332 அலங்கார அன்னை ஆலயம், சித்தன்தோப்பு

 

அலங்கார அன்னை ஆலயம்

இடம் : சித்தன்தோப்பு

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், கண்டன்விளை.

பங்குத்தந்தை : அருட்பணி சகாய ஜஸ்டஸ்
இணை பங்குத்தந்தை : வெலிங்டன்

குடும்பங்கள் : 270
அன்பியங்கள் : 8

ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணிக்கு

திங்கள் திருப்பலி : மாலை 06.00 மணிக்கு

வியாழன் மாலை 06.30 மணிக்கு மாதா கெபியில் ஜெபமாலை.

மாதத்தின் முதல் வெள்ளி : மாலை 06.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, நற்கருணை ஆசீர்.

திருவிழா : ஆகஸ்ட் 15-ஆம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள்.

மண்ணின் மைந்தர்கள் :

அருட்சகோதரர் பெஞ்சமின் (late)

1. Fr M. சேவியர் ராஜமணி (late)
2. Fr S. மரியதாசன்
3. Fr Dr. M பீட்டர்
4. Fr K. தாமஸ் குருசப்பன்
5. Fr G. இராபர்ட் ஜான் கென்னடி

1. Sis ஜெயா
2. Sis S. ஜெசிலி
3. Sis Z. டெய்சி மெற்றில்டா ரோச்
4. Sis A. சகாயமேரி
5. Sis A. ரெஜினா ரோஸ்
6. Sis F. பியா ரோஸ்
7. Sis I. அனிஷா

வழித்தடம் :
கண்டன்விளை- வில்லுக்குறி -இரயில்வே வளைவில் உள்ளே வரவும்.

நாகர்கோவில் - மூலச்சல் 11J.
நாகர்கோவில் - திங்கள்நகர் 6B.
மண்டைக்காடு - குமாரகோவில் 45D.
நாகர்கோவில்-தக்கலை 11J (கூடுதல் பேருந்து).

வரலாறு :

குமரி மாவட்டத்தின் கண்டன்விளையிலிருந்து வில்லுக்குறி செல்லும் சாலையில், இரயில் பாதையைக் கடந்ததும் காணப்படும் சடையமங்கலத்திற்கு செல்லும் பாதையில் சற்று தூரம் சென்றதும் தோட்டமும் மரக்கூட்டமும் அழகிய கட்டிடங்களும் சூழ்ந்துள்ள இடத்தில் அமைந்துள்ளது சித்தன்தோப்பு தூய அலங்கார அன்னை ஆலயம்.

இங்கு 1677 என்னும் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ள சிலுவையை, 16-ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வந்து நற்செய்தி அறிவிப்புப் பணி புரிந்த புனித பிரான்சிஸ் சவேரியாரிடமிருந்து நற்செய்தியைப் பெற்றுக் கொண்டவராக கருதப்படும் ஒரு பெண்மணி நிறுவியுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அச்சிலுவையை மையமாக வைத்து ஒரு பீடம் அமைக்கப் பட்டது. இவ்வூரிலுள்ள மக்கள் நாள்தோறும் இங்கு வந்து செபமாலை செபிக்கத் தொடங்கினர்.

பின்னர் அதில் ஒரு குருசடி கட்டி தூய அலங்கார மாதா குருசடி எனப் பெயரிட்டு, கிறிஸ்து பிறப்பு விழா, உயிர்ப்பு பெருவிழா முதலிய சிறப்பு விழாக்களின் போது இங்கு செப வழிபாடு நடைபெற்று வந்தது. கிறிஸ்து பிறப்பு விழாவின் போது முளைப்பாரி வைப்போர் வீடுகளிலிருந்து மத்தளம் கொட்டி பவனியாக அவற்றை எடுத்து வந்து குருசடியில் வைத்து பாடல்கள் பாடி செபித்து வந்தனர்.

கார்த்திகை மாதத்தில் மக்கள் பஜனை பாடல்கள் பாடி கொடிய நோயின் அச்சத்தை போக்கினர்.

