523 புனித செபமாலை அன்னை ஆலயம், புத்தன்துறை


புனித செபமாலை அன்னை ஆலயம்
இடம் : புத்தன்துறை

மாவட்டம் : கன்னியாகுமரி
மறைமாவட்டம் : கோட்டாறு
மறை வட்டம் : முட்டம்

குடும்பங்கள் : 462
அன்பியங்கள் : 10

பங்குத்தந்தை : அருட்பணி. காட்ஃப்ரே

ஞாயிறு திருப்பலி : காலை 7.00 மணி

வார நாட்களில் திருப்பலி : காலை 6.30 மணி

புதன் மற்றும் வெள்ளி : மாலை 6.00 மணி

மாதத்தின் முதல் வியாழன் தூய ஜார்ஜியார் குருசடியில் நவநாள் திருப்பலி : மாலை 6.00 மணி.

மாதத்தின் முதல் சனி : மாலை 6.00 நற்கருனை ஆராதனை.

திருவிழா : பெப்ரவரி - மாதத்தில் 10 நாட்கள்.
அக்டோபர் 7 - தேதிப்படி திருப்பலி

மண்ணின் மைந்தர்கள் அருட்தந்தையர்கள் :
1. அருட்பணி. தாமஸ் அம்புரோஸ் பால்டான்ஸ்
2. அருட்பணி. வின்சென்ட் ரோட்ரிகோ
3. அருட்பணி. ஜோசப் ரொமால்டு
4. அருட்பணி. சகாய ஆனந்த்
5. அருட்பணி. நவின்
6. அருட்பணி. சந்தியாகு
7. அருட்பணி. ஜார்ஜ் கபிரியேல் கிஷோர்
8. அருட்பணி. சகாய வினட் மேக்சன்

மற்றும் 14 அருட்சகோதரிகள்.

வழித்தடம் : 38A, 38H, 38C

location map : Holy Rosary Church Periyakadu Rd, Puthenthurai, Tamil Nadu 629501
https://maps.app.goo.gl/14Vdd2Aw5uhSoE9s5

பங்கின் வரலாறு:

புத்தன் துறை எனும் இப்புதுமை பூமி, தூய சவேரியாரின் வருகைக்கு முன்னரே கிறித்தவம் தழுவிய மக்களை தன்னகத்தே கொண்டிருந்தது என்பது இப்பங்கின் தனிச் சிறப்பாகும். கி.பி 1544- ஆம் ஆண்டு தூய சவேரியாரின் கோட்டாறு வருகைக்கு முன்னரே, கிறித்தவம் இம் மக்களின் வாழ்வு நெறியாக இருந்துள்ளது. புனிதர் 1542- ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் முத்துக்குளித்துறையின் மணப்பாடு என்ற கிராமத்திற்கு வந்தார். அவரது வருகைக்கு முன்னரே அம்மக்கள் கிறித்துவத்தை தழுவியிருந்தனர் என்பது வரலாறு.

1644- ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இயேசு சபையின் வருடாந்திர அறிக்கையின் படி, இன்றைய கோட்டாறு மறை மாவட்டத்தில் புத்தன்துறை, குளச்சல், கடியபட்டணம், இராஜக்கமங்கலம், கோட்டாறு ஆகிய ஐந்து ஊர்களில் குருக்கள் தங்கியிருந்து பணி செய்துள்ளனர். இயேசு சபையினரின் கட்டுபாட்டிலிருந்த இப்பகுதிகள் பின்னர் பிரான்சிஸ்கன் மிசினரீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் பொறுப்பேற்ற போது இன்றைய கோட்டாறு மறைமாவட்டத்தின் 3 பங்குகள் இருந்தன.

1. மிடாலம், மேல்மிடாலம், இனையம், இனையம் புத்தன்துறை, குறும்பனை, வாணியகுடி ஆகிய ஊர்களுக்கு பொறுப்பாக அருட்தந்தை. ஆன்றனி டி சேசுமரியா.

2. இராஜக்கமங்கலம், பள்ளம் உள்ளடக்கிய புத்தன்துறை பங்கிற்கு அருட்தந்தை. ஆன்றனி டி கொன்சாகோ.

3. கோவளம், கன்னியாகுமரி உள்ளடக்கிய மணக்குடி பங்கிற்கு அருட்தந்தை. ஜோசப் டி ஜோக்கிம். ஆகியோர் பொறுப்பு வகித்தனர்.

1847- ஆம் ஆண்டில் புத்தன்துறை பங்கின் மக்கள் தொகை 2484 ஆக இருந்துள்ளது. இத்துணை சிறப்பு மிக்க பழைமையும், பெருமையும் மிக்க பங்காக புத்தன்துறை பங்கு இருந்துள்ளது.

