புனித சூசையப்பர் ஆலயம்
இடம் : கம்பிளார்
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
பங்குத்தந்தை : அருட்பணி வற்க்கீஸ்
நிலை : பங்குதளம்
கிளை : புனித லொரேட்டோ அன்னை ஆலயம், தொலையாவட்டம்
குடும்பங்கள் : 180
அன்பியங்கள் : 7
ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணிக்கு
செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் திருப்பலி : காலை 06.30 மணிக்கு
புதன், வெள்ளிக்கிழமைகளில் திருப்பலி : மாலை 05.30 மணிக்கு
திருவிழா : ஏப்ரல் மாதக் கடைசியில் ஆரம்பித்து மே மாதம் முதல் வாரத்தில் நிறைவு பெறுகின்ற வகையில் பத்து நாட்கள்.
வரலாறு :
முக்கடலும் சங்கமிக்கும் குமரி மாவட்டத்தில் கம்பிளார் என்னும் சிற்றூரில் 1927-ம் ஆண்டு புனித மரியன்னை தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு 19 ஆண்டுகள் நடைபெற்று வந்தது. போதிய மாணவர்கள் இல்லாததால் அப்போதைய புதுக்கடை பங்குத்தந்தை S. T மத்தியாஸ் அவர்கள் (கம்பிளார் ஊர் அந்த காலத்தில் புதுக்கடை பங்கின் கீழ் இருந்த வேங்கோடு கிளைப் பங்கைச் சார்ந்திருந்தது) பள்ளிக்கூடத்தை நிறுத்த ஆயருக்கு பரிந்துரைக் கடிதம் எழுதி, ஆயரின் ஆணைப்படி தொடக்கப்பள்ளி மூடப்பட்டது.
அதே 1946-ம் ஆண்டு கம்பிளார் மற்றும் மாதாபுரம் ஊரில் வசித்து வந்த பெரியோர்கள் வேங்கோட்டில் புதிய ஆலயம் கட்ட வரி கேட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தாங்கள் அதற்கான வரிகளை செலுத்த மறுத்தனர்.
மேலும் கம்பிளார் ஊரினுள்ளும், மாதாபுரத்தினர் விழுந்தயம்பலம் ஊரினுள்ளும் அமைந்துள்ள ஆலயங்களில் வழிபட வழிவகுக்க வேண்டுமென்றும் புதுக்கடை -யில் இருந்த பங்குத்தந்தை அருட்பணி மத்தியாஸ் அவர்களிடம் வலியுறுத்தினர்.
அதன்படி 03-05-1946 ல் அருட்பணி மத்தியாஸ் அவர்கள் கோட்டாறு மறை மாவட்ட ஆயருக்கு கம்பிளார் மற்றும் மாதாபுரம் ஊர்களை, வேங்கோடு கிளைசபையிலிருந்து பிரிக்க பரிந்துரைக் கடிதம் எழுதினார்.
இப்பரிந்துரையின் பேரில் ஆயர் அவர்கள் 05-06-1946 ல் தனது கடித எண் 2382/46 -ல் கம்பிளார் ஊர் மக்கள் கம்பிளாரில் அமைந்துள்ள புனித மரியன்னை ஆலயத்தில் வழிபடலாம் என்றும், கம்பிளார் வேங்கோடு உதவிப்பங்கின் கீழ் செயல்படும் என்றும், வேங்கோடு அருட்பணியாளர் கம்பிளாரிலும் வழிபாடு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
09-06-1946 அன்று கம்பிளார் புனித மரியன்னை ஆலயம் வேங்கோட்டிலிருந்து பிரிக்கப்பட்டது.
அப்போதைய புனித மரியன்னை ஆலயம் தேவாண்டிவிளையில் சுமார் 12 சென்ட் நிலத்தில் கத்தோலிக்க குடும்பங்கள் மத்தியில் அமைந்திருந்தது. இந்த சிற்றாலயத்தில் சுவர் கருங்கல்லாலும், தரை தரைஓட்டுடனும் அமைந்திருந்தது.
