49 புனித பெரிய நாயகி அன்னை திருத்தலம், திருவிதாங்கோடு

IMAGE NOT AVAILABLE
புனித பெரிய நாயகி அன்னை ஆலயம்

இடம் : திருவிதாங்கோடு

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

நிலை : திருத்தலம்
கிளைகள் : இல்லை

குடும்பங்கள் : 460
அன்பியங்கள் :6

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணி மற்றும் மாலை 05.30 மணி.

பங்குத்தந்தை : அருட்பணி ஜெலஸ்டின் ஜெரால்ட்.
இணை பங்குத்தந்தை :
அருட்பணி ஜேசு ராஜ்.
அருட்பணி சாமுவேல்.

வரலாறு :

திருவிதாங்கோடு தூய பெரியநாயகி திருத்தலம் வரலாற்று சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்தது. பல புனிதர்கள் கால் பதித்த புண்ணிய பூமி இந்த மண். முற்காலத்தில் இப்பகுதி திருவிதாங்கூர் அரசு என அழைக்கப்பட்டது. சேர அரசர்களின் கீழ் 156 சிற்றரசர்கள் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் ஆண்டு வந்தனர். ஒவ்வொரு சிற்றரசனின் நிலப்பகுதியும் கோடு என்று அழைக்கப்பட்டது. அதில் ஒரு கோடுதான் திருவிதாங்கோடு. திருவிதாங்கோட்டின் முதல் அரசராக கி.பி 311 ஜனவரி 29 ஆம் தியதி ஒரு வீரகேரளவர்ம "கிரீட பதியான" குலசேகரப்பெருமாளாக பதவி ஏற்றார் என்ற பரம்பரையை திரு. பி. சங்குண்ணி மேனன் சுட்டிக்காட்டுகிறார். திருவிதாங்கோடு சேர அரசர்கள் காலத்திலேயே ஒரு முக்கிய பட்டணமாக விளங்கியது. 19 ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் கூட (1807) Travancore State Gazette என்று ஆங்கிலத்தில் பெயரிடப்பட்ட அரசு ஆவணம் "திருவிதாங்கோடு சர்க்கார் கெசட்" என்றே மலையாள மொழியில் எழுதப்பட்டு வந்தது.

ஆனால் புண்ணிய பூமியின் வரலாறு சுமார் 2000 ஆண்டுகளை தழுவுகிறது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் கிபி 70 ஆம் ஆண்டில் இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவரான தூய தோமா இம்மண்ணில் வந்து மக்களோடு தங்கி நற்செய்தியை அறிவித்து முதலில் தூய மரியன்னை ஆலயம் ஒன்றினை அமைத்தார். இது ஆர்த்தடாக்ஸ் சிரியன் சபையினரின் கண்காணிப்பில் உள்ளது. அந்த மரியன்னை ஆலயம் அரைப்பள்ளி ஆலயம் என இன்றும் பெருமையுடன் அழைக்கப்படுகிறது. புனித தோமையாரின் வழி வந்தவர்கள் இப்பகுதியில் தொடர்ந்து கிறிஸ்தவ மறைபரப்புப் பணி தொடங்கினர். பலரை கிறிஸ்தவர்களாக மாற்றினர். கிரேக்க கலைவடிவிலான புனித மரியன்னை அரைப்பள்ளி ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு சென்றிருந்தனர். ஒரு சில நூற்றாண்டுகளாக அவ்வாலயம் அடைக்கப்பட்டிருந்தது. எனவே வேணாடு அரசு நாட்களிலேயே இந்த மக்கள் கிறிஸ்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவு.

1060 ம் ஆண்டுகளில் பாளையம் முதல் திட்டுவிளை வரையிலான அனைத்து கிறிஸ்தவ உள்நாட்டு மீனவ கிராம மக்களும் திருவிதாங்கோட்டை தலைமை ஊராக கொண்டு செயல்பட்டனர். திருவனந்தபுரம் முதல் வடக்கன்குளம் வரையிலான மக்களுக்கு பணியாற்றும் நோக்குடன் கட்டப்பட்ட குருக்கள் இல்லம் ஒன்று திருவிதாங்கோட்டில் இருந்தது. திருவிதாங்கோடு அரச அரண்மனையில் தங்கியிருந்த மன்னர் ராமவர்மாவையும் அவரது சகோதரர் மார்த்தாண்டவர்மாவையும் சந்தித்து போர்த்துகீசிய ஆளுநரின் படைஉதவி கிடைப்பது பற்றிய செய்தியை அறிவிக்க 1544 ஆம் ஆண்டு புனித பிரான்சீஸ் சவேரியார் வந்தபோது இவ்வாலயத்தையும் சந்தித்தார். கடலோர கிராமங்களில் நற்செய்தி அறிவிக்கும் அனுமதியை இங்கிருந்துதான் புனித சவேரியார் பெற்றுக்கொண்டார். இப்பங்கில் சிலகாலம் தங்கி மறைப்பணி செய்துள்ளார். அவர் தமிழகத்திலே முதன்முதலில் நற்செய்தி பணியை தொடங்கியது இவ்வாலயத்திலே தான்.

