772 புனித அன்னம்மாள் ஆலயம், மணியாச்சி

   

புனித அன்னம்மாள் ஆலயம்

இடம்: மணியாச்சி

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: குறுக்குச்சாலை

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கொம்பாடி

பங்குத்தந்தை: அருட்பணி. A. லாசர் 

குடும்பங்கள்: 2

மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 01:00 மணிக்கு திருப்பலி நடைபெறும்

திருவிழா: மே மாதத்தில் கடைசி சனி, ஞாயிறு

ஆடி மாதம் 10-ம் தேதி புனித சுவக்கின் அன்னாள் அசன திருவிழா

பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி ஆலய அர்ச்சிப்பு (முதல் ஆலயம் 25.02.1895) திருவிழா

மண்ணின் இறையழைத்தல்கள்:

அருட்பணி. தாமஸ்

அருட்பணி. பிரிட்டோ

வழித்தடம்: புளியம்பட்டி -யிலிருந்து 8கி.மீ தொலைவில் மணியாச்சி உள்ளது.

Location map:  

RC Church

https://maps.app.goo.gl/5toc55C5fxKZUwb8A

ஆலய வரலாறு:

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவில் அமைந்துள்ள கிராமமான மணியாச்சி, ஆற்காடு நவாப் ஆட்சியில் இருந்த போது அவரது ஆட்சியின் கீழ் இருந்தது.‌ அப்போது இருந்த பிராமண ஐயர்கள் ஜமீன்தாரர்களாக இருந்து இப்பகுதியை ஆண்டு வந்தனர்.

மணியாச்சி பெயர்க்காரணம்:

பிராமண ஐயர்களில் ஒருவரான மணி ஐயர் என்பவர் ஜமீன்தாராக மணியாச்சியில் வாழ்ந்து வந்தார்.‌ மணி ஐயரின் மனைவியை எல்லாரும் ஆச்சி என்று அழைத்து வந்தனர். இவர்கள் இருவரும் இறந்த போது இருவரின் பெயர்களையும் இணைத்துக்கூற விரும்பி மணி ஆச்சி (மணியாச்சி) என்ற பெயர் வந்ததாக முன்னோர் கூறுகின்றனர்.

மக்களின் வாழ்வும், மனமாற்றமும்:

பிராமண ஐயர்கள் மக்களிடம் பிரிவினைகளை உருவாக்கி, அதன் மூலம் மறவர் சமுதாயத்தை அடிமைப்படுத்தினார்கள். மறவர் சமுதாயத்து மக்களிடையே பல்வேறு விதமான கதையாடல்கள், புராணக் கதைகள், நாட்டுப்புற பழக்க வழக்கங்கள் நிலவி வந்தன. இந்தக் கதைகள் பழக்க வழக்கங்களை அவர்கள் வாய்வழிச் செய்தியாக தங்களது தலைமுறையினருக்கு வழங்கி வந்தனர். மேலும் குலதெய்வ வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு போன்ற வழிபாட்டு முறைகளும் இருந்துள்ளன.‌ இந்தச் சூழ்நிலையில் தான் கிறிஸ்தவம் இங்கு அறிமுகமாகி பரவத் தொடங்கியது. நானே உண்மையும் வாழ்வும் வழியுமாக இருக்கிறேன் என்ற இயேசுவின் போதனைகளை குறிப்பாக அருட்பணி. கௌசானல் அடிகளார், சே.ச மற்றும் பல மறைபோதகர்கள் வழியாக கேட்டறிந்தே, மக்கள் தங்களது பழைய வழிபாட்டு முறைகளை மாற்றிக் கொண்டு கிறிஸ்தவம் தழுவியுள்ளனர்.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்ட போது நவாப்கள் அடிமைப்பட்டு போனார்கள். ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவில் கிறிஸ்தவம் வேகமாக பரவியது. இதனால் பல அடித்தட்டு மக்கள் தங்களது விடுதலைக்காக கிறிஸ்தவம் தழுவினார்கள். ஆனால் மதம் மாறிய பிறகும் அவர்களது வாழ்க்கைத்தரம் உயரவில்லை. காரணம் அவர்கள் மேலும் பிற சாதியினரால் அடிமைப்பட்டு இருந்தனர். 

