426 பிரகாசமாதா திருத்தலம், லஸ்

      

பிரகாச மாதா திருத்தலம் (லஸ் சர்ச்)

இடம் : லஸ், சென்னை

மாவட்டம் : சென்னை
மறை மாவட்டம் : சென்னை -மயிலை உயர் மறை மாவட்டம்.
மறை வட்டம் : சாந்தோம்.

நிலை : திருத்தலம்

கிளைப்பங்கு : புனித அந்தோணியார் ஆலயம், கோபாலபுரம் (ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி எதிரில்)

பங்குத்தந்தை : அருட்பணி பீட்டர் தும்மா

இணை பங்குத்தந்தை : அருட்பணி சேவியர் MMI

குடும்பங்கள் : 550
அன்பியங்கள் : 15

ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கு தமிழ்
காலை 07.30 மணிக்கு தமிழ்
காலை 09.00 மணிக்கு சிறார் திருப்பலி
மாலை 06.00 மணிக்கு English

திங்கள் முதல் சனிக்கிழமை வரை : காலை 05.45 மணிக்கு ஜெபமாலை, காலை 06.00 மணிக்கு நற்கருணை ஆராதனை, காலை 06.30 மணிக்கு திருப்பலி மற்றும் நண்பகல் 12.00 மணிக்கும் திருப்பலி.

திருவிழா : ஆகஸ்ட் மாதம் 05-ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15-ஆம் தேதி நிறைவடைகின்ற வகையில் பத்து நாட்கள்.

Location map : https://maps.google.com/?cid=5315839541744804500

வரலாறு :
சென்னை மாநகரில் முதன் முதலாக கட்டப்பட்ட ஆலயம் புனித பிரகாச மாதா ஆலயம். இந்த ஆலயம் போர்த்துக்கீசியரால் கட்டப்பட்டது. வாஸ்கோடகாமா கடல் மார்க்கத்தைக் கண்டுபிடித்த பின் போர்த்துக்கீசிய வணிகர்கள் கடல் வழியாக பிற நாடுகளுக்கு வாணியம் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்கள் கத்தோலிக்க மறையைத் தழுவிய வணிகர்கள் என்பதால் தாங்கள் செல்லும் இடமெல்லாம் மறை போதகர்களை அழைத்துச் செல்வார்கள். மறைபோதகர்கள் அவர்களுக்குத் திருப்பலி, அருட்சாதனங்கள் நிறைவேற்றுவார்கள். இவ்வாறாக போர்த்துக்கீசிய வணீகக்கப்பல் ஒன்று கி.பி.1500ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதியன்று லிஸ்பன் நகரிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டது. இக்கப்பலில் பேதுரு அல்வராஸ் காப்ரால் தலைமையில் பிரான்சிஸ்கன் துறவிகளும் பயணம் செய்தார்கள். அங்கே வியாபரம் செழித்தோங்கியதால் அப்மோசா என்ற கோட்டையை 1511ல் வணிகர்கள் கட்டினார்கள். ஒருமுறை மலாக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பும்போது கப்பல் புயல் காற்றினால் சிக்கி அலைக்கழிக்கப்பட்டு அபாயகரமான சூழ்நிலை உருவானது.

அந்நேரத்தில் பிரான்சிஸ்கன் துறவிகளும், மாலுமிகளும், வணிகர்களும் சேர்ந்து அன்னை மரியாவை நோக்கித் தங்களை காப்பாற்றும்படி உருக்கமாகச் செபித்தார்கள். அப்போது திடீரென அவர்கள் கண்களுக்கு ஓர் ஒளி தோன்றியது. அதைப்பார்த்தவுடன் பரவசத்தால் தங்கள் கப்பலை ஒளியை நோக்கித் திருப்பி, தற்போதுள்ள தோமையார் கல்லறைக்கு அருகில் உள்ள மயிலாப்பூர் கடற்கரையை அடைந்தனர். பின்பு அவர்கள் அந்த அபூர்வமான ஒளியை நோக்கிப் பின்தொடர்ந்தார்கள். அவ்வொளியானது அவர்களை ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று மறைந்தது.

இந்த அனுபவத்தால் பிரான்சிஸ்கன் துறவிகள் தங்களை ஒளியின் வழியாகக் காப்பாற்றிய அன்னை மரியாவுக்கு நன்றி செலுத்தும் வகையில் ஓர் ஆலயத்தைக் கட்டினார்கள். இன்றும் இவ்வாலயம் இப்பகுதி மக்களால் காட்டுக்கோயில் என்று அழைக்கப்படுகின்றது. சென்னை மாநகரில் தற்போது இக்காட்டுப்பகுதி மறைந்தாலும் இவ்வாலயத்தின் வரலாறு இன்றும் நிலைத்து நிற்கிறது. இப்பகுதி லஸ் என்று அழைக்கப்படுகிறது. போர்த்துக்கீசிய மொழியில் லஸ் என்றால் ஒளி எனப் பொருள்படும்.

இக்கோயில் மக்களுக்கு விசுவாசத்தின் சான்றாகவும், நம்பிக்கையின் சின்னமாகவும் திகழ்கிறது. இவ்வாலயம் 1516ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இவ்வாலயம் அவ்வப்பொழுது பழுதுபார்த்தும், புதுப்பித்தும் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக உள்ளது. 15-09-2010 ஆம் ஆண்டு இவ்வாலயம் திருத்தலமாக உயர்த்தப்பட்டு மாதாவின் புகழ் உலகமெங்கும் பரவ வழிவகுத்து நிற்கிறது.

2016 ஆம் ஆண்டு திருத்தலத்தின் 500 வது ஆண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தற்போது பங்குத்தந்தை அருட்பணி. பீட்டர் தும்மா மற்றும் இணைப் பங்குத்தந்தை அருட்பணி. சேவியர் ஆகியோரின் முயற்சியால் பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் திருத்தலமானது, பழைமை மாறாமல் அழகுற புதுப்பிக்கப்பட்டு 25.01.2020 அன்று சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் மேதகு டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களால் புனிதப் படுத்தப் பட்டது.

அன்னையின் பரிந்துரையால் இறையாசீரையும், அருளையும் நிரம்பப் பெறவும், குறைகள் நீங்கவும், விரும்புவதைப் பெறவும், மகிழ்வோடு வாழவும் இந்தப் பழமையான திருத்தலத்திற்கு வருகைத் தாருங்கள். மகிமை நிறைந்த பிரகாச அன்னையின் வல்லமையான பரிந்துரையால் நிறைவாழ்வு பெற அழைக்கின்றோம்.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. பீட்டர் தும்மா அவர்கள்.