மேலும் மதுரை மிஷனில் பணியாற்றிக் கொண்டிருந்த புனித ஜாண் டி பிரிட்டோ 1682 ல் பிள்ளைத்தோப்பு இயேசு சபை இல்லம் வந்தபோது திருவிதாங்கோடு ஆலயத்திற்கும் வந்திருந்தார். தேவசகாயம் பிள்ளையை கைது செய்து எருமை மாட்டின் மீது இருத்தி துன்புறுத்தி 1749 முதல் மூன்று வருடங்களாக மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதத்தில் ஊர் ஊராக கொண்டு செல்லும் வழியில் திருவிதாங்கோடு தெருக்கள் வழியாகவும் இழுத்துச் செல்லப்பட்டார். இக்கோயிலின் வடபகுதியில் சுரங்கப்பாதை ஒன்றும் உள்ளது. இங்குதான் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை சிறை வைக்கபட்டார் என வாய்மொழி மரபு கூறுகிறது. இவ்வாலயத்திற்கு பக்கத்தில் உள்ள கேரளபுரத்திலும் பின்னர் சிறை வைக்கப்பட்டார்.

பல நூற்றாண்டுகளாக இது தனிபங்காக செயல்பட்டு வந்துள்ளது. இயேசுசபை, பிரான்சிஸ்கன் சபை, கார்மல் சபை குருக்கள் இங்கு பணியாற்றியிருக்கிறார்கள். அந்த காலகட்டத்தில் தொழில் மற்றும் கலாச்சார அடிப்படையில் சவலக்காரர் அல்லது முக்குவர் தங்கியிருந்த ஆற்றூர், இரணியல், முளகுமூடு, மணலிக்கரை, பழையகடை, புத்தன்கடை, வாறுதட்டு, மேக்காமண்டபம், பத்மநாபபுரம், தலக்குளம், திக்கணங்கோடு ஆகிய கிராமங்கள் திருவிதாங்கோட்டுடன் இணைந்திருந்தன என்று 1765 ஆம் ஆண்டு குறிப்புகள் காட்டுகின்றன.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அருட்தந்தை அழகிரியின் இங்கு மறை பரப்பு பணியை செய்து வந்தார்.
அருட் தந்தை அதிரியான் இறந்த பிறகு திருவிதாங்கோடு அத்துடன் இணைந்திருந்த கிராமங்களுடன் காரங்காடு பங்குடன் இணைக்கப்பட்டது. 1861ல் முளகுமூடு தாய்பங்காக உருவானபோது திருவிதாங்கோடு அதன் கிளைபங்காகவும் 1954 முதல் கல்குறிச்சியின் கிளைபங்காகவும் 1971 முதல் மைலக்கோட்டின் கிளைபங்காகவும் செயல்பட்டு வந்துள்ளது. 156 ஆண்டுகளுக்குப்பின் திருவிதாங்கோடு மீண்டும் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு அ. லியோண் தர்மராஜ் அவர்கள் 15-10-2004 அன்று திருப்பலி நிறைவேற்றி மறைமாவட்டத்தின் 132 வது பங்காக பிரகடனம் செய்தார்கள். தற்போது புதிய மறைமாவட்டமாகிய குழித்துறை மறைமாவட்டத்தின் பங்காக திருவிதாங்கோடு ஆலயம் உள்ளது.

திருவிதாங்கோடு ஆலயம் விண்ணேகும் ஆண்டவர் (பரலோக இயேசுநாதர்) ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் 17 ஆம் நூற்றாண்டுவரை இவ்வாலயம் புனித விண்ணேற்பு அன்னை மரியாளை பாதுகாவலியாகக் கொண்டு விளங்கிற்று.

