218 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், மலையடிப்பட்டி

     

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம்

இடம் : மலையடிப்பட்டி

மாவட்டம் : திருச்சி 

மறை மாவட்டம் : திருச்சி 

மறைவட்டம் : மணப்பாறை 

பங்குத்தந்தை : அருட்பணி. ஜேம்ஸ்

நிலை : பங்குத்தளம் 

பங்கின் ஆலயங்கள்:

புனித தோமையர் திருத்தலம்

புனித பனிமய மாதா ஆலயம்

கிளைப்பங்குகள்:

1. புனித அந்தோனியார் ஆலயம், கல்பாளையத்தான்பட்டி

2. புனித சந்தியாகப்பர் ஆலயம், புதுப்பட்டி

3. புனித செபஸ்தியார் ஆலயம், இராயன்பட்டி

4. புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், மலைத்தாதம்பட்டி

5. புனித சந்தியாகப்பர் ஆலயம், பிச்சைமணியாரம்பட்டி

6. புனித லூர்து மாதா ஆலயம், பொன்னக்கோன்பட்டி

7. புனித செபஸ்தியார் ஆலயம், செபஸ்தியார்பட்டி

 8. புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலயம், கானப்பாடி புதூர்

9. புனித வனத்து அந்தோனியார் ஆலயம், தெற்கு அஞ்சல்காரன்பட்டி

10. புனித பத்தாம் பத்திநாதர் ஆலயம், கோட்டைப்பட்டி

11. புனித குழந்தை தெரசாள் ஆலயம், மொட்டப்பெருமாள்பட்டி

12. ஊத்துப்பட்டி

13. கழனிவாசல்பட்டி

14. ஈச்சம்பட்டி

15. செட்டியபட்டி

16. வளையபட்டி

17. கன்னிப்பட்டி

குடும்பங்கள் : 3000+ (கிளைப்பங்குகள் சேர்த்து)

ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணி, காலை 08.00 மணி மற்றும் காலை 11.00 மணிக்கு (மலையில்) 

சனிக்கிழமை திருப்பலி : மாலை 06.00 மணிக்கு (கெபியில்) 

வியாழன் மலையில் சிறப்பு ஆராதனை காலை 11.00 மணிக்கு திருப்பலி 

திருவிழா: ஈஸ்டர் பெருவிழாவினை அடுத்த வியாழன் முதல் ஞாயிறுவரை (அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளும் விழாவாக உள்ளது)

மற்றும்  : டிசம்பர் மாதம் 03- ம் தேதி 

மலையடிப்பட்டி மண்ணின் இறையழைத்தல்கள்:

அருள்பணியாளர்கள்:

1. Fr. Gnanaprakasam (late)

2. Fr. A. Marianadam (late)

3. Fr. Irudayasamy, SJ (late)

4. Fr. Selvaraj Thomaslate (late)

5. Fr. Mariadoss Thomas, SJ (late)

6. Fr. Henry Thomas (late)

7. Fr. I. Arockiam (late)

8. Fr. James Vincent, SJ (late)

9. Fr. S. Nichodemus (late)

10. Fr. Kulandai Lawrence (late)

11. Fr. G Sagayaraja (late)

12. Fr. Stephen Gaspar, Dindigul diocese

13. Fr. M. Thomas Gnana Durai

14. Fr. R. Maria Ignasi, Dindigul diocese

15. Fr. John Samuel, SDB

16. Fr. Antony Ramesh Kumar

17. Fr. Jerome Gnana Prabhu

18. Fr. Jerald Stephen Selva, Dindigul diocese

19. Fr. Dass

20. Fr. Velankanni, SJ

21. Fr. Joakim, SJ

22. Fr. Joseph Arputharaj, OFM Cap

23. Fr. Abi Nicholas, ரோஸ்மினியன்ஸ் IC

அருள் சகோதரிகள்:

1. Sr. அமலோற்பவ மேரி, CIC (late)

2. Sr. லில்லி தெரஸ், CIC (late)

3. Sr. ஜான் பீட்டர், CIC (late)

4. Sr. மேரி பெர்னார்டு, CIC (late)

5. Sr. எம்மா தெரஸ், CIC (late)

6. Sr. டெல்பின் மேரி, CIC (late)

7. Sr. மரிய ஜோஸ்பின், குளூனி (late)

8. Sr. கிரேஸ் ஹெலனா, CIC (late) 

9. Sr. பாத்திமா ரோசரி, CIC (late)

10. Sr. ஹென்றி ஜூலியா, CIC (late)

11. Sr. என்கிரதித்தா மேரி, CIC (late)

12. Sr. தோமினிக் சாவியோ‍, CIC (late)

13. Sr. வின்சென்ட் ஃபபியோலா, CIC (late)

14. Sr. ஹெலன், குளூனி (late)

15. Sr. ஆனி ட்ரினிட்டா, CIC

16. Sr. பவுலின், குளூனி

17. Sr. எட்வர்ட், CIC

18. Sr. பிலிப், குளூனி

19. Sr. புஷ்பமேரி, CIC

20. Sr. லியா, குளூனி

21. Sr. கமீல் @ குழந்தை தெரஸ், OSM

22. Sr. தைனஸ், CIC

23. Sr. எலிசபெத் மேரி, OSM

24. Sr. லீமா லில்லி தெரஸ், CSA

25. Sr. மெர்சி, CIC

26. Sr. மார்கிரேட் மேரி, CSA

27. Sr. வசந்தா அமலோற்பவம், CSA

28. Sr. ஞானசெல்வி, குளூனி

29. Sr. மைக்கேல் சித்ரா, CFMSS

30. Sr. ஜெசிந்தா ஆரோக்கியமேரி, OSM

31. Sr. சகாயமேரி, CFMSS

32. Sr. சுசிலா ராணி, CFMSS

33. Sr. ஜீனா, CTC

34. Sr. லீமா ரோஸி, CIC

35. Sr. கேத்ரின் மத்தீனா, CFMSS

36. Sr. சேன்டல் பிரின்சி, FMA

அருள்சகோதரர்கள்:

1. Br. சின்ன யாகப்பன், Rosarian

2. Br. தாமஸ் SJ

3. Br. தாமஸ் எட்வர்டு ராபர்ட் SHJ

4. Br. சவரிமுத்து, மாரிஸ்ட் சகோதரர்கள்

5. Br. இன்பன்ட் ராஜ், Congregation of the Blessed Sacrament

6. Br. ஜான் பால், SDB

7. Br. ஆண்ட்டோ பிரகாஷ், St Paul's seminary Trichy

வழித்தடம்: மணப்பாறையிலிருந்து திண்டுக்கல் சாலையில், மலைத்தாதம்பட்டி ஊரிலிருந்து இடப்புறமாக இரண்டு கி.மீ உள்ளே சென்றால் மலையடிப்பட்டி ஆலயம் உள்ளது.

Location map: https://www.google.com/search?client=ms-android-vivo-rvo2&v=12.22.8.23.arm64&biw=392&bih=809&hl=en-US&cs=0&cds=2&sxsrf=AOaemvIyRyVjUuwqsRrLRKE3Vk_WhOXEwA:1635904123702&q=Malayadipatti+Church&ludocid=10514005206711499778&gsas=1&client=ms-android-vivo-rvo2&v=12.22.8.23.arm64&ibp=gwp;0,7&lsig=AB86z5UurD9cR76An75xPeo9cssP&kgs=7d09e0ced7617550&shndl=-1&source=sh/x/kp/local/4&entrypoint=sh/x/kp/local

வரலாறு:

மலையடிப்பட்டியின் வரலாற்றினைக் குறித்து அறிய, அக்காலகட்டத்தில் நிகழ்ந்த அரசியல் நகர்வுகளைக் குறிப்பிடுவது அவசியமாகிறது. 1659-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் இறுதியில் மைசூர்ப் படை திருச்சிராப்பள்ளியை முற்றுகையிடுவதற்காக வந்து கொண்டிருந்தன. மைசூர் மன்னர் கந்திவரன் 1656 -இல் மதுரை நாயக்கருக்கு எதிராகப் போர் தொடுக்க வந்தார். நீர் வளமும் நில வளமும் மிக்க சத்தியமங்கலத்தைக் கைப்பற்றி ஊர்ப்புறமெங்கிலும் கொள்ளையடித்துச் சூறையாடினர் படைவீரர்கள். இதனால் மறைப்பணித்தளத்திலுள்ள கிறிஸ்தவ மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

இப்போரில் மைசூர்ப் படைவீரர்கள் மதுரை நாயக்கரின் படையினரின் மூக்குகளை அறுக்கும் வன்செயலில் ஈடுபட்டனர். நாயக்௧ரின் படையினரால் இறுதியில் அவர்கள் துரத்தி விரட்டப்பட்டாலும், மீண்டும் அவர்களின் படைடுயடுப்பால் திருச்சிராப்பள்ளி நகரமே கவலையிலும் கலக்கத்திலும் ஆழ்ந்தது. அப்போது மதுரையை ஆண்ட மன்னர் சொக்கநாதர். இவர் திருமலை நாயக்கரின் பேரன்; இரண்டாம் முத்து வீரப்ப நாயக்கரின் மகன். 1659-ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் தமது 16-வது அகவையிலேயே அரியணை ஏறியவர்.

இந்நிலையில், மைசூர்ப் படைகளின் வருகையை அறிந்த கிறிஸ்தவர்களும் அச்சமுற்றனர். பழி பாதகங்களுக்கு அஞ்சாதவர்கள் கைகளில் சிக்குண்டு மாய்ந்து விடுவோமோ என்ற பயம் அவர்களைக் கவ்விக் கொண்டது. இந்நிலையில், கிறிஸ்தவர்களைக் காப்பாற்றி பாதுகாப்பான வேறு இடத்தில் குடியமர்த்த விழைந்தார் அந்தோனி ஃப்ரொவென்சா (Antony Proenca) எனும் போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த இயேசு சபைத் துறவி (Madurai Old Mission); இவர் ‘பரமானந்த சுவாமிகள்’ எனும் பண்டார புனைப்பெயரில் அறியப்பட்டார். 

விடுதலைப் பயணம்:

அடிகளார், அங்கிருந்த கிறிஸ்தவர்களை ஒன்று சேர்த்துப் பாதுகாப்பான இடம் தேடி, திருச்சிராப்பள்ளியிலிருந்து தென்மேற்கு திசையை நோக்கிப் பயணமானார். மதுரை மறைப்பணித்தளத்தின் அதிபராக இருந்த ஃப்ரொவென்சா பல ஆண்டுகள் திருச்சிராப்பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பணியாற்றியவர். இவர் திருச்சிராப்பள்ளியில் காந்தலூர், மலையடிப்பட்டி போன்ற மறைப்பணித்தளப் (விடத்திலாம்பூண்டி) பகுதிகளிலும் கிறிஸ்தவம் துளிர்விட்டுத் தழைக்க அரும்பாடுபட்டவர். 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற விருது வாக்குடன் வாழ்ந்தவர்.

விடத்திலாம்பூண்டி குடியேற்றம்:

மணப்பாறையை நெருங்கியவுடன் அதன் அருகே உள்ள விடத்திலாம்பூண்டி (இன்றைய விடத்திலாம்பட்டி) எனும் சிற்றூர் பாதுகாப்பானது என்பதை அறிந்த ஃப்ரொவென்சா அடிகளார், கிறிஸ்தவர்களை அவ்வூரில் குடியேற்றினார். விடத்திலாம்பூண்டி திருச்சிராப்பள்ளியிலிருந்து 20 கல்‌ தொலைவில்‌ உள்ளது. மரங்கள்‌ அடர்ந்து, குன்றுகள்‌ சூழ்ந்து இயற்கையிலேயே ஓர்‌ அரணாக அது விளங்கியது. மேலும்‌ அப்பகுதியில்‌ வாழ்ந்தோர்‌ பெரும்பாலானோர்‌ வறியவர்கள்‌. அதனால்‌ கொள்ளையடிக்கும்‌ நோக்கில்‌ அந்நியப்‌ படைகள்‌ அங்கு வருவதற்கும்‌ வாய்ப்‌பில்லை.