பள்ளம் முதல் இராஜக்கமங்கலம் வரையிலான மக்களுக்கு சிற்றாலயம் போதுமானதாக அமையவில்லை. எனவே மக்கள் புதிய ஆலயம் கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொண்டனர்.

1850 -ஆம் ஆண்டு பிரான்சிஸ் என்னும் இத்தாலி நாட்டுக் குருவானவர் தலைமையில் 153 அடி நீளம் 53 அடி அகலத்தில் செபமாலை மணிகளின் எண்ணிக்கை அளவில் ஆலயம் கட்ட தீர்மானிக்கப்பட்டு அடிக்கல்லும் நாட்டப்பட்டது. பெல்ஜியம் நாட்டில் தான் கண்ட ஆலயங்களைப் போன்று மிகப் பிரமாண்டமான தூண்களுடன் திட்டமிட்டார் அருட்பணி. பிரான்சிஸ்.

ஆனால் ஆலயம் வேலை தொடங்கிய குறுகிய நாட்களிலேயே அருட்பணி. பிரான்சிஸ் அவர்கள் இத்தாலிக்கு திரும்ப அழைக்கப் பட்டார்கள். பிற்காலத்தில் வந்த பங்குத்தந்தையர்கள் சிறிது சிறிதாக ஆலய கட்டுமானப் பணியை வழிநடத்தினர்.

ஆயினும் மக்கள் மத்தியில் அவ்வப்போது வந்த சிறு சிறு சிக்கல்கள் ஆலய பணிக்கு தடைகள் போடப்பட்டன. எனவே சுவர் மட்டத்திலேயே ஆலயப் பணிகள் பல ஆண்டுகள் நின்றது.

நிக்கோலாஸ் கோஸ்தா என்பவர் தனது சொந்த முயற்சியாக பொழிக்கரை, புத்தன் துறை தலைவர்களோடு பேச்சவார்த்தை நடத்தினார். ஆலயத்தை கட்டி முடிக்க அனைவரும் இணைந்து உழைப்பது என்பது முடிவாயிற்று. எனவே அவர்கள் அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி. ஜோசப் பொனாண்டோ அவர்களை அணுகி, தங்கள் கருத்தை தெரிவித்தனர். பங்குப் பணியாளரும் ஒத்தழைப்பதாக வாக்களித்தார். எனவே ஆலயப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

கல், செங்கல், மரம் என கட்டுமானப் பொருட்களும் புத்தன்துறைக்கு மேற்கே பெரியக்காடு என்ற கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து புத்தன்துறை பங்கு மக்களால் தலைச்சுமடாகவும் (தலைச்சுமை), கடல் வழியாகவும் கொண்டு வரப்பட்டன.

மழையென்றும், வெயிலென்றும் பாராமல் அன்னையின் ஆலயம் எழும்ப உழைத்ததோடு, வாரம் ஒரு நாள் அதிக கடல் வருமானம் உடைய நாளின் வருமானத்தை தாரளமாக கொடுத்தும் உதவியுள்ளனர். ஆலயம் வேகமாக உயர்ந்து வந்த நிலையில் அருட்பணி. ஜோசப் பெர்னாண்டோ பணி மாற்றம் பெற்று சென்றார்.

அருட்பணி. ஜாண் பெரைரா அவர்கள் ஆலயப் பணிகளை முடித்து 1902- ஆம் ஆண்டு அர்ச்சிப்பிற்கு நாள் குறித்தார். ஆலய கோபுரம் கட்டி முடிக்க முடியாமலே 1902- ஆம் ஆண்டு அப்போதைய கொல்லம் ஆயர் அலோசியஸ் மரிய பென்சிகர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

1905- ஆம் ஆண்டு புத்தன்துறையில் பாலன் இயேசு நடுநிலைப்பள்ளி ஆயர் பென்சிகர் அவர்களின் அன்பு பரிசாக தொடங்கப்பட்டது. கடலோர கிராமத்தில் முதல் நடுநிலைப்பள்ளி என்ற பெருமையையும் இப்பள்ளி பெற்றுள்ளது.

1910- ஆம் ஆண்டு புத்தன்துறை பங்கிலிருந்து இராஜக்கமங்கலம் பிரிந்து தனிப்பங்காது.

1922- ஆம் ஆண்டு அருட்பணி. ஜெரோமியாஸ் டி குரூஸ் பங்குப் பணியாளராக இருந்த காலத்தில், ஆயர் பென்சிகர் அவர்களின் வேண்டுதலால் புத்தன்துறை பங்கு மக்கள் வீக்கம் எனும் கொள்ளை நோயிலிருந்து காப்பாற்றப்பட்டனர்.