கிபி 1726 ஆம் ஆண்டு வீரமாமுனிவர் தேம்பாவணி என்னும் செந்தமிழ் காப்பியத்தை எழுதினார். அதில் அன்னை மரியாவை பெரியநாயகி அன்னை என்று வரணித்து பாடியுள்ளார். மேலும் வீராமாமுனிவர் கோனான்குப்பத்தில் தமிழ் கலாச்சார முறைப்படி பெரியநாயகி அன்னைக்கு என்று ஆலயத்தை கட்டியுள்ளார். இப்பக்தி திருவிதாங்கோட்டிலும் பரவியது. மீனவர் ஒருவர் கடலில் மீன் பிடிக்க சென்ற போது புயலில் அவர் படகு சிக்கிக் கொள்ளவே அவர் அன்னையை நோக்கி மன்றாடினார். மேலும் கரை திரும்பியதும் அன்னைக்கு ஒரு சொரூபம் அமைத்து வழிபாடு செய்வதாக உருக்கமாக வேண்டினார்.

துயர் துடைக்கும் பெரியநாயகி அன்னை அவரை பத்திரமாக கரை சேர்த்தார்கள். அவர் வேண்டுதலின் நினைவாக பெரிய நாயகி அன்னை பக்தி இங்கு சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் அருட்தந்தை ஆர். பாஸ்கல்ராஜ் காலத்தில் துவக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை வருந்தி வருந்துவோர்க்கு ஆறுதல் தரும் அன்னையாகவும் நாடி வருவோருக்கு பரிந்து பேசும் தாயாகவும் நோயுற்றோருக்கு நல்ல தேற்றரவாகவும் குழந்தை பேறு வழங்கும் கொடை வள்ளலாகவும் வேலையற்றோருக்கு வேலை வழங்கும் தாயாகவும் இருந்து எண்ணிலடங்கா அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்து வருகின்றாள் நம் தாய்.

ஆலயப் பாதுகாவலர் விண்ணேகும் ஆண்டவர் விழா இயேசுவின் உயிர்ப்பு விழாவின் 40 நாம் நாள் அதாவது ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்ற விழாவை மையப்படுத்தி 10 நாட்களும், பெரியநாயகி அன்னை விழா ஜனவரி மாத இறுதியில் 3 நாட்களும் கொண்டாடப்படுகிறது. வெள்ளிகிழமைகளில் மதியம் 11.30 மணிக்கு நவநாள் திருப்பலியும் மாலை 5.00 மணிக்கு செபமாலை, நவநாள் திருப்பலியும் நிறைவேற்றப்படுகிறது. கேரள மாநிலத்திலிருந்தும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்தும் வெள்ளிக்கிழமைகளிலும் மாதத்தின் முதல் சனிக்கிழமைகளிலும் ஆயிரக்கணக்கான மக்களும் ஏராளமான பக்தர்களும் ஜாதி மத வேறுபாடின்றி அன்னையின் பரிந்துரையை நாடி வருகின்றனர்.

பழைமையையும் பண்பாட்டு பன்மைகளையும் எடுத்தியம்பும் இரண்டு ஆலயங்கள் இன்றும் திருப்பயணிகளை சுண்டி இழுக்கும் வரலாற்றுச் சுவடுகளாக உள்ளன. இன்று வழிபாடு செய்யபடும் பழையக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வேணாட்டு மன்னர்களால் கட்டப்பட்டதாக வாய்மொழி மரபு எடுத்தியம்புகிறது. புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு செபமாலை மற்றும் நவநாள் திருப்பலி இங்கு நிறைவேற்றப்படுகிறது. தாமரையில் வீற்றிருக்கும் பாரம்பரியமிக்க பெரியநாயகி அன்னை திருவுரவமும் அருட்தந்தை அதிரியான் கல்லறையும் இவ்வாலயத்தில் அமைந்துள்ளன.

பழைய ஆலயத்தோடு சேர்த்து புதிய ஆலயம் ஒன்று திராவிடக்கலை திருவிதாங்கூர் கலை, மொகாலாயக் கலை, கோதிக் கலை போன்ற பண்பாடுகளின் கலாச்சார கலை வடிவங்களை தாங்கி 2012 ல் கட்டி முடிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டுள்ளது. இது உரோமையின் தூய பேதுரு ஆலய அமைப்பை நினைவூட்டுவதாய் உள்ளது. முன்வாயிற் கதவுகளில் செபமாலையின் மறைஉண்மைகளை தாங்கி நிற்கின்றன. வாயில் தூண்கள் பத்மநாபபுரம் அரண்மனை தோற்றத்தை கொண்டுள்ளது.