ஃப்ரொவென்சா அடிகளார்‌ தங்குவதற்காக ஒரு ஓலைக்‌ குடிசையை மக்கள்‌ அமைத்தனர்‌; இரு மாதங்கள் அக்குடிசையில்தான்‌ அவர்‌ தங்கினார்‌. ஏற்கெனவே மறைக்கல்வி கற்பிக்கப்பட்டு, தயாரிப்புச்‌ செய்யப்பட்டிருந்த 40 பேருக்கு அவர்‌ திருமுழுக்கு அளித்தார்‌. 

குமாரவாடி ஜமீன்தார்:

அதைத்‌ தொடர்ந்து குமாரவாடி ஜமீன்தாரின்‌ ஆதரவைப்‌ பெறுவதற்காக அவரைச்‌ சந்தித்தார்‌. இந்த ஜமீன்தார்‌ மதுரை நாயக்க மன்னரின்‌ ஆட்சிக்கு உட்பட்டவர்‌. ஒரு குறுநில மன்னராக அப்பகுதியை ஆட்சி செய்தார்‌. அவர்‌ அடிகளாரை மரியாதையோடு வரவேற்று அன்புடன்‌ உரையாடி, கிறிஸ்தவர்களுக்கு என்றும்‌ உறுதுணையாக இருப்பதாக உறுதி கூறினார்‌. அருகாமையிலுள்ள சிற்றூர்‌ மக்களுக்கும்‌ அவரை அறிமுகம்‌ செய்தார்‌. கிறிஸ்தவர்கள்‌ குடியேறுவதற்காகத்‌ தகுந்த இடத்தை அவரே தேர்ந்தெடுக்கும்‌ அதிகாரத்தையும்‌ தந்தார்‌.

முதல் ஆலயம்:

முற்றிலும்‌ எதிர்பாராத அளவுக்கு குமாரவாடி ஜமீன்தார்‌ அளித்த ஆதரவால்‌ மகிழ்வுற்ற கிறிஸ்தவர்கள்‌ தாங்கள்‌ வழிபடுவதற்காக ஒரு கோயிலையும்‌, அருள்பணியாளர்‌ தங்குவதற்கு ஓர்‌ இல்லமும்‌ கட்ட முயற்சிகள்‌ மேற்கொண்டனர்‌. கட்டுமானப்‌ பணிகள்‌ நடைபெற்றுக்‌ கொண்டிருக்கும்போது மேலைநாட்டுச்‌ சந்நியாசி போதிக்கும்‌ புதிய மறை தங்கள்‌ மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும்‌ என அச்சமுற்ற சில இந்துக்கள்‌, கிறிஸ்தவர்கள்‌ கோயில்‌ கட்டுவதைக்‌ கடுமையாக எதிர்த்தனர்‌; அதை நிறுத்துமாறு வற்புறுத்தினர்‌. எதிர்ப்பு அலைகள்‌ எழும்பிய சூழலில்‌ அந்தோனி ஃப்ரொவென்சா குமாரவாடி ஜமீன்தாரைச்‌ சந்தித்தார்‌. வற்புறுத்தலால்‌ அல்ல, உரையாடலால்‌ தான்‌ இப்பிரச்சினைக்குத்‌ தீர்வு காண்பது சிறந்தது என்பதை ஜமீன்தார்‌ தெளிவுபடுத்தினார்‌. அவரது அறிவுரையை ஏற்று அப்பகுதி இந்துக்களைச்‌ சந்தித்து அடிகளார்‌ உரையாடினார்‌; அவர்களின்‌ ஆதரவைப்‌ பெற்றார்‌. அதனால்‌ அமைதி ஏற்பட்டது. எத்தடையுமின்றிக்‌ கோயிலும்‌ கட்டி முடிக்கப்பட்டது. 

முதல் உயிர்ப்பு பெருவிழா:

1660-ஆம்‌ ஆண்டு உயிர்ப்புப்‌ பெருவிழா (28-03-1660) மிக ஆடம்பரமாகக்‌ கொண்டாடப்பட்டது. இது கிறிஸ்தவர்களின்‌ வாழ்வில்‌ ஒரு மறக்க முடியாத நாள்‌. கோயிலையும்‌ பீடத்தையும்‌ அலங்கரிப்பதற்காக பெரும்‌ எண்ணிக்கையில்‌ மலர்க்‌ கொத்துக்களை ஜமீன்தாரே அனுப்பி வைத்தார்‌. பாதுகாப்பிற்காக இரு அதிகாரிகளைச்‌ செல்லுமாறு பணித்தார்‌. மேலும்‌ அவரே பட்டாடை உடுத்தி குதிரைமீது அமர்ந்து தீப்பந்தம்‌ ஏந்தியோர்‌ புடைசூழ, கோயிலுக்கு விடியற்காலையிலேயே வந்தார்‌. வழிபாட்டு நிகழ்வுகள்‌ முடியும்‌ வரை பங்கேற்றார்‌. பீட அலங்காரத்தைக்‌ கண்டு வியந்தார்‌.

இந்நிலையில்‌ விடத்திலாம்பூண்டியிலும்‌ அதன்‌ சுற்றுப்புறங்களிலும்‌, மழை பொய்த்தமைக்குக்‌ கிறிஸ்தவர்கள் தான்‌ காரணம்‌ என்ற குற்றச்சாட்டை வைத்தனர்‌.

ஆலய எரிப்பு:

அந்தோனி ஃப்ரொவென்சா விடத்திலாம்பூண்டியிலும்‌ அதன்‌ சுற்றுப்புறங்களிலும்‌ தொடர்ந்து பணியாற்றினார்‌. இரு ஆண்டுகளுக்குப்‌ பிறகு அந்தக்‌ கோயிலுக்கு உட்பட்டு 400 கிறிஸ்தவர்கள்‌ இருந்தனர்‌. இவ்வளர்ச்சி நற்செய்திப்பணிக்கு மேலும்‌ உரமூட்டுவதாக அமைந்தது. ஜமீன்தாரும்‌ கிறிஸ்தவத்தைப்‌ பற்‌றி நன்கு அறிந்திருந்தார்‌; அதற்கு ஆதரவாகவே பேசினார்; கிறிஸ்தவர்களின்‌ கள்ளமற்ற பண்பை வெளிப்படையாகவே பாராட்டினர்‌. ஃப்ரொவென்சா ஓர்‌ இரவு முழுவதும்‌ அவரோடு விண்ணுலகைப்பற்றி உரையாடியதாகத்‌ தமது மடலில்‌ குறிப்பிட்டுள்ளார்‌. அவரது இறைவேண்டலால்‌ ஜமீன்தாரின்‌ அவையில்‌ இருந்த இரு பெண்கள்‌ பேயின்‌ பிடியிலிருந்து விடுதலை பெற்றனர்‌. அவர்‌ மந்திரித்துத்‌ தந்த சாம்பலை பூசியதால்‌ அவரது சகோதரியே குணமானார்‌. இருப்பினும்‌ அவருக்குப்‌ பல மனைவிகள்‌ இருந்ததாலும்‌ அவரது சாதியைச்‌ சேர்ந்தவர்களுக்கு அஞ்சியதாலும்‌ ஜமீன்தார்‌ திருமுழுக்குப்‌ பெறவில்லை. ஃப்ரொவென்சா விடத்திலாம்பூண்டியில்‌ இல்லாத போது இந்துக்கள்‌ சிலர்‌ கிறிஸ்தவர்களுக்கு எதிராகக்‌ குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததால்‌ கடும்‌ சினமுற்ற சில கயவர்கள்‌ கிறிஸ்தவ ஆலயத்துக்குத்‌ தீ வைத்துக்‌ கொளுத்தினர்‌. அது முற்றிலும்‌ எரிந்து சாம்பலானது.

ஊருக்குத்‌ திரும்பிய அடிகளார்‌ கோயில்‌ தீக்கிரையானதைக்‌ கண்டு வருந்தினார்‌. இருப்பினும்‌ அவர்‌ மனம்‌ தளராமல்‌ ஒரு புதிய கோயிலைக்‌ கட்ட முயற்சிகள்‌ செய்தார்‌. இந்நிலையில்‌ இந்துக்கள்‌ ஜமீன்தாரிடம்‌ சென்று, “நீங்கள்‌ எங்களை விடப்‌ புதிதாகக்‌ குடியேறிய கிறிஸ்தவர்களை அதிகம்‌ விரும்புகிறீர்கள்‌; அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறீர்கள்‌; ஆதலால்‌ நாங்கள்‌ வேறு இடத்துக்குச்‌ சென்று விடுகிறோம்‌,” என்று கூறினர்‌. இந்த இக்கட்டான சூழ்நிலையில்‌ ஜமீன்தார்‌ கிறிஸ்தவர்களை விடத்திலாம்பூண்டியின்‌ தென்மேற்கில்‌ நான்கு மைல்‌ தொலைவில்‌ உள்ள முள்ளிப்பாடியில்‌ குடியேறுமாறு கேட்டுக்கொண்டார்‌. 

மக்களும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டு முள்ளிப்பாடி நோக்கி தங்கள் காலடிகளை வைத்தனர். 

முள்ளிப்பாடி மறைப்பணிதளம் (1661-1708):

மக்கள், ஜமீன் தாரின் அறிவுரையை ஏற்றுக்கொண்டு, முள்ளிப்பாடியில் குடியேறினர். இதற்காக, 1661-இல் அங்கு ஒரு நிலையான சிற்றாலயமும், பங்குத்தந்தை இல்லமும் கட்டும் பணி தொடங்கியது. அதுமுதல் தொடர்ந்த அடுத்த 108 ஆண்டுகள் (1661-1708), இது முள்ளிப்பாடி மறைத்தளமாகவே அறியப்பட்டது.

புவியமைப்பு:

முள்ளிப்பாடி கிராமத்திற்கு நேர் மேலே, ஒரு பெரிய பாறை எந்த நேரத்திலும் உருண்டு குடியிருப்புப் பகுதியில் விழலாம் என்ற நிலையில் இருந்தது. இந்நிலையில் ஒரு மறைப்பணியாளர் ஒரு சிறு கல்லை மந்திரித்து, இப்பெரிய பாறை உருளாத வண்ணம் முட்டுக் கொடுத்ததாக செவி வழிச் செய்தியாக நம்பப்பட்டு வருகிறது. ‘பேய்ப் பாறை அல்லது சறுக்குப் பாறை’ என்றழைக்கப்படும் இதனை இப்பொழுதும் காணலாம். இதனை தாங்கியுள்ள இச்சிறு பாறை நகர்ந்தால், இந்த பெரிய பாறை மட்டுமின்றி, அதற்கு பின்பாக உள்ள அனைத்து கற்களும் உருண்டு வந்து கிராமத்தையே அழித்து விடும் என்ற கூற்று தற்போதும் தெளிவாகப் புலப்படுகிறது.

