589 புனித பண்ணை மாதா ஆலயம், பண்ணைக்காடு

    

புனித பண்ணை மாதா ஆலயம்

இடம்: பண்ணைக்காடு

மாவட்டம்: திண்டுக்கல்

மறைமாவட்டம்: மதுரை உயர்மறைமாவட்டம்

மறைவட்டம்: கொடைக்கானல்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித அந்தோனியார் ஆலயம்.‌ மங்களம் கொம்பு, கொடைக்கானல்.

பங்குத்தந்தை: அருள்பணி. S. V. ஆரோக்கிய ராஜ், SDM

குடும்பங்கள்: 5

திருப்பலி நேரங்கள் : 

திங்கள்கிழமை காலை 06.30 மணி

வியாழக்கிழமை: காலை 06.30 மணி

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை: காலை ‌11.30 மணி. 

திருவிழா : ஜூன் மாதம் 27 -ஆம் தேதியை மையமாகக் கொண்டு 3 நாட்கள்.

வழித்தடம்: வத்தலக்குண்டு பேருந்து நிலையத்திலிருந்து 45 கிலோமீட்டர்  தொலைவில் பண்ணைக்காடு உள்ளது. 

வத்தலக்குண்டு பேருந்து நிலையத்திலிருந்து மங்களம் கொம்பு வழியாக 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

வரலாறு:

மலைகளின் இளவரசி கொடைக்கானல் கீழ் மலையின் முதன்மையான ஊராக விளங்குவது பண்ணைக்காடு. காப்பி, ஏலக்காய், மிளகு, மலைவாழை, அவக்கடா மற்றும் பலதரப்பட்ட காய்கறிகள் விளையும் இடமாகவும் காட்டு மாடு, யானை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் வாழும் இந்த இடத்தில் வாழும் மக்களின் ஆன்மீக தேவைகளைப் பூர்த்தி செய்ய, செண்பகனூர் திரு இருதய கல்லூரியில் இருக்கும் இயேசு சபையினர் தீர்மானித்து, இப்பகுதியில் 1895 ஆம் வருடம் கோயில் கட்டி வழிபாடு செய்து வந்தார்கள். 

ஏறக்குறைய 250 கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இந்த பண்ணைக்காட்டில் காபி தோட்டத்தில் வேலை செய்து கொண்டு வந்தனர். கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க புதிய ஆலயத்தை 1937 ஆம் ஆண்டு கட்டி, அந்த ஆலயத்திற்கு பண்ணை மாதா ஆலயம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். 

அருள்பணி. சுந்தரராஜ் SJ அவர்கள் இப்பகுதியிலிருந்து கத்தோலிக்க திருச்சபையில் இணைந்தவர்களுக்கு முதன் முதலாக திருமுழுக்கு கொடுத்தார். அவரைத்தொடர்ந்து  அருள்பணி. இக்னேஷியஸ் SJ அவர்களின் முழு முயற்சியாக இந்த பகுதியில் வாழ்ந்த கிறிஸ்தவ மக்களுக்கும், மங்களம் கொம்பு மற்றும் பெரியூர் பகுதியில் வாழ்ந்த கிறிஸ்தவ மக்களுக்கும் 1958 முதல் 1987 வரை பணியாற்றினார். பல மக்களை கத்தோலிக்க திருச்சபைக்கு கொண்டு வந்தார். மங்களம் கொம்பு பகுதியில் புனித அந்தோனியார் ஆலயம் கட்டி அங்கு வாழ்ந்த கிறிஸ்தவ மக்களின் ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்தார். 

அவருக்கு பின் இந்த பகுதியில் வாழ்ந்த கிறிஸ்தவ மக்களின் ஆன்மீக தேவைகளைப் பூர்த்தி செய்ய, மதுரை உயர்மறைமாவட்டத்தில் பணிபுரிந்த குருக்களிடம் விடப்பட்டது. 

அருள்பணி. சூசை மைக்கேல் ராஜ் 1989 -ஆம் ஆண்டு முதல் பெருமாமலை (பெருமாள்மலை) பங்கில் தங்கி ஆன்மீகப் பணியை மேற்கொண்டார். இவரின் பெரும் முயற்சியால் மங்களம் கொம்பில் வாழ்ந்த கிறிஸ்தவ மக்களின் ஆன்மீக தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய ஆலயத்தைக் கட்டி, பேராயர் மேதகு ஆரோக்கிய சாமி ஆண்டகை அவர்களால் 08/03/1996 இல் திறந்து வைக்கப்பட்டது. மேலும் இந்த பகுதியில் வாழ்ந்த கிறிஸ்தவ மக்கள் கல்விக்கு பல உதவிகள் புரிந்தார். 