1927 -ஆம் ஆண்டு வரையிலும் கண்டன்விளை மக்களோடு சித்தன்தோப்பு மக்களும் திருப்பலி மற்றும் திருவருட்சாதனங்களுக்காக பழம்பெரும் பங்காகிய காரங்காடு ஆலயத்திற்கு சென்று வந்தனர்.

1927 -ஆம் ஆண்டு காரங்காடு பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை இக்னேஷியஸ் மரியா அவர்கள் கண்டன்விளைப் பகுதியில் ஆலயம் கட்ட முயற்சி செய்து, சித்தன்தோப்பில் புனித வியாகப்பர் குருசடி இருக்குமிடத்தை தேர்வு செய்து ஆலயம் கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது, ஊற்றுநீர் பெருக்கெடுத்து வந்தமையால் தற்பொழுது கண்டன்விளை ஆலயம் இருக்குமிடத்தை தேர்வு செய்து ஆலயம் கட்டும் வேலையைத் தொடங்கினார்கள். ஆலய கட்டுமானப் பணிக்கு தங்கள் உடலுழைப்பு, நிதி, பொருளையும் பெருமளவுக்கு சித்தன்தோப்பு மக்கள் கொடுத்தனர். 1929 -இல் கண்டன்விளை ஆலயம் அர்ச்சிக்கப்பட்டு காரங்காடு பங்கின் கிளைப்பங்காக இருந்து வந்தது.

05-11-1944 அன்று கண்டன்விளை தனிப்பங்கானது. முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை வி. ஜே. ஸ்டீபன் அவர்கள் நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து 1968 வரையில் பணிபுரிந்த அருட்தந்தையர்கள் பயஸ்மேரிஸ், சேவியர் இராஜமணி, பி. ஜே. ஆர் அலெக்சாண்டர் ஆகியோருக்கு எல்லா வகையிலும் இவ்வூர் மக்கள் உதவியாக இருந்து நன்மதிப்பைப் பெற்றனர்.

ஆலயத் தொடக்கம்:

1967-ஆம் ஆண்டு மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை சூசைமிக்கேல் அவர்கள் கண்டன்விளை பங்கின் பொறுப்பை ஏற்று செயல்பட்ட வேளையில் டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி கிறிஸ்து பிறப்பு விழாவன்று சித்தன்தோப்பு குருசடியில் முதன்முதலாக திருப்பலி நிறைவேற்றி மக்கள் யாவரையும் மகிழ்ச்சிக் கடலில் திளைக்கச் செய்தார்.

அன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெருவிழா நாட்களிலும் ஆயர் இல்லத்திலிருந்து வரும் அருட்பணியாளர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.

1968 மே மாதத்தில் கண்டன்விளை பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்பணி கிரகோரி அடிகளார் வாரந்தோறும் இரண்டு நாட்கள் இங்கு திருப்பலி நிறைவேற்றினார்கள்.

1974-ல் கண்டன்விளை பங்குத்தந்தையான அருட்தந்தை வென்சஸ்லாஸ் அவர்களின் பணிக்காலத்தில் தான் குருசடி இருந்த இடத்தில் ஆலயம் கட்டும் பணிகள் துவக்கப்பட்டது. பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில் மக்கள் தங்களது உழைப்பையும் நிதிகளையும் தாராளமாக கொடுக்க பணிகள் விரைவாக நடந்து வந்தது. 1976-இல் பங்குத்தந்தையான அருட்தந்தை இயேசுதாசன் தாமஸ் பணிகளை விரைவு படுத்த, ஆலயமானது 02-01-1978 அன்று கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு மரியானூஸ் ஆரோக்கியசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. வெளிநாட்டு உதவி இல்லாமலும் மறை மாவட்ட உதவியும் இல்லாமலும் கட்டப்பட்ட முதல் ஆலயம் இதுதான் என்று ஆயர் அவர்களால் பாராட்டப்பட்டது.

1981-1986 வரை பணிபுரிந்த அருட்தந்தை அருள் தேவதாசன் காலத்தில் சிறந்த கலையரங்கம் கட்டப்பட்டது.