இச் சிற்றாலயத்தில் கன்னிமரியாளின் சுரூபமும், புனித தோமையார் காலத்து பழைமையான கற்சிலுவையும் இருந்தன. இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலியும் தினமும் மாலையில் ஜெபமாலையும் நடைபெற்று வந்தன.
1950- ல் வேங்கோடு தனிப்பங்காக உயர்வு பெற்றது. அப்போது விழுந்தயம்பலம் அதன் கிளைப்பங்காக செயல்பட ஆரம்பித்தது.
மாதாபுரம், கம்பிளார் ஆகிய இரு ஊர்களும் விழுந்தயம்பலம் கிளை சபையில் இணைந்தன..
அப்போது வேங்கோட்டின் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி பீட்டர் லாசர் கிறிஸ்டியன் அடிகளார், 1954 - 1956 ஆண்டுகளில் விழுந்தயம்பலத்தில் இருந்த பழைய சிற்றாலயத்தை ஓடு வேயப்பட்ட, முகப்புடன் கூடிய ஆலயமாக மாற்றிக் கட்டியதுடன் ஒரு பங்குப்பணியாளர் இல்லத்தையும் கட்டினார். இவை இரண்டையும் அவர் தன் சொந்த செலவிலேயே செய்தார்.
இக்காலத்தில் அருட்தந்தை பீட்டர் லாசர் கிறிஸ்டியன் அவர்கள் கம்பிளார் சிற்றாலயத்தில் ஞாயிறு வழிபாட்டை நடத்தி வந்தார்.
இந்த சிற்றாலயம் வீடுகள் அடர்ந்திருந்த பகுதியில் இருந்ததால், வீடுகளில் உள்ள சத்தங்கள் வழிபாட்டிற்கு இடைஞ்சலாக இருப்பதாக உணர்ந்த கிறிஸ்டியன் அடிகளார், இச்சிற்றாலயத்தை மூடிவிட்டார்.
அதன்பின்னர் சில ஆண்டுகள் கம்பிளார் ஊர்மக்கள் ஞாயிறு வழிபாட்டில் கலந்து கொள்வதற்கும், மறைக்கல்வி பயில்வதற்கும் அருகாமையில் உள்ள விழுந்தயம்பலம் மற்றும் பூட்டேற்றி ஆலயங்களுங்கு சென்று வந்துள்ளனர்.
பின்னர் கம்பிளார் ஊர் மக்களின் வேண்டுகோளுக்கிணக்க அருட்தந்தை கிறிஸ்டியன் அடிகளார் ஊரின் வடக்குப் பகுதியில் புனித மரியன்னை பள்ளிக்கூடம் இருந்த பகுதியில் 60 அடி நீளமும் 16 அடி அகலமும் கொண்ட தென்னை ஓலையால் வேயப்பட்ட ஆலயத்தை நிறுவி, அதில் பழைய சிற்றாலயத்தில் இருந்த புனித மரியன்னை சுரூபத்தை நிறுவினார்.
இந்த கூரை ஆலயம் தொடங்கப்பட்ட உடனேயே, அதனருகில் கருங்கல் சுவரும், கூரை - ஓடுமாகக் கொண்ட தற்போதைய பழைய ஆலயத்தையும் அருட்தந்தை கிறிஸ்டியன் அடிகளார் கட்டத் தொடங்கினார்.
இந்த ஆலயத்திற்கான மரங்களை மட்டுமே ஊர் மக்களிடமிருந்து பெற்று, இதர அனைத்துச் செலவுகளையும் அருட்தத்தை அவர்களே ஏற்று செய்தார்கள். 26-07-1964 ல் இவ்வாலயம் மேதகு ஆயர் ஆஞ்ஞிசுவாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
புதிய ஆலயத்திற்கு பாதுகாவலராக புனித சூசையப்பர் சுரூபம் பெல்ஜியம் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டு, இவ்வாலயம் புனித சூசையப்பர் ஆலயமாகத் திகழ்கிறது.