மறைப்பணி ஓய்வுத்தளம்:

இம்மமறைத்தளமானது, உட்புறமாக மலையடிவாரத்தில் இருந்ததால் இப்படி ஒரு குடியிருப்பு இருந்ததையே பலரும் வெளியுலகில் அறிந்திருக்கவில்லை. இதன் காரணமாக, பிற மறைப்பணியாளர்களின் பாதுகாப்பிடமாகவும் இது திகழ்ந்திருக்கின்றது. அதாவது, பிற மறைத்தளங்களின் பணியாற்றிவந்த குருக்கள், தங்கள் பகுதிகளில் பிரச்சனைகள் மற்றும் பிற சமய எதிர்ப்புகள் ஏற்படும் போதெல்லாம்,  அவர்கள் முள்ளிப்பாடிக்கு வந்து சிறிது காலம் பாதுகாப்பாக இருந்ததாக, வரலாற்று ஏடுகளின் பல பகுதிகளிலும் காண முடியும். இங்ஙனம், இப்பாதுகாப்பான மறைத்தளமானது, அக்கால மறைப்பணியாளர்களின் ஓய்விடமாகவும் (Guest House) திகழ்ந்ததை அறிய முடிகிறது.

இக்கூற்றின் அடிப்படையில், புனித அருளானந்தர், வீரமாமுனிவர், ராபர்ட் டி நொபிலி, பண்டாரசுவாமிகள், சஞ்சீவி நாதர் போன்ற அனைத்து மறைப்பணியாளர்களுமே இங்கு ஒருமுறையாவது இம்மண்ணில் நிச்சயமாக காலடி வைத்திருக்கக் கூடும். ஆனால் இதற்கான குறிப்பிடத்தகுந்த வரலாற்று ஆதாரங்கள் இல்லை. 

இந்நிலையில், இம்மறைப்‌பணித்தளத்தைத்‌ தோற்றுவித்த அந்தோனி ஃப்ரொவென்சா 1666-ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ 11-ஆம்‌ நாள்‌ தொட்டியத்தில்‌ இறந்தார்‌. 

முதல் சிற்றாலயம் (1662):

கிறிஸ்தவர்கள் முள்ளிப்பாடியில், முதன் முதலாக குடியேறிய போது, 1661-ஆம்‌ ஆண்டு முள்ளிப்பாடியில் தொடங்கப்பட்ட சிற்றாலயக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்திருந்தது; அப்போதைய பங்கு குரு அருட்பணி. இம்மானுவேல் ரோட்ரிகசு (Emmanuel Rodriguez) அவர்களால் 1662-இல் இச்சிற்றாலயம் அன்னை மரியாளுக்கு அர்ப்பணிக்கப் பட்டது. மேலும், மலை உச்சியில் ஒரு மரச்சிலுவையும் நடப்பட்டது; (இன்று வரை இச்சிலுவை அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது).

இம்மானுவேல்‌ ரொட்ரிகசு (Emmanuel Rodriguez):

1662 முதல்‌ 1674 வரை இம்மானுவேல்‌ ரொட்ரிகசு (Emmanuel Rodriguez) இப்பணித்தளத்தின்‌ பொறுப்பாளராகப்‌ பணியாற்றினார்‌. அடிகளாரின் கடின உழைப்பாலும்‌, நற்செய்திப்பணியில்‌ காட்டிய தீராத ஆர்வத்தாலும்‌ கிறிஸ்தவர்களின்‌ எண்ணிக்கை நாளுக்கு நாள்‌ பெருகியது. பின்னர்‌ அவர்‌ மதுரை மறைப்‌ பணித்தளத்தின்‌ பார்வையாளராக நியமிக்கப்பட்டதால்‌ மற்ற மறைப்பணித்தளங்களைச்‌ சந்திப்பதற்காக நெடுந்தூரம்‌ பயணம்‌ மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதனால்‌ முள்ளிப்பாடியில்‌ பல மாதங்கள்‌ அவரால்‌ பணியாற்ற இயலவில்லை. திருமுழுக்குப்‌ பெறுவோரின்‌ எண்ணிக்கையும்‌ கணிசமாகக்‌ குறைந்தது.

1674-ஆம்‌ ஆண்டு ரொட்ரிகோ தாப்ரேயு (Rodrigo d’Abreu) ஓர்‌ ஆண்டுக்காலம்‌ இப்பணித்தளத்தில்‌ பணியாற்றினார்‌.

கிளாடு தாமே (Claude Damey) என்ற புர்கிண்டியைச் சார்ந்த பிரான்ஸ்‌ நாட்டு மறைப்பணியாளர்‌, 1675 ஆம் ஆண்டில் இங்கு பணிபுரிந்தார்.

கிளாடு தாமே அடிகளாருக்குப் பின், ரொட்ரிகோ தாப்ரேயு (Rodrigo d’Abreu) முள்ளிப்பாடியில்‌ மீண்டுமாக பொறுப்பேற்று, 1678 முதல்‌ 1688 வரை பத்தாண்டுகள் பணியாற்றினார்‌. இவரது மறைப்பணித்தளம்‌ பரந்து விரிந்தது. மதுரை, மறவ நாடு, உத்தமபாளையம்‌, கயத்தாறு போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. 1681-இல்‌ இந்த மறைப்பணித்தளத்தில்‌ 80,000 கிறிஸ்தவர்கள்‌ இருந்தனர்‌. 

இத்தகு பெரிய பகுதியைச்‌ சந்திப்பதும்‌, கிறிஸ்தவர்களின்‌ ஆன்மீகத்‌ தேவைகளை நிறைவேற்றுவதும்‌, அவர்களைக்‌ கிறிஸ்தவ நம்பிக்கையில்‌ வளர்த்தெடுப்பதும்‌ இமாலயப்‌ பணியாகவே விளங்கியது. இதைப்பற்றிக்‌ குறிப்பிடும்போது, “போதுமான பணியாளர்கள்‌ இல்லாததால்‌ கிறிஸ்தவர்கள்‌ இறைநம்பிக்கையில்‌ இன்னும்‌ மந்த நிலையிலேயே இருக்கின்றனர்‌. அவர்கள்‌ பிற சமயத்தாரைப்‌ போல்‌ வாழ்கின்றனர்‌. மற்ற இடங்களை விட இந்நிலை முள்ளிப்பாடியில்‌ இன்னும்‌ வெளிப்படையாகவே உள்ளது. 

“ஒரு மறைப்‌ பணியாளரும்‌, ஒரு வேதியரும்‌ இங்கே நிரந்தரமாகத்‌ தங்கிப்‌ பணியாற்ற வேண்டும்‌. இதைத்‌ தவிர வேறு வழியில்லை... இந்த மக்கள்‌ தங்களது சாதியைப்‌ பற்றிய தற்பெருமையாலும்‌, இறுகிய மனநிலையாலும்‌ கிறிஸ்தவ நெறிமுறைகளுக்கு எதிராகச்‌ செயல்படுகின்றனர்‌,” என்று கூறியுள்ளார்‌.

பிற்கால வளர்ச்சி (1661-1688):

1681 முதல்‌ 1688 வரை உள்ள ஆண்டுகளில் மறைப்பணியாளர்களின் கடின உழைப்புக்கும்‌, அவர்கள் அனுபவித்த இன்னல்களுக்கும் நல்ல பலன்‌ கிடைத்தது. 1682-இல் 265 பேரும், 1683-இல் 1136 பேரும் திருமுழுக்குப் பெற்றனர். ஏறத்தாழ 500 பேர்‌ உத்தமபாளையத்தில் (திண்டுக்கல்) திருமுழுக்குப் பெறத்‌ தயார்‌ நிலையில்‌ இருந்தனர்‌. ஆனால் ராட்ரிகோ தாப்ரேயுவால்‌ அங்கு செல்ல முடியவில்லை. கடுமையான‌ காய்ச்சலால்‌ பாதிக்கப்பட்டு முள்ளிப்பாடியிலேயே இருந்தார்‌. உடல்நலம்‌ பெற்ற பின்‌ தமது பணியை மீண்டும்‌ அவர் தொடர்ந்தார்‌. 

மறைப்பணியாளர்கள்‌ இல்லாத காரணத்தால் தொலைதூரங்களில்‌ உள்ள ஊர்களில்‌ இருந்து கிறிஸ்தவர்கள் அருள்பணித்‌ தேவைகளுக்காக முள்ளிப்பாடிக்கு வந்தனர். மறவ நாட்டுக்‌ கிறிஸ்தவர்களும்‌ இங்கு வருகை தந்தனர். மறவ நாட்டில் 4,000க்கும்‌ மேற்பட்ட கிறிஸ்தவர்கள்‌ இருந்தும் அவர்களுக்காக பணியாற்ற அருள்பணியாளர்கள் யாருமிலர். அங்கு மறைப்பணி தடை செய்யப்பட்டதால் எப்பணியாளரும் அங்கு செல்ல முடியாத சூழல் நிலவியது.

முள்ளிப்பாடியில்‌ பேய்‌ பிடித்த, நோயுற்ற சில இந்துக்கள் குணமடைந்தனர். இவர்கள்‌ திருமுழுக்குப்‌ பெற்றுக்‌ கிறிஸ்தவ மறையில்‌ சேர ஆவல்‌ கொண்டனர்‌. இச்செய்தி சுற்றுப்புறங்களில்‌ எந்த அளவுக்குப்‌ பரவியது என்றால்‌, பேயின்‌ பிடியிலிருந்து விடுபெற வேண்டுமாயின்‌ திருமுழுக்குப்‌ பெற்றால்‌ போதும்‌ என்று மக்கள்‌ பலர்‌ எண்ணினர்‌. 

மறுவிடுதலைப் பயணம் (1688-1708):

இந்நிலையில்‌ 1688-ஆம்‌ ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இருந்த ஜமீன்தார், மதுரை நாயக்க மன்னரைக்‌ காண்பதற்காகச்‌ சென்றார்‌. அவர்‌ கைது செய்யப்பட்டுச்‌ சிறையில்‌ அடைக்கப்பட்டார்‌. அவரது உடைமைகள்‌ பறிக்கப்பட்டன. மனைவியர்‌ துன்புறுத்தப்பட்டனர்‌. ஜமீன்தாரும்‌ சிறையிலேயே இறந்தார்‌. அவருக்கு நேர்ந்த இந்தப்‌ பரிதாப முடிவைக்‌ கேள்வியுற்றுக்‌ கிறிஸ்தவர்கள்‌ மிகவும்‌ வருந்தினர்‌. நாயக்கரின்‌ படைகள்‌ விரைந்து வருவதையும்‌ கேள்வியுற்றனா்‌. 

அச்சமுற்ற முள்ளிப்பாடி இறைமக்கள், ஊரைக் காலி செய்து, பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தனர். அச்சூழ்நிலையில், ரொட்ரிகோ தாப்ரேயுவுக்குப்‌ பின்‌ அந்தோனி ஃப்ரோவேன்சா அடிகளார் மறைத்தளத்தின் பணியாளராக மீண்டும் பொருப்பேற்றிருந்தார். 

விடுதலைப்பயணம்

அப்போது இரவு வேளை; திருக்காட்சி விழாவுக்கு முந்தின நாள்‌ (05-01-1688). தங்களின் குரல் அறிந்த ஒரே ஆயனாம், அந்தோனி ஃப்ரோவேன்சாவின்‌ தலைமையில்‌ எல்லாக்‌ கிறிஸ்தவர்களும்‌ ஊரை விட்டுப்‌ புறப்பட்டுக்‌ கல்லும்‌ முள்ளும்‌ புதர்களும்‌ நிறைந்த பாலைநிலம்‌ வழியே பயணம்‌ செய்தனர்‌. மோசேயின்‌ தலைமையில்‌ இஸ்ரயேலர்‌ பாலை நிலத்தில்‌ பயணம்‌ செய்தது போல, மூன்று ஞானிகள்‌ நெடும்‌ பயணம்‌ மேற்கொண்டது போல முள்ளிப்பாடிக்‌ கிறிஸ்தவர்களும்‌ சென்றனர்‌.

