116 தூய சகாய மாதா ஆலயம், ஈஞ்சக்கோடு

   

தூய சகாய மாதா ஆலயம்

இடம்: ஈஞ்சக்கோடு

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: குழித்துறை

மறைவட்டம்: திரித்துவபுரம்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித ஆரோபண அன்னை ஆலயம், பொன்மனை

2. புனித அந்தோனியார் ஆலயம், பெருஞ்சாணி

பங்குத்தந்தை அருள்பணி. சேவியர் ராஜ்

குடும்பங்கள்: 198

அன்பியங்கள்: 9

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 06:30 மணி

புதன் மாலை 06:30 மணி நவநாள் திருப்பலி

வெள்ளி மாலை 06:30 மணி திருப்பலி

திருவிழா: மே மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும்.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி.‌ நேசமணி, OCD

2. அருட்சகோதரி. குளோறி, பிறரன்பு சபை

3. அருட்சகோதரி. ஷோபனா, பிறரன்பு சபை

4. அருட்சகோதரி. ஜாஸ்மின், பிறரன்பு சபை

5. அருட்சகோதரி.‌ ஜெனிபர் சுபிலா, பிறரன்பு சபை

6. அருட்சகோதரி.‌ மரிய ரீஜா, பிறரன்பு சபை

7. அருட்சகோதரர். அப்சலின்

8. அருட்சகோதரர்.‌ அக்சயா பாபு, OFM Cap

வழித்தடம்:

மார்த்தாண்டம் - குலசேகரம் -காவல் ஸ்தலம் -மாமூடு ஜங்ஷன் -ஈஞ்சக்கோடு சகாய மாதா ஆலயம்.

தக்கலை -சித்திரங்கோடு -வெண்டலிகோடு -ஈஞ்சக்கோடு சகாய மாதா ஆலயம்.

வடசேரி -சுருளக்கோடு -பொன்மனை ஜங்ஷன் -ஈஞ்சக்கோடு சகாய மாதா ஆலயம்.

களியல் -திற்பரப்பு -குலசேகரம் -ஈஞ்சக்கோடு சகாய மாதா ஆலயம்.

Location map: Sahaya Madha Church

https://maps.app.goo.gl/9uLxiER5BW7S8rBDA

வரலாறு:

ஆதியும் அந்தமுமாய் அகிலம் முழுவதும் நிறைந்து, எல்லாருக்கும் எல்லாமுமாய், எல்லாவற்றிலும் நிறைவாய் நிலைத்திருப்பவன் இறைவன். அவனின்றி ஓர் அணுவும் அசைவதில்லை. உடலாய், உயிராய், உள்ளத்தின் உணர்வாய், அறிவாய், பொருளாய், அனைத்திற்கும் முதலாய் இருக்கும், எல்லாம் வல்ல கடவுளைத் தொழாது உலகில் எதுவும் முழுமை பெறுவதில்லை என்பதற்கிணங்க, இறைவனை அன்றாடம் வழிபட, முக்கடலும் முத்தமிடும் குமரியின் வடகோடியில் அமைந்த குலசைத் தலத்திருச்சபையின் அங்கமாய் ஈஞ்சைப் பூத்துக் குலுங்கி; காடு, மலை, கரடு முரடு, வாய்க்கால் எனப் பாதையினை தன்னுள் கொண்டு அமைந்துதான் ஈஞ்சக்கோடு என்ற ஊர்.

தொடக்கநிலை :

ஈஞ்சக்கோடு பகுதியில் முதன் முதலில் வாழ்ந்து வந்த ஐந்து கத்தோலிக்க குடும்பங்கள், குலசேகரம் தூய அகுஸ்தீனார் ஆலயத்திற்கு சென்று திருப்பலியில் பங்கெடுத்து வந்தார்கள். ஆலயம் தொழுவது சாலவும் நன்று. ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றக் கூற்றுக்கு உயிர் வடிவம் கொடுத்திட, ஆலயம் தேவை என்று 1960-ஆம் ஆண்டு திரு. சவேரியார் அடிமை என்பவரும், அவருடன் மேலும் நான்கு குடும்பங்களும் இணைந்து, அன்றைய பங்குதந்தை லாசர் அடிகளார் அவர்களிடம் முறையிட, அடிகளாரின் முயற்சியால் அன்று குலசேகரத்தில் இருந்த I.C.M அருட்சகோதரிகள், சில ஆசிரியைகள், குலசேகரம் சேவா சங்கத்தினர், ஈஞ்சக்கோடு பகுதியில் உள்ள இல்லங்களை சந்தித்து 1963 ல்- பல குடும்பங்களுக்கு திருமுழுக்கு கொடுத்தனர்.

