647 இயேசுவின் திருஇருதய ஆலயம், கரும்பிலாவிளை

    

இயேசுவின் திருஇருதய ஆலயம் 

இடம் : கரும்பிலாவிளை

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறைமாவட்டம் : குழித்துறை 

மறைவட்டம் : வேங்கோடு

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : தூய இதய அன்னை ஆலயம், தும்பாலி 

பங்குத்தந்தை : அருள்பணி. ஜான் சேவியர், ISCH

இணைப் பங்குத்தந்தை : அருள்பணி. அலெக்ஸ், ISCH

குடும்பங்கள் : 102

அன்பியங்கள் : 5

ஞாயிறு திருப்பலி காலை 06.00 மணி

வெள்ளி மாலை 06.30 மணி செபமாலை இயேசுவின் திருஇருதய நவநாள் திருப்பலி 

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06.30 மணி செபமாலை நவநாள் திருப்பலி குணமளிக்கும் நற்கருணை ஆசீர் 

திருவிழா : டிசம்பர் மாதம் இறுதியில், ஐந்து நாட்கள். 

வழித்தடம் : மார்த்தாண்டம் -தேங்காப்பட்டணம் வழித்தடத்தில், அஞ்சுகண்ணு கலுங்கு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, இடப்புறமாக சுமார் ஒரு கி.மீ தூரம் சென்றால் இவ்வாலயத்தை அடையலாம். 

Location map : SACRED HEART CHRUCH KARUMPILAVILAI

Kunnathoor, Tamil Nadu 629171

https://maps.app.goo.gl/riiEX4kNidYd9L596

வரலாறு :

முற்காலத்தில் கருமையான பெரிய பலாமரத்தடியில் வைத்து ஊர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்ததால் கரும்பிலாவிளை என இவ்வூரின் பெயர் விளங்கலாயிற்று. 

இங்கு வாழ்ந்த முன்னோர் பனைமரம் ஏறி தங்கள் வாழ்ந்து வந்தனர். இவ்வேளையில் நாயர் இனத்தாரின் சர்வாதிகாரம், அடக்குமுறையால் இவர்கள் கிறிஸ்தவம் தழுவினர். முள்ளங்கனாவிளை, புதுக்கடை, வேங்கோடு ஆகிய பங்கு ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளில் பங்கேற்றதுடன் அருட்சாதனங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இந்த சுற்று வட்டாரப் பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகரித்ததால் காப்புக்காடு தனிப்பங்காக ஆனது. 1926 ம் ஆண்டு முதல் கரும்பிலாவிளை அதன் கீழ் செயல்பட்டு வந்தது. அக்காலகட்டத்தில் இந்தப் பகுதிகளில் காலரா, வயிற்றுப்போக்கு, பஞ்சம், பட்டினி, பெருமழை போன்ற துன்பங்களிலிருந்து மக்களைக் காக்க பங்குத்தந்தையர் மக்களோடு ஒவ்வொரு ஆலயங்களிலும் பஜனை பாடல்கள் பாடியும், ஜெபித்தும் மக்களை பாதுகாத்து வந்தனர். கரும்பிலாவிளை ஊர் இளைஞர்களும் பஜனையில் ஆர்வம் கொண்டு, அப்போது பஜனை பாடும் ஊர்களான தும்பாலி, செபஸ்தியார்புரம் மக்களோடு இணைந்து பஜனை பாடல்கள் பாட சென்று வந்தனர். 

இவ்வாறு சென்று வருவதில் சிரமம் இருந்து வரவே, கரும்பிலாவிளையில் ஒரு பஜனை மடம் அமைக்க வேண்டும் என அப்போதைய பங்குத்தந்தை அருள்பணி. சூசை மிக்கேல் அடிகளாரிடம் கோரிக்கை வைக்க, எவராவது இதற்கு இலவசமாக நிலம் கொடுத்தால் பஜனை மடம் அமைக்கலாம் என்று அவர் தெரிவித்தார். 

