892 புனித ஜெபமாலை அன்னை ஆலயம், துரைகுடியிருப்பு

              

புனித ஜெபமாலை அன்னை ஆலயம்

இடம்: துரைகுடியிருப்பு 

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: வடக்கன்குளம்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்கு: புனித அந்தோனியார் ஆலயம், முத்துநாடார் குடியிருப்பு 

பங்குப்பணியாளர் அருள்பணி. C. ஜார்ஜ் ஆலிபன்

https://youtube.com/@ROSARYTVDURAINAGAR

குடும்பங்கள்: 350

அன்பியங்கள்: 10

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு காலை 06:30 மணி ஜெபமாலை, 07:00 மணி திருப்பலி

மாலை 06:00 மணி ஜெபமாலை, நற்கருணை ஆசீர் 

வாரநாட்களில் காலை 06:00 மணி திருப்பலி, மாலை 06:30 மணி ஜெபமாலை 

முதல் சனிக்கிழமை காலை 09:00 மணி ஜெபமாலை, நற்செய்தி கூட்டம், ஒப்புரவு, நற்கருணை ஆசீர், அன்னையின் சப்பரபவனி. நண்பகல் 12:00 மணி நவநாள் சிறப்பு திருப்பலி, குணமளிக்கும் எண்ணெய் பூசுதல், புனித பண்ட ஆசீர், அசன விருந்து.

1&3 -வது வியாழக்கிழமை மாலை 07:00 மணி திருப்பலி (புனித தோமையார் கெபி)

2&4 -வது வியாழக்கிழமை மாலை 07:00 மணி திருப்பலி (புனித சவேரியார் கெபி)

2&4 -சனிக்கிழமை மாலை 07:00 மணி திருப்பலி (புனித வேளாங்கண்ணி மாதா கெபி)

திருவிழா: திருக்கொடியேற்றம் செப்டம்பர் 28 ஆம் தேதி. அக்டோபர் 07 ஆம் தேதி பெருவிழா.

புனித வேளாங்கண்ணி மாதா கெபி திருவிழா செப்டம்பர் 09 ஆம் தேதி.

புனித தோமா கெபி திருவிழா ஜூலை 03 ஆம் தேதி.

புனித சவேரியார் கெபி திருவிழா டிசம்பர் 03 ஆம் தேதி.

மண்ணின் இறையழைத்தல்கள்: 

1. அருட்சகோதரர். ஜார்ஜ் 

2. அருட்சகோதரர் . கிறிஸ்டோபர் 

3. அருட்சகோதரி டாஸ்கன்ட் (முத்து நாடார் குடியிருப்பு) 

4. அருட்சகோதரி ஷீமா பிரான்சிஸ் 

வழித்தடம்: வள்ளியூர் -கள்ளிகுளம் -துரைகுடியிருப்பு 

Location map: https://g.co/kgs/RDE9p4

வரலாறு: 

கள்ளிகுளம் பங்கின் 16 கிளைப்பங்குகளில் ஒன்றாக துரைக்குடியிருப்பு செயல்பட்டு வந்தது.

1891 - முதல் ஆலயமான புனித செபஸ்தியார் ஆலய திருவிழா.

1916 - புனித ஜெபமாலை மாதா ஆலயத்திற்கு அருட்பணி. கௌசானல் அடிகளாரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

1927 - புனித ஜெபமாலை மாதா ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது. 

1941 - புனித ஜோசப் துவக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. 

26.06.1973 - துரைகுடியிருப்பு புதிய பங்காக உருவானது. 

1974 -கூடங்குளம் ஆலயமானது துரைகுடியிருப்பு பங்குடன் இணைக்கப்பட்டது.  

1975 - ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. 

1977 - புனித ஜோசப் துவக்கப்பள்ளியானது, நடுநிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டது. 

1984 - மரியாளின் இருதய கன்னியர் இல்லம் உருவானது. 

1988 - புனித வேளாங்கண்ணி மாதா கெபி கட்டப்பட்டது. 

1990 - புனித செபஸ்தியார் கெபி கட்டப்பட்டது. 

1995 - ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. 

1998 - ஆலய மண்டபம் கட்டப்பட்டது. 

1999 - புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டது. 

2003 - பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது. 

2005 - இராதாபுரம் புதிய பங்காக உருவானது. 

2006 - கல் கொடிமரம் நாட்டப்பட்டது. 

2006 - அன்பியங்கள் உருவானது. 