முதல் ஆலயம்:

1965-ம் ஆண்டு தேன்பாறையடி செல்லும் பாதையின் வலது பக்கத்தில், கடூர் இராஜையன் என்பவர் தன்னுடைய நிலைத்தைப் ஆலயம் அமைக்க இலவசமாகத் தந்தார். அதில் ஒரு சிறிய ஓலைக் குடிசை கட்டப்பட்டு, மாதம் ஒரு முறை திருப்பலியும், தொடர்ந்து நடைபெற்றது. மறைக்கல்வி வகுப்பும் நடைபெற்றது.

இரண்டாவது ஆலயம்:

1966-ஆம் ஆண்டு அன்றைய பங்குத்தந்தை சார்லஸ் பிரோமியா அவர்களின் முயற்சியால், தற்பொழுது ஆலயம் அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளர் திரு. தங்கையன் என்பவர் அதில் கொஞ்சம் நிலத்தை குறைந்த விலைக்குத் தந்தார். அது வாங்கப்பட்டு அதன் வலப்புறம் பந்தல் போடப்பட்டு, வாரந்தோறும் திருப்பலி நடைபெற்றது.

மூன்றாவது ஆலயம்:

1967- பங்குதந்தை சார்லஸ் பிரோமியோ அவர்களின் முயற்சியால் ஆலயம் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டு, 02.06.1968-ல் மறைமாவட்ட ஆயர் ஆஞ்சிசுவாமி அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டு, சகாயமாதா ஆலயம் என பெயரிடப்பட்டது. இந்நாளில் 100-க்கும் அதிகமான மக்கள் திருமுழுக்குப் பெற்றனர். ஆலயத்திற்கு தேவையான பொருட்களை I.C.M அருட்சகோதரிகள் வழங்கினார்கள். அருட்சகோதரி ஞானம், மரியமிக்கா, குலசேகரம் உபதேசியார் செல்வராஜ் ஆகியோரின் பணிகள் பாராட்டுதற்குரியன.

கொல்வேல் பங்கில் இறைபணியாற்றி வந்த சகேதாரர்கள் பல ஆண்டுகளாக இங்கு வந்து இல்லங்களைச் சந்தித்து, இறையன்பை ஊட்டினர். 1972-ல் குலசேகரம் பங்குத்தந்தை F. B. வென்சஸ்லாஸ் அவர்களால் சகோ. பீட்டர் முன்னிலையில் அசிசி பவனுக்கு அடிக்கல் போடப்பட்டு, கட்டிடம் கட்டி முடித்து சகோதரர்கள் இறைப்பணியை தொடங்கினார்கள். 

சகோதரர்களின் பணிகள் :

ஈஞ்சக்கோடு பங்கு மக்கள் வாழ்வுக்கு வழிகாட்டி, 'பனி முன் மலரும் ஞாயிறு போல்' பணி தொடர்ந்திட்ட சகோதரர்கள், 1972-ஆம் ஆண்டு குலசேகரம் பங்குதந்தை C.M. வென்ஸ்லாஸ் அடிகளார் முன்னிலையில், கல்விப் பணியை துவங்கிட 90 மாணவர்களைக் கொண்டு, பொன்மனையைச் சார்ந்த திருவாளர். வீரபத்திரன் ஆசிரியர் அவர்களைக் கொண்டு 1-ம் வகுப்புத் தொடங்கி "அறிவொளி ஏற்றி அறியாமை இருள் அகல" வழிகாட்டியது அவர்களின் பெருமையே. அரசின் அனுமதிப் பெற்றும் ஊதியம் இல்லாத நிலையில் பிள்ளைகளுக்கு மதிய உணவெல்லாம் வழங்கி, வயிற்றுப் பசியைப் போக்கி "அன்னச்சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்" என்னும் மகாகவியின் கூற்றுக்கு உயிர்வடிவம் கொடுத்து, நோயாளிகளின் இல்லம் சந்திந்தும், நோயாளிகளுக்கு இலவச மருத்துவம், மறை அறிவுப் பெற மறைக்கல்வியும், ஆலய ஈடுபாடும் மக்களின் வாழ்வை மலரச் செய்தது.

