344 வேளாங்கண்ணி அன்னை ஆலயம், கண்ணோடு


வேளாங்கண்ணி அன்னை ஆலயம்.

இடம் : கண்ணோடு, நெய்யூர் அஞ்சல், 629802.

மாவட்டம் : கன்னியாகுமரி

மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : கிளைப்பங்கு

பங்கு : தூய கார்மல் அன்னை ஆலயம், முரசங்கோடு

பங்குத்தந்தை : அருட்பணி பெனிட்டோ .வ
இணை பங்குத்தந்தை : அருட்பணி ஜான்சன் க. ச

குடும்பங்கள் : 58

அன்பியங்கள் : 4

1. தூய வேளாங்கண்ணி அன்னை அன்பியம்
2. தூய பாத்திமா அன்னை அன்பியம்
3. தூய கார்மல் அன்னை அன்பியம்
4. தூய ஆரோக்கிய அன்னை அன்பியம்.

ஞாயிறு திருப்பலி : காலை 10.00 மணிக்கு

புதன் மாலை 06.45 மணிக்கு நவநாள், திருப்பலி.

திருவிழா : செப்டம்பர் மாதம் 08-ஆம் தேதியை உள்ளடக்கிய மூன்று நாட்கள்.

வழித்தடம் : திங்கள் நகர் - அழகியமண்டபம் சாலையில், நெய்யூர் -ஐ தாண்டி பரம்பையிலிருந்து இடது புறமாக கொக்கோடு செல்லும் வழியில் கண்ணோடு உள்ளது.

வரலாறு :

கண்ணோடு என்கிற அழகிய கிராமம் திங்கள்நகரிலிருந்து, அழகியமண்டபம் செல்லும் சாலையில், இரயில் பாதைக்கு அடுத்த பரம்பை சந்திப்பிலிருந்து மேற்காக செல்லும் பாதையில் அரை கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இவ்வூரின் பஞ்சாயத்து கிணற்றிற்கு அருகில் கண்ணோடு கால்வாய் ஓரமாக தூய வேளாங்கண்ணி அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இது முரசங்கோடு தூய கார்மல் அன்னை ஆலயத்தின் கிளைப் பங்காகும்.

முரசங்கோடு பங்கு ஆலயத்தின் அன்பியங்கள் அமைக்கப்பட்ட போது, சுமார் 15 குடும்பங்களை மட்டுமே கொண்ட கண்ணோடு தனி அன்பியமாக அமைந்தது. இப்பகுதியில் ஒரு குருசடி அமைக்க வேண்டும் என்ற உணர்வு அன்பிய மக்களிடையே எழுந்தது. ஆனால் அதற்கான சூழல் அமைந்து வரவில்லை. 2002-ஆம் ஆண்டு அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி S. வர்கீஸ் அடிகளார் மற்றும் வேதியர் திரு S. ஜான்றோஸ் இவர்களின் குடும்பச் சந்திப்பின் போது ஏற்பட்ட தூண்டுதலால் திரு T. முருகதாஸ் மற்றும் அவரது மனைவி மூன்று மகன்கள் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்துவில் இணைந்தனர். இவர்களது வரவு கண்ணோடு தலத்திருச்சபையின் உருவாக்கத்திற்கு இறைவன் தந்த கொடை என்பதை எவரும் மறுக்க இயலாது.

இந்நிலையில் குருசடி அமைப்பது என்ற எண்ணம் ஆலயம் அமைக்கும் முயற்சியாக உருவெடுத்தது. இங்குள்ள பெரியவர்களின் கூட்டு முயற்சியால் தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்திற்கருகில் ஐந்தரை சென்ட் நிலம் வாங்கப்பட்டது. மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வரப்பட்ட காலமாக இருந்ததாலும் புதிய ஆலயம் அமைப்பதில் சிரமங்கள் இருந்ததாலும், வாங்கப்பட்ட நிலம் இப்பங்கைச் சேர்ந்த திரு T. இராபர்ட் என்பவரின் பெயருக்கு எழுதப் பட்டது. அதில் வீடாக இருந்த கட்டிடம் சரிசெய்யப்பட்டு ஆலயமாக மாற்றப்பட்டது.

இந்த ஆலயத்தில் 24-12-2012 கிறிஸ்துமஸ் தினத்தில் முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து எல்லா ஞாயிறு மற்றும் கடன் திருநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. இவ்வாலயமானது 22-01-2004 -இல் ஆயர் பெயருக்கு மாற்றப்பட்டது.