மறைவிடத் தஞ்சம் 

புயலுக்குப்‌ பின்‌ அமைதி என்பது போலச்‌ சொந்த ஊரில்‌ அமைதி தெளிவாகத்‌ தெரியவில்லை. அடுத்த இருபது ஆண்டுகள்‌ இப்பணித்தளத்தைப்‌ பற்றிய வரலாற்றுத்‌ தரவுகள்‌ ஏதும்‌ கிடைக்கவில்லை. இதனால், இவர்கள் எங்கே பயணம் மேற்கொண்டார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது. கணிப்பின் படி, இந்த 20 ஆண்டுகளும் எதோ ஒரு இடத்தில் இவர்கள் தஞ்சமடைந்து, மறைந்து வாழ்ந்திருக்க வேண்டும்.

மலையடிப்பட்டியின் மோயீசன்

இந்நிகழ்வில் ஒரு ஆச்சரியமான வரலாற்று ஒற்றுமை புலப்படுகிறது. தொடக்கத்தில் 1662-இல் மக்கள் திருச்சியிலிருந்து இப்பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்த போது அவர்களை வழிநடத்தி கொணர்ந்தவர் தந்தை அந்தோணி ஃப்ரொவென்சா; கால் நூற்றாண்டிற்குப் பின்னர் மீண்டும் புலம் பெயர்ந்த போதும், இதே தந்தை தான் மக்களை வழிநடத்துகிறார். இவ்வாறு இம்மறைத்தளத்தில் நிகழ்ந்த இரு விடுதலைப்பயணத்திலும், பழைய ஏற்பாட்டு மோசே போல, இஸ்ரேயல் இனம் போன்ற இம்மக்களை, ஆண்டவரின் சொல்படி பாதுகாப்பாக வழிநடத்திச் சென்று காப்பாற்றிய இத்தந்தந்தைக்கு, ‘மலையடிப்பட்டியின் மோயீசன்’ எனும் புனைப்பட்டம் வழங்குதல் தகும்.

இந்த இருபது ஆண்டுகால வரலாற்றைப் பொருத்தவரை, கிடைத்த சில வரலாற்றுக் குறிப்புகளின் படி, 1689 முதல் சிலவருடங்கள் வரை, Fr. கார்வால்ஹோ (Carvalho) அடிகளார், தெற்கில் கயத்தாறு முதல் வடக்கில் மலையடிப்பட்டி வரையிலான மிகப் பரந்து விரிந்த மறைத்தளப்பகுதியின் பொருப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இக்காலகட்டத்தின் போது, 1691-ஆம் ஆண்டு புனித அருளானந்தர் மலையடிப்பட்டிக்கு பங்கு விசாரணைக்காக (As a delegate of Provincial) வருகை புரிந்த நிகழ்வு வரலாற்று பதிவுகளில் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.

மலையடிப்பட்டி:

1708-ஆம் ஆண்டில்‌ எழுதப்பட்ட இயேசு சபைத்‌ துறவியரின்‌ மடல்கள்‌ முள்ளிப்பாடி மறைத்தளத்தின் புதிய பெயரான ‘மலையடிப்பட்டி’ பணித்தளத்தைப்‌ பற்றிக்‌ கூறுகின்றன. இதுவே முதல் முதலாக ‘மலையடிப்பட்டி’ என்னும் பெயர் வரலாற்று ஏடுகளில் பதியப்பட்ட காலம். 

முந்தைய வரலாற்றில் குறிப்பிட்டது போல, முள்ளிப்பாடியில்‌ வாழ்ந்த கிறிஸ்தவர்கள்‌, சிலகாலம் மறைவிடங்களில் வாழ்ந்து (20 Years - No Records Found), பின்னர் 1700-களிலிருந்து புலம்‌ பெயர்ந்து, முள்ளிப்பாடிக்கு தெங்கிழக்கே, 300 மீட்டருக்கு அப்பாலுள்ள தற்போது கிராமம் அமைந்துள்ள பகுதிகளில் குடியேறியிருக்க வேண்டும்‌. மலைக்கற்கள் புரண்டு வீடுகள்‌ மீது விழும்‌ அபாயத்தாலும்‌, உடல்‌ நலச்சீர்கேடுகளை முன்னிட்டும்‌ இந்த மாற்றம்‌ நிகழ்ந்திருக்க வேண்டும். பின்னாட்களில், இக்கிராமம் ‘மலையடிப்பட்டி’ என்ற பெயர் பெற்றது.

இம்மானுவேல்‌ தோஸ்‌ ரேஸ் (Emmanuel does Reys):

1708 முதல்‌ 1712 வரை இம்மானுவேல்‌ தோஸ்‌ ரேஸ் (Emmanuel does Reys) அடிகளார், இப்ப்பணித்தளத்தைக்‌ கண்காணித்தார்‌. இங்கிருந்து அவர் திண்டுக்கல் சென்று அப்பகுதியில்‌ வாழ்ந்த கிறிஸ்தவர்களைச் சந்தித்து அருள் பணி தேவைகளை நிறைவேற்றினார்.

தமிழ் கத்தோலிக்க வரலாற்றில் ‘திண்டுக்கல்’ எனும் பெயர் இவரைக் குறித்த ஆவணமாகிய ‘The Annual Letter of Madura Mission’, 1711 எனும் கடிதத்தில் முதல் முறையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் - மலையடிப்பட்டியின் கீழ் இயங்கி வந்த அக்காலகட்டத்தில், நல்லமநாயக்கன்பட்டியில் ஒரு ஆலயம் தந்தை அவர்களால் கட்டப்பட்டது; மேலும் திண்டுக்கலிலுள்ள தற்போதைய உத்தமபாளையம் பங்கு, 1774 வரை மலையடிப்பட்டி மறைத்தளத்தின் கீழ் செயல்பட்டு வந்ததாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

அவரது அரும் முயற்சியால் 1709-இல் 236 பேரும், 1712-இல் 200 பேரும், 1713-இல் 120 பேரும் மனம் திரும்பினர். உடல் நோயால் நலிவுற்றுத் தொடர்ந்து வருந்திய இப்பணியாளர் 1713-ஆம் ஆண்டு முத்துக்குளித்துறைக்கு அனுப்பப்பட்டார். இவர் மட்டுமல்லாது இவருக்கு உதவியாளர்களாகப் பணியாற்றிய அருள்தந்தை. இம்மானுவேல் பெர்ராஸ், அருள்தந்தை. அகஸ்டின் கப்பெல்லி ஆகியோரும் நோய் பீடிக்கப்பட்டு வாடினர். கோடையில் கடுமையான வெயில், குளிர் காலத்தில் வீசும் பனிக்காற்று, சுகாதாரமற்ற தண்ணீர் போன்றவை அவர்களைப் பாதித்திருக்க வேண்டும்.

கர்த்தநாதன் (1713-1714):

1714-ஆம்‌ ஆண்டு மலையடிப்பட்டியில்‌ பணியாற்றியவர்‌ அந்தோணி டயஸ்‌ (Antony Dias). இவர்‌ தமிழில்‌ ‘கர்த்தநாதன்‌’ என அழைக்கப்‌ பட்டார்‌. ஏற்கெனவே இருந்த கோயில்‌ தாழ்வான பகுதியில்‌ சதுப்பு நிலத்தில்‌ இருந்ததால்‌ ஒரு புதிய ஆலயத்தைப்‌ பாளையக்காரர்‌ முத்துநாயக்கர்‌ தாராள உள்ளத்தோடு அளித்த நிதியுதவியோடு கட்டியெழுப்பினார்‌. இதைப்‌ பனிமய மாதாவுக்கு அர்ப்பணித்தார்‌. 

அந்தோனி ரிக்கார்டி (Antony Riccardi) 1714 முதல்‌ 1726 வரை மலையடிப்பட்டியில்‌ அருள்பணியாற்றியவர்‌. இந்துக்களின்‌ பலத்த எதிர்ப்பையும்‌ மீறிச்‌ சிற்றூர்களில்‌ ஆலயங்கள்‌ பல கட்டினார்‌. மணப்பாறைக்கு வடக்கே உடையாபட்டியில்‌ ஆலயம்‌ அப்போது கட்டப்பட்டது. 1718-இல்‌ பூலாம்பட்டி மற்றும் பூலாம்பட்டியில் வீரப்பூர்‌ ஜமீன்தார் மற்றும் சில கிறிஸ்தவர்கள்  உதவியுடன் சிற்றாலயங்கள் எழுப்பப்பட்டன.

தந்தையவர்கள் முயற்சியால், 1718-இல் பழனியில் ஒரு ஆலயம் கட்டப்பட்டது - இவ்வாலயம் மட்டுமே சில காலங்கள் வரை அழிவுறாமல் பாதுகாக்கப்பட்டது. இக்காலகட்டத்தில், மலையடிப்பட்டி மறைத்தலமானது பழனி வரை பரந்து விரிந்திருந்தது இதன் மூலம் புலப்படுகிறது (1740-இல் பழனியில் 100 பெரியவர்களுக்கும் & 400 சிறுவர்களுக்கும் Fr. ஜான் பாப்டிஸ்ட் புட்டாரி (John Baptist Bhuttari) அடிகளார் திருமுழுக்கு வழங்கியதாக வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

இக்காலத்தில்‌ கிறிஸ்தவர்களும் மறைப்பணியாளர்களும் எண்ணற்ற துன்பங்களையும்‌ கொடுமைகளையும் சந்திக்க நேரிட்டது. கிறிஸ்தவர்கள்‌ அரும்பாடுபட்டுக்‌ களிமண்ணால்‌ ஆலயங்கள்‌ எழுப்பி அவற்றைக்‌ கூரையால்‌ வேய்ந்தனர்‌. அவற்றைப்‌ பிற சமயச்‌ சகோதரார்கள்‌ சிலர் காழ்ப்புணர்ச்சியின்‌ காரணமாகத்‌ தீவைத்து எரித்தனர்‌. 

மறைப்பணியாளர்களும்‌ பயணம்‌ செய்யும் போது பல்வேறு தாக்குதல்களுக்கு இரையாயினர்‌: 1718 இல் அந்தோனி ரிக்கார்டியும்‌, அவரது வேதியர்களும்‌ சித்திரவதை செய்யப்பட்டு சிறையில்‌ அடைக்கப்பட்டனர்‌. இரு சமயங்களில்‌ அடிகளார் இறப்பின்‌ எல்லைக்கே சென்று விட்டார்‌. இருமுறையும் நோயில்பூசுதல்‌ அருளடையாளத்தைப்‌ பெற்றார்.

ஜோசப் வியேரா:

1726-இல்‌ மலையடிப்பட்டிஃயில்‌ பணியாற்றிய ஜோசப்‌ வியேரா (Joseph Vieyra) ஜமீன்தாரார்களின்‌ ஆதரவைப்‌ பெற்றார்‌. கடவூர்‌ ஜமீன்தார்‌ முட்டிநாயக்கன்‌ ஓர்‌ ஆலயம்‌ கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார். மருங்காபுரி ஜமீன்தார்‌ ரூச்சிநாயக்கன்‌ (Ruccinayaken), தனது நிலத்தில்‌ ஆலயம்‌ கட்டுவதற்காக அடிக்கல்‌ நாட்ட விரும்பியும்‌ போர்‌ நடைபெற்றதால்‌ அது நடைபெறவில்லை. வீரப்பூர்‌ ஜமீன்தார்‌ கம்பைநாயக்கன்‌ அல்லது அவரது முதன்மை அமைச்சர்‌ தனது பகுதியில்‌ இருந்த ஆலயத்தைத்‌ தீ வைத்துக்‌ கொளுத்தவும்‌, கிறிஸ்தவர்களைத்‌ துன்புறுத்தவும்‌, திருமுழுக்குப்‌ பெறத்‌ தயாரிப்புச்‌ செய்தோரின் காதுகளை அறுக்கவும்‌ விழைந்தார்‌.