பெண்கள் முன்னேற்றம் :

தாய் சேய் நலத்திட்டம், நூல் நூற்றல் சர்வோதயா சங்கத்திற்குக் கட்டிடம் கட்டிக் கொடுத்தும், தையல் வகுப்புத் தொடங்கியும், நூறுக்கு அதிகமான பெண்கள் வேலை வாய்ப்புப் பெற்றனர். அன்றைய Provincial சகோ. சால்வதோ, முதல் தலைமை சகோ. பக்கோமியூஸ், சகோ. கிரகோரி, சகோ, ஆன்றணி. சகோ. பியோ, சகோ. ஜேக்கப், சகோ. ஏசுதாஸ், சகோ. ரெமிஜியஸ் முதலியவர்களின் பணி மகத்தானது. மேலும் பல சகோதர்கள் அரும்பாடுபட்டு உழைத்தனர். 

பிறரன்பு சபை சகோதரிகளின் வருகை:

அருட்தந்தை. ஆன்றோ செல்வராஜ் பொறுப்பேற்ற போது 1981-ஆம் ஆண்டு அருட்சகோதரி. இசபெல்லா தலைமையில், பிறரன்பு அருட்சகோதரிகளின் இறைபணித் தொடர இங்கு காலடி எடுத்து வைத்தனர். இன்றும் அவர்கள் பணியும் தோய்வின்றி ஊர் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருப்பது பெருமையே.

பல்லோட்டியன் தந்தையர் வருகை:

1983-ம் ஆண்டு மறைமாவட்ட குருக்களிடமிருந்து, குலசேகரம் பங்கு பல்லோட்டியன் சபை குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அருட்தந்தை சூசையன் அவர்களால் பங்குப் பேரவை அமைக்கப்பட்டது. ஆலயம் பழுது பார்த்து, மக்கள் சிறப்புடன் வழிபட வழி வகுத்திட்டார்கள். அருட்தந்தை மைக்கிள் பொடிமட்டம் அவர்கள், ஈஞ்சக்கோட்டின் மீது தனிக்கவனம் செலுத்தி தரை மொசைக் போடப்பட்டது. 1992-ஆம் ஆண்டு

அருட்தந்தை ஆன்றணி பிரிட்டோ

அவர்களின் முயற்சியால் மக்கள் ஒத்துழைப்புடன் கல்லறைக்கு 10 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. 1993-ம் ஆண்டு ஆலயம் வெள்ளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஆலயத்தின் 4 -ஆம் நிலை:

1998-ஆம் ஆண்டு அருட்தந்தை சூசையன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு, 2001-ஆம் ஆண்டு அருட்பணி. தாமஸ் அவர்களால் ஆலய கட்டுமான பணி ஆரம்பிக்கப்பட்டு, மேதகு ஆயர். லியோன் அ. தர்மராஜ் நிதி உதவியாலும், அருட்பணி. சூசையன் அவர்களின் முயற்சியாலும், அருட்சகோதரி. மங்களமேரி அவர்களின் ஒத்துழைப்பாலும், பங்கு மக்களின் நன்கொடைகள் மற்றும் கட்டிட வரியாலும் ஆலயம் சிறப்புற கட்டி முடிக்கப்பட்டு, 09.11.2002 மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 

ஈஞ்சக்கோடு ஆலயத்தை தனிப் பங்காக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, 2007-ஆம் ஆண்டு அருட்தந்தை. இருதய பால்ராஜ் அவர்களின் முயற்சியாலும், அருட்சகோதரியின் ஒத்துழைப்பாலும், பங்கு மக்களின் பொருளதவியாலும் 13 சென்ட் நிலமும் ஒரு வீடும் வாங்கி நிறைவு கண்டது.

