276 பாரிஸ் அன்னை பேராலயம், பாரிஸ், பிரான்ஸ்


நோட்ரே டேம் டி பாரிஸ் (Notre Dame de Paris அல்லது பாரிஸ் அன்னை)

இடம் : பாரிஸ்
நாடு : பிரான்ஸ்

பாரிஸ் உயர் மறைமாவட்டம்

நிலை : மறைமாவட்ட முதன்மைப் பேராலயம்

பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு : 1862

தலைமை : André Vingt-Trois

கட்டிடக்கலைப் பாணி : பிரெஞ்சு கோதிக்

முகப்பின் திசை : மேற்கு

அடித்தளமிட்டது : 1163

நிறைவுற்ற ஆண்டு : 1345

ஆலய நீளம் : 128 metres (420 ft)

அகலம் : 69 metres (226 ft)

கோபுர உயரம் : 90 metres (300 ft)

வரலாறு :

நோட்ரே டேம் டி பாரிஸ் (Notre Dame de Paris அல்லது பாரிஸ் அன்னை) என்பது ஒரு கோதிக் பேராலயம்.

மேற்கு நோக்கிய வாயிலோடு கூடிய இப் பேராலயம் பிரான்சின் தலைநகரமான பாரிசில் உள்ளது. இதுவே பாரிஸ் உயர் மறைமாவட்டத்தின் முதன்மைப்பேராலயமும், பேராயரின் இல்லமும் ஆகும். நோட்ரே டேம் டி பாரிஸ் பிரெஞ்சு கோதிக் கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டாகப் கருதப்படுகின்றது.

இது பிரான்சின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞருள் ஒருவரான வயலே லெ டுச் என்பாரால் புதுப்பிக்கப்பட்டு அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டது.

நோட்ரே டேம் என்பது பிரெஞ்சு மொழியில் "எம் அரசி" என்னும் பொருள் கொண்டது, இவ்வழக்கு பொதுவாக தமிழ் மரபில் "எம் அன்னை" எனக்கொள்ளப்படுகின்றது.

மிகப் பழைய கோதிக் பேராலயங்களுள் ஒன்றான இதன் கட்டுமான வேலைகள் கோதிக் காலம் முழுவதிலும் நடைபெற்றது.கி. பி. 1163 ஆம் ஆண்டில் இந்தக் கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. 1345 -ஆம் ஆண்டில் நிறைவு பெற்றது.

வரலாறு முழுக்கவே இத்தேவாலயம் சிதைவு, மீட்டுருவாக்கம் என்ற சுழற்சியிலேயே இருந்து வந்திருக்கிறது. 1163 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இதன் கட்டுமானம் 1345 ஆம் ஆண்டில் நிறைவுற்றாலும், பல நூற்றாண்டுகளில் இதன் வடிவம் அடிக்கடி மாற்றப்பட்டிருக்கிறது.

1790 -ஆம் ஆண்டு நடந்த பிரெஞ்சு புரட்சியின் போது பாதிக்கப்பட்ட நோட்ரே டேம் தேவாலயத்தின் மத சித்திரங்கள் அழிக்கப்பட்டன.

அதன் பின், விக்டர் ஹூகோவின் கோதிக் நாவலான, ‘தி ஹன்ச்பேக் ஆப் நோட்ரே டேம்’(1831) மூலம் பரவலான கவனத்தைப் பெற்றது. அதில் ஆலயத்தின் கட்டிட இடிபாடுகளைச் சுட்டிக்காட்டி எழுதியிருப்பார். அதன் பலனாக 1845ஆம் ஆண்டு ஒரு முக்கிய மறுசீரமைப்பு திட்டம் தொடங்கப்பட்டு தொடர்ந்து 25 ஆண்டுகளாக நடைபெற்றது. தேவாலய முகப்பில் பல நூற்றாண்டுகளாக உண்டான வெப்பம் மற்றும் தூசு படிந்த அழுக்கின் காரணமாக மங்கிய அதன் அசல் வண்ணத்தை 1963ஆம் ஆண்டில் மீட்டெடுத்தனர்.

தற்போதும் மறுசீரமைப்பு பணிகளின் போதே இந்த விபத்தும் கடந்த 15-04-2019 அன்று நடைபெற்றுள்ளது. கட்டிடத்தின் கூரை மற்றும் வளைவு போன்றவை மூன்றில் இரு பங்கு பாதிப்படைந்துள்ளது. ஒரு தீயணைப்பு வீரர் பலத்த காயமடைந்துள்ளார். தேவாலயத்தின் மற்ற பகுதிகளுக்கு தீ பரவுவதற்கு முன்பு பல கலைப்பொருட்கள் காப்பாற்றப்பட்டன.

இப்பேராலயத்தில் இயேசுவின் தலையில் சூட்டப்பட்ட முள்முடி மற்றும் அவரை சிலுவையில் அறைய பயன்படுத்திய மூன்று ஆணிகள் அடங்கிய திருப்பண்டங்கள் உள்ளன..

தீயால் இப்பேராலயம் சிதைவுற்ற போதும் இத் திருப்பண்டங்கள் எவ்வித சேதமுமின்றி பாதுகாக்க பட்டுள்ளது என்பது உலகெங்கும் உள்ள கத்தோலிக்க இறை மக்களுக்கு நம்பிக்கை தரும் செய்தியாகும்.

வருடந்தோறும் இப்பேராலயத்திற்கு சுமார் ஒரு கோடி மக்கள் வந்து செல்வார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இது பாரிஸ் - ஈபிள் டவர் - ஐ காண வருகை தரும் மக்களை விடவும் அதிகம் என்பது இவ்வாலயத்தின் சிறப்பு.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் இதனைப் பற்றி கூறும் போது, “ இது விதியின் ஒரு பகுதியாகும், வரும் ஆண்டுகளில் நோட்ரே டேமின் சீரமைப்பு எங்கள் பொதுவான திட்டமாக இருக்கும். அதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என உறுதியளித்துள்ளார்.

அன்புக்குரியவர்களே..! இதுவரை நாம் பதிவு செய்துள்ள 275 ஆலயங்களையும் மிகுந்த மகிழ்வுடன் பதிவு செய்திருந்தோம். ஆனால் முதன்முறையாக மிகுந்த கனத்த இதயத்துடன் இப்பேராலயத்தை குறித்த தகவல்களை பதிவு செய்துள்ளோம்.

இறைவன் கட்டியெழுப்பிய இப்பேராலயம் தீக்கிரையான போது பிரெஞ்சு தேச மக்கள் கதறி அழுதது நம் மனதை மிகவும் வருதந்தச் செய்தது. அவர்களின் துயரில் நாமும் பங்கு கொள்வோம்.

ஒன்று மட்டும் உறுதி படக் கூறுகிறோம். இது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற தாரக மந்திரத்தைக் கொண்டு பிரெஞ்சுப் புரட்சி செய்த மக்கள் வாழும் நாடு. இவர்கள் வீழ்பவர்கள் அல்லர்..! வீறு கொண்டு கடின உழைப்பால் முன்னேறுபவர்கள்..! தீயில் கருகிய இந்த ஆலயத்தை சிறப்பாக கட்டியெழுப்புவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆகவே இவ்வாலயம் விரைவில் கட்டியெழுப்பப் படவும் இறைவனின் ஆசீரும் துணையும் பிரெஞ்சு தேச மக்களுக்கு நிறைவாய் கிடைத்திடவும் தவக்காலத்தின் புனித வியாழன் என்னும் புனிதமான இந்த நாளில் நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம் என்று கேட்டு நிறைவு செய்கின்றோம்..!