முதன்மை அமைச்சர்‌, ஜோசப்‌ வியேரா அடிகளாரைச்‌ சந்தித்தபோது அவரது எளிமையையும்‌ நல்லுள்ளத்தையும்‌ புரிந்துகொண்டு தனது நிலைப்பாட்டை மாற்றிக்‌ கொண்டதோடு அவரிடம்‌ மன்னிப்புக்‌ கோரினார்‌. கிறிஸ்தவர்களை இனியும்‌ துன்புறுத்த மாட்டோம்‌ என்று உறுதியளித்தார்‌. 

1729-இல்‌ கிறிஸ்தவர்கள்‌ அம்மை நோயால்‌ பெரிதும்‌ பாதிக்கப்பட்டனர். அன்னை மரியாவிடம்‌ உருக்கமாக வேண்டினர்‌. அவர்களது வேண்டுதல்‌ கேட்கப்பட்டது. நோயினின்று சுகம்‌ பெற்றனர்‌. 

பின் குறிப்பு : 1730-1773 வரை மலையடிப்பட்டியும், மதுரையும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே மறைபணியாளரின் கண்காணிப்பில் இயங்கி வந்தது. இச்சூழ்நிலையில், 1730-இல்‌ பிரான்சிஸ்‌ ஹோமெமும்‌ (Francis Homem - ஆவூர் ஆலயம் கட்டியவர்), 1731-ல்‌ ஜான்‌ அலெக்சாண்டரும்‌ (John Alexander) பணியாற்றினர்‌. 

சால்வதோர்‌ தோஸ்‌ ரேஸ்‌ (Salvator dos Reys):

1732 முதல்‌ 1746 வரை இம் மறைப்பணித்தளத்தில்‌ உழைத்தவர்‌ சால்வதோர்‌ தோஸ்‌ ரேஸ்‌ (Salvator dos Reys). இவரது காலத்தில்‌ கிறிஸ்தவர்களின்‌ எண்ணிக்கை பெருகியது. 426 பேர்‌ திருமுழுக்குப்‌ பெற்றனர்‌.

வேதகலாபனை (1745-1750):

ஏறத்தாழ 1745-இல்‌ கடவூருக்குப்‌ புதிதாக ஒரு ஜமீன்தார்‌ பெறுப்பேற்றார்‌. அவா்‌ கிறிஸ்தவர்கள்‌ மீது பரிவு காட்டவில்லை. அதனால்‌ அவர்கள்‌ இன்னல்கள்‌ அனுபவிக்கும்‌ நிலைக்குத்‌ தள்ளப்பட்டனர்‌.

மராத்திய படையெடுப்பு (1745-1750)

1745-ஆம்‌ ஆண்டு மராட்டியப்‌ படைகள்‌ (ஹைதர் அலி) இப்பகுதி வழியாகச்‌ சென்றன. இதனால்‌ அச்சமுற்ற கிறிஸ்தவர்கள்‌ ஊரைவிட்டு வெளியேறிக்‌ காடுகளில்‌ தஞ்சம்‌ புகுந்தனர்‌. இதனால்‌ கோபமுற்ற படைவீரர்கள்‌ வீடுகளுக்குள்‌ நுழைந்து பொருட்களைச்‌ சூறையாடிவிட்டு, அவற்றை இடித்து விட்டுச்‌ சென்றுவிட்டனர்‌. 

ஜேம்ஸ்‌ ஹார்ட்மேன்‌ (1750 ~)

1750-ஆம்‌ ஆண்டு ஜேம்ஸ்‌ ஹார்ட்மேன்‌ (James Hartman) மறைப்பணித்தளத்தின்‌ பொறுப்பாளராக இருந்தபோது, கடவூரில்‌ மீண்டும்‌ சமயத்‌ துன்புறுத்தல்‌ நடைபெற்றது. 

தென்னிந்திய பெரும்பஞ்சம் 

(1765-1858)

இதற்கு பின்பாக கிடைத்த வரலாற்று சான்றுகள் அனைத்தும், ஜமீன்தார்களுக்கு இடையே நிகழ்ந்த சண்டைகளையும், 1765-1858 வரை, இந்தியா முழுமையும் பரவிய பஞ்சத்தை பற்றி மட்டுமே கூறுகின்றன. தொடர்ச்சியாக 12 பஞ்சங்களை இந்தியா எதிர்கொண்டது. பருவ மழைகள் பொய்த்ததால், மக்கள் உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டது.

இச்சூழ்நிலையில், மக்களின் அல்லல் தீர்க்கும் பணிகள் குறித்த முன்னெடுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், மறைபரப்பு பணிகள் குறித்த எந்த ஆவணங்களும் தெளிவாக ஆவணப்படுத்தப்படவில்லை; கிடைக்கவில்லை. இந்த பஞ்சத்தின் போது, உணவுப் பொருட்கள்

வெளிநாடுகளிலிருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டு, அப்போதைய மறைபணியாளர்களால் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டதாக அறிகிறோம்; மக்களின் ஆழ்துயர் வேளையிலும், இம்மறைபணியாளர்கள் அவர்களின் கண்ணீர் துடைக்க மேற்கொண்ட அளப்பரிய பணிகளை எண்ணும் போது உள்ளம் உணர்ச்சியால் பொங்குகிறது.

இயேசு சபைக்கு தடை:

உலகெங்கும் சிறப்பாக மறைபரப்புப் பணிகளை செய்து வந்த இயேசு சபையானது, ஒரு சில காரணங்களால் பாப்பரசர் பதிநான்காம் கிளமென்ட் அவர்களின் ஆணையின் பேரில் ஜூலை 21-07-1773 முதல் உலகெங்கும் தடை செய்யப் பட்டு, 14-08-1814 வரை, 41 வருடங்கள் இருண்ட காலமாக நீடித்தது.

இந்தத் தடை ஏற்பட்ட காலத்தில், சற்றேறக்குறைய 65 ஆண்டுகள் மதுரை மறைமாநில மறைத்தளங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மலையடிப்பட்டியில் பணிபுரிந்து கொண்டிருந்த இயேசு சபைக் குருக்களும் தங்கள் சொந்த நாடுகளுக்கே திரும்பினர். இயேசு சபையினர் இல்லாத காலகட்டத்தில், கோவா மறைமாவட்டத்திலிருந்து வேறு சபை மறைப்பணியாளர்கள் பணி செய்துள்ளனர். இவர்களால் சிறப்பாக பணி புரிய இயலவில்லை. இவர்கள் மலையடிப்பட்டியில், தூய பனிமய மாதா ஆலயத்தை தங்களது ஆளுகைக்குக் கீழ் கொணர்ந்து, முழு அதிகாரத்தையும் உரிமையாக்கிக் கொண்டனர். இவ்வாறு ஆதிக்கம் செலுத்தியதற்குக் காரணம் “பதுரவாதோ” எனும் சிறப்பு உரிமையாகும். அதாவது போர்த்துக்கீசியர்கள் கண்டுபிடித்த எல்லா நாடுகளிலும், இனி கண்டு பிடிக்கும் நாடுகளிலும் கிறிஸ்தவ மறையை உருவாக்குவதற்கும், அதற்கு தேவையான மறைப்பணியாளர்களை அனுப்புவதற்கும் உரிய அதிகாரம் போர்த்துக்கீசிய மன்னருக்குத் தரப்பட்டது. மேலும் புதிய மறைமாவட்டங்களுக்கு நியமிக்கவும் மன்னருக்கு உரிமை வழங்கப்பட்டது. இவர்களின் இவ்வகையான உரிமைகளுக்கு பாப்பரசரின் அனுமதி தேவையில்லை. இத்தகைய மறைபரப்புப் பணி மற்றும் அருள்பணி சார்ந்த உரிமையும், அதிகாரமும் ‘பதுரவாதோ’ என்று எனப்பட்டது. இத்தகு உரிமைகள் 1514-ஆம் ஆண்டில் திருத்தந்தை 6-ஆம் அலெக்ஸாண்டர் போர்த்துக்கீசியருக்கு வழங்கினார்.

பனிமய மாதா பங்கு:

இதே சூழ்நிலைதான் மலையடிப்பட்டி மறைத்தளத்திலும் நடந்தேறியது. தூய பனிமய அன்னை பங்கின் அதிகாரத்தை, கோவாவிலிருந்து வந்த பதுரவாதோ மறைமாவட்ட குருக்கள் (இயேசு சபை சாராதவர்கள்) அதிகார வலிமையுடன் தங்கள் வசம் எடுத்துக் கொண்டனர். இக்கோவா குருக்களின் பணி அவ்வளவு சிறப்பானதாக இல்லை. மக்கள் மத்தியிலும் இவர்கள் குறித்த ஆதங்கமே நிலவி வந்தது. எப்போது விடிவு காலம் பிறக்குமோ என்று ஏங்கி, இறைவனிடம் மன்றாடிக் கொண்டிருந்தனர். இந்த பத்ரவாதோ கோவா குருக்கள் சென்னை மைலாப்பூரைத் தலைமையாகக் (Diocese) கொண்டு, திருச்சியை மையமாகக் (Province) கொண்டு பணிபுரிந்தனர். 

Fr. சின்னப்பன்

இந்த இடைப்பட்ட இருண்ட காலத்தில், மலையடிப்பட்டி மறைத்தளத்தில் பணியாற்றிய குருக்கள் குறித்த தெளிவான வரலாறு இல்லை; எனினும் Fr. சின்னப்பன் எனும் குருவானவர் இங்கு பணியாற்றியிருக்கிறார். மேலும், இவர் இறுதி வரை எந்த விதமான சமாதான உடன்பாடிற்கும் ஒத்துழைக்கவில்லை. மலையடிப்பட்டியில் இறந்த இவரை வீரமாமுனிவர் கல்லறை எனும் பெயர்கொண்ட கல்லறையின் வெளிப்புறமாக அடக்கம் செய்தனர். 

Fr. ஜோவன்னஸ் ஃபோர்டு (1849-1892)

இவருக்குப்பின், Fr. ஜோவன்னஸ் ஃபோர்டு (John Ford) எனும் அயர்லாந்து மறைப்பணியாளர் இங்கு பணியாற்றியிருகிறார். 

அருட்சகோதரராக இருந்த அவர் மலையடிப்பட்டி பனிமய அன்னை ஆலயத்தில் இறைப்பணி செய்து கொண்டே குருவானவருக்கான பயிற்சியும் பெற்று வந்தார். 1858-இல் நாகப்பட்டினத்தில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு, மீண்டும் மலையடிப்பட்டி பனிமய அன்னை பத்ரவாதோ பங்கின் பங்குத்தந்தையாக செயல்பட்டார். இந்நிலையில், 04-04-1864 அன்று தனது இறுதி வார்த்தைப்பாட்டினை அளித்தார். சரியாக 43 ஆண்டுகள் பணியாற்றிய பின்பு 04-04-1892 அன்று உயிர் துறந்தார். 

