282 புனித சூசையப்பர் ஆலயம், சூசைபுரம்


புனித சூசையப்பர் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம்

இடம் : சூசைபுரம், மார்த்தாண்டம் அஞ்சல்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : மார்த்தாண்டம்

நிலை : பங்குதளம்
கிளை : இல்லை

பங்குத்தந்தை : அருட்தந்தை சதீஷ்குமார்

குடும்பங்கள் : 130
அருள் வாழ்வியம் (அன்பியம்) : 7

ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணிக்கு காலை ஜெபம், காலை 09.00 மணிக்கு திருப்பலி

வியாழன் : மாலை 06.00 மணிக்கு மாலை ஜெபம் மாலை 06.30 மணிக்கு திருப்பலி

திருவிழா : மே மாதம் 01-ஆம் தேதியை மையமாகக் கொண்டு நடைபெறும். (இந்த வருடம் மே 01 முதல் 10-ஆம் தேதி வரையில்)

வரலாறு :

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் (மாற்கு 16:15) என்னும் இறைவார்த்தையை சிரமேற் கொண்டு மலங்கரை கத்தோலிக்க சபையை சூசைபுரம் மண்ணில் நிறுவுவதற்காக 1963-ஆம் ஆண்டு அருட்தந்தை மோண்சிஞ்ஞோர் ஜோசப் குழிஞ்ஞால் அவர்கள் மார்த்தாண்டம் நகரின் அடுத்துள்ள நெடுங்கோட்டை பகுதிக்கு வந்தார்கள். அவர்களின் அயராத உழைப்பின் காரணமாக முதன்முதலாக 31-07-1963 அன்று திருமுழுக்கு கொடுத்து நெடுங்கோட்டை என்ற இடத்தை சூசைபுரம் என்று பெயரிட்டு புனித சூசையப்பர் ஆலயம் கட்ட ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் மண்சுவர், ஓலைக்கூரையிலான ஆலயம் கட்டப்பட்டது. அருட்தந்தை அவர்களின் அயராத நற்செய்தி பணியால் 1964 -ஆம் ஆண்டில் 78 நபர்களுக்கு திருமுழுக்கு கொடுத்து தலத்திருச்சபையில் இணைத்தார். பங்கும் வளர்ச்சியடைந்து வந்தது. ஆலயத்தின் ஓலைக்கூரை மாற்றப்பட்டு பக்கச்சுவர்களும் கட்டப்பட்டு ஓடு வேய்ந்த அழகிய ஆலயமாக மாற்றப்பட்டது.

தொடர்ந்து அருட்தந்தை மாத்யூ வாழப்பன்னேத்து அவர்கள் பங்கின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி செய்தார்.

தொடர்ந்து அருட்தந்தை தோமஸ் நெரியாட்டில் அவர்கள் பொறுப்பேற்று, மக்களின் ஆன்மீக வளர்ச்சியோடு கல்வியிலும், அறிவிலும், பொருளாதாரத்திலும் வளர வேண்டி பல புது திட்டங்களை உருவாக்கினார். அதனடிப்படையில் குழந்தைகளுக்காக பாலர்பள்ளியும், இளம் பெண்களுக்காக பயிற்சிப் பள்ளியும், தாய்மார்களின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் தாய்மார்கள் சங்கமும் அமைத்தார்.

மேலும் பங்கு மக்கள் மட்டுமல்லாது ஊர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வீடுகட்ட உதவிகள், கழிப்பறை கட்ட உதவிகள், தரிசாக கிடந்த நிலத்தை விளை நிலமாக மாற்ற உதவி, குடி தண்ணீருக்காக கிணறுகள் அமைக்க உதவி, போன்றவை செய்து கொடுத்தார். அவருக்கு உதவியாக அருட்சகோதரிகள் வெர்ஜின், மெரினா ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.

மேலும் சபையில் MCH திட்டத்தை கொண்டு வந்து குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கொடுக்க உதவினார்கள்.

(இந்த திட்டங்களில் தான் பால்பொடி, சோளமாவு(மஞ்சமாவு), கோதுமை(கோதம்பு)போன்ற சத்துணவுகள் குமரி மாவட்டத்தில் உள்ள பல கத்தோலிக்க ஆலயங்களில் வழங்கப்பட்டு, ஊட்டச்சத்து பெற்று எங்களைப் போன்று பலரும் வளர்ந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது மட்டுமல்ல, என்றென்றும் நினைவு கூறத்தக்கது.)

தொடர்ந்து பேரருட்தந்தை வர்கீஸ் மாவேல் அவர்கள் பொறுப்பேற்று ஆலய வளர்ச்சிக்கு உதவினார்கள்.

