147 கிறிஸ்து அரசர் ஆலயம், முகமாத்தூர்


கிறிஸ்து அரசர் ஆலயம்

இடம் : முகமாத்தூர்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : அருட்பணி ஆல்பின் ஜோஸ்.

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கோழிப்போர்விளை.

குடும்பங்கள் : 160
அன்பியங்கள் : 5

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு

வியாழக்கிழமை மாலை 06.30 மணிக்கும் திருப்பலி நடைபெறும்.

திருவிழா : நவம்பர் மாதத்தில் கிறிஸ்து அரசர் விழாவை உள்ளடக்கிய பத்து நாட்கள்.

வரலாறு :

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு முகமாத்தூர் ஊர் அடர்ந்த காடு போன்ற பகுதிகளின் மத்தியில் சிறுசிறு குடிசைகளைக் கொண்டிருந்தது.

முளகுமூடு பங்கில் பணியாற்ற வந்த வெளிநாட்டு அருட்பணியாளர் ஒருவர் முகமாத்தூர் ஊருக்கு வந்த போது மக்கள் காலரா என்ற உயிர்க்கொல்லி நோயால் அவதிப்பட்டு இறப்பதைப் பார்த்து, மக்களின் நோயை போக்க திருச்சிலுவை ஒன்றைக் கொண்டு வந்து வைத்தார். பின்னர் மக்கள் அனைவரும் இணைந்து ஜெபிப்பதற்காக சிறிய குருசடி ஒன்றை அமைத்து அதில் திருச்சிலுவையை வைத்து ஜெபித்து வரவே, பரவியிருந்த காலரா நோய் குணமாகியது.

வருடத்திற்கு குறையாமல் ஐந்து திருப்பலி நடைபெற்றும், வருடத்திற்கு ஒரு சனிக்கிழமை அன்னதானம் விருந்தளித்தும், வருடத்திற்கு ஒரு முறை 41 நாட்கள் பஜனை எடுத்தும்; பஜனையின் போது புனித அந்தோணியார், புனித மிக்கேல் அதிதூதர், புனித ஜார்ஜியார், திருச்சிலுவை என நான்கு நாட்கள் தேர்பவனி எடுத்தும் மக்கள் கொண்டாடி வந்தனர்.

கி.பி 2000 ம் ஆண்டில் திருச்சிலுவைக்கு கல்வாரி மலைபோல் இளையோர்கள் வடிவம் கொடுத்தனர். 11-11-2014 அன்று கெபி அமைத்து அதில் திருச்சிலுவை வைத்து அர்ச்சிக்கப் பட்டது. அதன் பின் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 14 ம் நாள் திருச்சிலுவை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

மறைக்கல்வியின் தோற்றம் :

மறைக்கல்வி என்ற இறைஞானத்தை முகமாத்தூரில் உருவாக்கிய முதல் ஆசிரியை என்ற பெயர், அருட்சகோதரி மாஜில்லா அவர்களையே சாரும். அவர்கள் வீடுவீடாகச் சென்று பிள்ளைகளை அழைத்து வந்து கிறிஸ்தவ மதிப்பீடுகளைக் கற்றுத் தந்தும், ஏழை எளிய மாணவர்களுக்கு உதவிகள் செய்தும், பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தும் முகமாத்தூரில் இறையாட்சியை விதைத்தார்கள். அருட்சகோதரி மாஜில்லா அவர்கள் இவ்வூருக்கு செய்த நன்மைகளை நினைத்து 2001 ம் ஆண்டு 'அருட்சகோதரி மாஜில்லா இல்லம்' எழுப்பப்பட்டது.

கிறிஸ்து அரசர் பழைய ஆலயத் தோற்றம் :

முளகுமூடு பங்குத்தந்தை அருட்பணி ஜார்ஜ் அவர்களின் முயற்சியால் 1985 ம் ஆண்டு, முகமாத்தூரின் முதல் கிறிஸ்து அரசர் ஆலயம் எழுப்பப்பட்டு, கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு M. ஆரோக்கியசாமி அவர்களால் 7-4-1985 ல் அர்ச்சிக்கப் பட்டது.

1996 ம் ஆண்டு மே 31 ம் தேதியிலிருந்து முகமாத்தூர் பங்கானது, முளகுமூடு பங்கிலிருந்து பிரிந்து, கோழிப்போர்விளை பங்கிற்கு மாறி கிளைப் பங்காக செயல்பட்டு வருகிறது.

பங்கின் வளர்ச்சி :

17-01-1999 ல் அருட்பணி மார்ட்டின் அவர்களால் பழைய ஆலயத்திற்கு பின்புறம் கல்லறைத் தோட்டத்திற்கான நிலம் வாங்கப்பட்டது. அருட்பணி ப. றசல்ராஜ் அவர்களால் 2002 ம் ஆண்டு ஜூன் 16 அன்று குழந்தைகளுக்கான பாலர்பள்ளி துவக்கப்பட்டது.

இளையோர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அருட்சகோதரி மேரி ஜார்ஜ் அவர்கள் இளையோர் இயக்கத்தை 2003 ம் ஆண்டு துவக்கினார்கள். மேலும் பல்வேறு சபைகள் இயக்கங்கள் உருவாக்கப்பட்டது.

அருட்பணி இராபர்ட் பென்னி அவர்களின் பணிக்காலத்தில் 2006 ம் ஆண்டு ஆலயத்தை சுற்றி மதிற்சுவர் கட்டப்பட்டது. 2008 ல் ஆலயத்திற்கு சொந்தமாக கிணறு வெட்டப்பட்டது.

அருட்பணி செபாஸ்டின் அவர்களால் ஆலயத்திற்கு சொந்தமான கல்லறைத் தோட்டத்திற்கு பாதை வாங்கப்பட்டது.

14-11-2015 அன்று அருட்பணி பபியான்ஸ் அவர்களால் குழித்துறை மறை மாவட்ட ஆயர் மேதகு ஜெறோம் தாஸ் அவர்கள் தலைமையில் மும்மாத இதழ் வெளியிடப் பட்டது.

2015 ஜூன் மாதத்தில் புதிய ஆலயத்திற்கு பின்புறம் நிலம் வாங்கப்பட்டது.

புதிய ஆலயம் :

அருட்பணி Francis Sebastian அவர்கள் பணிக்காலத்தில் 01-01-2010 அன்று குருகுல முதல்வர் மரியதாசன் அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நிறுவப்பட்டு 2012 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முதல் தளம் அமைக்கப்பட்டது.

அருட்பணி பபியான்ஸ் அவர்கள் 2013 ம் ஆண்டு பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற பிறகு அவரின் அயராத முயற்சியாலும், மக்களின் ஒத்துழைப்பாலும் கோட்டார் மறை மாவட்டத்திலிருந்து கிடைத்த உதவியாலும் 11-11-2014 அன்று கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் புதிய ஆலயம் அர்ச்சிப்பு மற்றும் திருச்சிலுவை கெபி, கொடிமரம், ஜெனரேட்டர் போன்றவை அர்ச்சிக்கப்பட்டன.

கிறிஸ்து அரசர் சமூக அரங்கம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. தற்போது கிறிஸ்து அரசரின் அருளாலும் பங்குத்தந்தை அருட்பணி ஆல்பின் ஜோஸ் அவர்களின் சீரிய வழிநடத்துததாலும் முகமாத்தூர் தலத்திருச்சபை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி செல்கிறது.