1928- ஆம் ஆண்டு பாலன் இயேசு நடுநிலைப் பள்ளிக்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன.

அருட்பணி. ஹிலாரி அவர்களின் பணிக்காலம் (1943- 1949) புத்தன்துறையின் பொற்காலம் என்று அழைக்கப்படும் அளவு முக்கியமானது. ஊருக்கு சாலை வசதி செய்து தர அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எண்ணிலடங்கா. அப்போதைய கேரள அமைச்சர் ஜாண் பவுலோஸ் அவர்கள் உதவியோடு மேல கிருஷ்ணபுதூரை சார்ந்த திரு. தாஸ் என்பவரின் ஆதரவுடன், அரசு ஆணை பெற்று புத்தன்துறைக்கு சாலை வசதி செய்து தரப்பட்டது. சாலைக்கு அருட்பணி. ஹிலாரி என்று பெயரிடப்பட்டது. அருட்பணி. ஹிலாரி காலத்தில் தான் கன்னியர் இல்ல கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டது.

அதன்பின் அருட்பணி. சிரில் பர்னாண்டோ அவர்கள் பொறுப்பேற்று சில ஆண்டுகள் பங்கை வழிநடத்தினார்கள்.

தொடர்ந்து அருட்பணி. வின்சென்ட் பெரைரா அவர்கள் காலத்தில் ஊரில் மேற்குப் பகுதியிலிருந்து மணல் தேரிகள் (மேடுகள்) அப்புறப்படுத்தப் பட்டன. பாலன் இயேசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளியாகும் வாய்ப்பு செயல்படுத்த முடியாமல் போனது. இப்பகுதி மக்களுக்கு தொன்று தொட்டே கல்வி வழங்கிய பழமையான பள்ளி இன்றும் நடுநிலைப்பள்ளியாக திகழ்வது இக்கால கட்டத்தில் நடைப்பெற்ற நிகழ்வுகளின் விளைவேயாகும்.

தொடர்ந்து அருட்பணி. வெனான்சியுஸ் பர்னாண்டோ காலத்தில் பங்கில் ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஆலயப்பீடம் மாற்றியமைக்கப்பட்டது. ஆலயத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள இடங்கள் ஊருக்காக பதிவு செய்யப்பட்டன.

அருட்பணி. ஜோசப் ராஜ் அவர்கள் பணி காலத்தில் ஊருக்கென்று வருமானம் இல்லாத காரணத்தினால் வருவாய்க்கு வழி வேண்டி, அருட்சகோதரிகள் வசம் கொடுக்கப்பட்ட நிலங்களில், பள்ளி, கன்னியர் இல்லம் நீங்கலான பகுதிகள் ஊருக்கே மீண்டும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஊரின் கிழக்கு எல்லைப் பகுதியில் ஜார்ஜியார் பெயரில் குருசடிகட்ட அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

தொடர்ந்து அருட்பணி. மரியதாசன் அவர்கள் காலத்தில் ஊருக்கு பதிவு செய்யப்பட்ட இடங்களில் தென்னை மரங்கள் வைத்து வளர்க்கப்பட்டன. அருட்பணி. மரியதாசன் அவர்களின் உழைப்பின் பலன் தான் இன்னும் நாம் காணும் தென்னை மரங்கள்.

அருட்பணி. நார்பட் அலக்ஸாண்டர் வழிகாட்டுதலில் பங்கிற்கு அஞ்சல் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. தோப்பு பராமரிக்க ஆழ்குழாய் கிணறு மற்றும் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டன.

அருட்பணி. எரோணிமுஸ் அவர்கள் குறுகிய காலமே பணி செய்தாலும். ஆயர் பென்சிகர் சிறுசேமிப்பு திட்டத்தை தொடங்கி மக்கள் சேமிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தி குறைந்த வட்டியில் கடன் பெற்று பொருளாதார வாழ்வில் வளம் பெற உதவி செய்தார். அன்னை கலையரங்கம், மணிக்கூண்டு, தனிக்கழிப்பறை திட்டங்கள் போன்றவை அருட்தந்தை காலத்தில் நிறைவேற்றப்பட்டன. முதல் பங்குப்பேரவை அமைக்கப்பட்டதும் அருட்தந்தையின் பணிக்காலத்தில் தான்.

தொடர்ந்து அருட்பணி. எல்பின்ஸ்டன் ஜோசப் காலத்தில், இப் பங்கு பல துறைகளில் வளர்ச்சி கண்டது.