1986 - 1988 வரை பணிபுரிந்த அருட்தந்தை ஹிலாரியுஸ் அவர்கள் பங்குப் பேரவை அமைக்க அடித்தளமிட்டார்.

1988-1989 காலகட்டத்தில் அருட்தந்தை இயேசுமரியான் அவர்களின் பணிக்காலத்தில் திருத்தொண்டராக வந்த நசரேன் அவர்கள் (தற்போது கோட்டார் மறை மாவட்ட மேதகு ஆயர்) இங்குள்ள கட்டிடத்தில் தங்கி மக்களை சந்தித்தும், திருவழிபாடுகளுக்கு உதவி செய்தும், இளைஞர்களை ஊக்குவித்தும் வந்தார்கள்.

16-05-1985 அன்று மண்ணின் மைந்தர் அருட்தந்தை தாமஸ் குருசப்பன் அவர்களுக்கு ஆயர் மரியானூஸ் ஆரோக்கிய சாமி அவர்களால் குருப்பட்டம் வழங்கப்பட்டது.

1989-1992 வரை பணிபுரிந்த அருட்தந்தை அருள் அவர்கள் பணிக்காலத்தில் மருந்தகம் ஒன்று திறக்கப்பட்டது. 1992 -ல் புனித வாரச் சடங்குகள் சித்தன்தோப்பில் நடைபெற ஆயர் மேதகு லியோன் அ தர்மராஜ் அவர்களால் அனுமதி வழங்கப்பட்டது.

தொடர்ந்து அருட்தந்தையர்கள் சாலமோன், ஜஸ்டஸ், ரசல்ராஜ் ஆகியோர் சிறப்பாக பணியாற்றினார்கள்.

1997 -இல் ஆலயத்தின் முகப்பு (முன்புற கோபுரம்) மாற்றப்பட்டு மணிக்கூண்டுடன் கூடிய முகப்பு கட்டப்பட்டது.

அன்னை சமூகக் கூடம் :
1998 -இல் ஆரம்பித்து 01-01-2000 அன்று அப்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை இயேசு ரெத்தினம் மற்றும் மண்ணின் மைந்தர்கள் அருட்தந்தையர்கள் S. மரியதாசன், M. பீட்டர் அவர்களால் மந்திரித்து திறக்கப்பட்டது. சமூக்கூடத்தின் முதல் தளம் அருட்தந்தை ஐசக்ராஜ் பணிக்காலத்தில் கட்டப்பட்டு 31-12-2010 அன்று மண்ணின் மைந்தர் தாமஸ் குருசப்பன் அவர்களால் திறக்கப்பட்டது.

பங்கு இல்லம் :
ஆலய வெள்ளிவிழா நினைவாக பங்குஇல்லம் கட்ட 30-01-2003 அன்று ஆயர் மேதகு லியோன் அ தர்மராஜ் அவர்களால் அடிக்கல் போடப்பட்டு பணிகள் நிறைவு பெற்று 01-11-2004 அன்று அதற்குரிய நிலத்தை தானமாக வழங்கிய திருமதி பிரகாசியம்மாள் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

தூய லூர்து அன்னை கெபி :
அருட்பணி பாட்ரிக் சேவியர் பணிக்காலத்தில் மண்ணின் மைந்தர்கள் அருட்தந்தையர் பீட்டர் மற்றும் அருட்பணி இராபர்ட் ஜான் கென்னடி முன்னிலையில் அருட்தந்தை S. மரியதாசன் அவர்களால் 27-12-2014 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

புதிய ஆலயம் :

குழித்துறை மறை மாவட்ட ஆயர் மேதகு ஜெறோம் தாஸ் அவர்களால் 11-07-2015 அன்று மண்ணின் மைந்தர்களான அருட்தந்தையர்கள், முன்னாள் பங்குத்தந்தையர்கள், பங்குத்தந்தை அருட்தந்தை K. ஜார்ஜ், இணை பங்குத்தந்தை அருட்தந்தை V. பெனிட்டோ மற்றும் பங்கு மக்களின் முன்னிலையில் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் அர்ச்சிக்கப்பட்டது. 30-09-2015 முதல் ஆலய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது.

பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு மற்றும் ஒத்துழைப்பு மற்றும் பங்குத்தந்தை சகாய ஜஸ்டஸ் அவர்களின் வழிகாட்டுதலில், எதிர்பார்த்ததை விட விரைவாக அழகிய ஆலயம் கட்டப்பட்டு 30-12-2017 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

புனித வியாகப்பர் (யாக்கோபு) குருசடி :

1930 -ஆம் ஆண்டு வரையிலும் கோட்டார் மறை மாவட்டம் கொல்லம் மறை மாவட்டத்தோடு இணைந்திருந்தது. அப்போது கண்டன்விளையும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களும் காரங்காடு பங்குடன் இணைந்திருந்தன. அச்சமயம் காரங்காடு பங்கின் முடுதமாக (ஊர் தலைவர்) செயல்பட்டவர் சித்தன்தோப்பைச் சார்ந்த திரு. பாக்கியநாதன் அவர்கள். இவர் வில்லுக்குறி மலையில் தமக்கு சொந்தமான நிலப்பகுதியையும், அதனைச் சார்ந்த வயல்களையும் கொல்லம் மறை மாவட்டத்துக்கு எழுதிக் கொடுத்ததோடு, இங்கிருந்து காரங்காடு வெகு தொலைவில் இருந்ததால், இங்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை முன்வைக்க, அதனை ஏற்றுக் கொண்ட கொல்லம் ஆயர் மேதகு அலோசியஸ் மரிய பென்சிகர் OCD அவர்கள், காரங்காடு பங்குத்தந்தை அருட்தந்தை இக்னேஷியஸ் மரியா அவர்களோடு ஆலயம் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்ய வந்தனர்.

ஊர் பெரியவர்கள் ஆயர் அவர்களை தற்போது புனித வியாகப்பர் குருசடி இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தார்கள்.

அப்போது அந்த இடம் நீரூற்று நிறைந்ததாக இருந்தமையால் ரூ 500 கொடுத்து ஆலயம் கட்ட கண்டன்விளையில் தற்போது ஆலயம் இருக்கும் இடத்தை தேர்வு செய்தனர்.

திரு. பாக்கியநாதன் அவர்கள் குடுத்த நிலத்தில் தென்னந்தோப்புகளின் நடுவில் அமைந்த இவ்விடத்தில் புனித வியாகப்பர் குருசடி கட்டப்பட்டது.

அன்றிலிருந்து மக்கள் இங்கு வந்து, குறிப்பாக நோயாளிகள் இங்கு தங்கி செபித்து நலம் பெற்று சென்றனர்.

பக்த சபைகள் இயக்கங்கள் :

பாலர்சபை
சிறுவழி இயக்கம்
இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்
வின்சென்ட் தே பவுல் சபை
கிறிஸ்தவ வாழ்வு சமூகம்
கோல்பின் இயக்கம்
அடித்தள முழு வளர்ச்சி சங்கம்
இந்திய கிறிஸ்தவ மறுமலர்ச்சி இயக்கம்
கிராம முன்னேற்ற சங்கம்
கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம்
கத்தோலிக்க சேவா சங்கம்
மறைக்கல்வி போன்றவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இவ்வாறு ஒரு கிளைப்பங்காக இருந்தாலும் பங்கு மக்களின் ஒருமித்த செயல்பாடுகளால் மறைமாவட்ட உதவிகளோ வேறெந்த வெளிவட்ட உதவிகளோ இல்லாமல் புதிய ஆலயம், பங்குத்தந்தை இல்லம் ஆகியவை கட்டப்பட்டதுடன், பல்வேறு நிலைகளில் சிறந்து விளங்கும் சித்தன்தோப்பு ஆலய இறைசமூகமானது தனிப்பங்காக உயர்த்தப்பட வேண்டும் அன்பதே பங்கு மக்களின் ஆவல். அதற்காக நாமும் செபிப்போம்..!