உயர்ந்து நிற்கும் அழகிய மணிக்கூண்டு 05-09-2004 -இல் அர்ச்சிக்கப்பட்டது.
திருப்பலி நிறைவேற்றுவதற்கான ஆயரின் அனுமதி 04-06-2006 -இல் பெறப்பட்டது.

கல்லறைத் தோட்டத்திற்கின ஏழு சென்ட் நிலம் 19-07-2009 அன்றும், அருட்பணியாளர் இல்லம் அமைப்பதற்கான நிலம் 27-03-2007 அன்றும் வாங்கப்பட்டது.

இவ்வாலயம் கிளைப் பங்காவதற்காக 10-12-2007 -இல் ஆயர் அவர்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டது.

புதிதாக பல மக்களும் இத்திருச்சபையில் இணைந்ததாலும், பழைய ஆலயத்தில் போதிய இடவசதி இல்லாததாலும் புதிய ஆலயம் எழுப்ப வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே உருவாகியது. அருட்பணி மரிய செல்வராஜ் அவர்கள் முரசங்கோடு பங்குத்தந்தையாக இருந்த போது புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 06-12-2015 அன்று நடைபெற்றது. பேரருட்பணி V. மரிய அல்போன்ஸ் அவர்கள் அடிக்கல்லை அர்ச்சிக்க, அப்போதைய முளகுமூடு வட்டார முதல்வர் பேரருட்பணி P. சகாயதாஸ் அவர்கள் முன்னின்று வகித்தார். தொடர்ந்து பங்குப்பணியாளராக பொறுப்பேற்ற அருட்பணி V. பெனிட்டோ அவர்களும் ஆலய கட்டுமானப் பணிகளை சிறப்பாக முன்னெடுத்துச் சென்றார்கள்.

பங்கு அருட்பணிப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள், பங்கு மக்கள் ஆகியோரின் அயராத தன்னலமற்ற உழைப்பினாலும் பல நல்லுள்ளங்களின் நன்கொடைகளாலும் பங்குத்தந்தை அருட்பணி பெனிட்டோ அவர்களின் சிறந்த ஒருங்கிணைந்த வழிகாட்டுதலாலும் இவ் அழகிய ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டு அன்னையின் பிறந்தநாளில் 08-09-2019 இன்று மாலை 04.30 மணிக்கு குழித்துறை மறை மாவட்ட ஆயர் மேதகு ஜெறோம் தாஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட இருக்கின்றது.

அன்னையின் வழியாக ஏராளமான அற்புதங்கள் நடந்து வருவதால் கிறிஸ்தவர் அல்லாத பிற சமய மக்களும் நாள்தோறும் ஆலயம் வந்து செபித்து அன்னையின் அருளை பெற்றுச் செல்கின்றனர். வெறும் 15 குடும்பங்களோடு தொடங்கிய இந்த ஆலயம் இன்று 58 சிறந்த குடும்பங்களோடு அன்னையின் ஆசீருடன் வளர்ந்தோங்கி தலை நிமிர்ந்து நிற்கின்றது. மேலும் குடும்பமாக திருமுழுக்கு பெறுபவர்களின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது குறிப்பிடத் தக்கது.

இவ் அழகிய இறைவனின் அன்பு இல்லமாகிய ஆலயத்தை கட்டியெழுப்ப உதவி செய்த அனைவருக்கும் குறிப்பாக பங்கு மக்கள், பங்குத்தந்தை, அருகில் வாழும் பிற சபை சமய மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதோடு..! இவ்வாலயம் மென்மேலும் வளர இறைவனிடம் செபிக்க உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொண்டு... கண்ணோடு தூய வேளாங்கண்ணி அன்னை ஆலயத்தை இறைவன் பாதம் சமர்ப்பிக்கின்றோம்.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி V. பெனிட்டோ.

பதிவு : புனித காணிக்கை மாதா ஆலயம் மாதாபுரம், குமரி மாவட்டம், குழித்துறை மறை மாவட்டம்.

பதிவு செய்பவர் மின்னஞ்சல் : joseeye1@gmail.com

https://www.facebook.com/permalink.php?story_fbid=2476053319295979&id=2287910631443583&__tn__=K-R