இந்த காலகட்டத்தில் மாத்திரவிளை பங்கைச் சார்ந்த படுவூர் என்ற ஊரிலிருந்து அன்னம்மாள், வியாகுலமேரி ஆகிய சகோதரிகள் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விழுந்தயம்பலம், மாதாபுரம் மற்றும் கம்பிளார் ஆகிய மூன்று ஊர்களிலும் மறை பரப்பு சேவையாற்றி வந்தனர்.
1971 ல் வேங்கோடு பங்குத்தந்தையாக அருட்தந்தை லாரன்ஸ் அவர்கள் பொறுப்பேற்றார்.
கம்பிளாரின் முன்னேற்றத்திற்கு அருட்தந்தை அவர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இளைஞர்களை ஊக்குவித்தார், கத்தோலிக்க சேவா சங்கம் ஆரம்பிக்கப் பட்டது. இளைஞர்களின் உழைப்பால் ஒரு சிறு ஓடு வேய்ந்த மேடை கட்டப்பட்டது.
1974 ல் அருட்பணி ஹிலரி அவர்கள் வேங்கோடு பங்குத்தந்தையானார். சிறந்த பாடலாசிரியரான அருட்தந்தை அவர்களால் நல்ல பாடகற் குழுக்கள் அமைக்கப்பட்டது. திறந்தவெளி அரங்கமும் பைப்பிலான கொடிமரமும் வைக்கப் பட்டது. ஆலய முன்புறம் புனித சூசையப்பர் குருசடி ஒன்று நிறுவப்பட்டது.
1980 ல் அருட்பணி M. அருள்சுவாமி அவர்கள் தலைமையில் மறைபணிகள் நடைபெற்றன.
13-11-1984 அன்று விழுந்தயம்பலம் புனித அந்தோணியார் ஆலயம் தனிப் பங்காக உயர்ந்தது. கம்பிளார் இதன் கிளைப்பங்கானது. முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை மரிய ஆரோக்கியம் அவர்கள் பொறுப்பேற்றார்.
07-11-1989 ல் அருட்பணி J. லூக்காஸ் அடிகளார் பங்குத்தந்தையானார். திறந்தவெளி அரங்கத்திற்கு சுவர் மற்றும் கூரை அமைக்கப்பட்டது. கிணறு வெட்டப்பட்டது. அருட்சகோதரிகள் இல்லம் அமைக்கப்பட்டு 01-05-1993 ல் மேதகு ஆயர் லியோன் அ தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு இயேசுவின் திரு இருதய அருட்சகோதரிகள் பணியாற்றத் துவங்கினர்.
ஏற்கனவே இருந்த குருசடி மாற்றப்பட்டு வளைவு தோரண வாயிலுடன் புதிய குருசடி கட்டப்பட்டது. ஏற்கனவே இருந்த கொடிமரம் மாற்றப்பட்டு புதிய கொடிமரம் வைக்கப்பட்டது.
தையல் மற்றும் ஆடு வளர்ப்பு திட்டங்கள் அமல்படுத்தப் பட்டது. வின்சென்ட் டி பவுல் சங்கம் நிறுவப்பட்டு ஏழைகளுக்கு உதவிகள் செய்யப் பட்டன.
மாதாபுரத்தில் ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.
இவ்வாறு அருட்தந்தை லூக்காஸ் அடிகளாரின் பணிக்காலத்தில் மூன்று ஊர்களிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு இவ்வூர்களின் மறுமலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் வித்திட்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. 🌺🙏🌺
1995 ல் அருட்பணி A. மரியதாஸ் அவர்கள் பணியாற்றினார்.
1996 முதல் அருட்தந்தை S. அருளப்பன் அவர்கள் பணியாற்றினார்.