இவ்வூரை சேர்ந்த நல்லுள்ளம் கொண்ட சிலர் இலவசமாக நிலம் வழங்கவே அதில் தூய அமலோற்பவ மாதா குருசடி கட்டப்பட்டது. ஆண்டுதோறும் இவ்வூர் இளைஞர்கள் ஒன்றிணைந்து பஜனை பாடல்கள் பாடி, அதில் வரும் காணிக்கையை பங்குத்தந்தையர்களிடம் கொடுத்து வந்தனர். மேலும் கருப்புகட்டி காணிக்கை, மாதா காணிக்கை எனவும் காணிக்கை பெற்று பங்குத்தந்தையிடம் கொடுத்து வந்தனர். அருள்பணியாளர்கள் இல்லம் சந்திக்கும் போது இயேசுவின் திருஇருதய படத்தை இறைமக்களுக்கு கொடுத்து ஜெபித்து வந்தனர். 

25.12.1981 அன்று அருள்பணி. மார்சலின் டி போரஸ் அவர்களால் முதல் திருப்பலி மாதா குருசடியில் நிறைவேற்றப்பட்டது. மக்களின் ஆர்வத்தைக் கண்ட பங்குத்தந்தை மாதத்திற்கு ஒரு திருப்பலி இக்குருசடியில் நிறைவேற்றி வந்தார். 

இதனிடையே அருள்பணி. மார்சலின் டி போரஸ் அவர்களின் முயற்சியால் 21.01.1982 அன்று முதல் கரும்பிலாவிளையில் மறைக்கல்வி வகுப்புகள் ஆரம்பிக்கப் பட்டது. காப்புக்காடு கன்னியர் இல்ல அருள்சகோதரிகள் வந்து மறைக்கல்வி வகுப்புகள் நடத்த உறுதுணையாக இருந்தனர். 

1983 ல் பொறுப்பேற்ற அருள்பணி. பொ. வின்சென்ட் அவர்கள் பணிக்காலத்தில் கரும்பிலாவிளை ஊர் மக்களின் முயற்சியால் 40* 15* அளவில் ஓலைக்கூரை ஷெட் அமைக்கப்பட்டு வாரத்திற்கு ஒருநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. இவ்வேளையில் கரும்பிலாவிளை ஊருக்கு வந்து மேதகு ஆயர் ஆரோக்கிய சாமி அவர்கள் இவ்வாலயத்திற்கு இயேசுவின் திருஇருதய ஆலயம் எனப் பெயர் சூட்டி, காப்புக்காடு பங்கின் கிளைப் பங்காக உயர்த்தியதுடன், புதிய ஆலயம் அமைக்க உதவி செய்வதாக கூறிச் சென்றார். 

1984 -ம் ஆண்டு அருள்பணி. பொ. வின்சென்ட் அவர்களால் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அஸ்திவாரம் கட்டப்பட்டது. 

1986 -ல் பொறுப்பேற்ற அருள்பணி. ஜான் ஜோசப் அவர்களின் பணிக்காலத்தில் மக்களின் உழைப்பாலும் நன்கொடைகளாலும் செங்கல் சுவர் எழுப்பி மேற்கூரை பனைமரத்தால் அமைக்கப்பட்டு ஓலை வேயப்பட்டது. மேலும் பிரதான சாலையில் இருந்து ஆலயத்திற்கு பாதை அமைக்கப் பட்டது. 

1986 -ல் அருள்பணி. S. M. மரியதாஸ் பணிக்காலத்தில் காப்புக்காடு ஆலயத்தில் இருந்து மாதா சுரூபம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு குருசடியில் நிறுவப் பட்டது. 

1987 -ல் அருள்பணி. ஆல்பின் ராபி அவர்களால் ஞாயிறு திருப்பலியுடன், மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. மேலும் ஆலயத்தை சிறப்பாக கட்டி முடிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு தொண்டு நிறுவனத்திடமிருந்து நிதியுதவியும் பெற்றுக் கொடுத்தார். 