பங்கின் பொன்விழா (1973- 2023).

பங்குத்தந்தையர்களின் அரும் பணிகள் : 

பங்கின் வளர்ச்சிக்கு காரணமானவர்கள் பங்குப் பொறுப்பினை ஆர்வமுடன் ஏற்று வழிநடத்திய பங்குக்குருக்களே ஆவர். இப்பங்கின் முதல் பங்குத்தந்தையாய் பொறுப்பேற்று வழிநடத்தியவர்கள் அருட்திரு. G. ஆஸ்வால்ட் அடிகள். அடிப்படை வசதிகளற்ற இந்தபுதிய பங்கில், மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து மக்களின் ஆன்மீக, சமூக வளர்ச்சியை உயர்த்தினார்கள். 

அடுத்து அடியெடுத்து வைத்தவர் அருட்தந்தை. M. லூர்துமணி அடிகள். ஊர் துவக்கப்பள்ளியை நடுநிலைப் பள்ளியாக உயர்த்தி கல்வித் தொண்டு புரிந்தார். 

1978-ஆம் ஆண்டு அருட்பணிக்கென அன்னம்மாள் கன்னியர் மட கன்னியர்களை வரவழைத்தார். அவர்கள் 2 ஆண்டுகள் பணிபுரிந்தனர். 

அதன் பிறகு பங்குப் பொறுப்பை ஏற்றவர்கள் அருட்தந்தை ஆர்தர் ஜேம்ஸ் அடிகள். அடிக்கடி ஆன்ம தியானக் கூட்டங்களும், கருத்தரங்குகளும் நடத்தி ஆன்ம வளம் தந்தவர். கன்னியர்கள் ஆன்மீக பணி மற்றும் கல்விப் பணிக்குத் தேவை என்பதில் கண்ணாயிருந்து, 1984-ல் பாண்டிச்சேரி மரியாயின் தூய இருதய இருதய கன்னியர்களை, அன்னம்மாள் சபை கன்னியர்களுக்குப் பதிலாக பெரும் முயற்சி செய்து வரவழைத்தார். நடுநிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்ட காரணத்தால் மாணவர்களுக்கு ஏற்பட்ட இட நெருக்கடியைப் போக்க 1985 - ஆம் ஆண்டு புதிய பள்ளிக்கட்டிடம் மக்களின் தாராள நன்கொடையாலும், மறைமாவட்ட உதவியாலும் கட்டப்பட்டது.  

1987 முதல் துரைகுடியிருப்பு பங்கின் பொறுப்பை ஏற்றவர் அருட்பணி. ஜான்பால் அடிகள். மக்களுக்கு அத்தியாவசியமான தண்ணீர் பற்றாக்குறையை போக்கினார். ரேஷன் பொருட்கள் ஊரில் வந்து விநியோகம் செய்ய பெரு முயற்சி செய்து கொண்டு வரப்பட்டது. இவரது காலத்தில், ஊரில் முதன் முதலாக அமைக்கப்பட்ட ஆலயத்தின் நூற்றாண்டு விழாவும் (புனித செபஸ்தியார்), பள்ளி ஆரம்பிக்கப்பட்டதன் பொன்விழாவும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டன. முதல் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் ஒரு செபஸ்தியார் ஸ்தூபியும், கோயில் வளாகத்தில் செபஸ்தியார் கெபியும் கட்டப்பட்டன. போக்குவரத்து சாலையில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் தனியாரிடமிருந்து நிலம் வாங்கி, அதில் அழகிய வேளாங்கண்ணி கெபி ஒன்று கட்டினார். அது மக்களின் பக்தி வணக்கத்திற்குரிய இடமாக திகழ்ந்தது. 

அருட்தந்தை. சார்லஸ் அவர்கள் பணிக்காலத்தில் ஆலயத்திற்கு மக்கள் வருகை அதிகமானது. எனவே ஆலயத்தை 

விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பீடத்தில் வலது இடது புறம் இருந்த பெருஞ்சுவர்களை எடுத்து விட்டு, சிலுவை வடிவில் இருபுறமும் நீட்டி விரிவுபடுத்த திட்டமிட்டு அருமையாக செய்து முடித்தார். இதற்கு ஊர் மக்களின் ஒத்துழைப்பு முழுமுதற் காரணமாக அமைந்தது. விரிவுபடுத்தப்பட்ட ஆலயத்தை முன்னாள் ஆயர் மேதகு அம்புரோஸ் ஆண்டகை அவர்கள் அர்ச்சித்தார்கள். தந்தை சார்லஸ் அவர்கள் மாறுதலாகி சென்ற பின்பு சிறிது காலம் அருட்தந்தை மெத்தோடியஸ் அவர்கள் பங்குப் பொறுப்பை ஏற்று நடத்தினார். 