அருட்பணி. மரிய ஜேம்ஸ் அவர்கள் பங்கிற்கு புதிய பங்குப் பணியாளர் இல்லம் கட்டியெழுப்பினார்.

புதிய ஆலயமும் மக்களின் அர்ப்பணமும் :

2001 ஆம் ஆண்டில் அருட்பணி. சகாயதாஸ் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற நிலையில், இதற்கு முன்பிருந்த குழப்பமான சூழல், நிர்வாகமில்லாத நிலை ஆகியன சரிசெய்யப்பட்டு, 1902 ஆம் ஆண்டில் கோபுரம் இல்லாமல் கட்டப்பட்ட ஆலயத்திற்கு 2002 ல் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும் என்ற நோக்குடன், 23.09.2001 அன்று நடந்த பங்கு பொதுக்குழு (ஊர்க்கூட்டம்) கூட்டத்தில் திருப்பணி குழு தேர்வு செய்யப்பட்டு, தரை புதுப்பது, சுவர்களை கொத்தி பூசுவது, மின் வசதியை நவீனப் படுத்துவது, கோபுரம் இல்லாத ஆலயத்திற்கு கோபுரம் கட்ட வேண்டும் ஆகிய கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு 26.04.2002 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, புதுப்பித்தல் பணிக்கு அடிக்கல் நாட்டப் பட்டது.

மே மாதத்தில் பணிகள் துவக்கபட, 03.06.2002 அன்று ஆலய முன்புறம் தோண்டப்பட்ட பள்ளத்தின் விளைவாக ஆலயத்தின் முன்பகுதி இடிந்து விழுந்தது. அவ்வேளையில் இந்த 14 அடி பள்ளத்தில் 16 பேர்கள் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது பணி செய்து கொண்டிருந்த ஒருவர் கவனிக்க, 16 பேரும் உடனடியாக பள்ளத்திலிருந்து மேலேறி வர சற்று நேரத்தில் ஆலயம் இடிந்து விழுந்தது. மக்கள் அனைவரும் உயிர்களை காப்பாற்றிய செபமாலை அன்னையை போற்றினர். இடிந்த ஆலயத்திற்காக கவலை கொண்டனர்.

கவலையை மறந்து உறுதியான நெஞ்சுரத்துடன் அன்றிரவு 07.00 மணிக்கு இடிந்த ஆலய முற்றத்தில் ஊர் பொதுக்குழு கூட்டப்பட்டு, புதிய ஆலயம் கட்டுவது என தீர்மானித்து, அதற்கான பணிகள் விரைவு படுத்தப்பட புதிய ஆலய வரைபடமும் தயாரானது.

இடிபாடுகள் அகற்றும் பணியில் சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவரும் முழு மூச்சுடன் பணி செய்தனர். கோபுரப் பணி நடந்த போது, 13 அடி பள்ளத்தில் வரிசையாக மக்கள், தொடர்ந்து மண் சரிந்து கொண்டேயிருந்தது. மண்ணை அகற்றி தளம் அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்க, இரவு 12.00 மணிக்கு ஒருபகுதி இடிந்து விழ, தளராது கூட்டுசெயற்பாட்டுடன் மக்கள் ஓயாமல் உழைக்க, இவர்களது உழைப்பிற்கு வெற்றி கிடைத்தது பணிகள் நிறைவு பெற்றது.

தொடர்ந்து இளைஞர்கள், பெரியவர்கள் கட்டுமானப் பணிக்கான கற்களை சுமப்பது, பெண்கள் சித்தாள் வேலை செய்வது, முதியவர்கள் மணல் சலித்து கொடுப்பது என அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க அழகிய இவ்வாலயம் உருவானது. தொடர்ந்து மக்களின் உழைப்பிலேயே ஆலய தரையும் போடப்பட, முழுக்க முழுக்க மக்களின் நன்கொடையில் மற்றும் அருட்பணி. சகாயதாஸ் அவர்களின் வழிகாட்டுதலில் கட்டுமானப் பணிகள் ஒரு கோடி 15 இலட்சம் செலவில் நிறைவு பெற்று, 14.02. 2005 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. புத்தன்துறை மக்களின் கடின உழைப்பும், நன்கொடைகளும், இடைவிடா ஜெபங்களுமே அழகிய இவ்வாலயம் என்பதே சாலச் சிறந்தது.

