557 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், சவேரியார்புரம், ஸ்ரீரங்கம்

   

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் 

இடம் : சவேரியார்புரம், ஸ்ரீரங்கம், திருச்சி -06.

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி 

மறைமாவட்டம் : கும்பகோணம் 

மறைவட்டம் : இலால்குடி

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : அமல ஆசிரமம், ஸ்ரீரங்கம் 

பங்குத்தந்தை : அருள்பணி. ஆ. தைனிஸ், கப்புச்சின் சபை 

இணைப் பங்குத்தந்தை : அருள்பணி. இ. டேனியல் தயாபரன் 

குடும்பங்கள் : 70

அன்பியங்கள் : 2 (புனித சகாய அன்னை & இறைஊழியர் ஜான் பீட்டர்) 

திருப்பலி : புதன்கிழமை மாலை 07.30 மணிக்கு. 

திருவிழாக்கள்:

ஆலயத் திருவிழா : டிசம்பர் 3 ம் தேதி. 

இதர விழா : புனித அந்தோனியார் பொங்கல். 

நிறுத்தம் : ஸ்ரீரங்கம் பேருந்து நிறுத்தம் மற்றும் ஸ்ரீரங்கம் இரயில் நிலையம்.

வரலாறு :

கப்புச்சின் குருக்களின் மறைப்பணி :

சவேரியார்புரத்தில் சுமார் 200 வருடங்களுக்கு மேலாக கிறிஸ்துவர்கள் வாழ்ந்து வருகின்றனர். முன்னோர்களின் வாரிசுகளாக தலைமுறை தலைமுறையாக இந்த இடத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வூரில் வாழும் மக்கள் சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பின்தங்கியவர்கள். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் துப்புரவு வேலைகளை மேற்கொள்வதற்காக, இவ்விடத்தில் குடியமர்த்தப் பட்டவர்கள். மேலும் இவர்கள் புறத்தாக்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து, குடியேறியவர்களாவர். இவர்களின் முன்னோர்கள் இங்கு  சிறிய ஆலயமாக அமைத்து இறைவனை வழிபட்டு வந்தனர். ஆன்மீகத் தேவைகளுக்கு புறத்தாக்குடி பங்கின் உதவியை நாடி வந்தனர். காலம் கடந்த பிறகு ஸ்ரீரங்கத்தில் கப்புச்சின் குருக்கள் அமல ஆசிரமம் என்ற பெயரில் இல்லம் அமைத்தப்பிறகு, சவேரியார்புரம் என்ற இப்பகுதியில் மறைப்பணி மற்றும் சமூகப் பணிகளை மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர். சவேரியார்புரத்தில் 1954 ஆம் ஆண்டு அருள்பணி. டென்னிஸ் அவர்கள் ஒரு சிறிய பீடம் அமைத்து, சிற்றாலயம் ஒன்றை எழுப்பி புனித பிரான்சிஸ் சவேரியாருக்கு அர்ப்பணித்தார். இவரைத் தொடர்ந்து பல்வேறு அமல ஆசிரமம் கப்புச்சின் அருள்பணியாளர்கள், இவ்வூருரின் வளர்ச்சிக்காக பாடுபட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. 

புதிய வீடுகள் அமைத்தல்:

அருள்பணி. மாற்கு, அருள்பணி. பங்குராசு, அருள்பணி. அருள்தாஸ், அருள்பணி. மத்தியாஸ், அருள்பணி. மரியதாஸ் ஆகியோர் இவ்வூர் மக்களின் வளர்ச்சிக்காக அக்கறையோடு செயல்பட்டனர். அமல ஆசிரமம் அருள்பணியாளர்கள் ஜான் அந்தோனி, பங்குராசு ஆகியோரின் மேற்பார்வையில் புதிய வீடுகள் கட்டுவதற்கான உதவிகள் செய்யப்பட்டன. 1977 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, இங்கிருந்த வீடுகள் எல்லாம் இடிந்து போயின. ஆலயம் மட்டும் அப்படியே நின்றது. அதனுள்ளே ஒரு சுரூபம் மட்டும் அப்படியே நின்றது. அன்று முதல் இன்று வரையிலும் புனித சவேரியார் இம்மக்களுக்கு துணையாக இருந்து பாதுகாத்து ஆசி வழங்கி வருகின்றார். வெள்ளத்தால் வீடுகளை இழந்து நின்ற மக்களுக்கு, அப்போதைய அருள்தந்தையர்கள் சூசை அருள் (அமல ஆசிரமம் அதிபர்), ஜான் அந்தோனி, மரியதாஸ் மற்றும் ஜோசப் அடிகளார் ஆகியோர் இணைந்து ஓட்டு வீடுகள் கட்டிக் கொடுத்தனர். சமய பாகுபாடு பாராமல் கிறிஸ்துவர்களும் ஒரே குடும்பமாக இங்கு வாழும் இந்து சமய சகோதரர்களுக்கும் வீடுகள் கட்டிக் கொடுத்தனர். 1994 ஆம் ஆண்டு அருள்பணி. ஏசுதாஸ் அவர்கள் பழுதடைந்த வீடுகளை மீண்டும் சீர்படுத்திக் கொடுத்தார். 