தொடர்ந்து பணியாற்றிய அருள்பணி. J. பிரான்சிஸ் சேவியர் பணிக்காலத்தில் ஆலயம் கட்டிமுடிக்கப் பட்டு 28.02.1992 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

அருள்பணி. மத்தியாஸ் பணிக்காலத்தில் 3 அன்பியங்கள் துவக்கப் பட்டன. அருள்பணி. பெனடிக்ட் சேவியர் பணிக்காலத்தில் சகோ. ஞானமுத்து -வுடன் இணைந்து பாலர்சபை, இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம், அடித்தள முழுவளர்ச்சி சங்கம் ஆகியன துவக்கப் பட்டது. 

1998 ல் பொறுப்பேற்ற அருள்பணி. பெனடிக்ட் M. ஆனலின் பணிக்காலத்தில் வழிபாட்டில் அனைவரும் இணைந்து பங்கேற்க பாடல்புத்தகங்கள் வழங்கப்பட்டதுடன், திருவழிபாட்டுக் குழு தொடங்கப் பட்டது. 

1999 ல் பொறுப்பேற்ற அருள்பணி. ஜெயபிரகாஷ் அவர்களின் முயற்சியால் ஆலயத்திற்கு நிலம் வாங்கப்பட்டது. 2001 ம் ஆண்டு தும்பாலி தனிப் பங்காக உயர்த்தப் பட்ட போது, கரும்பிலாவிளை அதன் கிளைப் பங்காக மாற்றப்பட்டது. இவ்வாண்டு முதல் ஞாயிறு திருப்பலி மற்றும் வெள்ளிக்கிழமை தோறும் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. அருள்பணி. கிறிஸ்டோபர் அவர்களின் முயற்சியால் பழுதடைந்த ஆலய மேற்கூரை சரிசெய்யப்பட்டது. ஆலயத்தின் பின்புறம் நிலம் வாங்கப்பட்டது. 

தொடர்ந்து அருள்பணி. கலிஸ்டஸ் அவர்களும் அருள்பணி S. வின்சென்ட் ராஜ் அவர்களும் தலா ஐந்து ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றினார்கள். 

2014 முதல் அருள்பணி. ஜோசப் காலின்ஸ் அவர்கள் சிறப்பாக பணி புரிந்தார். 

2016 ம் ஆண்டு முதல் ஷூவென்ஸ்டாட் தந்தையர் சபையினர் பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார்கள். 

பங்குத்தந்தை அருள்பணி. தனபால் ISCH மற்றும் இணைப் பங்குத்தந்தை அருள்பணி. ஜெயகுமார் ISCH பணிக்காலத்தில் வெண்கல கொடிமரம் வைக்கப் பட்டது. 

அருள்பணி. ஜான் சேவியர் ISCH பணிக்காலத்தில் ஆலய பொன்விழா 2018 ம் ஆண்டு சிறப்புற கொண்டாடப் பட்டது. ஆலய உட்புற தரை டைல்ஸ் போடப்பட்டு புதுப்பக்கப் பட்டது. 2019 ம் ஆண்டு ஆலய முன்புறம் மற்றும் சுற்றுப்புறமும் இன்டர்லாக் போடப் பட்டது. மேலும் ஆலய முன்பகுதியில் ஒரு ஷெட் போடப்பட்டது. 

ஆலய பங்கேற்பு அமைப்புகள் :

1. பங்கு அருட்பணிப் பேரவை

2. அன்பிய ஒருங்கிணையம்

3. பக்தசபை ஒருங்கிணையம்

4. அடித்தள முழுவளர்ச்சி சங்கம் 

5. பாலர்சபை 

6. சிறுவழி இயக்கம் 

7. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம் 

8. இளையோர் இயக்கம் 

9. மறைக்கல்வி மன்றம் 

10. மரியாயின் சேனை 

11. பீடப்பூக்கள் 

12. கத்தோலிக்க சேவா சங்கம் 

13. பாடகற்குழு 

14. வழிபாட்டுக் குழு.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் :

பங்குத்தந்தை அருள்பணி. ஜான் சேவியர், ISCH.