793 தூய ஜாண் போஸ்கோ ஆலயம் பாத்திமாநகர்

  
     

தூய ஜாண் போஸ்கோ ஆலயம்

இடம்: பாத்திமாநகர், உசரத்துவிளை, கீழ்குளம் அஞ்சல்

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: குழித்துறை

மறைவட்டம்: வேங்கோடு

நிலை: கிளைப்பங்கு

பங்கு: தூய இதய அன்னை ஆலயம், அம்சி

பங்குத்தந்தை: அருள்பணி. காட்வின் சௌந்தர்ராஜ்

குடும்பங்கள்: 164

அன்பியங்கள்: 8

ஞாயிறு திருப்பலி காலை 08:30 மணி

வியாழன் மாலை 06:00 மணி தூய ஜாண் போஸ்கோ நவநாள், திருப்பலி, நற்கருணை ஆசீர்

திருவிழா: ஜனவரி மாதம் 31 ஆம் தேதியை மையமாகக் கொண்டு பத்து நாட்கள்.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி  கிறிஸ்து ராஜ், கிளரேசியன் சபை, கல்கத்தா 

2. அருட்சகோதரி. ஜெனிலா வின்சென்ட், கார்மல் சபை, செங்கல்பட்டு

3. அருட்சகோதரி. ஜெமினிஷா, கார்மல் சபை 

4. குருமாணவர். ரிஜோபின், குழித்துறை மறைமாவட்டம்

வரலாறு:

நெய்தல் அன்னையின் இதமான தென்றல் காற்று தாலாட்ட, மருதத்தாயின் கவின்மிகு சோலை வனப்பில், முக்கடலும் சங்கமித்து இயற்கை கொஞ்சி தவளும் கன்னியாகுமாரி மாவட்டம், தேங்காய்பட்டணத்திலிருந்து 1கி.மீ தொலைவில், உசரத்து விளை என்னுமிடத்தில் ஓங்கி உயர்ந்து இறையருளை குறைவில்லாது நிறைவாக பொழியும், இளையோரின் பாதுகாவலராம் தூய ஜாண் போஸ்கோவின் திருப்பெயரைக் கிறிஸ்தவ வாழ்வுக்கு முன்மாதிரியாகவும், பாதுகாவலாகவும் கொண்டு துலங்கும் இறைசமூகமே பாத்திமா நகர், தூய ஜாண் போஸ்கோ ஆலயம், உசரத்துவிளை ஆகும். 

1929 ஆம் ஆண்டு தற்போதுள்ள ஆலயம் இருக்கும் பகுதியில், சில குடும்பங்கள் இணைந்து தாங்கள் நம்பிக்கையை அறிக்கையிடுவதற்காக விலையில்லாமல் கொடுத்த நிலத்தில், தென்னை ஓலையில் வேயப்பட்ட ஒரு வழிப்பாட்டு தலம் அமைத்து, அதில் மனுகுலத்துக்கு மீட்பு வழங்க மனிதனாக பிறந்து, பாடுபட்டு, உயிர்த்த இயேசுவின் திருச்சிலுவையை  வைத்து வழிபட ஆரம்பித்தனர். இவ்வாறு மக்கள் விசுவாசத்தில் வளர்ந்து வந்த  அக்காலக்கட்டத்தில் புதுக்கடை பங்குப் பணியாளராக இருந்த அருட்பணி. வர்கீஸ் அவர்களின் பெரும் முயற்சியால், இறைவழிபாட்டு இடத்திலேயே கல்வியறிவு  புகட்டும் பணியும் ஆரம்பிக்கப்பட்டது. ஏனெனில் விசுவாச வாழ்வு என்பதே மானிடரை சமூக, பொருளாதார, அரசியல் தளர்த்தில் உயர்த்துவதே.