ஆலய அமைப்புப் பணி:

வீடுகளை எல்லாம் கட்டிக் கொடுத்த அருள்தந்தையர்கள், ஆலயத்தையும் கட்டியெழுப்ப கட்டுமானப் பணிகளைத் தொடங்கினார்கள். அப்போது சில எதிர்ப்புகள் வந்ததால் பணிகள் முடிக்கப் பெறாமல் அப்படியே வெறுமையாக நின்றது. பல ஆண்டுகள் மக்கள் மிகுந்த வேதனை அனுபவித்தனர். பல ஆண்டுகளுக்கு பிறகு அப்போதைய உதவிப் பங்குத்தந்தையாக இருந்த அருள்பணி. டேவிட் அவர்கள் உதவி, உறுதுணை, இவற்றுடன் மக்களுக்கு தைரியமூட்டி இரவோடு இரவாக ஆலயத்திற்கு கூரை அமைத்தார். காலங்கள் கடந்தன. ஆலயத்தை சுற்றி செங்கல் சுவர் அமைத்தவர் அருள்பணி. பால் சகாயநாதன் அவர்கள். பல்வேறு பிரச்னைகள் மத்தியிலும் அருள்பணி. சந்தியாகு அவர்கள், மக்களுக்கு தைரியமூட்டி கூரை அகற்றி, நிரந்தரமாக ஓடு அமைத்துக் கொடுத்தார். 

ஆலயத்திற்கு shed அமைத்து புதிய ஆலயமாக 18.07.2010 அன்று குடந்தை மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. உதவிப் பங்குத்தந்தையாக இருந்த அருள்பணி. ஸ்டான்லி அலெக்ஸ் (2012-2015) அவர்களின் உறுதுணையால் 2012 ஆம் ஆண்டு ஆயரின் ஒப்புதலோடு திவ்ய நற்கருணை நிறுவப்பட்டது. அன்று முதல் இன்று வரை தினமும் ஜெபம் செய்வதும், வாரத்தில் புதன்கிழமை திருப்பலியும் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. தற்போதைய பங்குத்தந்தை அருள்பணி. ஆ. தைனிஸ் அவர்களின் முயற்சியால் ஆலயத்திற்கு மின்இணைப்பு மறுசீரமைப்பு முழுமையாக 2019 அக்டோபர் மாதத்தில் நடந்தது. 

திருவிழாக்கள் :

அப்போதைய பங்குத்தந்தை அருள்பணி. அருள்தாஸ் மற்றும் உதவிப் பங்குத்தந்தை அருள்பணி. டேவிட் ஆகியோர் முயற்சியால்,

ஊரின் பாதுகாவலர் புனித பிரான்சிஸ் சவேரியார் திருவிழா

முதன் முறையாக, 06.07.1995 அன்று கொண்டாடப் பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் பொங்கல் விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. 

அன்பியம் :

சவேரியார் புரத்தில் புனித சகாய மாதா மற்றும் இறைஊழியர் ஜான் பீட்டர் அன்பியங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அன்பிய கூட்டம் மாத்தில் மூன்றாவது வாரம் ஆலயத்திலும், மற்றும் வீடுகளிலும் செயல்பட்டு வருகின்றது.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : 

பங்குத்தந்தை அருள்பணி. ஆ. தைனிஸ், கப்புச்சின் சபை.