அதன் பிறகு அருட்தந்தை T. விக்டர் அடிகள் பங்குத் தந்தையாக பொறுப்பேற்றார்கள்.  இவரது காலத்தில் தான் இராதாபுரம் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டது. எனவே பள்ளிக்கட்டிடம் கூடுதலாக தேவைப்பட்டது. அருட்தந்தை T. விக்டர் அவர்கள் இராதாபுரத்தில் ஒரு பள்ளிக் கட்டிடமும், அன்னையர்களுக்கென ஒரு இல்லமும் அமைத்தார்கள். ஓராண்டு பணி செய்து மாறுதலாகி சென்றார்கள்.

தொடர்ந்து அருட்தந்தை. விக்டர் சாலமோன் பங்குத் தந்தையாக நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்ற போது பங்கு தொடங்கி 25 ஆண்டுகள் ஆனது. பங்கின் வெள்ளி விழா ஜூபிலி இவரது பணிக்காலத்தில் தான் கொண்டாடப்பட்டது. இதன் நினைவாக ஆலயத்தின் முன் மேல்தளம் (போர்டிகோ) நீட்டிக் கட்டப்பட்டது. அதற்காக தூண்கள் கட்டப்பட்டு ஆலய முற்றம் விரிவுபடுத்தப்பட்டது. பங்கின் வெள்ளி விழா நினைவாக, பள்ளிக்கூடம் நடுநிலைப்பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளியாக 1999 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது. 

பின்னர் அருட்தந்தை. A. S. ராஜா அவர்கள் 2002 -ல் பணி பொறுப்பேற்றார்கள். தந்தை அவர்கள் இசை வல்லுநர். ஆலயத்தில் பாடல்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவித்தார்கள். 

2003 ஆம் ஆண்டு துரை மாநகர் மக்கள் ஒத்துழைப்பையும், ஜெர்மன் திரு. ஆடம் மற்றும் குருக்கள் ஆதரவையும் கொண்டு 

உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை நிறைவு செய்தார். குருக்களுக்கான இல்லம் பழுதடைந்ததால், ஆலயத்தின் தென்பகுதியில் 2003 -ஆம் ஆண்டு புதிய குருக்கள் இல்லம் கட்டினார். துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அறை ஒன்றும் இவரால் கட்டிமுடிக்கப்பட்டன. தூத்துக்குடி மறைமாவட்ட பாதுகாவலர் என்று அழைக்கப்படும் புனித சவேரியார், புனித தோமையார் குருசடியை சிற்றாலயமாக அமைத்தார். பின்னாளில் ஊர் மக்களால் கோபுரம் கட்டப்பட்டது. இக்குருவின் காலத்தில் புதிய கல் கொடிமரமும் நிறுவப்பட்டது.

அவருக்குப் பின் அருட்தந்தை. தேவசகாயம் அடிகள் பங்கு பொறுப்பினை ஏற்றுக் கொண்டு 2 ஆண்டுகள் பணி செய்து பின்னர் ஓய்வுக்குச் சென்றார். அதன்பிறகு அருட்தந்தை ஜாண்சன் அவர்கள் பங்குப் பணியினை ஏற்றுக் கொண்டார்கள். ஆலயத் திரு நிகழ்வுகள், நற்செய்தி அறிவுரைகள் நடத்தி மக்களின் ஞான வாழ்வை வளமாக்கினார்கள். ஐந்து ஆண்டுகள் அமைதியாக அரும்பணியாற்றி 2014 -ஆம் ஆண்டு பணிமாற்றம் பெற்றுச் சென்றார். 