(சவேரியார் பங்கின் முன்னோடியான Fr. பெனடிக்ட் புர்தி அவர்களும் 43 ஆண்டுகள் இதே காலகட்டத்தில் தான் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது - இதே காலகட்டத்தில் தான் புதிய சவேரியார் ஆலயமும் கட்டப்பட்டது). இவரது உடல் வீரமாமுனிவர் கல்லறைக்கு வெளிப்புறமாக நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர், 21-ஆம் நூற்றாண்டில் இவரது கல்லறை சிலுவை மட்டும் கல்லறைக்கு உட்புறமாக மாற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவரின் இறப்பிற்குப் பிறகு, 1893-இல் ஒரு சில உடன்படிக்கைகள் மூலமாக மலைத்தாதம்பட்டியும் சவேரியார் பங்கின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இவருக்குப்பின் 1893-1922 வரை பணியாற்றிய மறைப்பணியாளர்கள் குறித்த பதிவுகள் கிடைக்கவில்லை. 1922-லிருந்து சில குருக்கள் திருப்பணிகளுக்காக தற்காலிகப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் இப்பங்கில் தங்கி பணியாற்றவில்லை. மாறாக அவ்வப்போது திருச்சியிலிருந்து இங்கு வந்து ஆன்மீக தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தனர். இதன்படி, 1922-1927 - வரை Fr. J.N.S.மெஸ்குவிட்டா; 1928-1929 - வரை Fr. M. மோத்தா வாஸ்; 1929-1932 - வரை Fr. Q. ரோட்ரிகஸ் ஆகியோர் இத்தகு தற்காலிக பணியாளர்களாக வந்து சென்றனர். இக்காலகட்டத்தில் இப்பங்கின் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக இருந்தது.

புதிய மதுரை மறைபரப்பு 

(1838-1938):

இது ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்க, நாற்பது ஆண்டுகளுக்கு நீடித்த இயேசுசபைத்தடையானது, ஆகஸ்டு 7, 1814, பாப்பரசர் ஏழாம் பத்திநாதரால் விலக்கிக்கொள்ளப் பட்டு, இயேசு சபை மீண்டும் செயல்படத் தொடங்கிற்று. இந்தியாவிலும், இயேசு சபை புதிதாக 1838-இல் கட்டமைக்கப்பட்டது. இது ‘புதிய மதுரை மிஷன்’ (New Madura Mission) என்று அழைக்கப் படுகிறது. இப்புதிய மதுரை மறைத்தளத்தில் பணியாற்ற, பிரஞ்சு தேச இயேசு சபைத் துறவிகள் வருகை புரிந்தனர். தங்கள் முன்னாள் குருக்கள் ஏற்கனவே பணிபுரிந்து வந்த இடங்களில் மீண்டும் மறைபரப்புப் பணிகளைத் தொடர அவர்கள் விரும்பினர்.

ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் பணித்தளங்களை தங்கள் அதிகாரத்தின் வசம் கொண்டிருந்த கோவா பதுரவாதோ குருக்கள் காழ்ப்புணர்ச்சி காரணமாக, புதிதாக வந்த இயேசு சபை மறைபணியாளர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகளும், தண்டனைகளும் மேற்கொண்டனர். வரலாற்றில் இவ்விருண்ட சம்பவங்கள் ‘கோவா மறைபரப்புப் பூசல்’ (Scandalous Goan Schism) என்று அறியப் படுகிறது. இத்துயர நிகழ்வுகள் சற்றேறக்குறைய, ஒரு நூற்றாண்டாக இந்திய திருச்சபையில் நடந்தேறிக் கொண்டிருந்தது. இதே சூழ்நிலைதான் மலையடிப்பட்டியிலும் தொடர்ந்தது. 

அதிகாரப் பூசல்:

மதுரை மறைமாநிலத்தின் ஆளுகையை முறைப்படி பெற்று வந்த, புதிய இயேசு சபை மறைப்பணியாளர்கள் தங்கள் முன்னாள் பணித்தளமான மலையடிப்பட்டிக்கு வந்தார்கள். தங்கள் மூதாதையர் குருக்கள் பணியாற்றிய அதே மறைப்பணித்தளத்தில், ஆயனில்லா ஆடுகளாய் தவித்துக் கொண்டிருந்த இறைமக்களுக்கு, ஆன்மீகப் பணிகளை மீண்டும் தொடர, இறைவாஞ்சையோடு 65 ஆண்டுகளுக்குப் பின் மலையடிப்பட்டி மண்ணில் காலடி வைத்தனர். 

ஆனால் அவர்களின் இந்த மறுவருகை மனமகிழ்வைக் கொணரவில்லை. இறைத்திட்டம் வேறாக இருந்தது. ஏனெனில், அவர்களைக் கோவா மறைமாவட்டத்தைச் சார்ந்த மறைபோதகர்கள் தடுத்து நிறுத்தினார்கள். தாங்கள் எடுத்துக் கொண்ட அதிகாரத்தை மீண்டும் இயேசு சபையிடம், அர்ப்பணிக்க அவர்கள் மனம் ஏற்கவில்லை. ஏற்கனவே கூறிய படி, பதுரவாதோ அதிகாரம் இவர்களை இவ்வாறு செய்வதற்கான துணிச்சலைக் கொடுத்தது. 

ஏனென்றால், இவ்வதிகாரத்தின் படி, போர்த்துக்கீசிய மன்னருக்கு மட்டுமே இவர்கள் கட்டுப்பட்டவர்கள். ஏனைய ஆயர்களோ, கர்தினாலோ இவர்களை கேள்வி கேட்க இயலாது; இவர்களைக் குறித்து யாரிடமும் புகாரும் பதிய முடியாது. இவ்வாறு மறைப்பணியின் இரு தரப்பினருக்குமிடையே அதிகார வரம்பில் (Jurisdiction) போட்டி ஏற்பட்டது. இதனால் இறைமக்களிடையேயும் பிளவு ஏற்பட்டது. மலையடிப்பட்டியில் ஒரு பகுதியினர் கோவாவைச் சார்ந்த குருக்களுடன் இணைந்தனர். மற்றொரு சாரார் சேசு சபைக் குருக்களோடு இணைந்தனர்; பெரும்பான்மையானோர் இயேசு சபைக் குருக்களையே ஆதரித்தனர். 

இக்காலகட்டத்தில் (1873-1929), இறைமக்கள் இரு குழுக்களாக பிரிந்த பின்பு, பத்ரவாதோ கோவா குருக்கள் சென்னை மைலாப்பூரை மையமாகக் கொண்டு பணிபுரிந்தனர். இவர்களின் கீழ் 28 கிறிஸ்தவ குடும்பங்களும் மேலும் பல தன்னார்வ கிறிஸ்தவர்களும் இருந்ததாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. (இவர்களில் பெரும்பாலோனோர் மலைத்தாதம்பட்டி பகுதியில் வசித்து வந்த குடும்பங்கள் என அறிகிறோம்) 

ஓரிரவு ஆலயம்:

இது ஒருபுறமிருக்க, தங்கள் மூதாதையரின் விடுதலைப் பயணம் தொடங்கி, இவ்வூர் மக்களுக்காக, இரு நூற்றாண்டுகளாக, கடும் ஆன்மீகப் பணியாற்றிய இயேசு சபை பணியாளர்களின் மறுவருகை, மலையடிப்பட்டி மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பெரும்பான்மையான இறைமக்கள் கோவா பதுரவாதோ பங்கினை விடுத்து, புதிதாக வந்த இயேசு சபைக் குருக்களுக்கு தங்களின் ஆதரவை அளித்து சிறப்பான வரவேற்பினை அளித்தனர். 

இங்ஙனம் மக்கள் அளித்த பேராதரவை உணர்ந்த சேசு சபைக் குருக்கள், தங்களுக்கென ஒரு ஆலயம் தேவையென உணர்ந்து, மலையடிப்பட்டியின் பழைய சவேரியார் ஆலயத்தையும் (கூரையால் வேயப்பட்ட ஆலயம்), சுற்றுச்சுவரையும் ஒரே இரவில் எழுப்பினர். கூரையாலான இவ்வாலயத்திற்கு, பின்னாட்களில் மேற்கூரை ஓடுகள் பதிக்கப்பட்டன. ஆலயம் பின்னாட்களில் புதிதாகக் கட்டப்பட்டாலும், ஒரே இரவில் கட்டப்பட்ட ஆலயச் சுற்றுச்சுவர், இன்று வரை எவ்வித பாதிப்புமின்றி, இவ்வரிய வரலாற்றினைப் பறைசாற்றி நிற்கின்றது.

இவ்விடத்தில் வசித்து வந்த இறைமக்கள், ஆலயம் கட்டுவதற்காக தங்கள் நிலங்களை நன்கொடையாக அளித்து விட்டு, மேற்குப் பகுதியின் களத்தில் குடியேறினர். இப்பகுதி குடும்பங்கள் தற்போது ஆலமரமாய் விரிந்து, மலையடிப்பட்டியின் மேற்குத்தெருவாக நிலைபெற்றிருக்கிறது. எனினும் இன்று வரை இத்தெருவினை ‘களத்து வீடு’ என அழைக்கும் வழக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது

இவ்வாறாக, இப்பணித்தளம் இருவேறு பங்குகளாக செயல்பட ஆரம்பித்தது; அதாவது, (1) பதுரவாதோ - பனிமய அன்னை பங்கு & (2) இயேசு சபை மறைத்தளம் - தூய சவேரியார் பங்கு.

புதிய மதுரை மிஷன் தளத்தின் முன்னோடியும், திருச்சி மரியன்னை பேராலயத்தைக் கட்டியவருமான Fr. கார்னியரும், அவருடன் பாரீஸ் மறைபணி குருவான Fr. M. மௌசெட் அவர்களும் மலையடிப்பட்டியின் நிலை குறித்து ஆராய வந்திருந்தனர். இந்த பங்கு விசாரணையின் போது, மலையடிப்பட்டியில் நிலவி வந்த இரு பங்குகள் ஆட்சி முறை குறித்து மனம் வெதும்பிய நிகழ்வு, வரலாற்றுப் பதிவுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இரு குழுக்களுக்கிடையே அவ்வப்போது ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பினும், மனதளவில் ஒரு நெருடலும் காழ்புணர்ச்சியும் எப்போதும் இருந்து கொண்டே தான் இருந்தது என்பது மறுக்க இயலா உண்மை.

இவ்வாறு உருவான புனித சவேரியார் பங்கின் தொடக்க காலத்தில், முதல் முதலாக மூன்று ஃபிரெஞ்சு தேச இயேசு சபை மறைபோதகர்கள் அடுத்தடுத்து (1838-1843), பல்வேறுபட்ட நிலையிலும், வகையிலும் சிறந்த அரும் பெரும் பணியாற்றியுள்ளனர். இம்மறைத்தளத்தின் இரண்டாம் அத்தியாத்தின் தொடக்கப் புள்ளிகள் இவர்களே என்பது ஆணித்தரமான உண்மை. இக்குருக்களின் பணிக்காலத்தின் போது தான் முக்கியமான வரலாற்று முன்னெடுப்புகள் ஏற்பட்டுள்ளன. தூய சவேரியார் ஆலயத்தின் முதல் கூரை ஆலயமும், சுற்றுச் சுவரும் ஒரே இரவில் கட்டப்பட்டது. மேலும், 1840-இல் மலைமேல் இதற்கு முன்பு இருந்த கூரை சிற்றாலயம் (1714 - இல் கட்டப்பட்டது) இடிக்கப்பட்டு, கற்களாலான ஒரு சிற்றாலயம் எழுப்பப்பட்டு, புனித தோமையார் சிற்றாலயமாக மறுஅர்ப்பணம் செய்யப்பட்டது. 

1843 -இல் Fr. விக்டர் கேரிங்கோன் ஒரு வருடம் பணியாற்றியதற்கான ஆவணங்கள் உள்ளன. தந்தையவர்கள், இச்சிற்றாலயத்தை சற்று விரிவுபடுத்தி, செபிப்பதற்கும், திருப்பலி நிறைவேற்றுவதற்கும் உகந்த ஆழகிய சிற்றாலயமாக்கினார். தற்போது வரை இந்த சிற்றாலயமானது, ஆலயத்தின் மையப்பகுதியாக பாதுகாக்கப்பட்டு, ஆலய பீடம் இதன் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.