1950களில் அருட்பணி. பால் ஸ்டீபன் அவர்கள் ஐந்து சந்தியாசிகளோடு இணைந்து, இந்த ஆலயத்தின் அருகில் ஓடு வேயப்பட்ட சிறிய கட்டிடம் அமைத்து, அதில் தங்கி இறைப்பணி செய்து வந்தனர். இவர் பணி செய்த காலத்தில், இவருடைய முயற்சியாலும், பங்கு மக்களின் உழைப்பாலும் முதலில் ஓலைகளால்  வேயப்பட்ட ஆலயம், ஓடு வேயப்பட்ட ஆலயமாக மாற்றம் பெற்றது.

தற்போதைய ஆலய பீடத்தின் இடது புறம் அமைந்துள்ள பாத்திமா அன்னை சுரூபமானது, அருட்பணி. பால் ஸ்டீபன் முயற்சியால் ஸ்பெயின் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு இந்த ஆலயத்தில் நிறுவப்பட்டது. அன்று முதல் உசரத்துவிளை என வழங்கி வந்த  ஆலயம் அமைந்ந இடம், "பாத்திமா நகர்" என அன்னையின் திருப்பெயரை தனதாக்கி தனியொரு அடையாளமாக அப்பகுதி வாழ் மக்கள் அனைவரையும் தன்பால் கவர்ந்திழுக்கிறது.

வெளிநாட்டினரான பாசமிகு அருட்தந்தை. பால் ஸ்டீபன் மிகவும் சமூக அக்கறை கொண்டவர். ஏழை எளியோராய்,  வறுமையில் உழன்ற மக்களுக்கு திருஅவையின் வெளிநாட்டு  உதவிகளைப் பெற்றுத் தந்தார்.  கோதுமை, பால் பொடி என வழங்கப்பட்ட  உணவுப்  பொருட்கள்  மக்களின் பசியாற்றியதோடு, சமூக வாழ்வை உயர்த்தியது. 

இவ்வாறு பல நலப்பணிகள் செய்த இவருடைய பணிக்காலம் இப்பங்கு வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை. பங்கு மக்களின் மனதில் காலங்காலமாக அவர் வாழ்ந்து வருகிறார்.

அருட்பணி. லூக்காஸ் அவர்கள் பங்குத்தந்தையாக பணி செய்த காலத்தில், பங்கு உறுப்பினரில்  ஒருவர் ஆரோக்கிய அன்னையின் மீது கொண்ட பற்றால், பங்குத்தந்தையின் அனுமதியோடு, ஆலயத்தின் முன்புறம் நேர்ச்சையாக தூய ஆரோக்கிய அன்னை குருசடி அமைத்துத் தந்தார். இக்குருசடி செப்டம்பர் 8, 1988 அன்று அர்ச்சிக்கப்பட்டது. பின்னர் 2013 ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. வழியோரம் பயணிக்கும் அத்தனை பயணிகளுக்கும் இக்குருசடி பாதுகாப்பின் சின்னமாய் உயர்ந்து நிற்கிறது.

இறைமக்களின் தேவைக்கேற்ப புதிய ஆலயம் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இறைமக்கள் ஒத்துழைப்பாலும், பங்குதந்தை அருட்பணி. பிரான்சிஸ் அவர்களின் ஒத்துழைப்புடனும், அப்போதைய ஆயர் மேதகு. லியோன் அ. தர்மராஜ் அவர்களால் 13-10-1991 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, புதிய ஆலய கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. 

1993 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அருட்பணி. ஜேசுதாஸ் அவர்களும் ஆலயபணிகள் தொடர்ந்திட ஊக்கம் தந்து துணை நின்றார். பின்னர் அருட்பணி. பால் ரிச்சர்ட் ஜோசப் அவர்கள் பணிக்காலத்தில் ஆலய பணிகள் நிறைவுப் பெற்று 31-01-2000 அன்று, தூய ஜாண் போஸ்கோவின் விண்ணக பிறந்த நாளன்று அப்போதைய  ஆயர் மேதகு லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு புதிய ஆலயம் திறக்கப்பட்டது. 