பண்ணைக்காட்டில் வாழ்ந்த கிறிஸ்தவ மக்கள் வேலை வாய்ப்புகள் சரியாக கிடைக்காத சூழ்நிலையில் பல இடங்களுக்கு சென்று குடியேறினர். அதனால் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் தொகை குறைந்து இப்போது 5 குடும்பங்கள் மட்டுமே இருக்கிறார்கள். பின்பு பெருமாமலை பங்கில் இருந்து மங்களம் கொம்பு தனிப்பங்காக

2004 இல் மேதகு பீட்டர் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களால் பிரிக்கப்பட்டது. அது முதல் மங்களம் கொம்பு பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வருகிறது. 

புனித பண்ணை மாதா பெயர்க்காரணம்:

1895 ஆம் வருடம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இங்கு குடியேறினார்கள். ஆலயம் கட்டப்பட்ட உடனே அதை மாதாவுக்கு அர்ப்பணித்தார்கள். பண்ணைக்காடு ஊரில் அன்னையின் ஆலயம் அமைந்ததால் பண்ணை மாதா ஆலயம் என்று அழைக்கிறார்கள்.

தனிச்சிறப்பு: இந்த கிளை பங்குத்தலத்தில் அதிகமான கிறிஸ்தவ மக்கள் இல்லையென்றாலும், இப்பகுதியில் இருக்கும் இந்துக்கள் பண்ணை மாதா ஆலயம் வந்து அன்றாடம் செபிப்பதும் ஆலயத்தில் முன் பகுதியில் உள்ள புனித சகாய மாதா கெபியில் தினமும் மெழுகுவர்த்தி ஏற்றி தங்களின் குடும்பம், தொழில் வளர்ச்சிக்கு செபிக்கிறார்கள். மேலும் இந்த ஆலயம் அந்த மக்களின் குடும்ப ஆலயமாகவும் விளங்குகிறது.

இந்த கிளைப் பங்குத்தலத்தில் உள்ள துறவற சபை.

1. புனித வளனாரின் பிரான்சிஸ்கன் சபை

2. அருள்பணி. பால் ஜெயக்குமார், SVD  

(இப்பகுதியில் இருக்கும் துறவற சபைகளின் ஆன்மீக தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றார்)

நிறுவனம்: 

1. ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிகுலேஷன் பள்ளி

2. மலைச்சாரல் ஆதிவாசி மற்றும் பழங்குடியினரின் பிள்ளைகள் தங்கி படிக்க அருள்சகோதரி புளோரா OMMI அருள்சகோதரி லில்லி OMMI  உதவிகள் செய்து வருகின்றார்கள்.

N B: புனித வளனாரின் பிரான்சிஸ்கன் சபை அருட்சகோதரிகள்‌, இயேசு சபையினரின் அழைத்தலின் பேரில் பண்ணைக்காடு பகுதியில், ஏறக்குறைய 50 வருடங்களாக ஆன்மீகப்பணி. கல்விப் பணி செய்து வருகின்றார்கள்.

பண்ணைக்காடு கிளைப்பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்

1. அருள்பணி. சுந்தரராஜ், SJ (1958 வரை)

2. அருள்பணி. இக்னேஷியஸ், SJ (1958 முதல் ‌1985)

3. அருள்பணி. சூசை மைக்கேல் ராஜ் (1989 முதல் 1997)

4. அருள் பணி. அந்தோணி சாமி (1997 முதல் 2004) 

5. அருள்பணி. பிரிட்டோ ராஜா சுரேஷ் (2004 முதல் 2009)

5. அருள்பணி. ஜெரோம் ஏரோணிமுஸ் (2009 முதல் 2010)

6. அருள்பணி. அருள் சேவியர், SDM (2010 முதல் 2013)

7. அருள்பணி. S V. ஆரோக்கிய ராஜ், SDM (2013 முதல் தற்போது வரை).

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை 

அருள்பணி. S V. ஆரோக்கிய ராஜ், SDM.