கிறிஸ்தவம் தழுவல்:

மறவர் சமுதாய மக்களிடம், ஜமீன் ஐயர்கள் சூழ்ச்சி செய்து அவர்களிடையே மோதல்களை உருவாக்கியதால், மறவர்களின் தொழில்வளம் நசுங்கி வறுமையில் வாடத்தொடங்கினர். இந்தக் கொடுமையிலிருந்து விடுபட அவர்கள் ஒரு வழியைத் தேடிக்கொண்டிருந்த போது, 40 குடும்பங்கள் ஆங்கிலேயரிடம் தஞ்சம் புகுந்து கிறிஸ்தவர்களாக மாற விருப்பம் தெரிவித்தனர். அருட்பணி. கௌசானல் அடிகளார் சே.ச 1897 ஆம் ஆண்டு இந்த குடும்பங்களைச் சந்தித்து, கிறிஸ்துவின் போதனைகளை எடுத்துரைத்து இவர்களுக்கு திருமுழுக்கு கொடுத்து கத்தோலிக்க திருச்சபையில் இணைத்துக் கொண்டார். இம்மக்கள் வழிபட தொடக்கத்தில் 25.02.1895 அன்று ஒரு ஓலைக் குடிசை ஆலயம் கட்டப்பட்டது.

1898 ஆம் ஆண்டு தற்போது உள்ள ஆலயத்தை அருட்பணி. கௌசானல் சே.ச கட்டினார். 

ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில் இரயில்வே துறையில் முன்னேற்றம் அடைந்த போது, ஆங்கிலேயர்கள் மறவர் சமுதாய மக்களுக்கு இரயில்வே துறையில் வேலைவாய்ப்புக் கொடுத்து, அவர்களின் வாழ்வை வழப்படுத்தினார்கள்.

மக்கள் இடம்பெயர்ந்த வரலாறு:

ஆங்கிலேயர் கொடுத்த வேலைவாய்ப்புகளால் மக்கள் பிற ஊர்களில் வேலை செய்ய வேண்டியிருந்ததால், இம்மக்கள் குடும்பத்துடன் திருநெல்வேலி, கடம்பூர், தூத்துக்குடி, கோவில்பட்டி, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் பல ஊர்களுக்குச் சென்று வாழ்ந்தனர். மேலும் மணியாச்சியில் தொழில் வளம் குறைந்த காரணத்தினாலும் பலர் தொழில் நிமித்தமாக பல ஊர்களில் குடியேறினர்.

மாதா சுரூபம்:

கீழவைப்பார் பங்குத்தந்தையாக அருட்பணி. பூபாலராயர் பணிபுரிந்த போது பிரான்ஸ் நாட்டில் இருந்து இரண்டு மாதா சுரூபங்கள் இலங்கை வழியாக கொண்டு வரப்பட்டு, அதில் ஒன்று மணியாச்சி ஆலய திருவிழா தேர்பவனியில் வலம் வந்ததாகவும் கூறப்படுகிறது. 

ஆலயம் புதுப்பித்தல்:

சமுதாயத்தில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாகவும், தொழில்கள் தேடி கிறிஸ்தவ மக்கள் வெளியூரில் சென்று வாழ்ந்து வந்தனர். சில பெரியவர்களும் அவர்களது வாரிசுகளும், சில நல்லுள்ளங்களும் சேர்ந்து 100 ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் மிக்க ஆலயத்தை புனரமைத்து பணிசெய்ய வேண்டும் என்று, கொம்பாடி பங்குத்தந்தையிடம் கேட்டுக் கொண்டனர். அதன்படி அனைவரின் ஒத்துழைப்புடன் ஆலயம் அழகுற புதுப்பிக்கப்பட்டு, 24.05.2003 அன்று மணியாச்சி மண்ணின் மைந்தர்களான அருட்பணி. வியான்னி,  அருட்பணி. தாமஸ், அருட்பணி. பிரிட்டோ ஆகியோர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

இரண்டாவது ஞாயிறு:

ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 01:00 மணிக்கு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இரண்டு கத்தோலிக்க குடும்பங்கள் மட்டுமே இந்த ஊரில் வாழ்ந்து வந்தாலும், இந்த ஊரைச் சேர்ந்த வெளியூரில் வாழ்கின்ற பெரும்பாலான மக்களும் இந்தத் திருப்பலியில் பங்கேற்று சிறப்பிக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்க நிகழ்வாகும்.

பாரம்பரியமும் புதுமையும் நிறைந்த வாஞ்சி மணியாச்சி புனித அன்னாள் ஆலயம் வாருங்கள்..!! இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்..!!

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. லாசர் அவர்கள்.

ஆலய வரலாறு: அருட்பணி. மரியதாஸ் லிப்டன் (கொம்பாடி தளவாய் புரம் மண்ணின் மைந்தர்)

புகைப்படங்கள்: ஆலய உறுப்பினர் திரு. பாக்கியசாமி.