அன்னையின் துணையாலும், பங்கு மக்களின் அயரா உழைப்பாலும், தாராள உள்ளத்தாலும், விடமுயற்சியாலும், இடைநிறுத்தமின்றி குறுகிய காலத்தில் ரூ.1 கோடி 15 இலட்சம் செலவில் அற்புதமான ஆலயம் கட்டி, 2005 பிப்ரவரி திங்கள் 14- ஆம் நாள் ஆயர் அவர்களால் அர்ச்சித்து, புனிதப்படுத்தப்பட்டது.

கிராம தன்னிறைவு திட்டம் என்ற அரசின் திட்டத்தோடு பங்கு பணத்தையும் முதலீடு செய்து திருமண மண்டபம் கட்டப்பட்டது. அருட்பணி. டன்ஸ்டன் அவர்களின் வழிகாட்டுதலில் பல பணிகள் மேற்கொள்ளப் பட்டன.

அருட்பணி. ஜாண்ரோஸ் அவர்களின் காலத்தில் சலேசிய அருட்சகோதரிகள் புத்தன்துறை பங்கிற்கு பணி செய்ய வருகை தந்தார்கள். சலேசிய அருட்சகோதரிகள் தங்களின் கல்விப் பணியினை ஆரம்பித்தார்கள். புதிதாக பள்ளிக்கூடம் கட்டுவதற்கு நிலம் வாங்க அருட்தந்தை அவர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, சலேசிய அருட்சகோதரிகள் நிலம் வாங்கினார்கள்.

தற்போது அருட்பணி. காட்ஃபரே அவர்கள் வழிகாட்டுதலில் பணிகள் தொடர்கிறது. வாங்கப்பட்ட நிலத்தில் பள்ளிக்கூட கட்டிடம் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு புத்தன்துறை பங்கு வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கிறது.

அன்னையின் உடனிருப்பும், இறைவனின் வழிநடத்துதலும் வளமான வரலாறு நோக்கி அமைதியும், ஒற்றுமையும், வளர்ச்சியும் நிலைபெறும் மேலான காலம் நோக்கி புத்தன்துறை இறை மக்களை வழிநடத்தும் என்பது இவர்களின் உறுதியான நம்பிக்கை .

பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புகள் :
1. பங்குப்பேரவை
2. கத்தோலிக்க சேவா சங்கம்
3. கிறிஸ்தவ வாழ்வு சமூகம்
4. மரியாயின் சேனை
5. திரு இருதய சபை
6. சலேசிய உடன் உழைப்பாளர்கள்
7. கார்மல் மாதா சபை
8. நல்ல சமாரியர் இயக்கம்
9. வழிபாட்டுக்குழு
10. மறைக்கல்வி மன்றம்
11. அன்பிய ஒருங்கிணையம்
12. பக்தசபை ஒருங்கிணையம்
13. குடும்பநலப் பணிக்குழு
14. சிறார் இயக்கம்
15. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்
16. இளையோர் இயக்கம்.

பங்கில் பணி செய்த அருட்பணியாளர்கள் :
1. அருட்பணி. கொன்சாகோ
2. அருட்பணி. ஜெராமியாஸ் டி குரூஸ்
3. அருட்பணி. ஜாண் பெர்ணான்டஸ்
4. அருட்பணி. கிறிஸ்டியான்
5. அருட்பணி. உபால்டுராஜ் பெர்ணான்டோ
6. அருட்பணி. ஜேக்கப் லோப்பஸ்
7. அருட்பணி. அம்புரோஸ்
8. அருட்பணி. ஸ்தனிஸ்லாஸ்
9. அருட்பணி. ஸ்டீபன்
10. அருட்பணி ஹிலாரி
11. அருட்பணி. பெர்ணான்டோ
12. அருட்பணி. சிரில் பெர்ணான்டோ
13. அருட்பணி. வின்சென்ட் பெர்ணான்டோ
14. அருட்பணி. வின்சென்ட் பெரைரா 
15. அருட்பணி. வெனான்சியுஸ் பெர்ணான்டோ
16. அருட்பணி. எட்மண்ட் முருகுபிள்ளை
17. அருட்பணி. ஜோசப்ராஜ்
18. அருட்பணி. மரியதாசன்
19. அருட்பணி. நார்பர்ட் அலெக்ஸாண்டர்
20. அருட்பணி. எரோணிமுஸ்
21. அருட்பணி. எல்பின்ஸ்ட ன் ஜோசப்
22. அருட்பணி. ஜெரால்டு
23. அருட்பணி. மரிய ஜேம்ஸ்
24. அருட்பணி. சகாய தாசு
25. அருட்பணி. டன்ஸ்டன்
26. அருட்பணி. ஜாண்றோஸ்
27. அருட்பணி. காட் ஃப்ரே.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. காட்ஃப்ரே அவர்கள்.