அருட்தந்தை கோசி வர்கீஸ் (தற்போதைய மாவேலிக்கர ஆயர்) சிறப்பாக இறைபணியாற்றி வளர்ச்சிக்கு உதவினார்.

அருட்தந்தை மாத்யூ பள்ளத்துமுறியில் அவர்களின் பணிக்காலத்தில் பங்கின் 25 -வது ஆண்டு (வெள்ளிவிழா) சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது ஆலயம் விரிவாக்கப்பட்டு பலிபீடம் அமைக்கப்பட்டது.

அருட்தந்தை ஜோசப் சுந்தரம் பணிக்காலத்தில் மதிற்சுவர் கட்டப்பட்டு அழகான இரண்டு குருசடி கட்டி நுழைவாயிலும் கட்டப்பட்டது. ஒலி பெருக்கி வசதி செய்யப்பட்டது. St Joseph's English medium school நிறுவினார்.

இந்த வேளையில் தான் திருவனந்தபுரம் மறை மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு மார்த்தாண்டம் மறை மாவட்டம் உருவானது.

அருட்தந்தை மைக்கிள் பணிக்காலத்தில் ஆலய பின்புறம் நிலம் வாங்கப்பட்டது.

அருட்தந்தை பீட்டர் ஆனந்த் பணிக்காலத்தில் மேலும் நிலங்கள் வாங்கப்பட்டதுடன் ஆலய வளர்ச்சியை கருத்தில் கொண்டு 7 அருள்வாழ்வியங்களை உருவாக்கினார். மேலும் ஆலயத்தின் இடநெருக்கடியை கருத்தில் கொண்டு புதிய ஆலயம் கட்ட ஆரம்பகட்ட வேலை மேற்கொண்டு பங்கு மக்களுக்கு ஆலய கட்டுமானவரி நிர்ணயம் செய்தார்.

அக்கரவிளையைச் சார்ந்த திரு ஜான் நடராஜன், திருமதி சரோஜா ஆலயம் கட்ட 32 சென்ட் நிலம் இலவசமாக தர முன்வந்தனர்.

தொடர்ந்து அருட்தந்தை ஆன்டனி அவர்களின் பணிக்காலத்தில் மக்களை சிறப்பாக வழிநடத்தி, புதிய ஆலயம் கட்டுவதற்கான அரசு அனுமதிக்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் மாற்றலாகி செல்ல அருட்தந்தை பெர்னார்ட் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.

தொடர்ந்து அருட்தந்தை தேவதாஸ் அவர்கள் பொறுப்பேற்று திருமதி சரோஜா அவர்கள் இலவசமாக கொடுத்த 32 சென்ட் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. புதிய ஆலயம் கட்ட அரசு அனுமதியும் கிடைத்தது.

இந்த காலகட்டத்தில் பங்கின் பொன்விழா கொண்டாடப்பட்டது. 23-12-2012 அன்று மேதகு ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டு, தொடர்ந்து ஆலயத்திற்கான அஸ்திவாரம் (பவுண்டேசன்) போடப்பட்டு பணிகள் நடந்து வந்தது.

அவருக்குப்பின் பேரருட்தந்தை ஆன்றனி அவர்கள் பங்குத்தந்தையாகவும், அருட்தந்தை மரிய சோபு அவர்கள் உதவி பங்குத்தந்தையாகவும் இருந்து சிறப்பாக இறைபணி செய்தனர்.

தொடர்ந்து பேரருட்தந்தை சதீஷ்குமார் அவர்கள் அவர்கள் பொறுப்பேற்று பங்கு மக்களை சிறப்பாக வழிநடத்தி, அவரது விடாமுயற்சியாலும் பங்கு மக்களின் கடின உழைப்பு ஒத்துழைப்பாலும் ஆலயப்பணிகள் நிறைவு பெற்று 01-05-2019 அன்று மாலையில் மேதகு ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட உள்ளது.

மண்ணின் இறை அழைத்தல்கள் :

Bro. Vibins
Bro. Flojin

இப்புதிய ஆலய கட்டுமானப் பணிகளுக்கு உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..! வாழ்த்துகள் ..!

வழித்தடம் :

மார்த்தாண்டத்திலிருந்து ஐரேனிபுரம் சாலையில் சுமார் இரண்டு கி.மீ தொலைவில் உள்ளது.

மார்த்தாண்டத்திலிருந்து பேருந்து எண் 87 J

இரயில் தடம் :

நாகர்கோவில் - திருவனந்தபுரம்.

இறங்குமிடம் குழித்துறை(மார்த்தாண்டம்). இங்கிருந்து ஐரேனிபுரம் சாலையில் சுமார் ஒரு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.