1998 முதல் அருட்தந்தை அருள் ஜோசப் அவர்கள் பொறுப்பேற்று இளைஞர்களை தட்டியெழுப்பினார். புனித வாரச் சடங்குகள் நிறைவேற்றப் பட்டன. புனித வெள்ளியன்று ஊரினுள் புனித சிலுவைப் பயண வழிபாடு நடத்தி மக்களின் வரவேற்பை பெறப்பட்டது. பாலர்சபை சிறுவழி இயக்கம் உருவாக்கப் பட்டது.
2001 ல் அருட்பணி பென்சிகர் அவர்கள் பொறுப்பேற்றார்.
2002 ல் அருட்பணி V. மரியதாசன் அவர்கள் பொறுப்பேற்று கம்பிளார் கிளைப்பங்கை புதுப் பொலிவு பெறச் செய்தார். ஏழை குடும்பங்களுக்கு வீடு மற்றும் கழிவறைகள் கட்டி கொடுக்கப் பட்டன. Friends of Kottar மற்றும் ஊர் மக்களின் உதவியுடன் புதிய பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது.
தொடர்ந்து அருட்தந்தை A. கபிரியேல் அவர்கள் பொறுப்பேற்று பெண்கள் சங்கம் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து அருட்தந்தை சேவியர் பெனடிக்ட் அவர்கள் பொறுப்பேற்றார்கள். இவரது பணிக்காலத்தில் கம்பிளார் பங்கு அபரிதமாக வளர்ச்சியடைந்தது. பங்கு மக்களிடம் நன்கொடை பெற்று சாலைக்கு வடக்கே 50 சென்ட் நிலம் வாங்கப்பட்டு, தற்போது இவ்விடத்தில் தான் அழகிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
அருட்தந்தை அவர்கள் இளைஞர்களுடன் தானும் இளைஞனாகக் கலந்து உழைத்தார். கம்பிளார் கிளைப்பங்கை விழுந்தயம்பலத்திலிருந்து பிரித்து தனிப்பங்காக உயர்த்திய பெருமை அருட்தந்தை சேவியர் பெனடிக்ட் அவர்களையே சாரும்.
அருட்தந்தை அவர்களின் பரிந்துரைப்படி 09-11-2008 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் கம்பிளார் புனித சூசையப்பர் ஆலயம் தனிப் பங்காக உயர்ந்தது.
முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை அருள் தேவதாசன் அவர்கள் பொறுப்பேற்றார். இலவுவிளை பங்கின் ஒரு அன்பியமாக செயல்பட்ட தொலையாவட்டம் லொரேட்டோ அன்னை ஆலயம் கம்பிளாரின் கிளை சபையானது.
பெண்களுக்கு 2009 ல் மரியாயின் சேனை தொடங்கப் பட்டது.
18-01-2011 ல் மேதகு ஆயர் அவர்கள் புதிய ஆலயம் கட்ட அடிக்கல் நிறுவினார். தற்போதைய பழைய ஆலயம் பொன்விழா காண்பதன் நினைவாக புதிய ஆலயம் கட்டப்பட்டது.
புனித தோமையார் காலத்து சிலுவை புதிய ஆலயத்தின் முன்பகுதியில் வைக்கப் பட்டது.
பங்குமக்களின் ஒத்துழைப்பு மற்றும் நன்கொடைகளாலும் பங்குத்தந்தை அருட்பணி அருள் தேவதாசன் அவர்களின் சிறப்பான வழிகாட்டுதலில் புதிய ஆலயம் கட்டப்பட்டு 25-07-2014 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.💐🙏💐
மண்ணின் இறை அழைத்தல்கள் :
1. Fr Alphonse
2. Bro Maria Simon
அருட்சகோதரிகள் :
1. Sis Armella
2. Sis Christal Shyla
3. Sis Ezhil
4. Sis Amali
இவ்வாறு பல்வேறு நிலைகளிலும் சிறந்து சிறப்பான பங்குதளமாக புனித சூசையப்பர் ஆலயம், கம்பிளார் திகழ்கின்றது.
(வரலாறு ஆலய விழா மலரிலிருந்து எடுக்கப்படட்டது ஆகும்)