1843 -1845 இல் Fr. பெரின் அடிகளார் பங்கு குருவாக பணியாற்றினார். இவரின் காலகட்டத்தில் தந்தையவர்கள், பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. 

மேலும் இதே காலகட்டத்தில், பனிமய அன்னை பங்கின் குருவாக தந்தை சின்னப்பன் அவர்கள் பணியாற்றி வந்திருக்கிறார். சிறிது காலத்தில், கோவா குரு  Fr. சின்னப்பன் அவர்கள் உயிர் துறந்தார். இறுதி வரை சவேரியார் பங்கின் எத்தகு உடன்பாட்டிற்கும் அவர் பணியவில்லை; அமைதியும் ஏற்படவில்லை. இவரின் இறப்பிற்கு பின், சில கத்தோலிக்கர்களும், வேறு சிலரும் இணைந்து போராடி, தூய பனிமய அன்னை ஆலயத்தைக் கைப்பற்றி அதனை Fr. பெரின் அடிகளாரிடம் ஒப்படைத்தனர். 

இந்த சச்சரவானது, அப்போதைய ஆங்கிலேய உயர் நீதிபதியின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. குழப்பங்களை ஆரய்ந்த நீதிபதி, பெரும்பான்மை கத்தோலிக்கர்களைக் கொண்ட இயேசு சபைப் பங்கிற்கே இவ்வாலயம் சொந்தம் என தீர்ப்பு வழங்கினார். எனினும் இவ்வழக்கு, மேல் நீதிமன்றத்திற்கு சென்றபோது, அந்நீதிபதி கத்தோலிக்கர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதால், ஆலயமானது மீண்டும் கோவா குருக்கள் வசம் சென்றது.

இக்கசப்பான வரலாறு ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருப்பினும், சவேரியார் பங்கின் இறைமக்கள் ஆன்மீகத்திலும், பக்தியிலும் செழித்து வளரத் தொடங்கியிருந்தனர். தந்தையவர்கள் தனது மறையுரையிலும், மறைக்கல்வியிலும் தனது இறைமக்கள் ஒவ்வொருவரின் பெயர் சொல்லி அழைத்து, அவர்களின் தவறான வழிகளை செம்மையாக்கியதன் விளைவாக இத்தகு ஆன்மீக மாற்றங்கள் துளிர்விடத் தொடங்கின..

இவருக்குப் பின் 1845-1849 ஆண்டுகள் குறித்த வரலாற்று ஆவணங்கள் கிடைக்கவைல்லை. 1849-1853 வரை Fr. ரிச்சர்டு அடிகளார் சிறப்பான ஆன்மீகப் பணிகளை ஆற்றி வந்துள்ளார். 

புனித சவேரியார் ஆலயம்:

இந்நிலையில், 1853-ஆம் ஆண்டு முதல் 1895-ஆம் ஆண்டு வரை பெனடிக்ட் புர்தி (பத்திநாதர்) மலையடிப்பட்டியில் பணியாற்றினார். மலையடிப்பட்டி என்ற மறைத்தலம் இன்று வரை நிலைத்து நிற்பதன் ஆணிவேர் இவரே என்று மொழிவது சாலச்சிறந்தது. 

கோவா அருள்பணியாளர்கள் பனிமய மாதா ஆலயத்தைத் தங்கள் வசம் வைத்திருந்ததால், தமது மறைப்பணிக்காக ஒரு தனிப்பட்ட ஆலயம் தேவை என்பதை தந்தை பெனடிக்ட் புர்தி உணர்ந்தார். 1885-ஆம் ஆண்டு இறைமக்களின் உதவியுடன், அந்த பழைய (கூரையாலான) சவேரியார் ஆலயத்தை தரைமட்டமாக்கி, தற்போதுள்ள புதிய சவேரியார் ஆலயத்தை அழகுற, கம்பீரமாக கட்டியெழுப்பினார். மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இவ்வாலயத்தின் மணிக்கூண்டும் முகப்புக் கோபுரமும் அதன் மேல் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட உருண்டையும் மிக அருமையானவை. இவ்வாலயத்திற்கு ஐந்து முன்புற நுழைவு வாயில்கள் அமைந்திருப்பது இதன் மற்றொரு சிறப்பு; வத்திக்கான் ஆலயத்தில் மட்டுமே இங்ஙனம் அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.  

ஆலயத்தின் இரு மணிகளும், மாடக் கண்ணாடிகளும் பிரான்சிலிருந்து கொண்டுவரப்பட்டவை. கண்ணாடிகள் காலப்போக்கில் சேதமடைந்து மாற்றம் செய்யப்பட்டாலும், இம்மணிகள் இரண்டும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

அறைவீடு & பாடசாலை:

மேலும், ஆலயத்திற்கு அருகிலேயே பங்குத்தந்தை இல்லம் (அறை வீடு) ஒன்றையும் கட்டி எழுப்பினார். (மிகவும் சிதிலமடைந்ததால், 2004-ல் இந்த பழைய பங்குத்தந்தை இல்லம் இடிக்கப்பட்டு Fr. யூஜின் அவர்களால் புதிதாகக் கட்டப்பட்டது). ஆலயத்திற்கு வலது புறத்தில் (தற்போது லூர்து அன்னை கெபி அமைந்துள்ள இடம்) புனித சவேரியார் தொடக்கப்பள்ளி கட்டடம் கட்டப்பட்டது. இந்த மூன்று பெரிய கட்டுமானப் பணிகளும் ஒரே நாளில் அர்ச்சிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றன. இந்த தினம் மலையடிப்பட்டி மறைத்தளத்தின் திருவிழா போன்று நடைபெற்றிருக்கிறது. எனினும் 1885-ஆம் ஆண்டு என்பதைத் தவிர சரியான தேதி தெரியவில்லை. 

பிற ஆலயங்கள்:

தந்தை பெனடிக்ட் புர்தி அடிகளார் மேலும் ஐந்து ஆலயங்களைத் தமது மறைப்பணித்தளத்தில் கட்டியுள்ளார். 1880-ஆம் ஆண்டு கட்டப்பட்டதுதான் கருங்குளத்தில் உள்ள தூய இஞ்ஞாசியார் ஆலயம். அதைத் தொடர்ந்து பண்ணைப்பட்டி, பேரூர், சின்னாண்டிப்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி ஆகிய ஊர்களிலும் ஆலயங்கள் எழுப்பப்பட்டன. அவரது இறப்புக்குச் சில மாதங்களுக்கு முன்புதான் பொத்தமேட்டுப்பட்டி ஆலயத்தின் கட்டுமானப்பணி நிறைவு பெற்றது. அவரே குளித்தலையில் கோயில் கட்டுவதற்காக நிலம் வாங்கினார். 

இறப்பு 

1895-இல், தந்தையவர்கள் தனது மறைப்பணி நிமித்தமாக தூத்துக்குடி சென்ற போது, இறைவனிடம் தன் ஆவியை ஒப்படைத்தார்; அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார். எனினும், இறைமக்களின் ஏகோபித்த வேண்டுதலின் பேரில், அவரது எலும்புகள் தோண்டியெடுக்கப்பட்டு, மலையடிப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது. 

மறுஅடக்கம்

1909 ம் ஆண்டு நவம்பர் திங்கள், தான் எழுப்பிய இந்த சவேரியார் ஆலயத்தின் பீடத்தின் முன்பாக, அவரின் எலும்புகள் மறு அடக்கம் செய்யப் பட்டது. இத்துயர நிகழ்வின் போது மக்கள் கண்ணீர் வெள்ளத்தில் ஆழ்ந்தனர். இம்மறைதலத்திற்காக 40 ஆண்டுகள் தம் வாழ்நாள் முழுவதையும் கரைத்து, மாபெரும் இறைபணியாற்றிய இவ்வொப்பிலா குருவிற்கு, மக்கள் தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர். மலையடிப்பட்டி மறைத்தல வரலாற்றில் தந்தை ஆற்றிய பணிகள் சாலச்சிறந்தது; போற்றுதற்குரியது. 

1895 - 1904 வரை வடக்கன்குளத்தைச் சார்ந்த தந்தை A. ஞானபிரகாசம் அடிகளார் இப்பங்கினை நிர்வகித்து வந்துள்ளார். இந்திய மறைபரப்பில், முதல் தமிழ் மறைப்பணியாளர் இவரே என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர் காலகட்டத்தில், 2000 பத்ரவாதோ பங்கு இறைமக்களும் சவேரியார் பங்கோடு இணைக்கப்பட்டதால், பங்கு மக்களின் எண்ணிக்கை மிகக் கணிசமாக உயர்ந்தது. 

தந்தையவர்கள் தன் பணிக்காலத்தில், இப்பங்கில் ஆற்றிய ஆன்மீகப் பணிகள் அளப்பரியது; இவர் காலத்தில் இவர் கொடுத்த திருமுழுக்கு அருட்சாதனங்களின் எண்ணிக்கையே இதற்கு சான்று : 1899 - 491; 1900 - 526 ;1901 - 501; 1902 - 503; 1903 - 609; 1904 - 603. 

1908-இல் பண்ணப்பட்டியானது புதிய பங்காக பிரிக்கப்பட்டது. 1910-இல் பாலக்குறிச்சி புதிய பங்காக பிரிக்கப்பட்டது. இச்சூழ்நிலையில் மலையடிப்பட்டி பங்கானது, இரயில் தண்டவாளத்தை மையமாகக் கொண்டு 7 மைல்கள் தொலைவில் விரிந்து இரு புறங்களையும் உள்ளடக்கியதாக 10,554 கத்தோலிக்க கிறிஸ்தவர்களை தன் இறைச் சமூகமாகக் கொண்டிருந்தது.

மறைப்பணி மையங்கள்:

இக்காலகட்டத்தில் இறைமக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், நிர்வாக வசதிக்காக மறைத்தளமானது நான்கு பெரும் பிரிவுகளாக (Regional Zones) பிரிக்கப்பட்டிருந்தது. இது குறித்து வரலாற்று ஆசிரியர் அருட்பணி. லியோன் பெசெ தன் நூலில் மிகத் துள்ளியமாக ஆவணப்படுத்தியுள்ளார்.

1. மலையடிப்பட்டி மையம் (30 ஊர்கள் - மக்கள் தொகை : 4,224)

மலையடிப்பட்டி, ஆவாரம்பட்டி, மலைத்தாதம்பட்டி, புதுப்பட்டி, நல்லியம்பட்டி/ராயம்பட்டி, கல்பாளையத்தான்பட்டி, மஞ்சம்பட்டி, திர்காம்பட்டி/புரசன்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி, மணப்பாறை, விடத்திலாம்பட்டி, கருமகவண்டன்பட்டி, வெள்ளை பூலாம்பட்டி, அருணாம்பட்டி, ஆலத்தூர், பொன்னக்கோன்பட்டி, பிச்சைமணியாரன்பட்டி, அஞ்சல்காரன்பட்டி, ஊத்துப்பட்டி, ஈச்சம்பட்டி, அனியாபுரம் (தெற்கு), பொய்கைப்பட்டி, மொட்டைப்பெருமாம்பட்டி, வளையபட்டி, கோட்டப்பட்டி, கழனிவாசல்பட்டி, ஆத்துப்பட்டி, கருப்பூர்.