2014 -ஆம் ஆண்டு மே மாதம் அருட்தந்தை சலேத் ஜெரால்டு அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்கள். இன்று அனைவரும் காண்கின்ற கம்பீரமான கோபுரத்தை உடைய இவ்வாலயத்தை நிர்ணயித்தவர் இவரே. பழைய ஆலயம், குருக்கள் இல்லம், தேர்க்கூடம், செஸ்தியார் கெபி அனைத்தையும் எடுத்து விட்டு, இப்புதிய ஆலயத்தை எழுப்பினார். ஊர் மக்களின் ஆதரவுடன் வெளியிடங்களுக்குச் சென்று பணம் சேகரித்து ஆலயப் பணியை மேற்கொண்டார். நிமிர்ந்து பார்க்கத் தூண்டும் இவ்வுயர்ந்த கோபுரத்தையும், ஆலய பீட வேலைப்பாடுகளையும் அதற்குரிய கலைஞர்களைக் கொண்டு செய்து முடித்தார். 04.10.2018 அன்று இவ்வாலயம் மேதகு ஆயர் இவோன் அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 

பங்கின் பொன்விழாவை சிறப்பாகக் கொண்டாட பலவகையிலும் முயற்சி செய்யும் பங்கின் இன்றைய பங்குத்தந்தை 

அருட்திரு. C. ஜார்ஜ் ஆலிபன் அவர்கள் 2019 மே மாதம் பங்குப் பணியாளராக பொறுப்பேற்றார்கள். அன்னையின் தேர் பாதுகாப்பற்ற நிலையில் வெளியே நின்று கொண்டிருந்தது. தந்தை அவர்கள் விரைந்து முடிவெடுத்து மக்கள் ஒத்துழைப்புடன் தேர்க்கூடம் கட்டினார்கள். அன்னையின் மீது அளப்பரிய பற்றுள்ளவர்கள். அன்னையின் ஆலயத்தை திருத்தலமாக்க வேண்டும் என்ற முனைப்புடன் ஆலய நிகழ்வுகளை இணைய தளத்தில் பதிவிடுகின்றார்கள். அன்னையின் புகழ் பரப்ப முதல் சனிக்கிழமை பக்தி என்னும் நிகழ்வை மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் நடத்தி மாதாவின் பெருமையை உலகறியச் செய்கிறார்கள். (சிறந்த நிர்வாகியாக இருந்து குழந்தைகளையும் பங்கு மக்களையும் ஆன்ம காரியங்களிலும், சமுதாய செயல்களிலும் புத்தெழுச்சியுடன் பங்கை வழி நடத்தி வருகின்றார்கள்) 

உபதேசியார்கள்: 

ஆலயத்தின் முதல் உபதேசியாராக மறைந்த திரு. தொம்மையந்தோணி நாடார் அவர்கள் பல ஆண்டுகள் ஆலய உபதேசியாராக பணி புரிந்தார். அவருடன் அவருடைய தம்பி சிலுவை நாடார் அவர்களும் பலகாலம் உதவி செய்தார். முதல் உபதேசியாரின் மறைவுக்குப் பின் திரு. மா. ஏசுவடியான் நாடார் அவர்கள் உபதேசியாராகவும், திண்ணை பள்ளிக் கூடத்தின் ஆசிரியராகவும் பல்லாண்டுகள் பணியாற்றினார். திரு. ஏசுவடியான் உபதேசியார் மறைவுக்குப் பின் திரு. வி. ஜெபமாலை மரியான் என்பவர் கோயில் உபதேசியாராகவும், சக்ரீஸ்தியனாகவும், ஆலய பாடகர் குழுவின் பொறுப்பாளராகவும் பணிபுரிந்தார். துரைகுடியிருப்பை தனி பங்காக்குவதில் இவருடைய பங்கும் இருந்தது. அவர்களைத் தொடர்ந்து 2005-2010 வரை திரு. மைக்கிள் அவர்களும், 2010-2013 வரை திரு. ஜாக்சனும், 2013-2016 வரை திரு. ரெக்ஸ்டன் அவர்களும் அவர்களும் 2016 முதல் 2018 வரை திரு. கின்ஸ்டன் அவர்களும் உபதேசியாராக பணியாற்றினார்கள்.  2018 முதல் 2020 வரை திரு. ரோஷன் அவர்களும், 2020 - 2022 வரை திரு.ஜெர்சன் அவர்களும், 2022 முதல் திரு. முத்து குமார் அவர்களும் உபதேசியாராக பணிபுரிந்ததோடு, செல்வன் மரிய ஆஸ்டின் இன்றளவும் பங்குத்தந்தைக்கு உதவியாக உள்ளார். 

பங்குத்தந்தையின் இல்லம் : 

30.12.2003 அன்று அருட்தந்தை. சூசை ராஜா அவர்களால் கட்டப்பட்டது. 