பின்னர் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்பணி. மைக்கேல் ராஜ் அவர்கள் பணிக்காலத்தில் ஆலயத்தின் மேற்குப் பகுதியில் 11 சென்ட் நிலம் வாங்கப்பட்டது.

அருட்பணி. கில்பர்ட் லிங்சன் அவர்கள் பணிப்பொறுப்பேற்ற பின், 2014 ஆண்டில் ஆலயத்தை சுற்றி இன்டர்லோக் போடப்பட்டது. 2015 ஆம் ஆண்டு, மே மாதம் புனித ஜாண் போஸ்கோவின் 200 -வது பிறந்தநாள் நினைவாக, 200 இளைஞர்கள் கலந்து கொண்ட ஜோதி ஓட்டம் அருட்பணி. கில்பர்ட் லிங்சன் தலைமையில், கருங்கல் துண்டத்துவிளை தூய அந்தோணியார் ஆலய வளாகத்தில், அருட்தந்தை. பீட்டர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. சுமார் 8 கி.மீ நடைப்பெற்ற ஜோதி ஓட்டம் பாத்திமாநகர் ஆலயத்தில் நிறைவுப் பெற்றது.  அப்போதைய ஆயர் மேதகு ‌ ஜெரோம் தாஸ் அவர்கள் ஜோதியைப் பெற்றுக்கொண்டார்கள். இந்நிகழ்வு இன்னமும் வரலாற்றுச் சுவடாக அனைவர் உள்ளங்களிலும் ரீங்காரமிட்டு கொண்டிருக்கிறது. 

2015 ஆம் ஆண்டு பங்கு உறுப்பினர் ஒருவரின் நெஞ்சார்ந்த அன்பளிப்பால், ஆலயத்தின் முன்புறம்  கொடி மரம் ஒன்று  அமைக்கப்பட்டது. பங்குத் தந்தையின் முன்னிலையில் அப்போதைய ஆயர் மேதகு ஜெரோம் தாஸ் அவர்களால் 22-04-2015 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு அப்போதைய பங்குதந்தை அருள்பணி. கில்பர்ட் லிங்சன் அவர்களால் தூய ஜாண் போஸ்கோவின் நவநாள் தயாரிக்கப்பட்டு, 25-08-2016 முதல் வியாழக்கிழமை மாலை 05:30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலியும் சிறப்பிக்கப்பட்டு, நிறைவாக புனித கஞ்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அருட்பணி. கலிஸ்டஸ் அவர்கள் பொறுப்பேற்ற உடனே, முன்னாள் பங்கு தந்தையால் திட்டமிடப்பட்ட ஆலயம் புதுப்பிக்கும் பணி மற்றும் புதிய பீடம் அமைத்தல் பணி போன்றவை ஆரம்பிக்கப்பட்டன. 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இப்புதுப்பித்தல் பணிகள்  நிறைவு பெற்றன. புதுப்பொலிவோடு எழிலாக ஒய்யாரமாக காட்சி தரும் ஆலயத்தில் இறைமக்கள் இணைந்து ஜெபித்து  திருவிழா கொண்டாடி மகிழ்ந்தனர். 

2018 ஆம் ஆண்டு ஆலய பாலர், சிறார், இளையோர் மற்றும் பங்கு மக்களின் கலையுணர்வை வளர்ப்பதற்காக  கலையரங்க பணிகள் துவங்கப்பட்டு குறிப்பிட்ட நாளில் நிறைவுப் பெற்றது. 

