200 புனித சிலுவை அருளப்பர் ஆலயம், சிலுவைபுரம்


புனித சிலுவை அருளப்பர் ஆலயம்

இடம் : சிலுவைபுரம், கொல்லங்கோடு

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : பங்குதளம்
கிளை : புனித குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், சந்தனபுரம்

பங்குத்தந்தை : அருட்பணி விக்டர் குரூஸ்

குடும்பங்கள் : 650
அன்பியங்கள் : 16

ஞாயிறு திருப்பலி : காலை 09.15 மணிக்கு

வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு திருப்பலி, நற்கருணை ஆராதனை

திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு திருப்பலி

திருவிழா : டிசம்பர் மாதக் கடைசியில் (இவ்வருடம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செப்டம்பர் மாதத்தில்)

சிலுவைபுரம் ஆலய வரலாறு :

அமைவிடம் :

கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையான கேரளக் கரையோரமாய் சிலுவைபுரம் என்ற ஊரில் புனித சிலுவை அருளப்பர் ஆலயம் அமைந்துள்ளது.

நூற்றாண்டுகளுக்கு முன் வெளிநாட்டினர் பலர் இந்தியாவில் மறை பரப்புப் பணியை மேற்கொண்டனர். அதில் போர்ச்சுகீசிய மிஷனும் ஒன்று. சுமார் கி.பி 17- ம் நூற்றாண்டில் வாராபுழை மறை மாவட்டம் கடலோரம் மற்றும் அதனுடன் இணைந்த மக்களுக்கு சேவை செய்து வந்தனர்.

வறுமை, அறியாமை, கொடிய நோய்களிலும் சிக்கிக் கொண்டு வாழும் மக்களைக் கண்ட மிஷனரீஸ், அவர்களுடன் நெருங்கி இரண்டற பழகினர். அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு நோய்களுக்கு மருந்தும், அறியாமையைப் போக்க அறிவையும் கல்வியையும் இவற்றுடன் இறைவனைப் பற்றிய போதனைகளுமாய் நம் மறையை பரப்பி வந்தனர்.

கி.பி 19- ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போர்ச்சுகீசிய மிஷனரீஸ் வல்லுவ பொற்றை -யை மையமாகக் கொண்டு இவ்வூர் மக்களிடம் இறைவனைப் பற்றிய போதனைகளை மேற்கண்டவாறு போதிக்க தொடங்கினர். இவர்களைத் தொடர்ந்து வந்த கார்மலீத் சபையினர் இங்கு ஆலயம் கட்டியது முதல் இவ்வூர் வரலாறு துவங்கியது.

பெயர்க்காரணம் :

வெளிநாட்டினர் ஆலயங்களை உயரமான இடங்களில் அமைப்பது வழக்கம். அவ்வகையில் இவ்வூரில் வல்லுவ பொற்றையை தேர்வு செய்து, ஆலயம் கட்டும் பணியை கார்மலீத் சபையை சார்ந்தவர்கள் செய்தனர். அவர்கள் கார்மலீத் சபையில் குருவாக பணி செய்த புனித சிலுவை அருளப்பரை பாதுகாவலாகக் கொண்டு ஒரு சிறிய ஓலைக் கோயிலை கட்டினார்கள்.

பின்னர் அருட்தந்தை இன்னசென்ட் (பெல்ஜியம்) அவர்கள் ஆலயத்தை சார்ந்த இப்பகுதிக்கு சிலுவைபுரம் எனப் பெயரிட்டார்.

ஆலயம் வளர்ந்த வரலாறு :

துவக்க காலத்தில் சிறு ஓலைக் குடில் ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றி வந்தார்கள். அக்காலத்தில் சுமார் 30 குடும்பங்கள் இப் பங்கில் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு நிலையான ஆலயத்தின் தேவையை உணர்ந்து இக் குடும்பத்தினரின் உதவியுடனும், வெளி நாட்டினரின் நிதி உதவியுடனும் ஓட்டுக் கூரையாலான ஆலயம் கட்டப்பட்டு அருட்தந்தை லாரன்ஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

அப்போது மங்குழி, சூழால், பிராகோடு, போராங்கோடு, சந்தனபுரம், காக்கவிளை, பின்குளம் ஆகிய பகுதிக்குட்பட்ட இடம் இப்பங்கின் எல்லைகளாக இருந்தது.

பின்னர் அருட்தந்தை லூக்காஸ் அவர்கள் பணிக்காலத்தில் பொதுநிலையினரின் பங்கேற்பு அதிகமானதால் அனைவரும் ஆலயத்தின் உட்பகுதியில் இருந்து திருப்பலியில் கலந்து கொள்ள முடியாததால் ஆலயத்தின் முன் பக்கம் இரண்டு வாயில்கள் கூட அமைத்து வெளியில் நின்று கொண்டும் திருப்பலி காண வழிவகை செய்தார்.