2. உடையாபட்டி மையம் (26 ஊர்கள் - மக்கள் தொகை : 1,543)

உடையாபட்டி, மேட்டு அல்லிப்பட்டி, முத்தப்புடையான்பட்டி, திருக்காவலூர், செம்மங்கலம், களத்துப்பட்டி, நரியம்பட்டி, சொக்காம்பட்டி, பதரப்பட்டி, கதரம்பட்டி, சமுத்திரம், சரவணம்பட்டி, தென்னம்பாடி, பாலப்பட்டி, புருசம்பட்டி, இடையபட்டி, விராலிமலை, மதரப்பட்டி, தேங்காதின்னிப்பட்டி, கவரப்பட்டி, ராசாலிப்பட்டி, கட்டிக்காரன்பட்டி, முட்டாகவண்டம்பட்டி, சத்திரப்பட்டி, பச்சையுடையாம்பட்டி, பெரியபட்டி.

3. கருங்குளம் மையம் (12 ஊர்கள் - மக்கள் தொகை : 2,627)

கருங்குளம், அணைக்கரைப்பட்டி, மலப்பட்டி/போராட்டக்குடி, சந்தியாகுபுரம், வயக்காட்டுபள்ளி, முக்குருத்திபட்டி, சடையம்பட்டி, புதுக்கோட்டை, ரெட்டியபட்டி, அனங்கொரப்பட்டி, குமாரவாடி, கடவூர்/பிள்ளைமுழுங்கி.

4. கருங்குளம் மையம் (12 ஊர்கள் - மக்கள் தொகை : 2,164)

பூலாம்பட்டி, தோப்புப்பட்டி, பெரியகுளத்துப்பட்டி, குளத்தூரான்பட்டி,  தாதம்பட்டி, மைலாப்பூர், கூடத்திபட்டி, சவேரியார்பாளையம், வையாபுரிபட்டி, அனியாப்பூர், வீரப்பூர், தலைவாசல்.

இவருக்குப் பின் 1905-1911 வரை Fr. லபோரே (Labore) அவர்கள் சிறந்த ஆன்மீகப் பணியாற்றினார்கள். இவருடைய பணிக்காலத்தின் போது, 1908-இல் ப.உடையாபட்டி பங்கும், 1909-இல் பாலக்குறிச்சி பங்கும் மலையடிப்பட்டி மறைப்பணித்தளத்திலிருந்து தனிப்பங்குகளாக பிரிந்தன. மேலும், 1908-இல் ந.பூலாம்பட்டி ஆலயத்திற்கு மக்களின் நிதியுதவியாக ரூபாய் 300 செலவில் ஒரு கோவில் மணியும் வாங்கப் பட்டது. 

1911-1922 வரை பணியாற்றிய குருக்கள் குறித்து வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கவில்லை. 1922-1929 வரை Fr. சேரே (Fr. Cere) அவர்கள் 7 ஆண்டுகள் பணியாற்றியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இதே நாட்களில், Fr. மாசில்லாமணி (1927-1928) & Fr. A.R.சூசை (1928) ஆகியோர் துணைப் பங்குத்தந்தையர்களாகப் பணிபுரிந்துள்ளனர். 

இப்பணிக்காலத்தின் போது 54 கிராமங்களை உள்ளடக்கிய பங்காக செயல்பட்டு வந்தது. இதில் 7 கற்களால் கட்டப்பட்ட பெரிய ஆலயங்களும், 7 களிமண்ணால் கட்டப்பட்ட கூரை ஆலயங்களும், 3 ஆடவர் பள்ளிகளும், ஒரு மகளிர் (தெரசாள்) பள்ளியும் செயல்பட்டுவந்ததற்கான ஆதாரப்பூர்வமான வரலாற்றுப் பதிவுகள் கிட்டியுள்ளன.

இரட்டை ஆட்சி முடிவு:

1929-இல் ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வு நடந்தேறியது. 29-06-1929-இல் திருத்தந்தை 13-ஆம் சிங்கராயர், போர்த்துக்கீசிய மன்னருடன் ஏற்படுத்திய புதிய உடன்பாட்டின்படி, அதுவரை நிலவி வந்த பதுரவாதோ இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டது. இதனடிப்படையில் ஆவூர், மலையடிப்பட்டி, பழைய கோயில் ஆகிய பங்குகளில் நிலவிய இரட்டை ஆட்சி முறை முடிவுக்கு வந்தது. 

1929 லிருந்து பணியாற்றியவர் Fr. திவ்யநாதன். இவர் பணிமுடித்த வருடம் குறித்து தெளிவான பதிவுகள் இல்லை. எனினும், 1938-இல் புதிய திருச்சி மறைமாவட்டம் உருவாக்கம் வரை இவர் பணியாற்றியிருக்கக் கூடும் எனக் கணிக்கிறோம். 

புதிய திருச்சி மறைமாவட்டம் 

(1938):

புதிய மதுரை மறைபரப்பு தளத்தின் கீழ் 1838-இல் உருவாக்கப்பட்ட சவேரியார் பங்கானது, பல்வேறு தடங்கள்களையும், சச்சரவுகளையும், மாற்றங்களையும், இணைப்புகளையும், வரலாற்று முன்னெடுப்புகளையும் கடந்து, சரியாக ஒரு நூற்றாண்டை முடித்து, 1938-இல் ஒரு புதிய அத்தியாயத்திற்குள் காலடி எடுத்து வைத்தது - அதுவே புதிய திருச்சி மறைமாவட்டம்.

08-01-1938-இல் திருச்சி புதிய மறைமாவட்டமாக மறுகட்டமைப்பு செய்யப்பட்ட போது (மதுரை தனி மறைமாவட்டமாக பிரிக்கப்பட்டது), சவேரியார், பனிமய மாதா ஆலயங்களும், மேலும் தோமையார் ஆலயமும் ஒரு குடையின் கீழ் கொணரப்பட்டு, 28-01-1934 இல் புதிய மலையடிப்பட்டி பங்காக செயல்படுவதற்கான ஆணை அப்போதைய ஆயர் அகஸ்டின் ஃபெய்சாண்டியர் (Augustine Faisandier)  ஆண்டகையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, புதிய திருச்சி மறைமாவட்டத்தின் அங்கமாக இப்பழம்பெரும் பங்கு இன்று வரை செயல்பட்டு வருகிறது.

1. புதிதாக உருவாகிய திருச்சி மறைமாவட்டத்தின் கீழ், மலையடிப்பட்டி பங்கின் முதல் குருவாக பதினோறு ஆண்டுகள் பணியாற்றியவர் தந்தை Fr. I. அருளானந்தம் அடிகளார். புதிதாக உருவாக்கம் பெற்ற இப்பங்கின் பல்வேறு வகையான அலுவல் சார்ந்த கட்டமைப்புகளை தந்தையவர்கள் முன்னெடுத்தார்கள். 

2. Fr. P.R. குழந்தை (1940-1946)

3. Fr. A. தாமஸ்  (1946-1949)

4. Fr. K.V. பீட்டர் (1949-1962)

5. Fr. A. மரியானந்தம் (1962-1973)

6. Fr. சேவியர் தனராஜ் (1973)

7. Fr. S. பத்திநாதர் (1973-1977)

8. Fr. S.R. ஆண்டனி சாமி (1977-1980)

9. Fr. S. பத்திநாதர் (1980-1985)

1985-ஆம் ஆண்டு, தூய சவேரியார் ஆலயத்தின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் விதமாக, மக்களின் ஏக ஆதரவுடன், ஆலயமானது மீண்டும் சுண்ணாம்புக் காரையால் பூசப்பட்டு, புதுப்பித்து வர்ணம் பூசப்பட்டது.

10. Fr. A. கபிரியேல் (1985-1986)

11. Fr. A. சவேரியார் (1986-1989)

12. Fr. S. தேவராஜ் (1989-1993)

13. Fr. S. ஸ்டீபன் கஸ்பார் (3 மாதங்கள்) மலையடிப்பட்டி மண்ணின் மைந்தர். பொறுப்பு பங்குத்தந்தையாக 3 மாதங்கள் சிறப்பாக பணியாற்றினார்.

14. Fr. P. தாமஸ் பால்சாமி (1993-1995) திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர்.

15. V. மரிய அற்புதம் (1995-1998)

16. Fr. S. திருத்துவதாஸ் (1998-2003)

17. Fr. T. யூஜின் (2003-2007)

லூர்து அன்னை கெபி, தூய சவேரியார் தொடக்கப்பள்ளி, சிறுமலர் பங்குத்தந்தை இல்லம் மற்றும் தூய தோமையார் சமூகப்பணிக்கூடம் ஆகிய புதியகட்டுமானப்பணிகளுக்கான அடிக்கற்கள் (07-06-2004) அன்று நடப்பட்டு, ஒரே ஆண்டில் அனைத்துப்பணிகளும் முடிக்கப்பட்டு, 10-03-2005 அன்று ஆயர் அந்தோணி டிவோட்டா அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு ஒரே நாளில் திறந்து வைக்கப்பட்டது. 

18. Fr. S. லூயிஸ் பிரிட்டோ (2007-2009)

19. Fr. S. ஜேம்ஸ் செல்வநாதன் (2009-2012)

2011-ஆம் ஆண்டில், இவ்வாலயத்தின் 125 ஆண்டு ஜூபிலி நினைவாக (1885-2011), ஆலய புதுப்பிக்கும் பணியானது, தந்தையவர்களால் முன்னெடுக்கப்பட்டது. ஆலய புதுப்பிக்கும் பணியானது, 04-12-2010 அன்று முன்னாள் பங்குத்தந்தை Fr. T. யூஜின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

ஆலயத்தின் வெளிப்புறம் முழுவதும் உள்ள சுண்ணாம்பு பூச்சு முழுவதுமாக சுரண்டி எடுக்கப் பட்டு, சிமெண்ட்டால் பூசப்பட்டது. மேலும், பல்வேறு புணரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, ஒருவருட கடின உழைப்பினால், புதுப்பொலிவு பெற்ற ஆலயமானது, 08-04-2012 அன்று மேதகு ஆயர் அந்தோணி டிவோட்டா அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, மறு அர்ப்பணிப்பு செய்யப்பட்டது.

இப்பணிக்காக சுமார் 40 இலட்சங்களுக்கு மேல் செலவு செய்யப்பட்டது. மக்களின் நன்கொடையானது பற்றாக்குறையானதால், தந்தை ஜேம்ஸ் செல்வநாதன் கொசவபட்டியில் தன் குடும்பத்திற்குச் சொந்தமான நிலத்தை

விற்று, இதற்கான கடனை அடைத்தார் என்பது வரலாற்றில் குறிக்கப்பட வேண்டிய உண்மை. 

20. Fr. ஜோசப் (2012-2016)

2014 ம் ஆண்டில், ஆலயத்தின் 300 ஆம் ஆண்டு விழாவைச் சிறப்பிக்கும் விதமாக, தந்தையவர்களின் முயற்சியால், இவ்வாலயம் மீண்டும் மறுசீரமைக்கப்பட்டு, ஆலயத்தின் முன்பாக அன்னைக்கு நினைவு கெபி ஒன்று நிறுவப்பட்டது. மேலும், 27-09-2014 அன்று, அன்னைக்கு தங்கத் தேரோட்டமும் நடைபெற்றது. இவ்விழாவின் பெரிய தேரோட்டம் நடைபெற்ற போது, அதிசயமாக பெருமழை பொழிந்த நிகழ்வு, அன்னையின் புதுமையாகவே நம்பப்படுகிறது.

21. Fr. அம்புரோஸ் (2016-2021)

22. Fr. ஜேம்ஸ் (2021 முதல்..)

இங்கு நடைபெறும் பாஸ்கா விழா உலகப் பிரசித்தி பெற்றது. பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.

பங்கின் வரலாறு எழுதியவர்: மலையடிப்பட்டி மண்ணின் மைந்தர் அருட்பணி. ஜோசப் அற்புதராஜ், OFM Cap