843 புனித அந்தோனியார் ஆலயம், வரிப்பிலான்குளம்

    

புனித அந்தோனியார் ஆலயம்

இடம்: வரிப்பிலான்குளம், கலுங்குவிளை அஞ்சல், தூத்துக்குடி, 628704

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: சாத்தான்குளம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: உலக மீட்பர் ஆலயம், நெடுங்குளம்

பங்குத்தந்தை அருட்பணி. அ. சேவியர் கிங்ஸ்டன்

குடும்பங்கள்: 75

ஞாயிற்றுக்கிழமை திருப்பலி மாலை 07:00 மணி

செவ்வாய்க்கிழமை திருப்பலி மாலை 06:30 மணி

திருவிழா: சாம்பல் புதனுக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெறும் வகையில் 13 நாட்கள்

வரலாறு:

200 ஆண்டுகளுக்கும் முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இப்பகுதியில் குளங்கள் வெட்டப்பட்டன. பெரும்பாலும் இக்குளங்களின் பெயர்களைக் கொண்டே அதனருகில் தோன்றும் ஊர்களுக்குப் பெயர்கள்ஏற்பட்டன. அதனடிப்படையில் இவ்வூரின் இறுதியில் உள்ள குளம் ஒன்றும் அமைந்துள்ளது. இனி வரிப்பிலான் எனப் பெயர்வரக்காரணம் என்னவென்பதை அறிவோம். பொதுவாக ஒரு குளத்தை உருவாக்கும் போது அதற்கு சரியான காரணப் பெயர் அமையாத போது, அதனை உருவாக்குகின்ற பொறியாளரின் பெயரை சூட்டுவதைக் காண்கிறோம். எனவே, இக்குளத்தை உருவாக்கிய பூலான் என்னும் பொறியாளரின் பெயரில் "பூலான்குளம்" எனப் பெயர் பெற்றது.

இக்குளத்தருகே ராணி மங்கம்மாளால்

அமைக்கப்பட்ட, ராணி மங்கம்மா வழிப்பாதை (மற்றொரு பெயர் சாலப்பாதை)  செல்வதால், இது 'வழிபூலான்குளம்' எனப்பட்டது. பண்டைய ஆவணங்களில் 1900 ஆம் ஆண்டுக்கு முந்தைய பத்திரப்பதிவுகளில் வழிப்பூலான்குளம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு வளிப்பூவாங்குளம் எனப்பட்டு, பின்னர் 'வலிப்பிலாங்குளம்' என்றாகி, இறுதியில் "வரிப்பிலான்குளம்" எனப்பெயர் மாற்றம் பெற்று இப்பெயரே நிலைத்து நிற்கிறது.

மக்கள் குடியேற்றம்:

1884 ஆம் ஆண்டுக்குப் பிறகே இங்கு மக்கள் குடியேறியிருக்க வேண்டும். முதலில், இப்போது இருக்கும் ஊருக்கு தெற்கே குருசடி பக்கமாக குடியேறியதாக வாய்வழிச் செய்தி உண்டு. அவ்விடத்தில் இருந்து, பின்னர் அழிந்து போன குடிதண்ணீர் கிணறே அதற்குச் சான்றாகும். இப்போதும் அப்பகுதி நிலங்களுக்கு, குடியிருப்பு விளை என்ற பெயர் அந்நாட்களில் இருந்தே வழங்கி வருகிறது. 

அந்நாட்களில் இங்குள்ள நிலம் 128 ஏக்கர் 68 சென்ட் முழுவதும் காடன்குளம் மற்றும் பதைக்கம் ரெட்டியார் ஆட்களுக்கே உரியதாக இருந்தது. இந்த நிலங்களில் பயிர் செய்யவும், பனைமரங்களில் தொழில் செய்யவும் ரெட்டிய ஆட்களால் அனுப்பப்பட்டவர்களே இவ்வூர் மக்கள். 1884 ஆம் ஆண்டு முதல் இந்த நிலங்களை ரெட்டிய சமுதாய மக்களிடமிருந்து, நாடார் சமூதாய மக்கள் விலைக்கு வாங்கத் தொடங்கினர். பின்னர் 1913 ஆம் ஆண்டு 122 சென்ட் நிலம் வாங்கி குடியேறினர். 