அதனைத் தொடர்ந்து வந்த அருட்தந்தை ஜஸ்டஸ் அவர்கள் அன்றைய பங்குப்பேரவையின் ஒத்துழைப்புடன், அழகிய வடிவில் கான்கிரீட்டால் ஆலய இருபுறமும் விரிவாக்கம் செய்யப்பட்டு இட நெருக்கடியை குறைத்தார்.

தற்போதைய புதிய ஆலயமானது அருட்பணி சதீஷ்குமார் ஜாய் அவர்களின் பணிக்காலத்தில், பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு மற்றும் நன்கொடைகள், பங்குத்தந்தையின் வழி நடத்துதலில் சிறப்பாக நிறைவு பெற்று 28-12-2014 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

கொடிமரம் :

திருவிழா காலத்தில் ஆலயத்தில் திருக்கொடியேற்றும் நிறைவேற்றப் படுவது வழக்கம். அதன் அடிப்படையில் ஆரம்ப காலத்தில் கமுகு மரம் (பாக்கு மரம்) வெட்டி, நட்டு வைத்து திருக்கொடியேற்றினர்.

பின்னர் அருட்தந்தை இராபர்ட் அவர்கள் காலத்தில் இரும்பு குழாயாலான 60 அடி உயர கொடிமரம் நாட்டப்பட்டது.

மழை, காற்று போன்றவற்றால் இக்கொடிமரம் பாதிப்படைந்ததால் கான்கிரீட்டாலான கொடிமரம் திரு குருசுமுத்து அவர்களின் நன்கொடையில் உருவாக்கப்பட்டு அருட்பணி லூக்காஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

தற்போதைய, கல்லால் ஆன கொடிமரம் அருட்பணி சதீஷ்குமார் ஜாய் அவர்களால் நிறுவப்பட்டு மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் 28-12-2014 -ல் அர்ச்சிக்கப்பட்டது.

கிணறு :

ஓலைக் கோயில் இருக்கையிலேயே இவ்வாலய வளாகத்தில் அமையப் பெற்றிருக்கும் கிணறு வெட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மின்சாரம் :

1962-ம் ஆண்டிலிருந்து அருட்பணி வலேரி மெலாட் அவர்கள் ஆலயத்திற்கு மின்சாரத்தை பெற்றுத் தந்தார்கள்.

பலிபீடம் :

அக்காலத்தில் இலத்தீன் மரபுப்படி பின்னோக்கி இருந்த பீடம், இரண்டாம் வத்திக்கான் சங்க முறைப்படி அருட்தந்தை ஏசுதாசன் தாமஸ் அவர்கள் காலத்தில் மாற்றி அமைக்கப்பட்டு பொது நிலையினரை நோக்கி திரும்ப, திருப்பலி நிறைவேற்றும் வழக்கம் நடைமுறைப்படுத்தப் பட்டது.

ஓட்டுக்கூரையாலான ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்ட போது அருட்பணி ஜஸ்டஸ் அவர்கள் புதிய பீடத்தை நிறுவினார்.

தற்போதைய அழகிய பலிபீடம் விவிலிய சிந்தையில் அருட்பணி சதீஷ்குமார் ஜாய் அவர்கள் நிறுவினார்.

குருசடி :

சிலுவைபுரம் சந்திப்பில் மக்களின் ஜெப தேவைக்காக, ஒரு அழகிய தூய ஆரோக்கிய அன்னை குருசடி கட்டப்பட்டு 2017 ம் ஆண்டு டிசம்பரில் அர்ச்சிக்கப்பட்டது.

கன்னியர் இல்லம் :

இவ்வூருக்கு திருத்துவபுரத்திலிருந்து கன்னியர்கள் நடந்து வந்து சேவை புரிந்தனர். அவர்களின் சேவையின் சிறப்பையும், தேவையையும் உணர்ந்து அருட்பணி போர்ஜியோ அவர்கள் 1947 -ல் ஒரு சிறு கட்டிடத்தை அமைத்து அவர்களை இங்கேயே தங்கி பணிபுரிய செய்தார்.

தற்போதைய கட்டிடம் 1978 ம் ஆண்டு அருட்பணி அலெக்ஸாண்டர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1982- ம் ஆண்டு அருட்பணி லூக்காஸ் அவர்களின் முயற்சியால் கட்டப்பட்டு அப்போதைய ஆயர் மேதகு ஆரோக்கியசாமி ஆண்டகையால் அர்ச்சிக்கப்பட்டது.

J. C சமூக நலக்கூடம் :

J. C சமூக நலக்கூடமானது 04-01-1998 அன்று அருட்பணி அகஸ்டின் அவர்களது முயற்சியால் அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப் பட்டது. பின்னர் அருட்தந்தை பிரைட் சிம்சராஜ் அவர்களின் முயற்சியால் முதல் தளம் கான்கிரீட் செய்யப்பட்டது.

