941 தூய லூர்து மாதா ஆலயம், அழகப்பபுரம்

      

தூய லூர்து மாதா ஆலயம்

இடம்: அழகப்பபுரம், லூர்து மாதா கோயில் தெரு, இட்டமொழி வழி, அழகப்பபுரம் அஞ்சல், 627652

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: சாத்தான்குளம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித ஜெபமாலை மாதா ஆலயம், மன்னார்புரம்

பங்குத்தந்தை அருட்பணி. J. எட்வர்ட்

குடும்பங்கள்: 40

மாதத்திற்கு இரண்டு ஞாயிற்றுக்கிழமை காலை 09:30 மணி திருப்பலி

தினமும் மாலை 07:00 மணி ஜெபமாலை

திருவிழா: இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மே மாதம் 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையிலான பத்து நாட்கள் 

வழித்தடம்:

நாகர்கோவில் -திருச்செந்தூர் வழித்தடத்தில் இட்டமொழியில் இறங்கி அங்கிருந்து ஒன்றரை கி.மீ தொலைவில் அழகப்பபுரம் அமைந்துள்ளது

மினிப்பேருந்து: திசையன்விளை - பெரும்பனை. அங்கிருந்து அழகப்பபுரம்.

Location map: Our Lady of Lourdes Church

https://maps.app.goo.gl/3NHF3tpDdqkWa7tQA

வரலாறு:

அழகப்பபுரம் ஆலயமானது சுமார் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாமல் சாதிய வேற்றுமைகளால் துன்பம் அனுபவித்து வந்த அழகப்பபுரம் (லூர்து மாதா கோயில் தெரு) மக்கள், சோமநாதபேரி பங்குத்தந்தையர்களிடம் திருமுழுக்குப் பெற்று கத்தோலிக்கம் தழுவினர். 

தொடக்க காலத்தில் திரு. நல்லதம்பி என்பவரது இல்லத்தில்,

பழைமையான தூய லூர்து மாதா சுரூபமானது சோமநாதபேரியிலிருந்து கொண்டு வரப்பட்டு, நாள்தோறும் ஜெபமாலை ஜெபிக்கப்பட்டு வந்தது. 

இவர்களின் ஆன்மீகத் தேவைகளை சோமநாதபேரி பங்குப்பணியாளர்கள் கவனித்து வந்தனர்.‌ பின்னர் திரு. ஞானக்கண் (சுடலைமாடன்) அவர்கள் வழங்கிய நிலத்தில் ஓலைக் குடிசை ஆலயம் கட்டப்பட்டது. பின்னர் இது ஓட்டுக்கூரையாக மாற்றம் பெற்றது.

1982 ஆம் ஆண்டு மன்னார்புரம் தனிப்பங்கான போது, அழகப்பபுரம் லூர்து அன்னை ஆலயமானது, மன்னார்புரத்தின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.

அருட்பணி. ஜேசு வில்லியம் (1991-1996) அவர்களின் முயற்சியால் கொடிமரம் நிறுவப்பட்டதுடன், தேர் வசதியும் செய்யப்பட்டு, திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது.‌ மேலும் அருட்பணி. ஜேசு வில்லியம் அவர்களின் முயற்சியால் மாதத்தில் இரண்டு ஞாயிறு திருப்பலி நடைபெற ஆரம்பித்தது.‌ இவ்வழக்கம் இன்றுவரையிலும் தொடர்கின்றது. 

அருட்பணி.‌ ததேயுஸ் ராஜன் அவர்களின் முயற்சியால் 2002 ஆம் ஆண்டில் தற்போதைய புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, ஆலய இறைமக்கள் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல், இரவு பகல் பாராது வேலைகள் செய்து கொடுத்ததன் பயனாக, மிகவும் குறுகிய காலத்திலேயே ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, 18.05.2003 அன்று பேரருட்பணி. ஜோசப் சேவியர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. அழகப்பபுரம் லூர்து அன்னை ஆலய இறைமக்கள் சிந்திய வேர்வைத் துளிகள் தான், இறைவனின் இல்லமாக இந்த ஆலயம் எழும்பியது என்பதை வருங்கால சந்ததியினர் என்றென்றும் நினைவுகூரத் தக்கது.

அழகப்பபுரம் ஊரில் உள்ள மக்கள் பெரும்பாலும் மும்பை மற்றும் தூத்துக்குடி நகரங்களில் தொழில், வேலைவாய்ப்பு காரணமாக வாழ்ந்து வருகின்றனர்.‌ இந்த மக்கள் அனைவரும் திருவிழாவில் பங்கேற்று சிறப்பிக்கும் வண்ணமாக இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஆலய வரலாறு: தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு விழா மலர்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய உறுப்பினர் திருமதி.‌ தனம் அவர்கள்.

தகவல்கள் சேகரிப்பில் உதவி: அருட்பணி.‌ அருள்மணி அவர்கள்.