2019ஆம் ஆண்டு  பங்குத்தந்தையின் முயற்சியால் சில குழந்தைகளுடன்   துவங்கப்பட்ட நடன வகுப்பு, இன்று 40 பிள்ளைகளுடன் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இதில் பிற சபை மற்றும் சமய குழந்தைகள் பங்கேற்று பயனடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சிறப்பாக செயல்பட்டு வரும் பாத்திமாநகர் பங்கு சமூகம் கடந்த காலக்கட்டத்தில் புதுக்கடை, வேங்கோடு, இனயம், இனயம் புத்தன்துறை போன்ற பங்குகளின் கிளைப்பங்காக செயல்பட்டு, தற்போது அம்சி மணியாரங்குன்று பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வருகிறது.

தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. காட்வின் செளந்தர் ராஜ் அவர்களின் வழிகாட்டுதல்களாலும், பங்கு மக்களின் உடனிருப்பாலும், 8 அன்பியங்களாகவும், 12 திருத்தூது கழகங்கள், குழுக்கள் மற்றும்  இயக்கங்களாகவும் இணைந்து நம்பிக்கையில் வேரூன்றி, சமூக பணிகளில் கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறது.

இயேசுவின் இறையாட்சிக் கனவை நனவாக்க, ஒவ்வொரு நாளும் முயற்சிக்கும் ஓர் எளிய இறைசமூகமாக இந்த ஆலயம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை. 

சிறப்புகள்:

1929 ல் தூய ஜாண் போஸ்கோவிற்கு அருளாளர் பட்டம் கொடுக்கப்பட்ட அதே ஆண்டில்  இப்பங்கு ஆலயம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டாறு, குழித்துறை மறைமாவட்டத்தில் தூய ஜாண் போஸ்கோவின் திருப்பெயரால் அமைந்த ஒரே ஆலயம் இவ்வாலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலே தூய ஜாண் போஸ்கோவின் பெயருக்கு  அர்ச்சிக்கப்பட்ட முதல் ஆலயம், இவ்வாலயம் என்பது  இப்பங்கிற்கு இன்றும் பெருமை சேர்க்கிறது.

இளையோரின் பாதுகாவலர் தூய ஜாண் போஸ்கோவின் கனிவான  மன்றாட்டும், இடைவிடா சகாய அன்னையின்  தன் மகன் இயேசுவுடனான பரிந்துரையும், இறைமகன் இயேசுவின் அருளாசியும்  மக்களின் வாழ்க்கைப் பாதையில் இறையொளி பரப்பி துணை நிற்கிறது.

தொடர்வோம் நம் புனிதரின் பாதையை

அவரோடு உழைப்போம் இறையாட்சி பணிக்காய்..!

ஆலயத்தில் உள்ள வசதிகள்:

1. மாதா குருசடி

2. புனித ஜாண் போஸ்கோ நூலகம்

3. பங்குத்தந்தை இல்லம்

4. கலையரங்கம்

5. நாட்டியப்பள்ளி

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. பாலர் சபை

2. சிறார் இயக்கம்

3. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

4. புனித ஜாண் போஸ்கோ இளையோர் இயக்கம்

5. கத்தோலிக்க சேவா சங்கம்

6. கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம்

7. மரியாயின் சேனை

8. புனித வின்சென்ட் தே பவுல் சபை

9. மறைக்கல்வி

10. அடித்தள முழுவளர்ச்சி சங்கம்

11. பங்குப்பேரவை

12. பாடகற்குழு

வழித்தடம்: கருங்கல் -கீழ்க்குளம் -தேங்காப்பட்டணம் வழித்தடத்தில் பாத்திமாநகர் அமைந்துள்ளது.

Location map:

St. John Bosco Church

https://maps.app.goo.gl/KT5CafLDPHxtyqp86

Church Facebook page link : https://www.facebook.com/St-John-Bosco-Church-Fathima.../

Church YouTube channel link : https://youtube.com/channel/UCyocEcn35BotoGdLLZno6AA

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்:

பங்குப்பணியாளர் அருட்பணி. காட்வின் சௌந்தர்ராஜ் அவர்கள்.

கூடுதல் புகைப்படங்கள்: ஆலய உறுப்பினர்.