143 புனித யூதா ததேயுஸ் திருத்தலம், சுவாமியார்மடம்


புனித யூதா ததேயுஸ் திருத்தலம்

இடம் : சுவாமியார்மடம்.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : அருட்பணி திவ்யானந்தம் OCD

நிலை : திருத்தலம்
கிளைகள் : இல்லை.

குடும்பங்கள் : 350
அன்பியங்கள் : 9

ஞாயிறு திருப்பலி : காலை 09.00 மணிக்கு

திருவிழா : டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் பத்து நாட்கள்.

அக்டோபர் 28 ம் தேதி புனித யூதா ததேயுஸ் விழா ஒரு நாள் கொண்டாடப்படும்.

வரலாறு :

முக்கடலும் சங்கமிக்கும் குமரி மாவட்டத்தில், முக்கனியும் பரந்து விளையும் நாஞ்சில் நாட்டின் எழில்மிகு சிற்றூர் சுவாமியார்மடம். நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுவாமியார்மடம் சந்தையிலிருந்து வடக்கே மேக்கோடு சாலையில், சீற்றத்துடன் செல்லும் சிற்றாறு பட்டணங்கால்வாய் பக்கத்தில், எப்பக்கமும் பச்சை பசேலென்று காணப்படும் 🌾வயல்வெளிகளுக்கு அருகில், எங்கு நோங்கினும் வானுயர வளர்ந்து நிற்கும் 🌴'பனை' மரங்களுக்கு மத்தியில், 1967 ம் ஆண்டு அருட்தந்தை ஜெரோம் OCD அவர்களின் முயற்சியால் ஒரு ஏக்கர் 1சென்ட் இடம் வாங்கி ஒரு சிற்றாலயத்தைக் கட்டி⛪ அதை புனித யூதா ததேயு - வுக்கு அர்ப்பணித்தார். அதே ஆண்டு அருட்தந்தை ஸ்டீபன் OCD அவர்களின் முயற்சியால் மங்களூரிலிருந்து புனிதரின் திருசொரூபம் வரவழைக்கப்பட்டது. 6-10-1968 ஞாயிறு மாலை 06.00 மணிக்கு அன்றைய கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு T. R ஆஞ்ஞிசாமி SJDD அவர்களால் ஆலயம் புனிதப் படுத்தப்பட்டு மக்கள் வழிபாட்டுக்கு வரத்துவங்கினர்.

இச் சிற்றூரில் வாழ்ந்த நீண்ட தாடியுடன் துறவி போன்று காட்சி தரும் திரு அந்தோணிமுத்து என்னும் குடும்பத் தலைவர் தான், இப்பகுதியில் கிறிஸ்தவம் தழைக்க உதவியவர். இவருக்கு ஆண் மக்கள் 6 பேர். இவர்கள் யாவரும் தங்கள் தந்தையோடும், அருட்தந்தை சிக்ஸ்டஸ் OCD அவர்களோடும் சேர்ந்து அயராது மறைபரப்பு பணிசெய்து இத்திருத்தல வளர்ச்சியில் வித்திட்டவர்கள்.
நவநாள் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே சாரை சாரையாய் ஆயிரமாயிரம் மக்கள் கூட்டம் கேரளா மற்றும் கடற்கரைப்பகுதியில் இருந்தும் கூடினர். ஒவ்வொரு நாளும் ஏராளமான 📜நன்றி கடிதமும் விண்ணப்பங்களும் குவியத் துவங்கியது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தி மக்கள் அனைவரும் வழிபாடுகளில் நன்கு பங்குபெற ஒரு பெரிய பந்தல் போடப்பட்டு ஆயிரக்கணக்கானோர் அமரக் கூடிய விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

 ஏன் இந்த கூட்டம்...!
இங்கு என்ன தான் நடக்கிறது....?
காரணம்.....
இப்புனிதர் கைவிடப்பட்டவர்களின் காவலர், நம்பிக்கை இழந்தவர்களின் நம்பிக்கை, இயலாதவற்றை இயலச்செய்பவர், ஆழ்ந்த தாழ்ச்சியும் மிகுந்த பொறுமையும் உள்ளவர். பெருந்தியாகி, தப்பறைகளை பரப்பியவரைக் கண்டித்தவர், திருக்குடும்பத்தின் நெருங்கிய உறவினர், இயேசுவின் திருவுருவச் சாயலை நெஞ்சில் தாங்கியவர். இப்படிப்பட்டவராகிய புனித யூதா ததேயுஸ் ஆற்றல் அற்றவராக இருக்க முடியுமா...? அதனால் தான் இந்த மக்கள் கூட்டம்.

திருத்தலம் மட்டுமன்று, பொதுநிலையினரின் ஆன்மீக மையமாகவும் திகழ்கிறது. எப்போதும் செப மணம் கமழும் இடமாகத் திகழ்கிறது என்றால் மிகையாகாது. ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்வுகளைப் பார்த்தாலே நமக்கு புரிந்து விடுகின்றன.

ஒவ்வொரு நாளும் (ஞாயிறு தவிர) இரண்டு அருட்சகோதரிகள், ஒரு அருட்சகோதரர் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையிலும் மக்களின் விண்ணப்பங்களை வைத்து பரிந்துரை செபம் செய்யப்படுகிறது. எல்லா புதன்கிழமை மாலை 06.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நற்செய்தி கொண்டாட்டமும், நற்கருணை ஆராதனையும் நடைபெறும்.

மாதத்தின் முதல் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் தமிழ் தியானமும். மாதத்தின் 4 ம் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் மலையாள தியானமும் நடைபெறுகிறது.

மாதத்தின் 2 ம் சனிக்கிழமை இரவு 09.00 மணி முதல் அடுத்தநாள் ஞாயிறு காலை 05.00 மணி வரை விழித்திருந்து செபமும் நடக்கிறது. இவ்வாறாக இத்திருத்தலத்தில் மக்களின் ஆன்மீகத் தேவைகள் சிறப்பாக கொடுக்கப்பட்டு கைவிடப்பட்டவர்களின் காவலரான புனித யூதா ததேயுஸ் வழியாக இறைவனின் அருள் வளங்களை பெற்ற செல்கின்றனர்.

இத்திருத்தலத்திற்கு வருகின்ற மக்களின் வருகை அதிகரிப்பால் போதிய இடவசதி இல்லாததாலும் ஆலயம் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாலும் பழைய ஆலயம் இடிக்கப்பட்டு 2012 ம் ஆண்டு புதிய ஆலயம் கட்டப்பட்டு வருகின்றது. பணிகள் தற்போது விரைவாக நடந்து வருகிறது, மேலும் கட்டுமானத் தேவைகளுக்கு நிதிகள் தேவைப்படுவதால், நன்கொடைகள் கொடுக்க நினைப்பவர்கள் இத் திருத்தல பங்குத்தந்தை மற்றும் நிர்வாகத்தினரை அணுகவும்.

(ஆலய வரலாற்றை, இத்திருத்தல வரலாற்று புத்தகத்திலிருந்து பெற்று தட்டச்சு செய்து பதிவு செய்துள்ளோம்)