தூய மரியன்னை கன்னியர் இல்லம் : 

ஜெபமாலை அன்னையின் பாதுகாப்பில் வளர்ந்து வந்த துரைகுடியிருப்பில், முன்னாள் பங்குத்தந்தையாக (1982-1987) பணியாற்றிய அருட்திரு. ஆர்தர் ஜேம்ஸ் அடிகளார், பங்குத் தந்தையாக பொறுப்பேற்கும் போது, ஒரு கன்னியர் இல்லத்தை ஆரம்பிக்கும்படி ஆயர் மேதகு S. T. அமலநாதர் ஆண்டகை அவர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டார். மேலும், ஆண்டகை அவர்கள் புதுவை தூய இதய மரியன்னை பிரான்சிஸ்கு கன்னியர் சபையை இவ்வூரில் நிறுவுமாறு கூறினார்கள். அதனால் அருட்தந்தை. ஆர்தர் ஜேம்ஸ் அடிகள், J.I.H.M. சபை முதல்வி அன்னை எமிலியா மேரி அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். எனவே, 1983 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் அருட்சகோதரிகள் ஜெராஸ்மஸ் மேரி மற்றும் கால்மினா புஷ்பபாய்  இருவரும் துரை நகருக்கு பணியாற்ற அனுப்பப்பட்டனர். துரை குடியிருப்பிலுள்ள ராஜமணி என்பவரால் ஏற்கெனவே கன்னியர் இல்லத்திற்கென நன்கொடையாக வழங்கப்பட்ட ஓர் ஏக்கர் 20 சென்ட் நிலத்தில் திருச்சி புனித அன்னாள் சபை கன்னியர்களால் கட்டப்பட்டிருந்த ஒரு சிறிய இல்லத்தை ஆண்டகை அவர்கள் ரூ.12,000க்கு வாங்கி துரைகுடியிருப்பு பங்கின் உபயோகத்திற்காகக் கொடுத்தார். மேலும், 1983 -ஆம் ஆண்டு மே மாதம் அருட்சகோதரி Dehorauckut அவர்களிடமிருந்து நன்கொடையாகக் கிடைத்த ரூ 18,000 ஐக் கொண்டு கன்னியர்களின் சிறு இல்லம் செப்பனிடப்பட்டது. 1983-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8-ஆம் தேதி பங்குத்தந்தை அருட்திரு. ஆர்தர் ஜேம்ஸ் அடிகள், கன்னியர்களின் இல்லத்தை மந்திரித்து திறந்து வைத்தார். அன்றைய விழாவில் ஊர் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். 04.07.1984 இல் மேதகு ஆயர் S. T. அமலநாதர் ஆண்டகை பத்து குருக்களுடன் திருப்பலி நிறைவேற்றி கன்னியர்களின் புதிய நிரந்தர இல்லத்தை திறந்து வைத்தார். 

அருட்சகோதரிகளின் பணி : 

1983-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி முதல், அருட்சகோதரிகள் தம் பணிகளைத் தொடங்கினர். அவர்களின் பணியானது கள்ளிகுளம் பங்குத்தந்தையால், கள்ளிகுளம் கன்னியர்களின் இல்லத்தில் வைத்து, 

Rev. Mother Hajcenth Mary  அவர்களின் முன்னிலையில் பகிர்ந்தளிக்கப்பட்டது. துரைகுடியிருப்பில் வாழும் மக்களை விசுவாசத்தில் வளர்ப்பதும், திருக்குடும்ப சபை, மாதா சபை போன்ற பக்த சபைகளை நடத்துவதும், ஆலய திருப்பணிகளைச் செய்வதும், திருவுடைகளைத் தைப்பதும், அருகிலுள்ள மேல்துரைகுடியிருப்பு, ஈனன் குடியிருப்பு, சமூகரெங்கபுரம், கட்டனேரி, சிங்காரத் தோப்பு, ராதாபுரம் ஆகிய ஊர்களுக்குச் சென்று அம்மக்களை சந்தித்து கிறிஸ்துவை அறிவிப்பதே அருட்சகோதரிகளின் பணியாகும். 