தனிப்பங்கான நிலை:

மக்களின் நீண்ட நாள் கனவு 12.11.2009-ல் ஈஞ்சக்கோடு தனிப் பங்காக, மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் உயர்த்தப்பட்டது. பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை A. மைக்கேல் ராஜ் அவர்கள் பொறுப்பேற்று, 21.02.2015 வரை பணிகள் ஆற்றினார்கள். அவரது பணிக்காலத்தில் ஆலய சுவரை கிரானட் கற்களால் அழகுப்படுத்தியும், நற்கருணை பீடத்திற்கு வடிவம் கொடுத்தும், பழைய கல்லறைத் தோட்டத்தை விற்று புதிதாக 15 சென்ட் நிலத்தில் கல்லறைத் தோட்டமும், பங்கு தன்னிறைவு பெறதானே சேமிக்கும் சங்கம், சிறார்கள் கலை அறிவு பெற பயிற்சி வகுப்புகள் ஆரம்பித்து, மக்களை பங்குடன் வழிநடத்தியதும் சிறப்பே.

ஆலயத்தின் அருகாமையில் பங்குத்தந்தை இல்லம் அமைத்திட 11.11.2013-ல் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அடிக்கல் போடப்பட்டு, 02.02.2014-ல் முதல் வேலை ஆரம்பிக்கப்பட்டு 19.12.2014-ல் இல்லம் ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் திறக்கப்பட்டதும் சிறப்பே. 

22.02.2015 முதல் அருட்பணி. ஆன்ட்ரு அவர்கள் பங்கு தந்தையாக இருந்து சீரும், சிறப்புமாக மக்களை வழிநடத்தினார்கள். அவர்கள் காலத்தில் புனித அந்தோணியார் குருசடி கட்டி முடிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

17.05.2016 அன்று முதல் அருட்பணி. சேவியர்ராஜ் அவர்கள் பங்குபணியாளராக

பொறுப்பேற்று மக்களை வளர்ச்சியின் பாதையில் திறம்படி வழி நடத்தி வருகிறார்கள். அவருடைய முயற்சியினால்

கொடிமரம் அமைக்கப்பட்டது.

கெபி ஒன்று கட்டப்பட்டது. ஆலய முற்றம் இன்டர்லாக் போடப்பட்டது. ஆலயத்தின் முன்புறமும், மேற்கு பக்கமும் காம்பவுண்ட் கட்டப்பட்டது. முன்புறம் ஸ்டீல் கிரில் அமைக்கப்பட்டது. குருசடிக்கு செட் ஒன்று அமைக்கப்பட்டது. ஆலயத்திற்கு  இருக்கைகள் வாங்கப்பட்டது. ஸ்டோர் ரூம் ஒன்று கட்டப்பட்டது. ஆலயத்திற்கு வண்ணம் செய்யப்பட்டது. புதிய தேர் ஒன்று செய்யப்பட்டு, தேர் செட்டுக்கு கூரை அமைக்கப்பட்டது. ஆலய சமயலுக்காக செட் ஒன்று போடப்பட்டது. அத்துடன் பல வளர்ச்சிப் பணிகளை, பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்து செய்து வருகிறார்கள். மேலும் ஆன்மீகப் பணிகளான இல்லந்தோறும் இறைவனோடு ஒரு மணி ஜெபம், அன்பிய திருப்பலிகள், முதியவர், நோயாளிகள், குழந்தைகள்‌ திருப்பலிகள் போன்றவை நடைபெற்று வருகிறது. மேலும் எல்லா அமைப்புகளுக்கும், பயிற்சிகள், தியானங்கள், தவக்கால திருப்பயணங்கள் நடைபெறுகிறது.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. பாலர் சபை 

2. சிறுவழி இயக்கம்

3. இளம் கிறிஸ்தவ மாணாக்கர் இயக்கம்

4. இளைஞர் இயக்கம்

5. மரியாயின் சேனை

6. கத்தோலிக்க சேவா சங்கம் 

7. பெண்கள் இயக்கம் 

8. கைகள் இயக்கம்

9.அடித்தள முழு வளர்ச்சி சங்கம்

பங்கில் உள்ள கெபி:

தூய லூர்து மாதா கெபி

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. சேவியர் ராஜ் அவர்கள்.