குமிடம் பெரியகாடு.

Location map : https://g.co/kgs/jkhtTm

வரலாறு :

கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறு மறை மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பும் மிகத்தொன்மையான பாரம்பரியமும் கொண்ட, சிறிய கடற்கரை கிராமம் பெரியகாடு. மேற்கே இராஜாக்கமங்கலம் துறை, கிழக்கே பொழிக்கரை, வடக்கே மேற்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஈத்தாமொழி, தெற்கே அரபிக்கடல் இவைகளை எல்லையாகக் கொண்டுள்ள இப்பங்கு, தூய சவேரியாரின் வருகைக்கு முன்னரே கிறிஸ்தவம் வேரூன்றிய தனித்துவம் மிகுந்தது.

கி.பி 1616 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கு சுமார் 450 பேர் கத்தோலிக்க கிறிஸ்தவ ர்களாக இருந்துள்ளனர்.

கி.பி 1700 ஆம் ஆண்டிலிருந்து கொள்ளை நோயால் பலர் இறந்துள்ளனர். அக்காலகட்டத்தில் புனித அந்தோனியார் பெயரில் சிறுகுருசடி போன்ற ஆலயம் கட்டி செபம் செய்து நலம் பெற்றனர்.

05.01.1939 ம் ஆண்டு : பெரியகாடு இராஜாக்கமங்கலம் துறை -யின் கிளைப் பங்கானது. புனித இஞ்ஞாசியார் குருசடி கட்டப்பட்டது.

18.08.1956 : பத்து கட்டுமரங்களில் சென்ற 35 நபர்கள் கடல்கொந்தளிப்பில் இருந்து புனிதரின் வல்லமையால் காப்பாற்றப் பட்டனர். இதுமுதற்கொண்டு பிற சமய மக்களும் திரளாக ஆலயம் வந்து புனிதரிடம் செபித்து நலம் பெற்று சென்றனர்.

30.03.1960 : நோயாளிகள் தங்கியிருந்து செபிக்கும் சாவடி (சத்திரம்) கட்டப் பட்டது.

1971 ம் ஆண்டு : பெரியகாடு தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.

03.07.1971 : புனித பாத்திமா அன்னை சிற்றாலயம் எழுப்பப் பட்டது.

29.01.1985 : கொடிமரம் வைக்கப் பட்டது.

22.02.2000 : அன்று புதியதாக கட்டப்பட்ட புனித அந்தோனியார் ஆலயம் அர்ச்சிக்கப் பட்டது.

15.05.2000 : புனித அந்தோனியார் கலையரங்கம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.

03.07.2001 : புனித தோமையார் குருசடி புதுப்பிக்கப்பட்டது.

14.09.2001 : தூய திருச்சிலுவைநாதர் குருசடி கட்டப்பட்டது.

19.11.2004 : பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது.

21.01.2009 : கடற்கரையில் அற்புத நீரூற்று கண்டு பிடிக்கப்பட்டது.

13.06.2010 : புனித அந்தோனியார் அற்புத நீரூற்று மண்டபம் கட்டப் பட்டது.

22.12.2010 : புதிய திருப்பயணியர் இல்லம் கட்டப்பட்டது.

12.01.2020 : சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறக்கப் பட்டது.

12.01.2020 : தூய அந்தோனியார் ஜெப இல்லம் புதுப்பிக்கப்பட்டது.

04.02.2020 : திருத்தலமாக அறிவிப்பு.

பெரியகாடு திருத்தல புனிதரின் புதுமைகள் :

1. கொள்ளை நோயிலிருந்து விடுதலை :

சுற்றுவட்டார கிராமங்களில் கொள்ளை நோயினால் மக்கள் இறந்த காலகட்டத்தில், இங்கு வந்து தங்கியிருந்து ஒரு சிறிய குருசடிகட்டி, ஜெபம் செய்து ஆயிரக்கணக்கான பல்சமய மக்கள் நலம் பெற்றனர்.

2. மீனவர்கள் காப்பாற்றப்படல்:

1956 ஆகஸ்டு 18-ம் நாள் 10 கட்டுமரங்களில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கடல் கொந்தளிப்பால் பல மணிநேரம் கரை சேரமுடியாமல் தத்தளித்தபோது, ஆலய தலைவாசல் கதவு திறந்து மணி அடித்து 53 மணி செபமாலை செபித்து முடித்தபோது, செங்கடல் இரண்டாகப் பிரிந்தது போல ஆலயத்திற்கு நேராக கடல் அலை அமைதியாக வழிவிட்டது.

3. புனிதரின் கரத்தால் கொடிமரம் நிலைநிறுத்தப்பட்டது :

29.01.1985ஒற்றைக் கல்லால் ஆன கொடிமரத்தை நிறுவ பலர் இணைந்து முயன்றும் முடியாத நிலையில், ஆலய பீடத்தில் இருக்கும் தூய அந்தோனியாரின் கரம் வரை நூலைகட்டி வைத்து, செபித்து முயன்ற போது அற்புதமாய் தூக்கி நிலை நிறுத்தப்பட்டது.

4. கடலில் அற்புத நீருற்று உருவானது :

21-01-2009, காலை 09.00 மணியளவில் மீன்பிடித்து கரைதிரும்பிய மீனவர்கள் கடல்நீரால் வாயை கழுவியபோது தண்ணீர் உப்பின்றி இனிமையாக இருந்ததையும் அதிசய நீரூற்று பாய்ந்ததையும் அவர்களும் ஆயிரக்கணக்கான மக்களும் கண்டுவியந்தனர்.

5. நான்கு மணிநேரம் கடலில் தத்தளித்த 2 இளைஞர்கள் உயிர்பிழைத்தது :

2014 ஆகஸ்டு மாதம் 24 அமாவாசை நள்ளிரவு 12 மணிக்கு கடற்கரையில் நண்டுபிடித்து விளையாடிய பட்டதாரி இளைஞர்களை கடல் அலை இழுத்துச் சென்றது. 4 மணிநேரம் உயிருக்கு போராடிய இளைஞர்கள் அற்புதமாக காப்பாற்றப் பட்டனர்.

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். மத்தேயு 11:28

இத்தகைய சிறப்பு வாய்ந்த பெரியகாடு புனித அந்தோனியார் திருத்தலத்திற்கு வாருங்கள்..! இறை ஆசீரை பெற்றுச் செல்லுங்கள்..!