824 புனித ஆரோக்கிய மாதா ஆலயம், மேட்டுக்குடியிருப்பு

  

புனித ஆரோக்கிய மாதா ஆலயம்

இடம்: மேட்டுக்குடியிருப்பு, கொம்பன்குளம் அஞ்சல், 628704

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி 

மறைவட்டம்: சாத்தான்குளம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: உலக மீட்பர் ஆலயம், நெடுங்குளம்

பங்குத்தந்தை: அருட்பணி. அ. சேவியர் கிங்ஸ்டன்

குடும்பங்கள்: 15

மாதத்திற்கு ஒருமுறை மாலை 07:30 மணிக்கு திருப்பலி

திருவிழா: செப்டம்பர் மாதத்தில் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறும் வகையில் பத்து நாட்கள்

வரலாறு:

1860களில் துரைக்குடியிருப்பு ஊரிலிருந்து, திரு. அம்புரோஸ் -ஜெயசீலி என்னும் கிறிஸ்தவ குடும்பம் பனையேற்றத் தொழில் புரிவதற்காக மேட்டுக்குடியிருப்பு பகுதியில் வந்து குடியேறினர். இவர்களுடைய ஆண், பெண் வழிமரபினரே இவ்வூரில் தற்போது கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக இருகின்றனர். 

1860 ஆம் ஆண்டு முதல் 1982 ஆம் ஆண்டு வரை மேட்டுக்குடியிருப்பில் ஆலயமோ, ஆலயத்திற்கு நிலமோ இல்லை. ஆகவே ஆலயம் மற்றும் வழிபாடுகள் சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு மேட்டுக்குடியிருப்பு மக்கள், இங்கிருந்து 1கி.மீ தொலைவில் நெடுங்குளம் உலக மீட்பர் ஆலயத்தையே

சார்ந்து இருந்துள்ளனர்.

1861 முதல் மேட்டுக்குடியிருப்பு ஊரானது சாத்தான்குளம் பங்கோடு இணைந்திருந்தது. 1924 முதல் 1984 வரை சோமநாதபேரி பங்குடன் இருந்தது.

1914 ஆம் ஆண்டு அருட்பணி. லியோன் பெஸ் அவர்கள் எழுதிய "New Madurai Mission IV" என்ற புத்தகத்தில், மேட்டுக்குடியிருப்பு ஊரில் 21 சாணார் கிறிஸ்தவர்கள் வசித்து வருவதாக குறிப்பிடுகிறார்.

1920 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்ததாகவும், பலதரப்பட்ட ஜாதியினரும், மதத்தினரும் வாழ்ந்து வந்துள்ளனர். இதில் கிறித்தவர்களும் அடங்குவர். 1920 ஆம் ஆண்டுக்கு பிறகு பிளேக் தொற்றுநோய் மற்றும் கடுமையான வறட்சி, பஞ்சத்தின் காரணமாக இங்கிருந்து பெரும்பாலான மக்களும் வேறு ஊர்களுக்கு சென்றனர். கத்தோலிக்க கிறித்தவ மக்கள் தூத்துக்குடி, சூசைபாண்டியாபுரம், மன்னார்புரம், பிரண்டாகுளம், இளயநேரி, துவர்குளம் போன்ற பல்வேறு பகுதிகளில் புலம்பெயர்ந்தனர். 

இங்கு வாழ்ந்த மக்கள் இயேசுவின் திரு இருதய ஆலயம் கட்ட வேண்டும் என்று முயற்சி செய்துள்ளனர். ஆனால் முயற்சி செய்த அனைவரும் தொற்று நோய் தாக்குதலில் இறந்து போயினர். ஆகவே அதன்பின் எவரும் ஆலயம் கட்ட நிலம் வாங்கவோ, ஆலயம் கட்டவோ முயற்சி செய்யவில்லை.

1982 ஆம் ஆண்டு அப்போதைய சோமநாதபேரியின் பங்குத்தந்தை அருட்பணி. ஜெரோசின் அடிகளார் பணிக்காலத்தில் இங்கு பத்து சென்ட் நிலம் வாங்கப்பட்டு, மண்சுவரில் தென்னை ஓலை வேய்ந்த ஆலயம் அமைத்து, புனித ஆரோக்கிய மாதாவின் பெயருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.  

1984 ஆம் ஆண்டு முதல் நெடுங்குளம் பங்குடன் இவ்வாலயம் இணைந்தது. 1985 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவின் போது இரவு, ஏற்றி வைத்துவிட்டுச் சென்ற மெழுகுவர்த்திகளால் இந்த ஆலயம் தீக்கிரையானது.

1986 ஆம் ஆண்டு நெடுங்குளம் பங்குத்தந்தை அருட்பணி. இருதயராஜா பணிக்காலத்தில் மேலும் 6 சென்ட் நிலம் வாங்கப்பட்டு, பங்குத்தந்தை மற்றும் நெடுங்குளம் இறைமக்களின் முழு ஒத்துழைப்புடன், புதிதாக அஸ்திவாரம் அமைக்கப்பட்டு, செங்கல் சுவர் எழுப்பப்பட்டது. இவ்வேளையில்  நெடுங்குளம் உலக மீட்பர் ஆலயத்தில் மேற்கூரை கான்கிரீட் அமைக்கப்பட்டதால், மாற்றிவைக்கப்பட்ட ஓடுகள் மற்றும் மரங்கள் மேட்டுக்குடியிருப்பு கொண்டு வரப்பட்டு, ஆலயத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டது. 

31.01.1987 அன்று மேதகு ஆயர் அமலநாதர் அவர்களால் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது. 

05.06.2004 அன்று அருட்பணி. அமல்ராஜ் பணிக்காலத்தில் ஆலயத்திற்கு முன்புறம் மண்டபம் கட்டப்பட்டது.

07.08.2006 அன்று அருட்பணி. ஜோசப் ஸ்டாலின் பணிக்காலத்தில், நன்கொடையாளரின் நிதியுதவியுடன் கொடிமரம் வைக்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டு மேலும் ஏழரை சென்ட் நிலம் மேட்டுக்குடியிருப்பு இறைமக்களின் ஆலயத்திற்கு வாங்கப்பட்டது.

தொடர்ந்து தூய ஆரோக்கிய மாதாவின் அரவணைப்பில், சிறப்பு பெற்று விளங்கி வருகிறது மேட்டுக்குடியிருப்பு இறைசமூகம்.

வழித்தடம்: சாத்தான்குளம் > 6கி.மீ, 

கொம்பன்குளம் > 3கி.மீ,

நெடுங்குளம் > 1கி.மீ

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. சேவியர் கிங்ஸ்டன் அவர்கள்.