தொடர்ந்து அருட்பணி காட்வின் செல்வ ஜஸ்டஸ் அவர்களின் முயற்சியால் வேலைகள் அனைத்தும் நிறைவு பெற்று 03-01-2010 ல் திறப்பு விழா கண்டு, இன்று உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களின் பயன்பாட்டிற்கு உதவுகின்றது.

மாலை நேரக் கல்வி :

மாலை நேரக் கல்வியானது அருட்பணி காட்வின் செல்வ ஜஸ்டஸ் காலத்தில் துவக்கப் பட்டது. மாலை 06.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். ஏராளமான மாணவர்கள் இதில் பயின்று பயன் பெற்று வருகின்றனர்.

பள்ளிக்கூடம் :

1950 -ம் ஆண்டு அருட்பணி பிரான்சிஸ் போர்ஜியோ பீட்டர் அவர்களால் பள்ளிக்கூடம் அமைக்கப் பட்டது.

1953 - ம் ஆண்டில் அருட்பணி ஜோசப் அடிகளாரால் பள்ளிக்கு அரசு அங்கீகாரம் பெறப்பட்டது.

இடைநிலைப் பள்ளியாக செயல்பட்டுக் கொண்டிருந்ததை அருட்பணி லூக்காஸ் அவர்களின் முயற்சியால் 1980 ல் நடுநிலைப் பள்ளியாக மாற்றப் பட்டது.

அருட்பணி ஜஸ்டஸ் அவர்களின் முயற்சியால் புதிய கட்டிடமும் கட்டப்பட்டு, உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்து விளங்குகின்றது.

மறைக்கல்வி :

பங்கின் தொடக்க காலம் முதலே மறையைக் குறித்த அறிவை வளர்க்க மறைக்கல்வி பயிற்றுவிக்கப் பட்டது. தொடக்க காலத்தில் அருட்சகோதரிகள் இப்பணியை செய்தனர். மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் பொருட்டு மூன்று மாதத்திற்கொரு முறை மறைக்கல்வி மன்ற கூட்டம் நடத்தப்பட்டு, மாணவர்கள் ஊக்கப்படுத்தப் படுகிறார்கள்.

சபைகள், சங்கங்கள், இயக்கங்கள் :

சிலுவைபுரம் பங்கில் அனைத்து பங்கேற்பு அமைப்புகளும், தங்களுக்கான நோக்கங்களுடன் பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இன்றைய நிலை :

ஒரு காலத்தில் கல்வியறிவிலும், பொருளாதாரத்திலும் குன்றியிருந்த இப்பங்கானது தற்போது சிறந்த கல்வியாளர்களையும், வல்லுநர்களையும், பல்வேறு துறைகளிலும் சிறந்து வளர்ந்து உயர்ந்து நிற்கின்றது.

மேலும் தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி விக்டர் குரூஸ் அவர்கள் பங்கு மக்களை ஒருங்கிணைத்து சிறப்பாக வழி நடத்தி, சிலுவைபுரம் தலத்திருச்சபையை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி கொண்டு செல்கிறார்.

நூற்றாண்டு விழா :

சிலுவைபுரம் பங்கானது நூற்றாண்டு விழாவை இவ்வருடம் செப்டம்பர் மாதத்தில் கொண்டாட இருக்கறது. நூற்றாண்டு விழா சிறப்பு செயல் திட்டமாக பங்குத்தந்தை இல்லம் புதிதாக கட்டப்பட்டு செப்டம்பர் மாதத்தில் அர்ச்சிக்கப்பட இருக்கின்றது என்பது தனிச்சிறப்பு.

மண்ணின் இறை அழைத்தல்கள் :

1.Fr மா. பா ஏசுதாஸ் (தாகம் உட்பட ஐந்திற்கும் மேற்பட்ட கத்தோலிக்க பாடல் குறுந்தகடுகளை வெளியிட்டவர்)
2. Fr அமல் ராஜ்

மற்றும் ஒரு அருட்சகோதரியையும் மறை பரப்புப் பணிக்காக தந்துள்ளது சிலுவைபுரம் தலத்திருச்சபை.

வழித்தடம் :

கொல்லங்கோடு செல்கிற பேருந்தில் பயணித்து சிலுவைபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இவ்வாலயம் செல்லலாம்.

Bus : 382, 82A, 82B, 82D, 82F, 82G, 82M,
PCG
556 Trivandrum To KOLLAMCODE.

சிறந்த ஒரு வரலாற்றையும் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடும் சிலுவைபுரம் தலத் திருச்சபையினருக்கு வாழ்த்துகளையும் கூறி, இந்த 200 வது ஆலயப் பதிவை இறைவன் பாதம் சமர்ப்பிக்கின்றோம்..!