ஆலயம்:

இவ்வூரில் உள்ள கிறிஸ்தவ மக்கள் தங்களுக்கு ஒரு ஆலயம் வேண்டும் என்று ஆவல் கொண்டு, இவ்வழியே திருப்பயணியாக மறைபரப்புப் பணிக்காக இவ்வூரின் வழியாகச் சென்ற ஐரோப்பிய நாட்டினராகிய, அருட்பணி. பரஞ்சோதி நாதர் என்ற டேனிஷ் குஷன் அவர்கள் வழிகாட்டலில், 1890 ஆம் ஆண்டுக்கும் 1895 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு குடிசையில் ஆலயம் அமைக்கப்பட்டு, திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம், சாத்தான்குளம் பங்கின் இணையூராக சேர்க்கப்பட்டது. அவ்வேளையில் கலுங்குவிளையைச் சேர்ந்த சிஎஸ்ஐ கிறிஸ்தவர்கள் சிலரும் திருமுழுக்கு பெற்றுக் கொண்டனர். 

1914 ஆம் ஆண்டில் அருட்பணி. லியோன் பெஸ் எழுதிய புத்தகத்தில், வரிப்பிலான்குளத்தில் 55 கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் (சாணார்) வாழ்ந்து வந்ததாக குறிப்பிடுகின்றார்.

1924 ஆம் ஆண்டு முதல் வரிப்பிலான்குளம் ஆலயமானது, சோமநாதபேரி பங்கின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.

பின்னர் குடிசை ஆலயம் மாற்றப்பட்டு, தற்போது காணப்படும் ஆலயமானது, அருட்பணி. ஞானப்பிரகாசம் (1946-1951) அவர்களின் பணிக்காலத்தில் கட்டப்பட்டது. 1960 ஆம் ஆண்டு அருட்பணி. இக்னேஷியஸ் அடிகளார் பணிக்காலத்தில் ஆலய கோபுரப் பணிகள் முழுமை பெற்றது. 

1963 ஆம் ஆண்டு மேதகு ஆயர் தாமஸ் ஆண்டகை அவர்களின் பங்கு விசாரணையின் போது, இவ்வாலயத்தில் முதன் முதலாக திருவிழா கொண்டாடப்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும் சாம்பல் புதனுக்கு முந்தைய செவ்வாயன்று ஆலயத் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப் பட்டு வந்தது. 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சாம்பல் புதனுக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெறும் வகையில் கொண்டாடப் பட்டு வருகிறது.

அருட்பணி. ஆர்தர் ஜேம்ஸ் (1967-1972) பணிக்காலத்தில், மக்களால் புனித ஆரோக்கிய அன்னை கெபி கட்டப்பட்டது.

1984 ஆம் ஆண்டு நெடுங்குளம் தனிப் பங்காக உயர்த்தப்பட்ட போது, வரிப்பிலான்குளம் அதன் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.

பழைய ஆலயம் அகற்றப்பட்டு, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் அவர்களால் 08.08.2021 அன்று புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த ஊரில் முன்னோர்கள் வழிபட்ட  குருசடி ஒன்று, கல்லறைத் தோட்டத்தில் இன்றும் உள்ளது.

ஆலய பங்கேற்பு அமைப்புகள்:

1. செயல்வீரர் புனித அந்தோனியார் இளைஞர் இயக்கம்

2. பாடகற்குழு

வழித்தடம்: முனஞ்சிப்பட்டியில் இருந்து 10கி.மீ, சாத்தான்குளத்திருந்தும் 10கி.மீ, பேய்க்குளத்தில் இருந்து 7கி.மீ

Location map:St. Antony's Church, Varippilankulam

https://maps.app.goo.gl/GanRCrUD3rTqYhx3A

தகவல்கள்: திரு.‌ சந்தன மரியான் ஆசிரியர் மற்றும் பங்குத்தந்தை அருட்பணி. சேவியர் கிங்ஸ்டன் ஆகியோர்.