1984-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதி அருட்சகோதரி. ரோஸாரி மேரி துரைகுடியிருப்பிலுள்ள நடுநிலைப் பள்ளியில் பணியாற்றுவதற்காக ஏற்காட்டிலிருந்து வருகை தந்தார்கள். அவர்கள் 01.02.1984 முதல் துரைகுடியிருப்பு புனித சூசையப்பர் நடுநிலைப் பள்ளியில் விடுப்புப் பணியிடத்தில் பணியாற்றினார்கள். இந்த அருட்சகோதரிகள் தினமும் பேருந்தில் வந்து பணியாற்றி விட்டு மாலையில் கள்ளிகுளம் திரும்பி விடுவார்கள். அத்தோடு சனிக்கிழமை இரவு துரைநகரிலேயே தங்கி, ஞாயிறு திருப்பலிக்கு ஆவன செய்து வந்தனர். ஞாயிற்றுக் கிழமை மாதா சபையும், திருக்குடும்ப சபையும் நடத்திவிட்டு மாலையில் மறைக்கல்வியும் நடத்திவிட்டு கள்ளிகுளம் சென்றார்கள். இவ்வாறு, அன்றைய அருட்சகோதரிகள் பல பணிகளை மேற்கொண்டனர் அன்றுபோல் இன்றும் ஆலயத்தின் பல பணிகளை தொடர்ந்து ஆற்றி வருகின்றனர். 

பங்கின் இன்றைய அருட்சகோதரிகள் : கன்னியர் இல்லமும் குழந்தைகள் காப்பகமும்: 

தூய இதய மரியன்னை கன்னியர் இல்லம் 1984-ஆம் ஆண்டு துரைகுடியிருப்பில் கொண்டு வரப்பட்டது. கன்னியர்களுக்கான தலைமை ஆசிரியர் பணி 1986 கொடுக்கப்பட்டது. Little flower Home for children 

என்ற குழந்தைகள் காப்பகம் கன்னியர் இல்லத்தில் தொடங்கப்பட்டது. 01.06.1983 அன்று குழந்தைகள் காப்பகம் செயல்பாட்டிற்கு வந்தது. ஆதரவற்ற ஏழைக் குழந்தைகள் கல்வி பயின்று தங்கள் வாழ்வை உயர்த்திக் கொண்டனர். 1983 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அருட்சகோதரி ஜெர்வாசியுஸ் மேரி, மற்றும் அருட்சகோதரி கால்மீனா பாய் ஆகியோர் பணியாற்றினர். அருட்தந்தை. ஆர்தர் ஜேம்ஸ் பங்குத்தந்தையாக இருந்த காலத்தில் இந்த கட்டிடம் கட்டப்பட்டது. 

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. பாலர் சபை

2. நற்கருணை வீரர் சபை

3. அமலோற்பவ மாதா சபை

4. திருக்குடும்ப சபை

5. மரியாயின் சேனை

6. புனித வின்சென்ட் தே பவுல் சபை

7. பீடப்பணியாளர்கள்

8. ரோசரி பாடகற்குழு

9. ரோசரி இளையோர் இயக்கம்

10. ரோசரி வழிபாட்டுக் குழு

11. ரோசரி ஞாயிறு மறைக்கல்வி

கல்வி நிறுவனங்கள்:

புனித ஜோசப் தொடக்கப்பள்ளி (1933)

புனித ஜோசப் உயர் நிலைப்பள்ளி (1999)

புனித தனிஸ்லாஸ் தொடக்கப்பள்ளி (1984)

பங்கில் பணியாற்றிய அருட்தந்தையர்கள் : 

1. அருட்பணி. ஆஸ்வால்ட் (1973-1976)

2. அருட்பணி. லூர்து மணி (1977-1982)

3. அருட்பணி. ஆர்தர் ஜேம்ஸ் (1982-1987) 

4. அருட்பணி. ஜான்பால் (1987-1990)

5. அருட்பணி. சார்லஸ் (1991-1996)

6. அருட்பணி. மெத்தோடியஸ் (1996-1997)

7. அருட்பணி. T. விக்டர் (1997-1998)

8. அருட்பணி. விக்டர் சாலமோன் (1998-2002)

9. அருட்பணி. சூசை ராஜா (2002-2007)

10. அருட்பணி. தேவ சகாயம் (2007-2009)

11. அருட்பணி. ஜான்சன் (2009-2014)

12. அருட்பணி. சலேத் ஜெரால்டு (2014-2019)

13. அருட்பணி. ஜார்ஜ் ஆலிபன் (2019 முதல்...)

இறைவரங்களின் தாயாகிய துரைகுடியிருப்பு புனித ஜெபமாலை அன்னையிடம் வாருங்கள்... வேண்டிய வரங்களைப் பெற்று நிறைவான வாழ்வை வாழுங்கள்...

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. ஜார்ஜ் ஆலிபன் அவர்கள்.